அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்--பகுதி: 45

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 44
20-03-2018

அன்பு நண்பர்களே...

ஒரு சொலவடை உண்டு தமிழில் ...

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது என்று...

என் விஷயத்தில் பிழைப்பு நினைப்பைக் கெடுக்கிறது என்று தோன்றுகிறது.   சரியான பணி  அழுத்தம்.... நினைவுகளை தொடர்ந்து வடிக்க இயலவில்லை.... அல்லது என் தேவகோட்டை நினைவுகள், வார்த்தையில் வடிக்க இயலாத அழுத்தத்தில் பிழைப்பையும் கெடுக்கிறது என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.  ஆனாலும் , எழுதி முடித்து உங்களை  சந்தித்தால்  மனம் சாந்தமாகிறது.  சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுகின்ற அந்த உணர்வு உயிரில் சமாதானம் என்று நிலைக்கிறது.  என் மனது நிறைவு பெறத்தான் எழுத தோன்றுகிறதே தவிர, வேறு எதற்காகவும் இல்லை.



சென்ற தொடர் வாடியார் வீதியில் நின்றது.  சந்தைக்கு உள்ளே கொஞ்சம் ரௌண்ட்ஸ் போய் வந்தோம்.  அந்த ஒற்றைப் பனைமரம் மற்றும் பானை சட்டி கடை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அந்த இடத்தில் அவ்வப்போது கூடாரம் போட்டு ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  அதிக பட்ச நுழைவு கட்டணம் 10 புதிய காசுக்கு...


பாம்பு உடல் கொண்ட பெண்,  மாஜிக் காட்சி என்று 10  பைசா கொடுத்து பார்த்த நினைவு இருக்கிறது.  அதில் திரையின் பின்புறம் இருந்து ஒரு வினோதமான சப்தம் எழுப்புவார்கள். பாம்பு மூச்சு விடுகிறதாம்.  ஒரு பானையினை நீரால் நிரப்பி அதன்   வாயை கனமான  துணியால் கட்டி அதில் ஒரு துவாரம் போட்டு அந்த துவாரத்தில் ஒரு கோழி அல்லது மயிலின் இறகை செலுத்தி முன்னும் பின்னும் இழுத்தால், ஒரு விதமான ஒலி எழும்பும்.   உள்ளே ஒரு சிறு வயதுப் பெண் லிப்ஸ்டிக் போட்டு முகம் முழுதும் மேக் அப் செய்து பாம்பு உடம்புடன் பொருத்தப்பட்டு சிரித்து  கொண்டு இருப்பார் .   உள்ளே என்னவோ ஏதோ என்ற ஆர்வத்துடன் சென்று விட்டு, வெளியே வரும்போது அட இது தானா? 10 காசு போச்சே என்று நினைத்து வந்தது உண்டு.

அப்புறம் வாடியார் வீதி திருப்பத்தூர் சாலையில் இணையும் இடம் வந்தால், வலது புறம் கோழிகள், (நாட்டு  கோழி ங்க...)  குஞ்சுகள் பெரிய கூடைகளில் வைத்து விற்பார்கள்.  வரிசையாக கடைத்தெரு ஆரம்பித்து விடும்.  

இடது புறம் புதிய கட்டிடங்கள் 1972 ஆம் ஆண்டு தேவகோட்டை நகராட்சியினால் கட்டப் பெற்றன.  இந்த கடை கட்டிட தொகுப்பு சரஸ்வதி திரையரங்கத்துக்கு எதிர்புறத்தில் திருப்பத்தூர் சாலையிலும் தொடர்ந்தது.  இந்திய சுதந்திர தின வெள்ளி விழா ஆண்டு 1972ல் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது.  அந்த ஆண்டு இந்த கட்டிடம் கட்டப் பெற்றதால், இந்த கட்டிடத்துக்கு பெயர் 'வெள்ளி விழா' கட்டிடம்.



இதே 1972 ஆம் வருடம் நினைவில் இருக்கும் இன்னொரு நிகழ்வு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் படைப்பான  ' வெள்ளி விழா' திரைப்படம் வெளிவந்தது.  ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ நடிப்பில், வெளி வந்து 'காதோடு தான் நான் பாடுவேன்'  என்ற பாடல் இன்றும் கூட நம்மை தாலாட்டும்.



சென்ற பகுதியைப்  படித்து விட்டு அன்பு நண்பர் மருத்துவர் (Doctor ) மணவாளன், திரைப்பட வசனகர்த்தா, வாடியார்  வீதி முத்து  பழனியப்பன் அவர்களுக்கு அங்கு வாழ்ந்து வந்த பன்றிக்குட்டிகளைப்  பற்றி குறிப்பு எழுத வில்லையே என்று ஒரே வருத்தம்.  அவர் மனம் புண்படக் கூடாது. தேவகோட்டையில் குளக்கால் ஓடும் வழி  எங்கும் பன்றிகள் பல்கி பெருகி குழந்தை செல்வங்களுடன் மகிழ்வாய் வளர்வதை பார்க்கலாம்.  அவற்றில் உரிமையாளர்கள், தேவகோட்டை குண்டு கரை பகுதியிலும் , மாட்டுச்சந்தை எதிர் புறமும் உள்ளவர்கள்.  இந்த பன்றிகள், அவைகளை துன்புறுத்தாத வரை ஆட்டுக்குட்டி மாதிரி அமைதியாக, தானுண்டு தன் குட்டிகள் உண்டு, தம் சாக்கடை உண்டு என்று அமைதியாக இருக்கும்.  அவைகளை கல்லெறிந்து அடிக்கும் வீராதி வீரர்களும் உண்டு.  பார்ப்பதற்கு அவை கேப்பாரற்று தனியாக அநாதை போல வளர்வது போல் தெரியும்.  ஆயின் அவற்றின் முதலாளிகளுக்கு எந்தெந்த குட்டையில், குளக்காலில்  எத்தனை உருப்படி என்று மனதிற்குள்ளேயே விஜிலென்ஸ் கேமரா வைத்து பார்த்து கொண்டு இருப்பார்கள்.  தற்போது என்ன நிலவரம் என்று அறியேன்.



இந்த வெள்ளி விழாக்  கட்டிட வளாகத்தில் முதல் கடையில் மதிப்பிற்குரிய திரு.காவேரி அவர்கள் 'காவேரி பரோட்டா ஸ்டால்'  அருமையாக ஆரம்பித்தார். அதன் பின், அவர் காலத்துக்கு பின் கோ-ஆப்  டெக்ஸ், நடந்து கொண்டிருந்தது. அதை அடுத்து தனியார் குடிப்பகம், அதாங்க பார்,  டாஸ்மாக் என்ற பெயரில் அரசு மது கடைகளை நடத்துவதற்கு முன் தனியார் வசம் குத்தகைக்கு விட்டு இருந்தது.  அந்த கடை அங்கு இருந்தது.  பெயர் சூட்டுவதில் நம்ம பகுதி ஆட்களை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த்  குடிப்பகத்தின் பெயர்: ஒன்ஸ்  மோர் ஒயின்ஸ்...



அடுத்து திரு.அங்குசாமி, (Ex - MLA ), திரு. வேலுசாமி இவர்கள் இணைந்து நடத்திய 'சபரி ஹார்டுவேர்'  கடை இருந்தது. திரு.அங்குசாமி அவர்களின் மைத்துனரும் (அவரது மனைவியின் தம்பி), எனது மைத்துனரும் (எனது தங்கையின் கணவர்) ஆன திரு.ரெங்கநாதன் நடத்தி வந்தார்.   பூக்கடை தேவா, இரவுசேரி முத்தையா அண்ணன்  என்று ஒரு பெரிய டீமை  அங்கு காணலாம்.

அடுத்து மார்க்கெட்டுக்குள்  செல்ல ஒரு வழி .... அப்புறம் பூக்கடைகள், அப்புறம் 'வலம்புரி ஸ்டோர்ஸ்'.  இந்த வலம்புரி ஸ்டோர்ஸ் எங்கள் கல்லூரி மாணவர்களுடன் ஒரு கதை வடித்து இருக்கிறது. அதை அடுத்த பகுதிகளில் பார்க்கலாம். அதை அடுத்து அன்பு தோழன் திரு.மீரா ஹுசைன் ( ஆண்டவர் டிராவல்ஸ் ) அவர்களின் மூங்கில், கிடுகு கடை.  அப்புறம் தேவகோட்டையின் பேருந்து நிலையம் .

இது ஒரு அவசர பார்வை மட்டுமே... இன்னும் விபரமாக பார்க்க வேண்டும். அதுவும் திருப்பத்தூர் சாலையின் இடது புறம் மட்டுமே.. எதிர்புறம் இனிமே செல்ல வேண்டும்.

எப்படியாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்று சூதாட வருபவர் வெறி கொண்டு வருவதை போல, இன்று எப்படியும் தொடரை தொடர்ந்து விட வேண்டும் என்ற வெறியோடு இந்த சிறிய பகுதியை எழுதுகிறேன்,,, அவசர கதியில்.

மீண்டும் சிந்திப்போம் .....பழைமை சிந்திப்போம் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60