அசை போடும் தேவகோட்டை நினைவுகள்-பகுதி: 47
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 46
03-04-2018
அன்பர்களே...
வாடி வாசல் திறந்து விடப்பட்ட காளைகளாய் வாடியார் வீதி விட்டு வெளியேறி விட்டோம். நேராக நடந்தால் 'புதுக் கொட்டகை' என்று அழைக்கப்படும் 'சரஸ்வதி திரை அரங்கம்'. எங்களுக்கு இருந்த ஒரே புகலிடம் அது தான். பேசும் படம் வந்த காலங்களில், TALKIES (டாக்கீஸ் ) என்று அழைக்கப்பட்ட திரைப்படங்கள் 'லட்சுமி டாக்கீஸில்' வெளி வர ஆரம்பித்தன. ஒற்றை திரைப்பட அரங்கமாக வெகு காலம் வெற்றி நடை போட்டு வந்தது லட்சுமி டாக்கீஸ். அதன் பின்னர் ஆரம்பிக்கப் பட்டதால், இந்த சரஸ்வதி திரை அரங்கம், புது கொட்டகை என்ற பெயர் பெற்றது, லட்சுமி திரை அரங்கம், பழைய கொட்டகை ஆகி விட்டது .
இரண்டு சினிமா அதிபர்களின் குடும்பங்களும் பரிச்சயமானவர்கள் தான். சரஸ்வதி டாக்கீஸ் நடத்தி வந்த வீரப்ப செட்டியார் வாரிசுகளான பெரிய ஆணா , சின்ன ஆனா, ராமு அவர்கள் எல்லாம் அவர்களாலேயே நடத்தி வரப்பெற்ற சைவப்பிரகாச வித்தியா சாலையில் நான் பயின்ற அதே காலத்தில் மாணவர்களாய் இருந்தவர்கள்.
அதிலும், அவ்வப்போது 4 ஆம் வகுப்பு 5 ஆம் வகுப்பு படிக்கும் எங்களை அடிக்கடி இலவசமாக திரைப்படம் காண அழைத்து செல்வார்கள், சரஸ்வதி திரை அரங்கத்துக்கு . அதே போல லட்சுமி திரை அரங்கத்தின் உரிமையாளர், சோலை என்று எங்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற திரு.தெய்வராயன், எமது கல்லூரி வகுப்பு தோழன். நண்பன் தேவராயன் உடல் நோவு காரணமாக அமரராகி விட்டார்.
பொதுவாகவே தேவகோட்டைக்கும் கலை மற்றும் திரை உலகத்துக்கும் ஆதி அந்தம் இல்லா பந்தம் உண்டு. வெறும் தன வணிகராய் மட்டும் நகரத்தார் இருந்து இருக்க வில்லை. அதற்கும் மேல் அவர்களுக்கு எந்தத் துறையில் முதலீடு செய்தால் என்ன வரும்படி கிடைக்கும்? வட்டி நட்டம் இருக்கிறதா? என்று இன்றைக்கு மேல் நாட்டில் படித்து விட்டு வந்த பொருளாதார மேதைகள் பேசுகின்ற PORTFOLIO MANAGEMENT, COST OF FINANCE என்பதெல்லாம் இயற்கையாகவே உதிரத்தோடு ஊறிப்போனவர்களாக இருந்தவர்கள். லேவாதேவி மட்டும் செய்பவர்கள் அல்லர். எனவே திரைப்பட துறையிலும், முதலீடு செய்து வந்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்.
எனக்கு வணிகவியல் மூன்றாம் ஆண்டு MERCANTILE LAW எனப்படும் வணிக சட்டம் வகுப்பு எடுத்தவர் வழக்குரைஞர் திரு.RM .வீரப்பன் அவர்கள். ஒரு வகுப்பு 2 அல்லது 3 மணி நேரம் இடை விடாது இருக்கும். இவர் சட்டம் படித்து நீதி மன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர். ஆனால் சிறு வயதில் இருந்தே சென்னையில் படித்து வளர்ந்தவர்.
இவரது தந்தையார் திரு இராமநாதன் செட்டியார், மிக சிறந்த ஒலிப்பதிவாளர் ( ஆடியோகிராபிஸ்ட்) அந்நாளில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் கூட. கீழ்ப்பாக்கத்தில் இருந்த 'நியூ டோன்' ஸ்டூடியோ வின் பங்குதாரர். இந்த நியூ டோன் ஸ்டூடியோ, புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் F.நாகூர், அவரின் நண்பர் பிரபல ஒலிப்பதிவாளர் தீன்ஷா கே டெஹ்ரானி, ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜி இவர்களால் உருவாக்கப் பெற்றது ஆகும். இதில் பெருந்தொகை முக்கிய முதலீடு செய்தது திரு ராமநாதன் செட்டியார் அவர்களின் அன்பு நண்பரும் அந்த நாளின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிய M .K .தியாகராஜ பாகவதர் ஆவார் .
இந்த இராமநாதன் செட்டியார, 'உமா பிக்சர்ஸ்' என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் வைத்து இருந்தார். புரட்சி நடிகர் M.G.R . அவர்களை வைத்து 1957 இல் வெளி வந்த 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற திரை படத்தை அவர் முதலில் தயாரித்து வெளியிட்டார். N .S .கிருஷ்ணன். P .S .வீரப்பா, அஞ்சலி தேவி இவர்களின் நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட படம் இது.
இந்தப் படத்தில் புரட்சி நடிகர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர், "உதயசூரியன்". காங்கிரஸ் பெரும்பான்மைக் கட்சியினராக இந்தியா முழுமையும் ஆட்சி புரிந்து வந்த காலகட்டத்தில், உண்மையிலேயே, தில்லாக தி.மு.க.வின் வளர்ச்சிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், MGR.
அதன் பின் இவர் தயாரிப்பில் கையை சுட்டுக்கொண்ட திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா நடிப்பில் 1963 ஆம் வருடம் வெளிவந்த 'சித்தூர் ராணி பத்மினி'. இதே கதை தான் 54 வருடங்கள் கழித்து பத்மாவதி என்ற பெயரில் இந்தியில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானது என்று நினைக்கிறேன். வழக்கறிஞர்.வீரப்பன் அவர்கள், அடுத்து தேவகோட்டையில் செட்டில் ஆகி விட்டார்.
அதே போல நமது 'சரஸ்வதி திரை அரங்கம்' உருவாக்கிய திரு.வீரப்ப செட்டியார் ,'' என்ற பெயரில் திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டார். திரைப்பட பின்னணி பாடகர் TM.சௌந்தரராசன் முன்னணி யாக நடித்து வெற்றி பெற்ற பட்டினத்தார் திரைப்படம் இவரால் விநியோகம் செய்யப்பட்டது. அதே போல் 1956 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், M N ராஜம் இவர்கள் நடிப்பில் வெளிவந்த, 'நானே ராஜா' நம்ம வீயார் பிலிம்ஸ் தயாரிப்பு ஆகும். இந்த படத்தின் கதை வசனம் கவிஞர் கண்ணதாசன். ஆனால் ஒரு பாடல் கூட கவியரசர் எழுதவில்லை. காமாட்சி சுந்தரமும், தஞ்சை ராமையா தாஸும் எழுதினார்கள்.
ரெட்டை ‘அணா ருணா’ என்று அழைக்கப்படும், திரு.வீரப்ப செட்டியார் குடும்பத்துக்கு காரைக்குடியில் மகர்நோன்பு பொட்டல் அருகே ஒரு ‘சரஸ்வதி டாக்கீஸ்’, அதே பெயரில் தேவகோட்டையில் ஒரு சரஸ்வதி டாக்கீஸ். பின்னர், காரைக்குடி சரஸ்வதி, ‘அருணாச்சலா’ என்று பெயரிடப்பட்டது. அதன் பின் அதே அரங்கம், ‘சத்தியன்’ என்ற பெயரில் இப்பொழுதுஇயங்கிக் கொண்டு இருக்கிறது. சிறு வயதில் பார்த்த திரைப்படங்கள் இன்னும் பிரமாண்டமாய் கண்ணில் நிற்கின்றன. மிகச் சிறு வயதில், அரங்கத்தைப் பார்ப்பதே எங்களுக்கு எல்லாம்ஒரு வியப்பு. அது போல இன்று ஒரு நீண்ட நுழை பாதை கொண்ட, மைதானம் போன்ற அதிக வெற்றிடம் கொண்ட ஒரு அரங்கத்தை இந்தக் காலத்தில் நிர்மாணிக்க முடியாது, நினைத்துப் பார்க்கவும்முடியாது. அதுவும் ரியல் எஸ்டேட் எனும் குறுகிய காலத்தில் அதிகம் பணம் பண்ணலாம் எனும் மாய அரக்கன் தமிழகத்தில் புகுந்த காலத்துக்குப் பின், வெற்று வெளிகள் அனைத்தும், அடிக்கணக்கில் கோடி கோடியாய்க் குவித்து பராரிகளையும் பணத்திமிரில் உலவ விட்ட இந்த கடந்த இருபது ஆண்டு கால இடைவெளியில், சிறிய நகரங்களின் பெரிய அரங்கங்கள் எல்லாம், தங்கள் அங்கங்களை இழந்து நிற்கின்றன.
திருப்பத்தூர் சாலையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் வாடியார் வீதியின் முடிவில் எதிரில், வலது புறம் 'இளைய பெருமாள்' சாப்பாட்டு கடை, இடது புறம் சண்முகம் பெட்டிக்கடை இரண்டும் துவார பாலகர்கள் போல நின்று இருக்க நடுவில் கர்ப்ப கிரகம் போல சரஸ்வதி திரை அரங்கம் நடுவில் நிற்கும். மேலே உயரத்தில் அன்றைய திரைப்படத்தின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். உள்ளே நுழைந்தால், நீண்ட தூரம் நடை வெளி, ஒரு அகலமான சந்து போல.... அதன் கடைசியில் பிரமாண்டமாய் 'சரஸ்வதி திரை அரங்கம்'. முன்பக்கம் பெரிய இரும்பு கேட், அதன் அருகிலேயே முதல் வகுப்பு (சோபா, சாய்வு நாற்காலி தான் ) நுழைவு சீட்டு வாங்கும் கௌண்டர். வலது புறத்தில் பெண்களுக்கு என தனி கௌண்டர். அதே போல, அரங்கின் இடது புறம் பெரிய கேட், அப்புறம் இடது புறத்தில் இரண்டு நுழைவு சீட்டு கவுண்டர்கள். நடுத்தர வகுப்பு ஒன்று, கடைசி கௌண்டராக மூன்றாம் வகுப்பு மற்றொன்று.
முதல் வகுப்பு கட்டணம் :70 புதிய நயா பைசா, பின்னர், 80 பைசாவாகி அப்புறம் ரூ 1.25 அனது என்று ஞாபகம்.
இந்த நடுத்தர வகுப்பில் பெஞ்சு போட்டு இருப்பார்கள், ஆனால் சாய்ந்து கொள்ளலாம். 43 காசு. அதென்ன கணக்கு ரௌண்டா இல்லாமல்? வணிக வரி ஐயா...
கடைசி வகுப்பு 30 காசு மட்டுமே...பெஞ்சு மட்டுமே, சாய்மானம் எல்லாம் கிடையாது.
சிறுவயதில் இந்த 30 காசு டிக்கெட் தான்...
அந்தக் காலத்தில் திரைப்படங்களைக் காண வரிசையில் காத்து இருந்து அனுமதி சீட்டு வாங்கி இருந்து இருக்கிறார்கள் . இந்த அனுமதி சீட்டு கவுண்டர்கள், வளைத்து வளைத்து ஒரு ஆள் போகும் அகலத்தில் கட்டி இருப்பார்கள். இதில் படம் ஆரம்பிப்பதற்கு வெகு நேரம் முன்பே காத்து இருந்தால், கௌண்டர் திறந்த உடன் எங்கிருந்தோ வந்த எருமை சைஸ் ஆட்கள் எல்லாம் சிறு வயதான என்னை அழுத்தி பின்னால் தள்ளி விட்டு முன்னேறி சென்று டிக்கெட் எடுத்து போய் விடுவார்கள். அதிலும் புரட்சி நடிகர் படம் என்றால், வியர்த்து, விறு விறுத்து, மூச்சு திணறி அழுது, அரண்டு தான் வெளியே வர வேண்டும். அதிலும் கொடுமை டிக்கெட் வாங்க வைத்து இருக்கும் சின்ன துளைக்குள் ஒரே சமயத்தில் மூன்று பேர் கையை விட்டு இருப்பார்கள். டிக்கெட் கைக்கு வந்து விடும் மீதி சில்லறை சிதறி விடும் . அது ஒன்றுதான் கைச்செலவுக்கு..... அதை தேடி கொண்டு இருந்தால் அடுத்த மந்தை மேலே மிதித்து சின்னா பின்னம் ஆக்கி விடும்.
ஒரு வழியாக கௌண்டர் விட்டு மடித்த கையும்,(கையின் உள்ளே டிக்கெட்), கசங்கிய உடைகளும், திணறிய மூச்சும் ஆக வெளியே வந்தால், பெரிய காற்றோட்டமான இடைவெளி, வேப்ப மரம் சிலு சிலுவென காற்றடிக்க கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்கெல்லாம் ஏது நேரம். ஒரே ஓட்டமாக அரங்கத்தின் உள்ளே பாயும் கால்கள்.
இந்த கௌண்டரை ஒட்டியே கான்டீன், டீ, காபி, முறுக்கு, பப்ஸ்( in Eastman Colour ), கடலை, சிகரெட், பீடி என்று அனைத்தும்....
அப்படியே அரங்கத்துள் நுழையாமல், ( படம் போட இன்னும் நேரம் இருக்கிறது) பின் புறம் இருந்து முன்பக்கம் போவோமா? இந்த காண்டீனின் பின்புறம், மிதிவண்டி நிறுத்தும் கொட்டகை. மிதி வண்டிகள் நிறுத்துவதற்கு தனியாக 10 பைசா (Parking Fees) கட்டணம் உண்டு. இதன் பின் புறம் ஒரு காம்பௌண்டில் தென்னை மரத்தோப்பு . அரங்கத்தின் பின்புறம் கழிவறை தொகுப்பு.
இன்னும் முகப்பு நோக்கி நடுத்தர வகுப்பு ( 43 காசு டிக்கெட் ) கௌண்டர் பக்கம் வந்தால் ஒரு கேட், கூட்டம் அதிகம் இருந்தால், இதன் வழியாகவும் மக்கள் வெளியேறலாம். அப்புறம் ஒரு நாகலிங்க பூ மரம். அந்த இடத்தில் பின்னர், ஜெனரேட்டர் அறை கட்டினார்கள். அப்படியே இன்னும் முன்னால் வந்தால் மணல் கொட்டிய அரங்கின் முன்புறம். காம்பௌன்ட் சுவரை ஒட்டி செவ்விளநீர் காய்த்து தொங்கும் குட்டையான தென்னை மரங்கள். அப்படியே அந்த விசாலமான முன்புறத்தில் ஒரு U டர்ன் அடித்து திரும்பவும் அரங்கம் நோக்கி நடை பயின்றால் சரஸ்வதி திரை அரங்கத்தின் முன் பகுதி. நந்தியாவட்டை மலர்கள் வெண்மை நிறத்தில் பூத்துக் குலுங்கும் இரு புறமும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் ஒரு தேனீ வளர்ப்பு பேட்டியும் அந்த இடத்தில் இருந்தது போன்ற நினைவு.
அப்புறம் படிக்கட்டுக்களோடு உயரமான தளம் வைத்து கட்டப்பட்ட கான்க்ரீட் கோட்டை போன்ற கட்டிடம். வலது புறம் அரங்க மேலாளர் அறை . நட்ட நடு நாயகமாக, முதல் வகுப்பு பார்வையாளர்கள் அரங்கத்தின் உள்ளே செல்லும் வழி. அலுவலக வெளி சுவற்றில் THE CINEMATOGRAPH ACT 1952,இன் முக்கிய விதிகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பெரிய கண்ணாடி பிரேம் போடப்பட்டு மாட்டி வைத்து இருப்பார்கள். மற்ற சுவர்களில் அடுத்து வரும் படங்களின் புகைப்படங்கள், அப்போது ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படத்தின் புகைப்படங்களோடு.
இன்னும் கொஞ்ச நேரத்தில் திரைப்படம் பார்க்கத்தான் போகிறோம்... என்றாலும், அந்த புகைப்படங்ககளை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து விட்டு அதைப்பற்றி கொஞ்சம் விலாவரியாக மற்றவர்கள் பேசுவதை வாய் பார்த்து விட்டு உள்ளே செல்வதில் ஒரு ஆனந்தம்.
அரங்கின் முகப்பின் வலது புறம் மேலே உள்ள படவீழ்த்தி (அதாங்க PROJECTOR ) அறைக்கு செல்வதற்கான, மடித்து கட்டப்பட்ட படிக்கட்டுகள். மேலே நல்ல பெரிய ஆபரேட்டர் அறை சகல வசதிகளுடன். என்னடா அரங்கம் கட்டிய வீரப்ப செட்டியார் குடும்பத்தினர் கூட இந்த அளவுக்கு அரங்கத்தை அறிந்து இருக்க மாட்டார், இவருக்கு எப்படி ... இப்படி என்று நீங்கள் பேசும் MIND VOICE எனக்கு கேட்கிறது . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அடுத்த பகுதிகளில் தெரியும்.
இதற்கிடையில் மேலே ஆபரேட்டர் அறையில் இருந்து பாடல்கள் ஒலி பெருக்கியில் ஒலித்து கொண்டு இருக்கும். பெரும்பாலும் அந்த அந்த காலத்து பிரபல திரை பாடல்கள். கடைசியாக COME SEPTMEBER இசைக்கப்பட்டால், படம் திரையிடப் போகிறார்கள் என்று குறியீடு. அந்த கம் செப்டெம்பர் தீம் மியூசிக் இன்னும் காதில் ஒலிக்கிறது.
சரி ஒரு வழியாக உள்ளே அரங்கில் அமர்ந்து அகி விட்டாயிற்று. விளம்பரப்படங்களில் இருந்து அரசின் செய்தி படங்கள் வரை பார்த்தால் தான் முழுப் படமும் பார்த்த நிம்மதி.
'ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப் பாய்...
லைஃப் பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்....'
விக்ஸ் அவனுக்கு ஆறுதலை தருகிறது .....
அப்புறம் 'லிரில்' சோப்பில் குளிப்பதற்காக காடுகளைத் தேடி, மலைகளை தேடி, அருவிகளைத் தேடி குளித்து கொண்டிருக்கும் இளம் பெண்...
இது முடிந்ததும், INDIAN NEWS REVIEW ... பெரும்பாலும், வெள்ளம் வந்த வட மாநிலங்கள், வெள்ள மீட்பு நடவடிக்கைகள், இராணுவ அணிவகுப்பு, அப்புறம் விளையாட்டு செய்திகள். இந்த விளையாட்டு செய்திகளிலும், தலையில் டர்பன் அணிந்த பஞ்சாபிகள் ஹாக்கி விளையாடுவது அதிகம் இருக்கும். இதைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து பழைய குடை கம்பிகளின் வளைந்த பிடியை வைத்து பந்து விளையாடி (வளை கோல் பந்து) வாங்கி கட்டிக் கொண்டதும் உண்டு.
அரங்கில் உள்ளே நுழைந்தால். பெரிய வெள்ளித்திரை.. அதன் முன்னே ஒரு பத்து அடி நீளத்திற்கு ஒரு திண்ணை போல அரை வட்ட வடிவில் கட்டப்பெற்று அதில் மணல் நிரப்பி இருக்கும். பக்க சுவர்களில் எல்லாம் தீ அணைப்பான்கள், நீண்ட ஹோஸ் கொண்ட கை பம்புகள் மாட்டப்பெற்று இருக்கும். அந்த திண்டின் முன்னே இரும்பு பைப்பில் ஸ்டாண்ட் செய்யப்பட்டு அதில் சில வாளிகளில் மணல் நிரப்பபட்டும், சில வாளிகளில் நீர் நிரப்பப்பட்டும் வரிசையாக தொங்கும். சிவப்பு வண்ணம் பூசப்பட்ட அந்த வாளிகளில் 'தீ' என்று எழுதப்பட்டு இருக்கும்.
சிறுவனாக இருந்த போது படம் பார்க்கையில், என்னுடன் படம் பார்க்க வந்திருந்த ஒரு கிராமத்து ஆசாமி, அந்த 'தீ' வாளிகளை எட்டிப் பார்த்து விட்டு என்னிடம், ஆமாம் தம்பி, இதில் 'தீ' என்று எழுதி இருக்கிறது.... ஆனால் உள்ளே தண்ணீர் அல்லவா இருக்கிறது? என்றார். ரொம்ப சிரமப்பட்டு அவரிடம் தீ விபத்து ஏற்பட்டால் உடனே படம் பார்ப்பவர்களே உடனடி நடவடிக்கையாக தீயை அணைப்பதற்காக இந்த வாளிகளில் மணலும், நீரும் நிரப்பி வைக்கப் பட்டு இருக்கின்றன, என்று கர்ம சிரத்தையாக விளக்கினேன். பொறுமையாக கேட்டு கொண்டு இருந்து விட்டு,,,, அப்படி இருந்தாலும், வாளிகளில், 'மணல்;,,,'தண்ணீர்' என்று தானே தம்பி எழுதி வைத்து இருக்க வேண்டும் என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பேசாமல் இடத்தை மாற்றி அமர்ந்து விட்டேன்.
எது எப்படியோ? எழுத்து போடறதுக்கு முன்னால படம் பாத்து ஆகணும்... இல்லேன்னா... தீர்க்க முடியாத தோஷம் பிடித்து இந்த பூமியில் பிறந்ததன் குறிக்கோளே நிறைவேறாமல் போய் விடும் என்று ஒரு எண்ணம்.
இன்னும் சிலர் படம் ஆரம்பித்த உடன் இருட்டில் தட்டுத் தடுமாறி வந்து பக்கத்தில் அமர்ந்து விடுவார்கள். நாம அப்பத்தான் படத்தின் காட்சிகளோடு ஒன்றி ஒரு லயத்தில் இருக்க ஆரம்பிப்போம்.. இவர் வந்து உட்க்கார்ந்ததுமே...' தம்பி ... ரொம்ப ஓடிருச்சோ ...???.. என்பார்.. நமக்கு படம் பார்க்கும் சுவாரசியம்......... இல்லை இப்போது தான் ஆரம்பம் என்போம்... திரும்ப ஆரம்பிப்பார்.. தம்பி இது வரை என்ன கதை? என்று.. இவரிடம் கதை சொல்ல ஆரம்பித்தால், அந்த நேரத்தில் ஓடும் படத்தின் கதையை நான் யாரிடம் போய் கேட்பது?..பல்லை கடித்து கொண்டு பொறுமை காக்க வேண்டிய சமயம் அது..
அப்புறம் அந்த 'டீ ... காபி .. முறுக்கு..' என்று பெரிய தட்டில் வைத்து விற்பார்கள் பாருங்கள். அவர்களை ரசித்து ரசித்து பார்த்து இருக்கிறேன். அந்த பெரிய உலோக கூடையை உள்ளங்கையில் வைத்து கொண்டு இலாவகமாக பெஞ்சுகளுக்கு இடையில் அவர்கள் வருவதும், ஆண்கள் பக்கம் இருந்து பெண்கள் பக்கம் இடையில் இருக்கும் மரத் தடுப்பை அனாயசமாக தாண்டிக் குதிப்பதும், 'அட' என்று சொல்ல வைக்கும்.
ஒரு நீள பொட்டணத்தில் 5 பைசாவுக்கு நிலக்கடலை விற்பார்கள்.. அந்த பொட்டணம் மடித்தவருக்கே 3 பைசா கொடுக்க வேண்டும்.. 4 நிலக்கடலை கூடுடன் அதற்குள் இருக்கும். அதை எப்படி அவ்வளவு நீள பொட்டணமாக மடிக்கிறார்களோ தெரியாது.
இன்னும் சரஸ்வதி டாக்கீஸ் சுவைகள் பல இருக்கின்றன. அங்கு உலவிய முக்கிய நபர்களை பற்றி நிறைய பரிமாறி கொள்ள வேண்டும். பின்னாளில் ஏறக்குறைய ஒரு மூன்று ஆண்டுகள் வாலிபனாய் இதே சரஸ்வதி திரை அரங்கத்தில் அல்லும் பகலுமாக திரிந்து இருக்கிறேன்... அந்த நினைவுகளை சுவைக்க அடுத்த பகுதிகளிலும் என்னுடன் கை கோர்த்து வாருங்கள் ...
கருத்துகள்
கருத்துரையிடுக