அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 48
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 47
04-04-2018
அன்பு சொந்தங்களே ...
இதற்கு முந்தைய பதிவில் நியூ டோன் ஸ்டூடியோ அதிபர், படத் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எனது ஆசான் வழக்கறிஞர் இராம.வீரப்பன் அவர்களின் தந்தையார் நமது தேவகோட்டையை சேர்ந்த திரு.இராமநாதன் செட்டியார் அவர்களைப் பற்றிய பதிவு பலரின் நினைவு அலைகளை கிளப்பி விட்டு விட்டது. அடிக்கடி இந்த தொடரில் நான் குறிப்பிடுவது போல இந்த உலகில் மனிதனின் வாழ்வு நிலையாமை ஒன்றையே நிலையாய் கொண்டது. ஆனால் அவர்கள் செயல்களால் பேசப்படுவார்கள்.
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..
கவிஞர் கண்ணதாசனின் மேற்கண்ட வரிகள் எவ்வளவு நிதர்சனம் ஆனவை !!!.ஊர் பார்த்த உண்மைகள் எப்போதும் வாழும்...
இந்த தொடரின் முக்கிய நோக்கமே நினைவுகளால் பழைய தேவி மாநகரை காண்பதுதான். தயவு செய்து உங்கள் உள்ளத்தில் உறங்கும் உன்னத நினைவுகளை பரிமாறுங்கள். எழுதுபவன் நான் அல்ல ... நாம் என்று ஆகட்டும்.
சென்ற தொடரில் நமது சரஸ்வதி திரை அரங்க விஜயத்தின் போது, உங்களுக்கு ஒரு சிந்தனை மனதில் தோன்றி மறைந்து இருக்கலாம். அற்புதமான சரஸ்வதி திரை அரங்கின் முன்புறம் இருக்கும் போது அந்த வழியே போகாமல், இந்த முத்துமணி எதற்காக பின் புறத்தில் ஆரம்பித்து முன் புறமாக வந்தார் என்று? உங்களில் பலரும் முதல் வகுப்பில் திரைப்படம் பார்த்து விட்டு அப்படியே இல்லம் நோக்கி சென்று இருந்து இருக்கக் கூடும். பலருக்கு அந்த மூன்றாம் வகுப்பு பகுதிக்கே சென்று வர வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் நாடுகளை பொறுத்த வரை இந்த 'C' சென்டர் தான் எதிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன.
அதிலும் திரைப்படம் 'C ' சென்டரில் சரியாகப் போக வில்லை என்றால் பெட்டியில் படுத்து தூங்க வேண்டியது தான். அப்படி ஒரு கலாரசனை மிகுந்த உலகம் ஒன்று இருக்கிறது, ஆரவாரத்துடன் திரைப்படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் ரசித்து அனுபவிக்கும் ரசனை மிகு பெரும்பான்மை அது. அதன் முக்கியத்துவம் கருதித்தான் அங்கிருந்து ஆரம்பித்தேன்.
படமும் பாம்பும் ஒன்று.. இரண்டும்....
ஊர் ஊராய் போய் ஆடும்
பள பள என்று உருவம் காட்டும்
ஆடும் .. ஓடும்.... அசைக்கும்... இசைக்கும்..
ஆடிய பின் பெட்டிக்குள் சுருண்டு விடும் ...
ஆக்கினவரையே பயமுறுத்தும் சில நேரம் ...
என்ன... கவி காளமேகத்தின் பாம்பும் , செக்கும் என்ற இரட்டுற மொழிதல் பாடல் நினைவுக்கு வருகிறதா?
ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாகுமுண்டாம்
உற்றிடு பாம் பெள்ளெனவே யோது
ஒரு சுவைக்காக இதை குறிப்பிடுகிறேன். சென்ற பகுதியின் பின்னூட்டத்தில் சகோதரர் பெத்தாச்சி நாச்சியப்பன் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். நியூ டோன் ஸ்டூடியோ அதிபரான அவரது தாய்வழிப் பாட்டனார் திரு.இராமநாதன் செட்டியார் அவர்கள் முதலில் 'பணக்காரி ' என்ற படத்தயாரிப்பில் பெரு நட்டம் அடைந்தார் என்று...
இந்த திரைப்படம் சரியாக 65 வருடங்களுக்கு முன்பாக மக்கள் திலகம், ஜாவர் சீதாராமன், அன்றைய கனவுக்கன்னி, T R ராஜகுமாரி இவர்களின் நடிப்பில் 1953 ஏப்ரல் மாதம் வெளியானது. ரசிய நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய நாவல் அன்னா கரீனா. இந்த நாவலைத்தழுவி ஹாலிவூட்டில் 1935ல் அதே பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் பேய் வசூல் செய்து சாதனை புரிந்தது.
வெள்ளையர் ஆண்ட அந்த கால கட்டத்தில் இந்தியாவிலும் நன்றாக ஓடியது. அதே கதையைத்தான் தமிழில் பணக்காரி என்ற பெயரில் 1953ல் தயாரித்தார்கள். T.R. ராஜகுமாரி, சந்தேகக் கணவன் நாகையாவின் மனைவி, ராணுவ அதிகாரியான MGR ருடன் நட்பாக இருக்க விரும்புவார். மனைவியின் உண்மை நட்பை கணவன் சந்தேகிப்பதே கதையின் ஒற்றை வரி. மக்கள் திலகதுக்கு ஒரு வகையில் வில்லன் போன்ற தோற்றம். கதையின் போக்கில் ஐரோப்பிய நாகரிக வாடை அடித்ததால் வெகு ஜனத்தால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதில் TR ராஜகுமாரி MGR இன் கையைப் பற்றி கை குலுக்குவார். அவர் மற்றவரின் மனைவி. இந்த காட்சியை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கதை நமது கலாசாரத்தில் இருந்து மிகவும் வேறு பட்டு இருந்தது. அதனால் தான் அது பெருந்தோல்வியை சந்தித்தது. அதே கால கட்டத்தில் மலையாள மறுபதிப்பாக தமிழில் வெளி வந்த ‘பிச்சைக்காரி’ படம் குறைந்த பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்டு வணிகரீதியாக வசூலை அள்ளியது. தமிழக சினிமா வட்டாரத்தில், பணக்காரியை வாங்கியவர்கள், பிச்சைக்காரர்கள் ஆனார்கள், பிச்சைக்காரியை வாங்கியவர்கள், பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்று கமெண்ட் அடிக்கப்பட்டதாக சொல்லுவார்கள்.
அதன் பிறகு 1957ல் சக்கரவர்த்தி திருமகன் திரைப்படத்தயாரிப்பில், நட்டத்தை ஈடு கட்டி விட்டார் என்று சொல்வார்கள். மீண்டும் விழுந்தது, சித்தூர் ராணி பத்மினி படத் தோல்வியினால் தான். இப்படி இந்திரன் வந்ததும், சந்திரன் வந்ததுமான சினிமா இன்னும் மக்களை ஆட்கொண்டு தான் இருக்கிறது. பலரை கோபுரத்தில் ஏற்றி, பலரைக் குப்புறத்தள்ளி, குழியும் பறித்து தன் போக்கில் இன்னும் போய்க் கொண்டு இருக்கிறது.
இப்போது, நாம் நமது சரஸ்வதி திரை அரங்கம் நோக்கி நமது கவனத்தைத் திருப்புவோம். சிறு வயதில் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட ‘சிவந்த மண்’ திரைப்படத்தை, நண்பர்களுடன், திரைக்கு அருகில் அந்த மணல் போடப்பட்ட திண்டில் அமர்ந்து பார்த்த நினைவு இருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் எடுக்கப் பட்ட அந்த MATADOR BULL FIGHT ஐ அருகில் இருந்து பார்க்க வேண்டும் என நண்பன் கொடுத்த ஐடியா… ரொம்ப கிட்ட இருந்து பார்க்கிறோமாம்!!, 1969 ஆம் வருடம் நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நம்ம ஊருக்கு வரும் போது 1970. 5ஆம் வகுப்பு படிக்கிறேன், சைவப்பிரகாச வித்தியாசாலையில்.
வெளிப்புறப்படப்பிடிப்புகளில் பெரும்பாலும், நடிகர் திலகம், மேக் அப் இல்லாமல், உண்மையான தோற்றத்தோடு இருப்பார். இதற்குப் பின் தான் புரட்சி நடிகர், உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக EXPO 70க்கு ஜப்பான் சென்றார்.
அதற்கு பின் ஒரு முறை, குன்றக்குடி அடிகளார் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் எல்லாம், (என்ன விழா என்று மறந்து விட்டது) இவர்கள் எல்லாம், சரஸ்வதி திரை அரங்கில் வெள்ளித்திரை முன்னே இருக்கும் இதே மணல் பரப்பிய திண்டினை மேடையாக மாற்றப்பட்டு கலந்து கொள்கிறார்கள். முதல் முதல் வரிசைகள் எப்போதும் பொடிசுகள், அந்த பொடிசுகளில் ஒன்றாக நான். மிக அருகில் இவர்களுடன்…. நடிகர் திலகம் சந்தனக் கலரில் குர்தா அணிந்து இருக்கிறார். ‘குளத்தில் உள்ள அழுக்கை மீன் தன் வயிற்றுக்காக சாப்பிட்டு சுத்தம் செய்வது போன்றது என் பங்கு… பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைப்பது போல இந்த சிறியவன் செய்வதையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நடிகர் திலகம் பேசியது இன்னும் காதில் கேட்கிறது.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆஜானு பாகுவான தேகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அந்த அம்பாசடர் காரில் இறங்கி வந்ததில் இருந்து… அந்தக் காரில் அவர் கால் நீட்டும் இடத்தில் கூட ௐம் என்று பொறிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின் எத்தனையோ முறை கந்தர் சஷ்டி விழாக்களில் பட்டிமண்டப நடுவராக நாள் முழுக்க கண்டு இருக்கிறேஅன். ஆனால் அந்த முறை மிக அருகில்,,, மனதில் பதிந்து விட்ட நிகழ்வு. அந்தக் காலங்களில், பெரியவர்களுக்கு மாலை மரியாதை செய்யும் பொழுது, கையில் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுப்பார்கள். (தில்லானா மோகானாம்பாள், வைத்தி,,,நாகேஷ்). அவரையே பார்த்துக் கொண்டு இருந்த என் கண்களைக் கவனித்த அடிகளார், கைகளால் சைகை செய்து என்னை அவர் அருகில் அழைத்தார். தன் கையில் இருந்த எலுமிச்சம் பழத்தை என் கையில் கொடுத்தார். ஏதேனும் என் கையில் கொடுக்க வேண்டும் என்று அவர் மனதில் தோன்றி இருக்க வேண்டும்.. கையில் இருந்தது அப்போது எலுமிச்சம் பழம் தான்… எனவே அதை வழங்கி விட்டாரோ என்னவோ?
இது தவிர, என் அண்ணன், மாட்டுக்கார வேலன், வா ராஜா வா, சொர்க்கம், விளையாட்டுப் பிள்ளை, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா, C I D சங்கர், காவியத்தலைவி, நவக்கிரகம், அனுபவி ராஜாஅனுபவி, புன்னகை, இருளும் ஒளியும், அன்னை வேளாங்கண்ணி, நீரும் நெருப்பும், சவாலே சமாளி, துணைவன், மூன்று தெய்வங்கள் என்று சிறு வயதில் கண்டு களித்த காவியங்கள் இன்னும் மன ஓவியங்களாய் ஓடிக்கொண்டு இருக்கின்றன. அப்போது நகரில் சினிமா ஒன்று தானே ஒரே பொழுது போக்கு… அதனால் அதன் ஆதிக்கம் அதிகம்.
ஒரு திரைப்படம் திரையிடப்படுகிறது என்றால், ஊரெங்கும் சுவரொட்டிகள், ஒரு வண்டியில், ட்ரம்ஸ் அடித்தபடி, பெரிய போஸ்டருடன், பெட்ரோமாக்ஸ் விளக்கு பொருத்திய நாலு பக்க போஸ்டருடன், துண்டு பிரசுரங்கள் வழங்கியபடி ஊர் முழுக்க வலம் வருவார்கள். அதே போல் அந்த படத்தின் பாட்டுப் புத்தகங்கள் ஒரு அணா (6 காசு) விலையில். ஆப்செட் படக் காலண்டர்கள் பட நாயகர்களின் போஸ்ளில்… அந்தக் காலம் கண்களில் இனிமேல் வரப்போவதில்லை. நினைவுகளின் தாலாட்டில் தவழ்வதை யாரும் தடுக்க இயலாது…
இதுவரை இளமைக் கால சரஸ்வதி அரங்க நினைவுகள்.. வளர வளர… வாலிபம் எய்த… பக்குவம் அடைய காலம் மாறியது… காட்சிகளும் தான்….
அடுத்த பகுதியில்……..
கருத்துகள்
கருத்துரையிடுக