அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 49

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 48
 08-04-2018

அன்பு சொந்தங்களே ...

அன்பின் பந்தங்களே ....

இதன் முந்தைய பகுதி நீளம் போதவில்லை என்பது  அன்பர்களின்  வருத்தம். சென்ற பகுதி சரஸ்வதி திரை அரங்கில் கூட்டுப் புழுவாய்,கிணற்றுத் தவளையாய் விபரம் அறியாத இளம் வயது.  குழந்தையாக பிறக்கும் போது எந்த கபடும், சூதும், வஞ்சனையும், ஆசையும் இல்லாமல் தானே பிறக்கிறோம். இயற்கையை DNA வில் பதிந்த பாரம்பரிய குணம் எவ்வளவு தான் உன்னதமானதாக இருந்தாலும்,ஒருவரின் வளரும் சூழல்,வடுக்களாக மனதில் பதிந்து வாழ்வின் வழி முறையையே மாற்றி அமைத்து விடும்.

எந்தக்  குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணிலே பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே .....


அந்தக்  காலத்தில் சினிமாவுக்கு என்று வீட்டில் அனுமதி வாங்குவது குதிரைக்கொம்பு.   என் தந்தையார் அனுமதிக்கவே மாட்டார். அதுதான் அம்மா இருக்கிறார்களே.  எப்படியாவது அனுமதி வாங்கி என்னை அனுப்பி விடுவார்கள்.  இது ஏனெனின், கலை  என்ற பெயரில் மற்ற கருமாந்திரங்களும் மனதில் ஏறி விடக்  கூடாது என்பதனால் தான்.  அம்மாவும், நல்ல திரைப்படமா? உடன் வரும் நண்பர்கள் எப்படி என்று ஆய்ந்து அலசி விட்டுத்தான் அனுமதி வாங்கித் தருவார்கள்.  இதெல்லாம் ஒரு வயது வரை தான்.  தோள் வரை வளர்ந்து தோழன் ஆனபின் நமக்கா  கதை சொல்லத் தெரியாது?

இதற்கு மேல் போவதற்குள், சில முக்கிய நபர்களை அறிமுகப் படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  இவர்களை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.  அவர்களைப் பற்றி அறிமுகம் இருந்தால் தான் அடுத்த பகுதிகள் மனதில் நிற்கும்.  அந்தக் காரணத்தினால் தான் சென்ற பகுதியை சுருக்கமாக முடித்தேன்.

அப்துல் ரஷீத்

தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் கார்ப்பரேசன் வீதி ஆரம்பிக்கும் இடத்தில் 'நஸீர் கிளாஸ் ஹவுஸ்' என்று பார்த்து இருப்பீர்கள். இந்தக் கடையின் உரிமையாளர் அன்பு நண்பன் அப்துல் ரஷீத் ஆகும் . இந்தக் குடும்பமே  மூன்று தலைமுறைகளாக என்னுடன் நெருக்கம். உருது பேசும் இசுலாமியர். முற்போக்கு சிந்தனையாளர்கள்.  தலைமுறைகளாக தேவகோட்டை ஒற்றைக்கடையில் வட்டாணம்  ரோடு தேவார விடுதிக்குப் பின் வீடு.  பாவா என்று என்னாலும் அவரின் மக்களை போலவே அழைக்கப்படும்  அவர், வெள்ளையன் ஊரணி தென்கரையில் இருந்த அன்பு நண்பன் பள்ளித் தோழன் அமரன் ரூசோ வின் 'பாத்திமா நாயகி ஜவுளி ஹாலில்'  தையல் கடை வைத்து இருந்தார்.    திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர அபிமானி. கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது பெரும் அன்பு வைத்து இருந்தவர். இவரின் தகப்பனாரும் எனக்கு நினைவில் இருக்கிறார்.  அத்தர் முதலான வாசனைத் திரவியங்கள் விற்பார்.

இவரது மூத்த மகன் சித்தார் கோட்டையில் பள்ளி ஆசிரியர். 

இரண்டாவது மகன் ஷா நவாஸ், இளங்கலை நிலவியல் (GEOLOGY) படித்து முடித்து விட்டு  தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் உயர் அதிகாரியாகப் பணி  புரிந்தார்.

மூன்றாவது மகன் நவாப் ஜான், என் சித்தப்பா பவளம் அவர்களின் குழு.  நான் முதன் முதலில் அறிந்த கல்லூரி மாணவர். மதுரை  வக்ப் வாரிய கல்லூரியில் இளங்கலை பொருளாதார மாணவனாக இவரை நான் முதன் முதலில் அறிவேன்.  இவர் படிக்கின்ற காலங்களிலும் சரி, படித்து விட்டு வேலை தேடிய VIP காலங்களிலும் தனது வீட்டில் இருந்ததை விட எங்கள் வீட்டில் தான் அதிகம் இருப்பார்.  டிரான்சிஸ்டர் ரேடியோவில் பாப் இசை கேட்பதில் இருந்து,  ஆங்கில சஞ்சிகைகள், வட இந்திய சினிமா செய்திகள் அதிகம் வரும் பிலிம் பேர் (FILM FARE )பத்திரிகைகள், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகளை பைண்ட் செய்து புத்தகமாக படிப்பது என்று அனைத்துக்கும் இவர் தான் என் மானசீக குரு.  அவரும் என் மேல் சொந்த தம்பி போல மிக அன்பாய் என்னை சேர்ந்தவர்கள் குறை சொன்னால் கூட எனக்கு ஆதரவாக பேசுவார்.  இவரது குடும்பத்தினர் அனைவரும் திராவிட முன்னேற்ற ஆதரவாளர்களாக இருந்த போதிலும், புரட்சி தலைவர் தனியாக கட்சி ஆரம்பித்த சமயம், அந்த இயக்கத்தில் தன்னை ஈடு  படுத்தி கொண்டு, முன்னாள் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் எனது உறவினர் அமரர் திரு அங்குசாமியின் nomination முதல் MLA ஆகிய  பின்னரும்  உடன் இருந்தவர். முக்கால் வாசி சுவர் விளம்பரங்கள் (1977 தேர்தல் காலங்களில்) இவர் கைவண்ணமே, எங்கள் பகுதியில்.  இப்படி இவர் என் குடும்பத்தில் ஒருவரானவர்.  பின்னர் வக்ப் வாரியத்தில், நிர்வாக அதிகாரியாக ( EXECUTIVE OFFICER ), பிரான்மலை தர்ஹாவில் வெகு காலம் இருந்தார்,இன்னும் மதுரை ,சிவகங்கை மாவட்டங்களில் பணி  புரிந்தார்.

அடுத்த கடைசி தான் அப்துல் ரஷீத் எனும் என் ஆருயிர் நண்பன்.  இந்தக் கால கட்டத்தில் தன்னுடைய மூத்த அண்ணன் பணி  புரிந்த சித்தார் கோட்டை பள்ளியில் 10 ஆம்  வகுப்பு வரை படித்து விட்டு தேவகோட்டை வந்து சேர்ந்தான் ரஷீத்.  நான் சில வருடங்கள் அவனுக்கு மூத்தவன், நான் அப்போது கல்லூரியில் .  அன்பன் ரஷீதை பள்ளியில் சேர்க்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்க பட்டது.  நகரத்தார் பள்ளியில் சேர்த்து விடுகிறேன் பிளஸ் 2 வில். 1978 ஆம்  வருடம் என்று நினைக்கிறேன்.  அப்போது தான் நகரத்தார் மேல் நிலைப் பள்ளியில் இரு பால் கல்வி (CO -EDUCATION ) ஆரம்பிக்கப் பட்டது.  யாரிடமும் சுலபமாக மனதார பழகி விடுகின்ற ரஷீத் என்னுடன் ஒரு தம்பியாகவே மாறி  விட்டார். எங்கு சென்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் திரிவோம். 

எனது நண்பர்கள் எல்லாம் அவருக்கும் நண்பர்கள்,  எனது உறவினர் எல்லாம் அவருக்கும் உறவினர்கள்.  எனக்கும் அப்படியே. சிவகங்கையில் நடுக்காட்டில் இருக்கும் எங்கள் குலதெயவ கோவிலுக்கு  எல்லாம் அவர் வந்து இருக்கிறார்.
ஆயிற்று நான் B.Com முடித்து விட்டேன், அவர் ப்ளஸ் 2 முடித்து விட்டார், அதற்கு மேல் அவரால் தொடர இயலவில்லை.  நான் உடனடியாக வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன்.  அப்போதே இன்றைய நிலை தான்.  ஆனால், இடையில் ICWA படிக்க ஆரம்பித்தேன்,ஆனால் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதாவது வேலையில் அமர்ந்து ஆக வேண்டும்.
  
அப்போது தேவகோட்டையில் பொழுது போக்கு என்றால் :

1.     ஆற்றங்கரையில் மணலில் குழுவாக சென்று கபடி விளையாடுவது
2.     அவ்வப்போது கபடிப்  போட்டிகள் நடத்துவது
3.     ஒரு திரைப்படம் விடாமல் பார்த்து விடுவது, அது குப்பையோ... குன்றின் மணியோ
4.     தேவகோட்டையில் பார்ப்பது போதாது என்று காரைக்குடியில் இரவு மிதி வண்டியில் சென்று இரண்டாம்    ஆட்டம் படம் பார்த்து வருவது  .
5.     அவ்வப்போது மதுரையில் வங்கித் தேர்வு எழுதுகிறேன் பேர்வழி என்று நண்பன் ரஷீத்தையும் அழைத்து   கொண்டு  மதுரை சிவம் தியேட்டரில் படம் பார்த்து விட்டு வருவோம்.

6.     1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாட்டுக்கு இருவரும் சென்று திரிந்து வந்த நினைவுகள் மனதில் ஓடுகின்றன. முத்து இராமலிங்க தேவர் சிலையில் இருந்த இருவரும் மக்கள் அலையில் அலைக்கழிக்க பட்டு ஒருவரை ஒருவர் பிரிந்து கலெக்டர் ஆபிஸ் அருகில் தான் மீண்டும் பார்க்க முடிந்தது.

7.     இடையில், நவாப் அண்ணன் எங்கள் இருவரையும் மதுரை சித்திரை பொருடக்காட்சிக்கு அழைத்து செல்வார், அவர் பணி  புரிந்த பிரான் மலைக்கு அழைத்து செல்வார் .




இப்படி இலக்கு இல்லாத பறவைகளாக எங்கெங்கோ பறந்து கொண்டு இருந்த காலத்தில், தினசரி இரவு 8 மணி ஆகி  விட்டால் இருவருக்கும் காய்ச்சல் வந்து விடும்.  இரவு படம் பார்த்து ஆக  வேண்டும் . இல்லை என்றால், மது அடிமைகள் மாதிரி கை  கால் ஆட ஆரம்பித்து விடும்.

படத்துக்கு வெறி பிடித்தவர்கள் மாதிரி ஒத்தக்கடையில் இருந்து ஓட்ட நடையாக செல்வோம்.  இப்போது எல்லாம் அவ்வளவு வேகமாக நடக்க இயலுமா என்பது சந்தேகமே.  படம் முடிந்து நள்ளிரவு 1 மணி 2 மணி வாக்கில் வீடு திரும்புவோம்.படம் பார்க்க புறப்பட்ட உற்சாகமும், வேகமும்,  தெம்பும் மனதிலும் உடம்பிலும் இருக்காது.  முக்கியமாக ந.நா.நந்த கோபாலன் கடை வழியாக, சமயபுரம் மாரி அம்மன் கோவில் வழியாக, நகர பள்ளிக்கூடம் நோக்கி வருவோம்.  சமயங்களில் அந்த இரவு நேரத்தில் ஆள், அரவம் இல்லாத சந்துகளில் வரும் போது  பேய் பயம் தொற்றி கொள்ளும்,  நடை வேகமாக மாறும்.  ஒருவருக்கு ஒருவர் பயத்தை பரிமாறிக் கொள்ள மாட்டோம். ஆனால் இருவருக்குமே தெரியும். இருவருமே அரண்டு போய்  மிரண்டு போய்த்தான் நடந்து வருகிறோம் என்று.  இந்த நேரம் கெட்ட  நேரத்தில் எங்கிருந்தோ ஒரு நாய் ஊளையிட ஆரம்பிக்கும்.. இப்போது வேக நடை சிறு ஓட்டமாக மாறும். எங்கள் ஓட்டத்தை கண்டு மிரண்டு போன நாய் இன்னும் தன் சகாக்களை சமிஞ்சை செய்து அழைக்கும் ..  இரண்டு நாய்கள்,  சந்து முனைக்கு வந்து சேர்வதற்குள் நான்கு ஆகி  விடும்.  நெஞ்சிலிருந்த இதயம் வாய்க்கு வந்து விடும். அப்படியே வெளிச்சம் இருக்கும் வரை ஓடி வந்து விட்டு, இருவருமே ஒன்றும் நடக்காதது போல் பேசாமல் ஒத்தக்கடை வந்து சேர்வோம்.

அதே போல அவ்வப்போது காரைக்குடிக்கு புதிய படம் ரிலீஸ் ஆனால் சைக்கிளில் ஒரு 5 பேர், 10 பேராக கிளம்பி விடுவோம்.  ட்ரிப்ள்ஸ் எல்லாம் சர்வ சாதாரணம்.  என்ன ஒரு விசேஷம் என்றால்,கையிலே  8 மணிக்கு காசு இருக்காது.  அதை அங்கே, இங்கேன்னு பிராய்ந்து சேர்ப்பதற்குள்  மணி 9 ஆகி விடும்.  அதற்கப்புறம் மிதி வண்டியை மிதித்தால், 40 நிமிடத்தில்  நடராஜா டாக்கீஸ்.  இந்த அமராவதி புதூர் போகும்போது தான் நாய் விரட்டி இன்னும் கொஞ்சம் எங்களை வேகப்படுத்தும்.  இதில் இந்த ரஷீத் மட்டும் சைக்கிள் ஒட்டவே மாட்டார். உட்கார்ந்து மட்டுமே வருவார்.  நிஜாம் ஆச்சே.

அந்த நல்ல நண்பன், அன்பு சகோதரன் இன்று இம் மண்ணுலகில் இல்லை.

எம்மீது
பற்று வைத்த அவன் உடல்
புற்று நோயில் போய்  விட்டது - ஆயின்
அற்று போகாமல் அன்பில்
வாழ்கிறான் இன்னும்...

என்ன ?
சரஸ்வதி திரை அரங்கம் பற்றி எழுத ஆரம்பித்து விட்டு நண்பரின் கதையைச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா . அல்ல.  இந்த சரஸ்வதி திரை அரங்கம் பல தேசத்து பறவைகள் வந்து அடையும் ஒரு கூடாக இருந்த நேரம்.  ஒவ்வொரு பறவைக்கும் ஒரு பின் புலம் உண்டு.  இந்த ரஷீத் அதில் ஒரு பறவை ..

இக்னேஷியஸ் சேவியர்

நான் முன்பே குறிப்பிட்டு இருந்தேன்.  எங்கள் பூர்வீகம் வைகை வளம் புரியும் மானாமதுரை பக்கம் ஒரு கிராமம் என்று.  மதுரையில் இருந்து பயணிக்கும் வைகை திருப்புவனம் வழியாக மானாமதுரை வந்து பரமக்குடி வழியாக பெரிய கண்மாய் போய்  சேரும். இந்த வழித் தடத்தில் நிறைய ஊர்களின் பெயர்கள் ஏந்தல் என்று முடியும்.  முத்தனேந்தல், லாடனேந்தல் என்று ... நீர் வரும் வழிகளை ஏரி, கண்மாய்,கரனை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று பெயரிடப்பட்டு இருக்கும் தமிழில். இந்த முத்தனேந்தல், லாடனேந்தல் பகுதியில் கிறித்துவத்துக்கு மாறிய பிள்ளைமார்கள் குடும்பம் நிறைய உண்டு. இந்த பகுதியில் சவேரியார் புரம் பகுதியினை சேர்ந்த திரு.யாகுப் பிள்ளை என்பவர் தேவகோட்டை ராம் நகர் தே பிரிட்டோ பள்ளியில் ஆசிரியராக பணி  புரிந்தார். 

இவரது மூத்த மகன் Y.A.P. என்று அனைவராலும் அன்புடனும்  மரியாதையுடனும் அழைக்கபட்ட நகரத்தார் மேல் நிலைப் பள்ளியின் ஆசிரியரும் NCC பயிற்றுவிப்பாளரும் ஆன திரு.Y .அருள் பிரகாசம்.  அவர் குடும்பத்தில் இவருக்குப் பின் மூன்றாவதாக பிறந்தவர் சேவியர்  என்று அழைக்கப்படும் இக்னேஷியஸ் சேவியர். நல்ல கால் பந்து விளையாட்டு வீரர்.   சேட்டை.  நல்ல ஆசிரிய குடும்பத்தில் பிறந்த போதும் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. இவரது கடைசி தம்பி அருள் அவர்களும் ஆசிரியர்.  திருப்பத்தூர் சாலையில், அருள் காபி என்ற பெயரில் காபி அரைத்து பாக்கெட் போட்டு விற்கப்படும் காபித்தூள் கடை நடத்தி வந்தார் முழு நேர ஆசிரியர் ஆக  மாறும் முன்பு.

அன்பு மாப்பிள்ளை சபா எனும் சபா ரெத்தினம் ( Ex -பாண்டியன் கிராம வங்கி ) மற்றும் சின்ன அருணாச்சலம் இவர்கள் யாவரும் ஆசிரியர் திரு. Y.A.P. இவர்கள் பால் மிக்க மரியாதையும் அன்பும் பூண்டவர்கள்.  மாப்பிள்ளை சபா சரஸ்வதி திரை அரங்க உரிமையாளர் குடும்பமான ரெட்டை ஆனாரூனா குடும்பத்துடன் நெருக்கம். எனவே படிப்பை பாதியிலேயே விட்டு விட்ட சேவியர் அவர்களுக்கு தம் ஆசிரியர் Y.A.P.அவர்களின் தம்பி என்ற முறையில்  இந்த சரஸ்வதி திரை அரங்க கேன்டீனை நிர்வாகம் செய்யும் பணியில் அமர்த்தினர்.
இந்த நேரத்தில் தான் நானும் நண்பர் ரஷீத்தும் தினசரி படம் பார்க்கும் நிரந்தர ரசிகர்கள்.  இந்த சேவியர் தினமும் கேன்டீனில் வேலையாய் இருப்பவர், எங்களிடம் நட்பு ஆனார்.

1999 ஆம்  வருடம் ஆகஸ்ட் கடைசியில் இந்தோனேசியா வேலையை உதறி விட்டு தாய் நாட்டில் வாழ்வோம் என்று சென்னை வந்து செட்டில் ஆகி வீடும் கட்டிக் கொண்டு இருந்தேன். 

சென்னையில் GLOBAL LINKS என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பித்து மலேசிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில்  ஈடு பட ஆரம்பித்தேன்.  அந்த கால கட்டத்தில், நண்பர் சேவியர் சென்னை வந்து, எப்படியும் மலேஷியாவுக்கு ஏதேனும் ஒரு பணிக்கு சென்று விட வேண்டும் என்றார்.   அந்த காலகட்டத்தில்  அடிக்கடி மலேசியாவுக்கு பறந்து கொண்டு இருந்தேன்.

இதே சேவியர் திருமணத்துக்கு  பிறகு குடும்ப வாழ்வில் மிகவும் சிரமப்பட்டு 2000 ஆம் வருட வாக்கில் எப்டியாவது மலேசிய சென்று விட்டால் போதும் , இங்கு கடன் தொல்லை தாள முடியவில்லை, மீள முடியாது போல் இருக்கிறது என்றார்.  அங்கும் என் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்பவர்கள் சீன நிறுவனங்கள் தான்.  தமிழர் நிறுவனங்கள் இறக்குமதி வர்த்தகத்தில் அரிது. இங்கிருந்து பணிக்கு மலேஷியா செல்லும் தமிழர்களின் நிலைமை நன்கு அறிவேன்.  எனவே நண்பர் சேவியரிடம், மலேஷியா செல்ல வேண்டாம், வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் பற்றி யோசிப்போம் என்று சொன்னேன். அவருக்கு இங்கு தலைக்கு மேல் பிரச்னை போல்... எனவே டிக்கெட் மட்டும் எடுத்து கொடுங்கள், கோலாலம்பூர் விமான நிலையத்தில் குடியேறல் (IMMIGRATION ) மட்டும் சரி செய்து கொடுங்கள் என்றார். நான் அங்கு சென்று பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். மனம் கேட்கவில்லை.  எனது நண்பர் திரு.நாகராஜன் அவர்கள், கோலாலம்பூரில் இருந்தார்.  அவரது உறவினர், அங்கு வழக்கறிஞர், விமானநிலையத்தில் செல்வாக்கு உடையவர். அவரிடம் இவர் விபரங்களையும், பயணிக்கும் விமான விபரங்ககளையும் தெரிவித்து விட்டேன். அவர்களும் இவரை விமானநிலைய கெடுபிடிகளில் இருந்து வெளியேற்றி அவர்கள் இடத்தில் தங்க வைத்து இருந்து இருக்கிறார்கள்.  அடுத்து ஏதேனும் வேலை பார்த்துக் கொடுக்கலாம் என்று. கண்டிப்பாக அதற்கு ஒரு சிறு கட்டணம் வசூலிப்பர். ஏனென்றால் அவர்களும் மற்றவர்களுக்கு fees கொடுத்துத்தானே  உதவ முடியும்??.

நம்ம சேவியருக்கு யார் கொடுத்த ஐடியாவோ.   அவர்களிடம் இருந்து சொல்லாமல் வேறு எங்கோ ஒரு வேலையில் சேர்ந்து விட்டார். இந்த கட்டணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக .  எனக்கு இந்த விபரங்களை கடிதம் வாயிலாக தெரியப்படுத்தி இருந்தார்.  நண்பர் நாகராஜனுக்கு இந்த விஷயத்தில் என் மீது கசப்பு உணர்வு ஏற்பட்டது.  நான் கேட்டுக் கொண்டதால் தானே அவர் உதவி செய்யத் தனது உறவினரை நாடினார்?

அதன் பிறகு எனது அடுத்த மலேஷிய (இறக்குமதியாளரை சந்திக்க சென்ற) பயணத்தின் போது, செலாங்கூரில் என்னிடம் இறக்குமதி செய்யும் சீனரிடம், எனது நண்பருக்கு பெர்மிட் எடுத்து கொடுத்து பணியில் அமர்த்திக் கொள்ள இயலுமா என வேண்டினேன்.  அந்த சீனரின் பெயர் RICHARD KHOR. அவரது ENG SHENG SDN BHD., என்னிடம் இருந்து நிறைய இறக்குமதி செய்து கொண்டு இருந்தார்கள்.  உலகம் முழுவதும் இருந்து இறக்குமதி செய்பவர்கள்.  என்  மேல் நல்ல அபிமானம் வைத்து இருந்தார் அவர்.  சரி அழைத்து வாருங்கள்,செய்கிறேன் என்றார்.  

அன்று இரவே, கடிதத்தில் சேவியர் அனுப்பி இருந்த முகவரிக்கு taxi எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 2 மணி நேரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தேன்.  பெர்மிட் இல்லாமல் கள்ளத்தனமாய் வருகின்ற தமிழர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்து அவர்களது பாஸ்போர்ட்டையும்  வாங்கி வைத்து கொண்டு அடி மாட்டு ரேஞ்சுக்கு  குறைந்த ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்து இருப்பது மலேசியாவில் வழக்கம்.  அப்படி செய்பவர்கள், பெரும்பாலும் நமது இனமான தமிழர்களே.

ஒரு வழியாக சேவியரை சந்தித்து, வாருங்கள் வெளியே அழைத்து செல்கிறேன் என்று நான் தங்கி இருந்த 'மஸ்ஜித் இந்தியா' பகுதிக்கு அழைத்து வந்து அவரை அங்கு ஓடிக் கொண்டு இருந்த, நடிகர் அர்ஜுன், மீனா நடிப்பில், நம்ம தேவகோட்டை இயக்குனர் வசந்த் அவர்களின் படமான 'ரிதம்' திரைப்படத்துக்கு 'கோலோசியம்' திரை அரங்கில் படம் பார்த்தேன்.  பிறகு விடிய விடிய அவரிடம் எனது ஹோட்டல் அறையில் பேசிக்  கொண்டு இருந்து விட்டு, இங்கேயே என்னுடனேயே தங்குங்கள்.  காலையில் அந்த சீனக்கம்பெனிக்கு அழைத்து செல்கிறேன்.  அவர் வேலை கொடுப்பது பெர்மிட் உடன். அப்படி அதற்கிடையில் ஊருக்கு  போய்  வர வேண்டும் என்றால் போய்  வரலாம். முதலில் அந்த சீனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என சொன்னேன்.  ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்று விட்டார்.  விடிவதற்குள் என்னை திரும்ப ரூமில் கொண்டு போய்  விட்டு விடுங்கள்.  நான் தற்போது தான் கொஞ்சம் செட்டில் ஆகி  இருக்கிறேன்.  மேலும் என் பாஸ்போர்ட் முதலாளி வசம் இருக்கிறது.  என்னால் இப்போது அதை திரும்ப கேட்க இயலாது.  நான் சரியான இடத்தில் தான் இருக்கிறேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டார்.  என்னால் கோபித்து கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாவில்லை .

சரி உங்கள் விருப்பம் என்று கையில் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.  அவர் தானாகவே தனது இருப்பிடம் சென்று விடுகிறேன் என்று சென்று விட்டார். இது நடந்தது செப்டம்பர், 2000 த்தில்.  இது தான் நான் அவரை கடைசியாய் சந்தித்தது.

இதற்கிடையில் மலேசியாவின் பொருளாதாரம் இன்னும் கீழே சரிந்தது.  L .C . யில் இறக்குமதி  செய்து கொண்டு இருந்த நிறுவனங்கள் கடன் தவணையில் சரக்கை ஏற்ற கேட்டன.  சில சென்னை நிறுவனங்கள் இன்னும் கடனில் வியாபாரம் செய்து கொண்டு தான் இருக்கின்றன.  எனக்கு கட்டுப்படி ஆகாது என்று அந்த ஏற்றுமதி தொழிலையே நிறுத்தி விட்டேன்.  பின்னர் பல பணிகள் செய்து ஒன்றும் திருப்தி இல்லாமல்,மீண்டும் இந்தோனேசியாவுக்கே வந்து விட்டேன்.

நான்  சேவியர்  மலேசியாவில் இன்னும் இருக்கிறார் அல்லது ஊருக்கு வந்து இருப்பார் , நம்மிடம் தொடர்பு இல்லாமல் இருக்கிறார் என்ற எண்ணத்தில் இருந்தேன்.  இரண்டு வாரங்களுக்கு முன்பு, அன்பு வகுப்பு தோழனும், தே பிரித்தோ பள்ளியில் பணி புரிந்து விட்டு ஓய்வில் இருக்கும் திரு.சண்முக நாதனிடம் வேறு விஷயங்கள் பற்றிப் பேசும் போது சேவியர் பற்றி பேச்சு வந்தது.  நண்பர் கூறினார்,  சேவியர் மதுரைக்கு திரும்ப வந்து இருந்து உடல் நிலை கோளாறு காரணமாக மரணம் அடைந்து மாதங்கள் ஆகி  விட்டன என்று.....

அட ஆண்டவா .....
  
இந்த சேவியர் இன்னொரு பறவை ....

முத்துக்குமார் அண்ணன், இரவுசேரி.

திரைப்பட அரங்கம் என்றால், பல தரத்தினரும் வந்து செல்லும் இடம்,  சிலர் வில்லன்களாக  மாறி வில்லங்கம் செய்து கொண்டு இருப்பார்கள்.  இதற்கு சரியான MUSCLE POWER இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது.  நான் முன்பே குறிப்பிட்டேன்,  சரஸ்வதி திரைஅரங்க வாசலில் இருக்கும், இளையபெருமாள் உணவு விடுதியினை துவார பாலர் போல் என்று… துவாரபாலகர்களை கோவில் சன்னதி வாசல்களில் கவனித்து இருப்பீர்கள். அவர்கள்தான் சன்னதியின் காவலர்கள், அது போலத்தான், சரஸ்வதி திரை அரங்கத்தில், இளையபெருமாள் கடையில் உள்ளவர்கள் ஒரு அரண்.  அது போல இரவு சேரியை சேர்ந்த திரு.காளிமுத்து அண்ணன், திரு.சொர்ணலிங்கம் அண்ணன் அவர்களின் உறவினர் திரு.முத்துக்குமார் அவர்கள் அங்கு தினசரி விஜயம் செய்வார்.

கண்டதேவி ஆத்மநாதன்:

இவர் கண்டதேவியின் அம்பலம்.  இவர் சகோதரர் திரு.சொர்ணம் எங்கள் வெட்டிக்கதை செட்.  சிலம்பணி ஊரணிக்கரையில் ஒரு செட் மாலை நேரங்களில் சேரும்.  ஆடிட்டர் ரவி, லிபியா சுப்பிரமணியன், ராம்ஜி( இவர் தந்தை ஒரு லாயர், தற்போது இவர் காரைக்குடி வ.உ.சி. சாலையில், ஆட்டோமொபைல் பாட்டரி விற்பனை மற்றும் சேவை நிறுவனம் நடத்தி வருகிறார்), மற்றவர் மறைந்த மாவீரன் ரூசோ,  மாப்பிள்ளை செந்தில் (தற்சமயம் கோவை வாசம்), மாப்பிள்ளை மீனாட்சி சுந்தரம் (கோவையின் பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி).  மாலை நேரம் என்றால் இந்த குழு சிலம்பணி ஊரணி கோவிலுக்கு பின்புறம் உள்ள படித்துறையில் கூடும்.  பகல் நேரம் என்றால், தேவகோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள சாலையில் ‘வலம்புரி’ மிதிவண்டி நிலையம் (சிலையப்பன்) கடையில்.. இதில் ஒரு அங்கத்தினர் இந்த சோணா என்று அழைக்கப்படும் திரு.சொர்ணம் அவர்கள். இவர் சகோதரர், திரு.ஆத்மநாதன் அவர்களும், இந்த சரஸ்வதி திரை அரங்க பறவைக் கூட்டத்தில் ஒரு பறவை.   கடைசியாக ஆத்மநாதன் அவர்கள், திருப்பத்தூர் சாலையில் பழைய நகராட்சி ஆயுர்வேத மருத்துவமனை அருகில் ஒரு தொலைபேசி தொடர்பகம் நடத்தி வந்தார்.

ரெத்தினம், சிவாஜி மன்றத்தலைவர்:

தேவகோட்டை வெள்ளயன் ஊரணி மேல்கரையில் சீனிவாச பள்ளி தியாகிகள் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் தொடங்கும்.  அந்த முனையின் பின்புறம், முத்து கரு வீதியில் போய் சேரும் வெள்ளையன் ஊரணி தெற்கு வீதியின் நீட்சியில் அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் இருந்தது.  அந்தக் காலகட்டத்தில் ரசிகர் மன்றம் என்றால், செய்தித் தாள்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாங்கி பொது மக்களை வாசிக்க வைத்து கொண்டு இருந்தனர்.  இந்த சிவாஜி மன்றத்தில் மிக உயிரோட்டமாக பங்கு பெற்று பணி செய்து கொண்டு இருந்தவர் திரு.ரெத்தினம் அவர்கள்.  அவருக்கு கால் ஊனம்.  ஆனால் வைர நெஞ்சம்.



இவர் ஒரு பறவை…

தர்மராஜ், ஆபரேட்டர்:

பழைய கொட்டகை என்று அழைக்கப்பட்ட லட்சுமி திரை அரங்கத்தில் ப்ரொஜெக்டர் இயக்குனர் (OPERATOR) ஆக இருந்து பலருக்கு சினிமா ப்ரொஜெக்டர் வேலையை கற்றுக் கொடுத்தவர், திருமதி.ருக்மணி அம்மாவின் மகனான திரு.முருகேசன். அவரிடம் இருந்து தொழில் கற்றுக் கொண்டவர்கள் பலர், வாழையடி வாழையாய் அடுத்த தலைமுறையினருக்கு சினிமா ப்ரொஜெக்டர் இயக்கும்  தொழிலை கற்றுக் கொடுத்தார்கள்.  இதில் இந்த தர்மராஜ் ஒருவர், பின்னர் சரஸ்வதி திரை அரங்கில் அவரும் இன்னொருவரான அந்தோணியா பிள்ளை அவர்களும் ஆபரேட்டர் ஆவார்கள். இதில் இந்த தர்மராஜ் அவர்களின் தந்தையார் மாந்தோப்பு வீதியில் இசைக்கிமுத்து என்று கிளாரினெட் கலைஞர். இந்த தர்மராஜ் சரியான சேட்டை… வெளியே தெரியாது,  எனவே, நாங்கள் வைத்த பெயர், ‘பூனை’.


இளையபெருமாள் கடை புரோட்டா மாஸ்டர்.பாம்பு:
இதோடு ஒரு முக்கிய கதாபாத்திரம், பாம்பு என்று அழைக்கப்படும் இளையபெருமாள் கடையில் புரோட்டா மாஸ்டர். நல்ல வெண்மையான உயர்ந்த ஆஜானுபாகுவான தேகம்.  இடுப்பில் இருந்து மேல்வசமாக உடம்பு விரிந்து நல்ல பாம்பு படம் எடுப்பது போன்ற அருமையான விரிந்த உடல் வாகு.  அனைவருக்கும் பாம்பு என்றுதான் தெரியும், உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.  இசுலாமியர். யாராவது தியேட்டரில் கொஞ்சம் சலம்பல் செய்தால், இவர் அவரை புரட்டி எடுத்து விடுவார்.  இளையபெருமாள் கடை எனும் பரமசிவன் கழுத்துப் பாம்பு ஆயிற்றே!. இரவு 12 மணிக்கு மேல் கடையில் வியாபாரம் முடிந்த பின்னும், பகல் நேரங்களிலும் இருப்பிடம் சரஸ்வதி திரைஅரங்கம் தான்.  மற்ற பரோட்டா மாஸ்டர்கள் எல்லாம், புரோட்டாவை அதற்கான மேஜையில் அடித்து மெல்லிய ஆடை போல வீசுவார்கள்.  நம்ம பாம்பு, காற்றிலேயே இலாவகமாக வீசுவார்.

கோவில் சிற்பி அருணாசலம்:

முந்தைய பகுதிகளில், அமெரிக்காவின் பிட்சுபர்க் நகரில் அருள்மிகு வெங்கடேசுவரர் கோவில் கட்டுமானப்பணியில் திருவாளர்.கணபதி ஸ்தபதி அவர்கள் குழுவில் பணி புரிந்த திரு.அருணா எனும் அருணாசலம். 

இது போல இன்னும் விட்டுப்போன பலர்,  இந்த சரஸ்வதி திரை அரங்க காண்டீன் முன் ஒரு உயர்ந்த சிமெண்ட் மேடை மீது உயரமான தேனிரும்பு குழாயில் அந்த பகுதி முழுமைக்கும் ஒளி வெள்ளம் பாய்ச்சும் வண்ணம் உயரத்தில் ஒரு மெர்குரி விளக்கு எரியும்.  அந்த கம்பத்தின் கீழ் இந்த பஞ்சாயத்து செட் கூடும்.  அல்லது இன்னும் கொஞ்சம் தள்ளி நல்ல முதிர்ந்த ஒரு வேப்ப மரம்.  அதன் அடிப்பகுதியை சுற்றி உயரமாக வட்ட வடிவில் திண்ணை போல சிமெண்டில் கட்டப்பட்டு இருக்கும்.  அந்த இடத்தில் இந்த ஜமா அத் கூடும்.

நானும் ரஷீத்தும், நிரந்தர வாடிக்கையான வேடிக்கையாளர்களாய் ஆகி விட்ட படியால் இவர்களுடன் ஜெல் ஆகி விட்டோம்.  இதற்கிடையில் என் அன்பு மாப்பிள்ளை, வகுப்பு தோழன், உரை வீச்சாளர், சிந்தனையாளர், பன்முக கலை ஆட்சியர், பாண்டியன் கிராம வங்கியின் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், முன்னாள் தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் திரு.இராம. வெள்ளையன் அவர்களின் மருமகன் திரு.சபா ரெத்தினத்தைப் பற்றி சொல்லி ஆக வேண்டும்.  சபா சிறுவயதில் இருந்தே வீயார் குடும்பத்தினருடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர்.  என்னை உள்ளும் புறமும் அறிந்தவர்.  எங்கள் நட்பு இளமை குன்றாமல் இன்றும் பொலிவாகத் தொடர்கிறது.  அடிக்கடி அவர் சரஸ்வதி அரங்கம் வருபவர்.  கல்லூரி முடித்து விட்டு சுற்றித்திரிவதைப் பார்த்து விட்டு, ஒரு நாள், மாப்பிள்ளை, உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால், பணி ஒன்று  கிடைக்கும் வரை, சரஸ்வதி திரை அரங்கில் வேலை செய்கிறாயா? என்று கேட்டார்.  தினசரி படம் பார்க்கிறேனோ  இல்லையோ.. சும்மாவாவது வந்து போய்க் கொண்டு இருக்கிறேன்.  இந்த டீலிங் ரொம்ப பிடித்து இருந்தது.  சரி மாப்பிள்ளை என்று சொன்னேன்.  அடுத்த நாள்,  நானும் ஒரு சரஸ்வதி திரை அரங்க ஊழியன்.  சம்பளம்…. சுவாரஸ்யங்கள்….. அடுத்த பகுதியில்…..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60