அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 50

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 49
15-04-2018க

இந்த உலகம், அண்டம், பேரண்டம் எல்லாம் ஒவ்வொரு நொடியும் புதுப் புது செய்திகளை நாம் வாழும் வரை வழங்கிக் கொண்டே இருக்கிறது.  நமது ஆயுள் முடிந்த பின்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நம்மை பொறுத்த வரை நாம் காண்பது மட்டுமே நமது உலகம்.  எனவே நாம் வாழ்வது ஒரு உலகம் இல்லை, மனதிற்கு மனம் மாறு பட்டு ஜாலம் காட்டுவது இந்த உலகம். இதில் நினைவுகள் மட்டுமே மிச்சம் எனபதே.  தினமும் பார்க்கும் ஒவ்வொரு பொருளும், ஓவ்வொரு பொழுதும் புதுப்புது அர்த்தங்கள் வழங்கிக் கொண்டே இருக்கிறது. 
ஆத்ம திருப்திக்காக நெஞ்சில் நின்ற, நிலைத்த, நெருடிய  நினைவுகளை மிகவும் அரிதாக மிச்சம் இருக்கிற நட்புக்களுடன்  பரிமாறிக் கொள்ள முக நூலில் ஒரு நாள் எழுதினேன்.  அது இவ்வளவு பேரையும் அசை போட வைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.  அது மட்டுமல்ல.  மனதில் தேங்கி இருந்த எத்தனையோ ஜீவன்களை மறுபடி எமக்காக புனர் ஜென்மம் எடுக்க வைத்து இருக்கிறது.

தமிழர் குறித்து இப்படி சொல்வார்கள் :

'தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவருக்கோர் குணமுண்டு'   என்று ...

ஆயின் எனக்கு தெரிந்த வரை, தேவகோட்டை நகர மக்களுக்கு என்று ஒரு குணமுண்டு.  என்றும் பழையன மறக்காத பசும் பொன்  மனம் படைத்தவர்கள். நினைவுகளை மனதில் தாலாட்டும் ஒவ்வொரு பொழுதும்,அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக சொந்தங்களை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது இந்த தொடர்.  ஒவ்வொரு வாரமும் புதுப் புது சொந்தங்கள்,  புது வெள்ளமாய், பொலிவு உள்ளங்களுடன்.

உயிர்களின் மனம் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும்.   இது தான் படைப்பின் (சிருஷ்டியின்) ரகசியம் (மாயா).  ஆராய்ச்சி மனம் ஓடிக்கொண்டே இருக்கும்.  நான் சிறுவயதில் திருவேங்கடமுடையான் பள்ளியில் படித்த காலத்தில், அந்த பள்ளிக்கு எதிரே இருந்த சிவன் கோவில் ஊரணி எனக்கு பல விசயங்களைக் கற்றுக் கொடுத்தது.  கோடை முற்றி கொளுத்தும் வெயில் காலங்களில், சுத்தமாக தண்ணீர் வற்றி, குளத்தின் தரை பாளம் பாளமாக வெடித்து நாளடைவில், கட்டாந்தரை ஆகி விடும்.  பின்பு கால நிலை மாறும்.  காட்சிகள் மாறும்.  ஐப்பசி, கார்த்திகை கார் காலத்தில், மழை அடித்துப் பெய்து, குளக்கால்கள் நிறைய கொணர்ந்த நீர், குளத்தின் மட்டதை சாலையின் மட்டம் வரை உயர்த்தி விட்டுப் போகும்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

என்ற குறள் சொல்லும் கதை போல, தாமரை எங்கும் பூத்து தடாகம் நிறைத்து நிற்கும்.  அது சரி, எனது சந்தேகம் எல்லாம், பொட்டலாய் கிடந்த இந்த குளத்தில் தாமரை எப்படித் தானாக வந்தது?  

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

மூதுரையில் கூறும், கொட்டியும் ஆம்பலும் கூட வேரொடு அற்றுப்போய் வெற்றுக் குளமான மண்ணில் மீண்டும் எப்படி இந்த தாமரைக்கொடிகள்?  சரி, இந்த மீன் இனம் எங்கிருந்து முளைத்தது?  இது போன்ற கேள்விகள் என் மனதில் ஒவ்வொரு வருடமும் வந்து போகும்….கோடையில் காய்ந்து காரில் நிறைந்து நிற்கும் இந்தக் குளத்தைப் பார்க்கையில்.   என் தந்தையிடம் கேட்டேன்.   படிக்காத பாமரர் அவர்.  எப்படியோ தனது கையெழுத்தை மட்டும், நிறுத்தி நிதானமாக போட்டு விடுகின்ற அளவுக்கு படித்தவர்.  அவர் சொன்னார்,  இந்த தாமரையின் விதைகள், மண்ணுள் புதைந்து கிடக்கும். எந்தெந்த விதை எந்தெந்த நேரத்தில் முளைக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.  அதன் படி அந்த விதைக்கு முளைக்கின்ற காலம் வரும்போது, சரியாகத் தண்ணீர் வந்து சேரும்.  அதிலும், முளைக்க இறைவனால் அனுமதித்த (விதித்த) விதைகள் முளைத்துப் படர்ந்து, அடர்ந்து, நிலைத்து, நீரோடு தழைத்து மலர்கள் வழங்கி மகிழ்வாக்கும் என்பார்.  அது சரி… இந்த மீனினம்.  அதன் முட்டையும் அப்படித்தான் இயற்கையால் இறுக்கி வைக்கப்பட்டு, நேரம் வரும் போது உயிர் வழங்கப்படும் என்பார்.  அது மடடும் அல்ல…. நம் காலக் கணக்கில் நம் வயதுக்குள் உயிர் கொண்டு வருபவை சில… நமக்குத் தெரியாமல், நம்மோடே விதையாய் வாழ்ந்து கொண்டிருப்பவை எவ்வளவோ,,, நம் காலம் முடிந்த பின் உயிராக எழலாம் என்பார்.  இப்போது தோன்றுகிறது… இது ஒரு பெரிய உயிரியல்,  புவியியல், ஆன்மீகக் கோட்பாடு என்று?  ஆனால் ஒரு சாமானியனின் பார்வையில், மிகச்சாதாரணமாய்… 

எது எப்படியோ?  எனது அடி மனம் என்ற நிலத்தில் தூங்கிக் கிடந்த உறவுகள், இந்தத் தொடர் எனும் கார்காலம் கனிந்த புது வெள்ளம் பட்டு, ஒவ்வொன்றாய் உயிர் கொண்டு என் கண்களுக்கு முன் வருவது போல எனக்குத் தோன்றுகிறது.  இன்னும் எத்தனை விருட்சங்கள் விதைகளாய் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கின்றனவோ…

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது…

பிராப்தம் என்ற திரைப்படத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் எவ்வளவு உண்மையானவை?

இந்தத் தொடர் எழுதும் போது என் மனதில் வித்தாக என்றோ பதிந்தவர்கள், மின்னலாக வந்து போவார்கள்.. சிலரைக் குறிப்பிட்டு இருப்பேன், சிலரை எழுத்தில் குறிப்பிடாமல், மனத்தின் மயிலிறகால் வருடிச் சென்று இருப்பேன். ஆனால் அவர்கள் பலர், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு 

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ
(புலமைப் பித்தன்….. நான் ஏன் பிறந்தேன்….. திரைப்படத்துக்காக_)

என்பது போல ஓவியங்களாகத் தூங்கியவர்கள், உயிர் கொண்டு வந்தது கண்டு, இறையருள் என்றே வியந்து நிற்கிறேன்.

முந்தைய பகுதியில் தேவகோட்டை மாட்டுச்சந்தைப் பகுதி பற்றி எழுதியிருந்த வேளையில்,  டாக்டர்.பழனிச்சாமி அவர்களைப் பற்றியும் அவர் மக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.  ஒரு மூன்று வாரங்களுக்கு முன், மெஸஞ்சரில், ஒருவர் வருகிறார்.  அவர் சொன்னார். அவரும் முன்பு ஒரு காலத்தில் தேவகோட்டையில் வசித்ததாகவும், அவரது தந்தையார் ஒரு மருத்துவர் என்றும்…. எனக்கு ஒரு வேளை அவர், டாக்டர் ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடுகிறாரோ என்று நினைப்பு… யார் என்றேன்…. டாக்டர் பழனிச்சாமி அவர்களின் மகள், அரசி,,,என்றார்.  எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.  ஏனெனில்,  என் தாய் அவர்கள் இல்லத்தில் பணி செய்து இருக்கின்றார்,,, மேலும் திருமதி.பழனிச்சாமிக்கு என் அம்மா என்றால் அவ்வளவு பிரியம்.  நாங்கள், இந்த டாக்டர் பழனிச்சாமி அவர்களின் மாமியார் வீடு (தேவகோட்டை மாட்டுச்சந்தைக்கு எதிரில்,,,,கோட்டை அம்மன் கோவிலுக்குப் பின்புறம்,,ஆறாம் வார்டு நகராட்சி பள்ளிக்கு பின்புறம்).  அப்போது டாக்டர் பழனிச்சாமி அவர்கள், தியாகிகள் பார்க் எதிரே இப்போதைய தலைமை அஞ்சல் நிலையம் இருக்கின்ற கட்டிடத்தில் வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். எல்லாம் பெண் மக்கள்.  மூத்தவர்,,செல்வி, எனக்கும் அவருக்கும் மூன்று நாட்கள் வயது வித்தியாசம்) அடுத்து ஒரு இரட்டை… அல்லி, அரசி என்று,,,பின்னர் பாமினி.. ரோஜா.. என்று.. நான் மிகச்சிறுவன்.  அந்த நாட்களில் ஒரு வாக்சால் கார் வைத்து இருந்தார் டாக்டர் பழனிச்சாமி அவர்கள்… வண்டியின் முன்புறம் ஹாண்டில் பார் போட்டு சுற்றித்தான் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.  தற்போது போல இக்னிசன் ஸ்டார்ட்டர் எல்லாம் இல்லாத காலம்.  இந்தக்குழந்தைகள் எல்லாம் நாங்கள் குடியிருந்த தோட்டத்துக்கு சொந்தக்காரரான தனது தாய்வழிப் பாட்டியார், கொச்சியம்மாள் இல்லத்திற்கு காரில் வந்து இறங்கி செல்வதை பார்த்து இருக்கிறேன்… மனதில் பதித்து வைத்து இருக்கிறேன். அதே அரசி, ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பின் தன்னை அறிமுகம் செய்து கொண்டதும், இந்த மண்ணில் உறங்கிய தாமரை கொடியின் விதை முளை விட்டதை உணர்ந்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன் மும்பையில் கடற்படையில் விமானியாக (ஹெலிகாப்டர் பைலட்) திரு.ஸ்ரீனிவாசன் ரமேஷ் அவர்கள் தொடர்பு கொண்டு தான் நகரத்தார் பள்ளியின் மாணவர் என்றும், அவரது இளமைக்கால நினைவுகள் பற்றியும் பேச ஆரம்பித்து ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நண்பர்கள் பற்றி பரிமாறிக் கொண்டோம்.  ஏறத்தாழ எங்கள் உரையாடல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து இருவருமே சோர்வாகி சரி பிறகு பேசுவோம் என்று வைத்து விட்டோம்.  அந்த அளவுக்கு அன்பும் பாசமும்… தேவகோட்டை மண் வாசனை.

அதே நாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரிலிருந்து திரு.கணபதி சுப்ரமணியன் அவர்கள் தொடர்பு கொண்டார்.  ஐக்கிய நாடுகள் சபையில் இவர் பணி புரிகிறார்.  கிட்டத்தட்ட இவருடன் ஒரு மணி நேரம் பேசியது போதாது என்று இவர் மனைவியும்  தொடர்ந்தார்.  கடைசியில் பார்த்தால், இவரும் நமது ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நான் படித்த அதே ஆண்டு.  நான் வணிகவியல் புலம்.  அவர் வேதியியல் புலம்.  எங்கே சென்றாலும்  பழையன மறக்காத பண்பாளர்கள் நம் தேவகோட்டையில் வளர்ந்தவர்கள்.  மண்ணின் மகத்துவம் அப்படி…..





அதே போல் நமது நகரின் நகராட்சி மருத்துவமனை மருத்துவராக இருந்த டாக்டர் ராஜகோபால் அவர்களின் மகன் திரு. விஜய கிருஷ்ணன் அவர்கள் என்னுடன் தே பிரித்தோ பள்ளியில் பயின்றார். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை.  ஆனால் நினைவில் மட்டும் அவர் இருந்து கொண்டே இருந்தார்.  அவரைச் சந்திக்காதது ஒரு குறை என்றே என் மனதில் இருந்தது. அன்பர் மும்பை ஸ்ரீனிவாசன் ரமேஷ் அவர்களிடம் இது பற்றி குறிப்பிட்டேன். அடுத்த நாள் திரு.விஜயகிருஷ்ணன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடல்… 



நான் தேவகோட்டையில் கல்லூரியில் படித்த காலத்தில், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் வணிகவியல் முதுநிலை பயின்ற, எம்மோடு பூப்பந்து விளையாடியவரும் எனக்கு மூத்தவரான திரு.ஆதி சேதுராமலிங்கம். அதன் பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது.  மதுரையில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகின்றார் என்று மட்டும் அறிவேன், எங்கே, எப்படி என்பது எல்லாம் அறியேன்.  இந்தத் தொடர் வாயிலாக என் உறவினர் அவரிடம் பயின்றவர் அவரின் தொலை பேசி எண் முதற்கொண்டு கொடுத்து நினைவினை நிதர்சனமாக்கினார். நண்பர், ஆதி சேதுராமலிங்கம் அவர்கள் மதுரையின் முன்னணிக் கல்லூரியான ‘மதுரைக் கல்லூரி’ (MADURA COLLEGE) பேராசிரியராக பணி புரிந்து விட்டு ஓய்வில் இருக்கிறார்.  கடந்த வாரம் அலைபேசியில் அளவளாவினேன்.


அதே மாதிரி, மாப்பிள்ளை என்று என்னால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர். அங்குச்சாமி  அவர்களின் தம்பி திரு.ஆசைத்தம்பி.  இந்த மாப்பிள்ளை என்ற பந்தம் சிறுவயதில் ஆனது.  அதன் பிறகு மண பந்தம் மூலமாக அங்குச்சாமி அவர்கள் சகோதரர் முறை ஆகி விட்ட போதிலும் இந்த ஆசைத்தம்பி என்ற ராஜ கோபால் எனக்கு மாப்பிள்ளை தான். நேற்று வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் தொடரில் வரும் நபர்களை, நண்பர்களை.

இப்படி நபர்களைப் பற்றி எழுதுவது, அதிகப்படியாக இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில், மக்கள் இல்லாத ஊர் வெறும் பொட்டல் காடே,,,, நமது தொடர் தேவகோட்டை நினைவுகளை அசை போடுவது, அதில் வாழ்ந்த/ வாழும் மக்களைப் பற்றிப் பேசாவிட்டால், என்ன இருக்கிறது எழுத…

இதே போல தேவகோட்டை நகரின் முந்தைய அமுதா மெட்டல் மகேந்திரன், இன்னும் எத்தனையோ விட்டுப் போன உறவுகள், தொட்டு விட்ட வரவுகள் ஆகின.  மீண்டும் சொல்கிறேன்,, நினைவுகள் மட்டுமே வாழ்வின் எச்சமும், மிச்சமும்… எந்தக் கோடீஸ்வரனின் சொத்தும் நிலையாய் இந்த பூமியில் நிலைத்து விடவில்லை.  ஆயின் நினைவுகள் அழியாமல் வாழும்…

சரி … தொடங்கிய நம்ம தொடருக்கு வருவோம். 70, 80 கள் வரை, தமிழ்த்திரைப் படங்கள் தெலுங்கு மொழியில் டப் செய்யப்படுவதும், அதே போல தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்படுவதும் சர்வ சாதாரணம், உதட்டசைவுக்கும், கேட்கின்ற குரலுக்கும் சம்பந்தம் இல்லாமல் SYNC ஆகாமல் இருக்கும்.  ஆனால், மாணவப்பருவத்தினரான எங்களுக்கு சண்டைக் காட்சிகளும், கதை அம்சமும் தான் முதன்மை.  நடிகர் காந்தாராவ், பழம் பெரும் தெலுங்கு நடிகர்.  தமிழில் புரட்சி நடிகர் பாணியில் நடிப்பார். வாள் சண்டைக் காட்சிகளில் ஜொலிப்பார். இவரது படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழில் நன்றாக ஓடும். சுவரொட்டியில், இவரை ‘ஆந்திர MGR, காந்தாராவ் நடித்த’  என்று விளம்பரம் செய்து இருப்பார்கள். 




இவர் நடிக்கும் படங்களில் வில்லனாகப் பெரும்பாலும் நடிப்பவர் “ராஜ நளா”. கிட்டத்தட்ட நமது M.N.நம்பியார்.  அதே போல் அப்போது நடிகர் கிருஷ்ணா பிரபலம்.  சிரஞ்சீவி நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். கன்னட MGR என்று போற்றப்பட்ட ராஜ்குமார் அவர்களின் படங்கள்.  





மாப்பிள்ளை சபாரெத்தினம் என்னை சரஸ்வதி திரை அரங்கில் பணிக்கு சேர்த்து விட்ட அன்று ஓடிய படம் ஒரு தெலுங்கு டப்பிங் படம். நாடாளப்பிறந்தவன் என்று பெயர். அப்புறம் தேவர் ஃபிலிம்சாரின், ‘அன்னை ஓர் ஆலயம்’.  எந்தெந்தக் காட்சிகள் சுவையாக எடுக்கப்ப்ட்டிருக்குமோ அவற்றை எல்லாம் திரும்பத் திரும்ப பார்த்துக் களித்து இருக்கிறேன். பாக்யராஜின் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் அதன் எளிமையான வசனங்கள்,  திரைக் கதை (SCREEN PLAY) அமைப்பு கண்டு கண்டு வியந்து இருக்கிறேன்.  புரட்சித்தலைவருக்குப் பின் எனக்குத் தெரிந்து வெகுஜனத்தின் நாடியைப் பிடித்து அதைப் படித்து அவர் ரசனைக்கு எப்படி திரைக்கதை அமைப்பு இருந்தால் அவர்கள் உள்ளே போய்ச்சேரும் என்று அறிந்தவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை வசன கர்த்தா திரு. பாக்யராஜ் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  சரி அந்தக் கால கட்டத்தில் வந்த திரைப்படங்களைப் பற்றி பேசினால்,  தொடரின் திசை மாறி விடும்.  எனக்கு திரை அரங்கில் என்ன வேலை என்று நீங்கள் யாரும் கேட்கவில்லையே?



கருதா ஊரணிக்கரையில் முன்பு நான் ஆரம்பப்பள்ளி மாணவனாக சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற போது ஒரு வாடகை சைக்கிள் கடை,  அவரது புதல்வர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை,, நல்ல வெள்ளை நிறம், சுருட்டையான கேசம்.  அவர்களில் மூத்தவர் திரு.சோமசுந்தரம், இவர் தான் சரஸ்வதி அரங்கத்தின் அந்நாளைய நிர்வாகி.  எனக்கு காட்சி ஆரம்பிக்கும் முன்பு அரங்கத்தின் அலுவலகத்திற்குள் சென்று டிக்கட்டுக்களை எடுத்துக் கொண்டு மணி அடித்ததும், கவுண்டர் உள்ளே சென்று டிக்கெட் கொடுக்க வேண்டும். ஒரு அலுமினியப் பெட்டியும் உண்டு, காசு, பணம் போட்டு எடுத்து வர. காட்சி தொடங்கும் முன் டிக்கட் கௌண்டர் திறப்பதற்கான மணி ஒலித்ததும் அந்தக் கூண்டுக்கள் நுழைந்து என்னை நான் அடைத்துக் கொள்ள வேண்டும்.  அதே போல படம் ஆரம்பித்துக் குறிப்பிட்ட நேரம் வந்ததும் அரங்க அலுவலகத்தில் இருந்து இன்னொரு மணி ஒலிக்கும்.   கௌண்டர் அடைக்க வேண்டிய நேரம் அது.  பெரும்பாலும் பழைய படங்கள் என்றால் அந்த நேரத்தில் டிக்கட் வாங்க ஆள்  யாரும் இருக்க மாட்டார்கள்.  புதிய திரைப்படம் என்றால், டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து இருக்கும்.

மீதமுள்ள நுழைவுச்சீட்டுக்களையும், வசூல் தொகையையும் எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்து ரொக்கம் மற்றும் விற்ற நுழைவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை சரி பார்த்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு DCR போடும் வேலை என்னிடம் கொடுக்கப்பட்டது.  DCR என்றால் DAILY COLLECTION REPORT. தின வசூல் பட்டியல்.  தினசரி என்ற பெயர் இருந்தாலும், காட்சி வாரியாக எழுதி வைத்து விட வேண்டும். முதல் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை, நுழைவுச் சீட்டின் ஆரம்ப வரிசை எண், கடைசி (விற்றுப் போன) எண் பதிவு செய்து, ஒவ்வொரு வகுப்பிலும் விற்ற நுழைவுச் சீட்டுக்களின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்து அதன் படி வசூல் தொகையை சரி பார்த்து ரொக்கத்தை அலுவலக நிர்வாகி திரு.சோமசுந்தரம் அவர்கள் வசம் ஒப்படைத்து விட்டால் அந்தக் காட்சிக்கான பணி முடிந்தது.  பின்னர் அடுத்த காட்சி ஆரம்பிக்கும் வரை யாரும் தேடப் போவது இல்லை. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்று நினைக்கிறீர்கள்?  Any Guess?.   ஒரு காட்சிக்கு சம்பளம் 90 புதிய நயா பைசாக்கள்.  தினசரி 3 காட்சிகள் இருந்தால் 3X 90 பைசா= ரூ.2.70 ஒரு நாள் வருமானம்.  சனி, ஞாயிறு என்றால், பகல் 10 மணிக்கு அதிகப்படியான காட்சி என்றால், ரூ.3.60 வருமானம்.  யார் இந்த வருமானத்தை கருத்தில் கொண்டார்?  வீட்டில் செலவுக்கு என்று காசு கேட்காமல் இருக்கோம்ல…!!!

இன்று, சிங்கப்பூரில் மூன்று நிறுவனங்கள், சீனாவில் இரண்டு அலுவலகங்கள், இந்தோனேசியாவில் இரண்டு நிறுவனங்கள், விர்ஜின் தீவு என்றழைக்கப்படும் BRITISH VIRGIN ISLAND ல் ஒரு BVI நிறுவனம் என்று இத்தனை நிறுவனங்களுக்கு குழும நிதி நிர்வாக அதிகாரியாக (GROUP CHIEF FINANCIAL OFFICER) பணி செய்து பச்சை வண்ண அமெரிக்க டாலரில் சம்பளம் பெற்றாலும், அன்று அந்த ரூ 2.70 ஒரு நாளைக்கு வாங்கிய சந்தோசம் சத்தியமாக இனி வாராது. ஏனெனில், அன்று வாழ்ந்தது உண்மையில் ‘வாழ்கை’.  இன்று வாழ்வது, குடும்பத்துக்கும், குழந்தைகளின் நல் வாழ்வுக்குமான ‘கடமை’.  வாழ்கை வேறு,  கடமை வேறு.  இதைத்தான், கடமைக்கு வாழ்வது என்று சொல்கிறார்களோ?.  எது எப்படி இருந்த போதும், தேவகோட்டையில் வளர்ந்தவர்கள், பழமை மறவாப் பண்பாளர்கள். இன்றும் அந்த 90 பைசா நமக்கு அதே மதிப்புத்தான்,( EXCLUDING INFLATIONERY EFFECT OF CURRENCY)..

சரி, நுழைவுச்சீட்டு வழங்கும் வேலைதான் முடிந்து விட்டதே.. இல்லம் சென்று அடுத்த காட்சி ஆரம்பிக்கும் முன்பு திரும்ப வரலாம்தானே? அதானே செய்ய மாட்டோம்.  இந்த தியேட்டர் வேலைக்கு வந்ததே பொழுதை எப்படி போக்கவது என்று தெரியாமல் தானே?  நேரே முன்னர் குறிப்பிட்ட வேப்ப மரத்திண்டு வந்தால், ஏதாவது ஒரு பஞ்சாயத்து கன ஜோராய் ஆரம்பித்து இருக்கும் (செம்பு மிஸ்ஸிங்). தேவகோட்டையிலா பிரச்னைகளுக்குப் பஞ்சம்? அந்த ஜோதியில் வந்து ஐக்கியமாகி விட வேண்டியது. அப்படியே காண்டீன் பக்கம் போய் சேவியரிடம் கொஞ்சம் நாட்டு நடப்பு பற்றிக் கதை.  அதன் பிறகு நேரே படம் ஓட்டும் ஆபரேட்டர் அறை ஆகிய கேபின் சென்றால், பூனை (தர்மராஜ்) கார்பன் குச்சிகளின் பிட் வைத்து ARC LIGHT மங்காத பணியில் ஈடுபட்டு இருப்பார்.  நான் போகிற சமயம், ‘முத்துமணி, இந்த இரண்டு ரீல்களை REWIND செய்து வைத்து விட்டுப் போயேன் என்பார்.  



தற்காலத்தில் அனைத்து சினிமாக்களும் டிஜிடல் முறையில் HARD DISCல் வருகின்றன.  அன்றைய கால கட்டத்தில், பாசிடிவ் ப்ரிண்ட் எனப்படும் படச்சுருள்கள் பெரிய பெட்டிகளில் வரும்.  சில சமயங்களில், ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள், படப்பெட்டி வந்து சேராது இருக்கும். அந்த முழுப்படமும், ரீல்களாக எண் இடப்பட்டு அந்த வரிசையில் பட வீழ்த்தியில் (PROJECTOR)ல் தலைகீழாக மாட்டப்பட்டு திரையில் பிம்பம் வீழ்த்தப்படும்.  ஒருமுறை ரீல் படவீழ்த்தியில் ஓடி முடிந்த பின் ரீல் என்பதால், முதற்காட்சி SPOOLன் நடுப்பகுதியிலும், கடைசிக்காட்சி, மேல்பகுதியிலுமாக இருக்கும். மீண்டும் போடுவதற்கு, அந்த ரீலை (சுருளை) இன்னொரு SPOOLக்கு ரீவைண்ட் செய்ய வேண்டும்,  கொஞ்சம் கை வலிக்கிற வேலை.  அவர் என்னைப் பார்த்ததும், இந்த ரீல்களை ரீவைண்ட் செய்து விட்டுப் போயேன் என்பார். வேறு என்ன வேலை. அவ்வப்போது ரீல் சுற்றிக்கொடுப்பேன்.  உண்மையில் ரீல் சுற்றியவனாக்கும்…!!  அப்புறம் இடைவேளை நெருங்கும் போது, காண்டீனுக்கு வந்து சேவியருக்கு வியாபாரத்தில் உதவி செய்வேன்.  

திரை அரங்க காண்டீன் களில் என்ன ஒரு விசேடம் என்றால், அந்த ஒரு காட்சியின் மொத்த வியாபாரமே இடைவேளையின் அந்த 10 நிமிடத்தில் தான். முக்கியமாக காபி, டீ டோக்கன் கொடுக்கிற வேலையை எடுத்துக் கொள்வேன். அந்த சமயத்தில் தேவகோட்டை அ.இ.அ.தி.மு.க.வின் நகர செயலாளராக திரு.SP.தனசேகரன் இருந்தார், இந்த தனசேகரனின் அண்ணன், சோமன் தான் அங்கு டீ மாஸ்டர்.  அந்த இடைவேளையும் முடிந்த பிறகு ஒவ்வொருவரின் நண்பராக உள்ளே வருவார்கள்.  இதில் சேவியருக்கு அதிகம் நண்பர்கள்.  நான் முந்தைய பகுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நண்பர்கள், அதாவது அப்துல் ரஷீத், சிவாஜி ரசிகர் மன்ற ரத்தினம், ஸ்தபதி குழுவின் அருணாசலம், அப்புறம் ஸ்பிக் இல் பணி புரிந்த திரு.ப்ரிட்டோ, ஜெயதாஸ் என்று ஒரு பெரிய பட்டாளமே கூடும்.  எல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டு தம் அடிக்கிற கோஷ்டி.  அதற்கு புகலிடம் சரஸ்வதி தியேட்டர் தான்.  பாவம் அந்த கேட் கீப்பர் கணபதியா பிள்ளை.  அவருக்கு ஒரு கண்ணில் பிரச்சனை வேறு. காண்டீனுக்கு வருபவர்கள் சரக்கு சப்ளை செய்பவர்களா, வெட்டிக் கூட்டமா?  உள்ளே அனுமதிப்பதா கூடாதா என்று குழம்பிப் போய் இருந்திருப்பார்.

இரவு  இரண்டாம் காட்சி முடிந்தபின் இந்த கோஷ்டி அனைத்தும் 13 ஐ பிடிக்க உட்காரும்.   அதாங்க.. ரம்மி செட் எல்லாம்.  திருப்பத்தூர் சாலையில் இளையபெருமாள் கடைக்கு அடுத்து லெட்சுமி அக்கா/ பாலு கடைக்கு முன்னதாக ஒரு கேட் வைத்த வீடு இருக்கும். முன்பு திருவேங்கடமுடையான் பள்ளியில் எனது ஆசிரியரான திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அங்கு குடி இருந்தார். தற்போது சிண்டிகேட் வங்கி இந்த இடத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த கேட்டுக்குள் நம்ம சிவாஜி ரசிகர் மன்ற ரெத்தினம் வாடகைக்கு எடுத்து இருந்தார்.  இங்கு இந்த முழுக்குழுவும் ரம்மியில் விடிய விடிய உட்காரும்.  எனக்கென்னவோ இந்த சூதாட்டம் என்றால் அலர்ஜி. ஆனால் கூட உட்கார்ந்து இருப்பேன்.  ஸ்கோர் ஷீட் எழுதுவேன், அல்லது வீட்டுக்கு போய் விடுவேன்,



இப்படி நடு இரவு தாண்டி, வீடு போய் சேர்ந்து அடுத்த நாள் பகலில் விழித்து எழுவது என்று கொஞ்ச காலம் கடந்தது.  அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த திரைப்படங்ககான “நிழல்கள்”,  ‘பாலைவனச்சோலை” இவை எல்லாம் எங்கள் கதையையே திரையில் காண்பது போல் இருக்கும்.


சில நாட்கள், பகல் வேளைகளில், சிலம்பணி சிதம்பர வினாயகர் கோவில் முன்பக்கம், ‘அண்ணா அரங்கம்’ அருகில் இருந்த வணிக வரி அலுவகத்தில், டிக்கெட் கட்டுக்களைக் கொண்டு சென்று சீல் போட்டுக் கொண்டு வருவேன். எதற்கு என்று கேட்கிறீர்களா?  கேளிக்கை வரி என்று அரசு ஒவ்வொரு டிக்கட்டுக்கும்   இவ்வளவு  என்று வசூல் செய்யும். அந்தப்  பணம் வங்கியில் செலுத்தப்பட்டு விடும். அதற்கு வணிகவரி அலுவலகத்தில் இருந்து டிக்கட்டின் பின் புறம் வரி செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கு அடையாளமாக தமிழக அரசின் கோபுரச் சின்னம் உடைய முத்திரையை பதிக்க வேண்டும்.  அவர்கள் தொடக்கூட மாட்டார்கள். நாம் தான் டிக்கட்டை காண்பித்து, இத்தனாம் நம்பர் டிக்கட்டில் இருந்து இத்தனாம் நம்பர் வரை என்று அவர்கள் முன்னிலையில் முத்திரையை பதித்துக் கொண்டு வர வேண்டும்.

கொஞ்சம் நீண்டு போகிறது பதிவு.  இதறகு மேல் எழுதினால், உங்களுக்கும் சோர்வு தட்டும். எனவே இத்துடன் இன்றைய பதிவை முடித்துக் கொள்வது தான் மரியாதை என்று நினைக்கிறேன்.  ஆனாலும், வணிகப் பார்வையில் அன்றைய ஷோ பிசினஸ் எப்படி இருந்தது?  வினியோக முறைகள், மற்றும் சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.  நீங்கள் இவற்றை பங்கிட விரும்பி பின்னூட்டம் கொடுத்தால், அடுத்த பகுதியில் அது பற்றி எழுதுகிறேன், இல்லையேல் சரஸ்வதி தியேட்டரை விட்டு வெளியாகி விடுவோம்.   என்ன நண்பர்களே…..உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60