அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்- பகுதி: 5
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 5
02-10-2017
திண்ணன் செட்டியார் பிள்ளையார் கோவிலின் முன்புறம் இருந்து மூன்று வீதிகள் வட்டாணம் ரோடில் போய்ச் சேரும். அந்த முழு நீளத்திற்கும் வரிசையாக வீடுகள் ஒரு தொகுப்பாக இருப்பதை இன்றும் காணலாம். இதற்கு பெயர் தேவார விடுதி. அந்தக்காலத்த்தில் தி.பிள்ளையார் கோவிலில் தொண்டு ஊழியம் செய்த தேவாரம் ஓதும் தேசிகர் மற்றும் அந்தணர்கள் வாழ்ந்த இடம். இன்று பல பேர் கைமாறி விட்டது.
இந்த வரிசையின் கடைசியில் தான் முதல் பகுதியில் குறிப்பிட்ட 'சல்லி ' சுப்ரமணியன் , வழக்குரைஞரின் அலுவலம் (Office ) இருந்தது. தற்போது அது எனக்கு சொந்தமாக இருக்கிறது. என் தாய் அங்கு வசிக்கிறார்கள். எந்த வீட்டில் என் தாயார் வேலை செய்தார்களோ அதே வீட்டை 28 வருடங்களுக்கு முன்பாகவே வாங்கி என் தாய் தந்தை வசிக்க கொடுத்து விட்டேன். இன்று சென்னையில் பெரிய வீடு இருந்தும், காரைக்குடியில் வீடு இருந்தும், இந்த வீட்டை விட்டு வர மாட்டேன் என்கிறார்கள். நானும் எதுவும் சொல்ல முடியாமல் விட்டு விட்டேன். என் தாயார் அந்த சுற்றத்தினரையே தன் உற்றமாய் நினைத்து அங்கு வசித்து வருகிறார்கள்.
அடுத்து ஒரே கடை வரிசை. மளிகைக்கடையில் ஆரம்பித்து நாராயணன் உணவு விடுதியில் போய் முடியும். இதை அடுத்து அரிசி ஆலை , அதையும் அடுத்த அழகான நந்தவனம். இந்த நந்தவனம் தி.கயிலாய விநாயகர் கோவிலுக்கு சொந்தம். அனைத்து வகை மலர் இனங்களும் வளர்க்கப்படும். இதில் இருந்து எத்தனையோ நாட்கள் கோவிலில் மாலை கட்டும் பணியில் இருந்தவருக்கு மலர் கொய்து கொடுத்து இருக்கிறேன் . தி. பிள்ளையார் கோவிலில் மாலை, பூக்கள் தொடுப்பதற்கு என்றே தனி அறைகள் உண்டு. தற்போது இந்த நந்தவன இடத்தில்தான் பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளியின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இறைவனுக்காக பூக்கள் மலர்ந்த புண்ணிய பூமியில் கல்வி மலர்கள்...
இதற்கு நேர் எதிரில் தான் அருள்மிகு கோட்டை அம்மன் கோவில் இருக்கிறது. கோட்டை அம்மன் கோவிலுக்குள் முன்புறம் மிகப்பெரிய மைதானம் வெட்ட வெளியாக இருக்கும். இது கோட்டையம்மன் கோவில் ஆண்டுத்திருவிழாக்களில் நாட்டார் நடத்தும் கூத்து (நாடகம்) பார்க்க வரும் பார்வையாளார்களுக்காகும். கீழைக்குடி யிருப்பு நாட்டார் விமரிசையாக நடத்துவார்கள். இங்கு திரைப்பட நடிகர் T .R . மகாலிங்கம் உட்பட பெரிய நடிகர்கள் நடித்த நாடகங்கள் நடந்தேறி இருக்கின்றன. தேவகோட்டையில் கூத்து நிகழும் கோவில்கள் பக்கம் சென்றால் தற்போது கீழக்குடியிருப்புக்கு இப்போது செல்ல முடியாமல் போய் விடும். அதனால் தோழர்களே, தற்போது நமது கூத்து பார்க்கும் ஆசையை கொஞ்சம் நிறுத்தி வைப்போம்.
மேலே சொன்ன தேவார விடுதிக்குப் பின்புறம் தான் நாட்டார் நலமுடன் வாழும் கீழை குடியிருப்பு. பெரிய கருப்பன் அமபலார் அனைவரும் மதிக்க வாழ்ந்த பெரியவர். கண்மாயை ஒட்டிய பகுதி. அந்த கண்மாயின் மறு முனை இறகு சிரை (இரவுசேரி ) ஆகும். கோட்டையம்மன் கோவில் அருகில் ஒரு வெள்ளம் கட்டுப்படுத்தும் மதகு உண்டு. மழை பெய்து புது வெள்ளம கரைபுரண்டு கீழை குடியிருப்பு வயல் வெளிகளுக்கு ஓடும். வெள்ளம் அதிகமாகி கண்மாய் நிறையும் தருணம் இந்த மதகுகள் திறந்து விடப்பட்டு உபரி நீர் ஆற்றுக்கு அனுப்பப்படும் .
நான் பிறந்த நாளில் இருந்து இந்தப்பகுதியில் உள்ள அனைவரிடமும் தாயாய் பிள்ளையாய் தான் பழகி இருக்கிறேன் . அந்த நாட்களில் இருந்து எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவை குடும்பம் ஈட்டி சின்னையா குடும்பம். இன்று வரை... அது என்ன 'ஈட்டி' என்கிறீர்களா? பழைய காலத்தில் வெ .வீடு என்றழைக்கப்படும் ஜமீன்தார் குடும்பம் ஒரு குறுநில மன்னர் குடும்பம் போல இருந்த காலம்.
சிவகங்கை சமஸ்தானத்து காளையார் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்தவர்கள் தேவகோட்டை ஜமீன்தார்கள். இந்த சம்பந்தம் எப்படி ஏற்பட்டது என்பது தனிக்கதை. அதை பின்னர் தனியாக பார்ப்போம். ஜமீன்தார் அலுவல்கள் நடக்கும் இடம் சுவர்ண வல்லி பங்களா . முன்புறம் அழகான பெண் சிலை இருக்கும். அருகில் சென்று கல்வெட்டில் பொறித்து இருப்பதை படித்து விடவேண்டும் என்று முன்பு பலமுறை நினைத்தது உண்டு. நிறைவேறவே இல்லை. பெரிய முன்புற பூங்கா உள்ள அழகிய கட்டிடம்.
ஜமீன்தாருக்கு மெய்க்காவலாக வேல் பிடித்து நின்றவரின் வாரிசுகள் மூன்று பேர் . அவர்கள்
1.சின்னையா அம்பலம்
2.சங்கரலிங்கம் அம்பலம்
3.செந்தில் நாதன் அம்பலம்
இவர்கள் குடும்பம் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டவர்கள். இதில் மூத்தவர் ஈட்டி சின்னையா அம்பலம், ஒத்தக்கடையில் 'தமிழரசி வாடகை சைக்கிள் கம்பனி' என்று வைத்து நடத்தி வந்தார். இவரது மூத்த மகன் சிற்றரசு, பேருந்து ஓட்டுநர். என் வயது தோழன். எங்களுக்கு ஒன்று என்றால் உடன் ஓடி வரக்கூடியவன். ஆனால் இளமையிலேயே நல்ல வாலிப வயதில் வாழ்வை முடித்து கொண்டான். இவரது தம்பி தமிழ். இவரும் பேருந்து ஓட்டுநர். அண்ணன் போலவே எங்களுடன் உறவு.
இரண்டாமவர் சங்கரலிங்கம் அம்பலம். அருமையான, திறமையான ஓட்டுநர். இவரை தேவகோட்டை மறந்து இருக்காது. கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டார். ஆனால் ஊரையே உறைய வைத்தவர். அந்த 'டிக்ர பட்ர, பாட்ச பட்ர, பாட்ரெ '.... என்னதான் அலங்கோலமாய் வந்தாலும் அவருக்கு யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும்
மூன்றாமவர் செந்தி அய்யா. பொதுப்பணித்துறையில் ஓட்டுநராக இருந்து விட்டு ஒய்வு பெற்றவர் ....
மீதம் அடுத்த பகுதியில் .....
கருத்துகள்
கருத்துரையிடுக