அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 51
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 50
18-04-2018
அன்பு நண்பர்களே ..
தேவகோட்டை ஒரு ஆழ்கடல்..
அதன் வயிற்றில் கிடைப்பதெல்லாம் முத்தினம், ரத்தினம், இன்னும் விலை மதிப்பில்லா எத்தனையோ ....
ஒவ்வொரு முறை மூழ்கி எழும் போதும் கை நிறைய முத்துக்களோடு தான் மீள வருகிறேன். அத்தனையும் ஆணி முத்து . ஆணி முத்து அளவில் சற்று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். நவ ரத்தினங்களாக மக்கள் ஜொலிக்கும் இடம் தேவகோட்டை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளி வந்த 'வீர பாண்டிய கட்ட பொம்மன் படத்தில் திரு.சக்தி கிருஷ்ணசாமி கீழ்காணும் வசனத்தை அழகு தமிழில் எழுதி இருப்பார்.
இங்கு பிறப்பவன் பேடியாய் இருப்பதில்லை....
பேடியாய் இருப்பவன்?
இந்நாட்டின் அசல் வித்தாய் இல்லாதவனாய் இருப்பான்.
அது போல, இந்த தேவகோட்டை மண்ணில் பிறந்தோரும், வளர்ந்தோரும், வாழ்ந்தோரும் எந்தத் துறையிலும் உச்சத்தைத் தொட்டவர்களே. என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அடக்கம் எனும் பண்பால் அமைக்கப் பட்டவர்கள். இன்னும் முத்துக்கள் முகிழ்த்து கொண்டே இருக்கின்றன. மேலும், மேலும் அறிமுகம் நீண்டு கொண்டே போகிறது என்று யாரும் கருதினால், தயவு செய்து பின்னூட்டம் கொடுக்கவும். முன்பே சொன்னது போல மக்கள் இல்லாத ஊர் வெறும் பொட்டல் . தேவகோட்டையை நினைவு கூர்கிறோம் என்றால், அந்த மண்ணின் மைந்தர்களை தவிர்த்து எழுத இயலாது.
எனவே தான் இடை இடையில் சில முக்கிய முத்துக்களை நம் ஆன்மத்திற்கு நினைவூட்டுகிறேன். ஒரேயடியாக அறிமுகப் படலம் என்று சென்றால் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். அதே போல ஒரேயடியாக இடங்களை பற்றி மட்டுமே எழுதிக் கொண்டு போனாலும் சலிப்புத் தட்டும். உண்மையில் இந்த அறிமுகங்கள் நானாக நினைத்துத் திட்டமிட்டு காட்சிகளாய் வரிசைப் படுத்தி எழுத வில்லை . நம்மை மீறி தேவகோட்டைத் தேவி அந்தந்தக் கால கட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கிறாள். உண்மை, முதலில் எழுத ஆரம்பித்த பொழுது ஒரு நாள் ஒரு குறிப்பாக முக நூலில் குறிக்க மட்டுமே எழுதினேன். இன்று உங்கள் அன்பு தொடர் நடை தொடர்வதால் இந்த 50 ஆம் பகுதியில் நிற்கிறோம்.
கொஞ்சம் சரஸ்வதி திரை அரங்கத்தில் இருந்த படியே சில முக்கிய நபர்களை இந்த வார அறிமுகமாக உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
இதற்கு முந்தைய பதிவில் அறிமுகம் ஆனவர் மும்பையில் வசிக்கும் இந்திய கடற்படை விமானி திரு.ஸ்ரீனிவாசன். இவர் தேவகோட்டையில் இரண்டு பெரும் தூண்களை அறிமுகப் படுத்தினார். ஒருவர் திரு.இங்கர்சால். கொஞ்சம் கொஞ்சமாக நினைவுப் பூமியின் ஆழத்தில் விதையாக உறங்கிக் கிடந்த இங்கர்சால் அவர்களின் நினைவுகள் முளை விட்டு நினைவுப் பரப்பின் மேலே வந்து விட்டது.
தேவகோட்டை வரலாறு திருமதி கமலம் செல்லத்துரை அவர்கள் பெயரைக் குறிக்காமல் நிறைவானதாகாது . பொதுவுடைமை சிந்தனை இயற்கையில் இயைந்திட, திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நகரத்த்தின் கழக கண்மணியான நன்மணி திரு.கமலம் அக்கா அவர்கள். ஆரம்ப காலத்தில் இருந்தே பொது மக்கள் நலம் பேணும் பூமனம் கொண்டவர். அவரது கணவர் திரு.செல்லத்துரை அவர்கள் வருவாய்துறை உயர் அலுவலர் . நகராட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நகராட்சியின் ஆளுமையிலும் பங்கு எடுத்தவர். 1977 ஆம் பொதுத் தேர்தலிலும் களம் ஆடியவர் .
திருமதி கமலம் அவர்கள் அன்றைய சிலோன், இன்றைய ஸ்ரீலங்காவில் பிறந்தவர். சிலோனும், தமிழ் நாடும் வேறு வேறு நாடுகள் இல்லை. வெளியூர் என்ற அளவிலே தான் நமது பகுதியில் மனதில் இருந்த காலம். அதுவும் நமது செட்டி நாட்டு பகுதியில் வீட்டுக்கு ஒருவர் மலாயா, (மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து இருந்த காலம் ), பர்மா, சிங்கப்பூர் என்று ஒரு 50 , 60 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்தனர். அதிலும் பர்மாவிலும், சிலோனிலும் குடிகளாகவே இருந்தனர். இன்றைய அரசியல் நிலையில் தான் இதனை பிரிவினை. வெள்ளைக்காரன் கீழ் ஒன்றே குலமாக நல்ல செல்வத்தோடும் செல்வாக்கோடும் தான் தமிழர் இருந்து இருக்கின்றனர் .
நமது பகுதியில் அதுவும் தொண்டியில் இருந்து இலங்கை வெறும் 18 கிலோ மீட்டர்தான். இளம் வயதில் இலங்கை ஒலி பரப்புக்க கூட்டு தாபனத்தில் பாடல்கள் கேட்காத காதுகளே நமது பகுதியில் இருந்து இருக்க இயலாது. எனவே இலங்கையை தாயகத்தின் ஒரு பகுதியாகவே நாம் நினைத்து இருந்த நேரம் அது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்திலும் இலங்கையில் இனப்பிரச்சனை இருந்த போதிலும் இன்றைய கால கட்டம் போல வெகுவாக இருந்ததில்லை.
என் மனைவியின் குடும்பம் இலங்கையில் உள்ள கண்டி அருகில் டிக்கோயா என்ற இடத்தில் வசித்தது. கொழும்பு நகர் வாசிகள், UP COUNTRY என்று அழைக்கும் , மலைகளும் அருவிகளும் சூழ்ந்த குளு குழு பிரதேசம். எங்கும் பச்சைக் கம்பளங்களாக தேயிலைத் தோட்டங்கள். என் மனைவியின் தாய் வழி உறவினர் திரு.ஜெயராஜ் (பின்னர் இவரும் காரைக்குடியில் செட்டில் ஆனார்) அவர்களின் நாவினிப்பட்டி எனும் ஊரில் கல்வி பயின்று கொண்டு இருந்தார். இந்த நாவினிப்பட்டியில் இவருடன் படித்த கெட்டியான சுட்டி தான் நமது கமலம் அவர்கள். பள்ளிப்பிள்ளையாக என் மனைவி குடும்பத்துடன் அறிமுகம் ஆனவர் பின்னர் விடுமுறை காலங்களில் இந்த டிக்கோயா இல்லத்துக்கு வருவதும் போவதுமாக ஒரு சொந்தம் ஏற்பட்டு இருக்கிறது அந்த நாளில். இப்படி சிறு வயதில் தொடங்கிய பந்தம், இன்றளவும் தொடர்கிறது. பின்னர் குமாரி.கமலம் அவர்கள், தமிழகம் வந்து விட்டார்கள்.
என் மனைவியின் குடும்பமும் சரி, திருமதி கமலம் செல்லத்துரை அவர்களின் குடும்பமும் சரி,தாயகத்தில் உறவுகளுடன் என்றென்றும் தொடர்பில் இருந்தவர்கள். அடிக்கடி தாயகத்திற்கு வந்து போனவர்கள். திருமதி.கமலம் அவர்கள் புதுக்கோட்டை அருகில் உள்ள புத்தாம்பூரை பூர்விகமாகக் கொண்டவர். எனது மாமனார் திருவாடானை அருகே உள்ள பண்ணவயலை சேர்ந்தவர்.
குமாரி கமலம் அவர்கள், இங்கே திருமதி கமலம் ஆகி விட்டார். திரு செல்லத்துரை அவர்கள், தமிழக வருவாய்த்துறையில் பணி புரிந்தார். என் மாமியாரின் அக்காள் கணவரும், தாசில்தாராய் இருந்தார். இந்த துறை சார்ந்த இருப்பு, ஏற்கனவே இலங்கையில் தொடங்கிய இனிய உறவினை இன்னும் இருக்கமாக்கியது. இங்கே திருமதி கமலம் செல்லத்துரை அவர்கள் தன்னை இயக்கத்தில் ஈடு படுத்தி கொண்டார்.
திரு.வை கோ அவர்கள் தி.மு.க. வில் இருந்த காலத்திலேயே இலங்கைப் பயணங்களை மேற் கொண்டார். அந்த கால கட்டத்தில் அவருக்கு வழிகாட்டியாகத் திருமதி.கமலம் அவர்கள் இருந்து இருக்கிறார்கள். டிக்கோயாவில் என் மனைவியின் இல்லத்தில் தங்கி இருந்து இருக்கிறார்கள் என்பதை என் மாமியார் இன்று திருமதி கமலம் செல்லத்துரை அவர்கள் பற்றி தெரிந்ததை பகிருங்கள் என்று கேட்டபோது நினைவு கூர்ந்தார். இவை எல்லாம் பின்னாளின் வரலாற்றுக் குறிப்புகள் ஆகும் என்பதால், இன்று மாலை மறுபடியும் திரு.செல்லத்துரை, (திருமதி கமலம் அவர்களின் துணைவர்) இந்தோனேசியாவில் இருந்து தொலைபேசியில் வெகு நேரம் பேசி சரி பார்த்துக் கொண்டேன். கடைசியில் பார்த்தால் திரு.செல்லத்துரை அவர்களும் எங்களது குல தெய்வம் கோவில் கொண்டிருக்கும் பாசாங்கரைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர். சிவகங்கை அருகே, சக்கந்தி, தமறாக்கி, குமாரபட்டி, முடிகொண்டம், மீனாட்சிபுரம், பாசாங்கரை, படமாத்தூர் என்று வரிசையாக சிவகங்கைச் சீமையின் கிராமங்கள் அடுத்து அடுத்து வரும் பகுதிதான் எங்கள் பாட்டன், முப்பாட்டர்கள் அடிச்சுவடு இட்டுச் சென்ற மண்.
அதே போல தேவகோட்டை நகராட்சியின் செயல் பாடுகளிலும் , குறிப்பாக திரு. இராம.வெள்ளையன் அவர்கள் தேவகோட்டை நகர தந்தையாக தேர்வு செய்யப்பட்ட காலங்களிலும் திருமதி.கமலம் செல்லத்துரை அவர்களின் பங்கு அளப்பரியது. இப்போது சரஸ்வதி அரங்கத்தில் நிற்கிறோம் . இதை விட்டு வெளியே வந்தபின்னர், அடுத்தடுத்த இடங்களை பார்த்துப் பின் ஒவ்வொன்றின் பின்னும் பின்னிப் பிணைந்து கிடக்கும் கதைகளை எனக்குத் தெரிந்தவரை குறிப்பிட்டு விட்டு பின்னர் நகராட்சி அலுவலகம் சென்று சேர்ந்த பின் விரிவாகப் பார்ப்போம்.
இந்த திரு. செல்லத்துரை திருமதி கமலம் இருவருக்கும் மணி மணியான பிள்ளைச்செல்வங்கள். இவர்களின் அனைத்து மக்களும் அவரவர் துறைதனில் வல்லவர்கள் .
மூத்தவர் திருமதி.வெற்றிச்செல்வி, மத்திய அரசின் கலால் (CENTRAL EXCISE DEPT .,) துறையில் உதவி ஆட்சியராக தஞ்சையில் பதவி வகித்து விட்டு சென்ற மாதம் தான் ஓய்வு பெற்று இருக்கிறார். இவரை கருவில் சுமந்து இருந்த போது திருமதி கமலம் செல்லத்துரை அவர்கள், என் மனைவியின் சொந்தங்களுடன் அவர்களின் பூர்விகக் கிராமமான பண்ண வயலில் (திருவாடானை அருகே), தங்கி இருந்ததாக என் மனைவியின் அம்மா தெரிவித்தார்கள்.
நாம் முக்கியமாக குறிப்பிட விழைவது திருமதி.கமலம் செல்லத்துரை அவர்களின் புதல்வரான திரு.இங்கர்சால் அவர்களைப் பற்றியே. . 1833 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் கிரீன் இங்கர்சால் அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை என அழைக்கப்படுபவர். சிறு வயதிலேயே சிந்தனைத்திறன் மிக்கவராக விளங்கினார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட போர் வீரர், கர்னல் பதவியில் இருந்தவர், அமெரிக்க அரசியல் தலைவர் மற்றும் தலைசிறந்த பேச்சாளர் போன்ற பன்முகங்களுக்கு சொந்தக்காரர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்த திருமதி கமலம் செல்லத்துரை அவர்கள் தம் செல்வங்களுக்கு வாய்த்த பெயர்கள் எல்லாமே காவியம் பேசும் தனிப் பெயர்கள்.
இந்த இங்கர்சால் அவர்களை அறிமுகப்படுத்த முயலும் பொது தான் எனக்கும் முன் சொன்ன மூன்று பக்க முன் கதைச் சுருக்கத்தையும் அறிகிறேன். இது உண்மையில் ஒரு அதிசய (miracle ) நிகழ்வு. தன்னிச்சையாக இந்த தொடர் மூலம் ஏற்படும் இயற்கை நிகழ்வுகள். இவர் இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகத்தின்(INDIAN SPACE RESEARCH ORGANISATION) விண்ணூர்தி ( ROCKET ) ஏவும் நிலையத்தில், திரவ உந்து விசை அமைப்பு மையத்தின் (LIQUID PROPULSION SYSTEM CENTRE )விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை பொறுப்பெடுத்து இயக்குனர் என்ற தலைமை விஞ்ஞானி எனும் பெருமை மிகு, பொறுப்பு மிகு பதவியில் இருக்கிறார். இவர் மீள் அறிமுகம் ஆகும் வரை எண்ணத்தின் ஆழத்தில் இருந்தவர் சடாரென மேலே வந்தார், பின்னர் நிகழ்ந்தவை எல்லாமே ஆச்சரியங்களே.
டாக்டர். பழனிச்சாமி அவர்கள் பற்றிய என் குறிப்பைப் பார்த்ததும் தான் அவருள்ளே உறங்கிய குழந்தைக் கால நினைவுகள் விழித்து எழுந்து இருக்கின்றன. டாக்டர் பழனிச்சாமி அவர்களின் அனைத்துக் குழந்தைகளோடும் நமது நகர் புனித மரியன்னை (St .Mary's ) பள்ளிக்கு ஒன்றாக மகிழ்வுந்தில் சென்று வந்த நாட்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். மருத்துவர் பழனிச்சாமி அவர்களின் மக்களைப் பார்க்க வேண்டுமே என்று தனது உள்ளக்கிடக்கையை உரைத்தார். இதை நான் மருத்துவர் பழனிச்சாமி அவர்களின் புதல்வி திருமதி.அரசியிடம் தெரிவித்த போது , அவரும் இதையே சொன்னார் . ஆக இந்த தொடர் விட்டுப் போன உறவுகளை தொட்டுப் பார்க்க செய்கிறது என்ற மகிழ்வு என் மனதில்.
அடுத்தவர்கள்:செழியன், நான் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்த போது அவரும் பணியில் அமர்ந்தார், அடுத்தது குமணன் மற்றும் அருணன்.
இன்னொரு முக்கிய அறிமுகம் திரு.பத்மநாபன், நமது நகரின் நகரத்தார் மேல் நிலைப் பள்ளியின் தட்டச்சு ஆசிரியர், மற்றும நூலகப் பொறுப்பாளர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். நான் நகரத்தார் பள்ளியின் மாணவன் அல்லன். தே பிரித்தோ பள்ளியில் பயின்றவன். ஆனால் நண்பர் பலர் நகரத்தார் பள்ளியில்..
கேப்டன், விமானி ஸ்ரீநிவாசன் இன்னும் தேவகோட்டையின் பழமையான அவரின் மனம் கவர்ந்தவர்களுடன் ஒரு குழுமமாக தொடர்பில் இருக்கிறார். இந்த திரு.பத்மநாபன் இதற்கு முன் பரிச்சயம் ஆனவர் அல்ல. அவர் இந்தத் தொடரின் முந்தைய பகுதியை படித்து விட்டு வெகுவாகப் பாராட்டி எழுதி இருந்தார். அவரது பாராட்டுதல்களை, அன்பார் கேப்டன் ஸ்ரீனிவாசன் வாட்சப்பில் அனுப்பி அவரது தொடர்பு எண்ணையும் வழங்கி இருந்தார்.அவருடன் பேசத் தொடங்கினேன். பேசபேச இரண்டே நாட்களுக்குள் எங்கள் இடையே உறவு ராட்சச வேகத்தில் வளர்ந்து தளர்வின்றி பிணைந்து விட்டது. என்ன காரணம்.. அவருடைய தாயும் , நானும் மானாமதுரை அருகே உள்ள ஒரே கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். அட என்னடா இது. எப்படி இது போல நடக்கிறது? ஏதோ, யாரோ திட்டம் (PROGRAMME )தீட்டி வைத்தது போலவும், அந்தந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதி (MODULE BY MODULE) யாக திறந்து கொள்வது போலவும் எனக்குத் தோன்றுகிறது.
இந்த பத்மநாபன் அவர்கள், தற்போது 76 வயது ஆகும் பழுத்த அனுபவம் உள்ள பெரியவர். என்னைப்போலவே, பழையன போற்றும் பாங்காளர். சொல்லப் போனால், நம்மைப் போன்றவர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. அகத்தூய்மை, எளிமை, ஏற்றம் வந்த போதிலும் மாற்றம் இல்லாத மனம். ஆஹா, இந்த சாமானியன் என்னும் மனப்பக்குவம் வந்து விட்டால், வாழ்கை எவ்வளவு ஆனந்தமயம்? இவரது தந்தை பரமக்குடி அருகில் உள்ள உப்புலி எனும் சிற்றூரைச் சேர்ந்தவராம். அவர் 1910 ஆம் ஆண்டு வாக்கில், தேவகோட்டை வந்து கண்ட தேவி தாசில்தார் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணி புரிந்து இருக்கிறார். அப்போது அவரது மாதச்சம்பளம், ரூ.15/=. ஆசிரியர் பணி என்றால் ரூ 3 (ஒரு மாதத்திற்கு) அதிகம் கிடைக்கும் என்ற நிலை அப்போது. எனவே இந்த குமாஸ்தா பணிதனை குப்புறத் தள்ளி விட்டு ஆசிரியர் பணிக்கு மாதச்சம்பளம் ரூ.18 க்கு மீனாட்சி கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்து இருக்கிறார். இந்த மீனாட்சி கல்லூரி தான் பின்னாளில் அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகி இருக்கிறது. கணிதத்தில் மிகச்சிறந்த புலியாக இருந்து இருக்கிறார். தேவகோட்டையில் இவரது முக்கிய மாணவர்களில் சிலர்:
• சேவுகன் அண்ணாமலை செட்டியார், நிறுவுனர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
• M.R.RM.வீரப்ப செட்டியார்
• M.L.M. மஹாலிங்கம் செட்டியார்
• சின்ன அண்ணாமலை
இன்னும் பலர்.
இந்த பத்மநாபன் 40 ஆண்டுகள் நகரத்தார் பள்ளியில் பணி புரிந்து விட்டு ஓய்வு பெற்றவர். மூன்று முதுகலைப் பட்டங்கள் முடித்த நீர் தளும்பா நிறைகுடம். அண்ணாமலை, சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களில் இவருக்கு இருந்த ஓட்டுரிமையை, கோவில் கோவிலாகச் சுற்றி அவற்றைப் பற்றி எழுதவும், மேலும் படிக்கவும் இடையூறாக இருக்கும் என்ற காரணத்தால் துறந்தவர். தேவகோட்டை திருக்கோவில்கள் பற்றி புத்தகமாக எழுதி இருக்கிறார். டாக்டர் வைத்தியனாதன் நடத்தி வந்த தியாகப்பிரம்ம விழாவினை அவர் வழியில் கடந்த 40 வருடங்களாக நடத்தி வருகின்றார். இவரது மகன் ராமதுரை, இயற்பியல் துறையில் படித்து, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணி புரிகிறார்.
இவரது தொடர்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் எனக்கு இலேசாக நினைவில் இருக்கும் எது பற்றியாவது உறுதி படத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், இவரிடம் கேட்டுச் சரி பார்த்துக் கொள்ள முடியும். என்ன விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார், மகனிடம் சென்று தங்குவதற்காக.
இப்படி, நமது தேவகோட்டையில் பிறந்தவர்களும் சரி, அங்கு வந்து வளர்ந்தவர்களும் சரி, ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களை விட வித்தியாசமகவே இருப்பார்கள். ஊரின் மண் மாண்பு அப்படி. ஆயிற்று, இன்று இரண்டு முக்கிய தேவகோட்டை மண்ணின் மைந்தர்களை அறிமுகம் செய்து கொண்டு விட்டோம்.
சரி, இப்போது மீண்டும் சரஸ்வதி அரங்கத்துக்கு வருவோம். சினிமா மக்கள் மனதில் எதையும் பதிக்கிற மிகச்சிறந்த ஊடகம். ஒரு திரைப்படத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் பிழைக்கின்றன என்று அடிக்கடி கேள்விப்பட்டு இருப்பீர்கள், நான் வணிகவியல் மாணவன் என்பதால், நேரடியாகவே கண்டு வியந்திருக்கிறேன். ஒவ்வொரு
திரைப்படமும், கதை விவாதத்தில் ஆரம்பித்து, தயாரிப்பு முன் வேலை (PRE PRODUCTION), தயாரிப்பு (PRODUCTION), தயாரிப்பு பின் பணிகள் (POST PRODUCTION) எனும் மெருகூட்டல் பணிகளிலேயே பல்லாயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்கும் தொழிலாகி விடுகிறது. அதன் பிறகு வினியோகம் என்பது மற்றுமொரு பெரிய சங்கிலித் தொடர். அந்தக் காலங்களில், தமிழ் நாட்டு திரைப்பட வினியோக உரிமை பூகோள ரீதியாகப் பிரிக்கப் பட்டு இருந்தது.
• N S C என்று அழைக்கப்படும் வட, தென் ஆற்காடு மாவட்டங்கள், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகள்
• C.S. எனும் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதிகள்
• T T எனப்படும் அரியலூர், கரூர்,நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி பகுதிகள்
• M R T எனப்படும் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர்,
• T K எனப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி பகுதிகள்
இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் உரிமை பெற்று வினியோகஸ்தர்கள் படத்தினை வாங்குவார்கள். பாசிடிவ் ப்ரிண்ட் எனப்படும் படச்சுருள்கள் அந்தந்த ஏரியாவுக்குத் தகுந்த எண்ணிக்கையில் படப்பெட்டிகளாக தயாரிப்பாளரால் வினியோக உரிமை உள்ளவருக்கு வழங்கப்படும். அப்போதைய நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இன்றைய (பிரிக்கப்படாத) சிவகங்கை, விருது நகர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். அதே போல மதுரை மாவட்டம் என்பது தேனி, திண்டுக்கல் பகுதிகளைக் கொண்டதாகும். இன்னொரு பகுதி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி. இவை அனைத்துக்குமே மதுரை தான் இயங்கு தலமாக இருந்தது.
மதுரையில் மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு பகுதி முழுவதுமே திரைப்பட வினியோகஸ்தர்களும் அவர்களது மேலாண்மை ஆட்களாலும் நிறைந்து இருக்கும் எப்போதும் அந்தக் காலத்தில். அவர்களுக்கு ஏற்ற வகையில் சிறிய, நடுத்தர லாட்ஜ்கள் நிறைந்த பகுதி அது. அந்தக் கால கட்டத்தில் அதிகமாக படங்கள் எடுத்து நமது பகுதியில் வினியோகம் செய்பவர்களாக இன்னும் என் மனதில் இருப்பவர்கள்.
• சேது பிலிம்ஸ்
• R M S
• சேனாஸ் பிலிம்ஸ்
நம்ம சரஸ்வதி அரங்க உரிமையாளர் திரு.வீரப்ப செட்டியார் அவர்களும், வீயார் பிலிம்ஸ் எனும் பெயரில் வினியோக உரிமையும் சில படங்களுக்கு வைத்து இருந்தார்.
படப்பெட்டியோடு அந்தப் பட வினியோக நிறுவனத்தின் பிரதிநிதியும் திரையிடப்படும் அரங்கத்துக்கு வருவார். அங்கேயே தங்குவார். படத்தின் சந்தைக்கு ஏற்ப வினியோகஸ்தருக்கும் திரை அரங்கத்தினருக்கும் வசூல் பிரித்துக் கொள்ளப்படும். புதிய படம் திரையிடப்படுகிறது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால், முதல் வாரத்தில் மொத்த வசூலில் 80 சதவீதம் வினியோகஸ்தருக்கும், 20 சதவீதம் அரங்கத்து உரிமையாளருக்குக்கும். இரண்டாவது வாரம்,,,, 70 : 30; மூன்றாவது வாரம் 60: 40 என்று பங்கீடு உரிமை இருக்கும். அதனால்தான் ஒரு திரைப்படம் ஒரு அரங்கத்தில் அதிக நாள் ஓடுவது என்பது அந்த படத்தின் வெற்றி. ஏனெனில், வினியோகஸ்தரும், அரங்கத்தினரும் சமமான விகிதத்தில் வசூலைப் பிரித்துகொள்ள முடியும். அதனால் தான் ஒவ்வொரு காட்சியின் வகுப்பு வாரியான வசூலும் D C R எனும் தினசரி வசூல் பட்டியலில் குறித்து வைக்கப் படுகிறது. இதன் அடிப்படையில் மொத்த வசூல் கணக்கும் பங்கீட்டுப் பணமும் பகிர்ந்து கொள்ளப் படும்.
அடுத்து, நம்ம டிக்க்ட் கொடுக்கிற கதை, மிகவும் சுவாரஸ்யமானது. ஆண்கள் பகுதிக்கு டிக்கட் கொடுக்க சென்றால், எல்லாம் முடிந்து கணக்குப் பார்க்கையில், ஒரு 5 அல்லது 6 ரூபாய் விற்கப்பட்ட மொத்த டிக்கட்டுக்களின் தொகையை விட அதிகமாக இருக்கும். அதாவது, ஒரு டிக்கட் 43 பைசா…. 50 பைசா கொடுப்பவர், மீதி 5 காசு சில்லறையை எதிர்பார்க்காமல் படம் பார்க்கும் அவசரத்தில் மிகப் பெருந்தன்மைக் காரராக மாறி மீதம் வாங்காமல் ஓடி விடுவார். சிலர் 45 காசு கொடுத்து விட்டு மீதம் உள்ள 2 காசுக்கு 10 நிமிடம் நிற்கவும் செய்வார்கள். அந்தக் காலத்தில் 10 பைசாவுக்கு தேனீர் அருந்த முடியுமே! அப்படி கடைசியில் எண்ணும் போது அதிகம் கொஞ்சம் இருக்கும். அப்படி நமக்கு சில நாட்களில் ஜாக்பாட் தான். ஆமாம் அந்த EXCESS நமக்குத்தான்.
சில நாட்களில் பெண்கள் கவுண்டரில் டிக்கட் கொடுக்க போய் பேய் முழி முழித்து 5 அல்லது 10 ரூபாய் கையில் இருந்து போட்டு இருக்கிறேன். அட ஆமாங்க. அப்போது ஒரு டிக்கட் 30 பைசா. ஒரு அக்கா 1 ரூபாயைக் கொடுத்து 2 டிக்கட் கேட்கும். 60ம் பைசா போக மீதி 40 பைசா கொடுத்து இருப்பேன். அடுத்து ஒரு தாவணி வந்து 50 பைசாவைக் கொடுத்து விட்டு 2 டிக்கட் கேட்கும். 10 பைசா குறைகிறதே என்பேன். எனக்கு முன்னால வந்த அக்கா 10 பைசா எடுத்துக்க சொல்லிருச்சுல்லண்ணே… அதுதான் இது எனும். நமக்குத் தலையும் புரியாது, வாலும் புரியாது முழிக்கும் போதே டிக்கட்டை பிடுங்கிக் கொண்டு அடுத்த கை உள்ளே வந்து விடும். அது வந்து டிக்கட் வாங்கியது போக மிச்சக்காசை அடுத்து வர பச்சை ஜாக்கெட் போட்ட அக்கா டிக்கட்டில் கழிச்சுக்கங்கண்ணேன்னு சொல்லும். மொத்தத்தில் காசு அடி வாங்கும்.
இத்தோடு சரஸவதி திரை அரங்கம் விட்டு வெளியேறி விடுவோம். அடுத்த பகுதிகள் நிறைய இருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக