அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 52


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
 பகுதி52
 24-04-2018
அன்புசொந்தங்களே ....

உறவாடும் பொது மனதுக்குள் எத்தனை மகிழ்ச்சி!.  

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?   என்று சொல்வார்கள்.  நாமெல்லாம் ஒரே இடத்தில் பிறந்து வளர்ந்துகால வேள்ளத்தில் எங்கெங்கோ அடித்து செல்லப்பட்ட போதிலும்பிறந்தவளர்ந்த நினைவுகள் அடி மனதில் தாங்கிப் போய் அமிழ்ந்து இருக்கிறது.  தற்போது ஒருவரை ஒருவர் மீண்டும் கண்டு கொள்கின்ற வேளையில்,  காலம் எவ்வளவு வேகமானது என்று உணர முடிகிறது .
இந்த புனர் ஜென்மம் என்று சொல்றங்களே.. அந்த நம்பிக்கையின் அடிப்படியில்.....நம்புவோம் என்று வைத்துக் கொண்டால்.  மீண்டும் மீண்டும் பிறக்கும் இந்த உயிர் இனங்கள் முந்தைய பிறப்பின் நினைவுகளை 'மாயையின் காரணத்தால் அறிவதில்லை.  ஆயினும் ஏதோ  ஒரு உறவின் உணர்வு ஆட்டிப்படைக்கும்  என்பார்கள். இதனை 'ருணானுபந்தம்என்று வடமொழியில் குறிக்கிறார்கள்.   என்னடா வாடா மொழி வாடை அடிக்கிறது என்று நினைக்கிறீர்களா ?
சரி,
அய்யன் திருவள்ளுவர்தமிழில்
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தாதார்
இறைவன் அடி சேராதார்

அப்படி ஏதோ  ஒரு பந்தம்அனுபந்தம்,  ருணானுபந்தம் இந்த தொடரில் வாசிப்பவரையெல்லாம் ஏதோ ஒரு நூலில் ஒரு சீராக கோர்த்து இருக்கிறது என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

சரஸ்வதி திரை அரங்கத்தின் நிகழ்வுகளாக இன்னும் சில சுவாரஸ்யங்கள் கண்டிப்பாக குறிப்பிடத்தான் வேண்டும்.  தினசரி அங்கேயே ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவசனங்களைப்  பாடல்களை கேட்க நேர்வதால்,  அப்படியே அந்த திரைப்படத்தின் படைப்பாளனின் மனதில் என்ன இருந்ததோ அது நம் மனதில் பதிந்து விடும்.   மேலும் திரும்பத் திரும்ப காட்சிகளைக் கண்டு சலிப்பு ஏற்படும்.  அதே சமயத்தில் சில காட்சிகள்மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும்.
அந்த மாதிரிமனதில் நின்ற காட்சிகள் பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளாகத் தான் இருக்கும்,  ஒரு குழுவாக (GROUP ) ஆக  அந்தக் குறிப்பிட்ட காட்சி திரையில் வரும்போது மட்டும் சென்று நின்று கண்டு களித்துஅந்த வசன கர்த்தாவின் திறமையைநடிகர்களின் TIMING கை வசனம் வெளிப்பட்ட விதத்தை (modulation ), உடல் மொழியை (BODY LANGUAGE) என்று ஒவ்வொரு பிரேம் ஆக  ரசிப்போம்.   மனதில் நின்ற சில காட்சிகள்.
திருவிளையாடல் படத்தில் :
தருமியாக வரும் நாகேஷ்,
 'பார் வேந்தே!  என்னைப்  பார் வேந்தே!
பாட்டுடன் வந்திருக்கும் தருமியின் வணக்கம்'
என்பார்.
அப்போது நாகேஷின் உடல் மொழி ... அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை சொல்லும்.


 அதே போல அதே A .P .நாகராஜனின்தில்லானா மோகனாம்பாள் திரைப்படம். மனோரமாஷோ கொட்டகை நடத்துவார். பத்மினியால் மனம் நொந்து போய்  இருக்கும் நடிகர் திலகம் அங்கு வந்து தங்குவார். அவரை உபசரிக்கும் மனோரமா,  அவரது அஸிஸ்டன்டை
ராசு....  ஏலே  ராசு........  அடேய் .... ராசப்பா .....


 என்று தான் உதவியாளரை அழைக்கும் விதத்திலேயேநடிகர் திலகம் அங்கு வந்து இருப்பது தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதை தன குரலின் தொனியிலேயே காட்டி விடுவார்.  எந்த நடிப்புக் கல்லூரியில் பயிலாத இயற்கை நடிகை.. என்று பேசிக்கொள்வோம். இந்த சரஸ்வதி திரை அரங்கில் முறுக்கு விற்கும் ஒரு பையன் பெயர் ராசு.   அவனை ஏதாவது வேலை ஏவ அழைக்கும் போதெல்லாம், அதே மனோரமா மாடுலேசனில், அடேய்…. ராசு….. ராசப்ப்பா… என்று செல்லமாக அழைப்போம்.
அதே போல இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் திரைப் படங்களுக்கு வசனம் எழுதும் அவரது   நண்பர் திரு.சித்ராலயா கோபு அவர்களின் நிரந்தர ரசிகர்கள் நாங்கள்.  நகைச்சுவையின் ஜாம்பவான் அவர் .


அவரது படங்கள் முழு நீள  நகைச்சுவை விருந்தாய் அமையும்.  ஸ்ரீதரின் சில படங்களுக்கு நகைச்சுவைப் பகுதியினை மட்டும் கூட எழுதி இருப்பார்.
அதிலும்,   நடிகர்கள்,  நாகேஷ்தேங்காய் சீனிவாசன் இருவரின் காம்பினேசன் சித்ராலயா கோபுவின் வசனத்தில் என்றால்எங்களுக்கு சலிப்பே இல்லாமல் அந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்போம். ஒவ்வொருவர் நடிப்பையும் வியந்து போற்றுவோம். அதிலும் ......

·        கல்யாணப்பரிசு தங்கவேலுவின்மன்னார் கம்பெனியையும்,  'வைரவன் சேவை... நாட்டுக்கு தேவை'யையும் யாராலும் மறக்க முடியாது. 
·        காதலிக்க நேரமில்லை  படத்தில் நடிகர் பாலையாநாகேஷ்சச்சு இவர்கள் அடிக்கிற லூட்டிஇன்றும் யாராலும் திரும்ப செய்ய முடியாது.
·        மேடை நாடகமாக இருந்த கலாட்டா கல்யாணம்  கோபுவின் நகைச்சுவையை மையமாக வைத்தே சக்கைப் போடு போட்டது.



·        சிவந்த மண் திரைப்படத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களான சிவாஜி கணேசன் (பாரத்), மற்றும் அவரது தோழர்களான நாகேஷ், மற்றும் குழுவினர், ராணுவத்தினர் போல் வேடமிட்டு அரண்மனைக்குள் நுழைந்து விடுவார்கள். இவர்களை திவான் நம்பியார் வளைத்து அதில் இருப்பவர்களில்பாரத் யார்மற்றும் தீவிர வாதிகள் யார் இருக்கிறார்கள் கூட்டத்துடன் என்று கண்டு பிடிப்பதற்காக அடையாள அணிவகுப்பு (Identity parade) நடத்துவார். வரிசையில் அனைவரையும் நிறுத்தி  ஒவ்வொருவராக பரிசோதனை செய்து அனுப்புவார்கள்.   வரிசையில் வரும்போதே நாகேஷ், உதடுகள் துடிக்க அதன் மீதுள்ள ஒட்டு மீசை துடிக்க பயத்தில் நடுங்குவார்.  தீவிரவாதிகளை இனம் கண்டு உண்மை இராணுவத்தினர், ‘நில்’. என்பார்கள்.  சரி பார்த்து விட்டு போலி எனில் ‘வா’ என்று உள்ளே இழுத்துக் கொள்வார்கள். போலி இல்லை என்று தெரிந்தால், ‘போ’ என்பார்கள்.  நாகேசை பிடித்து நிறுத்தி விடுவார்கள்.  இவரை அடுத்து வருபவரை ‘GO’ என்று சொல்லி அனுப்பி விடுவார்கள்.  தான் மட்டும் மாட்டிக் கொண்டோம், இவர் தப்பித்து விட்டாரே என, நாகேஷ் ‘வா’ என்று கத்தியே காட்டிக் கொடுத்து விடுவார்.  இந்தக் காட்சியில், நாகேஷின் நடிப்பு, அடேயப்பா.  இந்த ஒரு காட்சி திரையில் வரும்போது,  ஆபரேட்டர் தர்மராஜ், இங்கே பார்.. இப்ப நாகேஷ் செய்கிற சேட்டையைப் பார்.. என்பார்.  வாய்ப்பு கிடைத்தால் இந்த ஒரு காட்சியை மட்டும் பாருங்கள், இதை அமைத்த சித்ராலயா கோபு எவ்வளவு பெரிய படைப்பாளி என்று அறிந்து கொள்வீர்கள்.


 இதே வழியில் எங்கள் காலகட்டத்தில்உரிமைக்குரல்மீனவ நண்பன் போன்ற படங்ககளில் தேங்காய் சீனிவாசன்நாகேஷ் கலக்கும் காட்சிகளை மீண்டும் மீண்டும் கண்டு ரசித்து இருக்கிறோம்.
இப்படி நாங்கள் அனைவரும் சித்ராலயா கோபுவுக்கு பெரிய ரசிகர்கள்.  தற்போது, சித்ராலயா கோபுவின் மகன் சித்ராலயா ஸ்ரீராம் முக நூலில் நண்பராக இருக்கிறார்.  இந்த சித்ராலயா ஸ்ரீராமுக்கும், நமது தேவகோட்டைக்கும் ஒரு உறவு இருக்கிறது/  இப்போது தான் தெரிகிறது,  இந்த சித்ராலயா ஸ்ரீராம் அவர்கள், நமது தேவகோட்டை நகரத்தார் மாணவராக இரண்டு பகுதிகளுக்கு முன் உங்களுக்கு எல்லாம் அறிமுகமான மும்பை கேப்டன் விமானி திரு.ஸ்ரீனிவாசன் ரமேஷ் அவர்களின் சம்பந்தி என்று.  தேவகோட்டை சம்பந்திக்கு வந்தனம்.  இந்த தொடர் மூலம் திரு.சித்ராலயா கோபு அவர்களுக்கு தேவகோட்டை ரசிகர்களின் வணக்கங்கள்.

சரிசரஸ்வதி திரை அரங்கம் விட்டு வெளியே வருவோம்.  வெளியே வந்தால்திருப்பத்தூர் சாலை.  இடது கை பக்கம் இதற்கு முன் நன்றாகப்  பார்த்து விட்டோம். எதிர்புறம் வாடியார் வீதியும் பார்த்து ஆயிற்றுஎனவேவலது கை பக்கம் பேருந்து நிலையம் நோக்கி திரும்புவோம் .
சரஸ்வதி அரங்கத்தின் வலது புறம் முதல் கடை இளைய பெருமாள் புரோட்டாக் கடை. அதை அடுத்து ஒரு கேட் வைத்த வீடு.  அங்குதான்,  திருவேங்கடமுடையான் பள்ளியில் எனக்கு ஆசிரியராய் இருந்த திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குடி இருந்தார்.  பின்னர் அதே இடம் தான், சிவாஜி மன்றத் தலைவர் ரெத்தினம் அவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்டு நான் முன்னர் சொன்னது போல நண்பர்கள் ரம்மி விளையாடும் களம் ஆகியது.  தற்போது சிண்டிகேட் வங்கி அங்கு இருக்கிறது என்று எண்ணுகிறேன். 
அதை அடுத்து, லட்சுமி அக்கா/ பாலுவின் பெட்டிக்கடை. பாலு ஒரு நல்ல நண்பன். கபடு, சூது அறியாதவன், அவனது தந்தையைப் போல. லட்சுமி அக்காவின் சாமர்த்தியத்தால் தான் அந்த ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கடை வைத்து நடத்த முடிந்தது. இதை அடுத்து ஒரு வரிசையில் கட்டப்பட்டு இருக்கும் கடைகளின் தொகுப்பு.
தற்காலத்தில், வணிக வளாகங்கள் (COMMERCIAL COMPLEX), ஊரின் முக்கிய இடங்களில் கட்டப் பட்டு இருப்பதை நாம் அறிவோம்.  அந்தக் காலத்தில், தேவகோட்டை நகரில் இரண்டு வளாகங்கள்.  ஒன்று, இந்த இடத்தில். சரியாக பேருந்து நிலையத்துக்கு எதிரில் இராமநாதன் & கோ, பிலிப்ஸ் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையம் வரை நீளும்.  மற்றொன்று, லட்சுமி திரை அரங்கம் எதிரில், ராஜாமணி தட்டச்சு பயிற்சிப் பள்ளி இருக்கும் தொடர் வணிக தொகுப்பு.  இந்த ராஜாமணி தட்டச்சு பயிலகம் பற்றி அந்தப் பகுதிக்குள் நுழையும் போது பார்க்கலாம்.  இப்போது இந்தப் பகுதி.
இந்த இடத்தில் ஒரு குளக்கால் இடை மறிக்கும், அதன் பாலம் ஒன்று திண்ணை போல இருக்கும்.  இந்த இடத்தில் இரவு நேரங்களில், பாம்பும், கீரியும் சண்டை போடும், மண்டை ஓட்டை வைத்து மோடி மஸ்தான் வேலை செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனை இரத்தம் கக்க வைத்து அவன் மேல் போர்வை போட்டு, வா இந்தப் பக்கம்,  பச்சை சட்டை போட்டவர் சட்டைப் பையில் என்ன வைத்து இருக்கிறார்? போன்ற கேள்விகளோடு இடத்தை விட்டுப் போகின்றவர்கள் இரத்தம் கக்கிச் சாவார்கள் என்று பயமுறுத்தி தாயத்து விற்பவரை, பயந்து போய் பார்த்து இருக்கிறேன்.
blob:http://www.dailymotion.com/5381d357-e787-458a-a3b3-532652e8a7b1


சில நேரங்களில், வல்லாரை லேகியம் விற்பவர்,  கருவேலம்பட்டை பல் பொடி விற்பவர், வயிற்று வலி மருந்துக் காரர், என்று பலரைப் பார்த்து இருக்கிறேன்.  இனிமேல் அது போன்ற ஆர்வத்துடன், மனதில் எந்தக் கலப்பும் இல்லாத சிறுவனாய் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் மனதில் ஓடுகிறது.  சில சமயங்களில் சினிமா படக் கதாநாயகர்களான MGR, சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் இவர்களின் படக் காலண்டர்கள், பாட்டுப் புத்தகம் விற்பனை என்று ஏதோ ஒரு கூட்டம் அந்த இடத்தில் பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தில் நின்று கொண்டு இருக்கும்.
இதை அடுத்து பின்னால் இருக்கின்ற வரிசைக் கடைப்பக்கம் பார்வையைச் செலுத்துவோம்.  இந்த வரிசைக்கடை இரண்டு தளங்களாய் கீழே ஒரு கடை, மேலே ஒரு அறை என்ற ரீதியில் இருக்கும்.  முதலில் இருப்பது ஒரு காபிக்கடை.  பெயர் மறந்து விட்டது, நல்ல மணம் கமழும் பில்டர் காபி கிடைக்கும்.  அடுத்து , மோகன் ஸ்டோர்ஸ் என்று ஒரு மளிகைக் கடை.  எனது மனைவியின் உறவினர். தற்போது மூத்தவர் லண்டன் மாநகரில் இருக்கிறார்.  இளையவர், கொழும்பு நகரில் வசிக்கிறார்.  இதை அடுத்து ‘சௌந்தரம் புரோட்டா ஸ்டால்’.  தேவகோட்டையை அடுத்த துடுப்பூர் இவர்களது சொந்த ஊர் என்று நினைக்கிறேன். நல்ல சுவையான புரோட்டா சால்னா இவர்களது கை வண்ணம்.  இந்தக் கடைக்கு சபாஷ்.... சரியான போட்டி என்று சொல்லும்படி இருப்பது இதே வரிசையில் இருந்த ‘கருப்பைய்யா புரோட்டா ஸ்டால்’.

இதை அடுத்து நினைவில் நிற்பது அன்பு நண்பன், கல்லூரித் தோழன், மீரா ஹுசைன் அவர்களின் ‘ஆண்டவர் ட்ராவல்ஸ்’.  நீண்ட நெடும் பாரம்பரியம் உள்ள தேவகோட்டையின் ட்ராவல் முகவர் அலுவலகம். அந்தக் காலத்தில் இதன் வாசலில், போர்டு வைத்து இருப்பார்கள் இப்படி:
கப்பல், விமான டிக்கட், விசா, N.O.C. எடுத்துத் தரப்படும்.  அந்தக்காலத்தில் தமிழகத்தில் நாகை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து S.S.ரஜுலா, MV.சிதம்பரம் என்ற இரண்டு நாவாய்கள்...  அட அதாங்க.....கப்பல்கள் கடலோடிக் கொண்டு இருந்தன.  இவை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போமே!!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60