அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் -பகுதி: 6
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 6
03-10-2017
கீழக்குடியிருப்பில் நினைவில் நிற்கும் பெரியவர்களை ஒரு பார்வை பார்த்து விடுவோமா இப்போது?
பெரிய கருப்பன் அம்பலார் பற்றி சென்ற பகுதியில் குறித்து விட்டோம். அவரது மகன்கள் திரு.ரெகுநாதன் அம்பலம் என்னுடைய வகுப்புத்தோழனும் கூட... அடுத்து திரு.கதிர்வேல் அம்பலம் அவரது தம்பி பாலா என்ற பாலா சுப்ரமணியன் அம்பலம். எல்லோருக்கும் மூத்தவர் சுப்பையா அம்பலம். இதில் திரு கதிர்வேலர் என்னிடம் Accountancy படித்த மாணவர். அவர்களுக்கு மாணிக்க வித்யாசாலையில் கணக்கியல் பாடம் நடத்தி இருக்கிறேன்.
அடுத்து கண்மாய் கரை ஓரம் திரு.நடேசன் ஐய்யா அவர்கள் வீடு . நடேசன் அய்யா கண்ணனப்பா பேருந்து ஓட்டுநர். மிகவும் அமைதியாகக் காணப்படுவார். அவரது மூத்த மகன் ஆசைத்தம்பி என்ற ஆதியப்பன், என்னுடைய வகுப்புத்தோழன், திருவேங்கடமுடையான் பள்ளியில்...இப்போது இவர் பற்றிய பள்ளி நினைவுகள். எங்கள் ஆசிரியர் தாமஸ் துப்பாக்கி எடுத்து விடுமுறை நாட்களில் கொக்கு வேட்டைக்கு கிளம்பி விடுவார். வேட்டைக்கு முதல் நாள் அதற்கு வேண்டிய ஆயத்த பணிகள் செய்து முடிக்க வேண்டும். வேண்டிய பொருட்கள்: ஈயக்கட்டிகள், கருமருந்து (gun powder), தேங்காய் நார். இவை எல்லாம் நண்பன் ஆசை தயார் செய்வார். ஈயத்தை உருக்கி சின்ன சின்ன குண்டுகளாக ஆகிவிடுவார்கள். ஒரு சின்ன சீசாவில் (bottle ) அடைத்து வைத்து கொள்வார்கள். அடுத்து கொக்கு வேட்டை பெரும்பாலும் கண்மாயில் தான் நடக்கும்.
கரையோரம் வரிசையாக இடை வெளி விட்டு ஓடு மீனும் ஓ.கே உறு மீனும் ஓ.கே என்று வற்றி போகும் முன் வந்த வரை இலாபம் என கிடைக்கிறதா கொக்குகளும் நாரைகளும் பிடிச்சு முழுங்கி கிட்டு இருக்கும். தாமஸ் சார் இங்கேருந்து துப்பாக்கியின் குழலை துணி சுற்றிய நீண்ட கம்பி கொண்டு துருவித் துடைத்துச் சுத்தம் செய்து அந்த குழாய்க்குள் கொஞ்சம் தேங்காய் நார், கொஞ்சம் கருமருந்து, பின்னர் கொஞ்சம் ஈய உருண்டைகள், மறுபடியும் கொஞ்சம் தேங்காய் நார். இதை மறுபடியும் அந்த நீண்ட கம்பியை வைத்து கிட்டிப்பார். இப்போ ஷாட் ரெடி. ஒரு இடத்தில இருந்து ஒரு கொக்கை குறி பார்க்க மாட்டார். ஒரு வரிசையைக் குறி பார்ப்பார். baang..... வொரு 2 அல்லது மூன்று நாரை அல்லது கொக்குகள் கால் ஓடிந்தோ உடலில் ஈயக் குண்டு பாய்ந்தோ சாய்ந்து விடும். நம்ம நண்பர் கையில் அவை இருக்கும் சிறிது நேரத்தில்..
நண்பர் ஆதியப்பன் இறகு சிறை பிள்ளை ஆகி விட்டார். பள்ளியில் படிக்கும் காலத்தில் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய் இருக்கிறேன். வீட்டுக்கு முன்புறம் கண்மாய், பின்புறமாக சென்றால், அனுமந்தக்குடி சாலைக்கு சென்று விடலாம்.
இன்னொருவர் அரசப்பன் அண்ணன். இவரது தம்பி திருநாவுக்கரசு என் வகுப்புத்தோழன். இன்னும் அவர் தம் தம்பிகள், ஒருவர் மீனாட்சி சுந்தரம். இவர்களுடைய தந்தையார் சென்னை புஹாரி உணவகத்தின் நம்பிக்கைக்கு உரியவர. நீண்ட நெடுங்காலமாக அவர்களின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர்.
அடுத்து திரு ஜெயபால் அவர்கள். இவர் என் தாய்மாமா என்றே சொல்லலாம். M .G .R. ரசிகர். 1972ல் அ .தி.மு.க. உருவான நேரத்தில் இவர் நகர செயலாளர் ஆக ஜேப்பியார் அவர்களால் நியமிக்க பட வேண்டியவர் . அந்த நேரம் ஜேப்பியார் ஒவ்வொரு ஊராக சென்று கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்தார்.
அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். அரசியல் கவிழ்ப்பு வேலைகள் தெரியாததால் கடைசி வரை தொழிலாளியாகவே இருக்கிறார் . இவரது அண்ணன் திரு.அனந்தரூபன். கண்ணப்பா பேருந்துவின் நடத்துனர். காலமாகி விட்டார். இவரது தந்தை ஆதியப்பன் அம்பலம், நான் பார்த்தது இல்லை, என் அம்மா சொல்லக்கேள்வி ..இவர் கையைப் பிடித்து நாடி பார்த்தார் என்றால் அந்த நோயாளி இத்தனை நாள் உயிருடன் இருப்பார் அல்லது பிழைத்து கொள்வார் என்று கூ றி விடுவாராம். அந்த அளவுக்கு நாடி பிடித்து பார்ப்பதில் வல்லவராம். இப்போது போன்று எல்லோருக்கும் ஒரே மருந்து கொடுக்கிற அலோபதி வைத்திய முறை அல்ல அன்று.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
என்கிற குறள் தான் ஞாபகம் வருகிறது. அவரவர்கள் உடல் நிலைக்கு ஏற்ப, நோயின் தன்மைக்கு மருந்து கொடுத்த காலம் அது.
இதை விட்டால் கீழக்குடிஇருப்பில் குறிப்பிட வேண்டியது, முளைகொட்டு திண்ணை. ஒரு மைதானம் போல் அமைந்த திறந்த வெளியில் இருக்கும். அப்போது இருந்த வெட்ட வெளிகள் எல்லாம் ரியல் எஸ்டேட் வேகத்தில் கான்கிரீட் பாளங்கள் ஆகிவிட்டன. கண்மாய் எல்லாம் கல்லுக்கால் முளைச்சு கரம்பை இழந்து களை இழந்து கிடக்கு...
அடுத்து ஒத்தக்கடையில் விட்டுப்போனவை. அவற்றில் முக்கியமான சில தகவல்களை கண்டிப்பாகப் பதிவு செய்துதான் ஆக வேண்டும். இது யார் மனதையும் புண் படுத்தி விடக்கூடாது. ஒத்தக்கடையில் இருந்து புறப்பட்டு செல்லும் காந்தி ரோடில் வலது பக்கம் கூரை வேய்ந்த மண் சுவர் உள்ள சிறிய கட்டிடங்கள். என்ன அவை?
கைக் கொல்லர் பட்டறைகள் , மரத்தச்சர் பட்டறைகள் .. இவை மாட்டு வண்டிகள் செய்யவும், வண்டிச் சக்கரங்களுக்கு பட்டா எனும் இரும்பு உறை போட்டு விடும் வேலைகளும் நடந்து கொண்டு இருக்கும். அடுத்து மாடுகளுக்கு லாடம் அடிக்கும் வேலை. அந்த மாட்டினை அழகாக கயிற்றில் கட்டி கீழே சாய்க்கும் இலாவகமே தனி அழகுதான்.
அடுத்து வருவதுதான் மனதில் ரணமாகப் பாதித்த விஷயம். நாவிதர் கடை இருக்கும். மேல் மட்ட (உயர் சாதி) வகுப்பினர் முடி திருத்த வருவார்கள். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருப்பார் நாவிதர். கைக்கு ஒரு கண்ணாடியை பிடித்துகொள்ளக் கொடுத்து விடுவார். கன்னப் பகுதி முதலில், பின் முன் தலை, பின்னர் அக்குள்... அதன் பிறகு சவரம் செய்ய வந்தவர் எழுந்து நின்று கொள்வார், தான் கட்டி இருக்கின்ற வேட்டியின் இரு முனைகளையும் பிடித்து அதை ஒரு திரை மறைப்பு போல . .. கீழே அமர்ந்து நாவிதர் வந்தவரின் பிறப்பு உறுப்புக்கு சவரம் செய்து விடுவார்... எப்படிப்பட்ட அநியாயம் ? எப்படியோ சமூக மாற்றங்களால் சுமுகமாக இந்த கொடுமைகள் மாறி விட்டன ..
எனது தொடரில் நான் கண்டதையும் எழுதவில்லை... நான் கண்டதை எழுதுகிறேன்... சமூக அவலங்கள் இதில் வந்தால் வரலாற்றை நான் பதிவு செய்யறேன் என்ற சரியான கோணத்தில் மட்டுமே எடுத்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
தொடர்வோம் ...
கருத்துகள்
கருத்துரையிடுக