அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் -பகுதி: 8

அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் 
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 8
05-10-2017
மனிதர்கள் மற்றும் உலகின் உயிர்களை பரமன் படைத்தது அவன் உருவாக்கிய உலகை, அண்ட,பேரண்டத்தை கண்டு, கேட்டு, உண்டு, உணர்ந்து அதில் இறையவனின் இருக்கையை உணர்ந்து அவன் தாமரைத் தண்ணடிகள் தன்னைச் சேர்வதற்கே.. நாம் வெறும் வழிப்போக்கர்கள்,  ஆயின் போக்கும் வரவும் அறியாய் புண்ணியவான்கள்.  இந்த வாழ்வில் நின்று நிலைப்பது நினைவுகள் மட்டும்தான்.  வருவார்... போவார்,  தடம் மட்டும் விட்டுச்செல்வார்...  இந்த மீள் பார்வை திரும்பப் பார்ப்பதே அந்த நினைவுகளாய் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான்..உடம்பார் அழிவர் ... ஆயின் நினைவுகள், நிகழ்வுகள், சூக்குமமாய் எங்கும் நிறைந்திருக்கும்..அதனால் தான் மகாகவி பாடினான் :

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

சரி, இப்போது நம்ம ஊருக்கு வருவோம்.. காந்தி ரோடு ..தொ ண்டியார் வீதி சந்திக்கும் இடத்தில் உள்ளது அழகப்பனின்  வீடு . இந்த அழகப்பனை எனக்கு ஒரு 4 வயது முதலே தெரியும்.  இவரது தந்தையார் முத்தையா செட்டியார். குடும்பத்தில் எல்லோருமே சத்திரியர்கள் போல நல்ல உடற்கட்டு கொண்டவர்கள். பர்மா சம்பாத்தியம்... ஆனால் அங்கு விட்டு வந்த சொத்தே இன்னும் 4 தலைமுறைக்கு மேல் போதும்.   தேவகோட்டையில் வந்து வாழவேண்டும் என்று இறைவன் விதித்ததை எப்படி மாற்ற முடியும். அழகப்பனுக்கு மூத்தவர் கதிரேசன்,  நகரத்தார் சமுதாயத்தில் பிறந்து தமிழக காவல் துறையில் உயர் பதவிகளில் பணி ஆற்றியவர். காவல் துறை கண்காணிப்பாளராக (சூப்பிரண்டன்ட் ஆஃ போலீஸ்) ஆக  இருந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மைத்துனர்கள்:

1.அண்ணாமலை செட்டியார் -தியாகி ஆர்ச் அண்ணாமலை என்பவரைத் தெரியாமல் தேவகோட்டையில் யாரும் இருக்க முடியாது .

2.இரண்டாமவர்  - தாசில்தாராக இருந்தவர் 

3. T.R .M .S . - மூன்றாமவர் -  நகரத்தார் உயர்நிலைப் (N.S.M.V.P.S.)பள்ளியில் சாரணர் (Scout) ஆசிரியர் ஆக  இருந்த இவரையும் தெரியாமல் தேவகோட்டையில் யாரும் இருக்க முடியாது.

4.ஒரு சகோதரி,. இவர்களுக்கு... திருமதி.சிவகாமி ஆச்சி.. ஆத்தங்குடியில் ஆசிரியை ஆக  இருந்தார். நான் பிறக்கும் பொது என் தாயின் கூடவே இருந்து பிரசவம் பார்த்தாராம்.  பிறந்த உடன் சிசுவாக இருந்த என் கையில்  பேனாவைக் கொடுத்தாராம் அந்த கலைவாணி.  இன்றும் கலை வாணியின் கால்களை வணங்கி எழுகிறேன் சிவகாமி ஆச்சியாக.. அவரின் ஆசிகள் தான் இன்று கடல் கடந்தும், மூன்று நாடுகளில் (இந்தோனேசியா, சீனா மற்றும் சிங்கப்பூர் ) உள்ள 6 நிறுவனங்களுக்கு என்னை வணிகப்பொறுப்பாளர் ஆக்கி வைத்து இருக்கிறது)

தாயை இழந்து விட்டு யாருடனும் ஒட்டாமல் இருந்த என் தந்தைக்கு அங்கு கிராமத்தில் இருக்க இயலாவில்லை .  அவரது சித்தியின் குடும்பம் இந்த அழகப்பன் வீட்டு தோட்டத்தில் குடியிருந்து இருக்கிறது அப்போது .  என் தந்தையின் சித்தியின் கணவர்  திண்ணன் செட்டியாரின்  மகன் வீட்டில் பால் கறக்க, மாட்டு வண்டியை ஓட்ட என்று வேலை பார்த்து வந்து இருக்கிறார்.  என் தகப்பனார் இவரிடம் வந்து அடைக்கலம் ஆகி  இருக்கிறார்.  

அந்த தொடர்பு தான் என் அப்பாவுக்கும்  தி.வகை நகரத்தார் வீடுகளுடன் உருவாக்கி கொடுத்தது.  தொண்டியார் வீதியில் முதல் வீடு  சீனிச்செட்டியார் வீடு  என்று சொல்வார்கள்.  இந்த பெரிய வீட்டின் அதனை தூண்களும். உத்திரங்களும் , மோட்டு வளைகளும் என் அப்பாவுடன் பேசியிருக்கும்.  அந்த வீட்டில் எந்த ஒரு பராமரிப்பு வேலை என்றாலும் இவர் அங்கு இருப்பார் .  தி.ராம.சாமி. வீட்டில் எனக்கு தெரிந்தவரை என் தந்தையார்தான் உக்கிராணப் பொறுப்பாளர்.  அவ்வளவு நம்பிக்கைக்குரிய  மனிதர் . நான் சிறுவனாக இருந்த பொது தி.ராம.சாமி வீட்டில் வைர வேல் வழி பாடு நடந்து கொண்டு இருந்த சமயம் , நான் அங்கு சென்றேன். இவர் உக்கிரணத்தில் வேலையாக இருந்தார்.  ஒரு கிண்ணத்தில் முந்திரிப் பருப்புகள் கொஞ்சம் இருந்தன. சின்னப்பையன் தானே.. இரண்டு மூன்று பருப்பை எடுத்து வாயில் போட்டு விட்டேன். பளார் னு விழுந்த  அறையில் கன்னம் பழுத்து விட்டது. அநியாயத்துக்கு நியாயமான மனிதர்.  எதற்கும் ஆசைப்படாமல் சித்தர் போல வாழ்ந்தவர்..

சரி ... சாரி...மேலே சொன்ன உறவுகளின் மூலம் அழகப்பன் வீட்டில் எங்கள் ஆட்கள் அடுப்படி வரை எங்கு வேண்டுமானாலும் புழங்கி கொண்டு இருந்திருக்கிறார்கள்.  ஆனால் ஒன்று எனக்கு விபரம் தெரிந்து எந்த ஒரு நகரத்தார் வீட்டிலும் அல்லது அக்ரஹாரத்திலும்,  நாட்டார் நடுவிலும் எங்கள் குடும்பம் நன்றாக மதிக்கப்பட்டு வந்து இருக்கிறது.  எங்கள் பூர்விகம் அவர்களுக்குத் தெரிந்து இருந்ததால்.. பின் என் அப்பாவுக்குத் திருமணம் நடந்தவுடன் தி.வகையினருக்கு சொந்தமான பசு மடத்தில் குடி இருந்திருக்கிறார்கள்.  திருமணம் ஆனவுடன் இலவச இணைப்பாக என் சித்தப்பா பவளம் சிறு வயது பையனாக என் பெற்றோருடன் வளர்ந்து இருக்கிறார் .  எங்கள் தாய்க்கு  அவர் தான் மூத்த  மகன் என்று அனைவரும் நினைப்பார்கள்.  என்னைத் தூக்கி வளர்த்தவர், ஆளாக்கியவர்,  பலருக்கு என் அப்பா பெயர் சொல்லி நான் இவரின் மகன் என்றால் தெரியாது.  என் சித்தப்பா பவளம் அவர்களின் அண்ணன் மகன் என்றால் தான் தெரியும்.  இப்போது இந்த அறிமுகம் போதும் உறவுகள் பற்றி... ஏனெனெனில் நம்ம ஊரைச் சுற்றி அல்லவா அலைந்து கொண்டு இருக்கிறோம்?

இந்த அழகப்பனுக்கு பெரிய அப்பச்சி மகன் பெயர் வீரப்ப செட்டியார்.   சிறந்த சித்திரக்காரர் (ARTIST).  எந்த நேரமும் அவரை தூரிகையும் துடைத்த கையும் ஆகத்தான் பார்த்து இருக்கிறேன். அந்தக்காலத்தில் தேவகோட்டையில் பாபு ஸ்டூடியோ என்று நடத்தி வந்தார்.  பழைய (மிகப்பழைய) புகைப்படங்களைப் பார்த்தால் 'பாபு ஸ்டூடியோ'  என்ற லேபிள் ஒட்டியிருப்பதை பார்த்து இருப்பீர்கள்.  வீரப்பன் அண்ணன் நடத்தி வந்தார்.  அது தவிர அழகாக விளம்பர பலகைகள் படங்கள் எழுதுவார்.  அப்போது 'சந்திரன்' ஸ்டூடியோ தியாகிகள் பார்க் அருகில் இருந்தது. இந்த இரண்டு ஸ்டுடியோக்களில் தேவகோட்டையில் உள்ள பெரும்பகுதியினரின் பிம்பங்கள் பதிவு ஆகி இருந்தன.  இது தவிர பர்சனல் புகைப்படக்கலைஞர் திரு.ஏகப்பன் அவர்கள்.  கருதா ஊரணி பிள்ளையார் கோவில் இடதுபுறம், எங்கள் சைவப்பிரகாச வித்தியா சாலைக்கு பின்புறம் வீடு.  இவர் மகன் சிதம்பரம் என் பள்ளித்தோழன்.  (ஒரு ஏரியா வை விட்டு வைக்கலை ) இந்த ஏகப்பன் அவர்கள் வீட்டில் பல நாட்கள் திரிந்து இருக்கிறேன்.  கொஞ்சம் விரிவாக பின்னர் நான் சைவப் பிரகாச வித்தியா சாலையில் படிக்கின்ற நாட்களில் இதைப்  பற்றிப் பார்க்கலாம்.  இப்போது இவரின் அறிமுகம் போட்டோ கிராபர் ஆக ...  பாபு ஸ்டூடியோவின் தொடர் நினைவாக....

ஆர்ட்டிஸ்ட் என்று பார்த்தால் வீரப்பன் அண்ணன் , அப்புறம் மோகன் ஆர்ட்ஸ் என்று இருந்தார். ந.நா.நந்த கோபாலன் நகைக்கடைக்கு எதிர்புறம் தனது ஆர்ட் (கடை ?) வரைவு இடத்தை வைத்து இருந்தார்.   அப்புறம் ஆர்ட்டிஸ்ட் நாதன். இவரை சிறுவயதில் இருந்தே கருதா ஊரணி சைவ பிரகாச வித்தியா சாலையில் படிக்கும் போதே அறிவேன்.   அடுத்தது அப்சரா ஆர்ட்ஸ் பழனி. இவரையும் சிறு வயதில் இருந்தே அறிவேன்.  இவர் போக சுந்தர் ஆர்ட்ஸ் என்று சிலம்பணி அக்ரஹாரத்தில் இருந்தார். இவர் மகன் என்னுடன் படித்த ஞாபகம் இருக்கிறது. கொஞ்சம் மங்கலாகத்தான் ...  சினிமா தியேட்டரில் இடைவேளைகளில் ஸ்லைடு (slide) போடுவார்கள் .  முக்கால் வாசி இவர்கள் கைவண்ணம் தான் ...

இதுக்கு மேலே இன்னைக்கு எழுத முடியல நண்பர்களே...நாளைக்கு சிந்திப்போம் தேவகோட்டை தொண்டியார் வீதியில் ...முடிஞ்சா வெள்ளையன் ஊரணிக்கும் போய் காய்கறி வாங்கிடுவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60