அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்- பகுதி -1

அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்

கவிக்கிறுக்கன்  முத்துமணி

இந்த பதிவு, தேவகோட்டையில் வளைய வந்த பழைய ஞாபகங்களை அசை போடுவதாகும்.  எத்தனை ஊர்களில் வாழ்ந்திருந்த போதும் இளமையில் பிறந்து வளர்ந்த ஊரின், வீதிகளின்,ஓடி விளையாடிய வீடுகளின் உணர்வு இன்னும் பாதங்களில் ஒட்டியிருக்கிறது.  ஒரு தலைமுறைக்கு முந்தைய தேவகோட்டை.  வாசிக்கும் அன்பர்களின் பதிவுகளை வேண்டுகிறேன்.

நவராத்திரி

நவராத்திரி என்றதும் பழைய நினைவுகள். பால்ய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.
கோவில்களும் ,கோவில்களை  சுற்றிய குளங்களும் அதை ஒட்டி வாழும் மக்களும், கோவில் திருவிழாக்களும், மூலைக்கு  மூலை இருக்கும் பள்ளிக்கூடங்களும்  தேவகோட்டையில் சிறப்புக்கள்.  கோவில்களை சுற்றி அமைந்திருந்த அக்ரஹாரங்கள் பண்டிகைகளை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்று ஊருக்கு எடுத்துக்காண்பித்து கொண்டிருக்கும்.   நவராத்திரி என்றது அக்ரஹாரன்கள் நினைவுக்கு வருகின்றன.

தேவகோட்டையில்  அக்ரஹாரம் என்றால் முக்கியமான நினைவுக்கு வருவன:

1. தி,ஊரணி அக்ரஹாரம்
2. புதூர்  அக்ரஹாரம்
3. சிலம்பணி அக்ரஹாரம்

இந்த பகுதிகள் எல்லாம் நவராத்திரிக்கு களை  கட்டிவிடும். இதில் நான் இருந்தது திண்ணன் செட்டி பிள்ளையார் கோவில் பகுதி. அங்கிருந்து தான் எங்களது நகர்வலம் ஆரம்பம் ஆகும்.  ஒத்தக்கடையில் சுவாமிநாத ஐயர் என்று ஒருவர் இருந்தார்.  சாமா அய்யர் என்று அழைக்கப்படுவார் . அந்த ஏரியாவில் அவர் தான் வெயிட் பார்ட்டி.  என் பெற்றோர் அவர் வீட்டில் வேலை செய்து இருக்கிறார்கள்.  அவரது அப்பாவின் பெயர் 'சல்லி' சுப்பிரமணியன் .  பெயர் பெற்ற  வழக்குரைஞர் என்று சொல்வார்கள் . ஆனால்  பணம் இல்லாமல், கேஸ் கட்டைத் தொட்டும் பார்க்க மாட்டார் என்பார்கள். அதனால் தான் அவர் பெயர் 'சல்லி' சுப்பிரமணியன். ஆனால் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் வாத நோயாளியாக கட்டிலில் மட்டுமே கண்டிருக்கிறேன்.  அப்போதே சாமா  அய்யர் தேவகோட்டை அரிமா சங்கத்தில் மிகவும் ஆக்டிவ் உறுப்பினர் .  அவர் வீட்டில்  கொலு வைத்து இருப்பார்கள்.  அங்கு தொடங்கும் நவராத்திரி நகர்வலம் .  பொம்மைகள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டு  இருக்கும் .  பாலா அம்மா (திருமதி  சாமா அய்யர் ) அழகாக வயலின் வாசிப்பார்.  ரம்மியமாக இருக்கும்.  கொஞ்சம் நின்றால் , மாமி சுண்டல் வழங்குவார்கள்.

அந்தக்காலத்தில் திண்ணன் செட்டி அக்ரஹாரத்தில் பெயர் சொல்ல வாழ்ந்தவர்கள் :

1.திரு. அருணாசலம் சார்,  தே  பிரித்தோ  உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்.,,,

2.திருமதி.ஆனந்த வல்லி டீச்சர், அவரது மகன் ரமணன். இவர் ஒரு Chartered Accountant .  இவரெல்லாம் எனக்கு inspiration ஆக  இருந்தவர்.

3.திரு.திருப்பதி அய்யங்கார்,  ஜமீன்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமல்ல. அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் மூத்த  அண்ணன்.  அவரது தம்பியர்  மற்றும் குடுத்பத்தினர் அனைவரும் ஆசிரியர்களே!

3.அந்த ஆசிரியர்கள்:  திரு.இராமமூர்த்தி சார்,அவரது மனைவி ஆண்டாள் டீச்சர் ,  திரு கோவிந்தன் சார் (சங்கீத  ஞானம் உள்ளவர், கந்தர் சஷ்டி விழாக்களில் பாடுபவர்க்கு அருகில் அமர்ந்து தம்புரா இசைப்பது பார்த்திருப்பீங்க ), சீனு சார் (ஸ்ரீனிவாசன் ) மற்றும் திருப்பதி சாரின் மகள் களும் ஆசிரியைகள் தான் .

4.தி.பிள்ளையார் கோவில், கைலசா விநாயகர் ஆலயம் தேவஸ்தான நிர்வாகி மணியார் (அவர் பெயர் மணியார் என்றுதான் அறிவோம், அவரது மகன் கல்யாணம்,

5.தி.பிள்ளையார் கோவில் குருக்கள் கணபதி அவர்கள். (அவரது தந்தையார் திரு விசுவநாதக்குருக்கள்   ஞாபகம் இருக்கிறது, இவர்கள் எங்கள் பூர்விகபகுதியான மானாமதுரை அருகில் உள்ள வெள்ளிக்குறிச்சியை சேர்ந்தவர்) அவரது தம்பிகள் வெங்கிட்டு, இராஜமணி (என் வயது ஒத்த தோழன்).

6.Income Tax Practioner ஆக சிலம்பணி கோவில் அக்ரஹாரத்தில் ( இப்போது அமுதா டாக்டர் வீட்டுக்கு முன்புறம்) அலுவலகம் வைத்திருந்த திரு.இராகவன் D.com., ( பெயர் சரியா  என்று சந்தேகம், தெரிந்தவர்கள் சொல்லவும் ). அந்த காலத்தில் D.Com., என்று ஒரு கோர்ஸ் இருந்தது. அவரது மகன் திரு.வாசன்.

7.திருவேங்கடமுடையான பள்ளி ஆசிரியர்கள் திரு.சேஷன், திரு.ஹரிஹரன்.  சைவப்பிரகாச வித்யாலயாவில் எனக்கு ஆசிரியையாக இருந்த திருமதி.சௌந்தரம் ஹரிஹரன் அவர்கள்..

அங்கிருந்து வண்டி நேராக நகர சிவன் கோவில் வந்து சேரும்.  சிவன் கோவிலில் ஒரு செயற்கை நீரூற்று (fountain) தரையில் இருண்டு மேலே அடித்து கொண்டு இருக்கும்.  அந்த தண்ணீரின் மேல் ஒரு பிங்க் பாங்க்  பந்து கீழே விழாமல் நின்று கொண்டு இருக்கும். இதை மிக மலைப்பாக அப்படியே பார்த்து கொண்டு இருப்போம்.

அங்கிருந்து விட்டால் நேராக ருக்குமணி அம்மா வீடு தான்.  ருக்குமணி அம்மா வீடு  ஒரு மாளிகையாக மின்விளக்கு அலங்காரத்தில் அரண்மனை  போல மின்னும்.  ருக்குமணி அம்மா விடு எது என்றால் பழைய கொட்டகைக்கு பின்புறம். ( அப்போது  தேவகோட்டையில் இரண்டு  திரை அரங்குகள்.  முதலில் இருந்த  லட்சுமி டாக்கீஸ் , அதனால் பழைய கொட்டகை.  பின்னர் ஆரம்பித்த சரஸ்வதி டாக்கிஸ் புதுக்கொட்டகை. அருணா தியேட்டர்  எல்லாம் ரொம்ப ரொம்ப புதுக்கொட்டகை )
ருக்குமணி அம்மா விட்டுகொலுவில் பெரிய கை  முறுக்கு ஸ்பெஷல் தோசை அளவில் வைத்து இருப்பார்கள். அதே போல ஜம்போ சைஸ் லட்டுக்கள் கொலுவில் இருக்கும். அப்படியே வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டு இருப்போம்.

அதன் பின்னர் நேரம் இருந்தால் நேராக அம்மச்சி ஊரணி திசைப்பக்கம் பயணம் தொடரும். போகிற போக்கில் செல்லப்ப செட்டியார் கோவில் விஜயம் . பின்னர் கிருஷ்ணன் கோவில். அங்கு கிருஷ்னன்  கோவிலில் கொலு அழகாக இருக்கும்.  ஒரு பையனையே கிருஷ்ணர் மேக்கப்பில்  நிற்க வைத்து இருப்பார்கள்.  அந்த கிருஷ்ணர் தலைக்கு பின்னால்  ஜரிகை பேப்பரில் செய்த ஒளி வட்டம் சுழன்று கொண்டு இருக்கும்.  மிட்டாய் கடை பார்த்த பட்டிக்காட்டானாய் மாறி 'ஆ' வென்று பார்த்து விட்டு வீடு  திரும்ப மணி ஒன்பது ஆகியிருக்கும்.

இப்போது இவற்றை அசை போடும் போது  ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

 'ஓடுகிற நாய்க்கு நிற்க நேரமில்லை".

தெரு நாயை கொஞ்சம் ஒரு நாள் கவனித்து பாருங்கள்.

தலை போகிற காரியம் பார்க்க போவது போல குறிக்கோளோடு ஓடும். ஏதாவது ஒரு இடத்தில் கொஞ்சம் ரெஸ்ட எடுத்து கொள்ளும்.  பின் மறுபடி ஓட ஆரம்பிக்கும். இப்படி நாள் முழுதும் ஒரு வேலையும் இல்லாமல் ஆனால் ஓய்வே இல்லாமல் ஓடி களைத்து இருக்கும் .  அந்த நாயின் ஞாபகம் தான் வருகிறது.  ஆயினும் சுகமான ஞாபகங்கள்.
இன்னும் எழுத ஆசைதான்…..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60