அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி-2
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
28-09-2017
பகுதி-2
பிரசவ வலி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . உண்மையில் இப்போது உணர்கிறேன். நவராத்திரி காலத்தில் சிறுவனாக இருந்த போது தேவகோட்டையில் கண்ட நிகழ்வுகளை பதிவு செய்தேன். அது இவ்வளவு பேர்களை வினை புரிய வைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இது என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. அதிலும் நினைவுகளின் நிழல்களில் உறைந்து கிடந்த நடப்புக்களை, நண்பர்களை, நபர்களை மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் போது குதூகலத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் மனதில் குறைவில்லை. நான் பார்த்த, செவிமடுத்த, உணர்ந்த, உயிர்த்த தேவகோட்டையை பதிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாகும். ஆனால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடியக்கூடாது என்பதில் மிகக்கவனமாய் இருக்கிறேன். ஏனெனெனில் அது தன் கதையாகவோ, தம்பட்டமாகவோ தவறாகப் புரிந்து கொண்டுவிடக் கூடாது.
வாழ்வின் சரி பாதியை தேவகோட்டையில் வாழ்ந்து விட்டாகி விட்டது. ஒவ்வொரு வயதிலும் ஊரும் சரி உறவுகளும் சரி நம் மனமும் சரி பரிணாம வளர் சிதை மாற்றங்களுக்கு ஆட்பட்டு மாறி வரும். மாற்றம் ஒன்றே மாறாதது.
எத்தனையோ நிகழ்வுகள்...
எதைத் தொடுவது?
எதை விடுவது?
சில நேரம் சில உண்மைகள்
சிலரை சுடலாம்..
தவறாகப் படலாம்..
ஒரே குழப்பம் ...எதில் தொடங்குவது?. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதினால் நிறைய விட்டுப்போக வாய்ப்புகள் உண்டு.... இதுதான் மேலே சொன்ன பிரசவ வலி.. எனவே ஒவ்வொரு வயதிலும் பார்த்தது என்று வருட வரிசையில் எனக்கு தெரிந்ததை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். இதற்கு அன்றைய கால காட்ட தேவகோட்டை பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவை என்று தோன்றுகிறது. அப்போதுதான் என்னுடன் நீங்கள் பயணிக்க இயலும்
தேவகோட்டை- பூகோள பார்வை :
நுாறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட சிற்றாறுகள் இருந்ததாகவும், அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊரணிகள், குளங்கள் பாசன வசதி பெற்றதாகவும் கூறப்படுகிறது.அவற்றில் பல மாயமாகிவிட்டாலும், 9 சிற்றாறுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவையும் ஆக்கிரமிப்பு, மணல் கடத்தல், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்செடிகள் மண்டியதால் படிப்படியாக அழிய துவங்கியுள்ளன.
உப்பாறு (சிலம்பாறு), நாட்டார்கால், சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, விருசுழி ஆறு, தேனாறு, பாம்பாறு, நாட்டாறு ஆகிய 9 ஆறுகளையும் 1923 ல் 'சர்வே' செய்து ஆங்கிலேயர்கள் கற்களை ஊன்றியுள்ளனர். அவர்களுக்கு இருந்த அக்கறை கூட நமது அரசுக்கும், நமக்கும் இல்லாமல் போய்விட்டது.
தேவகோட்டையின்......
தெற்கு எல்லை மணிமுத்து ஆறு என்றும் அழைக்கப்படும் விருசுழி ஆறு. ஆற்றில் அதிக வெள்ளம் ஓடும்போது சுழிகள் உண்டாகி சுற்றியுள்ள பொருட்களை உள்ளே இழுக்கும் தன்மை கொண்டது. ஊரின் எல்லையில் நகரின் தெய்வமாக அருள்மிகு கோட்டை அம்மன் கோவில். தெற்கிலிருந்து ஊருக்குள் யார் வந்தாலும் கோட்டையம்மன் பார்வையில் வருடி (Scanned) வடிகட்டி (Filter) ய பின்னர் தான் எந்த ஜீவராசியும் ஊருக்குள் வர முடியும்.
கிழக்கே கற்குடி கண்மாய், கீழக்குடியிருப்பு, இறகுசேரி ...
வடக்கில் அருணகிரிப் பட்டணம் முத்துமாரி அம்மன், தாழையூர் கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன்...
மேற்கில் உலகின் எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக காலில் சிலம்பு அணிந்த விநாயகர்....
மக்கள்:
எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னதாவே நாட்டரசன் கோட்டையை மையமாக வைத்து கோவில் வழிப் பிரிவுகள் கொண்டு வாழ்வியலின் முறை தனை வழக்கென கொண்டு வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்கள். மக்கள் நகர்ந்து சென்றதால் 'நகர்'. ஊர்ந்து செல்வதனால் 'ஊர்'. கடல் வாணிபமும் லேவாதேவி என்று சொல்லப்படுகின்ற வட்டித் தொழிலும் செய்து செழித்தவர்கள் .....
கிராமங்களை நாடுகளாக பிரித்துக் கொண்டு நீதி பரிபாலனம் செய்து வருகின்ற நாட்டார் பெருமக்கள்....
வெளி ஊர்களில் இருந்து வந்து ஆசிரியர்களாக, அரசு அலுவலர்களாக, மருத்துவ பணியிலுமாக பணி புரிந்த பணியாளர்கள் ..
நகரத்தார் மேலாண்மை கோவில்களில் ஊழியம் செய்ய வந்த குருக்கள், வேதியர், அத்தியானர் ...
வெள்ளையர் காலத்தில் இருந்தே நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களாக பணி புரிவதற்காகவே அந்த காலகட்டத்த்திலேயே சட்டம் பயின்ற உயர் கல்வி மேன்மை கொண்டோர் ....
ஆயிர வைசியர் என்ற வகையினராக, தங்கம் , வெள்ளி போன்ற காசுக்கடை வணிகர்கள்....சிறு,குறு ஆடை, பாத்திர வணிகர்கள், எவர்சில்வர் பட்டறைகள் , அரிசி மற்றும் மாவு அரவை அலை நடத்துபவர்கள் ....
பெரிய பள்ளி வாசல் பகுதி மற்றும் முகமதியர் பட்டணம் எனும் பகுதியிலும் வாழ்ந்த இசுலாமிய சகோதரர்கள் ..... தொண்டி, நம்புதாளை, வட்டாணம் போன்ற கடற்கரைகளில் இருந்து மீன் வணிகம் செய்யவோர், அரிசி ஆலையில் புழுங்கல் அரிசி உற்பத்தி செய்வோர்….
இவர்களுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொடுக்கின்ற குடி ஆனவர்கள்... குடியானவர்கள்…
இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் கதம்பம்தான் தேவகோட்டையில் உயிர் தொழும்பு ..
இதில் கடைசியாக வருகின்ற குடியானவன் வகையில்தான் அடியேன் அடங்குவேன். நகரத்தார் வீடுகளில், ஒற்றை வண்டி மாடு இருக்கும்., சென்னைப்பட்டணம் சென்று வருபவர்கள், அங்கும் தொழில் முனைவோர்கள் மகிழுந்து வைத்து இருப்பர். எனக்குத் தெரிந்து டாக்டர் பழனிசாமி ஒரு vauxhall மகிழுந்து வைத்து இருந்தார். நகரத்தார் இந்த வண்டி மாடு வைத்திருக்க ஒரு தோட்டம் வைத்து இருப்பார்கள். அங்கு ஒரு குடியானக்குடி குடியாக இருப்பர்... அவ்வப்போது உதவிக்கு செல்ல வேண்டும். தோட்டத்த்தில் குடியாக இருந்து கொள்ளலாம். சின்ன வாடகை வசூலும் உண்டு. இப்படி என் தாய் தந்தையர் வந்து இருந்த இடம் ஒத்தக்கடையில் இருந்த பசுமடம்.
தற்போது அது மர அறுவை ஆலையாக இருக்கிறது. வீட்டுக்கு பின்புறம் நாட்டார் கோட்டை அம்மன் ஆலயம். ( திண்ணன் செட்டி வடகரையில் நகர பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள அருள்மிகு கோட்டை அம்மன் கோவில், நகரத்தாரால் இந்த நாட்டார் கோட்டை அம்மன் கோவிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து வைத்து வழி படுவதாகும்.)
முன்புறம் தி.கைலாச விநாயகர் திருக்கோவில். இடையில் தமிழக அரசினர் மருத்துவமனை. அப்போது அது ஒன்று தான் தேவகோட்டையில் அரசு மருத்துவமனை. அது தவிர தேவகோட்டை நகராட்சியின் சார்பில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனை திருப்பத்தூர் சாலையில் தற்போது உள்ள தொலை தொடர்பு (Telephone Exchange ) எதிரில் அமைந்து இருந்தது. டாக்டர்.ராஜகோபாலனை தேவகோட்டை மறந்து இருக்காது என்று நம்புகிறேன். அவருக்கு ஒரு அருமையான கம்பௌண்டர் ... பெயர் கோபாலன், கேரளத்தை சேர்ந்தவர்...
கோட்டை அம்மன் கோவிலுக்கு பின் புறம் அருமையான் ஆறு.. வளர்ந்த காலத்தில் எங்களது பீச் (beach ) அதுதான் ...படிக்க, கபடி விளையாட, திருட்டு தம் அடிக்க... ஐப்பசி மாதத்தில் வெள்ளம் கரை புரளும். மற்ற காலங்களில் சிறு ஓடை யாவது ஓடும். இப்போது இருப்பது போல் வறண்டு இருக்காது. வெள்ளையர் கட்டிய அருமையான 18 கண் ஆற்றுப்பாலம்.. பாலத்தின் அக்கரையில் இடது பக்கம், அறுவைக்கொட்டகை என்று ஒரு கட்டிடம் இருக்கும். அது தான் அரசு மருத்துவ மனையின் உடற்கூறு சோதனை (post mortem )அறுவை கூடம். விபத்தில் இறந்தவர்கள், விஷம் குடித்து இறந்தவர்கள் இவர்களின் உடலை ஊருக்குள் கொண்டு வந்து விடாமல் ஊருக்கு வெளியேவே முடித்து விட அன்று இருந்தவர்கள் இப்படி அமைத்து இருக்க வேண்டும்.
தி.பிள்ளையார் கோவிலுக்குப் பின் புறம் நகர காவல் நிலையம் (TOWN POLICE STATION ). ஒத்தக்கடையில் நாராயணன் ஓட்டல். இப்படி அந்த பகுதி முழுக்க எப்போதும் கலகப்பாக சந்தடி மிகுந்து காணப்படும்.
மாட்டு சந்தைக்கு அடுத்த பகுதியில் போவோமே .........
கருத்துகள்
கருத்துரையிடுக