அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 43

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 42
19-02-2018

அன்பு நட் பூக்களே !

வெள்ளயன் ஊரணி கிழக்கில்  ரோடில் அங்குசாமி தமிழ் மருந்துக்கடை முன்பு நடந்து இருந்தோம்.  அதன் பிறகு அப்படியே இந்த மேலபஜார் சாலையை தூரத்தில் இருந்தே பார்த்து விட்டு நல்ல நாள் பார்த்து வருவோம் என்று திரும்பி விட்டோம்.  அந்த நல்ல நாள் இப்போது தான்  வந்து இருக்கிறது. மேல பஜார் சாலையில் நுழைந்தோம் என்றால் அந்த இடது பக்க முனையில் மாமு ராஜக்கிளி  அவர்களின் எண்ணெய்க் கடை.  ஒரு பெரிய நண்பர் கூட்டமே நிற்கும், வியாபாரம் ஆகிறதோ இல்லையோ... அதை ஓட்டி உயரமான படிக்கட்டுகளுடன் வரிசையாக கடைகள்.   கார்டெக்ஸ் என்று 'காரைக்குடி கைத்தறி நெசவாளர் சங்கத்தின்'  கைலிகள் விற்கும் கடை இருந்தது.  மிகக்குறைவான விலைக்குக் கிடைக்கும்.  அடுத்து எனது உறவினர் திரு.பாஸ்கரன், 'சினிப்ரியா' என்ற பெயரில் ஒரு கட்பீஸ் கடை வைத்து இருந்தார்.  அப்புறம் அந்த வரிசையின் கடைசியில் பள்ளி நண்பன் முருகப்பன் (கருதா ஊரணி, சந்திரனின் தம்பி ) ஒரு ரேடியோ பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

இதற்கு நேர் எதிரே மளிகைக்கடைகள் இருந்தன.  இந்த கடை வரிசைக்கு அடுத்து (இடது வரிசை) 'வின்சென்ட் ' என்ற பெயரில் குளிர்பானம், மற்றும் சோடா பாட்டில் உற்பத்தி நிலையம் இருந்தது.  நல்ல ருசியான குளிர் பானம்.  இவர்களின் 'லவ்-ஓ'  மிகப் பிரசித்தி.  ஸ்பெஷல் நாடகம் என்று அழைக்கப்படும், கூத்து மேடைகளில், பபூன் ஆக  நடிப்பவர் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் டான்ஸ் பெண்ணிடம் , 'லவ்-ஓ'  வேண்டுமா என்பார்.   அந்த அள்வுக்கு இந்த 'லவ்-ஓ' அனைவரும் அறிந்த ஒன்று அந்த நாட்களில்.    இதை அடுத்து ஒரு அடுமனை ( பேக்கரி ) இருந்தது.   வெள்ளையன் ஊரணி தென் கரையில் உடன் பிறவா சகோதரர் பழனிச்சாமி அவர்களின் 'துரைராஜ்' ஜவுளிக்கடைக்கு அடுத்து  'P .S .மணி விலாஸ்' பேக்கரி என்ற பெயரில் நடத்தி வந்தவரின் சகோதரர் நடத்தி வந்தார்.   இதற்கு நேர் எதிரே ( வலது வரிசை ) உள்ளே சந்து போகும், இதனுள் ஒரு அசைவ சிற்றுண்டி விடுதி இருந்தது .  பெயர்  மறந்து விட்டேன். நினைவு உள்ளவர்கள் பகிரவும்.  இதற்கு அடுத்து அந்தக் கால கட்டத்தில் மூன்று கடைகள் புதிதாகக் கட்டப்பெற்றன.

முதல் கடை எனது மதிப்பிற்குரிய மாமா அமரர் மஹாலிங்கம் அவர்களும், மதிப்பு மிகு RM .கனகசபாபதி அவர்களும் இணைந்து திறந்த 'சௌந்தர் மெடிகல்ஸ்'.   இவர்கள் இருவரும் பிரிக்க முடியாத பால்ய சிநேகிதர்கள்.  மாமா மஹாலிங்கம், இந்திய இராணுவத்தில் பணி ஆற்றினார்.  கனகசபாபதி அவர்கள் வெள்ளையன் ஊரணி கீழ்கரையில் தமிழ் மருந்துக்கடை நடத்தி வந்தார்.  இருவர் குடும்பமும் உறவினர்கள் போல .. அப்படி ஒரு ஒற்றுமை.  மஹாலிங்கம் மாமா வருட விடுப்பில் தேவகோட்டை வந்தார் என்றால், அவரை கனகசபாபதி மருந்துக்கடையில் தான் பார்க்கலாம்.  மாமாவுக்கு ஆங்கில மருந்துக்கடை வைக்க வேண்டும் என்று நெடு நாள் ஆசை.  அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வந்தவுடன், இரண்டு நண்பர்களும் சேர்ந்து இந்த இடத்தில் 'சௌந்தர் மெடிக்கல்ஸ்' என்ற பெயரில் ஆரம்பித்தார்கள்.   யார் கண் பட்டதோ... பல்லாண்டு பிணைத்து இருந்த நட்பு  தொழிலில் சரி வர வில்லை.  பின்னர் கனகசபாபதி அவர்கள் (பிரிந்து போய் ) தன்  வீட்டு முன் பகுதியிலேயே மெடிக்கல்ஸ் தொழிலைத் தொடர்ந்தார்.  வாடியார் வீதி ஆரம்பிக்கும் இடத்தில் அவரது வீடு மற்றும் கடை.  அவர் மகன் திரு.மீனாட்சி சுந்தரம் என்னுடன் ஒரே வயது தோழன்.  மாமா மஹாலிங்கம்  நண்பர் பிரிந்து சென்றதும் கடையின் பெயரை தன் மகன் (என் அன்பு அத்தை மகன்) 'சிவா'  மெடிக்கல்ஸ்  என மாற்றி வைத்துக்கொண்டார் .  தற்போது சிவா, 'காவன்னா மெடிக்கல்ஸ்'  நடத்தி வருகிறார் .

சிவா மெடிக்கல்ஸ் அடுத்து ' அருணாச்சலம் மளிகைக்கடை' . இவர்கள் மாட்டுச்சந்தை அருகில் நாட்டுச்செக்கு வைத்து நல்ல எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றையும் உற்பத்தி செய்து விற்று வந்தார்கள் . எங்களுக்கு இளையவர் இவர் குடும்பத்து சிவா.  

இதை அடுத்து அமரனாகி விட்ட அன்பு மாப்பிள்ளை முருகேசன் அவர்களின் மாமா நடத்திய 'பழனியப்பா நெய் ஸ்டோர்ஸ்' .  முருகேசன் மற்றும் குடும்பம் பற்றி எழுதவும், பகிரவும் நிறைய இருக்கிறது.  என் உயிருடன் கலந்த உறவு.   எல்லா வகையிலும் 'மாப்பிள்ளை'  என்ற சொல்லுக்கு உரித்தானவன்.  தாய் மாமா வீட்டில் தங்கியிருந்து எம்முடன் கல்லூரி படித்தார்.  இவர் மாமா மகன் பெயர் திரு.பழநியப்பன் . அன்புத் தம்பி முத்துப்பழனியப்பன் அவர்களின் செட்.   இந்த குழு பற்றி வாடியார் வீதிக்குள் நுழைந்ததும் பார்ப்போம்.

இந்த மூன்று கடைகளுக்கும் அடுத்து தேவகோட்டையில் பிரபல ' ஈரோடு   மீயன்னா' அவர்களின் வீடு.   இப்போது வாடியார் வீதி முகப்ப்புக்குள் வந்து விட்டோம்.  இந்த வாடியார் வீதி காலகாலமாய் பல்வேறு மாற்றங்களை கண்டு 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற இயற்கை விதியினை இன்று வரை நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.   நான் வரையும் வாடியார் வீதி நான் என் வயதில் கண்டது.  எனக்கும் முன் எத்தனையோ மாற்றங்களும் ஏற்றங்களும் இருந்து இருக்க கூடும்.  நான் நேற்று பார்த்த வாடியார் வீதி இன்று இல்லை.  நாளைய  நிலையும்  அப்படிதான்.

நேற்றுப் போல் இன்று இல்லை ....
இன்று போல் நாளை இல்லை ...

என்ற பாடல் வரிகள்தான் நினைவில் ஒலிக்கிறது.  

இந்த வாடியார் வீதி நான் சிறுவனாக இருந்த பொது ஒரு தோற்றம் காட்டியது.  என் வாலிப வயதில் கொஞ்சம் மாற்றங்கள்.  பின் நான் ஊரைப்  பிரிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன  பிறகு ஒவ்வொரு முறை செல்லும்போது வேறு வேறு தோற்றம்.....  

நாம் இந்த பூமிப்பதின் மேல்  ஓட்டில், ஒரு சிறிய இடத்தை அடிக்கணக்கில் அளந்து வியர்வை வழிய பாடுபட்டு சேர்த்த பணத்தை கொடுத்து அந்த இடத்தின் எல்லைகளை வரையறுத்து காகிதத்தில் எழுதி பத்திரம்  என்ற பெயரில் பத்திரமாக பெட்டியில் வைத்து பூட்டி வைத்துக் கொள்கிறோம்.  உற்றார் உறவினரிடம் அது என் இடம் என்று நிறையவே பெருமை அடித்துக் கொள்கிறோம்.  உண்மையில், இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமி அந்த நாள் முதல் இந்த நாள் வரை அப்படியேதான் இருக்கிறது.  மனிதன் தான் ஒவ்வொரு பெயரிலும் அந்த இடத்தை தான் வாங்கி விட்டதாகவும், அல்லது விற்று விட்டதாகவும் மாயையில் (ILLUSION) நினைத்துக் கொள்கிறான்.  ஆனால் எனக்கென்னவோ இந்த பூமிதான் மனிதன் பெயர்களை மாற்றி மாற்றி தன்  மீது எழுதிக்கொள்கிறது... மனிதன் அல்ல... தலை முறைகள் இடை வெளியில் பூமி தன்  மேல் இருக்கும் மனிதனின் பெயரை மாற்றி எழுதி விட்டு அமைதியாக சிரிக்கிறது.  ஏதாவது ஒரு வீட்டின் இடத்தை நினைத்து சிந்தித்துப் பாருங்கள் .... தற்போது என் பெயரில் ... இதற்கு முன் எனக்கு விற்றவர் பெயரில் .... அதற்கு முன் ....அதற்கு முன்... அது போலத்தான் எனக்குப் பின்னும் நடக்க இருக்கிறது .  இதில் எனக்கென்ன பெருமையும், கர்வமும் வேண்டிக்கிடக்கிறது.. நான் அந்த இடத்தை வாங்கி விட்டேன் என்று ... அந்த இடம் கொஞ்ச காலம் என் பெயரை வாங்கி வைத்து இருக்கும் போது ...
மண்ணின் மீது மனிதனுக்காசை 
மனிதன் மீது மண்ணுக்காசை 
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது அதை 
மனமோ ஏற்க மறுக்கிறது….

இந்த வாடியார் வீதி முகப்பில் இப்போது இருக்கும்  'குறிஞ்சி டெக்ஸ்' (திரு.சதாசிவம் )., அடுத்து மாப்பிள்ளை பூமி .இராமநாதனின் 'பூமி நாதன் ஸ்டோர்ஸ்' , மதன்ஸ் டைலர்ஸ் எல்லாம் 80களில்  முளைத்தவை.  அதற்கும் முன்பு, முழு வாடியார்  வீதியும், கடைக்கட்டிடங்கள் இல்லாமல், ஆனால் பர பர  வென இருக்கும்.  ஏனெனில், வாரச்சந்தைக்கு தேவகோட்டையின் முழு கிழக்கு, தெற்கு மற்றும் நடுப்பகுதி மக்கள் வந்து சேரும் 'வாடி வாசல்', இந்த வாடியார் வீதிதான்.  எனக்கென்னவோ, தேவகோட்டையின் மிகப்பழமை/ தொன்மையான பகுதி வாடியார் வீதியாகத்தான் இருக்க வேண்டும் .

நாளைக்கு / அடுத்த பகுதியில் வாடியார் வீடுதியின் பழமை மாறாது , கிளி ஜோசியம், மற்றும் சந்தைக்கடைக்கு முகப்பக்கமான  வாடியார் வீதி தேடி செல்வோம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60