அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 14

அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 14

18-10-2017
நேற்று எழுத வந்ததே தீபாவளிக்கு வெ .ஊரணிதான் தேவகோட்டையின் தி.நகர் என்று..  ஆனால் நேரம் போதாமையால் அதற்கு மேல் எழுத முடியவில்லை.  நேற்று வெ .ஊரணி கீழக்கரையில் உங்ககளை நிறுத்தி வைத்து விட்டு வந்தேன்.  அந்த இடத்தில் பின்னர் ஒரு காபி கடை இருந்தது.  காரைக்குடி கூட்டுறவு பால் சங்கம் நடத்தி வந்த கடை.  பில்டர் காபி மட்டுமே.. திக்கான பாலில் நல்ல டிகாக்ஸன் மணத்துடன் நாக்கில் ஓட்டும் காபி.  அந்தக்கடை கல்லாவில் தாணிச்சா ஊரணியைச் சேர்ந்த திரு.பெரியண்ணன் இருப்பார்.  அசப்பில் சின்ன வயது பாரதி ராஜா போல இருப்பார் . இன்னொரு கேஷியர் எனது தாய் மாமா திரு.மருது பாண்டியன்.

அப்படியே இன்னும் கொஞ்சம்  கிழக்கில் நடந்தால் மேல பஜார் ரோடில் கொண்டு போய் சேர்க்கும். இதன் இடது புறம் R.M.P.T. நடராஜன் கடை.  நோட்டு புத்தகம் மற்றும் ஜெனரல் ட்ரடேர்ஸ்.  பள்ளி திறப்பு மாதம் என்றால் இந்தக்கடையிலும் S.N .இராமநாதன் கடையிலும் ( SAME GROUP ) நோட்டுகள், அட்டை, ஸ்கேல், ரப்பர் என்று ஒரே கூட்டம் .  அதிலும் காசில்லாமல் அவர்கள் தரும் LABLE வாங்க ஒரே சந்தோசம் தான்.   புது நோட்டுகள் ஒரு மணம் பரப்பும்.  ஆனால் தீபாவளி வந்து விட்டால் ஒரு அது வெடிக்கடையாக வேடம் தரித்து விடும்.  தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே  நாங்கள் பார்க்கும் சிவகாசி இந்தக்கடை தான்.  இது போல வெ ஊரணி வடகரையில் வெடிக்கடை உண்டு .  பூக்கடை சேதுதேவர் சார்பில் ஒரு கடை பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும்.

எலும்புத்துண்டுக்கு திரியும் தெரு நாய் போல இந்தக்கடைகளில் வண்ண வண்ண காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட வெடி ஐட்டங்களை நாக்கை தொங்கப்போட்டு வேடிக்கை பார்த்த ஞாபகம் வருகிறது. அதிக பட்சம் ஒரு துப்பாக்கியும்  ஒரு கிறோஸ் ரோல் என  கேப்பும் , கொஞ்சம் கம்பி மத்தாப்பும் வாங்கி கொடுப்பார்கள் வீட்டில்.  அதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி ...   மனம்  எட்டாக்கனியான  அணுகுண்டுக்கு அலையும்.

இப்படி கடை கடையா வேடிக்கை பார்த்த அனுபவம் மறக்க இயலாது.  மனதில் தன்னிரக்கம் பொங்கும்,  ரொம்ப ஏழையாக மனம் எண்ணிக்கொள்ளும்.  எவனாவது லட்சுமி வெடி,  யானை வெடி, அணு குண்டு வெடித்தால் அவன் மேல் பொறாமையால் மனம் பேதலிக்கும். அதிலும் சோடா பாட்டிலில் ராக்கெட் விடுவானுங்க பாருங்க ... அந்த ராக்கெட் மேலே போயி கரியாக கரைஞ்ச பின்னும் மனம் என்னமோ அதன் பின்னாலேயே திரியும்.

அந்தக்கடைக்கு நேர் எதிரே என் வகுப்புத்தோழன் R.பாண்டியராஜன் அவர்களின் தந்தை திரு.இராமையா அம்பலம் கடை வைத்து இருந்தார்.  அன்புடன் மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் பனசமக்கோட்டை பாண்டியன் என்னுடன் ஒன்றாம் வகுப்பில் இருந்தே வகுப்பு தோழன்.  ஜான்ஸ் பள்ளியில்.  பின்னர் 4 ஆம்  வகுப்புக்கு நான் கருதா ஊரணி சைவ பிரகாச வித்தியாசாலையிலும், அண்டத்தின் பின்னர் 6,7,8 அம வகுப்புகள் சிவன் கோவில் ஊரணி அருகில் அமைந்த திரு வேங்கடமுடையான் பள்ளியிலும் படித்து விட்டு 9 ஆம் வகுப்புக்கு தே  பிரித்தோ பள்ளிக்கு சென்றால் அங்கு பழைய நண்பன் பாண்டியராஜன்.. கல்லூரியிலும் தொடர்ந்தது நடப்பு.  பின் அவர் திருப்பத்தூர் கல்லூரியில் படித்தார்.  மாணவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் .   தமிழக காவல் துறையில் எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் உயர் பதவிகளில் பணி  புரிந்து விட்டு ஓய்வு பெற்றுள்ள மாப்பிள்ளை R.பாண்டியராஜனை இந்த பகுதியில் நினைவு கொள்கிறேன்.

அப்படியே பின்னுக்கு மேல பஜார் ரோடு நோக்கி நடந்தால், வலது மூலையில் திரு.சண்முகக்கோனார் நடத்தி வந்த அங்குச்சாமி தமிழ் மருந்துக்கடை.  நீண்ட நெடுங்காலம் அந்தக்கடை இருந்தது.  திரு.அங்குச்சாமி சட்ட மன்ற உறுப்பினர் ஆன  பின்னும் தொடர்ந்தது.  அவரின் தம்பி ஆசைத்தம்பி என்ற ராஜகோபாலன் நடத்தி வந்தார்.  அந்தக் கடைக்கு நேர் எதிரே அன்பன் மனோகரன் மேனனுக்கு சொந்தமான தேனீர் கடை.  உயரமான படிக்கட்டு ஏறி செல்ல வேண்டும்.  இந்த வெ.ஊரணி கிழக்கு சாலை  மேல பஜார் ரோடில் சேரும் இடத்தில் என் நண்பன் பெரிச்சியப்பன் வீடு  இருந்தது. அந்த இடத்தில் எப்போதும் பனை நுங்கு வியாபாரம் ஜோராக நடக்கும்.  அந்த வீட்டுக்காரர்கள் உள்ளே செல்வது என்றால் கூட இவர்களைக் கடந்து செல்ல வேண்டும்.

இடது புறம் திரும்பினால் மேல பஜார் ரோடு.  அப்போது உயரமான அடித்தளத்துடன் கடைகள் கட்டப்பெற்றன.  இந்த இடத்தில் மூலையில் ராஜாகிளி எண்ணெய் கடை.  இவருக்கு முந்திய தலை முறையில் இருந்தே எண்ணெய் செக்கு வைத்து ஆட்டி விற்று வந்தவர்கள்.  குதிரைப்பாதை ரோடில் உள்ள குளக்கால் அருகில் இவர்களது செக்கு ஆடும். கடை கீழ பஜார் ரோடில் உஜ்ஜனி விலாஸ் கடைக்கு கொஞ்சம் முன்னால்  இருந்தது.  பின்னர் நான் இந்தோனேசியா வந்து எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் வீடு  கட்டும் பொழுது (ஆண்டு 2000) சென்னையில் செட்டில் ஆகி விட்டிருந்த திரு.ராஜாகிளி  என் வீட்டுக்கு வந்து அளவளாவிச் சென்றார்.  இவரை நான் மாமு என்று தான் அழைப்பேன்.  இவரது தம்பி கமால்  சித்தப்பாவுடன் சீட்டாட்ட (ரம்மி) கோஷ்டி உறுப்பினர்.

குதிரைப்பாதையில் இருந்து கீழ  பஜார் ரோடு ஆரம்பித்த உடன் இரண்டு பலசரக்கு கடை இருக்கும்.  அடுத்து நடந்தால் வெள்ளி,தங்க நகைகள் பாலிஷ் போடும் பட்டறை.   அப்புறம் உயராமல் ஒரு வீடு இடது பக்கம். அந்த ஏரியா முழுவதும் ஆயிர வைசியர் குடியிருப்பு.  கொஞ்சம் தாண்டி வலது புறம் அண்ணா படிப்பகம்.  நான் முன் கண்ட  M .G .R . பதிப்பகத்தை விட்டு வந்தால் அடுத்து அங்கு வாசிக்காத பேப்பர்களை வாசிக்கும் இடம்.  அதை விட அங்கு வந்து பொழுது போகாமல் உதார் விட்டுக்கொண்டு இருக்கும் பெரியவர்களின் வாயைப்பார்ப்பது முக்கியமான நிகழ்வு.

அப்படியே அந்த கீழ பஜார் வீதி வலது, இடதாகப் பிரியும்.  இடது  பக்கம் தொடர்ந்தால் முன் சொன்ன எண்ணெய்க்கடை ,, வலது பக்கம் திரும்பினால், முத்தாத்தாள் பள்ளி வழியாக நகராட்சி மருத்துவ மனையைக் கடந்து திருப்பத்தூர் ரோடில் போய்ச் சேர்த்து விடும். முத்தாத்தாள்  பள்ளியில் எனது உறவினர் ஆசிரியர் திரு.குருசாமி பணி புரிந்தார்.  இன்னொரு முக்கியமானவர் ஐயா ஆதி மூலம் அவர்கள்.  அந்தப்பள்ளியில் பணி புரிந்து கொண்டே புலவர் பட்டப்படிப்பு முடித்து பின்னர் தே  பிரித்தோ உயர் நிலை பள்ளியில் பணி  புரிந்தார்.  அவர் தெரு விளக்கில் ஜமீந்தார் பள்ளி அருகில் இரவு நேரங்ககளில் நடந்து கொண்டே படிப்பதை பார்த்து இருக்கிறேன்.  நிறைய பெரிய ஆட்களை உருவாக்கிய பள்ளி முத்தாத்தாள் நடு நிலைப்பள்ளி.

நாம் இப்போ இடது பக்கமே திரும்புவோம் .  எண்ணெய்க்கடைக்கு அடுத்து ஒரு லாண்டரி இருந்தது.  திரு. மணி (கீழ க்குடியிருப்பு) அவர்கள் நடத்தி வந்தார். இதன்  எதிரே மளிகை கடைகள் கூட . இந்த லாண்டரிக்கு  அடுத்து ஒரு புதுக்கட்டிடம்.  இதில் ஒரு ரெடிமேடு  ஜவுளிக்கடை நடந்து வந்தது. அடுத்து உள்ள சிறிய இடத்தில் தான் மோகன் ஆர்ட்ஸ் நடந்து வந்தது.  அதை தாண்டி வலது பக்கம் தொடர்ந்தால் நடு  பஜார் ரோடு. சிறிய நகைக்கடைகள் .  இந்த இடத்தில் உஜ்ஜயினி விலாஸ் உணவகம்.  நல்ல தரமான, சுவையான உணவுடன் நடந்து கொண்டு இருந்தது. இதன் இடது பக்கம், ந.நா.நந்தகோபாலன் நகைக்கடை.  மிகப் பாரம்பரியம் ஆன  கடை.

ஆயிற்று.. இப்போ நாம் மீண்டும் மேல பஜார் வீதியில்..

நாளை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60