அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 10
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 10
09-10-2017
இரண்டு நாள் விடுப்பில் சென்றதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். பணிச்சுமை காரணமாக தொடர இயலவில்லை . ஐய்யா வந்துட்டேன் சாமீ ..... மன்னிச்சுடுங்கோ.
சந்தனக்கூட்டில் சென்ற பகுதியில் நின்று இருந்தோம். உலகம் எல்லாம் போற்றிப் பதம் பணியும் ஷிரிடி சாய் பாபா 1912 ஆம் ஆண்டிலேயே ஸ்ரீ ராமநவமியையும் சந்தனக்கூடு உற்சவத்தையும் ஒன்றாக்கி ஒரே நேரத்தில் இந்து மறறும் இசுலாமிய சகோதரர்கள் ஒற்றுமையுடன் கொண்டாடும் படி செய்தார். இன்றளவும் உலகம் முழுவதும் மத நல்லிணக்கம் பெரும் பேதமைகளுக்கு ஆட்பட்டிருக்கின்ற வேளையில் ஷீர்டி சாய் பாபாவின் இந்த ஏற்பாடு இன்றளவும் போற்றப்படுகிறது.
தேவகோட்டையில் நடக்கின்ற சந்தனக்கூடு விழா இயற்கையிலேயே இந்த மத நல்லிணக்கத்தின் நல்ல இலக்கணமாக இன்றளவும் திகழ்கிறது. தேவகோட்டை சந்தனக்கூடு விழா இசுலாமியர்களின் திருவிழா. அந்த தர்ஹாவில் கம்பீரமாக உங்களை வரவேற்பது அன்னம் நிற்கின்ற இரண்டு உயர்ந்த குத்து விளக்குகள். வழிபட வருபவர்களில் அதிகமான எண்ணிக்கையினர் இந்துக்கள். வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது சர்க்கரை, பேரீச்சம் பழம் மற்றும் திருநீறும் வழங்கபடுகிறது. அந்த அளவுக்கு ஊரோடு ஒட்டி உகந்து கொண்டாடும் விழா. அது மட்டுமல்ல .. சந்தனக்கூட்டின் முக்கிய நிகழ்வே நாட்டார், நகரத்தார் அழைப்பு. தேவகோட்டையின் அடையாளம் அவர்கள், அடிப்படை அவர்கள் என்று சொல்லாமல் சொல்லுவதாக, நாட்டார், நகரத்தாருக்கு சந்தனக்கூடு விழாவில் தகுந்த மரியாதை அளிக்கப்படுகிறது. தேவகோட்டையின் பிரதானச் சாலையான வட்டாணம் ரோடு வழியாகத்தான் ஊரின் கடைக்கோடியில் இருக்கும் இடுகாட்டுக்கோ, சுடுகாட்டுக்கோ நகரின் முக்கால் வாசிப்பேரின் இறுதி ஊர்வலம் செல்ல வேண்டும் கடைசியில் சென்றாக வேண்டும். இந்து முறைப்படி தாரை, தப்பட்டை, தாளம் என்று அதிர் வெடிகளுடன் வரும் இறுதி ஊர்வலங்கள், வட்டாணம் ரோடு, பெரிய பள்ளிவாசல் வரும்போது அனைத்து சப்தங்களையும், ஆரவாரத்தினையும் நிறுத்தி அமைதி காத்து நகர்ந்து செல்லும். இது தேவகோட்டையில் ஆண்டாண்டு காலமாய் அமலில் இருக்கும் எழுதாத விதி.. கொண்டாட வேண்டிய எம் ஊரின் கூர் மதி ...
அடுத்து நகரகாவல் நிலையத்தின் பின் புறம் ஒரு ரொட்டி அடுமனை (Biscuit Bakery ) இருந்தது. திண்ணன் செட்டி மேல்கரையில் ஒரு அருமையான தண்ணீர்ப்பந்தல் இருந்தது. வெய்யில் காலத்தில் பலருக்கு இல்லை என்று சொல்லாது எந்த நேரமும் சேவை செய்து கொண்டு இருந்த இடம். அந்த காம்பௌண்டுக்குள்ளேயே கோவிலில் பணி புரியும் சிப்பதிகளுக்கான வீடுகள். இப்படி தி.பிள்ளையார் கோவிலைச் சுற்றி நிறைய குடிகள். குருக்களின் ஆரம்பித்து, வைராவி, காவல்காரர் வரை இன்று அனைத்தும் புட்டியில் அடைத்த தண்ணீருக்கு மாறிவிட்டோம். பாலின் விலையை விட அதிகமாக தண்ணீருக்கு கொடுக்கிறோம். வறட்சி மனதிலா அன்றில் மண்ணிலா என்று தெரியவில்லை
.
இதில் கோவிலின் நாதசுரக்கலைஞர் திரு.சேதுராமன், தவில் வித்வானான அவரது அண்ணன், வைராவி குடும்பத்தினர் வசித்து வந்தனர்.திரு.சேதுராமன் அருமையான நாதசுரக்கலைஞர். இவரது மூத்த மகன் சொக்கலிங்கம் என் சித்தப்பா பவளம் அவர்கள் செட். சென்னையில் கவிதா பதிப்பகம் (Publications ) என்ற நிறுவனத்தை நாற்பது வருடங்களாக நடத்தி வருகிறார்ந. "படிக்க, பரிசளிக்க, பயன்பெற’ என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 40 ஆண்டுகளாக மேலான பதிப்புப் பணியில் நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் பாலமாக அமைந்துள்ளது கவிதா. இதுவரை வெவ்வேறு துறைகளில் 2500க்கும் மேற்பட்ட நூல்களை கவிதா வெளியிட்டுள்ளது. சேது அலமி பிரசுரம், தனலெட்சுமி பதிப்பகம் என்ற கவிதாவின் சகோதர நிறுவனங்கள் இதுவரை சுமார் 500 நூல்களை வெளியிட்டுள்ளன. மிகச் சிறிய தொகையில் அரிய புத்தகங்களை வழங்கும் சிறு நூல் திட்டத்தில் துணை நிறுவனமாகிய சபரீஷ் பாரதி பத்து ரூபாய் விலையில் 245 நூல்களை வெளியிட்டுள்ளது.கவிதா பப்ளிகேஷன் சென்னையின் இதய வாயிலாகத் திகழும் தியாகராய நகர், பாண்டிபஜாரில் வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு விடையாக, குளிர்சாதன வசதியுடன் திகழ்கிறது. இவரை என் சிறிய வயதில் பார்த்தது. இவரின் தம்பி சேகர் என் வயதுத் தோழன்.தகப்பனாரின் கலையை தொடர்ந்து செய்து வருகிறார், மலேசிய கோவில்களில் இவர் தவிலோசை வருடக்கணக்கில் கேட்டு இருக்கிறது.
இதை அடுத்து ஒரு சந்து முளைக்கொட்டு திண்ணைக்கு செல்லும். இதை அடுத்து முன்பு ஒரு தமிழ் மருந்துக்கடை இருந்தது. அடுத்து தர்மர் ரொட்டி அடு மனை என்று ஒரு பேக்கரி இருந்தது . அந்த இடத்தில் கடைசியாக டாக்டர் சிவா என்ற நண்பர் கடைசியாக சேவை செய்து கொண்டு இருந்தார். எத்தனையோ எளிய மக்களுக்கு அவர் தம் குறைந்த கட்டண சேவை உதவியாக இருந்திருக்கும் . அடுத்து வருவது ஒரு ஆஞ்சநேயர் கோவில். அழகான சிறிய இரும்புக்கம்பி ரேழி வைத்த கட்டிடம். அனுமார் சுந்தரம் அய்யங்கார் பூஜை செய்வார். சுத்தமாக அமைதியாக ஆன்மிக களையுடன் இருக்கும்.
இதை அடுத்து ஒரு நாட்டு மரச்செக்கு. இந்தக் காலத்து இளம் தலைமுறையினருக்கு செக்கு என்றால் என்ன என்று படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் தான் உண்டு. அடுத்து ஒரு மளிகைக்கடை. நடத்தி வந்தவர் பாரதி அன்பர், தமிழ் பற்றாளர் திருமிகு.பூவ நாதன் அவர்கள். இந்த மாதிரி உண்மையான மனிதர்களை இனிமேல் காண்பது என்பதே அரிது. தமிழுக்கும், நாட்டுக்கும் தன்னையே தந்தவர்கள். எதையும் எவரிடத்தும் எதிர் பார்க்காது தம் பொருளை ஈந்த இணையற்றவர்கள். இன்றைய அரசியல் வியாதிகள் எல்லாம் எந்த அளவுக்கு சுயநலமிகள் என்று இவர்களோடு வாழ்ந்த எங்களுக்குத்தான் தெரியும். நாங்கள் , எங்கள் யங் லயன்ஸ் கபடிக்குழு வருடா வருடம் நடத்திய சுதந்திர தின மற்றும் குடியரசு தின விழாக்களில் இவரையே தேசியக்கொடியை ஏற்றுமாறு வேண்டி எங்கள் மரியாதையை செய்திருக்கிறோம் என்பதில் கொஞ்சம் நிம்மதி.
இவரின் மகன் பாரதி. நல்ல அருமையான பையன். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. திரு.பூவ நாதன் அவர்கள் தேவகோட்டையில் பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தி பள்ளிகளில் தமிழ் வளர்த்து வந்தனர். அவர் மளிகை கடைக்கு எதிரில் ( திண்ணன் செட்டி ஊரணி வடக்கு வந்து விட்டது) காந்தி பார்க், தேவகோட்டை நகராட்சியினால் அருமையாக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்குள் பின்னர் செல்வோம். அதன் முன் ஒரு நகராட்சியின் குடி நீர் குழாய் இருக்கும் . நகராட்சியினால் இது போன்ற நிறைய குடி நீர் குழாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன . அந்த அந்த இடத்திலேயே மோட்டார் வைத்து தண்ணீர் மேல் நிலைத்தொட்டியில் ஏற்றி வழங்கிய காலம்..
இன்னும் கொஞ்சம் முன்னால் வந்தால் நகர கோட்டையம்மன் கோவில் மற்றும் நகரப்பள்ளி. இந்த இடம் எங்கள் கபடி விளையாட்டுத் திடல், கொடியேற்றும் கொத்தளம், இறகுபந்து விளையாட்டு மைதானம்...
ஆயிற்று .. திண்ணன் செட்டி ஊரணியை வலம் வந்து விட்டோம். பின்னர் அவ்வப்போது நேரம் கிடைத்தால் வந்து போகலாம்.
இன்னைக்கு இத்தோட ஜூட் .....
கருத்துகள்
கருத்துரையிடுக