அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 46
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 45
30-03-2018
அன்பு நண்பர்களே..
சென்ற பதிவு மிகவும் குறைவு என்று அன்பர்கள் உலுக்கி எடுத்து விட்டார்கள். சட்டியில் இருக்கிறது. அகப் பையிலும் இருக்கிறது. அகப்பை தான் அகப்படவே மாட்டேன் என்கிறது. நேரத்தை சொல்கிறேன். இடைவிடாது உங்களுடன் அளவளாவ ஆசை, முயற்சிப்போம்... முடியும்.
வாடியார் வீதியை விட்டு விலகும் முன் அங்கு நினைவில் நிற்கும் மனிதர்களை குறிப்பிட்டு விட வேண்டும் என விழைகிறேன்.
அன்பு மாப்பிள்ளையும், கல்லூரி தோழனும் ஆன நெய்க்கடை (பழனியப்பா நெய் ஸ்டோர்ஸ் ) முருகேசன் பற்றி சென்ற பகுதிகளில் குறிப்பிட்டு இருந்தேன். நல்ல அறிவாளி, திறமைசாலி, கொஞ்சம் சுழி. இராமநாதபுரத்தில் புகுமுக வகுப்பு முடித்து விட்டு இளங்கலை வணிகவியல் வகுப்பில் வந்து சேர்ந்தார். காலையில் முதல் வேலையாக வாடியார் வீதியில் இருந்து வெள்ளையன் ஊரணி பிள்ளையார் கோவில் சென்று வணங்கி வரும் வழியெல்லாம் கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்து விபூதி நெற்றியில் மணக்க மணக்க வீடு வந்து சேருவார். எங்களுக்கு கல்லூரியில் மூன்று வருடமும் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பு மதியம் முடிந்து விடும், வகுப்பறை போதாத காலம், எங்களது நல்ல காலம்.
60 மாணவர்கள், எல்லாம் தெள்ளு மணி. படிப்பதில் , மதிப்பெண் எடுப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி,ஆனால் பொறாமை அற்ற கூட்டம். இதில் மாப்பிள்ளை முருகேசன், நான், பழனிச்சாமி (ICICI BANK ),நாகராஜன் (மலேஷியா) நால்வரும் ஒரு செட். பழனிசாமிக்கு அழகாபுரி தெற்கு தெருவில் வீடு, நாகராஜனுக்கு அழகாபுரி வடக்குத் தெருவில் வீடு. எனக்கு வட்டாணம் ரோடில் பெரிய பள்ளிவாசலுக்கு அடுத்து... முருகேசன் வாடியார் வீதியில் இருந்து.... இந்த 4 பேரும் கூடுவதற்கு என்றே நண்பன் பழனிச்சாமி வீட்டில் தனியாக ஒரு வீடே கொடுத்து விட்டார்கள். இரவு முழுக்க படிப்போம். அப்புறம் ஒன்றாய் படுத்து கொண்டு கதைகள் அளப்போம். இந்த பந்தம் இன்று வரை தொடர்கிறது.. மாப்பிள்ளை முருகேசன் தான் இந்த உலகே வேண்டாம் என்று மறைந்து விட்டான்.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் அறிஞர்.அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மாநிலம் தழுவிய கட்டுரை போட்டி நடைபெறும். அப்போது புரட்சித்தலைவர், மக்கள் திலகம் முதல்வராக இருந்தார். 1977 ஆம் வருடம் என நினைக்கிறேன், எம் மாப்பிள்ளை மாநில அளவில் முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட கட்டுரையை எழுதி அன்றைய முதல்வர் கைகளினால் சென்னை கோட்டையில் பரிசு பெற்றார்.
தன் தாயை இளம் வயதிலேயே இழந்து விட்டார். கோவையில் இவரது தகப்பனார் மறுமணம் செய்து கொண்டு விட்டார். பள்ளிப் படிப்பிலும் கெட்டியான சுட்டி முருகேசன் மருத்துவம் படிக்க வேண்டியவர்,அதற்கான புத்திசாலித் தனமும் அவருக்கு உண்டு. ஆயின் சிற்றன்னை பிடிக்காமல் தவித்த இவரை இவரது தாய் மாமன்கள் அங்கிருந்து கொண்டு வந்து விட்டார்கள். மூத்த மாமா தான் தேவகோட்டை பழனியப்பா நெய் ஸ்டோர்ஸ், இளைய தாய் மாமா இராமநாதபுரத்தில் அரண்மனை வாசலில் நெய்க்கடை வைத்து இருந்தார். நெய், வெண்ணெய், தயிர் விற்பது இவர்களது குடும்ப தொழில். புகுமுக வகுப்பை இராமநாதபுரம் கல்லூரியில் முடிந்தவரை, இளங்கலை படிப்பதற்காக மூத்த மாமா தேவகோட்டைக்கு அழைத்து வந்து விட்டார். ஒரே தங்கையின் மகன் என்பதாலும், தாயை இழந்தவர் என்பதாலும் மாமாக்களுக்கு இவர் மீது வாஞ்சை அதிகம்.
சிறு வயதில் இருந்தே மாப்பிள்ளை முருகேசன் ஒரு வித மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்று எனக்கு இதனை வயது ஆன பிறகு தோன்றுகிறது.
'நேற்றுப் போல் இன்று இல்லை ......
இன்று போல் நாளை இல்லை ....'
அதனால் மற்றவர் கவனத்தை ஈர்ப்பதற்கான எதையும் செய்வார். இது மற்றவர் கண்களுக்கு ஒரு வித்தியாசமாகத் தெரியும். திரைப்படம் பார்த்து கொண்டு இருப்போம். நல்ல முக்கியமான காட்சி வரும்போது , அரங்கமே நிசப்தத்தில் உறைந்து இருக்கும் பொது, உரத்த குரலில், 'மஹாத்மா காந்திக்கு .......ஜே ' என்று ஒரு குரல் எழுப்புவார். அரங்கமே குரல் வந்த திசை நோக்கி திரும்பிப் பார்க்கும். சிலருக்கு கடுப்பாய் இருக்கும். பின்னர் ஓரிரு நொடிகளில் அவர்களும் இலேசான முறுவலுடன் அந்த நேரத்தை ரசித்து விடுவார்கள்.
எல்லா விதமான விரதங்களும், நோன்புகளும் மேற்கொள்வார்... இரவு குழுவாக ஒன்றாக படிக்க ஆரம்பிப்போம், தேர்வு நெருங்கும் நாட்களில்.... நம்ம மாப்பிள்ளை, நோன்பில் இருப்ப்பார்... ஆனால் எப்போது மணி இரவு 12 ஆகும் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருப்பார் . மணி 11:40 ஆனால் போதும்.. வாங்க மாப்பிள்ளை என்று புத்தகங்களை கடாசி விட்டு அனைவரையும் தேவகோட்டை பேருந்து நிலையம் எதிர் வரிசையில் இருக்கும் 'கருப்பையா புரோட்டா ஸ்டால்' அழைத்து வந்து விடுவார்.
கருப்பையா கடையில் முதல் ஆர்டர் , HALF -BOILED EGG தான். அந்த கருப்பையா கடையின் நிரந்தர வாடிக்கையாளர் மாப்பிள்ளை முருகேசன். நாங்கள் இலவச இணைப்பு அவருடன். உண்மையில் இந்த கருப்பையா பரோட்டா கடையில் சாப்பிட்ட மாதிரி 'சால்னா' வேறு எங்கும் இது வரை சாப்பிட்டத்தில்லை. கடைசியாக 2 வருடங்களுக்கு முன் தேவகோட்டை சென்று இருந்த போது கருப்பையா கடையில் முன்பு உதவியாளராக இருந்த அவரது உறவினர் திரு.ராஜு அதே இடத்தில் கடை நடத்தி வந்ததைக் கண்டு மலரும் நினைவுகளுடன், அங்கு சென்று பரோட்டா வாங்கிக் கொண்டு திரு.கருப்பையா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவர் உயிருடன் இல்லை என்று அறிந்து வேதனை அடைந்தேன். ( இந்த பகுதி பற்றி .. கடைகள் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம், இப்போது மாப்பிள்ளை முருகேசன் ).
சொந்த அத்தை மகன், மாமன் மகன் என்றால் கூட அந்த அளவுக்கு அன்னியோன்னியம் இருந்து இருக்குமா என்பது சந்தேகம்தான். முருகேசனின், தாய் வழிப்பாட்டி, ‘அவ்வா’ என்று நாங்களும் அழைப்போம். சமயங்களில், வீட்டில் பெரியவர்கள், முருகேசன் உட்பட ஆண்கள் அவசர வேலயாக வெளியூர் செல்ல நேர்கையில், வயதுக்கு வந்த பெண்கள் இருக்கின்ற அந்த வீட்டில், என்னை துணைக்குத் தங்க வைத்துப் போய் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை எனும் தும்பிக்கையைத் தோளில் போட்டு அழகு பார்த்த அன்பு மாப்பிள்ளை என் முருகேசன். தமிழ் தாய் மொழியாக இல்லாவிட்டாலும், ஆழ்ந்த தமிழ்ப்பற்று கொண்டவர்கள் முருகேசன் குடும்பம். பண்டிகைக் காலங்களில், வெண்ணெய், நெய் கையிருப்பு குறைந்து அடுத்து சரக்கு வர தாமதம் ஆகும் நேரங்களில், நான், இராமநாதபுரத்தில் இருக்கும் மாப்பிள்ளையின் சின்ன மாமா கடையில் இருந்து நெய், வெண்ணெய் வாங்கி வந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் வேதியியல் வினை ... அட அதாங்க..... CHEMISTRY....
பந்தா எனும் வார்த்தைக்கு இலக்கணம் நம்ம மாப்பிள்ளை தான். யாரையாவது பார்த்தால், ' என்ன கன்று... நலமா?' என்பார்.. எதிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் அவருக்கு. பின்னர் கல்லூரியில் பேரவை செயலருக்கு தேர்தலில் நின்று செய்த அலப்பறைகள் அளப்பரியன. அது பற்றி கல்லூரி கலாட்டா பகுதியில் தனியாய் பார்ப்போம்.. சுவை குன்றாது இருக்க வேண்டி ... நாங்கள் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் போது கல்லூரித் தேர்தல் களம் கண்டோம்...மாப்பிள்ளை முருகேசன் தான் கதா நாயகன்.. எங்களை நாங்களே ROYAL B.Com., என்று அழைத்துக் கொள்வோம்.. இன்று வரை அந்த ஒற்றுமை, சகோதரத்துவம் எங்களிடையே நிலவி வருகிறது. இன்று தொலை தொடர்பு வசதிகள் உலகின் எல்லைகளை உள்ளங்கையில் அடக்கி விட்ட பிறகு, அடிக்கடி அன்புடன் தினமும் பேசிக் கொள்கிறோம்.
தேர்தல் என்றால் தகராறு இல்லாமலா? அப்புறம் ஒரு கலாட்டா வந்தது .. அதில் மாப்பிள்ளை முருகேசன் பலி கடா ஆக்கப்பட்டு கல்லூரியை விட்டே ஒழுங்கு நடவடிக்கை என்ற போர்வையில் விலக்கப்பட்டு விட்டார். கல்லூரி களேபரங்கள், கலாட்டாக்கள் தனிப்பகுதியாக அடுத்து வரும் என்பதால், அது பற்றி அதிகம் இப்பகுதியில் எழுதவில்லை. பாவம்… படிக்க வைப்பது தாய்மாமா… இதில் இப்படி எல்லாம் இடைஞ்சல்கள் வேறு… அவரது மாமா அதற்கெல்லாம் சளைக்கவில்லையே…. தங்கை மகன் என்ற தயாள குணம். பின்னர் தன் மகளையே திருமணம் செய்து வைத்தார்.
மாற்றுச் சான்றிதழ் இரண்டாம் ஆண்டுடன் வாங்கி கல்லூரியை விட்டு சென்று, மேலூரில் (மதுரை..மேலூர்) மூன்றாம் ஆண்டு படிப்பை முடித்து, வெகு விரைவில் BSRB தேர்வு எழுதி வெற்றி பெற்று, சிண்டிகேட் வங்கியின் திருத்தணி கிளையில் பணியில் அமர்ந்தார் மாப்பிள்ளை. இதற்கிடையில், மாமன் மகளுக்கும் இவருக்கும் திருமணம், இராம நாதபுரத்தில். அன்பன் பழனிச்சாமி வர இயலாததால், நானும், பழனிச்சாமியின் அம்மாவும் இராம நாதபுரம் சென்று திருமண விழாவில் கலந்து தம்பதியினரை ஆசிர்வதித்து வந்தது நேற்றுப் போல் நினைவில் உள்ளது.
பழனிச்சாமி, பாங்க் ஆப் மதுரை (தற்போதைய ICICI வங்கியில் பணியில் அமர்ந்தார், இன்னொரு நண்பரும் உடன் பிறவா சகோதரருமான நாகராசன் சிங்கப்பூரில் கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். நான் அப்போது பாண்டியன் போக்கு வரத்துக்கழகம் என்ற பெயரில் இயங்கிக் கொண்டு இருந்த அரசு போக்கு வரத்து கழகத்தின் காரைக்குடி பகுதி (DIVISION) ,இல் நிர்வாகப் பிரிவான மத்திய கொள்முதல் பிரிவில் அமர்ந்தேன். பின்னர், இந்த காரைக்குடி பகுதி மருது பாண்டியர் போக்கு வரத்து கழகம் என்ற தனி நிறுவனமாகப் பிரிந்து, காரைக்குடி மானகிரி அருகில் தனி இடம் வாங்கப் பெற்று அந்த இடத்துக்கு மருது பதி என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது. இடங்கள் மாறினாலும் எங்கள் சொந்தம் இடைவெளி இன்றித் தொடர்ந்தது.
மாப்பிள்ளை முருகேசன் காரைக்குடி சிண்டிகேட் வங்கிக்கு மாற்றல் வாங்கி வந்தார்,,, அவர் வாழ்கையில் வசந்தம் என்ற பெயரில், சூறாவளி அடித்து அவரை கடலில் மூழ்கடித்து விட்டுச் சென்று விட்டது…. காலம்.
ஆம், எவரையும் எளிதில் வசீகரிக்கும் மாப்பிள்ளை
அங்கு பணிக்கு வந்த ஒரு
வசீகரியின் வசம் வயப்பட்டார்,,
நாங்கள் பயப்பட்டோம்,,,
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
எதுவும் எடுபடவில்லை
அவருக்கு பிடிபடவில்லை..
இதற்கிடையில் அன்பு நண்பர் நாகராசன் மூலமாக நான் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் பணி கிடைத்து இங்கு வந்து விட்டேன். FDS என்ற பெயரில் அமெரிக்க டாலர் மாற்றி செல்ல வேண்டும், சென்னைக்கு வந்த என் கையில் அமெரிக்க டாலர் வாங்க போதிய பணம் கையில் இல்லை. உடனே என் வீட்டில் பணம் ஏற்பாடு செய்தாலும் எனக்கு அனுப்பி வைக்க வேண்டுமே… மாப்பிள்ளை முருகேசன் பணத்துடன் சென்னை வரை வந்து என்னுடன் தங்கி இருந்து பணம் டாலராக மாற்றி என்னை அனுப்பி ஊர் திரும்பினார். வாழ்வின் ஒரு அங்கமாக, முக நக என்று இல்லாமல், அக நக அன்பால் இணைந்து இருந்தவர் முருகேசன்.
அதன்பின் மனைவியைப் புறந்தள்ளி, இந்தப் பெண்ணை மணந்து இருவரும் வங்கியில் பணி புரிந்து இருக்கின்றனர். தற்போது போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால், தொலைந்து போனோம். கடிதங்கள் மாதம் ஒன்றாகின….பின் இடைவெளிகளில் இல்லாமலேயே போயின. கடைசியில் எனக்கு இரண்டாவது மகன் மிகுந்த மருத்துவ சோதனைக்காலமுடன் சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பிறந்தான். அதற்காக மயிலாப்பூரில் வீடு எடுத்து என் குடும்பம் தங்கி இருந்தது. மகப்பேறு சமயம் நான் இந்தியா சென்று இருந்தேன். அந்த நேரம், வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து என்னை பார்க்க ஓடோடி வந்த மாப்பிள்ளை வெகு நேரம் மயிலாப்பூரில் இருந்த என் வீட்டில் பேசி விட்டு சென்றார். பின்னர் 4 வருடங்கள் கழித்து 1999 ல் அன்பன் பழனிச்சாமியிடம் முருகேசன் முகவரி வேண்டுமே,, அவனைப் பார்க்க வேண்டுமே என்று கேட்டபோது…. மாப்பிள்ளை காலமாகி ஓராண்டு ஆகி விட்டது…. முத்துமணி … என்ற வார்த்தைகளை காதுகள் கேட்டபோது,,,,,மாய உலகில் மனிதனின் நிலையாமை எவ்வளவு உண்மையானது என்று அறிந்தும்,, மனம் ஏற்க மறுத்தது…. இன்றும் …. இப்போதும்…
மாப்பிள்ளை….. உன்னைப் பற்றி நான் எழுதுவதைப் படித்து அது பற்றிக் கருத்துச் சொல்ல நீ இல்லையே என மனம் ஏங்குகிறதே…..
எங்கு இருக்கிறாய் அன்பா….
எப்படியும் இந்த வரிகளைப் வாசிப்பாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்….
ஈர விழிகளுடன்….
பார நினைவுகளுடன்….
என்றென்றும் தேவகோட்டை நகர் கலா ரசிகர்களையும், அவர்களின் ஞானத்துக்கு ஏற்ற தீனி தரும் கலைஞர்களயும் பிரசவித்துக் கொண்டே தான் இருக்கும். தேவகோட்டை மண்ணின் குணம் அது…
இதில் சினிமா கனவுகளோடு சென்னை சென்று வெற்றிப் படிக்கட்டுகளை கடந்தவர்கள் சிலர். விளிம்பு வரை சென்று இன்னும் விடா முயற்சியோடு வீறு நடை போடுவோர் பலர்.
மொட்டுகள் அனைத்தும் மலராவதில்லை..
மலர்கள் அனைத்தும் காயாவதில்லை…
காய்கள் அனைத்தும் கனியாவதும் இல்லை..
கனிகள் யாவும் வித்தாவது இல்லை..
வித்துகள் எல்லாம் விருட்சமாவதும் இல்லை…
ஆனாலும்,,,
மொட்டுகள் அரும்பிக் கொண்டே இருக்கின்றன..
அரும்புகள் பூத்துக் கொண்டே இருக்கின்றன…
பூக்கள் காய்க்கின்றன…. கனிகின்றன…..
விதைகள் முளைத்து கொண்டே இருக்கின்றன…
இது
இயற்கையின் சுழற்சி
இடைவிடாத முயற்சி…
அது போலத்தான்.,,, எங்கள் தேவி நகர் மக்களின் கலைத்தாகம்… வெற்றி பெறுவது மட்டுமே விடியல் அன்று….
முயற்சி….முயற்சி….முயற்சி…அதற்கேற்ற பயிற்சி….
இந்த வாடியார் வீதியின் நம்பிக்கை நட்சத்திரம் முத்துப்பழனியப்பனும், மேலே கண்ட என் மாப்பிள்ளை முருகேசனின் மைத்துனன் பழனியப்பனும் (பழனியப்பா நெய் ஸ்டோர்ஸ்) நண்பர்கள். கலைத்தாகம் தீர்க்க சென்னை வந்து படப்பிடிப்பு நிறுவனங்களின் படிகளை எண்ணி எண்ணி பாதம் தேய்ந்தவர்கள்.
இதில் பழனியப்பன் தன் பெயரை ஷ்யாம் என்று மாற்றிக் கொண்டு பார்த்தார்… நேரம் சரி இல்லை…அந்தக் கால கட்டத்தில் தேவகோட்டையின் ஒரு பெரிய கூட்டமே பாங்க் ஆப் மதுரை சென்னைக் கிளைகளில் பணி புரிந்தது. தேவி தியேட்டரின் பின் புறம் கணபதி மேன்சன்…இந்த முழுக் கூட்டமும் ஒரு குடும்பமாய் வாழ்ந்த கோவில்.. கோவில் என்றால் வருபவர், போவோர்க்கு எல்லாம் பிரசாதம் இல்லாமலா? இந்த குழுவில் எவருக்காவது எப்படியோ சொந்தமான எவராவது ஒருவர் தேவகோட்டையில் இருந்து தினசரி வந்து கொண்டே இருப்பார் … அல்லது இங்கு தற்காலிக தங்கலில் இருப்பார். இப்படி தங்கி இருந்தவர்கள் நமது வாடியார் வீதி வாலிபர்களும்….ஒரு காலத்தில். இதில் பழனியப்பன் திரும்ப தேவகோட்டை வந்து சம்சார சாகரத்தில் மூழ்கி, தனது முன்னோரின் குலத்தொழிலான நெய் வியாபாரம் செய்து வருகிறார்.
அன்பர் முத்துப்பழனியப்பன், துணை இயக்குனராக, கதை வசன கர்த்தாவாக தொடர்கிறார். இவரது துணைவியார் மருத்துவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்.. அன்பர் முத்துப்பழனியப்பன் பன்முக கலைகள் கைவரப் பெற்றவர்.. விரைவில் அவர் நம்பி இருக்கும் திரைத்துறையில் சாதனை புரிய வாய்ப்புக்கள் கைவர வேண்டும் என எல்லாம் வல்ல இறையை வேண்டி, இன்றைய பகுதியினை முடிப்போம்..
இன்னும் திருப்பத்தூர் சாலையில்ல்ல்ல்ல்ல்ல்……….
கருத்துகள்
கருத்துரையிடுக