அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி-3

அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் 
29-09-2017

பகுதி-3

மாட்டு சந்தைக்கு போகிற வழியில் நேற்று நின்றோம்.   இதற்கிடையில் அந்த பகுதியை இன்னும் சற்று விரிவாக பார்ப்போம்.  ஒத்தக்கடையில் பேருந்து நிறுத்தத்தில் தலையுடன் ஆரம்பிக்கிற காந்தி ரோடு, தேவகோட்டையின் நீளமான சாலை ஆகும்.  கிழக்கிலிருந்து மேற்காக, தொண்டியார் வீதி , சிவரக்கோட்டையார் தெரு, முத்து .கரு. வீதி , ஆலம்பட்டார் வீதி என்று ஊரின் கடைசிக்  கட்டை விரலில் போய் முடியும்.  இந்த காந்தி ரோட்டின் முதல் இனம் வண்டி வைக்கோல் பேட்டை . அடுத்தது பசுமடம், அடுத்து 6 ஆம்  வார்டு நகராட்சி பள்ளி.  அனைத்து  வசதிகளும் நிறைந்த அருமையான பள்ளி.  நல்ல விளையாட்டு மைதானம், (Parellel  Bar)  எனும் உடற்பயிற்சி கருவி, அருமையான உயரமுள்ள ஊஞ்சல்.  நெசவு (Weaving ) உட்பட அனைத்து வசதிகளும் நிறைந்த நகராட்சியின் அருமையான பள்ளி. இதற்கு பின்புறம், ஒரு தோட்டம்.  அது கோட்டை அம்மன் கோவிலுக்கு பின்புறமும் வரும்.  கொச்சி அம்மாள் என்ற கேரளத்தை  சேர்ந்த அம்மையாருக்கு சொந்தமானது.   

இப்போது எங்கள் குடும்பம் (நான் மிக சிறுவன்,  if Iam not wrong must be 1965) இந்த கொச்சி அம்மா வீட்டிற்கு/ தோட்டத்திற்கு குடி வந்து விட்டோம். இந்த கொச்சி அம்மா வீட்டுக்கு முன்புறம் தான் சிவகங்கை மாவட்டத்திலும் சுற்று வட்டாரத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த தேவகோட்டை மாட்டு சந்தை. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூடும்.  இந்த மாட்டு சந்தையை நம்பி மிகப் பெரிய அளவில் இங்கு வணிகம் நடக்கும்.  சனிக்கிழமை மாலை முதலே சுற்று வட்டாரத்தில் இருந்து மாட்டு வணிகர்கள், விவசாய குடி மக்கள் ஒத்தக்கடை வந்து குவிந்து விடுவர்.  இந்த  மாடுகள் களைப்பு ஆறவும், இளைப்பு ஆறவும் இந்த பெரிய வைக்கோல் வண்டிப்பேட்டை தான் இடம்.  வைக்கோல் வியாபாரமும் உண்டு.  ஒத்தக்கடை நாராயண் தண்டான் உணவகத்தில் சாப்பாடு மேஜைகள்  நிரம்பி வழியும். 

இதே போல் கொச்சி அம்மாவின் உணவகமும் ஞாயிறு அன்று வட்டார பெருமக்களால் அல்லோல கல்லோலப் படும்.  இந்த சந்தைப்பேட்டைக்கு உள்ளே  செல்வதற்கு நுழைவுக்கட்டணம் உண்டு. இது நகராட்சியின் வருவாய். உள்ளே தி.கயிலாய விநாயகர் கோவிலின் காவற்காரர் நன்னாரி சர்பத் கடை வைத்து இருப்பார் . வழக்கம் போல மற்ற பலகாரங்ககளும், பல, காரங்களும் ஒத்தக்கடையில்....



இந்த கொச்சி அம்மாவை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.  இவர் டாக்டர் பழனிச்சாமி அவர்களின் மாமியார் ஆவார் .  இவரது மகள்  ஜெயமணி அம்மையாரைத்தான் டாக்டர் பழனிச்சாமி அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தார். எனக்கு தெரிந்து திருமதி.பழனிச்சாமி மிகவும் அழகான யுவதி.  என் அம்மா,  (ஆத்தா  என்றே அழைத்து விடுகிறேனே?  எப்பவும் அழைப்பது போல...) அவர்கள்  இல்லத்தில் விட்டு வேலை எப்போவாவது உதவி தேவை என்றால் செய்வார்கள்.  அப்போது நானும் கூட இருந்த ஞாபகம் இருக்கிறது.  ஏனென்றால் ஜெயமணி அம்மா கை  நிறைய  சாக்லெட்கள் அள்ளித் தருவார்.  அவர் கை  நிறையத்தான், என் கை நிறைய  அல்ல.  இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள். மூத்த  பெண் செல்வி என் வயது ஒத்தவர். ஒரு இரட்டை பெண் குழந்தைகள் உண்டு, அல்லி, அரசி என்று பெயர்.  மற்றவர்கள் நிழலாய் ஞாபகம் இருக்கிறார்கள்.  பெயர்கள் மறந்து விட்டன.



டாக்டர் பழனிச்சாமி கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் மருமகன் ( இரத்த சொந்தம்) ஆவார் .  திருமதி.கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் வீட்டுக்கு  வரும்போது நானும் அவர்களோடு இருந்த ஞாபகம் இருக்கிறது.  

தேவகோட்டையில் அரசினர் மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று வேறு ஊருக்கு மாற்றலாகி பொய் விடுவார்கள்.  கைராசி மருத்துவர் எனப்பெயர் எடுத்தவர்கள் தேவகோட்டையிலேயே தங்கி  தனியாக தொழில் புரிவார்கள். பழனிச்சாமி டாக்டர் மிகவும் கைராசியானவர். எத்தனையோ உயிர்களை காப்பாற்றியவர் .  என்ன கொஞ்சம் கேட்ட பழக்கம் உண்டு.   

தேவகோட்டை அரசு மருத்துவர்களாக அப்போது இருந்தவர்களை எண்ணிப்பார்க்கிறேன் .  மருத்துவமனைக்கு அருகிலேயே இருந்ததனால் கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.

டாக்டர்.ரவீந்திரன் .. ( இவர் கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமியோடு இணக்கமாக இருந்தார் என்பது அந்தக்காலத்து கிசு கிசு)

டாக்டர்.தங்கவேலு .. பிற்காலத்தில் மேலே படித்து மூக்கு, தொண்டை, காது மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரானார். இவரது அன்னான் மகன் ராஜமுத்து இரத்தினம் எங்கள் செட். ஆனால் நான் தே  பிரித்தோ உயர் நிலைப்பள்ளி, இராஜமுத்து இரத்தினம் நகரத்தார் உயர் நிலைப்பள்ளி.  நான் மக்கள் திலகம் இரசிகன். அவர் நடிகர் நிலம் வெறியன்.  இந்த இராஜ முத்து இரத்தினம் அவர்களின் உடன் பிறந்த தம்பி தான் இன்றைய பிரபல திரைப்பட இயக்குனர் பாலா.  இராஜமுத்து இரத்தினம், குருக்கள் இராஜாமணி, நாகராஜன் செட்டியார் மகன் புருஷோத்தமன் எல்லாம் ஒரு செட்.

டாக்டர் ம.சுப்பிரமணியன் : முதலில் இங்கு பணியில் இருந்தார். பின்னர் தனியாக செட்டில் ஆனார் 

டாக்டர்.இராமச்சந்திரன் ... இவர் காலத்தில் அரசு மருத்துவமனை இன்றைய இடத்துக்கு பெரிய புதிய கட்டிடத்துடன் மாறி விட்டது என்று நினைக்கிறேன்..
அதே போல டாக்டர் பழனிச்சாமி அவர்களுக்கு உதவியாளராக இருந்த இராமநாதனை யாரும் மறக்க முடியாது.  பிற்காலங்களில் இவரே வைத்தியமும் எளியவர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பார்த்தார்.  மதுரை வங்கி (BANK OF  MADURA ) வின் தினசேமி என்ற தினசரி சீட்டு வசூல் செய்யும் பணியும் செய்து வந்தார்.  இவரது குடுமபம் இவரது தகப்பனார் காலத்தில் இருந்தே எங்கள் குடும்பத்துக்கு தெரியும்.  இவரது அண்ணன் சுப்பிரமணியன் தி.பிள்ளையார் கோவில் மடப்பள்ளியை கவனித்து வந்தவர்.  இவரது மகன் தான் இன்றைக்கு நடிகராய் இருக்கும் வித்யார்த்(மைனா). இப்போது 'குரங்கு பொம்மை'.

என் தந்தையார் நகரத்தார் வீட்டு வேலைகளை  செய்யது வந்ததனால் தி.பிள்ளையார் கோவில் வேலைகளையும் செய்வார். ஏற்கனவே விசுவநாதக்குருக்கள் குடும்பம் எங்கள் பூர்விக பகுதியை சேர்ந்தது என்று பதிவு செய்து உள்ளேன்.  தி.பிள்ளையார் கோவில் மேளகாரர், காவல் காரர், ஓதுவார்,வைராவி அத்தியானார் என்று எல்லாம் ஒரு குடும்பம் போல வாழ்ந்து வந்த அந்த காலமும், நெருக்கமும், வாழ்கை சுற்றி சுற்றி திண்ணன் செட்டி கோவிலையே ஓட்டி வளர்ந்ததையும் காற்றுள்ள வரை மறக்கமுடியாது .   (இந்த தொடரை படித்து விட்டு எனக்கு தி.பிள்ளையார் கோவில் குருக்கள் குடும்பத்து வாரிசும், என் வயது தோழனும் ஆன இராஜாமணி சற்று முன் தொலை பேசியில் மதுரையில் இருந்து பேசினார். கண்ணீர் மல்க இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.அன்பர் ராஜாமணி தற்போது அமெரிக்காவில் தன்  மகனுடன் இருக்கிறார்.  அவரது மகன் அங்கு கோவில் குருக்களாக பணி  புரிகிறார். )



இதுவரை  காந்தி ரோடின் முகப்பில் தான் நிற்கிறோம்.  இன்னும் திண்ணன் செட்டி ஊருண்ணி கரைக்கே  செல்லவில்லை. (ஆமாம். ஊர் உண்ணுவதால் இதன் பெயர் ஊர்+உண்ணி = ஊருண்ணி ,,, பின்னர் ஊருணி ஆகி விட்டது. சம்பந்தமே இல்லாமல் ஊரணி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்,   ஊர் அணி செய்கிறது என்று சமாளித்து கொள்ளலாம்)   கொஞ்சம் .. மெதுவாகவே நடப்போம் அன்பர்களே....  பணிக்கு இடையில் இதை விட வேகமாக செல்ல இயலவில்லை. 

பயணம் தொடரட்டும் .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60