அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 53


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
 01-05-2018
பகுதி53
அன்பு நண்பர்களே,

சென்ற பகுதியில் ஆண்டவர் டிராவல்ஸ் அலுவலகம் முன்னர் நிறுத்தி வைத்து விட்டுச் சென்று விட்டேன்.  நகரின் சந்தடி மிகுந்த பகுதி.  பேருந்து நிலையம் எதிர் புறம்.  தேவகோட்டையை சுற்றிலும் கிழக்கும் மேற்கும் உள்ள அனைத்து கிராமநகர்ப்புறங்களுக்கு இட்டு செல்லும் பேருந்துகளை  வரிசையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருங்கள்.  நமது பகுதியின் மண் மணம்  வீசும் மக்கள்வறுமையிலும் பொறுமை காக்கும் திறமை மனிதர்கள்கடகாப்பெட்டிதயிர்ப்பானைபனங்கிழங்குகீரைக்கட்டுகத்தரி,வெண்டை என்று எல்லாவற்றையும்  கண்ட பிரதேசம் இது.

ஆண்டவர் டிராவல்ஸ் நடத்தி வரும் ஜனாப்.மீரா  ஹுசைன் எம்முடன் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை பயின்ற அன்பு நண்பர்.  அவரோடு அவரின் மைத்துனர் முறை உறவினர் ஜனாப் மீரா புஹாரியும், (இளையான் குடி) எங்களோடு இணைந்து பயின்றார்.  அந்த வகையில் அவரது இல்லம் இருக்கும் முகமதியர் பட்டணம் எங்களுக்கு மிகவும் பரிச்சயமான பகுதி.  

இப்போது எல்லாம் budget விமானப் பயணம்.  சில நேரங்களில் இரயில் பயணத்தை விடவும் குறைவான கட்டணத்தில் கிடைக்கிறது.  AIR ASIA வின் ஸ்லோகன்Now Everyone Can Fly” குறிப்பிடுவதை போல ஒவ்வொருவரும் பறக்கலாம்.  ஆனால் ஒரு 40 அல்லது 50 வருடங்களுக்கு முன் வெளி நாட்டு விமானப் பயணம் என்பது கீழ் தட்டுநடுத்தர மக்களுக்கு கைக்கு எட்டாத ஆகாயமாகவே இருந்தது. ஆனால் நம்ம பகுதி நகரத்தார்களும்மற்ற பெருங்குடிகளும் தான்  திரை கடல் ஓடித்  திரவியம் தேடும் தென் பாண்டித் தமிழர் ஆயிற்றே !  நாவாயில் ஏறியே நானிலம் சுற்றி வந்தவர்கள்.  அப்போது SS ரஜூலா மற்றும் MVசிதம்பரம் என்று இரண்டு கப்பல்கள் தமிழகத்தையும்மலேசியா சிங்கபூரையும் நீர் வழி  இணைத்தன.



இந்த கப்பல்களுக்கும்,  விமான சேவைக்கும் முகவராக வெகு காலம் முன்பே இருந்தவர்கள் அன்பர் மீரா ஹுசைனின் தந்தை மற்றும் பாட்டனார்.  அது எப்படி அவர்கள் இந்த சேவைத்துறையில் கால் பதித்தார்கள்?  எனக்கு சிறு வயதில் இருந்தே பழையன பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டுமீரா ஹுசைனின் தந்தையரிடம் அமர்ந்து கதை நிறையக் கேட்டு இருக்கிறேன்.  ஏனெனில் உண்மைக்கு கதைகள் சரித்திரம் இல்லையா?



உண்மையில் நாம் அசோகர்மௌரியர்மொகலாயர் என்று  வடநாட்டில் வாழ்ந்தவர்களின் சரித்திரம் என்று எவரோ எழுதி பாடத்திட்டத்தில் வைத்ததை கொஞ்சம் கூட மனதில் ஒட்டாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து சரித்திரம் என்றாலே தரித்திரம் என்ற நிலைக்கு நம்மை ஆக்கி விட்டார்கள்இடையிடையேதென்னகத்தின் வரலாறு சும்மா ஒரு ஒப்புக்கு சப்பாணியாக.. நம்மவரின் வரலாறு தனியாகத் தேடித் தேடி தான் படிக்க வேண்டி இருக்கிறது.. என்னடா இது... ஆண்டவர் டிராவல்ஸ் வந்துட்டு அதை ற்றிப் பேசாமல் சரித்திரம்பூகோளம் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தாண்டிக் குதிக்கிறேனே என்று மனதிற்குள் மத்தளம் கொட்டுகிறீர்களா?   சம்பந்தம் இருக்கிறது... கொஞ்சம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.   அப்படியே TIME MACHINE ல் நாம் அனைவரும் பயணித்து சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணிப்போம்.  என்ன தயாரா?  நாம் தமிழர் சீமான் பாணியில் சொல்வதானால்நம்ம பாட்டன்முப்பாட்டன்பூட்டன் அவனுக்கும் முற்பட்டோன்அவர் சென்ற வழி நாமும் சென்று வருவோமே?  கொஞ்சம் என்னோடு வாருங்கள்,,,,
நான் தற்போது வசித்து வரும் ஜாவா இந்தோனேசிய நாட்டின் தலை நகர் ஜகார்த்தா  அமைந்துள்ள பெரிய தீவு.  மொத்தத்தில் 18,307 சிறிய மற்றும் பெரிய தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம்.  அவற்றில் கீழே சொல்லப்படும் 5 பெரிய தீவுகள் தான்  நாட்டின் பெரும்பான்மை பூமி.


சுமத்ரா -  முன்பு இதன் பெயர் ஸ்வர்ண தீபம்
ஜாவா    - இதனை நாம் நூற்றாண்டுகளுக்கு முன் அழைத்தது ஜாவா தீபம் அல்லது சாவகம்
கலிமந்தான் -  இதனை  போர்னியோ என்று அழைப்பார்கள்.  தற்போது இதன் மேற்குப் பகுதி கிழக்கு மலேசியாயாகவும் புருணையாகவும் இருக்கிறது. மீதிப்பகுதி   இந்தோனேசியாவுக்கு சொந்தம் ஆனது .
சுலாவெசி    -   செலிபஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட பகுதி

பாரதி பாடிய பாடல் ...:

சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
  
கவியரசர் முடியரசன் இவ்வாறு  பாடுவார் :

வாணிகம் செய்தநம் முன்னையர் கண்டநல்
    வாழ்வினைக் கூறுவன் கேட்டிடுவீர்
தோணிகள் ஓட்டினர் சூழ்கடல் சுற்றினர்
    சூட்டினர் நம்புகழ் நாட்டினரே

ஆழ்கடல் ஆயினும் சூழ்புயல் ஆயினும்
    அஞ்சில ராகிய நெஞ்சினராய்க்
கீழ்கடல் மேல்கடல் யாவினும் ஓடினர்
    கிட்டும் நிதிக்குவை விஞ்சினரே

தெற்குக் கடல்தனில் கொற்கைத் துறைதனில்
    தேடிக் கிடைத்தநன் முத்துக்களை
விற்கத் திசைதொறும் சென்றனர் பொற்குவை
    வேண்டிய மட்டுங் குவித்தனரே

மீனக் கொடியுடன் காணப் படுங்கலம்
    மேலைக் கடல்தனில் ஓடிவரும்
மானப் புலிக்கொடி விற்கொடி ஏந்திய
    வங்கங்கள் தென்கடல் கூடிவரும்

மெல்லிய நற்றுகில் பட்டுடை பொன்மணி
    மேவிப் படர்தரு செம்பவழ
வல்லியும் நல்லகில் ஆரமும் ஆதிய
    வாரிக் கொடுத்தது நம்புவியே

ஆழ்கடற் சாவகம் புட்பகம் சீனமும்
    ஆதி யவனம் கடாரமுடன்
ஈழம் முதலன தேயமெ லாமிவர்
    ஏகினர் தோணியில் வீரமுடன்

இவ்வகை வாழ்ந்தனர் என்னின மாந்தர்கள்
    என்றதும் என்னுளம் பொங்கியதே
அவ்வியல் தேய்ந்தனர் இன்றவர் என்றதும்
    ஆவென் றுயிர்த்துளம் மங்கியதே



இப்படி நம் கவிஞர்கள் பாடக் காரணம் இல்லாமல் இருக்குமா?  நாமும் படித்து இருப்போம்.. இராஜ இராஜ சோழன் பெருமையாய் பற்றிகங்கை கொண்டான்கடாரம் வென்றான் என்று..  கங்கை கொண்டான் சரி.. ஒரே நிலப்பரப்பாய் இருந்த பாரத தேசத்தில்.  இந்த கடாரம் வென்ற திறன் தான்அன்றும் இன்றும்,என்றும்இராஜ இராஜனின்  தனித்திறம் பேசிடும் சரித்திரம்.
பண்டைய மன்னர்களின் வீர தீரச்செயல்களை மெய்க்கீர்த்தி என்ற பெயரில் பொறித்து வைத்து உள்ளனர்.


சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போலஎன்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்தஎன்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும்
கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி
தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள்
எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி
பந்மரான ஸ்ரீராஜராஜ தேவ

இராஜ இராஜ சோழன் இலங்கைமுந்நீர்பழந்தீவு என்றழைக்கப்பட்ட இன்றைய மாலத்தீவு இவற்றை கைப்பற்றி ஒரு பெரிய கடற்படையை நிறுவிஅதனை வலுவுள்ளதாகவும் ஆக்கி வைத்து இருந்தார்'சோழ மரபினரின் பொற்காலம்என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இராஜ இராஜனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.


இந்தக் கால கட்டத்தில் நான் மேலே சொன்ன சுமத்ராஜாவா  இன்றயை மலேஷியசிங்கப்பூர் பகுதிகளை விட மிகப்  பெரிய செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது.  இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் சைலேந்திர வம்சம் பெருஞ்செருக்குடன் ஆட்சி புரிந்தனர்.  இந்த ஜாவா மற்றும் சுமத்ராவின் ஆட்சி மொழி சாவகம் (ஜாவா), சமசுகிருதம் மற்றும் பழைய மலாய்.  இந்த சாவக மொழியில் நிறையத் தமிழ் வார்த்தைகளை இன்றும் காண முடிகிறது.  எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் சாவகம் எழுதவும், பேசவும் தெரியும், மலாய் (பாஷா இந்தோனேசியா பேசினால் தான் பிழைப்பு ஓடும். சாவக மொழியில் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ள 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டு நூலினை வாசித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அது பற்றித் தனியாக, இறைவன் அருள் இருந்தால் பின்னர் பார்க்கலாம்,)


சைலேந்திரர் என்றால் மலை அரசர் என்ற பொருள்.  மலைசூழ் சாவக, சுமத்ரா பகுதிகளின் மன்னர்கள்.  இந்துக்களாய் இருந்து, மஹாயனப் புத்த மதத்தைத் தழுவியவர்கள்.  இதே சமயம் ஒரு பிரிவினர் தாங்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்த இந்து மதத்தை விட்டு வெளியேறாமல் இந்துக்களாகவே தொடர்ந்தனர்.  மத்திய ஜாவாவில், மிகப்பெரிய இந்து ஆலயம் ‘பிரம்பனான்’.  அதே போல மிகப்பெரிய புத்தர் பெயர் விளங்கும் ‘போரோபுதூர்’ புத்த ஆலயமும்  இருக்கிறது. சைலேந்திர மன்னன் ‘பாலபுத்ர தேவா”  ஜாவாவில் இருந்து தனது சொந்த மைத்துனரால் (சஞ்சய வம்சம்) துரத்தி அடிக்கப்பட்டு மீண்டும்  (இதே 9ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்) சுமத்திராவின் பாலேம்பாங்கு (PALEMPANG )நகரத்தை  தலை நகராய் கொண்டு சிறப்பான முறையில் வலிமையான கடற்படையுடன்  ஆட்சி செய்து வந்தார்.


ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம். இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. ஏன் இந்த உறவு?  எல்லாம் கடல்சார் வணிகம் தான் காரணம்.  சோழர்களின் ஒவ்வொரு படையெடுப்பும் கடல் சார் வணிகத்துடன் எவ்வாறு இணைந்து இருந்தது என்பதை இனி வரும் பத்திகளில் அறிந்து கொள்வீர்கள்.  இன்று சிங்கப்பூர் விமான நிலையம் அனைத்து கண்டங்களின் பிரயாணத்துக்கும் இணைப்பாக (TRANSIT AIRPORT) ஆக விளங்குவதற்குக் காரணம் அதன் பூகோள அமைவிடம்.  இந்த சிங்கப்பூர், மலேசியா எல்லாம் 1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஸ்ரீவிஜய்த்தின் பகுதிகளாக இருந்து இருக்கிறது. 

அரேபிய வணிகர்கள், ஐரோப்பியருடன் வணிகம் செய்து வந்தனர்.  கடல் வணிகர்களுக்கு கீழ்திசை நாட்டுப் பண்டங்கள் மற்றும் சீனப் பொருட்கள் (அன்றைக்கும் இதே நிலைதான் போலும்), பெரும் செல்வத்தை அள்ளித்தந்த காரணத்தால், கடலோடிகள் இந்த ஸ்ரீவிஜயத் துறைமுகங்களில் எப்போதும் பயணத்தில் இருந்தனர்.  அரேபியர்கள், அரபிக்கடல் மூலமாக கொச்சி, கோவா மற்றும் பாரதத்தின் மேற்கு கடற்கரைத் துறைமுகங்களை (சேர நன்னாடு) தங்களின் பயணத்தலமாக்கினர். இந்த மேற்கு கடற்கரைக்கு உள் நாட்டு சரக்குகள், பாண்டிய, சோழ, சேர நாட்டில் உற்பத்தி ஆயின.  ஆனால் அது போதாதே!.  சோழர்களின் நாகை (நாகப்பட்டினம்), ஸ்ரீவிஜயத் துறைமுகங்களின் தலை வாசலாக இருந்தது.  FREE PORT என்று இன்றைய பொருளாதார மேதைகள் நடைமுறைப் படுத்தும் சுங்கமிலாத் துறைமுகம் அன்றே சோழர் செய்து வைத்ததின் அக்மார்க் பிரதிதான் (C0PY).


இப்போது ஸ்ரீவிஜயத்தின் ஒரு துறைமுகத்துக்குள் எட்டிப்பார்ப்போமே…. என்னதான் சரக்கு வந்து இருக்கிறது? எங்கிருந்து தான் வந்து கொட்டிக்கிடக்கிறது என்று ஒரு நோட்டம் இடுவோமே… சீன தேசத்தின் தாங்க் வமிசத்தில் ஆரம்பித்து சாங்க் வமிசம் தாண்டியும் கடல் வணிக ஒப்பந்தம் ஸ்ரீவிஜயத்துக்கும் சீன தேசத்துக்கும் இருந்து வந்ததாலும், பல்வேறு வணிகக்குழுக்கள் இரண்டு தேசங்களுக்கும் இடையே அடிக்கடி போக வர இருப்பதாலும், சீன வணிகர்கள், அவர்களின் முகவர்கள், தமிழகத்தில் சோழ தேசத்தில் இருந்தும், நமது பாண்டிய தேசத்தில் இருந்து தனவைசியர் குழுக்களும், ஐனூற்றுவர் குழுவின் அங்கத்தினரான கடலோடிகளும் சல சல வென பெருங்கூட்டமாக அவரவர் பொருட்களை தரப்பரிசோதனை செய்து கொண்டும் இருக்கின்றனர்.  உண்மையில் இந்த ஸ்ரீவிஜயத் துறைமுகம் ஒரு (ENTREPOT) பொருட்கள் வைக்கும் இடம்.  அதாவது, பல வணிகக்குழுக்கள் பண்டமாற்று செய்கின்ற ஒரு இடம்.  எங்கெங்கு இருந்தோ கடல் வணிகச் சரக்குகள் வரும்,  கிடங்கில் கிடக்கும், பின் இன்னொரு தேசத்துக் கப்பல்களில் ஏற்றப்படும். வணிகம், வணிகம், வணிகம்…
சாவகத்தில் இருந்து:  அரிசி, பருத்தி, அவுரி எனப்படும் கருநீலச் சாயம் (INDIGO), வெள்ளி…
சுமத்ராவில் இருந்து: கற்றாழை, பிசின், சாம்பிராணி, தந்தம், காண்டாமிருகக் கொம்புகள், வெள்ளீயம் (TIN)…
போர்னியொவில் இருந்து: பிரம்பு, அரிய வகை மரங்கள், நவரத்தினங்கள், மற்றும் விலை மதிப்பில்லாக் கற்கள்…
கிழக்கு இந்தோனேசியத் தீவுகளில் இருந்து:  கவர்ச்சியான பறவைகள், அரிய வகை விலங்கினங்கள், இரும்பு, சப்பான் அல்லது சாயக்கட்டான் எனப்படும் ஒரு தாவர வகைச் சாயங்கள், சந்தன மரம்..
இந்தியத் தீபகற்பத்தில் இருந்தும், இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் இருந்தும் வருகின்ற பல்வகை வாசனைத் திரவியங்கள், உணவு மசாலாப் பொருட்கள்……
சீன தேசத்தில் இருந்து:  பீங்கான், மங்குச் சாமான், ஜாடிகள், பட்டு, மரவுரிப் பொருட்கள், மரச்சிற்பங்கள், சீன கைவினைபொருட்கள்,
என்று வித விதமாய்க் குவிந்து கிடக்கிறது..வணிகம் செய்யப்படுகிறது.  மொத்தப் பொருட்களில் 10 சதவீதம் கூட ஸ்ரீவிஜயத்தின் உள் நாட்டு உற்பத்திப் பொருட்கள் அல்ல.  உலகின் வேறு பல பகுதிகளின் வணிகர்கள் தங்கள் நாட்டுப் பொருட்களுடன் கூடும் பெரிய சந்தை அது.


மொத்தத்தில் ஸ்ரீவிஜயம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அமர்ந்து கொண்டு சுண்டா நீரிணையும், மலாக்கா நீரிணையயும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. இப்படி இந்தக் கடற்வணிகம் முழுவதும் தன்ல் நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஆதாரமாகும் வகையில் இருப்பதற்காக இந்தக் கடற்பகுதி முழுவதும் தனது கடற்படையை உலா வர வைத்து வணிகர்களுக்கு பாதுகாப்பையும் நல்கி வந்தது.

கப்பல்கள் வங்காளத்திலுள்ள தாம்ரலிப்டி அல்லது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்குச் சென்றன. அங்கிருந்து நேராகத் தாய்-மலாய்த் தீபகற்பம்சுமத்ரா அல்லது ஜாவாவிலுள்ளதுறைமுகங்களுக்குச் சென்றன. அவர்கள் மேலே தென்ச் சீனக் கடலில் பயணம் செய்ய விரும்பினால்தென்கிழக்குப் பருவக்காற்று வீசத் தொடங்குவதற்காக வார அல்லது மாதக் கணக்கில் துறைமுக நகரங்களில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால் இந்தப் பல்வேறு துறைமுக நகரங்களில் வெளிநாட்டவருக்கான குடியிருப்புப் பகுதிகள் உருவாகி மீண்டும் பயணம் செய்யச் சாதகமான காற்று வீசும்வரை அவர்கள் அங்கு காத்திருந்தனர். இந்தியாவிலிருந்து அப்பகுதிக்கு வந்து திரும்பிச் சென்று சேர குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆயிற்று.

இராஜ இராஜன் ஏன்  மிகப் பலம் பொருந்திய கப்பல் படை அமைத்து இருந்தார் என்றும் அவரது மகன் முதலாம்  இராஜேந்திரன் என் கடாரம் மீது படை எடுத்தார் என்பதும் ஏறத்தாழவிளங்கி இருக்கும்.  அதே  காரணம் தான் சோழர்களின் கலிங்கத்துப் படையெடுப்பும் சேரர் பகுதியான காந்தளூர் சாலை கைப்பற்றலும்.  சேர நாட்டு கடற்கரையில் தான் அரபு வணிகர் வந்து இறங்கினர்.  அதற்காக சேர நாடு தன் கைப்பிடியில் இருக்க வேண்டும் என்று நினைத்தார் சோழ மாமன்னன். ஸ்ரீவிஜயம் செல்வதற்கு பாய்  மரக்கலங்கள் பருவக்காற்றின் தயவை வேண்டி நிற்க வேண்டும். சில பருவங்களில்நாகைத் துறை முகத்தில் இருந்து கப்பல்கள் பயணிக்கும். சில பருவங்களில் இன்னும் வடக்கில் இருந்து பயணம் ஆரம்பிக்க வேண்டும்.  அதற்கு கலிங்கத்தின்  துறைமுகங்களான தாமரலிபதி(TAMRALIPTI) ,பித்துண்டா,கலிங்கப் பட்டினம்பாளூர் மற்றும் மாணிக்கப்பட்டினம்  போன்றவை தம் வசம் வைத்து இருக்க வேண்டும். கலிங்கத்துறை முகங்கள் இரண்டாம் நூற்றாண்டுக்கும் முன்னரே தமிழர் வசம் இருந்ததை பட்டினபாலையும் நற்றிணையும்புறமும் மொழிகின்றனஅதற்குத்தான் கலிங்கப் படை எடுப்பு..

இந்த  ஸ்ரீவிஜயத்தை நமது இராஜ இராஜன் தஞ்சையை ஆண்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னன் விஜயோத்துங்கவர்மன். சாமபேததான,தண்டம் என்பார்களே... அதில்  தானத்தை தேர்ந்து எடுத்தவன் இராஜ இராஜன் என்ற மதி யூகி.  இராஜ இராஜன் தனது காலத்தில் இந்த ஸ்ரீவிஜய பேரரசுடன் நட்பு பாராட்டி இடையில் இருந்த பெருங்கடற் பரப்பு முழுவதும் தனது புலிக்கொடி பறக்கும் பெருங்கலங்களை உலவவிட்டு இருந்தான். புத்த மதத்தை தழுவிய ஸ்ரீவிஜய மன்னன் சங் விஜய  துங்க  வர்மன் வேண்டுகோளுக்கு இணங்க அந்த மன்னனின் தந்தையான சூடாமணி வர்மனின் நினைவை நிலைக்கும் வண்ணம் நாகையில் எழுப்பிய சூளாமணி விகாரம் எனும் புத்த விஹாரைக்கு இடமும் கொடுத்ததுடன்இறையிலியாக வரி விலக்கும்  அளித்தார்.   இதன் மூலம் ஸ்ரீவிஜய நாட்டின் புத்த மத குடிகள் இங்கு நிலையாக வாழ்ந்து வந்தனர் அந்தக் காலத்தில் என்று தெரிகிறது.  
பின்னர் வந்த இராஜேந்திரர் ஏன் தண்டம் எனும் பாணியை கையில் எடுத்தார் என்று இன்று வரை வரலாற்று ஆசிரியர்களுக்குப் புலனாகவில்லை.  கைக்கு மீறி போவது போல் தோன்றியிருக்கலாம்அதனால் ஒரு தட்டு தட்டி வைத்து இருக்கலாம்.  11ம் நூற்றாண்டில் இரண்டு முறை பூசல் வெடித்தது. பொருளியல் போட்டிதான் அதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.


1025ல் ராஜேந்திரச்சோழன் ஸ்ரீவிஜய-கடார அரசின் மீது படையெடுத்தார். அப்போரில் கடாரத்தின் (கெடா) மன்னர் சங்கிரமவிஜயோத்துங்கவர்மன் சிறைப்பிடிக்கப்ப்பட்டார்.  இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி கி.பி.1025ல் கீழே கண்டுள்ளபடி பொறிக்கப்பட்டு இருக்கிறது.  இன்றைக்கு சரியாக 1,000 வருடங்களுக்கு முன்னால்எந்த GPS, NAVIGATION வசதிகள் இல்லாமல் இதனை ஆயிரம் மைல்கள் கடந்து நீரிலும்நிலத்திலும் வெற்றி காண வேண்டும் எனில் அவரது படை எத்தகைய மதியும்பலமும் பொருந்தியதாக இருந்து இருக்க வேண்டும் என்ற கற்பனையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
அலைகடல் நடுவுட் பலகலம் செலுத்திச் 
சங்கிராம விசையோத் துங்க வர்ம 
னாகிய கடாரத் தரசனை வாகையும் 
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்
துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் 
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும் 
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் 
வண்மலையூ ரெயிற் றொன்மலையூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிருடிங்கமும் 
கலங்கா வல்வினை இலங்காசோகமும் 
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் 
காவலம் புரிசை மேவிலம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமாலிங்கமும் 
கலாமுதிர் கடுந்திறல் லிலாமுரி தேசமும் 
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் 
தொடுகடற் காவற் கடுமுரண் கடாரமும் 
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான 
உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு

படையெடுப்பின்போது ராஜேந்திரச்சோழன்ஸ்ரீவிசயம் (பாலெம்பாங்)பன்னை (வட சுமத்ரா)மலையூர் (ஜாம்பி)பின்னர் மாயிருடிங்கம்,இலங்காசொகம் (லங்காசுக்கா)மாப்பாளம் (பெகு)மெவிலிம்பங்கம் (தாய்-மலாய்த் தீபகற்பத்தில்)வலைப்பந்தூறு (வியட்நாம்),தலைத்தக்கோளம் (தக்குவாப்பா)மாதமாலிங்கம் (தாம்ப்ரலிங்கா)இலாமுரிதேசம் (அச்சேயிலுள்ள லாம்ரி)மாநக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்)கடாரம் (கெடா) ஆகிய இடங்களை தாக்கியிருக்கிறார். எனினும் வெற்றியடைந்து தம் ஆற்றலை காட்டிய பிறகு ராஜேந்திரச் சோழன் ஸ்ரீவிஜயாவில் தம் ஆட்சியை நிறுவும் முயற்சியில் ஈடுபடாது படைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டார்.
கிபி 1030 முதல் 1064 வரை ஸ்ரீவிஜயாவில் என்ன நடந்தது என்பதை அறிய சான்றுகள் அதிகமில்லை.
கிபி 1068-69ல்ராஜேந்திரச் சோழரின் புதல்வன் வீரராஜேந்திரன்தம் உதவியையும் பாதுகாப்பையும் நாடி வந்த மன்னர் ஒருவருக்காக கடாரத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றித் தாம் வென்ற நாட்டை தன்னை நாடி வந்த அந்த மன்னருக்கு வழங்கினார்.
1089-90ல்சோழர்கள் ஸ்ரீவிஜய அரசுடன் மீண்டும் நட்புக் கொண்டிருந்தனர்.
சரி இப்போது அடுத்த காலத்துக்கு வருவோம்.
இங்கிருந்து செல்லும் கப்பல்கள்காற்றின் திசையில் பாய் மரங்களை விரித்து 30 நாட்கள் பயணத்துக்குபி பின் நக்காவரம் என்று அழைக்கப்பட்ட நிக்கோபார் தீவுகளை (ANDAMAN & NICOBAR ISLANDS ) அடைகின்ற சமயத்தில் ஏறத்தாழ கப்பலில் உணவும் தண்ணீரும் தீர்ந்து விடுமாம்.  கப்பல் மாலுமிகள் இந்த தீவுகளில் இறங்கிகளைப்பாற்றி கொண்டு உணவும்நீரும் நிரப்பிக் கொண்டு சுமத்ரா தீவின் அக்சய முனையை (BANDAR ACEH ) அடைவார்களாம்.  ஆயிற்று.. ஸ்ரீ விஜயம் வந்து சேர்ந்தாகி விட்டது.
இன்றும் 'அச்சேயின் மனிதர்கள் தமிழர்கள் போன்ற  தோற்றத்துடனேயே காணப்படுகின்றனர்.  அவர்களின் உணவும் நமது தமிழகம் போலவே கொஞ்சம் கார சாரம் மிகுதியாக... பொதுவாக மென்மைகே குணம் கொண்ட இந்தோனேசிய மக்களுடன் ஒப்பிடுகையில் இந்த அச்சே வாழ் மக்கள் கொஞ்சம் கண்டிப்பானவர்கள். நமது தமிழக பாரம்பரியமாக இருக்க வேண்டும்.

அடுத்து BARUS என்ற வட சுமத்திராவின் மேற்கு கடற்கரை பட்டணம்தமிழக ஐந்நூற்றுவர் எனும் வணிகர் கூட்டம் வாழ்ந்த இடமாக குறிக்கப்பட்டு இருக்கிறது.  சுமத்ராவில் இன்றும் மார்க்கம் (marga /merga ) என்ற பெயரில் நமது நாட்டில் இருக்கும் சாதியினைப் போலப் பிரிவுகள் உள்ள மக்கள் வாழ்கின்றனர்.  அவற்றில்செம்பிரிங் (Sembiring) எனும் பிரிவு தமிழர் வழி  வந்தவர்கள் என நம்பப்படுகிறது.  இதன் உப பிரிவுகளானசோழியாபிராமணாபாண்டியாமலையாளாடெபாரிமுஹம்,பெலாவிதெக்கன்Colia, Berahmana, Pandia, Meliala, Depari, Muham, Pelawi and Tekan) முதலியவை தென்னகத்தை மூலமாக கொண்ட வர்க்கமாக  நம்பப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு  மிக்க சுமத்ரா இன்னும் இயற்கை வளம் கொழிக்கும் நாடாகவே விளங்குகிறது.  அலை அலையாக தமிழர்கள் மலாயா கடற்பகுதியினை நோக்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் சென்ற வண்ணமே இருந்தனர். இன்னும் தொடர்கிறது. இதில் இன்றய தலைமுறை அறிவது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை மட்டுமே.  சுமத்ரா மறக்கப்பட்டு விட்டது ஒரு 4 தலை முறைகளாக.

கி.பி.1830களில் அடுத்த அலை....
கிழக்கு நாடுகள் ஐரோப்பியரின் காலணிகளாக மாற்றப்பட்டன.   இந்தியாஇலங்கைபர்மாமலாயாபிரிட்டிஷ் வசம்.  தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வளம் மிகுந்த பகுதியான இந்தோனேசியாத் தீவுக்கூட்டம் டச்சுக்காரர் வசம்.  கொழித்த செல்வத்தை  தம் நாட்டுக்கு எடுத்து சென்றது போக தோட்டங்களில் (ESTATES ) முதலீடு செய்து இடங்களை வளைத்து பணம் பயிர் செய்தனர் ஐரோப்பிய சீமான்கள். இதில் தான்  இனம் தின்னும் முகவர்கள் ( இப்போது நடப்பது போலத்தான் ),  டில்லி யில் மிக சுலபமான வேலை இருக்கிறது,  அதிக ஊதியம்,இலகுவான பணி  என்று ஆசை காட்டி தமிழகத்தின் இண்டுஇடுக்குகளில் இருந்த குக்கிராமங்ககளில் இருந்து வறுமையோடு வாழ்வை வெறுமையாய் கடத்தி கொண்டு இருந்த ஏழை  மக்களுக்கு ஆசை வலை விரித்து கப்பலில் ஏற்றி தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டனர்.
இங்கு வந்த இறங்கிய அப்பாவித்த தமிழர்கள்வந்த பின்னர் தான் அறிந்தனர்காட்டை அழித்து கடிய நிலம் திருத்தும் கடினமான பணி இது என்று.  சிலர் தங்களின் ஒப்பந்தம் முடிந்ததும் கப்பல் ஏறி நாடு திரும்பினர்.  இன்னும் பலர்,  தாயகத்தின் துயரத்தை விட இங்கே இருந்த வாய்ப்புகள் மேலானவை என இங்கேயே தங்கி விட்டனர்.  இந்தக் குடிகளுடான்நமது பாரம்பரிய தெய்வங்களானமாரியம்மன்,மதுரை வீரன்சங்கிலிக்கருப்பன் இவர்களும் காக்கும் தெய்வங்களாக இவர்களுடன் குடி வந்தன.  ஒரு 100 அல்லது 150 ஆண்டுகளாக இந்த குடியேற்றம் தமிழகத்தில் இருந்து நடை பெற்று வந்திருக்கிறது.  இவர்கள் குடிகளாக வாழ்ந்த பகுதிகள்வட சுமத்திராவின்லுபுக் பாக்கம்,தேப்பிங் திங்கி மற்றும் பிஞ்சைLubuk Pakam (Deli Serdang Regency), Tebing Tinggi, and Binjai  ஆகும்.

இந்த மக்கள் காலப்போக்கில் ஒருவருக்கு ஒருவர் மண வினை கொண்டுதமிழகத்தின் நினைவுகளை மட்டும் மனதில் சுமந்து கொண்டு இந்தோனேசியர்களாக வாழ ஆரம்பித்தனர்.  இந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் இருந்து இவர்களின் மூலமாகவும் சிறு வணிகம் செய்ய முற்பட்டு ( ஜவுளிக்கடைபலசரக்குவட்டிக்கடை ) பலர் நமது பகுதிகளில் இருந்து வந்து சேர்ந்தனர்.  மொத்தத்தில் ஒரு சிறு தமிழகம் அங்கு உருவானது... உறவானது.
இப்படி வணிகம் செய்ய வந்தவர்களில் நமது பகுதியின் நகரத்தார் பெருமக்களும் அடக்கம்.  சிவகங்கைஇராமநாதபுரம்  மாவட்டத்தில் இருந்துதிருச்சிகீரனூர் அருகில் உள்ள குளத்தூர் பகுதிகளில் இருந்து குடும்பங்கள்.


இது சுமத்திராவின் வடக்கில் இருக்கும் பெரிய நகரம் 'மேடான்'  ஆகும்.  மேடான் என்றால்மேடான இடம் அல்லது மைதானம் என்று பொருள்.    1940 ஆம்  ஆண்டு வாக்கில்இவர்களில் தாயகம் செல்ல விரும்புபவர்கள் செல்லலாம் என்று அன்றைய ஐரோப்பிய டச்சு அரசு அனுமதி வழங்கியது.  பலர் நாடு திரும்பினார். ஒரு 5,000 அல்லது 10,000 பேர் இந்தோனேசியாவே தமது நாடு என்று இங்கேயே தங்கி விட்டனர்.
இப்படி வணிக நிமித்தம் வந்தவர்களில் என் உறவின் முறையாக குடும்பம் மூன்று தலை முறைகளைக் கடந்து 4 வது தலைமுறையாக இந்தோனேசியாவில் வசிக்கிறார்கள்.  அவர்கள் என்னை இனம் கண்டு உறவு கொண்டாடியபோது, மிகவும் மகிழ்வாக இருந்தது.  சென்ற 2 தலைமுறைகளுக்கு முன்பாகவே அவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்றதையும், இன்னும் இந்திய உறவுகளுடன் இணைந்து இருப்பதையும் அறிந்து, காலமும் தூரமும் சொந்தங்களைப் பிரிக்க இயலாது என்று அறிந்து கொண்டேன்.  இவர்களில் ஒரு குடும்பம், திருச்சியில் இருக்கும், ‘சோனா மீனா’ திரை அரங்க உரிமையாளர்களின் உறவு.  இன்னொரு உறவு புதுக்கோட்டை, திருச்சி இடையில் இருக்கும் கீரனூரில் இருக்கும் ‘லட்சுமி டாக்கீஸ்’ உரிமையாளர்கள்.


இதே போல நமது நண்பர், தேவகோட்டை, ஆண்டவர் டிராவல்ஸ் உரிமையாளரும், எனது அன்பு கல்லூரித் தோழனும் ஆன ஜனாப்.மீரா ஹுசைன் அவர்களின் தந்தை வழிப்பாட்டனார், (தந்தையின் தந்தை) இதே மேடான் நகரில் வணிகம் செய்து கொண்டு இருந்து இருக்கிறார். அந்தக் கால கட்டத்தில், மலேசியா, இந்தோனேசியா, மற்றும் சிங்கப்பூர் ஒரு நாடு என்ற எல்லைக்குள் தான் இருந்து இருக்கிறது.  மேடானில் வணிகம் புரிந்த பலரும், மலேசியாவிலும் வந்து நிரந்தரமாக இருக்கவும் செய்தனர்.  வசதி படைத்த வணிகர் குடும்பங்கள் தமிழகத்துக்கு வரப் போகவும், தங்கள் மைந்தர்களை தமிழகத்தில் மேற்படிப்புக்கு அனுப்பவும் செய்து இருக்கின்றனர். 


இதே நடை முறையில், திரு.மீரா ஹுசைன் அவர்களின் பாட்டனார், தனது மகனை (மீரா ஹுசைனின் தகப்பனாரை) மலேசியாவில் பணி புரிய வைத்து இருக்கிறார்.  அதன் பின்னரே தேவகோட்டையில், மிக நெடுங்காலம் முன்னதாகவே, மூங்கில், கிடுகு, கயிறு மற்றும் கட்டிட உபகரணங்கள் விற்கும் கடைதனை ஆரம்பித்து இருக்கின்றனர்.  இவர்களின் பூர்விகம், நமது தேவகோட்டை அருகில் இருக்கும் கோட்டூர் அருகில் உள்ள கள்ளிப்பட்டி எனும் கிராமம்.  கள்ளிப்பட்டி கிராமத்தில் இருந்த கடல்தாண்டி 3 தலைமுறைக்கு முன்பாகவே சுமத்ராவில் வணிகம் செய்தவர்கள், எப்படி இந்த ‘டிராவல்ஸ்’ தொழிலுக்கு வந்தனர்? இது பற்றி அறிய அந்தக் காலத்தில் தமிழகத்தையும், கிழக்காசிய நாடுகளையும் இணைத்த கப்பல் போக்குவரத்தைப் பற்றி கொஞ்சம் பின்னோக்கிப் பயணப்பட வேண்டி இருக்கிறது.

இந்தப்பதிவுகள் அனைத்தும், நாம் ஒரு தலைமுறைக்கு முன்னால் செழுமையுடன் கண்டிருந்து, இன்று முழுமையாக மறக்கப் பட்டு விட்ட கப்பற் பிரயாணங்களை இன்றைய தலைமுறையினருக்கு, (நமக்கும் தான்) நினைவூட்டவும், அடுத்த தலைமுறைக்கு மனதில் பதிய வைக்கவும் தான் இந்த முயற்சி.  உண்மையில் எவ்வளவோ முயன்றும் எத்தனையோ நிகழ்வுகளை பதிவு செய்யாமல் விட்டாலும், நீளத்தைக் குறைக்க முடியவில்லை.


ஆண்டவர் டிராவல்ஸ் பற்றி மேலெழுந்த வாரியாக எழுதி விட்டுப் போய் விட்டால், இது ஒரு சாதாரணத் துணுக்காக இருந்து இருக்கும்.  உங்களில் எத்தனை பேருக்கு, தமிழகத்தில் இருந்து 80 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வந்த S.S.RAJULA (STEAM SHIP RAJULA) மற்றும் MV.சிதம்பரம் கப்பல்களைப் பற்றித் தெரியும்?  ஆண்டவர் டிராவல்ஸ் பற்றி எழுத ஆரம்பித்த போது இந்தக் கப்பல்களின் நினைவு வந்தது.  இந்தக் கப்பல் டிக்கெட் கொடுக்கும் தொழில்தான் 50 வருடங்களுக்கும் முன்பு ஆண்டவர் டிராவல்ஸ் ஆரம்பித்தது… பின்னர்,  சென்னை செல்லும் S.C.BROTHERS எனும் பேருந்து சேவைக்கு முகவராக தேவகோட்டையில் முதன் முதலில் இருந்தவர்கள் ஆண்டவர் டிராவல்ஸ்.
இந்தக் கப்பல் பற்றிய சிந்தனைதான், சுமத்ராவின் வரலாறையும் எழுதத்தூண்டியது. இந்தக் கப்பல்களில் பிரயாணம் செய்த பலரை நேரில் சந்தித்து பல விபரங்களைத் திரட்டி வைத்து இருக்கிறேன்.  இந்தக் கப்பல்கள் பற்றியும் தான்.  இதற்கு மேல் எழுதினால், வாசிக்கும் சுவாரஸ்யம் கெட்டு விடும் என்று இத்துடன் இந்தப் பகுதியை முடிக்கிறேன். தயவு செய்து நீங்கள் அனைவரும் பின்னூட்டத்தில் இந்தக் கப்பல் பிரயாணங்கள் பற்றி எழுது என்று பணித்தால் எழுதுகிறேன்.  அதிகப் பிரசங்கமாக உங்கள் மனதிற்குப் பட்டால், தயவு செய்து, மனதில் உள்ளதை தெரிவியுங்கள், அடுத்த இடத்துக்கு நிகழ்வுக்குச் சென்று விடலாம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60