அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 55
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
கவிக்கிறுக்கன் முத்துமணி
12-05-2018
பகுதி: 55
சென்ற பகுதியில், ‘கோஷ்டி
வீரம்’ பற்றி அடுத்துப் பார்ப்போம் என்று முடித்து இருந்தோம். வீரம், வீரன்
தெரியும்..அதென்ன கோஷ்டி வீரம்?. சிலர்
தனியாக இருக்கும் போது தொடை நடுங்கியாக இருப்பர்.
கொஞ்சம் கோஷ்டி அவருடன் சேர்ந்து விட்டால் போதும், வீரம், பீரிட்டு எழ பெரும் வீரர்கள் ஆகி
விடுவர்கள். இவர்கள் தான் கோஷ்டி
வீரம். பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள்
கலாட்டாவில் இந்தக் கோஷ்டி வீரம் உள்ளே புகுந்து ஒவ்வொருவரையும் சாமியாட வைத்து
விடும். இதே வீரர்களைத் தனியாக விட்டால்,
பசு மாதிரி சாது ஆகி விடுவார்கள்.
இதற்கு முன், காரைக்குடியில் ‘அருணாச்சலா
டாக்கீஸ்’ இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘ராஜா’
என்ற திரைப்படம் வெளியான அன்று, காரைக்குடி, அழகப்பா கல்லூரி மாணவர்களால், இந்தத்
திரை அரங்கம் தீயிடப்பட்டது. நடிகர்,
தயாரிப்பாளர், பாலாஜி அவர்களின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், சமீபத்தில்
காலம் சென்ற இயக்குனர், நமது தேவகோட்டை நண்பர், திரை வசனகர்த்தா/ துணை இயக்குனர்,
திரு.முத்துப்பழனியப்பன் அவர்களின் குருநாதர் சி.வி.இராஜேந்திரன் அவர்களின்
இயக்கத்தில் வெளிவந்த சுறுசுறுப்பான திரைப்படம். திரு.பாலாஜியின் திரைப்படங்கள்
அனைத்திலுமே, கதாநாயகன் பெயர், ‘ராஜா’, கதாநாயகியின் பெயர், ‘ராதா’.
இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில், சிவாஜி
கணேசன் தன் பெயரை, ‘ராஜா.....’ என்று ஸ்டைலாக ஒரு பாடலில் உச்சரிப்பார்.
அப்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டு
ஸ்தாபனத்தின் மிகப் புகழ்பெற்ற அறிவிப்பாளர், K.S. ராஜா அவர்கள் தன் வசியமிகு
குரலால் தமிழ் நெஞ்சங்களைக் கட்டிப் போட்டு இருந்தார். அவர் வானொலியில் தன்னை அறிமுகப் படுத்தும்
போதும், நிகழ்ச்சி முடித்து விடை பெறும் போதும், ‘உங்கள் அன்பு அறிவிப்பாளன், ‘ராஜா....’ என்று அந்த ஒலிப்பதிவினை மட்டும்
அழகாக தன் குரலோடு எடிட் செய்து ஒலிக்க வைப்பார்.
1972 ஆம் வருடம் குடியரசு
தினமான ஜனவரி 26ல் இந்தப் படம் வெளியிடப்பட்டு காரைக்குடி, அருணாசலாவில்
திரையிடப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு என்று
ஒரு பெரும் ரசிகர் பட்டாளம், அதிலும் கல்லூரி மாணவர்களிடம் இருந்தது. என்ன பிரச்சினை என்று எனக்கு நினைவில்லை. நான் பள்ளி மாணவன். தேவகோட்டை முழுவதும் ஒரே பரபரப்பான பேச்சு,
அழகப்பா கல்லூரி மாணவர்கள், காரைக்குடி அருணாச்சலா திரையரங்கை தீயிலிட்டு
விட்டார்கள் என்று.. நினைவின் ஆழத்தில்
இருந்து ஊறும் நிகழ்வினை உங்களோடு பரிமாறிக் கொள்கிறேன்.
சரி.. எதற்கு இந்த முன்னுரை
என்கிறீர்களா?.நாம் ஆண்டவர் டிராவல்ஸில் இருந்தோமா, சென்ற பகுதியில்.. இதற்கு நேர் எதிரில், ஆண்டவர் டிராவல்ஸுக்குச்
சொந்தமான மூங்கில், கிடுகு, கயிறு என்ற கட்டிடப் பொருட்கள் விற்கும் கடை இருந்தது. இதன் அருகிலேயே, ‘வலம்புரி ஸ்டோர்ஸ்’ என்ற
அனைத்து பொது உபயோகப் பொருட்களும் கிடைக்கும் ‘ஜெனரல் ஸ்டோர்ஸ்’. நல்ல பெரிய கடை.
அப்போது 1978 ஆம் வருடம் என்று
நினைக்கிறேன். தம்பி முத்துப் பழனியப்பன்
அவர்களிடம் இந்த நினைவுகள் பற்றிய குறிப்புகளைக் கேட்டு இருந்தேன். ஏனெனில், இதில்
ஈடுபட்டு இருந்ததில் பெரும்பாலான நண்பர்கள் அவர் அறிந்தவர்கள். அதைவிட முக்கியம், நிகழ்விடம் அவரின்
இல்லத்துக்கு அருகில். என் விருப்பம்
வேண்டிய படி, நமது கதை வசன கர்த்தாவும், கட்செவி அஞ்சல் (WHATSAPP) மூலம் நினைவுகளை
பகிர்ந்தார், அழகான தமிழில், வசனம்
வசப்படுகிறவர் ஆயிற்றே?? இதோ அவரது நடை
மாறாமல்... நினவுகளின் பின்னல்களைப் பிரிக்கிறேன்..
அன்று,,, இரவுக்காட்சி
திரைப்படம் காண சரஸ்வதி திரை அரங்குக்கு ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி விடுதி
மாணவர்கள் சென்றனர். சாய்வு பெஞ்ச்
வரிசையில் மாணவர்கள் அமர்ந்து இருந்தனர்.
அவர்களுக்கு முன் இருந்த வரிசையில் ‘வலம்புரி ஸ்டோர்ஸ்’ கடை ஊழியர்கள்
அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
முன்னால் அமர்ந்து இருந்தவர்களின்
தலை பின்னால் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவர்களுக்கு மறைத்ததானால்,அவர்களைக்
கொஞ்சம் இறங்கி அமருமாறு மாணவர்கள் பலமுறை கேட்டுக் கொண்டனர். கடை ஊழியர்களும் குழுமமாய் வந்து இருந்ததனால்,
இவர்களைச் சட்டை செய்யவில்லை (கோஷ்டி வீரம்).
கோபமடைந்த மாணவர்கள் தட்டிக் கேட்க... அவர்கள் தகராறு செய்ய.... இறுதியில்
கைகலப்பில் போய் முடிந்தது.
படம் நிறுத்தப்பட்டது. சண்டை
போட்டபடி இரு தரப்பினரும் வெளியேற முயன்ற போது,
தியேட்டர் பெஞ்சுகள், டியூப் விளக்குகள் உடைத்து நொறுக்க்ப்பட்டன. கடையின் ஊழியர்களால் மாணவர்கள், பலமாகத்
தாக்கப்பட்டனர். வெளி ஊர்களில் இருந்து படிக்க வந்த மாணவர்கள். எல்லாம் 18க்கும் கீழ் உள்ள வயதினர். எனவே மாணவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று
சிதறி ஓடினார்கள். ஓடுகிறவர்களைக்
கண்டால், விரட்டுகிறவர்களுக்குத் தொக்கு என்பார்களே…. அது போல் வலம்புரி கடை
ஊழியர்களுக்கு வெற்றிக் களிப்பு, பிடிபடாத பெருமை.. விரட்டிக் கொண்டே முடிந்த வரை துரத்திச்
சென்றார்கள்.
இருள் சூழ்ந்த நள்ளிரவு…. சாலை
விளக்குகள் அதிகம் இல்லாத இருளான பகுதிகள். அந்த கால கட்டத்தில் சிலம்பணி விநாயகர் கோவில் ஊரணியின்
வடகரையில் என் அன்பு மாப்பிள்ளை பூமி.இராமநாதன், அவரது மூத்த அண்ணன்,
திரு.பூமி.துரைராஜ் அவர்களுக்கு சொந்தமாக இருந்த பெரிய வீடு அறைகளாகத் தடுக்கப்
பெற்று பல கல்லூரி மாணவர்கள் அங்கு தங்கி இருந்து, வெளி மாணவர்களாக அங்கு தங்கி
இருந்தனர். ( இந்த வீடு கட்டப்படுவதற்கு
முன் இதே இடம் ஒரு விறகுக் கடையாக இருந்தது.) நல்ல பெரிய கோட்டை போன்ற வீடு
என்பதனால், மாணவர்களால், கோட்டை என்றே அழைக்கப்பட்ட வீடு. வலம்புரி ஸ்டோர்ஸ் ஊழியர்களால் விரட்டப்பட்டு
வந்த சில மாணவர்கள், தங்களின் வகுப்பில் படிக்கும் தோழர்கள் அல்லது தனது ஊர்க்கார
நண்பர்கள் அங்கு தங்கி இருந்ததால், அந்தக் கோட்டைக்குள் நுழைந்தனர். இன்னும் பலர் கல்லூரி விடுதியை நோக்கி ஓடினர்.
வெற்றியின் இறுமாப்பில் ஏதோ எதிரிகளை
வீழ்த்துகிறோம் என்ற மமதையில் இருந்த வலம்புரி ஊழியர் தமது நண்பர்களையும் சேர்த்துக்
கொண்டு கையில் கிடைத்த ஆயுதங்களட எடுத்துக் கொண்டு போர்க்கள ரேஞ்சுக்கு
மாணவர்களைத் தாக்கும் மூர்க்க எண்ணத்துடன் கல்லூரி வரை பின் தொடர்ந்து சென்றனர். நடு
சாமம். இப்போது அதிக எண்ணிக்கையில்
மாணவர்கள், இடம் அவர்கள் தினம் நடக்கும் கல்லூரி வளாகம். இது தான் கோஷ்டி வீரம் எழும் அடிப்படை அமைப்பு.
அதுவரை இதயத்தைக் கையில் பிடித்து ஓடிவந்த மாணவர்கள், சுதாரித்துக் கொண்டனர்.
கூட்டமாகக் கல்லூரியின் முதன்மைக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றார்கள்.
கல்வி கற்பவர்கள் ஆயிற்றே…’ “இளமையில்
கல்” எனும் மூதுரைக்கு ஏற்ப மொட்டை
மாடிக்கு ஏறும் முன்னர், கட்டிடம் கட்ட
கீழே குவித்து வைக்கப்பட்டு இருந்த சரளைக் கற்களை முடிந்த அளவு அள்ளிக்
கொண்டனர். டார்ச் விளக்குகளை எடுத்து
வைத்துக் கொண்டனர். வலம்புரி வீரர்கள்
(அப்படித்தான் அவர்களின் நினைப்பு), கைகளில் தீப்பந்தங்களோடு ஆவேசமாக, ஆக்ரோசமாக ப்கண்களைக் கூசச்செய்யும் ஒளிக்கற்றை பாய்ந்து
நிலை குலையச்செய்தது. இருள் வேறு… தெரியாத
இடம். இதுதானே மாணவர்கள் அமைத்து வைத்த வியூகம். இந்தக் இடமாற்றத் தடுமாற்றத்தை சரியாகப்
பயன்படுத்திய மாணவர்கள், கட்டிடத்தின் மேலே இருந்து கற்களைச் சரமாரியாக வீச
ஆரம்பித்தனர். இது வலம்புரியினர் எதிர்பாராத தாக்குதல். பலர் கற்களால் காயம்
அடைந்தனர். எங்கிருந்து தாக்குதல் வருகின்றது,
எதிர்வினையாக என்ன செய்வது என்று புரியவில்லை. கோபம் தலைக்கேறுகிறது. ஆனால் தாக்குதல் தொடர்ந்து வந்ததால் மேலே முன்னேற
முடியாமல், பின்னேற ஆரம்பித்தனர்.
அன்று அந்த மாணவர்களால்,
கல்லூரி காப்பாற்றப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அது மறுக்க முடியாத
உண்மை. காரணம்.. கல்லூரியின் முதன்மைக் கட்டிடத்தின் வலது புறத்தில்
வேதியியல் சோதனைச் சாலையும், இடது புறம் அலுவலகம் மற்றும் இயற்பியல் துறையின்
உபகரணங்களும் இருந்தன. வேதியியல் துறை
வளாகத்தில் தீப்பிடிக்கக்கூடிய
வேதிப்பொருட்கள, வாயுக்கள் அடங்கிய சிலிண்டர்கள், நிறைய இருந்தன. இந்த வலம்புரியினர், வினைபுரிந்து இருப்பார்கள்
எனில், தீப்பந்தங்கள் வேதியியல் பொருட்களோடு இராசயன வினை புரிந்து கட்டிடம்
முழுவதும் தீப்பந்தத்தின் பந்தத்தில் வெந்து போய் இருந்திருக்கும். கல்லூரி கட்டிடத்தின் மேல் நின்றிருந்த
மாணவர்களுக்கு, கௌரவர் அமைத்த அரக்கு மாளிகை ஆகி இருந்து இருக்கும்.
இப்போது சூதாட்டம் போல வெற்றி
திசை மாறி விட்டு இருந்தது. மாணவர் கை
ஓங்கியது. கல்லெறியால் களைந்து ஓடிய
வலம்புரி வீணர்களை விரட்டிச் செல்ல ஆரம்பித்து விட்டனர் மாணவர்கள். முன்பு சொன்னது போல, ஓடுகிறவர்களைக் கண்டால்,
விரட்டுபவர்களுக்கு கொண்டாட்டம்தான்.
வாழ்வில் தினசரி நாம் காணும் நிகழ்வு இது.. குனியக் குனிய குட்டுவோர் கை
நிற்பதில்லை. மாணவர்கள் வெற்றிக்
களிப்பில்.. கோஷ்டி வீர்ர்கள் பலராயினர்.
தாக்க வந்தவர்கள் புறமுதுகிட்டு ஓடுகின்றனர். அடங்குமா இள இரத்தம்? பழிக்குப் பழி,, இரத்தத்துக்கு இரத்தம்….நெருப்புக்கு நெருப்பு…..இனம்
காப்போம் என இளங்காளைக் கூட்டம்,,, போதை தலைக்கேற புறப்பட்டது… வலம்புரி ஸ்டோர்ஸ்
நோக்கி…..
கோபம் தலைக்கேறி விட்டால், என்ன
செய்கிறோம் என்பது விளங்காது. நரம்புகள் புடைக்க,
இரத்தம் சூடேறி, அறிவை இழக்கச் செய்யும் ஒரு இராசயன மாற்றம் அது. கிளம்பும் போது மனதில் இருந்தது என்னவோ, சும்மா
கூட்டம் கூட்டிக் காட்டி, எங்களுக்கும் தெம்பு உண்டு, நாங்கள் அடி வாங்கி ஓடிய அணாதைகள் இல்லை என்று
காட்டத்தான். நான் அடிக்கடி இந்த
பகுதியில் குறிப்பிடும் குழுக்கலாசாரம்,
குழுவின் குணாதிசயங்கள் வித்தியாசமானவை.
தனி மனிதனாக இருக்கும் மன நிலை வேறு,
அதே மனிதர்கள் ஒரு கூட்டமாகக் குழுவாக மாறும்போது இருக்கும் மன நிலை வேறு…
அந்தக் கூட்டத்துக்கு என்று ஒரு மன நிலை இருக்கும். சமீபத்திய மெரினா, மற்றும் தமிழகம் தழுவிய
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்தது அதுதான்.
சரி, இப்போது நமது மாணவர்கள்,
கூட்டமாக கையில் கிடைத்தவற்றை எல்லாம் ஏந்திக்கொண்டு, வலம்புரியினர் வந்த அதே
பாணியில் ஒன்று கூடி, வலம்புரி ஸ்டோர்ஸ் சென்றனர். வழி எங்கும் ஆர்ப்பாட்டம். ( இராமனின் சேனையில் வானரங்கள் இலங்காபுரி
சென்றதை மனக்கண்ணில் எண்ணிப்பார்க்க முடிகிறது) கைகளில் கல்லெடுத்தவர் கருத்தெல்லாம்,
நம் கல்லூரியை எரிக்க வந்து விட்டார்களே என்ற பேச்சு வழியெங்கும் தலை
எடுத்து, மனம் தீப்பந்தமாக கொழுந்து விட
ஆரம்பித்து விட்டது. கல் தாங்கிய கைகளில்
கனல் தாங்கினால் என்ன? என்றொரு எண்ணம் மொட்டாகி மெல்ல மலர ஆரம்பித்தது.
அன்றைய தேவகோட்டை பேருந்து
நிலையத்துக்கு அருகே, மலர் அங்காடிகளுக்கு அடுத்து, தகர சீட்டுகளால்
வேயப்பட்டு, அனைத்துப் பொருட்களும்
கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் இந்த வலம்புரி ஸ்டோர்ஸ். காய்கனி, அரிசி, பால்,
துணிமணி தவிர பிற அனைத்தும் விற்கப்பட்ட கடை இது.
கல்லெறிய ஆரம்பித்தனர் சிலர். நான்
இல்லை,,, நீ இல்லை… என்று அதுவாகவே பற்றிக் கொண்டது போல ஒரு
அக்கினிக் குஞ்சு யார் கையோ பொரிக்க, குஞ்சு,,,, ஜுவாலை ஆகி, பெருந்தீ ஆகி,
வலம்புரி ஸ்டோர்ஸ் முழுவதும் பற்றி எரிந்து சாம்பல் ஆனது.
சினிமாத் திரையின் காட்சி
மறைத்த காரணம் இவ்வளவு பெரிய தீஞ்செயலில் கொண்டு போய்ச் சேர்த்தது. எல்லா தீய விளைவுகளுக்கும் ஒரு அர்த்தமில்லாத
சிறிய செயல்தானே காரணமாக இருந்து இருக்கிறது.
முதல் உலகப் போர் கூட அப்படித்தானே!
இதுதான் நான் பீடிகை போட்டு எழுதிய கோஷ்டி வீரம்.
இதே ஸ்ரீசேவுகன் அண்ணாமலை
கல்லூரியில், கல்லூரி ஆரம்பித்த
காலத்தில், திரு. இராம. வெள்ளையன் அவர்கள்
நகர் மன்றத்தலைவர் ஆக இருந்த சமயம், அரசியல் காரணமாக ஒரு வன்முறை சம்பவம்
அரங்கேறியது. அது பற்றி அடுத்து நாம் நகராட்சி அலுவலகம் அருகே செல்லும் சமயம்
பார்ப்போமே…
இந்த வலம்புரி ஸ்டோர்ஸ் விட்டு
விட்டு இன்னும் கொஞ்சம் தள்ளி நகர்ந்தால் தேவகோட்டை பேருந்து நிலையம் வந்து
விடும். இதன் எதிர்ப்புறம் எப்போதும் குதிரை வண்டிகளும், டாக்சிகளும் ஒரு
காலத்தில் நிற்கும். அன்றைய நாட்களில்
ஓடிய பேருந்துகள், பேருந்து நிலையத்தின் அமைப்பு, சுற்றி இருந்த கடைகள்,
வீரபத்ரபிள்ளை மரக்கடை, பேனாக்கடை லட்சுமணன், முனீஸ்வரர் கோவில் ஆலமரம் இது பற்றி
எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போமே…. என்ன கால் வலிக்கிறதா… இன்னும் கொஞ்சம்
தான் பயணம்… அதன் பிறகு உட்கார்ந்து பேசலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக