அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 56
அசை போடும்
..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
17-05-2018
பகுதி: 56
அன்புச் சொந்தங்களே,
சென்ற பகுதியில் வலம்புரி ஸ்டோர்ஸ் முன்புறம் இருந்தோமோ? . சென்ற பகுதியின் பதிவில் ஒரு முக்கிய திருத்தம். நான் குறிப்பிட்டது போல வலம்புரி ஸ்டோர்ஸ் உடனடியாக மாணவர்களால் எரிக்கப்படவில்லை.
அன்பு நண்பன் மதுரையில் இருந்து தொலை பேசி மூலம் அழைத்து மாணவர்களின் ஆரவார,ஆர்ப்பாட்ட,கடை எரிப்பு சம்பவங்கள் மாணவர்களால் நன்றாக திட்டம் தீட்டப்பட்டு அடுத்த நாள் அரங்கேறியது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வலம்புரி ஸ்டோர்ஸுக்கு முன்புறம் இந்த சம்பவம் நடந்த அன்று ஒரு தெருவோர, கைலி/ லுங்கி வியாபாரி பெரிய காண்டா விளக்குகளின் வெளிச்சத்தில் கடை போட்டு வியாபாரம் செய்து கொண்டு இருந்திருக்கிறார். இந்த மாணவர் கூட்டம் அந்த விளக்குகளை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை கடைய மீது ஊற்றி அந்த விளக்கின் சுடரிலேயே கடையைப் பற்ற வைத்து விட்டதாக விபரம் சொன்னார்.
அவர் சொல்லி முடித்து வீடு வந்து சேர்ந்ததும், மதிப்பிற்குரிய ஆசான் குமரப்பன் அவர்களிடம் இருந்து முக நூலில் பின்னூட்டம் வருகிறது, இன்னும் விளக்கமாக. என்ன நடந்தது?. எப்படி நடந்தது? அதன் பின் மாணவர்கள் மீது என்ன பின் விளைவுகளை ஏற்படுத்தியது? போன்ற பல நினைவுகளை பகிர்ந்து இருந்தார். அவரின் வார்த்தைகளில் அதை அப்படியே தருகிறோம் கீழே :
Prof.: SETHURAMAN KUMARAPPAN:
வலம்புரி ஸ்டோர் எரிப்பு என்பது மாணவர்கள் திரைப்படங்களில் வருவதுபோல் திட்டமிட்டு செய்தனர். அன்றைய மாணவர்கள் நல்ல திடகாத்திரமாக வாட்ட சாட்டமாக இருப்பார்கள் . ஆனால் மரியாதையாய்ய் நடப்பார்கள் . இதில் பங்குபெறவர்கள் பெரும்பாலும் விடுதி மாணவர்களே. விடுதியில் கிராமப்புற மாணவர்களே அதிகம் இருந்ததால் அவர்கள் தைரியமானவர்களாகவும் இருந்தார்கள்.
திரை அரங்கில் இருந்து அடிபட்டு வந்த மாணவர்கள் நள்ளிரவில் கூடி திட்டமிட்டு சென்றார்கள். அனைவரும் வெள்ளை டிராயர் அல்லது மடித்துக்காட்டிய வெள்ளை வேட்டி, வெள்ளை பனியன்,தலையில் வெள்ளை துண்டு கட்டிக்கொண்டு சென்றார்கள், எல்லோரும் ஒரே வெள்ளை.யாரையும் அடையாளம் காண முடியாது. தீ வைத்தபின் வலம்புரி ஸ்டோர் எரிகிறது. அப்பொழுது தேவகோட்டையில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை. காரைக்குடியில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்தது. அதை ராம் நகரிலேயே மாணவர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர். இவர்களை விரட்டி தீயணைப்பு வாகனம் கடைக்கு செல்வதற்குள் பெரும்பகுதி எரிந்துவிட்டது.
இதற்கு தலைமை தாங்கிய மாணவர்களில் பேரவை செயலர் மோகன்குமாரும் ஒருவர், பி.எஸ்சி வேதியல் படித்தார். சிறிய உருவம். கெட்டிக்காரன். தபோது மு.க. அழகிரியின் வக்கீலாக மதுரையில் இருக்கிறார். மற்றொருவர் தொண்டியை சார்ந்த முஸ்தபா. நல்ல திடகாத்திரமானவர்.பி.எஸ்சி கணிதம் படித்தார்.பிறரை எனக்கு நினைவில்லை. தீ வைத்தவர்கள் எல்லாம் இரவோடு இரவாக தப்பி ஓடிவிட்டார்கள் திட்டமிட்ட செயல் என்பதால் காவல்துறை மிக கோபமாக இருந்தது.
நள்ளிரவு 2 மணிக்கு காவல்துறையினர் கல்லூரிக்கு வந்தனர். தகவல் அறிந்துஆசிரியர்க சிலரும் அங்கு சென்றோம் .வீட்டுக்கு போகவிரும்பும் மாணவர்கள் வரலாம், பணம் தருகிறோம் என அழைத்தார்கள். பயந்த அப்பாவி மாணவர்கள் வீட்டுக்கு போய்விடலாம் என வந்தார்கள். ஒன்றும் செய்யாத அறியாத அங்கு வந்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றார்கள். முதல்வர் ஆசிரியர்கள் சொல்லியும் கேளாமல் அப்பாவிகளை அழைத்து சென்று தீ வைத்தவர்களை சொல்லுமாறு கூறினார்கள். மாணவர் ஒற்றுமையால் காவல் துறையால் உண்மை குற்ற வாளிகளை கண்டறிய முடியவில்லை.அப்பாவிகள் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கு நடந்தது. அப்பொழுது புகுமுகவகுப்பு படித்த மாணவர்களெலாம் பட்டப்படிப்பு வேறு கல்லூரிகளில் படித்தாலும் மாதம் ஒருமுறை வழக்கு வாய்தாவிற்கு தேவகோட்டைக்கு வந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு முதல்வர் சீனிவாசன் முயற்சியால் மாவட்ட ஆடசித்தலைவரை அணுகி இவர்கள் படும் பாட்டைக் கூறி வழக்கிலிருந்து விடுவித்தார். காவல் துறை கூறுவதை எப்பவும் நம்பக்கூடாது. நன்மை செய்வதுபோல் சொல்லி வழக்கில் மாட்டி விடுவார்கள் என்பதற்கு இச் சம்பவம் ஒரு சான்று.திறமைசாலிகள் செய்வதை செய்துவிட்டு தப்பித்தார்கள். ஒன்று மரியாதை அப்பாவிகள் மாட்டிக்கொண்டு சிரமப்பட்டார்கள் .
இந்த வலம்புரி ஸ்டோர்ஸைக் கடந்து இன்னும் முன்னே பேருந்து நிலையம் நோக்கி நமது நடையை போடுவோம். இதற்கு இடையில் சில பூக்கடைகள், கீழே சாக்கடை. இதில் லண்டன் தி.வீட்டு (மீனாட்சி ஐஸ் கம்பெனி ) தோட்டத்தில் முன்பு குடியிருந்த திரு.இராமலிங்கம்/ அவரது தம்பி கடை வைத்து இருந்தார் என்று நினைக்கிறேன். மற்றோரு பூக்கடை திரு.தேவதாஸ், என் மைத்துனரின் நெருங்கிய கூட்டாளி. அதற்கு அடுத்து ஒரு டீ கடை. 70 களில் தேநீர் கடைகளில் இசைத்தட்டு சுழன்று கொண்டே இருக்கும். கேசட் பிளேயர்கள் 75க்கு மேல் தான் தேவகோட்டை போன்ற பகுதிகளில் வர ஆரம்பித்தன. டீ கடைகளில் இசைத்தட்டு மூலம் இசை முழங்க இசைப்பிரியர்கள் தேநீரோடு தேனிசையும் பருகுவர். காரைக்குடியில் அம்மன் சன்னதியில், A .M .ஜோதிமணி கடைக்கு எதிர்புறம், மணிக்கூண்டுக்குபி பின் புறம் ஒரு தேநீர் கடையில் நல்ல மேற்கத்திய இசை, பாப் இசை பாடல்கள், தரமான பெருக்கிகளைக் (AMPLIFIER )கொண்டு இசை முழங்கி கொண்டு இருக்கும். புரிகிறதோ, இல்லையோ, ஆங்கிலப் பாடல்கள் கேக்கிறோமாக்கும் என்ற தோரணையில் அழகப்பா கல்லூரி மாணவர்களை அங்கே பார்த்து இருக்கிறேன். இந்த பாடல்களை கொண்டே தேநீர் விற்பனை, சமோசா, வடை யுடன் களை கட்டும். அதே பாணியில் நம்ம தேவகோட்டையில் பேருந்து நிலையத்துக்கும் இந்த பூக்கடைகளுக்கும் இடையில் தேநீர் கடை, இசைத்தட்டில் பாடல்களை வழங்கியபடி. 1976ல் 'அன்னக்கிளி' திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே, அதன் பாடல்கள் இசைத்தட்டில் வெளி வந்து படு போடு போட்டபோது இந்தக் கடையில் தேனீர் அருந்திக் கொண்டு அன்னக்கிளி உன்னத் தேடுதே வை ரசித்த நினைவு வருகிறது.
அப்பா...
ஒரு வழியாக பேருந்து நிலையம் வந்து விட்டோம் ஐயா. சரஸ்வதி தியேட்டரில் இருந்து பேருந்து நிலையம் சேர்வதற்குள் எத்தனை மண்டகப்படி அப்பா...
தேவகோட்டை நகராட்சி மிகவும் பழமையானது. நம்ம ஊர் பேருந்து நிலையத்தை சாதாரணமாக நினைக்காதீர்கள். மிகவும் தொன்மையானது. கரி வண்டிகள் எல்லாம் ஓடியது நமது ஊர். எனக்கும் இந்த பேருந்து போக்கு வாரத்துக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம சொந்தம் உண்டு. எனது மாமா மணி அவர்கள், 1950களில் இருந்து 70கள் வரை தேவகோட்டையில் இருந்து மானாமதுரை வரை செல்லும் கமர்சியல் டிரான்ஸ்போர்ட் (COMMERCIAL TRANSPORT )இல் மெக்கானிக்காக பணி புரிந்தார். என் சித்தப்பா பவளம் அவர்கள், தாளையான் பஸ் லைன்ஸ் எனும் T B L , பஸ்ஸில் ஆரம்பித்து, செல்வம் ரோட் வேஸ் ,ராஜ்குமார் ரோட் வேஸ் போன்ற பேருந்துகளில் நடத்துனராகப் பணி புரிந்தார். எங்கள் பகுதியான ஒத்தக்கடை/ கீழக்குடியிருப்பில் இருந்து,
திரு.நடேசன் ஐயா , அவர்கள் கண்ணப்பா ரோடு வேஸ் ஓட்டுநர்
திரு. சிற்றரசு, (ஈட்டி) ஓட்டுநர்
திரு.தமிழரசு , (சிற்றரசு அவர்களின் தம்பி) ஓட்டுநர்
திரு.அனந்தரூபம்( மாமா ), நடத்துனர்
திரு.கோபால், ஓட்டுநர், மருது பாண்டியர் போக்கு வரத்து கழகம்
திரு.சேதுபதி, நடத்துனர்
திரு.மலைக்கொழுந்து, ஓட்டுநர், மருது பாண்டியர் போக்கு வரத்து கழகம்
இப்படி தேவகோட்டை பேருந்து நிலையத்தில் காண்பவர் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பந்தப்பட்டு இருந்தவர்கள். எனவே தேவகோட்டை பேருந்து நிலையம் சொந்த வீடு போல. இதற்கெல்லாம் மேலாக, பாண்டியன் போக்கு வரத்து கழகத்தின், UNIT II , என்று காரைக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல் பட்டு வந்த போக்கு வரத்து நிறுவனத்தில் 1982 ஜனவரி 15 ஆம் நாள் நான்இள நிலை உதவியாளராக (JUNIOR ASSISTANT
), மத்திய கொள்முதல் மற்றும் மத்திய கிடங்குப் பிரிவில் பணியில் அமர்ந்தேன்.
அப்போது, காரைக்குடி மகர்
நோன்பு அக்ரஹாரத்தில் P R C –UNIT II, காரைக்குடி என்ற பெயரில் மதுரை பாண்டியன்
போக்கு வரத்துக் கழகம் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப் பட்டது. பின்னர்,
மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகம் என்ற பெயருடன் தனியே இயங்க ஆரம்பித்து, தலைமையகம்
ஐந்து விளக்கு அருகில் இருந்தது. அதன்
பின்னர் காரைக்குடி, மானகிரி சாலையில் பெரிய அளவில் இடம் கையகப்படுத்தப்பட்டு
அங்கு அனைத்து தலைமை அலுவலப் பிரிவுகளும் அங்கு இடம் பெயர்ந்தன. முந்திரிக் காடாக இருந்த அந்த இடம் ‘மருதுபதி’
என்ற பெயர் பெற்றது. தமிழகத்து சாலை
போக்குவரத்தின் உன்னத காலம் என்றே அதைச் சொல்லலாம். மாட்டு வண்டிகள் மட்டுமே போய்க் கொண்டு இருந்த
குக்கிராமங்களுக்கு எல்லாம் தமிழக அரசு பேருந்துகள் சென்று கொண்டு இருந்தன. தனியார் பேருந்துகளுடன் பேருந்துப் பராமரிப்பு
ஆகட்டும், பேருந்தின் உள் கட்டமைப்பு ஆகட்டும், சரியான நேரத்துக்கு வண்டிகள்
புறப்படும் நேரந்தவறாமை ஆகட்டும், டீசல் சேமிப்பு என்று எல்லாத்துறைகளிலும்
முன்னிலை வகுத்தது. நமது பகுதியில் நிறைய
வேலை வாய்ப்பு ஏற்பட்டது.
அந்த மருதுபதி தலைமை அலுவலகம்
ஒரு பெரிய பல்கலைக் கழகம் போல பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. அதில் மத்திய கொள்முதல் பிரிவில் பணி புரிந்த
எங்கள் குழு அனைவருமே வயது இருபதுகளில்.
எனக்கு வயது 22, கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள். காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, பரமக்குடி,
இராமனாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை என்று
கிளைகள். இவை தவிர திருச்சியில்
கூடுகட்டும் (BODY BUILDING) பிரிவு,
தேவகோட்டையில் டயர் புதுப்பிக்கும் பிரிவு. ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 30 புதிய
பேருந்துகளின் அடிச்சட்டம் (CHASSIS), இத்தனை கிளைகளுக்கும் தேவையான உதிரி
பாகங்கள், டயர் கொள்முதல் செய்வது, கூடுகட்டும் பிரிவு, டயர் புதுப்பிக்கும்
பிரிவு, பழுதகற்றும் பிரிவு (RE CONDITIONING UNIT) என்று இவை அனைத்துக்கும்
பொருட்கள் கொள்முதல் செய்யும் பணி.
வணிகவியல் படித்து வந்தவனை, பேருந்துகளின் உதிரி பாகங்கள், அவற்றின் பாகம்
எண் (PART No), என்று கிட்டத்தட்ட ஒரு மெக்கானிகல் எஞ்சினீயர் அளவுக்கு கற்றுக்
கொடுத்த பள்ளி அது. 1988 வரை ஒரு
குடும்பமாக அங்கு உலவி வந்தேன். எனவே
இந்தப் பகுதியில் இயங்கிய பேருந்துகள் பற்றிய, இயக்கிய மனிதர்கள் பற்றிய நினைவுகள்
ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டு இருக்கின்றன.
அத்தோடு, இளம் வயது, நல்ல குழு (TEAM), கவலை இல்லாப் பருவம், எனது இலக்கிய தாகத்தையும் தீர்த்த இடம் இந்த
மருது பாண்டியர் போக்கு வரத்துக் கழகம். கற்றறிந்த சக ஊழியர்கள், என் கவிதைகளுக்கு
நல்ல வரவேற்பும், ஊக்கமும் அளித்து எனக்கு ஒரு தன்னம்பிக்கையை விதைத்தார்கள். அவ்வப்போது, மருது பாண்டியர் மலர் என்ற
பெயரில், ஒரு சஞ்சிகை வெளியிடுவார்கள், அதில் எனக்கு எழுத நிறைய வாய்ப்பு.
யாருக்கும் திருமணமா, அமைச்சர் பெருமகனார்
எவருக்கும் வாழ்த்துப்பா எழுத வேண்டுமா,
பிடி…. முத்துமணியை என்ற அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கழகத்தின் சார்பில் இசைக்குழு இருந்தது. நான்
அகில இந்திய வானொலியில் (ALL INDIA RADIO) நாடகம் எழுதி சக நண்பர்களோடு சேர்ந்து
நடித்தும் இருக்கிறேன்.
ஒரு முறை கவியரங்கப் போட்டி
நடத்தினார்கள். கவிதை எழுத வேண்டிய
தலைப்பு, “பயணியும்…பேருந்தும்”.. கொஞ்சம்
மண்டை காய்கிற ( DRY) தலைப்புத்தான். உங்கள் தேவகோட்டை முத்துமணி விடுவானா?? என்
அன்பு நெஞ்சங்களுடன் அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெருமையே..அந்த
நிகழ்வு பற்றி மருது பாண்டியர் மலரில் வெளிவந்த பகுதியை அப்படியே வழங்குகிறேன்.
சரியாக 34 வருடங்களுக்கு முன்
நடந்த நிகழ்வு.:
28-04-1984
அன்று மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளத் தோழர்களிடையே கவியரங்க நிகழ்ச்சி
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழ் மேல் பற்றுக் கொண்ட இளம் உள்ளங்கள் தத்தம் கன்னிக்
கவிதைகளை தமிழ்க்காவலர்களான
·
திரு.
மா.கண்ணப்பன், தமிழ்ப் பேராசிரியர், அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, காரைக்குடி
·
மக்கள்
கவிஞர்.அரு.நாகப்பன்,
·
கவிஞர்.சோம.சிவப்பிரகாசம்
·
திருமதி.ஸ்ரீவள்ளி,
தமிழ்த்துறைப் பேராசிரியை, சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி, பள்ளத்தூர்
ஆகியோர்
நடுவர்களாக வீற்றிட அரங்கம் நிறை தொழிலாளர்கள் முன்னிலையில் எழிலுற அரங்கேற்றினர். கவியரங்கத் தலைப்பு, ‘பயணியும் பேருந்தும்’. அவ்விளம் கவிஞர்கள்:
1.
திரு.வ.முத்துமணி, தலைமையகம்
2.
திரு.ஜே.ஜி.நீலகண்டன் “ “
3.
திரு.தங்க.முருகேசன் திருச்சி, கிளை
4.
திரு.நா.புருசோத்த்மன் தலைமையகம்
5.
திரு.சி.பி.ஜே.வில்லியம்ஸ் “ “
6.
திரு.வி.ஆர்.செல்லையன் பட்டுக்கோட்டை
7.
திரு.எம்.ஏ.இராமசாமி பட்டுக்கோட்டை
8.
திரு.எம்.இராஜேந்திரன் பட்டுக்கோட்டை
9.
திரு.எம்.அமலநாதன் தேவகோட்டை
10. திரு.குணசேகரன் திருப்பத்தூர்
அரங்கத்தில்
இருந்தவர்கள், கவிதை மழையிலே நனைந்தனர். கோடையிலே,
குளிர் ஓடையிலே, தண் புனலில் நீராடிய சுகம் பெற்றனர்.
இக்கவியரங்கத்தில்
முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள்:
1.
திரு.வ.முத்துமணி, தலைமையகம்
2.
திரு.ஜே.ஜி.நீலகண்டன் “ “
3.
திரு.தங்க.முருகேசன் திருச்சி, கிளை
இதோ முதல்
பரிசு பெற்ற கவிதை:
பயணியும் பேருந்தும்
கவிஞர்.வ.முத்துமணி, மையக் கொள்முதல் பிரிவு, தலைமையகம்
காப்பு:
இமய வரம்பினில் எழிலுடைக் கொம்பொடித்து
சமயம் தீட்டிய
சன்மார்க்க
குருவே!
உமையவள் உடலிடை ஒளிர்ந்த
திருவே!- வேலவன்
தமையனாய் வந்துதித்த தருமத்தின்
உருவே!
வேழ வடிவே வேதத்தின் முடிவே! எந்தன்
தோழனாய் வந்து
துயர்களைந் திடுவாய்.
தமிழ் வாழ்த்து:
அண்டமெலாம் அமையுமுன்னே ஆதியாய் வந்தஎங்கள்
பண்டமிழே பழச்சுவையே பாரினிலே மூத்தவளே
பொதிகை பிறந்து புதுமைகள் சுரந்து
எதுகையிலே இசைக்கின்ற இனிய கீதமே!
சங்கம் நின்று சகாப்தங்கள் வென்ற
தங்கத் தமிழே தளிரொளிப் பொழுதே!
என்றுமுள செந்தமிழே எம்மதியில் வா!வா!
மன்றத்தில் மறவாமல் மயிலினொயில்
தா!தா!
அவை வணக்கம்:
அரங்கம் அமைந்துள அறிவு மேகங்களே- தமிழ்
சுரங்கத்தில் மணியெடுக்கும் சுகந்த ராகங்களே!
கன்னித் தமிழொடு கருத்து உறவாடி
கன்னல் கவிச்சேயைக் கருவாக்கும்
கவிஞர்களே!
வீட்டில் வேலைகள் வெவ்வேறு
இருந்தாலும் எம்
பாட்டிலே மயங்கவந்த பாவையரே! பூவையரே!-
கன்னிக் கவிகளுக்கும் காட்டும் செவிகளுக்கு
சென்னி வணங்குகிறேன் சிறியேன் இவ்வரங்கில்!
கவிப் பொருள்:
பயணியும் பேருந்தும் பாட்டரங்கத் தலைப்பென்றார்- வாழ்வுப்
பயணங்கள் எந்நாளும் பாலுலகில் முடிவதில்லை.
ஆதிநாள் முதலாய் அந்திமக் காலம்வரை
பாதி வாழ்வினிலே பயண நினைவுகள்தான்….
உருவ மாறுதலும் உணர்வு தேறுதலும்
பருவப் பயணங்கள் பதித்த சுவடுகள்தான்
பயணம் முடிந்தாலும் பயன்கள் முடியாமல்
நயணங்களில் நின்று நர்த்தனம் நடத்திடும்
பேசுகிறது பேருந்து:
பேச வருகிறது பேருந்து இப்போது- தமிழ்
வாச மலர்தொடுக்கும் வார்த்தைகள் தப்பாது!
ஒலியினைக் கேட்டே வழிகொடுக்கும் பெரியோரே!
கலியுகக் கல்கியென் கவிகளயும் கேளுங்கள்.
மனிதர் கூட்டம் மாநிலத்தில் பெருகியதால்-என்
புனிதச் சேவைக்குப் போதவில்லை
எங்குடும்பம்-நீவிர்
இனிதே குடும்பத்தை இறுக்கி வாழ்ந்திருந்தால்
கனியாகும் வீடு, கவினாகும் நாடு!
தமிழும் நானும்:
தெருவெல்லாம் தமிழ்முழக்கம்
கேட்கச் செய்வீர் எனும்
மருவில்லா மாகவியின் மாகாதல் கட்டளையை
தெருநெடுவே நிறைவேற்றும் திறனுள்ள பணியாளன்- உயிர்க்
கருவாம் தமிழைக் கருத்தேற்றும் நல்லாசான்
விரும்பாமல் படித்திட்ட விண்மணித் திருக்குறளைத்
திரும்பஎண்ண வைப்பேன் எந்தேகத்திலே வரைந்து,
சரித்திரம் காட்டும் சான்றோர் தம்திறம்
விரித்திடவே அவர் விலாசம் கொண்டேன்,
கயலும் வில்லும் கரியெதிர் புலியும்- மனம்
மயலுரும் வண்ணம் மண்மேல் உலவிச்
செயலுரும் திறத்தால் சிந்தை யெலாம்
நயமிகும் நற்றமிழே நல்லரசு புரியும்.
தீண்டாமை ஒழிப்பேன்:
பட்டங்கள்
பெற்றுப் பாரினைக் கூட்டிச்
சட்டங்கள் இயற்றிச் சாதிகளைந் தாலும்-களையான
தீண்டாமைத் தீயைத் தீயிலிட்டுப் பேதம்
தூண்டாமல் துண்டாடும் தொண்டர்படை நாங்கள்
இருக்கை பிடிக்கின்ற இழுபறி நேரத்தில்
தெருக்கள் பெருக்கும் தேவானை கூடச்
செருப்பு நிறத்தில் சேலையைப் பொறுக்கும்
எருக்கம்பட்டி
ஜமீன் எசமானி அம்மாளிடம்
அடிப்படை உரிமையினை அமல் நடத்துகிறாள்
துடிப்பிடை வெடிக்கிறாள் தூய நெறிகளுடன்
சாதிமதம் பேசல் சமயத்துப் பூசல்
வீதிகளில் விரியும் விரசகாலத்தில் வேதம்
ஓதி உணர்த்தும் ஒன்றே குலத்தின்
தூதாய் வருகின்ற தூயவர் நாங்கள்
காதல் வளர்ப்போம்:
காதல் கண்களில் கவிதை(க்)கள் பூக்க-
உள்ளம்
நோதல் என்னும் நோயினைப் போக்க
மன்மத இராச்சியத்தின் மதியூக மந்திரியாய்
மன்பதை வருவோம் மகிழ்வுச் சந்திரராய்
செல்லும் வழியெலாம் சிந்தையைத் தாக்கும்
இல்லாள் நினைவினை இமைகளில் தேக்கிச்
சனிக்கிழமை விளிம்பில் சல்லாபம் நோக்கி
இனிப்புடன் வருகின்ற இளைஞனை அறிவேன்
காலை வேளைகளில் காரியம் ஆற்றவென
வேலைப் பளுவெண்ணி விரைகின்ற என்மீது
கல்லூரி செல்கின்ற கன்னியரின் கூட்டம்
சோலை மலராட்டம் சொப்பன நடமாட்டம்
காயும் நிலவுகளாம் கனிந்த கன்னியரை
மேயும் மந்தைகள் மின்னேற்பு விந்தைகள்
பாயும் ஆவல்கள் பருவவிழி மேவல்கள்
சாயும் சேவல்களின் சங்கேதக் கூவல்கள்
கச்சேரி நடத்தும் கண்களின் கவிதைகளை
அச்சேற்றம் செய்யும் அழகான கூடம்யான்
பரிமாறும் பார்வைகளை பல்நூறு கவிதைகளை
விரிவாகப் படிக்கின்ற விசயமுள்ள மாணவன்யான்
உறவினைப் பிரிந்து உயிர்
நீங்குமெனில்-எந்தன்
சிறகினை விரித்தே சேர்ப்பேன் உறவுகளை
கடைசி நேரக் கண்களின் காட்சியெலாம்
இடையிலே நான் இல்லை யெனிலில்லை!
நான் சொல்லும் தத்துவம்:
வாழ்வில்…..
செல்லும் ஊரரிந்து சீராய் நடப்பவர்கள்
நில்லாமல் சேர்ந்தடைவார் நிறுத்தம் அறிந்து
பாதை தெரியாமல் பயணம் தொடங்குபவர்
வாதை யடைகின்றார் வகை புரியாமல்- நான்
வழிதொறும் போதிப்பேன் வாழ்வின் தத்துவம்-மன
விழிபடைத் தோர்க்குயான் வேதப் புத்தகம்
பொருளாதாரம்:
பொருளா தாரத்திற்கும் போக்குவரத்தே ஆதாரம்
மருளாமல் மக்களுக்கு மண்டலத்துப் பொருள்யாவும்
எட்டுவது
எக்காலம் எளியேன் இல்லையெனில்
கட்டாயம் பேருந்தெனக் காலம் மாறுகையில்- வெறும்
சொல்லிலே என்ன சுவைகூட்ட முடியும்?-கோழி
சொல்லிய பின்பா சுடர்வந்து விடியும்?
இன உணர்வு:
ஈழத்தீவினிற்கு இங்கிருந்து சாலை என்றால்
வேழமாய் நான்விரைந்து
இருப்பேன் இந்நேரம்
தோழனாய் உங்களைத் தோள்மேல் சுமந்திருப்பேன்
சோழனாய்ப் போர்தொடுப்பேன் புலிப்படை அணைத்திருப்பேன்
முடிப்பு:
பேருந்து பல பின்னால் நிற்பதனால்-யானும்
சேரும் இடம்நோக்கிச் செல்லவும் வேண்டியதால்
வாரும் பயணியரே வழிநெடுகப் பேசிச்செல்வோம்
ஊரும் உறவுமாய் உண்மைகளைப் பூசிக்கொள்வோம்
தாவரங்கள் கூடத்தமிழேயுனைத் தா வரங்கள் எனும்
தேவகோட்டை வாழ்த் தென்பாண்டிச் சிம்மங்கள்
நாமணக்கும் நற்றமிழை நலமுறப் பிச்சையிட்டார்-யான்
பாவரங்கில் பங்கெடுக்கும் பாங்கினுக்கும் வித்திட்டார்
குறைகள் எப்போதும் கூடவே வருவதுதான்
நிறைமட்டும் எண்ணி நேயனை வாழ்த்திடுவீர்.
சரி…. தேவகோட்டை பேருந்து நிலையத்தைப் பற்றிப் பேசப்போய்,
பஸ் ஏறிக் காரைக்குடி வந்து விட்டோம். நினைவு
எப்பவும் அப்படித்தானே..அதுவும் கவிக்கிறுக்கனின் நினைவு அல்லவா? கவி (குரங்கு) போல கிளைக்குக் கிளை தாவிக் கொண்டுதானே
இருக்கும்? மன்னிக்கவும்.. ஒரு சுவைக்காக தமிழ்க்கவிதையைச் சேர்த்து விட்டேன். இப்போது back to Bus Stand.
என் மனத்து நினைவில் இருக்கும்
தேவகோட்டை பேருந்து நிலையம், தலை கீழாகப் போட்ட ஆங்கில எழுத்து L வடிவில் இருக்கும். திருப்பத்தூர் சாலையை நோக்கி நீண்ட மைதானம், உள்ளே
வலது பக்கம் திரும்பி பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியினைத் தொடும். பேருந்து
நிலையத்தின் வலது புறம் முன்பு சொன்ன டீக்கடை மற்றும் பூக்கடை, இடது புறம், முத்து
ரேடியோஸ். நகரின் பெரிய ரேடியோ விற்பனைக் கடை.
மர்பி, பிலிப்ஸ், புஷ் பாரன் (MURPHY, PHILIPS, BUSH BARON) என்ற பிராண்டு ரேடியோ செட்கள்
மிகப் பிரபலம். இந்த முத்து ரேடியோஸினை அடுத்து, வீரபத்திர பிள்ளை மரம், ஓடு வியாபாரக்
கடை. அதை ஒட்டினாற் போல் ஒரு ஆல மரம். அந்த மரத்தடியில் முனீஸ்வரர், சூலாயுத வடிவில்.
(இவை பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்). இந்த வீரபத்ர பிள்ளை மரக்கடை அளவில் மிகப்பெரியது. நகரின் முக்கிய நடு நாயகமான இந்த இடத்தில் இவ்வளவு
பெரிய அளவு திறந்த வெளியுள்ள கடையை இன்றைய கால கட்டத்தில் நினைத்துக் கூடப் பார்க்க
இயலாது. தேவகோட்டை பேருந்து நிலயத்தின் உட்புறம்
இந்த வீரபத்திர பிள்ளை மரக்கடையின் பின் புறம் வரை வளைந்து இருக்கும்.
இந்த உட்புற இடமெல்லாம்,
ஓடு மற்றும் தகரக் கூரை வேய்ந்த கட்டிடங்கள் இருக்கும். இதுதான் பயணிகள் வந்து உட்காருவதற்கான
இடம். திருப்பத்தூர் சாலையில் இருந்து பேருந்து
நிலையத்துக்குள் பேருந்துகள் நுழையும் வழியில் ஒரு அறை இருக்கும். இவை போக மற்ற இடங்களில் பலகார மற்றும் பல பல காரக்கடைகள்.
எனக்கு விபரம் தெரிந்த நினைவு அறிந்த நாட்களில், 1964~65 என எடுத்துக் கொள்ளாலாம்.
நான் குடும்பத்துடன் பயணம் செய்யும் ஊர், மானாமதுரை. அங்கிருந்து 3 மைல்கள் (4.8 கிலோ மீட்டர் நட்ந்தால்,
என் தாயார் பிறந்த அன்னவாசல் கிராமம்). அப்போது
எல்லாம் ஒவ்வொரு பேருந்துக்கும் டிக்கெட் போடுவதறகு ஏஜண்டுகள் இருப்பார்கள். மானாமதுரைக்கு கமர்சியல் ட்ரான்ஸ்போர்ட் பஸ் போகும். பஸ் பேருந்து நிலையம் வருவதற்குக் கொஞ்சம் முன்னர்,
இந்த ஏஜண்ட், கையில் டிக்கட் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு இந்த பயணிகள் கொன்ட்டகைக்குள்
வருவார். அவ்வளவுதான்….. அவரை கடகாப் பெட்டிகளும்,
வேப்பெண்ணெய் மணக்கும் கிராமத்து மேனிகளும் சூழ்ந்து கொள்வர், டிக்கட் வாங்குவதற்காக…
அதிகம் கேட்கும் குரல்கள்….
பாவனக்கோட்டை பரம்பக்குடி
பிலியடி தம்பம்
சருகணி
காளையார் கோவில்
அதன் பிறகு….. சிவசங்கை……மானாமதுர…..ஆமாம். மதுரையை, மருத என்றும், சிவகங்கையை செவசங்க என்றும்
சொல்ல வில்லை என்றால், அவர் நம் மண்ணின் மைந்தர் அல்ல என்று அர்த்தம். இந்தக் குரல்களில் எது அதிக தூரம் உள்ள ஊருக்கு
கேட்கிறது என்று பார்த்து அவர்களுக்கு முதலில் டிக்கட் போட்டுக் கொடுப்பார் இந்த ஏஜண்ட். அப்படி எல்லா டிக்கட்டும் அவர் போட்டு முடித்த பின்னர்
தான் இந்தக் கமர்சியல் பஸ் உள்ளே நுழையும்.
பின்னர் டிக்கட் எடுத்தவர்கள் பேருந்தில் ஏறிக்கொள்வர். இந்த கமர்சியல் ட்ரான்ஸ்போர்ட் ஏஜண்டின் முகம் இன்னும்
இப்போதும் நினைவில் இருக்கிறது. பெயர் தான்
மறந்து விட்டது. இவர் இரவுசேரியில் இருந்து வருவார். டிக்கட் எல்லாம் போட்டு பேருந்து கிளம்பியதும்,
தனது ஏஜண்ட் கமிசனை வாங்கிக் கொண்டு அந்தப் பேருந்திலேயே வருவார். சிவன் கோவில் முக்கில் பேருந்து வட்டாணம் ரோடில்
திரும்பும் இடத்தில் இறங்கி இரவுசேரி செல்வார்.
காரைக்குடி, திருப்பத்தூர்
வழியாக மதுரை செல்லும் பேருந்துகள் முக்கால்வாசிக்கும் மேல் ‘சொ’ அவர்கள் தான் ஏஜண்ட். அவரது அறை தான் பேருந்து நிலையத்தின் நடு நாயகமாக
இருக்கும். இவருக்குக் கைப்பிள்ளைகள் நிறைய
உண்டு. நம்ம டிரைவர், மலைக்கொழுந்தின் அண்ணன்,
அழகாபுரி தெற்குத்தெருவில் இருந்து வரும், கருணாநிதி, இன்னும் முகம் நினைவிலும், பெயர்
தொண்டைக்குழியிலும் நிற்கும் நிறைய மாமா, அண்ணன் மார்கள். பேருந்துகள் எனது நினைவில் இருக்கும் ஆதி நாட்களை
மனத்தின் அடி மடியில் சென்று, கிளறிப் பார்க்கிறேன்….
இப்போது….. ஆஆ…..நினைவின் மேல் தளத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக எழும்பி வருகிறது… அப்போது எனக்கு 4 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டு இருந்த, மாட்டுச் சந்தையின்
எதிர்புறம், டாக்டர்.பழனிச்சாமி அவர்களின் மாமியார் ஆன, கொச்சி அம்மா வீட்டுத் தோட்டத்தில்
குடி இருக்கிறோம். இந்தத் தோட்டம், ஆற்றுப்பாலம்
அருகில் தேவகோட்டையின் எல்லையில் காவல் தெய்வமாய் விளங்கும் அருள்மிகு கோட்டை அம்மன்
கோவிலுக்குப் பின்புறம் இருக்கும்.
எங்களைப் போன்ற எளியவர்களுக்கு,
பேருந்து வரும் நேரம் தான் கடிகாரம். சரியாக
காலையில் இந்த வீட்டில் இருந்து பார்த்தால், சிவப்பு வண்ணத்தில், கொடைக்கானல் ரோடுவேஸ், அனுமந்தக்குடிக்குச் செல்லும். காலை 7:30 என்று அறிந்து கொள்வார்கள். எனது சித்தப்பா, திரு.பவளம் அவர்கள், நகரத்தார்
பள்ளியின் மாணவர், பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமாக
இந்த கொடைக்கானல் பஸ் ஒரு அலாரம். அதே போல்,
மானாமதுரை செல்லும் ‘கமர்ஷியல் ட்ரான்ஸ்போர்ட்’ ஒத்தக்கடையைத் தாண்டினால், அய்யய்யொ, எட்டே முக்கால் பஸ் வந்திடுச்சே… நேரம் ஆகி விட்டது
என்று பரப்பார்கள். அதே போல், நேரம் தவறாமல்
ஓடும் இன்னொரு சர்வீஸ் ‘ஆண்டவர் ட்ரான்ஸ்போர்ட்’.
இரண்டு கரி வண்டிகளுடன் தொடங்கப்பட்ட ஆண்டவர் ட்ரான்ஸ்போர்ட், திரு. தாமோதரன் நாயர் அவர்களின் கடுமையான உழைப்பால்,
10 பேருந்துகள் மற்றும் 1 மாற்றுப் பேருந்து (SPARE BUS), எனும் அளவுக்கு வளர்ந்தது. தொழிலாளர்களோடு தொழிலாளராக காக்கி அரைக்கால் சட்டை
அணிந்து கொண்டு நிறுவனத்தை வளர்த்த திரு தாமோதரன் அவர்களின் காலத்துக்குப் பிறகு, அவரது
மருமகன், அரசு பேருந்துகளை எடுத்துக் கொள்ளும்
என்ற நினைப்பில் பேருந்துகளைக் குறைத்து விட்டார். சுத்தம்,
சரியான நேரம், அழகான பராமரிப்பு என்று
ஆண்டவர் ட்ரான்ஸ்போர்ட், T V S ரேஞ்சுக்கு அனைத்து விதத்திலும் முதல் தரமாகத் திகழ்ந்தது. ஆண்டவர் ஷெட் எனப்படும் அந்தக் கட்டிடமே லட்சுமி
கடாட்சத்துடன் திகழ்ந்தது. 1973இல் அவர் காலமானார்
என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் தவறானால், சரி செய்யவும். தான் உருவாக்கிய அந்த ஆண்டவர் செட்டிலேயே அவரது
உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவர் தான் நமது
தேவகோட்டை நகரத்தார்களை சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அதை பின்னர்
பலரும் பின் பற்ற வைத்தவர்.
இது தவிர, முன்னாள் நகர்
மன்றத் தந்தை, திரு. இராம.வெள்ளயன் அவர்களால் நடத்தப்பெற்ற, ‘கண்ணகி ரோடுவேஸ்’. இது பின்னர், திருப்பத்தூர், மஞ்சுளா டாக்கீஸாரிடம்
விற்கப்பட்டது.
சக்தி ரோடுவேஸ், திருமதி.ருக்மணி
அம்மையாருக்குச் சொந்தமானது. எனது அன்பு மாப்பிள்ளை
என்று அழைக்கப்படும் என் பள்ளித்தோழன், செந்தில் நாதன் அவர்களில் தந்தையார், திரு.இராமலிங்கம்
அவர்கள் இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
கண்ணப்பா வள்ளியப்பா அவர்கள்
நடத்தி வந்தது, கண்ணப்பா டிரான்ஸ்போர்ட். இந்தக்
கண்ணப்பா வள்ளியப்பா அவர்கள், நமது சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராய் போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார், ஒரு முறை. அந்த நேரத்தில் தேவகோட்டையில் இருந்து எக்ஸ்பிரஸ்
என்ற அதி விரைவுப் பேருந்தாக ஓடிக்கொண்டு இருந்தது M D T. மதுரை தேவகோட்டை டிரான்ஸ்போர்ட்
என்பதன் சுருக்கம் தான், M D T. மூன்றரை மணி
நேரத்தில் மதுரை சென்றடையும் அந்த எக்ஸ்பிரஸ் வண்டி காலை 7:15க்கு புறப்படும். அதன்
பெயரே, ஏழே கால் எக்ஸ்பிரஸ்.
அது தவிர, கண்ணங்குடி
to நேமத்தான் பட்டிக்கு ஓடிக்கொண்டு இருந்தது T B L. தாளையான் பஸ் லயன்ஸ் எனபதன் சுருக்கமே T B L ஆகும். என் சித்தப்பா திரு.பவளம் அவர்கள் இந்த பேருந்தில்
தான் உதவி நடத்துனராக முதல் பணியில் அமர்ந்தார், அதன் பின் வெகு காலம், கலாவதி ரோட்வேஸ்
என்ற லாரி கம்பெனியின், பேருந்துகளான, செல்வம் ரோடுவேஸ், மற்றும் ராஜ்குமார் ரோடுவேஸ்
முதலிய பேருந்துகளின் நடத்துனராக இருந்தார்.
சரி இவை எல்லாம் எனது இளமைக்
காலத்தில் நான் நேரில் கண்டவற்றில் நினைவில் நிற்பவை. உள்ளே ஊமையாய் உறங்குபவை எத்தனையோ?! இன்றைய இளம் தலைமுறையினர் நான் எழுதும் என் கால
நினைவலைகளை ஆர்வத்துடன் படித்து இரசிப்பது போல எனக்கும் முந்தைய கால கட்டத்தில் பேருந்துகள்
எப்படி இருந்து இருக்கும்? அதிலும் நமது தேவகோட்டையில் இருந்து இயக்கப்பட்ட அக்காலப்
பேருந்துகள் எந்த நிலையில் இருந்து இருக்கும் என்றறியும் ஆர்வம் எனக்கு… வழக்கம் போல்
எனது ஆய்வு.. தேடல், ஆராய்ச்சி என்று இறங்கி விட்டேன். பலரிடம்…. இதில் நமது நடமாடும்
READY RECKONER, நகரத்தார் பள்ளி, நூலகப் பொறுப்பாளர் மதிப்பிற்குரிய திரு.பத்மனாபன்
அவர்கள் தனது அந்த நாள் பேருந்துப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தன் மகனுடன்
வசிக்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டுக் கொண்டு இருந்தார். இருந்த போதிலும் என் நச்சரிப்புக்கு தன்னால் முடிந்த
அளவு பதில் அனுப்பினார்.
இந்த வரிகளை எழுதிக்கொண்டு
இருக்கும் இதே நேரத்தில் சில நிமிடங்களுக்கு முன்னர், தற்போது தான் அமெரிக்காவில் நல்ல படியாக வந்து சேர்ந்தேன்
என கட்செவி செய்தி அனுப்பி இருந்தார். இதற்கு
மேல் எழுதினால் சோர்வு தட்டி விடும். எனவே இன்னும் உள்ள பேருந்து பயணங்களை அடுத்த பகுதியில்
பார்ப்போமே. அது மட்டும் அல்ல. பேருந்து நிலையத்தின்
வாசல்பகுதி வனப்புகளயும் சேர்த்துப் பார்க்கலாம்.
கரி வண்டி…. காத்திருக்கும் குதிரை வண்டிகள், தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு எல்லாம் முன்னால்
மின்சார மயமான தேவகோட்டை, அந்த மின்சார உற்பத்தி மற்றும் வினியோகம் செய்த மீனாட்சி
சுந்தரேஸ்வர் மின்சார நிறுவனம், அவர்கள் இயக்கிய
S V S எனும் பேருந்து, மற்றும் மறந்து போன பேருந்துகள் என்று நிறைய இருக்கின்றது. தேவகோட்டை தான் நிகழ்வுகளும் நினைவுகளும் அள்ள அள்ளக்
குறையாத அட்சய பாத்திரம் ஆயிற்றே…
புதுமையான இந்த படைப்பு தேவகோட்டைக்கு கிடைத்த நல்முத்து.
பதிலளிநீக்குஞாபகங்கள் அருமை
பதிலளிநீக்குதேவகோட்டை பற்றி அறியவும் அசை போடவும் தங்கள் பதிவு ஊக்கம் கொடுக்கிறது .