அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 57
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
21-05-2018
பகுதி: 57
எனக்கும் என் அன்பு சொந்தங்களின் மனப்பாங்கு போலவே, பழைய வரலாற்று நினைவுகளை அறிந்து கொள்வதில் மிகுந்த விருப்பம். அதிலும் நமது நகரான தேவகோட்டையில் பேருந்து நிலையத்தின் பழங்கால சுவடுகளை நினைவுகளாக்கி நமது சொந்தங்களுடன் பகிரும் பொது ஏற்படும் மன மகிழ்வுக்குப் பஞ்சமே இல்லை, வானமே எல்லை...
ஒரு நகரில் பேருந்துகள் வந்து போகின்றன என்றால், அந்த ஊருக்கு மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று பொருள் சரிதானே? பேருந்து இயக்கம் தொழில் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்குத் தெரியும். தொழில் நுட்ப (TECHNICAL) அறிவும் வேண்டும்,பொருளாதார செறிவும்
( ECONOMIC STRENGTH ) ம் வேண்டும், வணிகமும் (COMMERCE ) அறிந்து இருக்க வேண்டும். ஒரு 70, 80 வருடங்களுக்கு முன்பே நமது தேவகோட்டையில் பேருந்து இயக்கியவர்கள்,எத்தகைய ஏற்புடைய குணங்கள் கொண்டவர்களாக இருந்து இருந்தால் தேவகோட்டைக்கு பேருந்து இயக்கி இருப்பார்கள். அப்படிப்பட்ட உன்னத அறிவு ஜீவிகள்
( SUPER BRAINS ) இயக்கிய பேருந்தைப் பற்றிப் பேசும் போது அந்த அறிவார்ந்த பெரியோர்களை நினைவு கூர்வது இந்தத் தொடரின் அங்கமான நமக்குத் பெருமை தானே!
SVS எனும் பெயரில் திருச்சிராப்பள்ளிக்கும் தேவகோட்டைக்கும் இடையில் ஒரு பேருந்து 1920 களில் ஓடியது. அதே SVS நிறுவனத்தில் இருந்து திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையில் இன்னொரு பேருந்து. பிரிட்டிஷ் இந்தியாவில், இது போன்ற பேருந்து தொழிலில் இன்றைக்கு ஏறத்தாழ 100வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்டவர்கள் எவ்வளவு முற்போக்கு சிந்தனையாளராகவும், அறிவாளிகளாகவும் இருந்து இருக்க வேண்டும்? அவர்களை பற்றி அறிந்து கொள்ள அசையா? 100வருடங்களுக்கு முன்னர் தேவகோட்டைக்கு பேருந்து இயக்கியவர் மட்டுமல்ல, நமது தேவகோட்டையை மையமாக வைத்து பல சாதனைகள் புரிந்தவர்கள். என்ன ஆயத்தமாக இருக்கிறீர்களா ? என் கை பிடித்து நடந்து வர...!
மேட்டூர் கெமிக்கல்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் , METTUR CHEMICALS &
INDUSTRIAL CORPORATION - 1941ல்
...
பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லில்., FERTILZERS AND
CHEMICALS TRAVANCORE LTD., -FACT - 1943 ல்
...
அலுமினியம் இண்டஸ்ட்ரி லிட் -Aluminium Industry
Limited of Kundara (ALIND – Kundara))- 1946 ல்.......
சேஷசாயீ இண்டஸ்ட்ரீஸ் -Seshasayee Industries
-1957 ல்
.....
திருவாங்கூர் - கொச்சின் கெமிக்கல்ஸ் -Travancore-Cochin
Chemicals- 1961 ல்...
சேஷசாயீ பேப்பர் அண்ட் போர்ட்ஸ் -Seshasayee Paper and
Boards - 1960 ல்.....
இப்படி இத்தனை பெரிய நிறுவனங்களை நிறுவி நிர்வாகம் செய்கின்ற வல்லமை படைத்த அந்த இருவர் தனது ஆரம்ப நாட்களில் SVS என்ற பெயரில் தேவகோட்டைக்கு பேருந்து விட்டு இருக்கிறார்கள் என்றால்,இது ஒன்றே போதும் தேவகோட்டையின் செல்வச் செருக்கினை எடுத்துச் சொல்ல.. இது ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கதை. சரி, யார் இந்த SVS ... என்று அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறதா? வேண்டாம் அதிகப்படியான தேவகோட்டை சாரதா கதைகள் என்று விட்டு விட முடியாது. ஏனெனில் இவர்கள் தான் இந்தியா முழுமையும் எண்ணெயில் எரியும் விளக்குகளில் இருள் கவிந்து, அருள் இழந்து கிடந்த அந்தக் கால கட்டத்தில் இன்றைக்கு 90 .. 95 வருடங்களுக்கு முன்னமேயே தேவகோட்டையில் மின்சாரம் கொண்டு வந்தவர்கள். என்ன வியப்பாக இருக்கிறதா
... உண்மை அன்பு தோழர்களே...
நமது தேவகோட்டை நானிலத்தில் நயம்பட இருந்த நன்னகரம்,பொன்னகரம்...
திரி சிரா பள்ளியின், வில்லியம்ஸ் சாலையில் அடர்ந்த மரங்களின் நிழலில் அமைதியாய் 'V S ' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெரிய பங்களா...இன்றைய வருமான வரி அலுவலக வளாகங்கள் சுற்றிலும் தற்போது இந்தப் பங்களவைச் சுற்றி.... V .சேஷசாயீ என்ற இந்த பங்களாவின் உரிமையாளர், அதிகம் விளம்பரம் விரும்பாத அடக்கி வாசிக்கும் ஆத்மா. யார் இந்த V.S .?
1890ல், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் வலடி எனும் சிறிய கிராமத்தில் வடமலை அய்யருக்கு 4ஆவது மகனாக 3 முத்த சகோதரிகளுக்குப் பின்னர் பிறந்தவர் சேஷசாயி
. 12 வயதுப் பாலகனாய் இவர் இருந்த போது , தனது தாயாரையும், மூத்த மூன்று சகோதரிகளையும் இவர் தலையில் கட்டி வைத்து விட்டு இவரது தந்தை காலமாகி விட்டார். மண்ணின் அழுத்தம் கரியை வைரமாக்கும், வாழ்வின் அழுத்தம் சாதனை வானத்தை காலடியில் கொண்டு சேர்க்கும்... 1900 ல், குடும்பம் திருச்சி வந்து சேர்ந்தது. செயின்ட் ஜோசெப் பள்ளியில் இவர் பள்ளி கல்வியினை முடித்தார். வறுமை வழக்கம் போல கல்லூரிப் படிப்பிற்கு கட்டை போட்டது. ஆனால் , ஒரு கதவை அடைக்கும் கடவுள் இன்னொரு கதவைத் திறந்து விடத்தானே ?? இவரது உழைப்புக்கும் ஊக்கத்துக்கும் ஒரு நல்ல நண்பனை அறிமுகப்படுத்தியது காலம். அவரது பெயரும் சேஷசாயி. இவர் V.சேஷசாயி, இந்த நண்பர் R.சேஷசாயி. இனி நினைவில் குழப்பம் வராமல் இருக்கு VS என்றும், RS என்றும் அழைப்போமே
. நண்பர் RS, சில வருடங்கள் மூத்தவர் VS ஐ விட. இருவருமே பிசினஸ் என்றால் இன்னொரு லட்டு தின்ன அசையா? ரகம். ரொம்ப ஒத்துப் போய்விட்டது. அதற்கும் மேலாக VS அவர்களின் சகோதரி ரங்கநாயகி அம்மையாரை நண்பர் RS மணந்து கொண்டு நண்பரை மைத்துனர் ஆக்கி விட்டார். இரண்டு கைகள் நான்கானால், இவருக்கே தான் எதிர்காலம்...
என்று பாடாத குறைதான்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஆரம்பித்த தி சேஷசாயி இஞ்சினீரியரிங் ஒர்க்ஸ் (The Seshasayee Brothers
Engineering Works ), வெளி உலகினரை இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. பள்ளிப் படிப்பை முடித்த RS, மேற்படிப்பாக
"வயரிங் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
" முடித்தார். ஆனால் நம்ம VS அவர்களோ படிக்காத மேதை. வயரிங் செய்வதில் மிகக் கெட்டிக்காரராக விளங்கினார். இவரது திறமையை அறிந்த திரு.வின்டர் எனும் தென்னக ரயில்வேயின் பொறியாளர் (Mr. Winter, a senior
engineer of South Indian Railways) VS அவர்களை பயிற்சி பெறுபவராக (APPRENTICE ) ஆக தன்னுடன் வைத்துக் கொண்டார்.
அப்போது பேசாத சலனப் படங்கள் திரைக்கு வந்த காலம். இந்த சேஷசாயிக்கள், 1919 ஆம் வருடம் எம்பையர் சினிமா (EMPIRE சினிமா) என்று திருச்சியில் திரை அரங்கம் தொடங்கினார்கள். இந்த எம்பையர் சினிமா பின்னர் கெயிட்டி தியேட்டர் (Gaiety Theatre) ஆனது
. அப்போதெல்லாம் படம் ஓட்டுவதற்கு மின்சாரம் ஏது ? டீசல் எஞ்சின் ஒட்டப்பட்டு, அதில் இணைக்கப்பட்டு இருக்கும் ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் திரைப்படம் காட்டப்படும். நம்ம கதாநாயகர்கள் இருவரும்,அந்தக் கால கட்டத்தில் யாருமே நினைத்துப் பார்த்திராத செயலை செய்தனர். யோசித்துப் பார்த்தனர். இரவில் தானே திரைப்படம், பகல் முழுதும் நாம உழைக்கிறோம்,, இந்த டீசல் இன்ஜின் நல்லா ஒய்வு எடுக்குதே...
விடலாமா இதை என்று, பகல் நேரத்தில் அரிசி ஆலை (RICE MILL
) இயக்க அந்த எஞ்சினை அனுப்பி வைத்தார்கள்.
அப்போது இரண்டு சேஷசாயிக்களும் சேர்ந்து துவங்கியது தான் SVS டிரான்ஸ்போர்ட். ஒரு வழித்தடம்,திருச்சியில் இருந்து பெரம்பலூர் வரை, மற்றோரு வழித்தடம் திருச்சியில் இருந்து தேவகோட்டைக்கு. எவ்வளவவோ பெரிய நிறுவனங்களைத் தொடங்கிய சேஷாசாயிக்கள், தேவகோட்டைக்கு வண்டி விட ஆரம்பித்து தொழிலைத் தொடங்கினார்கள் என்றால் தேவகோட்டையின் செல்வச்செழிப்பை சொல்லவும் வேண்டுமோ ?
1925ல் , திருச்சி மாவட்டத்தின் டாட்ஜ் கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கும் சேஷசாயி பிரதர்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் (Seshasayee Brothers
Engineering Works) தொடங்கப்பட்டது. RS , மெக்கானிக்கல் படிக்க சிங்கப்பூர் சென்று, அமெரிக்க ஜெனெரேட்டர்களை முழுவதுமாக அக்கு வேறு ஆணி வேறாக கற்றுக்கொண்டார். இங்கு திருச்சியில் சின்னவர் (VS அப்படித்த்தான் அழைக்கப்பட்டார் ) தொழிலை மிக வேகமாக வளர்த்து வந்தார்.
RS ஜெனெரேட்டர், மின்சாரம் என்ற கனவுகளோடும் நிறைய அனுபவ அறிவோடும் தாயகம் திரும்பியதும், இவர்கள் இருவரின் பார்வையும் மின்சாரத்தின் மீது மின்னல் வேகத்தில் பாய்ந்தது. ஆமாம் . அது ஒரு பெரிய சாதனையின் ஆரம்பம் அந்த நாட்களில். IT IS A BIG BREAK
. இராமநாதபுரம் இராஜாவுக்கு அரண்மனையை மின்சார மயமாக்கிப் பார்க்க ஆசை. நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கும் மின்சாரம் இல்லாத காலம். அது மட்டும் அல்ல. இராமநாதபுரம் அரண்மனையில் ஒரு ஐஸ் உற்பத்தி உபகரணமும் (ICE PLANT ) நிறுவினார்கள். அந்த நேரம் நமது தேவகோட்டை நகரத்தார் இந்த இராமநாதபுரம் இராஜாவுக்கே கடன் கொடுத்து வந்தார்கள். அதில் அதிகப்படியாக கடன் வழங்கியவர் 'வெ'னா வீடு என்று அழைக்கப்படும் ஜமீன்தார் வீடு
. கடனைத் திருப்பித்தர இயலாமல் எத்தனையோ கிராமங்களின் வரி வசூல் உரிமையை தேவகோட்டை ஜமீனுக்கு கொடுத்து விட்டனர் இராமநாதபுரம் இராஜாங்கம். இது பற்றி தனியாக, விரிவாக, காளையார் கோவில் உட்பட பார்ப்போம்.
இந்த செல்வாக்கினால், இராமநாதபுரம் அரண்மனை மின்சார மயமாக்கப்பட்ட அடுத்த ப்ராஜெக்ட்,தேவகோட்டையின் நகரத்தார் வீடுகள். (
இதுபற்றி மதிப்பிற்குரிய அன்பு அண்ணன் திரு.காளை ராஜா இரவீந்திரன் அவர்களிடம் அடிக்கடி பேசி விபரங்கள் சேகரித்து வருகிறேன், அவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து அடிக்கடி நிறைய செய்திகள் அனுப்பி வருகிறார். அவை தனிப்பகுதியாக உங்களுக்கு விருந்தளிக்கும்,
பின்னர், இறைவன் அருளால், என நம்புகிறேன்).
அந்த
நேரத்தில் இன்றக்கு மூன்று மாநிலங்களை இணைத்து இருந்த மதராஸ் ராஜதானியில் மதராசப்பட்டினம்
மட்டுமே கிராம்ப்டன் கம்பெனியின் தயவால்
DC என்றழைக்கப்படும் நேர் மின்சாரம் (DIRECT CURRENT) உபயோகித்துக் கொண்டு
இருந்தது, அதுவும் வெள்ளைத்துரை மார்கள் மட்டும். 1927ல் முதல் முதலாக ஸ்ரீ
மீனாட்சி சுந்தரேஸ்வரர் எலெக்ட்ரிக் சப்ளை கார்பரேசன் லிட்., தேவகோட்டையில்
ராஜதானியில் வேறு எந்த நகரத்திலும் இல்லாத வண்ணமாக DC மின்சார வினியோகம்
ஆரம்பித்து இருந்தது. இன்றும் நீங்கள்
தேவகோட்டை நகரத்தார் வீடுகளில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் எலெக்ட்ரிக்
கார்பரேஷன் லிட்., எனும் எனாமல் தகட்டில் ஆன லேபிளை மின் இணைப்புப் பெட்டிக்கு
அருகில் காணலாம். நான் திருச்சுழியார்
வீட்டில் பார்த்து இருக்கிறேன். இப்படி தேவகோட்டை நகரம்,இந்தியாவின் மற்ற பகுதிகள் மின்சாரம் என்ன என்பதை அறியாத காலத்திலேயே மின்சார விளக்குகளை பார்த்த செல்வக்கோட்டை ஆகும். இப்போது புரிகிறதா தேவகோட்டையின் தெய்வீகம்.!! இதனை
அடுத்து மின்சாரத்தைக் கண்டவை, கானாடுகாத்தான் மற்றும் காரைக்குடி செட்டி நாட்டுப்
பகுதிகள். தொடர்ந்தது மதுரை அருள்மிகு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் இராமேஸ்வரம் இராமநாத சுவாமிகள் ஆலயங்களும். இவை அனைத்தும் இந்த சேஷசாயிக்களின் கவனமான
திட்டங்களோடு செயலாக்கம் பெற்றவை.
1931ல் மதராஸ் ராஜதானியில் திருச்சி, ஸ்ரீரங்கம்
பகுதிகளுகளின் வீட்டு உபயோகத்துக்கான ALTERNATIVE CURRENT (A/C) என்று இன்றைக்கு
நாம் உபயோகித்து வரும் மாறு திசை மின்னோட்டத்தின் முதல் அங்கீகாரம் பெற்ற தென்னூரில் இன்று தமிழ் நாடு மின்சார வாரிய
அலுவலகம் இயங்கி வருகின்ற இடத்தில் 350KVA ஆல்டர்னேட்டர் நிறுவி திருச்சி
பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க ஆரம்பித்தனர்.
7 ஆண்டுகள் திணறிப் பின்னர் தான் சமன் பெற்றது நிர்வாகம்.
சரி
போதும், நாம் நமது ஊர் பேருந்து நிலையம்
விட்டு அப்படி திருச்சி பக்கம் சென்று விடுவோம் நம்மை மறந்து, அதனால்,
வலுக்கட்டாயமாக உங்களை திரும்ப நம்ம ஊருக்கு அழைத்து வந்து விடுகிறேனே, ஒன்றை மட்டும் சொல்லி…. இந்த R S அவர்களுக்கு
விமானம் என்றால் பைத்தியம். அந்தக்
காலத்திலேயே இரண்டு TIGER MOTH விமானங்களைச் சொந்தமாக வைத்து இருந்தார். செம்பட்டு
விமான ஓடுதளத்தில் இருந்து இந்த விமானங்களை தானே ஓட்டி பறந்து சென்று கீழிறங்குவது
இவருக்கு பொழுது போக்கு.
1934 ஆம் வருடம், மகாத்மா காந்தி, திருச்சி வருகை புரிந்தார். இதற்காக வானத்தில் இருந்து மலர் மாரி பொழிய வேண்டும் என்று திரு.R S அவர்கள் தனது விமானத்தில் தனது நண்பரையும் ஏற்றிக் கொண்டு மேலே பறந்தார். துரதிர்ஷ்ட வசமாக செம்பட்டு ஓடு பாதையில் விபத்துக்குள்ளாகி நண்பருடன் மரித்துப் போனார்.
இந்த SVS
டிரான்ஸ்போர்ட் பற்றித் தொட்ட உடனேயே இத்தனை கதைகள். உண்மையில் எனக்கு எதை
தொடுவது,,, எதை விடுவது என்பதில் நிறையத் தயக்கமும் மயக்கமும் இருக்கிறது. மிகவும் கவனமாக அடி பிறாழாமல் உங்களோடு பயணம்
செய்ய வேண்டும் என திட்டமிட்டுத்தான் எழுதுகிறேன். அப்படியும் சில சமயங்களில்
கொஞ்சம் சம்பந்தமில்லாமல் எங்கோ போய் விடுகிறோமோ என்ற எண்ணம் வந்து
விடுகிறது. அதற்காகத்தான் உங்கள்
பின்னூட்டங்களை கேட்பதே…. அந்தக் கால
கட்டத்தில் ஓடிய சில பேருந்துகளை இப்போது பார்ப்போம்.
·
கண்ணகி ரோடுவேஸ்
·
கமர்சியல் டிரான்ஸ்போர்ட்
·
ஆண்டவர் டிரான்ஸ்போர்ட்
·
சந்திரா டிரான்ஸ்போர்ட்
·
அப்துல் காதர் மோட்டர் செர்வீஸ்
·
தாளையான் பஸ் லைன்ஸ்
·
M D T
·
T V S
·
கண்ணுடைய நாயகி மோட்டார் சர்வீஸ்
·
கண்ணப்பா ரோடுவேஸ்
·
ராமவிலாஸ், கரிவண்டி
·
அன்பு ரோடுவேஸ்
·
கல்லல் ரோடுவேஸ்
பாலம் டு
பாலம் என்று ஒரு சர்வீஸ் உண்டாம்.
தி.ஊரணியில் இருந்து ராம் நகர் வரை ஓடுமாம். ஃபோர்ட் V S T CO OPERATIVE SERVICE என்று
மிகக் குறைந்த கட்டணத்தில் ஒரு பஸ் ஓடியதாம்.
இந்த M D
T பஸ்ஸில் காலயில் STATE ICE CREAM பெட்டி மதுரையில் இருந்து வரும். திரு.சிதம்பரம் என்பவர், காக்கி யுனிஃபார்ம்,
தொப்பி சகிதம் அணிந்து இந்த ஐஸ்கிரீம்களை விற்பார். மதிய உணவு இடைவேளயின் போது தே பிரித்தோ உயர்
நிலைப் பள்ளி விடுதி மாணவர்கள் வாங்கும் வண்ணம், விடுதிக்கு வெளியே, நின்று அந்த
வேலியின் இடைவெளியின் நின்று விற்பார்.
ஒரு குச்சி ஐஸ்கிரீம் 15 பைசா.
சென்னை
அடையாரில் வசிக்கும் ஆங்கிலக் கவிஞர் திரு.சண்முகம் செட்டியார் அவர்கள், நேற்று
வெகு நேரம் தொலைபேசியில் அளவளாவினார். அவர் ஆறாவயலில் இருந்து அழகப்பா கல்லூரியில்
பயின்ற காலங்களில் தொண்டியில் இருந்து ஆறாவயல் வழியாக காரைக்குடி செல்லும் ஆண்டவர்
டிரான்ஸ்போர்ட்டில்தான் கல்லூரிக்குச் செல்வோம் என்று குறிப்பிட்டார்.
இப்போது கரி வண்டி ஓடியது பற்றி பழைய பெருந்தலைகள் எல்லாம் சொல்கிறார்களே. அது என்ன கரி வண்டிகாலம்? அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று கடந்த ஒரு வார காலமாக தலையைப் பிய்த்து, பார்க்கிறவர்களை எல்லாம் இதே கேள்வியாகக் கேட்டு, மிரட்டி விட்டேன். வழக்கம் போல நமது காலப் பெட்டகம், நகரத்தார் பள்ளி ஓய்வு பெற்ற தட்டெழுத்து பயிற்சி ஆசிரியர் திரு.பத்மநாபன் துணை வந்தார்.
அவரது கரி வண்டி
பயண அனுபவங்களைப் பகிர்வதற்கும் முன்பாக எனக்குத் தெரிந்த சில விசயங்களைப்
பகிர்ந்து விடுகிறேனே. முதலில் மோட்டார்
என்று ஓட ஆரம்பித்த காலத்தில் அனைத்து பேருந்துகளுக்குமே எரி பொருள் பெட்ரோல்
தானுங்க.. இப்ப மாதிரி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 இல்லீங்கோ. ஒரு கேலன் ( 4 லிட்டர்) பெட்ரோல் விலை ரூ 15
அல்லது 1 லிட்டர் ரூ.4க்கும் குறைவு. அன்று ஒரு அமெரிக்க டாலர் ஒன்றின் மதிப்பு
இந்திய ரூபாய்க்கு 1 தானுங்களே. இப்ப
தெரியுதா, சுதந்திர தாகம் நம்ம மக்களுக்கு எப்படி வறுமையைத் தணிச்சு இருக்குன்னு. டீசல் போட்டு ஓடக்கூடிய பேருந்தோ, மகிழுந்தோ
இல்லவே இல்லை. அப்படி யாரும் அப்போது அறிந்திருக்கவும் இல்லை. அனைத்து பேருந்து எஞ்சிங்களும் இங்கிலாந்தில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
இந்தியாவில் எந்த உற்பத்தியும் தொடங்க இல்லை. பேருந்துகள் பிரிட்டிஷ் ஃபோர்ட் (BRITISH
FORD) அல்லது பெட்ஃபோர்ட் (BED FORD).
மற்ற உந்து வண்டி தயாரிப்புக் கம்பெனிகள், ப்ரிட்டிஷ் காமர் கம்பெனி (BRITISH
COMER CO.,) மற்றொன்று ப்ரிட்டிஷ் லேலண்ட் (BRITISH LEYLAND). பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின் பாலிசிகளில் ஒன்று, அதன் காலனி நாடுகளில் எந்த விதமான தயாரிப்பு
வேலையும் நடை பெறக்கூடாது, ஆனால் பென்சிலில் இருந்து கார்கள் வரை அந்த காலனி
நாடுகள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். இப்படியாக
அனைத்து செல்வமும் கடைசியாக இங்கிலாந்தைச் சென்று சேரவேண்டும்.
பேருந்துகளின் பாடி முதன்
முதலில் மரங்களை வைத்து இந்தியாவில் கட்டப்பட்டது. அதாவது பயணிகள் நேரடியாக
பேருந்தில் இருக்கையில் ஏறிக்கொள்ளலாம், அதிலிருந்து கீழே இறங்கிக் கொள்ளலாம். இது போன்ற மரத்தாலான திறந்த கூடு (OPEN WOODEN
BODY) உடைய பேருந்துகள் 1912ல் T V S நிர்வாகத்தால் இயக்கப்பட்டது. இந்த வகையின் கடைசி வண்டி, கேரளாவில்
திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1950 வரை ஓடிக்கொண்டு இருந்தது.
உலக மகா யுத்தம் பெட்ரோல்
தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதாயல் பெட்ரோலுக்கு மாற்றாக கரியை வைத்து நீராவி
உற்பத்தி செய்து அந்த நீராவியால் பிஸ்டன்களை இயக்க வைத்து ஓடும் பேருந்துகள்
தமிழகத்தில் ஓட ஆரம்பித்தன. அந்த நேரத்தில், தேவகோட்டையில் இருந்து இயங்கிய பேருந்துகளும் கரியினை எரித்து ஓடின. ஒரு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே கரியை
எரித்து நீராவி உருவாக்கி பேருந்து எஞ்சினை ஓட வைத்து இருப்பார்களாம். 3 டிக்கட்டுகளுக்கு மேல் புக் செய்து வைத்தால்,
பேருந்து உங்கள் இல்லத்துக்கே வந்து உங்களை ஏற்றிச் செல்லுமாம். நீங்கள், பேருந்து வந்து உங்கள் வீட்டு வாசலில்
வந்து நிற்கும் நேரத்தில் குளித்துக்
கொண்டு இருந்தால், ஒன்றும் அவசரப் பட வேண்டாமாம்.
மெதுவாக குளித்து, உடை மாற்றி சிற்றுண்டி முடித்து வரும் வரை பேருந்து
உங்களுக்காக காத்திருந்து உங்களை ஏற்றிச் சென்ற காலம் அது. ஏனெனில் பயணம் செய்பவர் எண்ணிக்கை குறைவு. இப்போது நம்ம பத்மனாபன் சார் பேசுகிறார்.
ஒரு திருமணத்திற்காக, நாங்கள்
குடும்பத்துடன் கமர்ஷியல் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் பயணம் தொட்ங்கினோம். கமர்ஷிய்ல் டிரான்ஸ்போர்ட், லட்சுமி டாக்கீஸ்
திரை அரங்கத்திற்கு எதிரில் உள்ள தன்னுடைய ஷெட்டில் இருந்து கிளம்பியது. எனது தந்தையார் மிகவும் நொந்து போய் இருந்தார்.
ஏனெனில் நாங்கள் மொத்தம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நபர்கள். அளவுக்கு அதிகமான தேவையில்லாத மூட்டை
முடிச்சுகள் லக்ககேஜ் என்ற பெயரில். அப்பாவின் கடுப்புக்கு எல்லாம் ஈடு கொடுத்து
என் அம்மா மிகவும் பொறுமை காத்து இந்த ஒரு டஜன் பட்டாளத்தையும் மேய்த்துக் கொண்டு
வந்தார்கள். எனக்கு வயது ஒரு 4 அல்லது 5
இருக்கும். (ஏறத்தாழ 65 அல்லது 70 வருடங்களுக்கு முன்னர்).
வண்டி மெதுவாகத் தான் செல்லும்.
செல்லும் வழியில் உணவு விடுதி எதுவும் கிடையாது. என் தாயார், மெதுவாக கையில் கொண்டு வந்திருந்த
புளியோர்தரை மற்றும் தயிர் சாத மூட்டையைப் பிரித்து பேருந்துக்குள்ளேயே ஒரு
சிற்றுண்டி சாலைக்குத் திறப்பு விழா செய்தார்.
நாங்கள் எல்லோரும் சாப்பிடும் வரை ஒன்றும் தெரியவில்லை. புளியோதரை வயிற்றின் உள்ளே போய் விழுந்ததும்
எல்லோருக்கும் தண்ணீர் தாகம். இவ்வளவு தேவை இல்லாத மூட்டைகள எடுத்து வந்த எங்கள் கோஷ்டி,
தண்ணீரை மட்டும் எடுத்து வர மறந்து விட்டு இருக்கிறது. வண்டியில் ஓட்டுனர், வண்டியை ஒரு வீட்டின் முன்
நிறுத்தினார். எங்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார்கள் அந்த வீட்டில். அப்புறம்
வண்டி மானாமதுரை வரை சென்றது. நாங்கள்
செல்ல வேண்டியது பரமக்குடி அடுத்து உள்ள உரப்புலி. மானாமதுரையில் இருந்து ஒரு மாட்டு
வண்டியில் எங்கள் பயணம் தொடர்ந்தது. அதில்
உரப்புலி போய்ச் சேர்ந்து பின் அங்கிருந்து நயினார் கோவில் சென்று சேர்ந்தோம்
என்றார். அந்தக் காலத்தில் ஒரு 30 மைல்
பயணம் என்பதே ஏதோ சந்திர மண்டலத்துக்கு பயணம் ஆவது போல் இரண்டு நாட்களுக்கு முன்பே
ஆயத்தங்கள் ஆயிரம் செய்து செல்வார்கள்.
இன்றைய அவசர யுகத்தில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இதெல்லாம் தெரிந்து இருக்க
சாத்தியம் இல்லை,
அப்புறம். பேருந்து நிலையத்தின்
முன்னே, டாக்சிகள் நிறைய நிற்கும்.
மீட்டர் கொண்ட டாக்சிகள் பார்த்து இருக்கி’றேன். இந்த இடத்தில் ஒரு தண்ணீர் தொட்டி இருக்கும்.
தம்பி பெத்தாச்சி நாச்சியப்பன் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததைப் போல நல்ல நியாயமான
டிரைவர்களாக புலவர், செல்லையா ஐயா, கண்ணப்ப செட்டியார், ராஜேந்திரன் ஆகியோர்
இன்னும் கண்ணில் நிற்கிறார்கள். இதற்கு
நேர் எதிரே, குதிரை வண்டிகள். மட்டக்குதிரைகள், தலையில் குஞ்சங்கள், வாயில்
கட்டப்பட்டு இருக்கும் கொள் நிறைந்த சிறிய சாக்குப் பை சகிதம். என் அன்பு வகுப்புத் தோழன், செய்யது முகமது
அவர்களின் தாத்தா, காந்தி ரோடில் இருந்து ஒரு குதிரை வண்டி வைத்து இருப்பார்.
பேருந்தில் வந்து இறங்கியவர்கள்,
உடனேயே டாக்சியிலோ அல்லது குதிரை வண்டியிலோ ஏறித் தங்கள் இல்லம் ஏகுவார்கள்.
இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றைப் பின்னூட்டமாக வாசிக்கின்ற நீங்கள்
எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அடுத்து நாம் பயணத்தை தொடர்வோம் இன்னும் மேற்கு நோக்கி……
மிகவும் அருமை இன்னும் படிக்க ஆவலாக உள்ளேன்.
பதிலளிநீக்குAssalamu Alaikum. அடுத்த பகுதி பதிவு ஆகி விட்டது. தங்கள் மேலான கருத்துக்களுக்காகக் காத்து இருக்கிறேன்
நீக்குஅசாத்திய விபரங்கள். அநேக விஷயங்களை அடக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குPCT புதுக்கோட்டை கோஆபரேடிவ் டிரான்ஸ்போர்ட் என்ற பஸ்கம்பனி தேவகோட்டை -தஞ்சாவூர் வழித்தடத்தில் பேருந்து ஓட்டியது. அதில் 25பைசா டிக்கட்.மற்ற பேருந்துகளில் 30 பைசாவாக இருந்த காலத்தில் அந்தப் பேருந்திற்காக காத்திருந்த ஞாபகம்.
மீனாட்சி எலக்ட்ரிஸிடி டிஸ்ட்ரிப்பூஸ்டிங்க் கம்பனி பொறியாளராகத் திரு.S.T. Charyஎன்பவர் இருந்தார். அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் அவரது வீடு