அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 59
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
22-07-2018
பகுதி: 59
அன்பு நண்பர்களே. ..
எப்படியோ ஒரு இரண்டு மாத கால இடைவெளி விழுந்து விட்டது. ஜூன் மாத மத்தியில் இருந்து மாதக் கடைசி வரை தாயகம் வந்து இருந்தது ஒரு காரணம். இரண்டு வருட இடைவெளியில் வந்ததனால் 40 நாளில் செய்ய வேண்டிய பணிகளை 4 நாட்களில் முடிக்க நினைத்து நாய் படாத பாடு பட்டது,விடுமுறையை அனுபவிக்கவே இயலாமல் செய்து விட்டது. எத்தனையோ பேரைக் கண்டு மனம் மகிழ அளவளாவ விரும்பி வந்து எதுவும் இயலாமல் சந்தித்தவர்களையும் அவசர கதியில் பார்த்து வர நேர்ந்தது கொஞ்சம் வேதனைதான். அதை விடக் கொடுமை அலுவலகத்தின் அவசர அழைப்பால் அனுமதி வாங்கி வந்த விடுப்புக்காலம் முடியும் முன்னரே திரும்ப நேர்ந்தது.
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை கையில வேப்பிலையோடு ஆடிச்சாம்... அந்த வகையில் இந்தோனேசியா வந்து சேர்ந்து இன்னும் பழைய பணிகளின் அழுத்தத்தில் இருந்து விடுபட இயலாமல் தவிக்கிறேன். உணர்வால் அன்பர்களோடும், உழைப்புக்காக இங்கும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாக நிற்கிறேன். நான் மட்டுமா நிற்கிறேன்.. உங்கள் அனைவரையும் தேவகோட்டை பேருந்து நிலையம் எதிரே நிறுத்தி வைத்து விட்டுப் போய்விட்டேனே!! தயவு செய்து கோபித்துக் கொள்ளாமல் கூட வருமாறு அழைக்கிறேன். கொஞ்சம் மெதுவாக நடக்க ஆரம்பிப்போம்.
பேருந்து நிலையம் தாண்டி மேற்கே நடந்தால், முத்து ரேடியோஸை அடுத்து மிகப்பிரமாண்டமான வீரபத்திர பிள்ளை மரக்கடை. மரம், ஓடு மலை போல குவித்து வைக்கப்பட்டு பார்த்து இருக்கிறேன். இந்தக் கடை வாசலில் ஒரு பெரிய ஆலமரம். இந்த இடத்தில் ஒரு ஆலமரம் இருந்து இருக்கிறதா என்று மனக்கண்ணில் நினைத்துப் பார்த்து இன்றைய தலைமுறையினருக்கு வியப்பு மேலிடலாம். வயது முதிர்ந்த ஆலமரம். இதன் அடியில் திரிசூலங்கள் நிற்க இரும்புத்தண்டில் உண்டியல் கட்டப்பட்டு, கல் மேடையில் குங்குமம் கொட்டப்பட்டு கம்பீரமாக நிற்கும் முனீஸ்வரன் கோவில். இதன் அருகில் தான் லெட்சுமணன் பேனாக்கடை ( குதிரை வண்டி சந்து முனைக்கு மாற்றப்படும் முன்பு) இருந்தது. கொஞ்சம் கண்களை மூடி இந்த ஆலமரம், முனியசாமி கோவில் இவற்றை இந்த இடத்தில் பொறுத்திப் பாருங்களேன். இன்றைக்கு அந்த இடத்தில் தான் நகராட்சியின் தொகுப்பு வணிகக் கட்டிடம் இருக்கிறது. இதன் முதல் கடை தற்போது அபிராமி உணவகம். அதன் மேற்கு முனைக்கடைசிக் கடையின் முன்புதான் இந்த ஆலமரம் இருந்தது. ஒரு தலைமுறையின் கண் முன்னரே இந்த மாறுபடும் (DYNAMIC) பூமி இவ்வளவு மாறுதல் காணும் என்றால், இன்னும் ஒரு இருநூறு வருடங்களுக்குப் பின் நாம் காணும், வசிக்கும் இடங்கள் எந்த நிலையில் எவர் பொறுப்பில் இருக்கும் என்று கொஞ்சம் அதே மூடிய கண்களைத் திறக்காமல் நினைத்துப் பாருங்கள்…! அதே போல இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி, எவருடைய பெயரில் பட்டாவாக இருந்து இருக்கும்??. ஆக நாமெல்லாம் வழிப்போக்கர்கள். இந்த மாறும் பூமி மாறுதல்களை மட்டும் அல்ல, மனிதர்களின் தலைமுறைகளையும் பார்த்துக் கொண்டு அதன் போக்கில் சுழன்று கொண்டே இருக்கிறது. வழியில் வந்து போகும் நமக்குத்தான், பட்டாவில் நம் பெயரைப் பார்த்ததும், பித்தம் தலைக்கேறி, மாயாவில் மடிந்து போகிறோம், என்பது மறந்து போய்விடுகிறது..
இதை அடுத்து, கேயெம்மெஸ் (K.M.S) பாரதி பண்ணை. நினைவுகளின் நீரோட்டம் வழியே நீந்திப் பார்க்கையில், 1968 ஆம் வருடம் பாரதி பண்ணை வாசலில் சாலையில் சிறுவனாக நின்று கொண்டு அந்த உயர்ந்த அடித்தளம் கொண்ட கடையின் சுவர்கள் ஓரம் உள்ள அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்களை வேடிக்கை பார்த்து நின்ற நினைவுக்கரையில் வந்து நிற்க முடிகிறது. அந்த 9 வயதிலேயே, புத்தகங்களைப் பார்த்தால், கன்னிப் பெண்களைப் பார்க்கின்ற வாலிப போதை. அப்படியே திறந்து படிக்க வேண்டும் என மனம் விழையும். அந்த வயதில் பார்க்க மட்டுமே முடியும். காசு கொடுத்து வாங்குவது எல்லாம், கொம்புத் தேன், இந்த கம்பூன்றி நடக்கும் முடவனுக்கு.. ஐயா, கே.எம்.சுப்பையா அவர்கள், கம்பீரமாக அந்த உயரக் கடையில் சந்தன வண்ண மேல் துண்டை தோள் மேல் போட்டு அமர்ந்து இருக்கின்ற காட்சியும் கண்களில் இன்னும் காட்சியாக விரிகிறது. அதிலும் டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்தக் கடை களை கட்டி விடும். டிசம்பர் கடைசியில் கிறிஸ்துமஸ், அதை அடுத்து ஆங்கிலப் புத்தாண்டு. அடுத்து ஒரு இரண்டு வாரத்தில் ஜனவரி 14இல் தமிழர் திருநாளான தைப் பொங்கல். அழகழகாய்…, அற்புதமாய், கலர் கலராய் பாரதி பண்ணையின் இரண்டு கதவுகளிலும் வெளியிலும், வாழ்த்து அட்டைகள் மண்டிக் கிடக்கும். மண்டிக்கிடைப்பதால் தான் ‘மண்டி’ என்ற சொல் வந்தது…கிடைப்பதால், ‘கிடை’, மருவி ‘கடை’ ஆகி இருக்க வேண்டும். மலாய் மொழியில், இந்தோனேசிய மொழியிலும் ‘கெடை’ (KEDAI) என்பது கடையைக் குறிக்கிறது.
இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி வரை புதிது புதிதாய் வந்து குவியும் வாழ்த்து அட்டைகளை வாய் பார்க்கிறது (வேடிக்கை பார்ப்பது) தான் அன்றாடப் பணி. ஏதாவது சாக்கு சொல்லி விட்டு கே எம் எஸ் கடை வாசலில் போய் நின்று விடுவேன்.
பொங்குக மங்களம்
தங்குக என்றும்…
என அந்த வயதில் எதுகை, மோனை சொல்லிக் கொடுக்கும் வரிகள். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என நட்சத்திரங்கள் படங்கள் பல போஸ்களில்… ஏர் பிடித்து, பானை, கரும்பு இடையில்,,, அப்புறம், வாழ்த்து அட்டையைத் திறந்தால், பூப்போல் விரியும் வகையில் வெட்டப்பட்ட அழகான வாழ்த்துக்கள், நமக்கு எட்டாத பட்ஜெட்டில்… முப்பரிமாண 3டி வாழ்த்துக்களை பார்த்து விட்டு, கடைசியில் நண்பனுக்கு அனுப்புவதற்காக, நம்ம பட்ஜெட்டுக்குள் 25 முதல் 50 பைசாவுக்குள் வாழ்த்து வாங்கி வருகின்ற நினைவுகள் வருகின்றன. அதே கேயெம்மஸ் அவர்களின் பெயர் விளங்கும் அவரது நூலகக் கட்டிடத்திலேயே இந்தத் தொடர் எழுதியதால் அன்பர்களின் பாராட்டு மழையில் நனைவேன் இத்தனை வருடங்கள் கழித்து என்று அன்றைய நாளில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
பெரும்பாலும் பாரதி பண்ணையில் கவிதை நூல்கள், பொதுவுடமைக் கருத்து நூல்கள் மற்றும் புதினங்கள் நிறைய இருக்கும். இதற்கும் மேலாக பெரியவர் கேயெம்மெஸ் அவர்கள், தமிழ் ஆசிரியர் ஐயா அருள்சாமி அவர்கள், எங்கள் பகுதியைச் சேர்ந்த தியாகி பூவநாதன் அவர்கள் எல்லாம் அன்றைய நாளிலேயே பாரதி தமிழ்ச் சங்கம் நடத்தி, பள்ளி மாணவர்கள் இடையே பாரதி கவிதை ஒப்புவிக்கும் போட்டிகள், இலக்கிய மன்றங்கள், இலக்கிய மேடைகள் நடத்தி தமிழ்ப்பணி ஆற்றி வந்தார்கள். இவை அனைத்துமே தேவகோட்டையின் தமிழ் மேகங்கள் எப்போதும் தவழ்ந்து தமிழ் மழை பொழியக் காரணகர்த்தாவாக இருந்து வந்தவர்கள்.
கொஞ்ச காலத்துக்குப் பின், இதே பாரதி பண்ணைக்கு எதிர்ப்புறமாக நியூ சென்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக புத்தகங்கள் விற்பனை செய்யும் வண்டி நிறுத்தப்ப்ட்டு தற்காலிக புத்தக விற்பனை நடை பெற்ற நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன். சில காலத்துக்குப் பிறகு, வண்டியில் நடைபெற்ற விற்பனை பந்தலில் மாறியது. நண்பர் திரு.ப.தண்ணீர்மலை அவர்கள் ரேடியோ மெக்கானிசம் புத்தகங்கள் நிறைய வாங்கி என்னையும் வாசிக்க வைத்தார். இன்றைய கால கட்டமாக இருந்தால், வணிக நலன் கருதி, ஒரு புத்தகக் கடை நடத்துபவர், தனது கடையின் எதிரே ஒரு பெரிய புத்தக விற்பனை நிலையத்தை நிறுத்தவே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பெரியவர் கேயெம்மெஸ் அவர்களோ, இந்த நியூ சென்சுரி புக் ஹவுஸ் இங்கு முகாம் போடவே காரணமாக இருந்தவர். தனது வணிகத்தை விட, தேவகோட்டை மக்களுக்கு புதிய புத்தகங்கள் வந்து சேர்வது மிக முக்கியம் என்று நினைத்த பெருந்தகையாளர்.
இதனை அடுத்து இருக்கிற பெரிய வீடு டாக்டர்.பழனிச்சாமி அவர்களின் இல்லம். தமிழக அரசின் மருத்துவமனை மருத்துவராக தேவகோட்டையில் பணியில் வாலிபனாக சேர்ந்தவர் தனது இறுதிக் காலம் வரை தேவகோட்டையிலேயே வாழ்ந்தார். மிகக் கடுமையான நோய்க்கும், மிக எளிதான, இலகுவாக மருத்துவம் பார்த்தது இவரது சிறப்பு. இவரை அறியாதவர்களே 1960.. 70களில் தேவகோட்டையில் இருந்து இருக்க முடியாது. இன்றைக்குப் போல் அதி நவீன சிகிச்சைக் கருவிகள், அல்லது மருந்துகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு அவர்களது சக்திக்குள், வணிக நோக்கம் இல்லாது சேவை புரிந்த மருத்துவ நிபுணர். முதலில் தி.பிள்ளையார் கோவில் அருகே அமைந்து இருந்த அரசு மருத்துவமனையில் பணிக்கு அமர்ந்து, தனது திறமையால் மிகக் குறுகிய காலத்தில் பெரும் பெயர் எடுத்த கெட்டிக்காரர். எங்கள் குடும்பம் அதிக நெருக்கம், அதிலும் அவரது மனைவியின் நெருங்கிய உதவியாளர் எனது தாயார். பின்னர், மணமாகி அரசு மருத்துவர் பணியை உதறி விட்டு, பேருந்து நிலையம் அடுத்து, கேயெம்மெஸ் பாரதி பண்ணை அடுத்து இருந்த இந்த பெரிய இல்லத்தில் வசித்து அங்கேயே மருத்துவப் பணியினை மேற்கொண்டு இருந்தார். பெரிய குடும்பம். தேவகோட்டையின் ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தக் கால கட்டத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றி இருப்பார். தேவகோட்டை மக்களின் நினைவுகளில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் மதிப்பிற்குரிய டாக்டர்.பழனிச்சாமி அவர்கள்.
பந்தா எதுவும் இல்லாமல் சாதாரணமாக் சமயங்களில் முண்டா பனியன் அணிந்து கொண்டே மருத்துவம் பார்ப்பார். மிகச் சிறுவனாக இருந்த காலத்தில் என் அம்மாவுடன் இந்த வீட்டில் ஓடி ஆடித்திரிந்த நினைவு இலேசாக பிசிறடித்து ஓடும் மேகமாக நினைவில் இருக்கிறது. திருமதி.பழனிச்சாமி அவர்கள், என் கால் சட்டை நிறைய சாக்லேட்டுக்களை திணித்த நினைவு இருக்கிறது. நானும் அவரது மூத்தமகள் செல்வி அவர்களும் ஒரே சமயத்தில் பிறந்தவர்கள். என்னை அந்த அம்மா, ‘காத்தவராயா’ என்று அழைப்பார்.
இந்த இல்லத்தில் ‘இருளாயி இல்லம்’ என்று பொறிக்கப்பட்டு இருக்கும். உள்ளே ‘ரோஸ் இல்லம்” என்று பொறிக்கப்பட்டு இருக்கும் என்று டாக்டர் பழனிச்சாமி அவர்களின் புதல்வி திருமதி.அரசி சிவசண்முகம் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். இது பற்றி, மேலும் அறிந்து கொள்ள, இந்த இல்லத்தில் அருகிலேயே மற்ற எவரையும் விட அதிக காலம் வாழ்ந்து கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய திரு.கேயெம்மெஸ் அவர்களின் புதல்வர், திரு. தெய்வசிகாமணி அவர்களிடம் ஆய்வு செய்தேன். திரு.தெய்வசிகாமணி அவர்கள் கூற்றுப்படி, இந்த இடம் முதலில் இந்த இடம் ஒரு மலையாளி வசம் இருந்தது. அதன் பின்னர், அருணகிரிப் பட்டினத்தைச் சேர்ந்த திரு.பொன்னையா பிள்ளை அவர்கள் வசம் இருந்ததாம். இவரது மகள் பெயர் திருமதி.இருளாயி. இந்த திருமதி இருளாயி அவர்கள், பின்னாளில் திரு. வீரபத்திரபிள்ளை (மரக்கடை) அவர்களின் மூன்றாவது மருமகள் ஆனார். விபரம் அறிந்தவர்கள் பின்னூட்டமாக விபரம் தெரிவித்தால், தேவகோட்டை வரலாற்றில் பிறளாத உண்மைகள் பதிவாக உறுதுணை ஆகும். இந்த வீட்டின் பின் பகுதியில் ஒரு மாமரம் இருந்த நினைவு இருக்கிறது.
இந்தத் தொடர் மூலமாக மருத்துவர் பழனிச்சாமி அவர்களின் குடும்ப உறவு மீண்டும் தொடர்ந்தது ( 48 வருடங்களுக்குப் பிறகு) நமது தேவகோட்டை மண்ணின் மாண்பை மேம்படுத்துகிறது. அதிலும் அவரது புதல்விகள், திருமதி.அல்லி மற்றும் திருமதி.அரசி இருவரும் கடந்த மாதம் நமது தேவகோட்டை உறவுகளின் மீண்ட சங்கமத்தின் போது கலந்து கொண்டு தேவகோட்டை மண்ணில் பிறந்தவர்கள் என்பதனை நிரூபணம் செய்தது, மனதில் என்றும் நிலைத்து நிற்கும். இந்த டாக்டர்.பழனிச்சாமி அவர்களின் அத்தை தான், கொடுமுடி கோமளம், திரை உலகில் முதன் முதலாக மிக அதிகமான சம்பளம் பெற்ற கே.பி.சுந்தராம்பாள்.
இந்த கட்டிடத்தின் இணைப்பாக இதனை அடுத்து இருந்தது, ‘நாராயாணா மெடிகல்ஸ்’. இந்த நாராயணா மெடிகல்ஸின் உரிமையாளர், வட்டாணம் ரோடில், பெரிய பள்ளி வாசல் அடுத்து, மீனாட்சி ஐஸ் கம்பெனி நடத்தி வந்த லண்டன் ‘தி’னா என்று அழைக்கப்படும் திரு.திண்ணப்ப செட்டியார். இதுதான் பின்னாளில் ‘சஞ்சீவி மெடிகல்ஸ்’ என்ற பெயரில் மாறியது.
இதனை அடுத்து, ஒரு தண்ணீர்ப்பந்தல் இருந்தது. இதனை அடுத்து திரு.கேசவன் என்று ஒரு ஓவியர் இருந்து இருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் பாரதப் பிரதமாரக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி அவர்களைச் சந்தித்தது உலக அரசியல் அரங்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது நிகழ்ந்தது 1961 ஆம் வருடம் நவம்பர் 6ஆம் தேதி. இந்தியா முழுவதும், திரு.ஜான் எஃப் கென்னடி அவர்களும், திரு.ஜவஹர்லால் நேரு அவர்களும் ஒன்றாக நடந்து செல்லும் நிழற்படங்கள் காணப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் நம்ம தேவகோட்டையின் ஓவியர் திரு.கேசவன் அவர்கள் கென்னடியின் உருவப் படத்தை வரைந்து அமெரிக்காவுக்கு திரு.கென்னடிக்கே அனுப்பி இருக்கிறார். கென்னடி அவர்கள் மனம் மகிழ்ந்து அந்த ஓவியத்தின் மீது தனது கையெழுத்தை இட்டு திரும்ப அனுப்பி இருந்து இருக்கிறார். இந்த ஓவியம் நீண்ட காலம் நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு இருந்து இருக்கிறது. தற்போது அதன் நிலை என்பதை அறியேன். அறிந்தவர்கள் தங்கள் நினைவுகளை பதிவிடும்படி வேண்டுகிறேன். தேவகோட்டையின் திறமைக்கு இது ஒரு சான்று. அவருக்கு இத்தொடர் மூலம் தேவகோட்டை மக்களின் பாராட்டுக் கலந்த வணக்கங்களை காணிக்கை ஆக்குகிறேன்.
இதனை அடுத்து குறிப்பிட வேண்டிய இடம் புத்தகப்பண்ணை. மைனர் தெருவைச் சேர்ந்த திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள். சுறுசுறுப்பின் மறு பெயர் இவர். மிகப்பெரிய நட்பு வட்டத்துக்கு நடுவில் நின்றவர். விளம்பரம் மூலம் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் நுட்பம் அறிந்தவர். பொது நலம் பேணுவார். சங்கேத மொழிகளில் பேசி அசத்துவார். குமுதம், கல்கண்டு, பேசும்படம், அம்புலிமாமா ஆகிய பத்திரிகை விற்பனையில் சாதனை படைத்தவர். மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களில் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பத்திரிகையின் பெயர் ஒவ்வொரு வண்ணத்தில் அழகாக எழுதப்பட்டு இருக்கும். சுழல் நூலகம் (செந்தில் சுழல் நூலகம் என்று நினைவு) ஒன்றும் நடத்தி வந்தார். தற்போது, தியாகிகள் சாலைக்கு இடம் பெயர்ந்தது எனவும் அவரது மைந்தர் தொடர்ந்து நடத்தி வருவதாகும் அமெரிக்காவில் இருந்து மதிப்பிற்குரிய பத்மனாபன் சார் அவர்கள் மூலம் அறிந்து நீங்கள் அறியத் தருகிறேன்.
மற்றொரு மனங்கவர் இடம் இந்த இடத்தில் சோமு பிள்ளை அவர்களின் வெற்றிலை பாக்குக் கடை. அருமையான துளிர் வெற்றிலை, வாசனைப் பாக்கு பெரியவர்கள் பலரை அடிமையாக்கி வைத்து இருந்தது. இது நீலாஸ் லஞ்சு ஹோம் அருகில். இதனை அடுத்து ‘காரைக்குடி வங்கி’ என்று ஒரு வங்கி இருந்ததாக அறிகிறேன். இந்தக் காரைக்குடி வங்கி பின்னர், மதுரை வங்கியுடன் இணைந்ததாக அறிந்து ஆச்சரியம் அடைந்தேன்.
இதே போல இன்னொரு தகவல். முந்தைய பகுதிகளில் தேவகோட்டையில் இயங்கி வந்த மீனாட்சி மின் உற்பத்தி நிறுவனம் பற்றிப் பார்த்தோம். இவற்றில் சில சந்தேகங்கள் இருந்தன. இவை பற்றி அதிகாரப் பூர்வத் தகவல் பெற வேண்டும் என விழைந்து நமது தகவல் களஞ்சியம், அமெரிக்க வாழ் ஆசிரியப் பெருமகனார், திரு.பத்மனாபன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவரிடம் இருந்து பெற்ற தகவல்களின் சிறு தொகுப்பு இது:
காரைக்குடி நகரம், தேவகோட்டைக்கு மின்சாரம் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மின்சார மயம் ஆக்கப்பட்டது. நமது தேவகோட்டையின் மீனாட்சி எலெக்ட்ரிக் கார்பொரேசன் இயங்கி வந்த காலத்தில், மிகப் பிரபலமான எலக்ட்ரீசியன் ஆக இருந்தவர், திரு.சுந்தரராஜ ஐயங்கார் அவர்கள். மீனாட்சி எலெக்ட்ரிக் கார்பொரேசனில் பணி புரிந்து வந்தவர் ஒருவரின் பெயர், திரு.பைரவன் ஐயர். இந்தப் பைரவ ஐயரின் சகோதரர் பெயர், கிருஷ்ணமூர்த்தி. இந்த கிருஷ்ணமூர்த்தி, விகடம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டவர். யார் இந்த விகடம் கிருஷ்ணமூர்த்தி என்று கேட்கிறீர்களா? இவர் தான் பிரபல கர்நாடக, மற்றும் திரை இசைப் பாடகியான எம்.எல்.வசந்தகுமாரியின்(மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி) காதல் கணவர்.
எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்து சங்கரராமன் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோரைப் பெற்றெடுத்தார். ஶ்ரீவித்யா நடிகையாகவும், பாடகியாகவும் திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கினார். எம்.எல்.வசந்தகுமாரியின் வாரிசுகள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.
தினமலர் பத்திரிகையில் கிடைத்த சுவாரஸ்யமான பகிர்வை இங்கே தருகிறேன்.
“மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில் அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்டதும் கோபம் வந்தது. கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல் இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.
இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்துகொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்பட்டார்.
அக்காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு வயது 89. நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமைஇறந்தார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்த விகடம் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சுந்தரராஜ ஐயங்கார் இருவரும் 1950களில் வீரபாண்டியபுரத்தில் வசித்து வந்தவர்கள்.
அப்புறம், பாலம் டூ பாலம் என்று ஒரு பேருந்து ஓடியதாம் அந்தக் காலத்தில். அதென்ன பாலம் டூ பாலம் என்று கேட்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. தேவகோட்டை ஆற்றுப்பாலம் (ஒத்தக்கடை) டூ இராம்நகர் வரை செல்லும் பேருந்துக்குத்தான் இந்தப் பெயர் நாமம். கட்டணம் 10 காசுகள்.
அடுத்த பகுதியில் சந்திப்போம்…….
கருத்துகள்
கருத்துரையிடுக