அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 62


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
10-09-2018
பகுதி: 62

அன்பு நண்பர்களே!

என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனை? என்று திருவிளையாடல் திரைப்பட டி.எஸ்.பாலையா மாதிரி  அகி விட்டது என் நிலைமை.  இடையில் அலுவலகம் விட்டு இல்லம் நோக்கி வரும் வழியெல்லாம் நல்ல நாளிலேயே தில்லை நாயகமென ஒரு காலில்  நகரும் ஜகார்தா போக்குவரத்து, ஆசியான் விளையாட்டு என்ற அமர்க்களத்தில் சுத்தமாக சாலைகள் மாற்றி மடை மாற்றம் செய்யப்பட்டுஆமையாக  ஒரு இரண்டு வாரம் நகர்ந்தது.எழுத வேண்டியதை எல்லாம் மகிழுந்தை இயக்கும் போது  மனதில் அசை போட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்தால் அங்கே ஏகப்பட்ட பேய்கள் தலையை விரித்துப் போட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றன.   ஒரு வழியாக கோடங்கி  அடித்து, வேப்பிலை விசிறி ஒண்ணொன்னா அடக்கி வைப்பதற்குள்  இரவு வந்து விடுகிறது.  திரும்பவும் மகிழுந்தில் மனதிலேயே தொடரின் அடுத்த பகுதியையே எழுதி இல்லம் வந்ததும் எழுத அமரலாம் என்றால், பகல் முழுதும் பேய் ஒட்டிய களைப்பு ஆளை  அமுக்கி விடுகிறது .

பிறகு மீண்டும் அடுத்த நாளில் அதே நினைவுடன் சாலை வெளியில் பயணிக்கும் போது மனதில் இன்று எப்படியும் எழுதி விடுவோம் என்று அலுவலகத்தில் காலை வைத்தால், உள்ளே ஒவ்வொரு பிரச்சனையும்,ஒரு நாகமாய் படம் எடுத்து சீறிக்கொண்டு இருக்கிறது.  சரி, என்று மகுடியை எடுத்து புன்னாகரவாளியை வாய்  புண்ணானாலும் வெளியே தெரியாமல் புன்னகையுடன் வாசித்து ஒவ்வொன்றாய் பெட்டிக்குள் அடைத்து முடிக்கும் முன் அன்று இரவும் வந்து விடும்... அடுத்த நாள் ... மீண்டும் கோகிலா.. தான்.. இப்படியே ஒரு மாதம் ஓடி விட்டது.  அன்பர்கள் தயாபரத்தோடு பொறுத்தருள வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு தொடங்குகிறேன் இந்த அத்தியாயத்தை....

சென்ற தொடரில் நமது தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டு இருந்தோம்.  என் வயது உள்ளோர் நகரத்தந்தையாய் இருந்த திரு.இராம.வெள்ளையன் அவர்களை நினைக்காமல் தேவகோட்டை நகராட்சியினை   நினைக்க இயலாது.  அவர் பற்றிய அத்தனை நினைவுகள் இன்னும் தேவகோட்டை நகரில் வலம் வந்து கொண்டு தான் இருக்கும். வலம் வரும் காரணம் நகர் அவரால் வளம் பெற்றதால் ஆகும் .

நம்மில் பலருக்கு திரு.இராம.வெள்ளையன் அவர்களை நகரத் தந்தையாகத்தான் தெரிந்து இருக்கும்.  ஆனால், அவர் சட்ட மன்றத்திற்கு போட்டியிட்டது பலருக்குத் தெரியாது.  நமது தேவகோட்டை நகரைச் சேர்ந்தவர்கள் கலக்காமல் சட்ட மன்றம் இருக்க முடியுமா ?  இந்தியத் திருநாட்டின் ஆரம்ப கால சட்ட மன்றத்தேர்தல் களம்  மற்றும் நமது நகரில் இருந்து தேர்தல் களத்தில்  கலக்கியவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய்  இருக்கிறீர்களா?இதற்கு முன் நமது நாட்டின் பொதுத் தேர்தல்களின் பின் புலத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்குத் தேர்தல்கள் புதியதல்ல. பண்டைய காலத்தில் குடஓலை மூலம் நமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் என உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்கின்றன. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் சொத்து கணக்குகளை தெரிவித்ததாகவும் பாலாறு கல்வெட்டுகளில் உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற மொழிக்கேற்ப, தேர்தல், ஜனநாயகத்தின் நாற்றங்கால் மற்றும் அச்சாணியாகும்.


1909 ஆம்  ஆண்டின் ஆங்கிலேயரின் சட்டப்படி, சொத்து வரி செலுத்துவோருக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை உண்டு என 1910 ஆம்  ஆண்டு அறிவிக்கபட்டது.  நல்ல திட்டம் இல்லை ?  பணம் படைத்தோர் மட்டுமே அரசியலில் ஈடு படலாம்.  மற்றவர்?? பேசாமல் வேடிக்கை பாரும்... அல்லது அவரவர் வயிற்றுப்பிழைப்பைப் பாரும்.   பிரிட்டனில் கூட பெண்கள் வாக்குரிமை பெறப் போராடினர்.  பிரிட்டனில் ஒரு பெண்ணை பார்சலில் கட்டி, பிரிட்டிஷ் பிரதமருக்கு அனுப்பி வாக்குரிமை பெற்றதான செய்தி, அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிட்டனில் சின்னங்கள், கட்சிகளை அடையாளப்படுத்த வந்தன.


அப்போது சின்னங்களெல்லாம் கிடையாது. மஞ்சள் பெட்டி காங்கிரஸ், சிவப்புப் பெட்டி நீதிக் கட்சி, பச்சை முஸ்லிம் லீக், ஊதாவும் கருநீலமும் சுயேச்சைகளுக்கு என்று வாக்களிக்கத் தனித்தனி வண்ணப் பெட்டிகளாக இருந்தன. வாக்குப்பதிவு நாளன்று, வாசிக்கத் தெரியாத வாக்காளரிடம் அரசியல் கட்சிகளின் வண்ணங்களை அழுத்திச் சொல்வது 1950-களில் வாடிக்கையாக இருந்தது. 1950-ல் சுகுமார் சென் இந்திய முதன்மைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர், மற்ற நாடுகளில் தேர்தல் நடப்பை ஆராய்ந்து வாக்குச் சீட்டு என்பது கட்சிகளின் சின்னங்களை உள்ளடக்கி அமைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கேற்ப ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குப் பொருத்தமான சின்னங்களைக் கேட்டு வாங்கிக்கொண்டன. அதன் பின்தான் சின்னங்கள் நடைமுறைக்கு வந்தன. எனவே, இந்தியத் தேர்தல் முறைக்கு சின்னங்களை அறிமுகப்படுத்தியவர் சுகுமார் சென்தான்.


ஒரு கட்சி தேர்தலில் பங்கேற்று, குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தால், அல்லது நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் குறிப்பிட்ட இடங்கள் பெற்றிருந்தால்தான், தேர்தல் ஆணையம் அந்தக் கட்சி கேட்கும் சின்னத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கும் என்பதே. இதுபோன்ற தகவல்களையும், கூடவே தேர்தல் சின்னங்கள்குறித்த பழைய மலரும் நினைவுகளையும் இங்கே பதிவுசெய்கிறேன்.


இந்திய தேசிய காங்கிரஸ்                    :  இரட்டை மாடுகள்
சோசலிஸ்ட் கட்சி                                    :   ஆலமரம்
பார்வர்ட் பிளாக் (ருயிகர்  அணி)        :  கை ( தற்போது காங்கிரஸ் )
இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி                  :    கதிர் அரிவாள்
ரிஷிகர் லோக் கட்சி                              :    நெல் தூற்றும் விவசாயி
புரடசிகர சோசலிச கடசி                    :    மண்வெட்டி
படங்களை கண்டு அறிந்து கொள்க ...





இந்தியத் திருநாடு விடுதலை ஆன  பிறகு நடை பெற்ற  முதல் சட்ட மன்றத் தேர்தல் 1951அக்டோபர் மாதம் துவங்கி 1952 பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. தமிழகத்தில் 1952 ஜனவரி மாதத்தில் ஒன்பது நாட்கள் தேர்தல் நடந்தது.
முதன் முறையாக 21 வயது எய்திய இளைஞர் வாக்கு அளிக்கலாம் என தகுதி கொடுக்கப்பட்ட தேர்தல்.  1951 ஆம்  ஆண்டிலேயே நடைபெற்று இருக்க வேண்டிய தேர்தல்.  தேர்தல் ஆயத்த குளறுபடிகளால் 1952 ஆம்  ஆண்டே  நிகழ்வுற்றது.

மொத்தம் 309 தொகுதிகள்.  ஆனால் 375 உறுப்பினர்கள். 

மதராஸ் ராஜதானியில், இன்றைய

ஆந்திராவின் ஒரு பகுதி          : 143 தொகுதிகள் ,
கேரளாவின் மலபார் பகுதி    :   29 தொகுதிகள்
கர்நாடகா வின் ஒரு பகுதி     :   11  தொகுதிகள்
மீதமுள்ளவை தமிழ் நாடு      :  126 தொகுதிகள்+ 64 இரட்டை உறுப்பினர்கள்

என்ன குழப்பமாக இருக்கிறதா?  இப்போது தான் ஆரம்பம். மேலே படியுங்கள்.  அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 66 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.] இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் (இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்).  1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித்தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.


உங்களின் இந்த குழப்பம் தீர வேண்டுமானால், பூகோள ரீதியாக, நடந்த அரசியல் நிகழ்வுகளை இன்றைய தமிழகம் மட்டும் உள்ள பகுதியை கொஞ்சம் மறந்து விட்டு அன்றைய காலகட்டத்துக்குள்  உங்களைத் திணித்துக் கொள்ள வேண்டும்.  அதாவது, இதற்கும் முந்தைய கால அரசியல் நிகழ்வுகளை அசை போட வேண்டும். கொஞ்சம் கூட வாருங்களேன். நமது அரசியல் நிகழ்வுகளையும் அசை போடுவோமே…


1946 இல் காங்கிரஸ், மதராஸ் ப்ரெசிடென்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற போதிலும், கடசிக்குள் நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன.  மத்தியில் இருந்து மகாத்மா காந்தி முதல் திரு. வல்லபபாய் படேல் வரை ராஜாஜி அவர்களையே தென் இந்திய அரசுக்கு தகுதியானவர் என்று கருதினர்.  1942ல் பாகிஸ்தான் பிரிவினை பிரச்சனைக்காக காங்கிரசை விட்டு வெளியேறிய ராஜாஜி அரசியல் துறவறத்தில் இருந்தார்.  இராஜாஜி இல்லாத வெற்றிடம் சரியாக கர்மவீரர் காமராஜ் அவர்களால் நிரப்பட்டு தமிழக/ தென்னாட்டு காங்கிரஸ் பலம் பெற்று விளங்கியது.  1945இல் அரசியல் துறவியாய் இருந்த இராஜாஜி மீண்டும் இல்லறம் புகுந்தார்.


இராஜாஜியின் மீள் வருகை, வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களை மகிழ்வுறச் செய்தது.  திரு.சத்யமூர்த்தி, உயிருடன் இல்லை, திரு.பிரகாசம் அவர்களின் செல்வாக்கு தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் மட்டுமே,  காமராஜரோ இளம் வயதில்... இராஜாஜியின் மறுவருகை 1945, 31 அக்டொபரில் நடைபெற்ற திருப்பரங்குன்ற மாநாட்டில் வெகுவாக வரவேற்கப்பட்டது.  நினைத்த பொழுது அரசியலை விட்டு விலகுவதும், பின்பு வந்து திரும்ப சேர்வதுமாக இருந்த இராஜாஜிக்கு பதிலடி கொடுக்க நினைத்த காமராஜர், சி.என்.முத்துரங்க முதலியரோடும், திரு.பக்தவத்சலத்தோடும் கை  கோர்த்தார். காங்கிரஸ் மேலிடம், வழக்கம் போல் பஞ்சாயத்து செய்ய திரு.ஆசப்  அலி அவர்களை தென்னகம் அனுப்பி வைத்தது.  காமராஜர் வெகுண்டு, தங்கள் உள் வீட்டு பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று டெல்லி காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்தார். ( அப்போது எல்லாம் அரசியலில் சுய மரியாதை கொடி  கட்டிப் பறந்தது... ஆமாம் சாமி போடுவது இல்லை .. ஏனெனில்.. மடியில் கனமில்லை.. இவருக்கு எதற்கு வளைந்து கொடுக்க வேண்டும் ?)


1946இல் சென்னை வருகை தந்த காந்திஜியும், ராஜாஜியின் அரசியல் தலைமை தென்னகத்துக்குத் தேவை என்று தனது 'ஹரிஜன்' பத்திரிகையில் எழுதியதுடன், இராஜாஜிக்கு எதிரான கோஷ்டி (CLIQUE )அரசியல் தென்னகத்தில் தேவை இல்லை என கருத்து  தெரிவித்து இருந்தார்.  இதை எதிர்த்து தென்னகம் முழுவதும் இருந்து தந்திகள் பறந்தன . சிலர் காந்தி CLIQUE என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என வன்மையாகக் கண்டித்தனர்.   காந்தி எந்த வித சலனமும் காட்டவில்லை.  'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என வந்த கருப்பு காந்தி காமராஜர், 1946 பிப்ரவரி 12இல்  பாராளுமன்ற தமிழக காங்கிரஸ் வாரியத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.  இதையெல்லாம் பார்த்த இராஜாஜியும், தான் அரசியலுக்கு வருவது இவ்வளவு பிரச்சனையா என்று மீண்டும் அரசியல் துறவறம் மேற்கொண்டார். இதுபோல் அவர் செய்வது மூன்றாவது முறை.


1946 தேர்தலில் 215 இடங்களுக்கு 163 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையில் இருந்தது.  ஆயினும், திரி சங்கு சொர்க்கம் போல முதல்வர் யார் என தீர்மானிப்பதில் குழப்பம் நிலவியது .

முன்பே சொன்னது போல மதராஸ் பிரசிடென்சி நான்கு மொழி பேசும் தமிழ்நாடு, ஆந்திரா, மைசூரு, கேரளா எனும் பெரு நிலப்பரப்பை கொண்டு இருந்தது.   மொழி அடிப்படை மற்றும் அல்ல, சாதி, மத மாச்சரியங்களும் பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்தன.  மொழி அடிப்படையில் தமிழ் X தெலுங்கு,  தமிழ் X மலையாளம்,  தமிழ் X கன்னடம், என்னும் பிரிவினை தலை தூக்கியது.  அது மட்டுமல்ல,  பார்ப்பனர்  X பார்ப்பனர் அல்லாதோர் என்னும் பிரிவினையும் சேர்ந்து கொண்டது.  அதுவரை, ஆங்கிலேயர் பிரித்த படி அடங்கி ஒரு பிரதேசத்தினராக இருந்தவர்களுக்குள், பிரிவினை வாதம் மெல்ல புகுந்து பேயாட்டம் ஆட அன்றே ஆரம்பித்து விட்டது.

இதில், எண்ணிக்கையில் பெரியதாக இருந்தது, 60 இல் இருந்து 70 வரை,  பார்ப்பனர்  அல்லாத தமிழ் உறுப்பினர்கள் இருந்த காமராஜரின் அணி தான். மீதம் இருந்த 25 முதல் 30 வரை இருந்த தமிழ் உறுப்பினர்கள், ஒன்று இராஜாஜியை ஆதரித்தனர் அல்லது எவரையும் ஆதரிக்காமல் இருந்தனர், ஆனால் பி.சுப்பாராயன் அவர்களை ஆதரித்தனர். 

இதே போல 77 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலும் பிளவு பட்டு, பிரகாசம் அவர்களை ஒரு குழுவினரும், போகராஜு பட்டாபி சீதராமையாவை இன்னொரு குழுவுமாக ஆதரித்து வந்தனர்.  இதே போல பார்ப்பனர் இல்லாத ‘ராயலசீமா’ பகுதியிலும், மலபார் பகுதி உறுப்பினர் ஒரு பிரிவாகவும்… மொத்தத்தில் பல்வேறு பிரிவுகளாக பல்லை இளித்துக் கொண்டு இருந்தது கட்சி.

மஹாத்மா காந்தி மற்றும் வட இந்திய காங்கிரஸ் பெருந்தலைகள், இராஜாஜிதான் மதராஸ் மாகாண முதல் அமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டன. காங்கிரஸ் கட்சியில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை ஆதரிக்காத உறுப்பினர்களை கட்சி எந்தப் பொறுப்புக்கும் ஆதரிக்கக்கூடாது, என்ற நிலைப்பாட்டை மீறி, இராஜாஜி இந்தப் பொறுப்புக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.  சமாதானம் செய்வற்காக, தமிழகத்தில் இருந்து, பெருந்தலைவர் காமராஜர்,  ஆந்திராவில் இருந்து திரு.பிரகாசம் மற்றும் கேரளாவில் இருந்து திரு.மாதவமேனன் ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர்.  இருந்த போதிலும் எதுவும் எடுபடாமல் இராஜாஜி தோற்கடிக்கப்பட்டார். 

இப்படி ஏகப்பட்ட குழப்படிகளும், உள்ளடி வேலைகளும் சேர்ந்து 1946 முதல் 1951 வரை மூன்று முதல்வர்களை தமிழகம் கண்டது.  இதில் கர்ம வீர்ரின் பங்கு மிகவும் முக்கியமானது. 


·        மே 1946 முதல் மார்ச், 1947 வரை  : டி.பிரகாசம் அவர்கள்
·        மார்ச் 1947 முதல் ஏப்ரல் 1949 வரை: ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்
·        ஏப்ரல் 1949 முதல் ஏப்ரல்1952 வரை:  பி.எஸ்.குமாரசாமி ராஜா
என்று அப்போதே முதல்வர் நாற்காலி அடிக்கடி முதல் அமைச்சர்களை மாற்றிக் கொண்டு இருந்தது.



இந்த சூழலில்தான் 1952 பொதுத்தேர்தல் நடக்கிறது.  நமது நகரை மட்டும் பார்க்காமல், நமது நகரின் நிகழ்வுகளை உள்ளபடி அறிந்து கொள்ள அன்றைய அரசியல் நிலவரம் நமது நண்பர்களுக்கு தெரிய வேண்டும் என்றுதான் இவ்வளவும் எழுதுகிறேன்.  சம்பந்தம் இல்லை என்று எண்ணாதீர்கள்.  நினைவலைகளை மீட்டு எடுப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.. இது அதிகப்படி என்று எண்ண  மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.



மேலே கண்ட 1946 ஆம் ஆண்டின் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் நேரடியாக 1951 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குள் செல்ல இயலாது.  அதனால் தான் இத்தனை செய்தி முன்னோட்டம்.  இந்தத் தேர்தலில், காமராஜர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், எதிர்க்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, டி.பிரகாசத்தின் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, இராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சென்னை மாநில முஸ்லீம் லீக் கட்சி, பி.டி.இராஜனின் நீதிக்கட்சி, முத்துஇராமலிங்கத் தேவரின் ஃபார்வர்டு பிளாக் கட்சி இவை அனைத்தும் போட்டி இட்டன.






திருவாடானைத் தொகுதியில் போட்டி இட்டவர்கள் :
`
நெய்வயல் ஆறுமுகம் சேர்வை, காங்கிரஸ் கட்சியின் சார்பில்
இருமதி  செல்லத்துரை அவர்கள், போட்டி காங்கிரஸ்

இந்த செல்லத்துரை அவர்கள் பற்றி ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.  என்ன நினைவு இல்லையா?  தேவகோட்டை நீதி மன்ற எரிப்பு சம்பவத்தில், திரு.சின்ன அண்ணாமலை அவர்களை திருவாடானை கிளைச்சிறையில் இருந்து மீட்ட சம்பவத்தில் மிகப் பெரும் பங்கெடுத்தவர் இந்த செல்லத்துரை அவர்கள்.  இந்த போட்டியில் திரு. செல்லத்துரை அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

மொத்த வாக்காளர்கள்: 67,216. மொத்தம் பதிவான வாக்குகள், 34,101. அவற்றில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு. நெய்வயல் ஆறுமுகம் சேர்வை பெற்ற வாக்குகள்: 13,005.  போட்டி காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட திரு.இருமதி செல்லத்துரை அவர்கள் பெற்ற வாக்குகள்:  21,096.

உங்களுக்கு ஒரு எண்ணம் இப்போது மனதில் ஓட வேண்டுமே?  விடுதலை இயக்கத்தில் சிறை சென்ற திரு.செல்லத்துரை அவர்கள் ஏன் போட்டி காங்கிரஸ் என்ற பெயரில் போட்டி இட்டார்.  அரசிதழ்களில், சுயேச்சை என்றே இவர் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்.  அதுதாங்க …. அரசியல்.

காரைக்குடி தொகுதியில் ….

திரு.சொக்கலிங்கம் செட்டியார் (காங்கிரஸ்)  :  23,868 வாக்குகள்

திரு.MLM.மஹாலிங்கம் செட்டியார் (தேவகோட்டை) சுயேச்சை: 11,932 .  இவரது சின்னம் தாமரை.

திரு.பரஞ்ஜோதி அவர்கள் (தேவகோட்டை) ஆச்சார்ய கிருபாளனி அவர்களின் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ஆலமரம்  சின்னத்தில் போட்டி இட்டார்.  பின்னர் இந்த ஆலமரம் பாரத ஸ்டேட் வங்கியின் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.  பிரஜா சோஷலிஸ்ட் கட்சி நீதி மன்றம் சென்றது. இந்தச் சின்னம் முடக்கி தனதாக்கிக் கொண்டது.




இதற்கு மேலும் வந்த நமது தொகுதி தேர்தல் செய்திகள் மிகவும் சுவை மிக்கவை.  அவை அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.
தொடரும்…..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60