அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 64


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
29-09-2018
பகுதி: 64

அன்புசொந்தங்களே ...

கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம்  அன்று எழுதப்பட்ட இந்த 'அசை போடும் தேவகோட்டை நினைவுகள்'  தற்போதும் மீள் பதிவாக புதியதாக நமது நண்பர்களால்  வாசிக்கப்பட்டு புதியது போல இன்றும் முகநூலில் பின்னூட்டங்கள் வருவது மகிழ்வாய் இருக்கிறது. 

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்கிற சி.ஆர் . என்கிற  இராஜாஜி அவர்கள் நமது தமிழகஇந்திய தேசிய வரலாற்றில் மிக முக்கிய அதி புத்திசாலியான  தலைவர்.  அவர் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர் வேறு திசையில் பயணப்பட்டு விடும்.  ஆயின்நமது அடுத்த தலைமுறைக்காக அவர் பற்றிய சில ருசிகரமான அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மட்டும் பதிவு செய்கிறேன்.
சக்கரவர்த்தித் திருமகன்,  வியாசர் விருந்து என்ற தலைப்புக்களில் இராம காதையையும், மகாபாரதத்தையும் தமிழில் வடித்தவர் இவர்.  திண்ணன் செட்டி ஊரணிக் கரையில் இருந்த எம்.ஜி.ஆர். படிப்பகத்தில் சக்கரவர்த்தி திருமகன் தொடரை விடாமல் வாசித்து வந்த நினைவு மனதில் ஓடுகிறது.
கீழ்க்காணும் இந்தப் பாடல் நம்மில் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல்ராக மாலிகையின் அடிப்படையில் அமைந்த இப்பாடல் பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படுகிறது.
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் ( மீ.ப.சோமு) அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல்பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.       

குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா




இராஜியின் இரண்டு பெண் மக்களில் ஒருவரான சி.ஆர்.இலக்குமிபின்னாளில் மஹாத்மா காந்தியின் கடைசி (4 ஆம் ) மகனான தேவதாஸ் காந்தி அவர்களை மணந்து திருமதி இலக்குமி காந்தி ஆனார்.  தென் ஆப்பிரிக்காவில் மஹாத்மா காந்தி அவர்கள் பணி  புரிந்தபோது பிறந்த செல்ல மகன்.  ஆயின் சுதந்திர போராட்டத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து இவரும்  சிறை வாசம் பல அனுபவித்தவர்.  அதே போல தனது தந்தை இராஜாஜியுடன் போராட்டக் களத்தில்  இருந்தது சி.ஆர்.இலக்குமிம் கூட.   சுதந்திர வேட்கையுடன் இருந்த இருவரும் ஒருவர் அருகில் ஒருவர் தாகம் தீர்வதை உணர்ந்தனர். காதலுக்காக கண் ஏது தமிழகத்து அந்தணர் குலப்பெண்ணான இலக்குமிக்கும்குஜராத்தின் வைசிய குலத்தோன்றலான தேவதாஸ் காந்திக்கும் காதல் கண் சிமிட்டியது.  இருவரது தந்தைகளுமே கண்டிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முன் உதாரணமானவர்கள்.  நல்ல சம்பந்தம் தான் இருவருக்குமே..  ஆனால் ..

அப்பொழுது இலட்சுமியின் வயது பதினைந்து ஆகும். ஆனால் தேவதாசின் வயதோ இருபத்து எட்டு ஆகும். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்கு காத்திருக்குமாறு நிபந்தனை விதித்தனர். ஐந்தாண்டுகள் கழிந்தபின் 1933இல் இருவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்தது.




எட்டிக்குப் போட்டி என்பார்களே ...அது போல் மற்றவர்கள் ஒரு திசையில் என்றால் அவரது திசை வேறு புறமாக இருந்து இருக்கிறது. இது பிடிவாதம் போலவும் அவர் ஒரு சாதி வெறியர் போலவும் அரசியல் எதிரிகளால் சிலாகிக்கப்பட்டது.  ஆனால் அவர் தனது கொள்கைகளில்  மிகவும் தன்னம்பிக்கையோடும்பிடிப்போடும் இருந்தார்.  கண்ணதாசன் தன்னைப் பற்றி ஒரு சுய விமரிசனம் செய்து இருப்பார் . ஏறக்குறைய திரு.இராஜாஜி அவர்களும் அப்படித்தான்.

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்அஞ்சேன்

இந்திய விடுதலைக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக இருந்தது, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.  நமது பகுதியில் திரு.சின்ன அண்ணாமலை, திரு.செல்லத்துரை போன்றவர்கள் போராடியதையும், நீதி மன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், எத்தனையோ பேர் தம் இன்னுயிரை இந்த மண்ணில் விடுதலை வேள்வித்தீயில் ஆகுதி செய்ததையும் முந்தைய பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம்.  காங்கிரசு எனும் கட்சி, இந்திய தேசம் முழுமைக்கும் ஒரே இயக்கமாக பாமரனும் அறிந்து கொள்ளும் வண்ணம் மாற்றியமைத்த போராட்டம் அது.  ஆயின் அந்தப் போராட்டத்துக்கு ராஜாஜி ஆதரவு அளிக்கவில்லை.  மாறாக அந்த போராட்டத்தை ராஜாஜி எதிர்த்தார்.  காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷாரிடம் கை கோர்க்க வேண்டும் என்று வாதாடினார்.   பாகிஸ்தானைத் தனி நாடாக்க விரும்பிய முகமது அலி ஜின்னாவுடன் சமாதானமாகப் போக வேண்டும் என அவர் கூறி வந்தது, காங்கிரசுக்கும் அவருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தியது.  இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் கை ஓங்கி, ஜப்பான் இந்தோனேசியா, மலேயா (சிங்கப்பூர் உள்ளிட்ட), பர்மா இவற்றைக் கைப்பற்றி ஆங்கிலேய, அமெரிக்க கூட்டு நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து கொண்டு இருந்த நேரம்.  இந்தியர்கள் அடிமை வீரர்களாய், இங்கிலாந்தில் சார்பில் போரில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர்.  அதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆயின் இராஜாஜியோ, இது இந்தியர்கள் இங்கிலாந்துக்கு ஆதரவு தர வேண்டிய நேரம் என்று சொல்லி வந்தார்.

ஆயின் மஹாத்மா காந்திக்கும் இராஜாஜிக்கும் இடையே இருந்த உறவு இந்தக் கொள்கை மாறுபாடுகளால் எந்த சேதாரமும் இன்றியே தொடர்ந்து இருந்தது. அதே போலத்தான்,  தந்தை பெரியாருக்கும் இராஜாஜிக்கும் இடையே நிலவி வந்த நட்பும்...

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு நிலத்தை இலவசமாக வழங்கியபோது, அதைக் கடுமையாக எதிர்த்த ராஜாஜி தனக்கு இலவச நிலம் வழங்கப்படலாகாது என்று மறுதலித்தார்.


ஏதோ திராவிட இயக்கம் மட்டுமே சமுதாய சமத்துவத்துக்கு பாடுபட்டது போலவும் இராஜாஜி போன்றவர்கள் பார்ப்பன ஆதரவுக்கரம் கொண்டவர்கள் என்பது போலவும் பரப்புரை செய்யப்பட்டதும்,  பொதுவாக மிஸ்டர்.பொதுஜனம் அல்லது சாமான்யன் மனதில்  அப்படித் தான் விதைக்கப்பட்டு இருக்கிறது.

இந்து கோவில்களுள் தலித் மற்றும் சாணார் வகுப்பு மக்கள் நுழைய இருந்த தடையை Temple Entry Authorization and Indemnity Act 1939 என்ற சட்டம் இயற்றி நொறுக்கியவர் இராஜாஜி. 

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியரை அக்கிரகாரக் குழாய்களைக் கையாளும் பணியில் அமர்த்திச் சனாதனிகளின் எதிர்ப்பைப் பெற்றார். சகஜானந்தா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துறவிக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்றதால், அவரது குடும்பம் ‘சாதி பிரஷ்டம்’ செய்யப்பட்டது.

அதே 1939 ஆம்  ஆண்டு மதுரை அருள்மிகு.மீனாட்சி அம்மன் கோவிலுள் சாணார் நுழையக்கூடாது என்று இருந்த தடையை உடைத்தவர் இதே சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்ற அந்தணர் தான்.

அடுத்து இந்தி மொழியை 6,7,8 ஆம் வகுப்புகளில் 125 பள்ளிகளில் கட்டாயப் பாடம் ஆக்கினார்.  இந்தியாவின் வாணிபத்துக்கும் அரசியலுக்கும் இந்தி மொழி அவசியம் என்று அவர் நம்பினார்.  நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் தலைமையில் திருச்சியில் போராட்டக்குழு தயார் ஆயிற்று.   பெரியார், ஆச்சாரியார், “இந்தி புகுவதால் தமிழ் கெட்டு விடாது என்று பித்தலாட்டம் பேசுகிறார்”  என்று சொன்னார்.  அண்ணா, பெரியார், நாவலர், கலைஞர்  போன்றோர் சிறை வாசம் இருந்தனர்.  தாளமுத்து,  நடராசன் எனும் இருவர் சிறையிலேயே மரணம் அடைந்தனர்.  சிறை சென்றவர்களை அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்றார் ராஜாஜி.



மதுவிலக்கை முழு வீச்சில் அமுல் படுத்தினார் . அவருக்கு தெரியும்... மது எனும் அரக்கன் நமது  வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு எள்ளளவும் ஒவ்வாதது என்று..  இன்றைய ஆட்சியாளர் போல அரசுக்கு வேறு வருமானம் இல்லையே என்று அவர் எண்ணவில்லை.  ஒருவன் தனது பசியைப் போக்கிட தந்து கருத்தையே வெட்டி உண்பது போன்றது தான் மாநிலத்தின் பற்றாக்குறையைப் போக்க மது உற்பத்தி செய்வதும் அதை விற்று ஏழைகளின் வியர்வையை வடித்து அதில் மஞ்சள் குளிப்பதும்.  அவர் ஆட்சியிலும் நிதி நிலைமையில் துண்டு மட்டும் அல்ல வெட்டி கூட விழுந்தது.  அப்போது தான் விற்பனை வரியை அமுல் படுத்தினார்.

இதன் மேலும் வந்த பற்றாக்குறையை சமாளிக்கத்தான்வேறு வழி  இல்லாமல் பள்ளிகளின்  நேரத்தை குறைத்து இருக்கின்ற பள்ளிகளில் இரண்டு குழுக்கள் மாற்று (shift ) முறையில் கல்வி கற்கட்டும்.  மீதம் உள்ள நேரத்தில் அவரவர் குடும்பத்தில் அவர்களுக்குத் தெரிந்த தொழிலைச் செய்து வரட்டும் என்று திட்டம் தீட்டினார்.  அது பூமராங் ஆகிஅவர் பாமரனை இன்னும் கீழே தள்ளுகிறார் பார்ப்பனரை மேலே வைக்க உருவான திட்டம் என்று அதற்கொரு சாயம் பூசி, 'குலக்கல்வி திட்டம்என்று அதற்கு ஒரு பெயரையும் சூட்டி குப்புறத்தள்ளி குழியும் தோண்டி விட்டார்கள்.  பெரியார்,  ‘இராஜாஜி கிராமத்துப் பாமரனுக்குக் கல்வி வேண்டாம் என்கிறாரா?  என்றார். மூன்றே பாட வேளைகள் என்பதால் அவன் மீதமுள்ள நேரத்தில்,  கழுதை மேய்த்துக் கொண்டும், முடி வெட்டிக்கொண்டும்,  துணி துவைத்துக் கொண்டும் இருக்க வேண்டுமா?’’ எனப் பொங்கினார்.  தொழிற்கல்வித் திட்டம் என்று கொண்டு வரப்பட்ட திட்டம்,   குலக்கல்வித் திட்டம் என்று கிண்டலடிக்கப்பட்டது. 

ஆயின்,  பெரியாருடனான இராஜாஜியின் நட்பு தொடர்ந்தது எப்போதும் போல..
அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக இராஜாஜி இப்படி ஒரு முடிவை எடுத்தது தவறு என்று  மேலும் இது எரிகின்ற தீயில் எண்ணெய் வார்க்கும் உள்ளடி வேலைகளும் நடந்தேறின.   இராஜாஜியோ, தன்னைக் கொஞ்சமும் குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளவில்லை.  மாறாக,  ‘இராமானுஜரும்,  சங்கரரும் தமது கொள்கைகளை பிறரை ஆலோசித்து விட்டா பரப்பினார்கள்? இது  நிர்வாக ரீதியான முடிவு’  என்றார் தைரியமாக...  பருலேகர் கமிட்டி அமைத்து தான் செய்தது சரி என்றார், ராஜாஜி.  ஆயின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வளர்ந்தது.  பார்த்தார்,, இராஜாஜி... அட போங்கப்பான்னுட்டு இராஜினாமா பண்ணிட்டார்.  இந்த நாற்காலியை காமராஜர் பிடித்துக் கொண்டார். 

மொத்தத்தில் தனக்கு சரி என்று எது படுகிறதோ அதைச் செய்து வந்தவர் இராஜாஜி.  இவர் போன்ற கொள்கைப்பிடிப்புள்ள கோமகனை இந்தக் காலத்தில் காண்பது அரிது. மிக நேர்மையானவர்.   எத்தனை உயர் பதவிகள் வகித்த போதும், எவ்வளவோ பரிசுப்பொருட்கள் பீரோ நிறைய இருந்த போதும், பதவி விட்டு விலகிய போது, அப்படியே விட்டு விட்டு, கைத்தடியோடு வெளியேறிய பெருந்தகையாளர்.  சத்தியமூர்த்தியின் சீடர் என்பதால் காமராஜரை எதிர்த்தார்.    


சரி இந்த சூழலில் தான் 1957 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தமிழகத்தில் வருகிறது.   
கட்சிகள்  வாரியாக 1957 தேர்தல் களத்தைப் பார்ப்போம்.

தினோரு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்திருந்தனர். பெரியாரின் ஆதரவால் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது.

1954 இல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த ராஜகோபாலாச்சாரி, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசு சீர்திருத்தக் குழு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (சில ஆண்டுகளில் அதுவே சுதந்திரா கட்சியாக மாறியது).



1952 இல் ந.டந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிருந்த மக்கள் ஆதரவை இழந்து விட்டது. அதன் இடத்தை 1949 இல் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பிடித்துக் கொண்டது.  1952 தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. க, 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. க உறுப்பினர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். கா. ந. அண்ணாதுரைக. அன்பழகன்மு. கருணாநிதிஎன். வி. நடராஜன்சத்யவாணி முத்து உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த காங்கிரசு 55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. காமராஜரின் ஆட்சி காலத்தில் பல தமிழர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் தமிழ் தேசியவாதம் சற்றே வலுவிழந்தது. எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார பிரச்சனைகளுக்கும் இடமளிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக்,

ஆச்சார்யா கிருபாளினியின் பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி, 

முத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வார்டு ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.


காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.


தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

இரண்டாவது பொதுத்தேர்தலில் காங்கிரஸின் சின்னம்- நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளைகள் சின்னம்கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கதிர் அரிவாள் சின்னம்; 1957-ல் அண்ணா தலைமையில் தி.மு.க. முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது. தி.மு.க.தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் பல சின்னங்களில் போட்டியிட்டது. இதில் அதிகமான இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. முறையான அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. இந்தியாவிலேயே ஒரே சின்னத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது தி.மு.க. மட்டுமே.


நம்ம தொகுதி நிலவரம் பெரும் கலவரம்.
சென்ற பகுதியில் ஆர்வ மிகுதியில் 1957 ஆம் வருட பொதுத்தேர்தலில் நமது தொகுதியின் வேட்பாளர் பட்டியலில் மிக முக்கிய வேட்பாளரான திரு.இராம.வெள்ளையன் அவர்களைக் குறிப்பிட விட்டுப் போய் விட்டது.  அவரைப் பற்றி எழுதும் முகாந்திரமாகத்தானே இத்தனை கதையும்  போய்க்கொண்டு இருக்கிறது.  மன்னிக்கவும்.

அதங்குடி பிச்சுக்குட்டி உடையார்- சுயேச்சை- குதிரை வீரன் சின்னம்

நடராஜத் தேவர்- சுயேச்சை- சேவல் சின்னம்

வலமாவூர் கிருட்டிணத் தேவர் – இந்திய தேசிய காங்கிரஸ். காமராஜரின் வேட்பாளர் இவர்.

கப்பலூர் கரியமாணிக்கம் அம்பலம்- இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்.  தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் படி, கப்பலூராரை சுயேச்சை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  ஏனெனெனில் ஒரு கட்சி அங்கிகரிக்கப்பட அதற்கு முந்தைய தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் பெற வேண்டும்.  இராஜாஜியின் வேட்பாளரான திரு.கப்பலூரார் போட்டியிட்டது,  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தேவர் திருமகனார் இணைந்து ஆரம்பித்த பார்வர்டு ப்ளாக் கட்சியின் கூட்டு ஆதரவுடனும்.

இராம.வெள்ளையன்- தி.மு.க.  தி.மு.க வெற்றி தோல்வி பற்றிய பயம் கொஞ்சமும் கொள்ளாது, மக்கள் மத்தியில் அவர்கள் மனதில் கட்சியும். கட்சியின் கொள்கைகளும் பதிவு பெற வேண்டும் என்ற ஒரே நோக்கோடு இந்த தேர்தலைச் சந்தித்தது.  தி.மு.க. வின் சார்பில் அன்றைய கால கட்டட்தில் போட்டியிட நெஞ்சுரம் நிறையவே வேண்டி இருந்தது.  அந்த நெஞ்சுரம் கொண்ட நிமிர்ந்த மனம் கொண்டவராக நமது நகரில் கட்சிக்காக முன்னின்று வந்த இளைஞர் தான்,  நம் இராம.வெள்ளையன் அவர்கள் ஆவார்.  இவர் பற்றிய செய்திகள் அடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.  தற்போதைக்கு, எத்தகைய சூழலில் நமது நகர் மன்றத்தலைவராக விளங்கிய இராம.வெள்ளையன் அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் பங்கு கொண்டார் என்ற ஒரு செய்தி முன்னோட்டம் மட்டுமே....

என்ன அடுத்த பகுதி வரை பொறுத்துக் கொள்கிறீர்களா? 

என்ன...                                                               



தேர்தல் முடிவுகள் பற்றிக் கேட்கிறீர்களா?  கொஞ்சம் பொறுங்களேன்..  வாக்குப் பெட்டிகள் பத்திரமாக காவலர் வசம் வைத்து இருப்போம்... வாக்கு எண்ணும் நாள் வரை... இந்த நிகழ்வுகளை எண்ணுங்களே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60