அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 63
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி26-09-2018
பகுதி: 63
அன்புசொந்தங்களே ...
விளையாட்டு போல சென்ற வருடம் செப்டம்பர் மாதம், தேவகோட்டையில் நவராத்திரி கொலு வைபவம் பற்றி ஒரு சிறு குறிப்பாக எழுதினேன். உங்களின் அன்பு மனங்கள் பின்னூட்டங்களில் தீவிரம் காட்டியதிலும், எத்தனையோ உள்ளங்களின் அடியிலும் இதே உணர்வும், தாய்த்திரு நகரின் நினைவுகள் தேங்கிக் கிடப்பதையும் கண்டு என்னையும் அறியாமல் தொடராக எழுதும் வண்ணம் திருவருள் அமைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் இந்த ஒரு வருட காலத்திற்குள் 63வது பகுதியில் (EPISODE )இல் நிற்கிறோம். இது உங்கள் வெற்றி .. நம் உறவின் வெற்றி... நகரின் நினைவுகள் எனும் ஒரே நூலில் கட்டிப்போடப்பட்டு இருக்கும் உடன் பிறப்புகள் நாம் அனைவரும் என்ற எண்ண அலைகளின் வெற்றி.
என்ன….. சில மாதங்களில் 4 அல்லது 5 பகுதிகள் கூட எழுத இயன்றது. இந்த ஜூன் 2018க்கு பின் கொஞ்சம் தொய்வு விழுந்து விட்டது. அதற்கு தலையாய காரணம் பணிச்சுமை மட்டும் அல்ல. எழுதுகின்ற பகுதிகளின் சூழலும், காலமும் ஆகும். மேலெழுந்த வாரியாக பக்கம் நிரப்பவோ, படிப்பவரின் சுவை கருதியோ எழுதி விட இயலவில்லை. நிறைய ஆழ்ந்து அறிந்து, அறிந்தவர்களை அணுகி, அவற்றையும் சில வேளைகளில் சரி பார்த்து நினைவுகளோடு ஒப்பிட்டு பின்னர்தான் சமைக்க வேண்டி இருக்கிறது. மேலும் தேவகோட்டையை விட்டு என்னுடைய 27ஆம் அகவையில் வெளியேறி விட்டேன், 30 வருடங்களுக்கு முன்பாக.. சரியாக ஆகஸ்ட் மாதம், 1988 ஆம் வருடம் இந்தோனேசிய வந்து சேர்ந்தேன் .இடையில் வந்து போவது ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதுவும் இரண்டு வருட இடைவெளியில்.. என்ற போதிலும், என்றும் நீங்காத நினைவில் நின்று கொண்டு இருப்பது நம் தேவகோட்டை மட்டுமே.
சரி, தொடருக்கு வருவோம். தேவகோட்டை நகராட்சி அருகில் வரும் போது, என்றும் தேவகோட்டை மக்களால் மறக்க முடியாத மாமனிதர் திரு.இராம.வெள்ளையன் அவர்கள் நினைவுக்கு வந்தார். வெள்ளையனை நினைத்த உள்ளத்தின் நினைவு வெள்ளம் திரு.வெள்ளையன் அவர்களின் அரசியல் பாதைக்கு ஓடியது. அதன் தொடர்ச்சியாக திரு.வெள்ளையன் போட்டியிட்ட சட்ட மன்றத் தேர்தல் நினைவுக்கு வந்தது. மனக்குரங்கு அந்தக் கிளையில் இருந்து தமிழக அரசியல் என்ற அடுத்த கிளைக்குத் தாவியது. ஆக.... தேவகோட்டை என்றால் நகரத்தின் தொடர்பு மட்டும் அல்ல... தேசத்தின் நினைவுகளின் வேர்களாகவும் நினைவுகள் பின்னிப் படர்ந்து கிடக்கின்றன. அவற்றை புறந்தள்ளி விட்டு மீதம் மட்டும் எழுதுவது, கீழடியின் பெருமையை மறைத்து ஹரப்பா - மொஹன்சதாரோ வினை இன்னும் பேசிக்கொண்டு இருப்பது போன்ற வரலாற்றுப் பிழை ஆகிவிடும்.
இப்போது 1952க்கு அடுத்த தமிழக பொது தேர்தலான 1957 ஆம் ஆண்டு நிலவரத்தையும் அதில் நம்மூர் மக்களை கலக்கியதையும் பார்ப்போம். 1957 சட்ட மன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியின் வேட்பாளர்கள் :
1.வலமாவூர் கிருட்டிணத்தேவர்
2.கப்பலூர் காரியமாணிக்கம் அமபலம்
3.அதங்குடி பிச்சைக்குட்டி உடையார்
4.நடராஜ தேவர்
வலமாவூராரும், கப்பலூரரும் காங்கிரஸ் காரர்களாகத்தானே நமக்கெல்லாம் தெரியும்...பிறகு எப்படி இருவருமே ஒருவருக்கு எதிராக போட்டி இடுகின்றனர்? அதற்குத்தானே ஐயா இந்த அரசியல் வரலாற்றின் கரையில் கொஞ்சம் அமர்ந்து அறிந்து தெரிந்து வர வேண்டி இருக்கிறது. அப்படியே என் கையைப் பிடித்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு 1957 ஆம் வருடத்துக்கு வாருங்கள். நம் தேவகோட்டையில் அந்த நாளில் கொஞ்சம் வாழ்ந்து பார்ப்போமே !!
குலக்கல்வி திட்டம் என்று நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . இது பற்றி அதிகம் அறிந்தவர்கள் நம்மில் இருப்பீர்கள். நான் அறிந்ததை, எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். ஒவ்வொரு கதைக்குப் பின்னும் எத்தனையோ வெளிவராத உள் வட்டம் மட்டுமே உணர்ந்த கதைகள் இருக்கலாம்.
என்ன ஐயா?
தேவகோட்டை கதையை சொல்றேன்னு ஆரம்பிச்சீங்க ....
நகர் மன்றம் பற்றி சொன்னீங்க...
நகரத்தந்தை திரு.இராம.வெள்ளையன் பற்றி சொல்லப்போறேன்னு சொன்னீங்க ..
அப்படியே சட்ட மன்றத்தேர்தலில் திரு .இராம.வெள்ளையன் அவர்கள் போட்டி இட்டார்கள் எனவே அது பற்றி சொல்வதாக சொன்னீங்க ...
இப்ப என்ன.. குலக்கல்வி திட்டம் போயிட்டிங்க ....
என்று நீங்கள் மனதில் முனங்குவது இங்கே வங்க கடலலைக் காற்று வழியே இங்கே கேட்கிறது ... எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இருக்கிறதே....இந்த தகவல்களைத் திரட்டுவதிலும், சரி பார்ப்பதிலும் தான் கொஞ்சம் கால விரையம் ஆகி விடுகிறது .1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிட்டாத நிலையில், இந்திய தேசிய காங்கிரசு சார்பில் திரு.இராஜாஜி அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். மன்னிக்கவும் ... தமிழக முதல்வர் என்று குறிப்பிடுதல் தவறு. மதராஸ் மாகாணம் என்று குறிப்பிடுவதே சரியாகும். அதன் பிறகு தான் குழப்பம் கூடியது.. பள்ளிக்கல்வி முறையில் பெரிய மாறுபாடுகளை கொண்டு வந்தார். இது சரியாக சொல்லப்போனால் திரு.இராஜகோபாலாச்சாரியாரின் கனவுத்திட்டமாகவே இருந்தது. அந்த திட்டம் அமலில் இருந்து இருந்தால் இன்றைக்கு இளைஞர் மத்தியில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து இருக்கும் என்பது இன்றும் சிலரின் கருத்தாக்கத்தான் இருக்கிறது. இது பற்றிய வாதங்களையும், பிரதி வாதங்களையும் என் அன்பு சொந்தங்களிடம் இருந்து பின்னூட்டமாக ஒரு forum போல எதிர்பார்க்கிறேன். என் பணி எடுத்து இயம்புவது தான்.
1953 இல் மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் (Modified Scheme of Elementary Education or New Scheme of Elementary Education or Madras Scheme of Elementary Education) என்று பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின் கீழ் முதலில் பள்ளி நேரம் ஒரு நாளைக்கு 3 மணியாகக் குறைக்கப்பட்டது. மூன்று மணி நேரம் மாணவர்கள் பள்ளியில் ஏட்டுப் படிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் தங்களது பெற்றோரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த புதிய கல்வித்திட்டம் வரையப்பட்டது. அதாவது, நமது சாதி அமைப்புகள், சமுதாயத்தில் அந்த அந்த குழுக்கள்/ குடும்பங்கள் பாரம்பரியமாக / பரம்பரையாய் செய்து வந்த தொழில்/ வேலை இவற்றின் அடிப்படையிலேயே அமைந்து இருந்தது.. இன்றைய நிலை வேறு...அன்றைய நிலை வேறு.
உதாரணத்துக்கு , நான் பிறப்பின் காரணமாக கோனார் என்னும் வகுப்பில் பிறந்து வந்தேன். அப்போது நான் பள்ளிக்கு சென்று இருந்திருந்தால், 3 மணி நேரம் நான் வகுப்பில் ஏட்டுப்படிப்பை கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு பள்ளி முடிந்து வந்து ஆடு, மாடு மேய்க்கவோ, விவசாயப் பணிகளிலோ ஈடு பட வேண்டும். எங்கள் குடும்பத்தில் எனக்கும் முன்பாக 6 அல்லது 7 தலைமுறைகளாவே நிலச்சுவான்தார்களாகவே இருந்து இருக்கிறார்கள். எனவே என்னை ஆடு மாடு மேய்க்க சொன்னாலும் இயலாது.
ஒரு நாவிதனின் மகன், பள்ளி முடிந்ததும் சவரக்கத்தியை எடுத்து முகம் வழிக்க வேண்டும்..
துணி வெளுப்பவரின் குடியில் பிறந்த பையன் பள்ளி முடித்ததும் வெள்ளாவி வைக்க கழுதை மீது அழுக்குப் பொதியுடன் ஆற்றங்ககரைக்கு செல்ல வேண்டும் .
ஒரு மரத்தச்சரின் மகன் இழைப்புளியோடு,
பொற்கொல்லன் குழந்தை தட்டான் ஆக,
ஒரு பிராமண சிறுவன் கோவிலில் குருக்கள் ஆகவோ, மந்திரம் சொல்லும் வாத்யார் ஆகவோ..
இதையெல்லாம் படிப்பவர்கள் திரு.சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எனும் இராஜாஜி அவர்கள் திராவிட இயக்கங்கள் பரப்புரை செய்து வந்தது போல சாதீய வெறி பிடித்து பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற வேற்றுமையை பாராட்டி வளர்த்தவர் என்றே எண்ணத்தோன்றும். ஆயின், தனி மனித வாழ்வில், இராஜாஜி ஒரு இரக்கம் மிகுந்த வேறுபாடு காட்டாத உயர்ந்த மனிதர். அவர் அந்தணராகப் பிறந்த ஒரே காரணத்துக்காக திராவிட இயக்கங்களினால் வெறுக்கப் பட்டார். சீர்திருத்தங்களில் நம்பிக்கை உடையவராக இருந்ததால் அவருடைய இனத்தவரே அவரை ஏற்கவில்லை. அவருடைய அச்சங்கள், அவை குறித்த அவரது எச்சரிக்கைகள் எல்லாமே பின்னாட்களில் உண்மையாகி அவருடைய தொலை நோக்கினை மக்கள் உணர்ந்தனர்.
ஒருமுறை ஐந்தாவது வர்ணம் என்று சொல்லப்பட்ட நிலையில் இருந்தஇரு சிறுவர்களை முனிசிபல் பள்ளியில் சேர்க்கப் போராடினார். பள்ளி நிர்வாகிகள், இந்த இரு மாணவர்களைச் சேர்ப்பதானால் மற்ற இருநூறு மாணவர்களும் வெளியேறி விடுவார்கள் என்று கூறினர். வேறு சிலரும் ராஜாஜிக்கு நெருக்கடிகொடுத்தனர். ஆனாலும் ராஜாஜி வெற்றி கண்டார். அவரே அந்தப் பிள்ளைகள் படிக்கச் சம்பளம் கட்ட, அந்த இரு சிறுவர்களும் பள்ளியில் சேர்ந்தனர். பிரச்னை ஒன்றும் இல்லாமல் தேறினர். இது மாதிரி இன்னொரு சமயத்தில், விதவைப் பெண்ணுக்குத் திருமணம் நடத்தி வைப்பதிலும் ராஜாஜி ஈடுபட்டார். இது அக்காலத்தில் பெரிய செய்தியாகிப் பத்திரிக்கைகளிலும் வந்தது. ராஜாஜியின் வீட்டில் எப்போதும் விருந்தினர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். எந்நேரமும் சாப்பாடு கிடைத்தது. இதற்காகவே வீட்டில் இரண்டு சமையல்காரர்களை அமர்த்தி இருந்தார். அது மட்டும் அல்லாது பொது காரியங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் ராஜாஜி வாரி வாரி வழங்கினார்.
ராஜாஜி செல்வாக்கில் மேலும் வளர்ந்தபோது ஒரு கார் வாங்கி வைத்துக் கொண்டார். அதற்கு கௌஸ் என்ற ஒரு இஸ்லாமியரை ஓட்டுனராக அமர்த்திக் கொண்டார். ராஜாஜியின் மனைவி மங்காவின் பெற்றோர்கள் ஆசாரம் பார்ப்பவர்கள் என்றாலும் மங்கா கணவர் வழியில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகினாள். கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, அவர்கள் வைணவக் குடும்பமாக இருந்தாலும், மாரியம்மன் கோவிலுக்கும் காணிக்கை கொடுத்து அனுப்புவாள். அதே போல கௌஸிடம் பணம் கொடுத்து மசூதிக்கும் காணிக்கை கொடுப்பாள். தெலுங்கு பேசும் பெண்ணான மங்காவுக்கு ராஜாஜியே தமிழ் கற்றுக் கொடுத்தார்.
சரி இவ்வளவு பொது நோக்கு கொண்டிருந்த இராஜாஜி ஏன் இப்படி ஒரு 'குலக்கல்வி திட்டம்' என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்? கொஞ்சம் அந்த கால கட்ட தமிழக கல்வி மற்றும் கருவூல நிலையையும் பார்ப்போமே...
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கில் அந்த கால கட்டமான 1951 ஐப்பார்த்தால், சென்னை மாநிலத்தில் 21 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் வெறும் 47.8 விகித குழந்தைகளே பள்ளிக்கு சென்றனர். மீதம் 52.2 விகிதம் மழைக்குகே கூட பள்ளியில் ஒதுங்குவதில்லை. அவ்வளவு பள்ளிகளும் கிடையாது!!! (Directive principles) என்றழைக்கப்படுகிற சுதந்திர இந்தியத் திருநாட்டின் வழி காட்டு கோட்பாடுகள் இந்திய அரசை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கல்வியளிக்கும்படி பணிக்கின்றன. ஆனால், 1950-51 நிதியாண்டில் சென்னை மாநில அரசு தொடக்கக் கல்விக்காக 6.87 கோடி ரூபாய்கள் செலவு செய்தது. இது அரசின் மொத்த வருவாயில் 11.5 விழுக்காடு. ஒரு மாணவருக்கு கல்வியளிக்க ஆண்டொன்றும் ரூ. 22.80 செலவானது. இதில் அரசு ரூ.16.30 ஐ மட்டுமே அளித்து வந்தது. இவ்வாறான பற்றாக்குறை செயல்பாடுகளால் பள்ளியில் விலகும் மாணவர் விகிதம் கூடுதலாக இருந்தது. 1946-47 கல்வியாண்டில் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 12,22,775மாணவர்களில் 4,61,686 (37%) பேர் மட்டுமே 1950-51 கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பில் இருந்தனர். இத்தகைய கல்விச்சூழல் நிலவிய போது தான் ராஜாஜியின் காங்கிரசு அரசு சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது.
அன்றைய பொருளாதார சூழ்நிலைதான், இராஜாஜி இந்த திட்டத்துக்கு மூல காரணம் என்றே சொல்லலாம். இராஜாஜி மாற்றங்களை ஒரே நாளில் கொண்டு வர இயலாது என்று நம்பினார். ஏனெனில்
- தொடக்கப்பள்ளிகளில் பாதிக்கு மேல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இச்சீர்திருத்த திட்டத்தின் மூலம் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாமல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
- சென்னை மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து வகுப்புகளுக்கு மூன்றுக்குக் குறைவான ஆசிரியர்களே இருந்தனர். 4,108 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வந்தன. 60% பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு நான்குக்கு குறைவான ஆசிரியர்களே இருந்தனர்.
- இத்தகையஆசிரியர்-மாணவர் விகிதத்தால் ஆசிரியர்களின் வேலைப்பளு அளவுக்கதிகமானது. மாணவர்கள் நெடுநேரம் பள்ளியில் இருக்கும் நிலை உருவானது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்தாமல் இதனை சமாளிக்க அரசு விரும்பியது.
இராஜாஜி ஆட்சிக்கு வந்த நேரம் 21 சதவீத மக்களே சென்னை மாகாணத்தில் படிப்பறிவு கொண்டவர்களாக இருந்தானர். இதில் கையெழுத்து மட்டும் போடத்தெரிந்தவர்களும் படிப்பறிவு கொண்டவர்கள் பட்டியலில்...அரசியல் அமைப்புச்சட்டமோ அனைத்து குடி மக்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை என்று வரையறுத்து உள்ளது. வெள்ளைக்காரன் வெளியேறி விட்டால் பாலும், தேனும் வீதியெங்கும் ஓடும் என்றொரு மாயையை காங்கிரசு உருவாக்கி வைத்து இருந்தது.அரசு வண்டி ஓடியாக வேண்டும் .. ஓட்டியாக வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில்...தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் வெகு வேகமாக வளர்ந்து வேர் பிடித்து கிளை பரப்ப ஒவ்வொரு வாய்ப்பையும், ஓடு மீன் ஓட உறுமீன் வரும் என்று காத்து இருக்கின்றன.
சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- பள்ளிவேலைநேரம்இருநேரமுறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
- மாணவர்கள் ஒரு நேர முறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
- இரண்டாவது நேர முறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
- சரி…தாய் தகப்பனுக்கே எந்த தொழிலும் இல்லை என்றால்??..இரண்டாம் நேர முறையை வேறொரு தொழில் செய்பவருடன் கழிக்கலாம்.
- இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்
- இரண்டாம் நேர முறைக்கு வருகைப் பதிவேதும் கிடையாது.
இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35,000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது.
இந்தத் திட்டத்தை அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். உண்மையில் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டியது திராவிடர் கழக அமைப்பினரே… அவர்கள் பட்டியலிட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள்:
- ராஜகோபாலாச்சாரி சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக அத்திட்டத்தை கொண்டு வந்தார்.
- கிராமப்புறப்பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்த அத்திட்டம் கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாழாக்கத் திட்டமிட்டு செயல் படுத்தப்பட்ட ஒன்றாகும்.
- மாணவர்கள் தத்தமது குலங்களின் தொழிலைக் கற்பது மூலம், ஜாதி முறை நிரந்தரமாகும். ஏற்கனவே கல்வியில் முன்னணியில் உள்ள பிராமணர்களின் ஆதிக்கம் மேலும் பலப்படும்
- ஆசிரியர்களுக்கு வேலை நேரமும், பளுவும் கூடினாலும் அதற்கேற்றவாறு ஊதியம் கூடவில்லை.
திட்டம் அமுலுக்கு வந்த இரண்டே மாத்த்திற்குள், தி.க.வின பெரியார், தி.மு.க.வின் அண்ணாதுரை மற்றும் கம்யூனிஸ்டுகள் முழுச்சசக்தியயுடன் எதிர்ப்பில் ஆரவாரித்தனர். இராஜாஜி அவர்கள் வானொலியில் பிரச்சாரம் மேற்கொண்டார். ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்த எம்.வி.கிருஷ்ண ராவ் ராஜாஜியுடன் இணைந்து திட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தி.மு.க.வினர், திரு.ஈ.வெ.கி.சம்பத் அவர்களின் தலைமயில் 1953 ஜூலை 13 ஆம் தேதி மறியலில் ஈடுபட்டுக் கைது ஆயினர். ஜூலை 14 ஆம் தேதி, திருமதி.சத்தியவாணி முத்து அவர்கள் தலைமையில் தி.நகரில் பசுல்லா சாலையில் அமைந்து இருந்த திரு.இராஜாஜியின் அரசு இல்லத்தை நோக்கி ஊர்வலம். ஊர்வலத்தை இடை மறித்து, அரசு தி.மு.க.வினரை அனுமதி இல்லாத ஊர்வலம் என்று சொல்லி கைது செய்தது. அடுத்த 15 நாட்களுக்குள் 20க்கும் மேற்பட்ட மறியல் போராட்டங்கள் நடந்தேறின.
இன்றைய தலை முறையினருக்கு ஏதோ இப்போது தன ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக தமிழ் மக்கள் மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பது போல தெரியும் . தவறு ... மெரீனா பல போராட்டங்களை எப்போதோ பார்த்து அலைகள் என்னும் தலைகளை ஆட்டிக்கொண்டே நினைவுகளை சுவைத்துக்கொண்டு இருப்பது பலரும் அறியாதது.
இதை எதிர்த்து நாமக்கல்லில் இருந்து முன்னாள் மாநிலத்தலைவர் அன்றைய மாநில துனைத்தலைவர் நல்லிபாளையம் ராமசாமிரெட்டியார் அவர்கள் மிதிவண்டி பேரணி சென்னையை நோக்கி நடத்தினர். அந்தந்த பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கி பெரும் மிதிவண்டி பேரணி மெரினா கடற்ரையை மற்றுமொரு ஆசிரியர் கடலாக்கியது. அந்த பிரமாண்டமான உணர்வுபூர்வமான கூட்டத்தில் நாங்கள் தான் தமிழகம் என்ற நிலைப்பாட்டை இயக்கம் உருவாக்கியது முதன் முதலாக முதல்வரின் திட்டத்தினை எதிர்த்து அரசின் ஆசிரியர்களின் உணர்வுவை அறிந்து கொண்டவர்கள் அன்றைய கூட்டத்தில் பல அரசியல் கட்சித்தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்குபெற்றனர்.
ஆம் தமிழகம் முழுவதும் வந்த ஆசிரியர்கள் எழுச்சி அனைவரையும் சிந்திக்கச்செய்தது..
சரி அடுத்து என்ன நடந்தது ? அடுத்த பகுதியில் பார்ப்போமே..
Miga miga arumai ayya
பதிலளிநீக்கு