அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 65


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
07-10-2018
பகுதி: 65

அன்புசொந்தங்களே ...

1957 சட்ட மன்றத் தேர்தல், பெரும் பரபரப்புடன் நடந்தேறியது.   மொத்தத்தில் இந்தத் தேர்தல், திராவிட முன்னேற்றக் கழகத்த்க்கு தமிழகத்தில் கால் கோளாக விளங்கியது என்றே சொல்லலாம்.  காமராஜருக்கும் இராஜாஜிக்கும் தான் நேரடி மோதல்.   காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய இராஜாஜி அவர்கள், பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர் பெருமகனாரையும் தன்னுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.  கம்யூனிஸ்டுகளுக்கு இந்தத் தேர்தல் தமிழகத்தில் பின்னடைவையே கொடுத்தது. நமது திருவாடனை தொகுதியில் இராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர் அணியின் கூட்டணியின் சக்தியோடு களம் கண்ட தெய்வத்திரு. கரியமாணிக்கம் அம்பலம் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.  காமராஜரின் காங்கிரசு கட்சியின் சார்பில் இவரை எதிர்த்துப் போட்டி இட்ட வலமாவூர் இராமகிருஷ்ணத் தேவர் தோல்வியைத் தழுவினார்.  தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்ட திரு. இராம வெள்ளையன் அவர்கள், மூன்றாம் இடத்தில்...

மொத்த வாக்காளர்கள்  :   83,346
பதிவான வாக்குகள்        :   44,700
தேர்தல் தேதி                       :   01-03-1957

திரு.கரியமாணிக்கம் அம்பலம் அவர்கள் :  13,633 வாக்குகள்
திரு.இராமகிருட்டிணத் தேவர் அவர்கள்    :    9,186 வாக்குகள்

தமிழகத்தைப் பொறுத்த வகையில் , கட்சி வாரியான வெற்றி நிலவரம்:
கட்சி
போட்டியிட்ட தொகுதிகள்
வெற்றித் தொகுதிகள்



இந்திய தேசிய காங்கிரஸ்
204
151
இந்திய கம்யூனிஸ்ட்
58
4
பிரஜா சோஸலிஸ்ட்
23
2
இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்


(இராஜாஜி)

9
ஃபார்வர்டு ப்ளாக்

3
சோஸலிஸ்ட்

1
தி.மு.க.

13
சுயேச்சைகள்

22
மொத்தம்

205

தமிழகத்தில் தி.மு.க. காலூன்ற ஏதுவாக அமைந்தது இந்தத் தேர்தல்தான்.  பல இடங்களில் தி.மு.க. தோல்வியுற்றாலும், தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர்களின் அனல் தெறிக்கும் தமிழ் மேடைப்பேச்சு விருந்தாக அமைந்தது. நமது திருவாடானைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திரு.இராம. வெள்ளையனின் நெஞ்சுரத்துக்கு இந்தத் தேர்தல் ஒரு சாட்சியாகவும், அவரது அரசியல் தாகத்திற்குஅருமருந்தாகவும் அமைந்தது இந்தத் தேர்தல்.  ஏனெனில், நகரத்தார் வகையில் வந்த திரு.இராம. வெள்ளையன் அவர்கள், புரட்சிகரமான புதிய எண்ணங்களையும், பகுத்தறிவுப் பாசறை என விளங்கிய திராவிடர் கழகத்தில் இருந்து அதே கருத்துக்களயும், கொள்கைகளயும் தாங்கி அன்றைய கால கட்டத்தில் புதிய சிந்தனைகளுடன் மக்களுக்கு அறிமுகமான் தி.மு.க.வின் சார்பில் போட்டி இடுவது என்பதே ஒரு பெரிய சவால் தான்.  மேலும், காங்கிரஸ் சிந்தனைகள் வேரூன்றி விளை நிலமான பகுதியில், காமராஜர், இராஜாஜி மற்றும் முத்துராமலிங்கத் தேவர் போன்ற பெரும் பழுத்த மக்கள் மனதில் நின்று கொண்டு இருந்த தலைவர்களின் கட்சிகள் களத்தில் மல்லுக்கு நின்ற தருணம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர் போட்டி இட்டது ஒன்றே அவரது அரசியல் ஈடுபாட்டுக்குச் சான்று ஆகும்.

இந்தத் தேர்தலில், தி.மு.க.சார்பில் புதிய முகங்கள் சட்ட மன்றத்தில் அடி எடுத்து வைத்தன.  அப்போது எவரும் உணரவில்லை, அடுத்து வரும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் திராவிட இயக்க அரசியல், காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை தமிழக அரசுக்கட்டிலில் இருந்து அப்புறப்படுத்தி அரச பீடத்தில் அசையாது நின்று நிலைத்து இருக்கும் என்று.  அன்றைய தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வின் முக்கிய முகங்கள்:

அறிஞர் அண்ணாதுரை           :  காஞ்சிபுரம்
கலைஞர். மு.கருணாநிதி        :  குளித்தலை
பேராசிரியர் அன்பழகன்        : சென்னை எழும்பூர்
திருமதி.சத்தியவாணி முத்து:  பெரம்பூர்  
ப.உ.சண்முகம்                             :   திருவண்ணாமலை
ஏ.வி.பி.ஆசைத்தம்பி                  :  ஆயிரம் விளக்கு




பேசின் ப்ரிட்ஜ் தொகுதியில் தி.மு.க.வின் என்.வி.நடராஜன் காங்கிரசின் டி.என்.அனந்தநாயகியிடம் தோற்றுப் போனார்.  லால்குடியில் அன்பில் தர்மலிங்கமும்,  மதுரை மத்தியில் மதுரை முத்து, சேலத்தில், நாவலர் நெடுஞ்செழியன், 


தேனியில் சேடபட்டி சூரியநாராயண ராஜேந்திரன் எனும் எஸ்.எஸ்.ஆர்.  தோல்வியைத் தழுவினர்.





முதுகுளத்தூரில் தேவர் வெற்றி பெற்றார். 

காமராஜர் முதல்வராக, காங்கிரசு அமைச்சரவை அமைத்தது.

எம். பக்தவசத்சலம்               :  உள்துறை
சி.சுப்பிரமணியம்                  :  நிதித்துறை
ஆர்.வெங்கட்ராமன்              :  தொழில்துறை
மாணிக்கவேலு நாயக்கர் :  வருவாய்த்துறை
கக்கன்                                         :   பொதுப்பணித்துறை
ராமையா                                   :  மின்சாரம்
லூர்துஅம்மாள் சைமன்     : நிர்வாகம்





என்று மிகச்சிறிய  திறமை மிக்க, சுத்தமான கரங்களுக்குச் சொந்தக் காரர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது.

ஆயின், தேர்தலுக்குப் பின் இராஜாஜி, தேவர் திருமகன் இவர்களுடனான காமராஜரின் உறவு விரிசலடைந்தது மற்றும் இன்றி, கொஞ்சம் வேறுபாடுகளுடன் புகையத் தொடங்கியது என்று தான் அதன் பின் அரங்கேறிய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

முதுகுளத்தூர் கலவரம் :
தென் தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று முதுகுளத்தூர் கலவரம் ஆகும். முத்துராமலிங்கத் தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சிவேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் இராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக மாறியது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர்இனத்தவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தேவேந்திரர் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக் கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வேகமாக பரவியது.  காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியால் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் கட்சிகளின் சண்டை சாதி சண்டையாக மாறியது எனும் குற்றச்சாட்டு இன்றளவும் மாறாமல் இருக்கிறது.

இங்கு நமது திருவாடானைத் தொகுதியில், வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு.கரியமாணிக்கம் அம்பலம் அவர்கள், அரசின் ஒப்பந்ததாரராக அதற்கு முன்னமேயே இருந்து வந்தவர்.  அவரது தொழிலாக அரசு சார்பில் எடுத்து நடத்தும் ஒப்பந்தப் பணி ஒன்று நடந்து வந்து இருக்கிறது.  அவர் ஆளும் கட்சியில் உறுப்பினராக இல்லையே... எனவே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் பிரச்சனை எழுந்தது.  இன்றைக்கு எத்தனை ரெய்டுகள் வந்தாலும், தூசி தட்டுவதைப்போல் தட்டி விட்டு எதுவும் நடக்காதது போல அரசியல் தலைகள் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மிகச்சாதாரணம்.  அன்றைக்கு நிலைமை அப்படி அல்ல.  திரு.கரியமாணிக்கம் அம்பலம் அவர்கள் தனது பதவியைத் துறந்தார்.

1958இல் மீண்டும் தேர்தல்.  இடைத்தேர்தல்.  அதே வேட்பாளர்கள்.  திரு.இராம.வெள்ளையன் அவர்களும் மறுபடியும், தி.மு.க. சார்பில் போட்டி இட்டார்.  தேர்தல் களம் சூடு பிடித்தது.  நமது நகரில் இருந்து சென்னை சென்று பத்திரிக்கைத் துறையில் தடம் பதித்த ‘துணிவே துணை’ எனும் தாரக மந்திரம் கொண்ட திரு.தமிழ்வாணன் அவர்களின் நடுநிலை பத்திரிகை என்று பெயர் எடுத்து வந்த ‘கல்கண்டு’  பத்திரிகையில், திரு.இராம.வெள்ளையன் அவர்களை ஆதரித்து முழுப்பக்க விளம்பரம்....




திருவாடானை வாக்காளர்களுக்குத் திரும்பவும் ஒரு ஒரு பொன்னான வாய்ப்பு....
திரு.இராம.வெள்ளையன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி நமது சட்ட மன்றத் தொகுதிக்கு தேர்வு செய்யுமாறு வேண்டுகிறோம்...
சரி ... வென்றது யார்?
அடுத்த பகுதியில்.........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60