அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 66
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
19-10-2018
பகுதி: 66
அன்புசொந்தங்களே
...
இடைத்
தேர்தல் என்பது எப்போதுமே கொஞ்சம் சிக்கலானதுதானே. பெண்களின் இடைத்தேர்வு ஆகட்டும், மக்கள் மன்ற இடைத்தேர்தல்
ஆகட்டும்... இரண்டிலுமே வலிவு பெற்றவர்கள் பொலிவு பெறுவார்கள். பணபலமோ, படை பலமோ... அதனால் தான் சில இடைத்தேர்தல்களில், வளர்ந்து வரும் புதிய
காட்சிகள் வெற்றி பெறுவது என்பது மக்களின் உண்மை உணர்வை பிரதிபலிப்பதாக
இருக்கிறது.
நீங்கள்
அனைவரும் 1958இல் நமது தொகுதியில் நடை
பெற்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்காக
எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள் என்றுஅறிவேன்.
இடைத்தேர்தலில் நடராஜத்தேவரும், ஆதங்குடி
பிச்சுக்குட்டி உடையார் அவர்களும் திரு.வலமாவூர் கிருட்டிணத் தேவரை
ஆதரித்தனர். கலைஞர் அவர்கள் பாணியில் இவர்கள் எல்லாம் ஓர் அணி, திரு.கரியமாணிக்கம்
அவர்களும் திரு.இராம வெள்ளையன் அவர்களும் தனி. காமராஜரின் ஆளும் காங்கிரசின் சார்பில் தேவர். பதவியை தக்க வைக்க அம்பலார். கட்சியினை வளர்க்க இராம வெள்ளையன். இப்படி மும்முனையில் போட்டி.
வென்றது
திரு.வலமாவூர் இராமகிருட்டிண தேவர். மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்
கரியமாணிக்கம் அம்பலம் அவர்கள் இரண்டாம் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். நல்ல குறிப்பிடும் படியான வாக்குகளை திரு.இராம
வெள்ளையன் அவர்கள் பெற்றார்கள். இனிமேல் நாம் இந்த தேர்தல் களத்தை விட்டு வெளியேறி
நமது நகர் மன்ற நாயகன் திரு.இராம வெள்ளையன் அவர்கள் பக்கம் நமது கவனத்தைத்
திரும்புவோம்.
ஒவ்வொருவருக்கும்
ஒரு நிறைவேற்ற இயலாத ஒரு ஆசை மனதில் இருக்கும். அது மனதில் அவ்வப்போது வந்து
போகும். எனக்கு அப்படி ஒரு ஆசை என்ன
என்றால் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் இதே தேவகோட்டையில் தான்
பிறக்க வேண்டும் என்பதே. அதிலும் நகரத்தார் வீட்டில் . இப்போது நான் 'ஆய்ச்சி' மகன்.... 'ஆச்சி' மகனாக விரும்புவது
ஒன்றும் தவறில்லையே. பல சந்தர்ப்பங்களில்
நகரத்தாரின் 'வாழும் கலை' நினைத்து ஆச்சரியப்பட்டு
இருக்கிறேன். பொருளாதார நிலையில் வேறுபட்ட
உயரங்களில் இருந்த நகரத்தார் குடும்பங்கள் எனக்கு நட்பு, பரிச்சயம். ஆனாலும் தன்மானம் சிறிதும் குறையாது பண்போடு
வாழும் கலை அறிந்தவர்கள்.
எத்தனையோ
தலை முறைக்கு முன்னர் இருந்த தன வணிக
வருமானம் இன்று இல்லைதான். ஆயினும் பொருள் பேணுவதில் பொன் போன்ற மக்கள். ஆனால்
நான் அன்று கண்ட நிலை இன்று நிறைய மாறி இருக்கலாம். இருந்த போதும் அடிப்படை என்றும் மாறாதது அல்லவே? அவர்களின்
·
சைவ ஒழுக்கம்
·
திருமண நெறி முறை
·
செலவச் செருக்கில்லாத தன்மை
·
முருக வழிபாடு
·
தமிழ் மொழி ஈடுபாடு
இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம். என்னுடன் படித்த
நகரத்தார் நண்பர்கள், சில வேளைகளில் இன்னும் கணக்கு எழுதவில்லை என்று
புலம்புவார்கள். முன்பு வாங்கிய கைச்செலவு
காசுக்குக் கணக்கு எழுதிக் கொடுத்தால் தான் அடுத்த பணம் கிடைக்கும். விளையாட்டில் 'மோனோபோலி' என்று பணம், வங்கி , வட்டி என்று
விளையாடுவார்கள். இவை எல்லாம் இளம்
வயதிலேயே பணம் பற்றிய முக்கியத்துவத்தை மனதின் அடியில் விதைத்து விடும் செயல்களே..
பலரும்
அறியாதது நகரத்தார் வைரம் போன்ற நெஞ்சுரம் கொண்டவர்கள் என்பது. இல்லை எனில் கடும் சீற்றம் கொண்ட
ஆழிப்பரப்பைக் கடந்து கீழ்த்திசை நாடுகள்
மட்டும் அல்ல... திக்கெட்டும் பயணம் செய்து பொருள் ஈட்டி இருக்க முடியாது. அதே போல் பிறரை சரியாகக் கணித்து மதிக்கத் தெரிந்த கண்ணியவான்கள்.
வெளியில் பார்ப்பதற்கு தெரிவதில்லை. இல்லை
என்றால் நாட்டர்களும், மறவர்களும் நிறைந்த பாண்டி மண்டலத்தில், சேது பூமியில் நாட்டுக்கோட்டை என்று கோட்டை கொத்தளங்கள் உருவாகியிருக்க
முடியுமா?
இராமநாதபுரம்
மன்னருக்கே கடன் கொடுத்தவர்கள் நமது தேவகோட்டை அள .அரு .ஜாமீன்தார் பெருமக்கள் . (
இது பற்றி நிறைய எழுத ஆசை... காலம் கை கூட
வில்லை.. இன்னும்).
சரி
எதற்கு இப்போது இந்தப் பீடிகை என்று கேட்கிறீர்களா.. நம்ம நகர் மன்றத் தலைவராய்
இருந்த வைர நெஞ்சன், திரு.இராம.வெள்ளையனைப் பற்றி எழுதப்
புகுகிறேன். அதனால் தான்...
தேவகோட்டையில்
என் வயது உடையவர்கள் கண்டிப்பாக முன்னாள் நகர் மன்றத் தலைவர், நகரத்தந்தை
இராம.வெள்ளையன் அவர்களை அறியாமல் இருந்திருக்க முடியாது. எனது தேவகோட்டை வாழ்வில் மூன்று முறை
திரு.இராம.வெள்ளையன் அவர்கள் இல்லத்திற்கு..
முதன்
முதலில் 1970
இல்
நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட போது ( எனக்கு வயது 10) நாங்கள் திருச்சுழியார் வீட்டுத் தோட்டத்தில் குடி
இருந்தோம். அதாவது வட்டாணம் ரோடு பெரிய
பள்ளிவாசலுக்கும் அந்தத் தோட்டத்துக்கும் இடையே ஒரு சுவர்
மட்டுமே... அப்போது திருச்சுழியார் வீட்டு அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது
தம்பி சுந்தரேசன் செட்டியார் இருவருக்கும் நான் தான் கைப்பிள்ளை. எங்கு செல்வதானாலும் என்னை உடன் அழைத்து
செல்வார்கள் இருவரும். நகரத்தார் நகரத்தில்
வெற்றி பெற்று நகரத் தந்தை ஆனதும் நகரத்தார் பெருமக்கள் இராம வெள்ளையன் அவர்களை
வாழ்த்த அவர் இல்லம் குவிந்தனர். என்னை தன்னுடன் அழைத்து சென்றார் திரு.அண்ணாமலை
செட்டியார். அந்த நினைவலைகளை இதற்கு முந்தைய பதிவுகளில் எழுதி இருந்தேன்.இதன் முழு
விபரங்களும் அறிய பகுதி 20 மற்றும் பகுதி 21 ஐ மீண்டும் வாசிக்கவும்.
ஒரு
பகுதியை கீழே கொடுத்து இருக்கிறேன்.
திரு.இராம.வெள்ளையன் அவர்கள் நகர் மன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார். வழக்கம் போல நாங்க இரண்டு பேரும்தான் எங்கள் ஒற்றைமாட்டு வண்டியில்திரு.இராம.வெள்ளையன் இல்லத்தின் முன் ஹாலில் மடக்கு ஸ்டீல்நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன.
உள்ளே பெரிய பெரிய VIP எல்லாம் உட்க்கார்ந்து இருக்காங்க. பெருங்கூட்டம். இவர்பெரியவர் .. உள்ளே நுழைகிறார்.. வெள்ளையன் அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். அங்குவந்திருந்த அனைவருக்கும் கலர் பானம் ( வின்சென்ட, நன்றாக நினைவு இருக்கிறது )கொடுக்கிறார்கள். கையை நீட்டி என்னை அழைக்கிறார். இங்கன வந்து உக்காரு.. எங்கேபோறே என்று பக்கத்தில் வைத்து கொள்கிறார். மிக்சர் கொண்டு வா, கலர் கொடுன்னு ஒருஅதிகாரம் எனக்காக... எப்படிபட்ட மனிதர்களுடன் வாழ்ந்து இருக்கிறோம் என்று எண்ணும்போது வாழ்வின் சுகம் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறது.
அடுத்து 1979 ஆம் ஆண்டு.. அப்போது தான் கல்லூரியில் வணிகவியல்
இளங்கலை முடித்து இருக்கிறேன். ஏதேனும்
பணி செய்து ஆக வேண்டும். என் உறவினரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும்
ஆன திரு.அங்குச்சாமி அவர்கள் என்னை
திரு.இராம.வெள்ளையன் அவர்கள் இல்லத்துக்கு அழைத்து சென்றார். வேலைக்கு உதவி
கேட்டு. இராம.வெள்ளையன் அவர்கள் என்னை
அருகில் அமரசொன்னார். என்னென்ன தெரியும்
என்றார்? அக்கவுண்ட்ஸ் நன்றாக எழுதுவேன் என்றேன்.
சிட்டை , பேரேடு, ஐந்தோகை எல்லாம் தனியாகப் போட்டு விடுவாயா என்று
கேட்டார். கொஞ்ச நேரம் ஒன்றும் புரியாமல் விழித்தேன். நான்
படித்தது எல்லாம் JOURNAL,
LEDGER, TRIAL BALANCE . தான். ஐந்தொகை என்று காதில் விழுந்தது 'குறுந்தொகை' போல மனதில் தெரிந்தது. எல்லாம்
முடியும்.. முடியும்...என்று தலையை ஆட்டினேன்.
சரி... மணலி ரிஃபைனரிஸ் போகிறாயா என்று கேட்டார். அதற்கும் தலை ஆட்டினேன். என்ன காரணத்தினாலோ அங்கு செல்லவில்லை.
கடைசியாக
அதே இல்லத்துக்கு எனது அன்பு மாப்பிள்ளை என்று
என்னால் அழைக்கப்படும் என் வகுப்புத்தோழன்
திரு.சபா ரெத்தினம் திருமணத்துக்கு சென்றேன். ஆம்
எம் நண்பனுக்கு திரு.இராம வெள்ளையன் அவர்கள் தான் மாமனார் ஆகி இருந்தார். இந்த முறை திரு .இராம வெள்ளையன்
அவர்கள் இல்லை. அமரர் ஆ கி இருந்தார்.
இராம
.சுப்பையா
சைவ
நெறிறழாது சமூக விழிப்போடு இருந்து வந்த நகரத்தார் சமூகத்தில்
ஈ.வெ .ராமசாமி நாயக்கர் எனும் பெரியாரின் கருத்துக்கள் எந்த அளவுக்கு எதிர் வினை
ஆற்றியிருக்கும் அந்தக் கால கட்டத்தில்
என்று சொல்லவும் வேண்டியதில்லை. அந்தக் கால கட்டதை இன்றைய நிலையில் இருந்து எண்ணிப்
பார்க்காதீர்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அடர்ந்து கிடந்த இருளை ஓட்டும் வண்ணம்
பகுத்தறிவுப் பகலவன் என்ற நிலையில் கருஞ்சட்டைக் காரர்களால் ஆதரிக்கப்பட்டு வந்த
பெரியார் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படாத காலம்.
நமது பகுதியில் திராவிட இயக்கம் முளை
விட்ட ஆரம்ப கால கட்டத்தில்
முக்கியமாக இருந்தவர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்கள் . A V M நிறுவனத்தின் முத்திரை
இயக்குனரான திரு.SP.முத்துராமன் மற்றும் திராவிடத் தமிழ்
தேசியம் பற்றி வரும் சுப.வீரபாண்டியன் இவர்களின் தந்தை. நமது பகுதியில் திராவிட இயக்கக கருத்துக்கள்
பரவி விரவி வெகு வேகமாக வளர்ந்ததற்கு நகரத்தார் வகையில் பிறந்த பெரியவர் இராம
சுப்பையா அவர்கள் முக்கிய வித்தானவர்.
1937 ஆம் ஆண்டிலேயே, 80 ஆண்டுகளுக்கும் முன்னால்
திரு.இராம.சுப்பையா அவர்களும் அவர் தம் துணைவியார் திருமதி.விசாலாட்சி
அவர்களும் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்
கழகம் எனத் தமது வாழ்நாளின்
பெரும்பக்தியைக் கழித்தவர்கள்.
( SUBA.VEE. WITH ANNA WHEN HE WAS YOUNG)
இந்த
இராம.சுப்பையா அவர்கள் வழித்தடத்தில் இன்னும் இரண்டு 'இராம ' க்கள்.
ஒருவர்
புதுக்கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட இராம வீரப்பன்
மற்றவர்
நமது தேவகோட்டையில் இருந்த புறப்பட்ட
புயல் இராம வெள்ளையன்
இருவருமே
ஒரே மாதிரியான மென்மையான உடலமைப்பும் திண்மையான ,மன உறுதியும் கொண்டவர்கள்.
இளம்
இராம.வெள்ளையன்
கடல்
கடந்து 'கொண்டு விற்கும்' வழக்கப்படி நமது
நகரத்தார் பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் என்று பரவி
விரிந்து கிடந்தனர். இதில் திரு.இராம
வெள்ளையன் அவர்களின் தந்தை திரு.இராமநாதன் செட்டியார் அவர்கள் வியட்நாம் நாட்டின் சூ லான் பகுதியில் தன
வணிகராக திகழ்ந்தவர். என் அன்பு தோழன்
மாந்தோப்பு தெரு திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தந்தையார் வியட்நாமில் சைகோன்
நகரில் வணிகம் செய்தவர். பின்னர் தாயகம் வந்ததும் வெள்ளை அரசின் காலத்திலேயே
மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனராக பணி
ஆற்றும் கவுரவம் பெற்றவர்.
திரு.இராம.வெள்ளையன் அவர்களின் தாயார் சௌந்தரவள்ளி ஆச்சி அவர்களும் செல்வம் கொழித்த சேவுகன் செட்டியார் குடியில்
உதித்த மலர். இவர்களுக்கு இரண்டு ஆண்
மக்கள். மூத்தவர் திரு.குப்பான்
செட்டியார். இளையவர் நமது நாயகன் இராம.வெள்ளையன் அவர்கள். மூத்தவர் மலேயாவில் வணிகம். இராம.வெள்ளை யன்
அவர்கள் காவிரி பாய்ந்து வெற்றிலைக் கொடிக்காலும் , தெங்கும், தேக்கும், பாக்கும் கரை கட்டி
நிற்கும் தஞ்சை வளநாட்டின் திருக்காட்டுப்பள்ளியில், பள்ளிப் படிப்பை
முடித்தவர்.
தொழில்
புரிவதிலும் கெட்டி. இன்றும் சென்னை
மாதவரம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 'பால் பண்ணை' தான். அந்தக் காலத்திலேயே இதே மாதவரத்தில், கறவை மாடுகளை வைத்து பால்
பண்ணை வைத்து நடத்தி வந்தார். ஆம்... 'ஆய்ச்சி' பணியும்
செய்தார் பின்னால் 'ஆட்சி' பணியும் செய்தார்..'ஆச்சி' மகன். அப்புறம் ஐஸ்
கம்பெனி நடத்தியது... திரைப்படத்துறையில் விநியோகஸ்தர் ஆகியது, திரைத்
தயாரிப்பாளர்களுக்கு நிதி முதலீடு செய்வது என பல தொழில் செய்த பன்முகத்தார். எனது நினைவு சரியாக இருக்கும் என்றால் 'மேகலா பிக்சர்ஸ்' எனும் நிறுவனம் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் மக்கள்
திலகம் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா இருவரும் நடிக்க வைத்து திரைப்படம்
தயாரித்தது. இந்த நிறுவனத்தில் திரு.இராம.வெள்ளையன்
அவர்களின் பெயர் பைனான்சியர் என்று
இருக்கும். (அந்த அளவுக்கு
இராம.வெள்ளையன் அவர்கள் கலைஞர் அவர்களுடன் நெருக்கம்).
இங்கு நமது மண்ணில்
திராவிட இயக்க கொள்கைகளை பரப்பி அதன் படியே வாழ்ந்த வந்த திரு.இராம .சுப்பையா
மற்றும் அவரது துணைவியார் திருமதி.விசாலாட்சி இவர்கள் பால் ஈர்க்கப்பட்டு
கிட்டத்தட்ட அவர்களின் இன்னொரு மகன் போலானார் இராம.வெள்ளயன். இந்த காலகட்டத்தில்
திரு.இராம.வெள்ளையன் அவர்களுடன் அணுக்கமான நட்புடன்,
திராவிட
இயக்க கொள்கைகளில் ஒரே குழுவாக நின்று போராடியவர்கள் யார் யார் என்று அறிந்து
கொள்வோமா?
கவிஞர்
முடியரசனார்
ஏறத்தாழ இதே கால
கட்டத்தில் திரு.இராம .சுப்பையா அவர்களுடனும் மிக நெருக்கமாக இருந்தவர் கவிஞர்
முடியரசனார் . புரட்சிக் கவிஞர்
பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில்
தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். சீர்த்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்
அவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர் கவிஞர் முடியரசனார்.தன்மான இயக்கத்தில் தம்மை 1940
ஆம்
ஆண்டு முதலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவ்வாண்டு முதல் தந்தை பெரியாரின்
தன்மான இயக்கத் தொடர்பு கொண்டவர். கலப்புத் திருமணம் செய்து கொண்டு தன்
துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். பாவேந்தர்,
வாணிதாசன்,
மயிலை
சிவமுத்து, திரு.வி.க. குன்றக்குடி
அடிகளார் போன்ற தமிழ்ச்சான்றோர்களது அன்புக்குப் பாத்திரமானவர். இடர்ப்பாடுகளும்
இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் வாழ்ந்தவர்.
திராவிட நாட்டின் வானம் பாடி’ (1957) என்று
அறிஞர் அண்ணாவால் பட்டம் சூட்டப்பட்டவர்.கவியரசு(1966),
கவிப்பெருங்கோ(1980),
தமிழ்ச்சான்றோர்
விருது (1983), கலைஞர்
விருது (1988), பாவேந்தர்
விருது(1987), பொற்கிழி
(1993), இந்திராணி இலக்கியப்பரிசு (1993),
இராணா
இலக்கிய விருது(1994), கலைமாமணி
விருது (1998), போன்ற
விருதுகளைப் பெற்றுள்ளார்.
புலவர்
பொன்னம்பலனார்
புரட்சிக் கொள்கைகளும்,
துணிவும்
மிக்க பொன்னம்பலனார் தந்தை பொியாாின் கரங்களால் "தமிழ் மறவர்" என்னும்
பட்டத்தை 1957 ஆம் ஆண்டில் பெற்றவர். தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை
அடிகளாாின்மகனுடன் மிகுந்த தொடர்பு கொண்டவர். இவரும் திரு.இராம வெள்ளையன் அவர்களின் சிறு வயது
நண்பர்.
கவிஞர்
கண்ணதாசன்
காரைக்குடி முத்தையா என்ற
கண்ணதாசன் பற்றி நான் எழுதி நீங்கள் அறிந்து கொள்ளும்படியான புதிய செய்திகள் ஏதும்
இல்லை. உலகறிந்த கவியரசை உணர்வு மிகு
தமிழரசை பற்றி எழுத வேண்டுவதில்லை.
இவர்கள் தவிர நமது நகரின்,
நமது
பகுதியில் இருந்து (திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்படுவதற்கும் முன்பாகவே) திராவிட
கழக மாநாடுகளில் கலந்து கொள்வது, இயக்கக் கருத்துக்களை பரப்புவது என்று புரட்சிகர
இளைஞர்களாக விளங்கியவர்கள்:
·
காரைக்குடி N.R.சாமி,
திராவிட
கழக கொடியை வடிவமைத்தவர்
·
தேவகோட்டை புத்தகப்பண்ணை மீனாட்சி சுந்தரம்
·
ஈரோடு மீயன்னா (மீனாட்சி சுந்தரம் )
·
செக்காலை KR
லெட்சுமணன்
·
உ.சீனிவாசன்
·
எங்கள் ஒத்தக்கடை பகுதியில் இருந்தது
உதயசூரியன் கருப்பையா அண்ணன்
·
வெற்றிலைக்கடை தியாகராஜன்
·
கண.இராமநாதன்
·
எங்கள் வட்டாணம் ரோடு குளக்கால் பகுதியை
சேர்ந்த சைக்கிள் கடை காசிம் அண்ணன்
·
பெண் சிங்கம் கமலம் செல்லத்துரை
·
பால்கார லெட்சுமணன்
·
பேராட்டுக்கோட்டை சண்முகம் –முன்னாள் சட்ட
மன்ற உறுப்பினர்
·
அனுமந்தக்குடி சண்முகம்
இதில் உதயசூரியன்
கருப்பையா அண்ணன் அவர்களும், பின்னர் நகர் மன்ற
தலைவராக வந்த காசீம் அண்ணன் அவர்களும்
அடிக்கடி நான் பார்க்கும் எங்கள் பகுதி முகங்கள்.
அதிலும் உதயசூரியன் சைக்கிள் கடை கருப்பு சிவப்பு வண்ணத்தில் தான்
மின்னும். உள்ளே அறிஞர் அண்ணா,
கலைஞர்,
புரட்சித்தலைவர்,
M .G .சக்ரபாணி இவர்களின் புகைப்படங்கள் தொங்கும். சுவரில், 'ஒன்றே குலம்... ஒருவனே தேவன்' என்று பொறிக்கப்பட்டு இருக்கும். கடைசி காலம் வரை திராவிட இயக்க சிந்தனையுடன் மிக
எளிமையாக பொதுநலம் பேணி வந்தவர்
உதயசூரியன் கருப்பையா அண்ணன் அவர்கள்.
காசிம் அண்ணனும் அப்படிதான்.
இத்துடன்
திராவிட இயக்கத்தின் அன்றைய அனைத்துப் பகுதி தலைவர்களுடனும் மிக அன்னியோன்யமான நட்புறவு
கொண்டு இருந்தார். இவர்களில் முக்கியமானவர்கள்
மன்னை நாராயணசாமி, நாவலர்.இரா.நெடுஞ்செழியன், அவரது தம்பி இரா.செழியன், அன்பில்
தர்மலிங்கம், மதுரை முத்து, சாதிக் பாட்சா, மதியழகன், சத்தியவாணி முத்து, திருப்பத்தூர்
சட்ட மன்ற உறுப்பினர் செ.மாதவன் இன்னும் பலர்.
இவர்களோடு தோள் கொடுத்து இயக்கம் இட்ட அத்தனை கட்டளைகளயும் தன் உடல்,
பொருள் இவற்றைக் கொண்டு நடத்திக் காட்டியவர்.
அதிகார வர்க்கத்தால் தாக்குதல்களுக்கு உள்ளானவர். ஆனால், பயம் என்றால் சிறிதும் என்னவென்று
அறியாத நெஞ்சம் கொண்டவர். தி.மு.க.
சார்பில் நடத்தப் பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம்,
விலைவாசி எதிர்ப்புப் போராட்டம் என அத்தனை போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்று
வந்தவர்.
அன்றைய
கால கட்டத்தில் தி.மு.க. பணபலம் இல்லாத ஏழையான எதிர்க்கட்சி. மாவட்ட மாநாடுகள் நடத்திக்
கட்சியைப் பலப்படுத்த வேண்டும். ஆனால்
மாநாடு நடத்த பணம் வேண்டும். இந்தச் சவாலான வேலையை தானே முன்னின்று வலியச் சென்று
வாங்கி தேவகோட்டையில் மிகச்சிறப்பாக கழக மாநாட்டை நட்த்திக் காட்டியவர். நகரத்தார் பூமியில் மிகுந்த சிரமத்துக்கு
இடையில் தனது சொந்தப் பணத்தைப் போட்டு வசூல் செய்து 1956 ஆம் ஆண்டு ஏற்பாடு
செய்யப்பட்ட முகவை மாவட்ட தி.மு.க. மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டில் தேவகோட்டைக்கு வந்து
மாநாட்டைச் சிறப்பித்தவர்கள் யார் யார் என்று தெரியுமா?
·
பேரறிஞர் அண்ணா
·
கலைஞர் கருணாநிதி
·
பேராசிரியர் அன்பழகன்
·
நாவலர் நெடுஞ்செழியன்
·
மதியழகன்
·
கவிஞர் கண்ணதாசன்
·
சத்தியவாணி முத்து
·
ப.உ.சண்முகம்
இவ்வளவு
பேரையும் தேவகோட்டைக்கு வரவழைத்து ஒரு எதிர்க்கட்சியின் மாநாட்டை நடத்தி முடிப்பது
எவ்வளவு பெரிய காரியம்..போக்கு வரத்தோ, தொலைத் தொடர்பு வசதிகளோ இல்லாத 60
வருடங்களுக்கு முந்தைய தேவகோட்டையில் இத்தகைய மாநாட்டை நடத்திக் காட்டுவது
திரு.இராம.வெள்ளையன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இயலும் செயல். முதன் முதலில் அறிஞர் அண்ணா உட்பட்ட
தலைவர்களுக்கு முதன் முதலில் கட் அவுட் வைத்து ‘கெத்து’ காட்டியவர் நம்மவர்.
தி.மு.க.வின்
சின்னமான உதயசூரியன் அது வரை சுயேச்சைகளின் சின்னமாகத்தான் இருந்தது. இதற்கு
முந்தைய அத்தியாயத்தில் நாம் கண்ட பொதுத்தேர்தல்களில் உதயசூரியனைத் தனது சின்னமாகக்
கொண்டு தான் தோல்வி அடைந்த பொழுதும் ‘உதயசூரியன்’ என்ற சின்னத்தை மக்கள் மத்தியில்
அறிமுகம் செய்தவர் இராம.வெள்ளையன்.
சின்னம் பற்றி சொல்ல ஆரம்பித்தால் அது ஒரு தனி அத்தியாயமாக விரியும்.
இரண்டாவது
பொதுத்தேர்தலில் காங்கிரஸின் சின்னம்- நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளைகள் சின்னம்,
கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கதிர் அரிவாள் சின்னம்;
1957-ல் அண்ணா தலைமையில் தி.மு.க. முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது.
தி.மு.க., தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் பல சின்னங்களில் போட்டியிட்டது.
இதில் அதிகமான இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. முறையான அங்கீகாரம்
கிடைத்த பிறகுதான் தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. இந்தியாவிலேயே
ஒரே சின்னத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது தி.மு.க. மட்டுமே.
தேவகோட்டையில்
நடைபெற்ற மாநாட்டில் தான் கலைஞர் கதை வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்த ‘உதயசூரியன்’
நாடகம் முதன் முதலில் மேடை ஏற்றப்பட்ட்து.
இதில் ஆச்சி மனோரமா வும் நடித்தார்.
இப்படி எல்லா வகையிலும் கட்சியை வளர்த்தவர் திரு.வெள்ளையன் ஆவார். சரி,, இவரது குடும்ப வாழ்கை?…
ஆனால் அந்தக் கால
கட்டத்தில் சுயமரியாதைக் காரன் என்றால் ஏளனமாக உலகம் பார்த்தது. அதிலும் செட்டிப்பிள்ளை இப்படி திரிந்தால் .. எதோ ரவுடி ரேஞ்சுக்கு உலகம்
திராவிட இயக்கத்தினரை திராவைகள் என்று நோக்கிய நேரம். நம்ம தலைவர் அதுக்கெல்லாம்
அஞ்ச வில்லையே!. திருமண
வயது வேறு.. சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கின்ற பெற்றோர். திராவிட கழகங்கங்களில் வேதாந்திகளை
எதிர்த்து சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாத
அந்தந்த வகுப்புக்கு உரிய சடங்குகளை பின் பற்றாது ,
'சீர்திருத்த', 'சுயமரியாதை'
திருமணம்
செய்து கொள்வதே இயக்கத்தின் இளைஞர்களின் இலட்சியமாக இருந்த நேரம்.கட்சியில்,
கட்சியின்
கொள்கைகளில் மிக்க பிடிப்போடு இருந்த இராம.வெள்ளையன் மட்டும் நகரத்தார் முறைப்படி
மணம் செய்து கொண்டால் அவருடைய தோழர்கள்
மத்தியில் அவரது நிலைமை ஏளனத்துக்கு ஆட்படாதா .
பெற்றோரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதனால்
திருமணம், இல்லை என்றால் இப்படியே
விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டாராம் பிடிவாதமாக.. 1950 ஆம் ஆண்டில் இருந்து வீட்டில் இவரைத்
திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்தனர். இவர் பிடிவாதம் தளர்வதாய் இல்லை.
என்ன
ஆயிற்று? அடுத்த பகுதி வரை பொறுங்களேன்…
கருத்துகள்
கருத்துரையிடுக