அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 67
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
29-10-2018
பகுதி: 67
அன்புசொந்தங்களே ...
இந்த பகுதி பதிவில் ஏறியவுடன் அன்பு ஆசிரியர் திரு.பத்மநாபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்து தொலை பேசியில் அழைத்தார். விட்டுப்போன செய்திகளை விவரித்தார். அவற்றை பிற் சேர்க்கையாக கீழே கொடுத்து இருக்கிறேன். அப்படி இல்லாமல் எனது பதிவை அப்படியே திருத்தினால், நிகழ்வுகளை நினைவில் சுமந்து இந்த தொடரில் சரித்திரப் பிழை வந்து விடாமல் காப்பாற்றிய நல்ல இதயங்களுக்கு நன்றி தெரிவிக்க இயலாமல் போய் விடும். எனக்கு பல செய்திகளையும் அவ்வப்போது தந்து என்னை ஊக்குவிக்கும் ஆசிரியர் திரு.பத்மநாபன் பாதார விந்தங்களில் பணிந்து என் நன்றியினை இந்தப் பதிவினில் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மூலம் அறிந்தவை:
எனது பதிவில் கண்டது போல தேவகோட்டையில் நடத்தப்பெற்ற ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட மாநாட்டுக்குக் கடைசி நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களால் வர இயலவில்லை.
கலைஞர் கலந்து கொண்டார்
மாநாட்டுக்குத் தலைமை ஏற்றது அன்றைய முகவை மாவட்ட தி.மு.க.செயலாளர் சிறுகதை மன்னன் திரு.S.S.தென்னரசு அவர்கள்
இலட்சிய நடிகர் S .S .ராஜேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார்.
அது மட்டுமல்ல. அவர் கூறிய மேலதிக விபரங்களை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி .
இந்த மாநாட்டின் ஊர்வலம் நகரத்தார் உயர் நிலைப்பள்ளி எதிரில் இருந்து புறப்பட்டது
ஊர்வலத்தின் முன் கருப்பு சிவப்பு கலக்க கொடியை கையில் ஏந்திய படி இருவர் குதிரையில் மீது அணி வகுத்து வந்தனர்
அவர்கள் இருவரும் இரு வண்ணத்தில் சீருடையாக கருப்பு கால் சட்டையும், சிவப்பு மேல் சட்டையும் அணிந்து இருந்தனர்.
அவர்களில் ஒருவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ச.அங்குச்சாமி...
மற்றவர் தியாகிகள் சாலையில் இன்றைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு எதிரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்த திரு வீரப்பன் அண்ணன் . ( முத்து ஸ்டூடியோ என்று பெயர் என்று நினைவு .. இவர் பற்றிய இனிமையான நினைவு ஒன்று... பின்னால் பகிர்கிறேன் ) . இந்த வீரப்பன் அவர்கள் தியாகி, திரு.ஆர்ச் அண்ணாமலை, மற்றும் நகரத்தார் பள்ளி சாரணர் ஆசிரியர் டி.ஆர்.எம் .எஸ். இவர்களின் உறவினரும் கூட ..
ஊர்வலம் புறப்பட்டு நகர் வலம் முடித்து மாநாடு நடைபெற்ற சரஸ்வதி வாசகசாலைக்குள் நுழைகிறது. விழா மேடை சரஸ்வதி வாசக சாலையின் அடுத்த முனையான முனியைய்யா கோவில் அருகே.. கூட்டம் அங்கிருந்து திருப்பத்தூர் சாலையின் பூங்கா வரையிலும் ஜே ...ஜே .. என்று இருக்கிறது. உதய சூரியன் நாடகம் திரு.S S .இராஜேந்திரன் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகின்றது. மாநாட்டுக்கு, நாடகத்துக்கு சேர்த்து நுழைவுக் கட்டணம் 8 அணா..
கலைஞர் கருணாநிதி அவர்கள் 40 நிமிடம் உரை நிகழ்த்தி இருக்கிறார். அவர் பேசிய பேச்சைக் கூட 62 வருட காலம் கழிந்த பின்னும் வரிக்கு வரி நினைவில் வைத்து இருக்கிறார் நமது போற்றுதலுக்குரிய ஆசிரியர் பத்மநாபன் அவர்கள். அதை விட அவரை நாம் கொண்டாட வேண்டியது... இவ்வளவு தொலைவில் இருந்து அவ்வப்போது நான் கேட்கும் சந்தேகங்களுக்கு கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல், சமயங்களில் அவரே என்னை எழுப்பி தகவல்களை சொல்லுவார். ( சரியாக 13 மணி நேரம் வித்தியாசம் ஜகார்த்தாவுக்கும், பாஸ்டனுக்கும்).
என்ன பேசினார் கலைஞர்? பத்மநாபன் சார் விவரிக்கிறார்:
அப்போது காங்கிரசும் தி.மு.க.வும் ஜென்ம எதிரிகளாய் இருந்த நேரம். காமராஜர் என்றாலே தி மு க தொண்டர்களுக்கு எரிச்சல். மேலும், காமராஜரின் அரசு, தெய்வத்திரு தேவர் திருமகனாரை 'தடுப்பு காவல் சட்டத்தின்' கீழ் சிறையில் அடைத்து இருந்த நேரம். கலைஞர் பேசுகிறார்...
1967இல் தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அரசு அமைக்கும். அப்போது எந்த தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் தேவர் பெருமகனார் சிறையில் இடப்பட்டாரோ அதே தடுப்பு காவல் சட்டத்தில் காமராஜரை தி மு க அரசு சிறையில் தள்ளும். பின்னர் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எண்களின் மாநில அரசைக் கவிழ்க்கலாம்.. அது பற்றி அஞ்ச மாட்டோம். மக்கள் மீண்டும் எங்களைத் தேர்வு செய்வார்கள்....
எவ்வளவு ஒரு அரசியல் ஆளுமையும், சூட்சுமமும், எதிர்நோக்குப் பார்வையும் கொண்டு இருந்தால் அவரால் இப்படிப் பேசி இருக்க முடியும்? பேசியது போலவே 1967இல் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. அண்ணா அவர்கள் முதல்வரானார். என்ன தேவர் பசும்பொன்னார் அப்போது உயிருடன் இல்லை. அதே போல அவர்களது ஆட்சி காங்கிரசால் கலைக்கப்பட்டது. ஆனால் இந்திரா காந்தி அம்மையாரால், அவசர நிலை பிரகடனம் செய்த சமயத்தில்.. அவ்வளவு தான் வேறுபாடு. மற்றபடி அரசியலில் இப்படி காய் நகர்த்தினால் இன்னின்ன விளைவுகள் நடக்கும் என்ற வியூகம் வகுக்கத் தெரிந்த அரசியால் சாணக்கியன் கலைஞர் கருணாநிதி அவர்கள். செய்த அவசர தவறு , புரட்சித் தலைவரை குறைவாக எடை போட்டது ஒன்றுதான். வேண்டாம் .. நமக்கு அரசியல்.. நம்ம சுகமா ஊர் சுற்றுவோமே...
அடுத்து திரு.பத்மநாபன் சார் சுட்டிக்காட்டியது, பெரியார் பெருந்தொண்டர் முது பெரும் பத்திரிகையாளர் 'சூறாவளி' நிருபர் பொ.லெட்சுமணன் அவர்கள் பெயரை திரு.இராம வெள்ளையன் காலத்திய திராவிட இயக்கத்து தோழராய் நான் குறிக்காமல் விட்டு விட்டது தான். இந்தத் தகவலையும் பிற் சேர்க்கையாக இத்துடன் பகிர்கிறேன். அவர் பெயர் சென்ற பகுதியில் விட்டுப்போனதற்கு வருந்துகிறேன்.
சரி.. இப்ப இராம வெள்ளையன் அவர்கள் வெற்றி கரமாக மாநாடு நடத்தியதை பார்த்தோம். சட்ட மன்ற தேர்தலில் தனது கட்சியினை வளர்ப்பதற்காக கிஞ்சித்தும் வெற்றி தோல்வி பற்றி நினைக்காமல், பணம் செலவு ஆவதை பற்றி கருதாமல், பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார் என்ற வாக்குக்கு ஏற்ப தேர்தலில் நின்ற மாமனிதன்.
அவரது திருமண நிகழ்வு பற்றி தொட்டு விட்டு இருந்தேன் சென்ற பதிவில். 1950 ஆண்டு வாக்கிலேயே அவருக்கும் அவரது சொந்த மாமன் மகளுமான திருமதி இலக்குமி ஆச்சிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களின் சித்தம். மாமன் மகள் , அத்தை மகனுக்கும் அதிக விருப்பம் தான். ஆனால் நம்மவருக்குத்தான் கொண்ட கொள்கைகளின் படியும், கழக கண்மணிகளின் மனம் குளிரும்படியும் மணந்தால் சீர்திருத்த திருமணம் இல்ல்லையேல் திருமணமே தேவை இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் ஆயிற்றே!!
வீட்டில் ஆத்தா அப்பச்சி சம்மதம் இல்லாமல் திருமணம் நடக்கப்போவதில்லை... அதே நேரம், சீர் திருத்த திருமணம் செய்து கொள்ள பெரியவர்கள் ஒப்புதல் அளிக்கப்போவது இல்லை. மண மகனும் மண மகளும் தூரத்து சொந்தமும் இல்லை. அம்மான் மகன், அயித்தை மகள்... இப்படியே கண்ணா மூச்சி விளையாட்டாக காலம் ஓடிக்கொண்டு இருந்தது. இப்படியாக ஒரு வருடம், இரு வருடம் அல்ல.. 7 வருட கடுமையான போராட்டத்துக்குபி பிறகு 1957 இல் சாதித்து காட்டினார் வெள்ளையன். தேவகோட்டையில் புத்தகபண்ணை மீனாட்சி சுந்தரம் அவர்கள் இல்லத்தில், அவரது உண்மை நலம் விரும்பிகளான, காரைக்குடி இராம.சுப்பையா-விசாலாட்சி தம்பதியினர், கவிஞர் முடியரசன், புலவர் பொன்னம்பலனார், மதுரை முத்து இவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தேறியது. நினைத்ததை நடத்தியே முடிப்பவர் இராம வெள்ளையன், உண்மையில் நினைத்ததை நடத்தி முடிக்கும் மக்கள் திலகத்துடனும், இலட்சிய நடிகர் S .S .இராஜேந்திரன் அவர்களுடனும் மிகவும் நெருக்கமான உறவு கொண்டு இருந்தவர் நமது நகர் மன்றத் தலைவர்.
சென்ற பகுதி முக நூலில் வெளியான உடன் திரு.பத்மநாபன் சார் பேசியது போலவே, எனது வகுப்புத் தோழனும், அருமை மாப்பிள்ளை என்று அன்புடன் என்னால் 40 ஆண்டு காலமாக அழைக்கப்படுபவரும், திரு.இராம வெள்ளையன் அவர்களின் அன்பு மருமகனும் ( திருமதி மீனா அவர்களின் கணவர்) ஓய்வு பெற்ற மேனாள் பாண்டியன் கிராம வங்கி உயர் அதிகாரியுமான திரு.சபா ரெத்தினம் நீண்ட நெடிய நேரம் தொலை பேசியில் உரையாடி திரு.இராம வெள்ளையன் அவர்கள் பற்றிய நீங்கா நினைவுகளின் நிழலுக்கு என்னை இட்டுசென்றார். அவற்றில் சில பொதுவில் பகிர்வன, சில மனதில் (பிறர் நலன் கருதி ) அடை காக்கப்பட வேண்டியன. மனிதர் ஒவ்வொருவர் வாழ்விலும் நன்மைகளை மட்டுமே செய்து இருக்கிறார்.
அவர் நினைவு கூர்ந்த விஷயங்களில் ஒன்று அவரது திருமண நிகழ்வு. தேதி 12-12-84. மாப்பிள்ளை சுவைக்காக, எல்லோருக்கும் 12 x 12 = 144 என்று வரும், எனக்கு மட்டும் 12 x 12 = 84 என்று வந்து இருக்கிறது என்கிறார். அன்பு மாப்பிள்ளையின் மணக்கோலத்தை கண்ணார கண்டு வாழ்த்த வேண்டி மணமகள் இல்லமான திரு.இராம வெள்ளையன் இல்லத்துக்கு சென்றேன். வாழ்த்துகிறேன். மேலே திரு.இராம வெள்ளையன் அவர்கள் (அப்போது அவர் இந்த பூவுலகில் இல்லை) சிரிக்கிறார் புகைப்படமாக... பழையன மறக்காத விரைவில் உணர்ச்சி வசப்படுகின்ற இந்த கவிக்கிறுக்கன் , திரு.இராம வெள்ளையன் அவர்களின் புகைப்படத்தை கண்டதும், இதற்கு முன் அவரை நான் இதே இல்லத்தில் இரண்டு முறை சந்தித்த நிகழ்வுகள் மனதில் ஓட ஆரம்பித்து விட்டன. இப்போது மண மாலையுடன் நிற்கின்ற மண மக்களை மறந்து மேலே இராம வெள்ளையன் அவர்கள் புகைப்படத்தையே பார்த்து அப்படியே நிற்கிறேன். அந்தத் தருணத்தில் எடுத்து இருந்த புகைப்படத்தை திரு.சபா இரத்தினம் அவர்கள் அனுப்பி இருந்தார்.. 38 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த தருணங்கள்..இன்றும் பசுமை மாறாமல்... அந்த புகைப்படத்தை அன்பு நண்பர்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
சரி, என்ன செய்தார், திரு.இராம வெள்ளையன் அவர்கள் நமது நகருக்கு. இன்றைய இளைஞர்கள் உண்மையில் அறிந்து கொள்ள வேண்டும் எனில், அந்தக் காலத் தேவகோட்டைக்கு பயணம் செய்ய வேண்டும். நகரின் நிலைமையை அறிந்து இருந்தால் தான் இன்றைய நிலைய எந்த அளவுக்கு நகரம் வசதிகளை அடைந்து இருக்கிறது என்று புரிய வரும்.
தேவகோட்டையில் கடுமையான குடி தண்ணீர் பஞ்சம் நிலவியது. நான் எங்கள் வீட்டு தண்ணீர் தேவைக்கு வட்டாணம் சாலை பெரிய பள்ளி வாசல் பகுதியில் இருந்து அம்மச்சி ஊரணிக்கு மிதி வண்டியில் குடத்தை வைத்துச் சென்று தண்ணீர் மொண்டு உருட்டி வந்து இருக்கிறேன். சைக்கிளில் குடத்தை வைத்து மிதித்து ஒட்டி வருகின்ற அளவுக்கு உயரம் இல்லை எனக்கு அப்போது. அது தவிர குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு தண்ணீர் வரும். ஒவ்வொரு பகுதியிலும் ஆழ் குழாய் (borewell ) போட்டு அதன் அருகில் ஒரு தகரத்தால் மூடிய கொட்டகையில் ஒரு பிஸ்டனால் இயங்கும் மோட்டார் ஓடி அதன் அருகில் நின்று கொண்டு இருக்கும் இரும்பு உயர் தொட்டியில் நீரை ஏற்றும். ஒரு அளவுக்கு மேல் அந்தந்த இடங்களில் நீர் இருக்காது. அந்த உயர் மட்ட இரும்புத்தொட்டி நிறைந்தவுடன் மோட்டார் அணைத்து விடுவார்கள். அருகில் இருக்கும் குழாயில் அந்த உயர் தொட்டியில் நீர் இருப்பு இருக்கும் வரை தண்ணீர் வரும். ஆனால் அந்த உயர் தொட்டிகளின் கொள்ளளவு இன்றைக்கு நமது வீடுகளில் இருப்பது போன்ற அளவுதான். இன்றைக்கு இருப்பது பெரிய தேக்க தொட்டிகள் இருந்ததில்லை. இவற்றில்,
• திண்ணன் செட்டியார் ஊரணி வடகரையும் மேல் கரையும் இணையும் இடத்தில் காந்தி பூங்கா அருகில் ஒன்று இருந்தது.
• தி.பிள்ளையார் கோவில் அருகே அரசு மருத்துவமனை அருகில் ஒன்று இருந்தது.
• பள .செ .ரோடு ஆரம்பிக்கும் இடமான சட்டி சாமியார் கோவில் அருகில் ஒன்று இருந்தது
• மாட்டுச்சந்தைக்குள் ஒரு தொட்டியில் ஒரு குழாய் இருந்தது
• கருதா ஊரணி பூங்காவில்
• வெள்ளையன் ஊரணி பூங்காவில்
அந்த நேரம் பொழுது போக வேண்டும் என்றால், இதில் எதாவது ஒரு குழாய் அருகில் தண்ணீர் வரும் நேரம் நின்றால் போதும். செந்தமிழ், வண்டமிழ், வளதமிழ் என்று சண்டை மாருதமாய் சண்டைத்தமிழ் நம் செவிகளில் நிரம்பும். அவ்வளவு அவலமாக இருந்தது.
இது போக சில நகரத்தார் புண்ணியவான்கள் தங்கள் இல்லங்களில் இருந்து இலவசமாக குழாய் அமைத்து தண்ணீர் வழங்கி வந்தனர். ஜமீன்தார் வீட்டு சுவர்ணவள்ளி பங்களா அருகில் திருநாவுக்கரசு செட்டியார் வீட்டில் ஒரு குறிப்பிட்ட நேரம் தண்ணீர் வரும். இதே போல சிவன் கோவில் வடகரையில் கந்தர் சஷ்டி விழா நடக்கும் திடலுக்குப் பின்புறம், சிவன் கோவில் வடக்குத்தெருவில் இருந்து தொடங்கும் S SP வீதியில் ஒரு நாகலிங்க மரம் இருந்த வீட்டிலும் வெளியே குழாய் வைத்து தண்ணீர் விடுவார்கள்.
இதுதான் தேவகோட்டையில் நிலைமை அன்று. 1970 இல் மிக பலம் பொருந்தி இருந்த தி.மு.க. அரசு, உள்ளாட்சி அமைப்புக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க உள்ளாட்சி தேர்தலை நடத்தியது. என்னதான் 1967 இல் தி.மு.க. அலை வீசினாலும் காங்கிரஸ் என்ற இயக்கத்தில் வேரூன்றிய பெரியவர்கள் நிறைய இருக்கத்தான் செய்தார்கள் அந்த கால கட்டத்தில். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. வட்டாணம் ரோடு பெரிய பள்ளி வாசல் அருகில் வீடு. பள்ளி கருதா ஊரணி கரையில் இருக்கின்ற சைவ பிரகாச வித்தியா சாலை. சிவன் பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு சிவன் கோவில் பின்புறமாக கண்டதேவி ரோடில் சென்று கருதா ஊரணி பிள்ளையார் கோவில் அடுத்து இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டும்.
பள்ளிவாசல் பகுதி 5 ஆம் தொகுதி. சிவன் கோவில் பக்கம் 4 ஆம் வார்டு என்று நினைக்கிறன். அந்தப்பக்கம் கருதா ஊரணிப் பக்கம் வேறு தொகுதி. 1967 பொதுத்தேர்தல் சமயம், தி.மு.க.வினரின் கண்கவர், மனம் கவர் தமிழ் சுவர் விளம்பரங்களை கண்டு இருக்கிறேன். இப்போது இன்னும் கொஞ்சம் விபரம் அதிகம் தெரிந்து இருந்தது. 1967 இல் சுவர் விளம்பரங்களில்.
பஞ்ச நிலை போக்க முடியாத காங்கிரசுக்கு பதவி ஒரு கேடா? என்று இருக்கும்..
அது போக.. காமராஜு அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு ... கக்கன் அண்ணாச்சி ... என்று முழக்கங்கள்...
உள்ளாட்சி தேர்தலில் நகரின் சீர் கேடுகள் முக்கிய குறிகள் ஆயின.
எங்கள் தொகுதியான 5 ஆம் வார்டில் அன்பு நண்பன் ஜபருல்லா வின் தந்தை ஜனாப்.அப்துல் கபூர் அவர்கள் போட்டியிட்டார். அதே தொகுதியில் நாங்கள் குடியிருந்த திருச்சுழியார் வீட்டில் இருந்து திரு.திண்ணப்ப செட்டியார் ( அந்த நாட்களில் முதன் முதலாக தேவகோட்டையில் இருந்து சபரி மலைக்கு சென்று வரும் மிக மிக மூத்த குருசாமி). அப்துல் கபூர் அவர்களின் சின்னம் 'ரயில் எஞ்சின்'. திரு.திண்ணப்ப செட்டியார் அவர்களின் சின்னம், 'கடிகாரம்'.
எனக்குத் தெரிந்து உலகிலேயே மிகவும் கடினமான காரியம் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு அளிப்பது ஒன்றுதான். ஆயிரங்களில் இருக்கின்ற வாக்காளர் எண்ணிக்கை. ஒருவருக்கு ஒருவர் தெரிந்த முகங்கள் கால காலமாக ..யாரை விடுவது ? யாரை தொடுவது? அப்படியே ஒருவரை தேர்ந்து எடுக்காமல் விட்டு விட்டாலும், தோற்ற பின் அவரை நேரில் சந்திக்கும் வேளையில் அவர் தேர்தலுக்கு செய்த செலவு மனதில் வரும் பொழுது மிகவும் சங்கடமாய் இருக்கும். எங்கள் தொகுதியில் நாங்கள் குடியிருந்த திருச்சுழியார் வீட்டில் இருந்து தான் திரு.தின்னப்ப செட்டியார் போட்டி இடுகிறார். அதை விட அவரது மகன்களான திரு.சாமிநாதன் அண்ணன் , திரு.ஏகப்பன் அண்ணன் எங்கள் வீட்டில் அடிக்கடி வந்து செல்பவர்கள். திரு.சாமிநாதன் அண்ணன் சித்தப்பா பவளம் அவர்களின் வகுப்புத்தோழர். அதே தோட்டத்தில் இருந்து இடது பக்கம் இருக்கின்ற அரசி அரவை ஆலையில், நெல் அவியல் போட்டு புழுங்கல் அரிசி வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர் தான் ஜனாப்.அப்துல் கபூர் அவர்கள். அவரது மகன்கள், நிஸ்தார் சித்தப்பா செட், அடுத்தவர் ஜபருல்லாஹ் எனது செட் . என் வீட்டில் யாருக்கு வாக்களித்தார்கள் என்று நான் அறியேன்.
சிவன் கோவில் பகுதியில் திருமதி லக்குமி வெள்ளையன் அவர்கள் மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இட்டார். அந்த சுவர் விளம்பரங்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன. அந்த கால கட்டத்தில் நகரத்தார் குடியில் பிறந்த பெண்மக்கள் தேர்தலில் நிற்பது, வீதி வீதியாக பிரச்சாரம் செய்வது என்பது மிகப்பெரிய புரட்சி (இன்று கூட அந்த அளவு தைரியம் உள்ளவர் எவர் உளர் ?).
பெண் விடுதலை, பெண்ணியப் பெருமை என்று இன்று கூட முழங்குபவர்கள், தங்கள் இல்லங்களில் மனையாட்டிகளை அடுப்பங்கரை தாண்டி வர விடுவதில்லை. அந்தக் காலத்திலேயே தன மனைவிக்கும் ஆண்களுக்கு நிகரான நிலையினை வழங்கி கௌரவித்தவர் திரு.இராம வெள்ளையன் ஆவார்.
சரி, இப்போது நகர் மன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. எங்கள் 5 ஆம் தொகுதியில் ஜனாப் அப்துல் கபூர் அவர்கள் வெற்றி பெற்றார். சிவன் கோவில் பகுதியில் சேவுகன் செட்டியார் வகையில் உதித்த திருமதி.இலக்குமி வெள்ளையன் அவர்கள் வென்றார்கள். 6 ஆவது தொகுதியில் எனது வகுப்புத்தோழன் சுப்பையா அவர்களின் தந்தை திரு.முருகேசன் அம்பலம் வென்றார். வெள்ளையன் ஊரணி பகுதியில் புகழ் பெற்ற RMS சவுண்டு சர்வீஸ் RM S அவர்கள் வென்றார். வழக்கம் போல பூக்கடை சேதுத் தேவர், நிரந்தர உறுப்பினர்களான பெத்த பெருமாள் இவர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயினர். திரு.இராம வெள்ளையன் அவர்கள் வென்றார் என்று சொல்லவும் வேண்டியதில்லை.
இப்போது யார் நகர் மன்றத்தின் தலைவர் என்பதற்கான தேர்தல் நேரம். மன்ற உறுப்பினர்கள் தமக்குள்ள நகர் மன்றத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். நகர் மன்றத்தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் :
திரு.சேது லெட்சுமணன் அவர்கள்
திரு இராம வெள்ளயன் அவர்கள்
இருவரும் சமமான வாக்குகள் பெற்று சரி சமமாக நிற்கின்றனர். அப்புறம்?? முடிவு என்ன?? அடுத்த பகுதி வரை நீங்கள் கோபம் கொள்ளாமல் பொறுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக