அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 68
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
17-11-2018
பகுதி: 68
கவிக்கிறுக்கன் முத்துமணி
17-11-2018
பகுதி: 68
அன்புசொந்தங்களே ...
என்ன... தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்களா?
காத்துக் கிடப்பதில் இன்பமுண்டு...
காக்க வைப்பதில் சுகமுண்டு .....
அதற்கு முன்னர் ஒரு செய்தி... நல்ல நாள் பார்த்து திருமணம் செய்வது என்பது நமது அனைவரின் வழக்கு. நகரத்தார் திருமண முறை மிகவும் பழமை மாறாமல் அந்தந்த கோவில்களில் இருந்து மலர் மாலை கொண்டு வரப்பட்டு நடத்தப பெறுவது. சில சம்பிரதாயங்களும் சடங்குகளும் நகரத்தாருக்கு மட்டுமே உரித்தானவை. அதிலும், மேல் வட்டகை , கீழ் வட்டகை , தெற்கு வட்டகை என்று பூகோள ரீதியாக ஊர்கள் பிரிக்கப்பட்டு திருப்பூட்டு முறைகளே வேறுபாடும். கீழே கண்ட சில சடங்குகளும், சீர் முறைகளும் நகரத்தாருக்கே உரித்தானவை. முக்கியமானவற்றை மட்டும் கொடுத்து இருக்கிறேன்.
பேசி முடித்து சிட்டை எழுதிக்கொள்ளுதல்
முகூர்த்தத்துக்கு நாள் குறித்தல்
முகூர்த்தக்கால் ஊன்றுதல்
சுவாமிகளுக்கு பணம் முடித்தல்
கோவிலுக்கப் பாக்கு வைத்தல்
கொழு மேளம் வாசித்தல்
கழுத்துரு கோத்தல்
முளைப்பாலிகை வளர்த்தல்
கோட்டை நெல்
கூடி ஆக்கி உண்ணுதல்
நடு வீட்டில் விளக்கு ஏற்றுதல்
கோவில் மாலைகள் வாங்குதல்
மாற்று கட்டுதல்
அரசாணை கால் கட்டுதல்
பூரம் கழித்தல்
இசைவுப் பிடிமானம் எழுதுதல்
வேவு எடுத்தல்
இப்படி நடை பெற்றால் தானே செட்டி நாட்டுத் திருமணம்.. நம்ம இராம வெள்ளையன் என்ன செய்தார் தெரியுமா? இன்றும் கூட நவ நாகரிக என்று தம்மை சொல்லிக்கொள்ளும் இளைஞர்கள் கூட நினைக்ககூடத் துணியாததை நிகழ்த்திக்காட்டினார். ஆம் . அவரது திருமண அழைப்பு இப்படி அமைக்கப்பட்டு இருந்தது.
‘கூடாத கெட்ட நாளாம் சனிக்கிழமை கூடாதநேரமாம் இராகு காலத்தில் கூடும்மணவிழா’
மனிதர் வாழ்ந்து காட்டியவர். ராகு காலத்தில் சனிக்கிழமையில் மணம் முடிக்க ஒரு நகரத்தார் வகுப்பில் பிறந்தவருக்கு எத்தனை மனத்திண்மை இருந்து இருக்க வேண்டும்? அதுவும் 65 ஆண்டுகளுக்கு முன்னர் சமூகம் இருந்த நிலையில்..
சரி இப்போது தேர்தல் முடிவுகள். நகரத் தந்தை என்பவர் தொகுதி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு.சேது இலட்சுமணன் அவர்களும், திரு.இராம வெள்ளையன் சரிசமமான தொகுதி உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது TIE என்ற நிலைமை . DRAW வில் முடியும் விளையாட்டு போட்டி போல் நிலைமை. யாரவது ஒரு உறுப்பினர் எந்தப் பக்கம் சாய்ந்தாலும் எதிர் புறம் தோல்விதான். இந்த நேரத்தில் தி.மு.க.வின் தேவகோட்டை செயல் வீரர்களான
ஜனாப். காசிம் ராவுத்தர்
திருமதி . கமலம் செல்லத்துரை
பெட்டிக்கடை தியாகராஜ பிள்ளை
திரு.சுப.செட்டியப்பன்
இவர்களின் பெரும் முயற்சியால், திரு RMS அவர்களின் வாக்கு திரு.இராம வெள்ளையன் அவர்களுக்கு ஆதரவாகத் திரும்பியது. தேவகோட்டை தனது வரலாற்றில் முத்திரை குத்திக்கொண்டது. திரு.இராம வெள்ளையன் அவர்கள் நகர் மன்றத் தலைவர் ஆனார்.
இல்லத்தரசியாக திருமதி இலக்குமி வெள்ளையன் அவர்களை நகரத்தின் துணைத் தலைவர் ஆக்கினார். ஆம் பெண் விடுதலை என்பது வெறும் பேச்சோடு இல்லை என்று செயலில் காட்டியவர். அதுமட்டும் அல்ல. நகரமே தமது வீடு என்று நினைத்த பெருந்தகை அவர். இப்போது தேவகோட்டை நகராட்சி அவர் கையில். நகரத்தார் ஆயிற்றே. நகர் ஆட்சியின் வரவு செலவுகளை பார்த்தார்... விழி பிதுங்கி விட்டது. பொருளாதார ரீதியில் தேவகோட்டை நகராட்சி 'அவசர சிகிச்சை பிரிவில்' படுத்து கிடந்தது. அன்றைய நகராட்சியின் வருமானத்தை வைத்து நகராட்சி ஊழியர்களுக்கு தடை இல்லாமல் சம்பளம் வழங்குவதே இமாலய முயற்சி . நம்மவருக்கோ மனதில் நகரின் வளர்ச்சி பற்றி ஆயிரம் ஆயிரம் கனவுகள், வெறி கலந்த ஈடுபாடு. இருக்கின்ற வருமானத்தை வைத்து எதுவும் நடக்காது. நகராட்சியின் வருமானத்தை பெருக்கும் வழிகளை ஆய்வு செய்தார். நகர மக்கள் மீது வரி விதிப்பை அவர் மனம் ஏற்றுக் கொள்ள வில்லை. இத்தனை வருடம் எந்த இயக்கம் தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என தனது உடமைகளையும், உழைப்பையும் வருடங்களையும் செலவளித்தாரோ, எவர் எவருக்குக்காக பாடு பட்டாரோ அவர்கள் தானே மாநிலத்தின் மன்னர்களாக அமர்ந்து இருக்கிறார்கள். தனது நகருக்கு உதவ முடியாது என்றால் பொருள் இல்லை. உடனே சென்றார் முதல்வர் கலைஞர் அவர்களிடம். தி.மு.க மேல் மட்டத் தலைவர்களால் செட்டிநாட்டு மாப்பிள்ளை என்று செல்லமாய் அழைக்கப்பட்ட செல்ல மாப்பிள்ளை அல்லவா நமது இராம வெள்ளையனார்?.
முதலில் ஊர் கோடியில் கண்டதேவி சாலையின் கடைசியில் புதூர் அக்ரஹாரம் அருகே இயங்கிக் கொண்டு இருந்த நகராட்சி அலுவலகம் இன்றைய அலுவலகமான தியாகிகள் பூங்கா எதிரே மாற்றப்பட்டது.
நகரின் முக்கிய பிரச்னையாக இருந்தது தண்ணீர் ... தண்ணீர்.. தான்
முந்தைய பகுதிகளில் நகரின் அன்றைய தண்ணீர் பற்றாக்குறை அவலத்தை எழுதி இருந்தேன். கடுமையான பஞ்சம். அப்போது கலைஞர் அவர்களின் ஆட்சியில் நிறைய வாரியங்கள் அமைக்கப்பட்ட நேரம். எல்லாத்துறைக்கும் வாரியங்கள் மூலமாக நிவர்த்தி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தமிழக அரசு வாரியங்கள்
குடிசை மாற்று வாரியம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
வீட்டு வசதி வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம்
குடிநீர் வடிகால் வாரியம்
என்று ஆரியம் ஆண்ட மண்ணில் வாரியம் பல ஏற்படுத்தப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் ஆட்சி மாற்றம் தமிழக நிர்வாக மாற்றம் கொண்டு வந்தது. இதில் குடிநீர் வடிகால் வாரியம் மிகச் சிறப்பாக செயல் பட ஆரம்பித்தது. இந்த வாரியத்தின் தலைவராக திரு.செ.கந்தப்பன் இருந்தார்.
இந்த கந்தப்பன் அவர்கள் நமது இராம வெள்ளையன் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவராக இருக்கின்ற போதே தனது நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேகம் வேறு... இந்த கந்தப்பன், கலைஞர், பேராசிரியர், நாவலர் எல்லாம் ஒரு குழுவாக வெகு நெருக்கமாக இருந்தவர்கள். அவர்கள் பேசிக்கொள்வதே மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஒரு சாம்பிள்.. பாருங்களேன் ..
கருணாநிதி, முதன் முதலாக முதல்வராக இருந்த சமயம். அவர் தலைமையில், கோவையில் சிறுவாணி குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. குடிநீர் வாரியத் தலைவர், செ.கந்தப்பன் பேசும் போது, "சிறுவாணியிலிருந்து, கோவைக்குப் போதுமான அளவு குடி தண்ணீர் கிடைக்க வழி வகுத்துள்ளார் முதல்வர். குடிநீர் பிரச்னை இன்றோடு தீர்ந்து விட்டது. எனவே, முதல் வருக்கு, "சிறுவாணி வென்றாய்' என்ற சிறப்புப் பட்டத்தை, உங்கள் சார்பாக அளிக்கலாம் என்று எண்ணி உள்ளேன்...' எனக் குறிப்பிட்டார்.
அவருக்கு பின் கருணாநிதி குறிப்பிட்டதாவது:
என் அருமை கந்தப்பன், "சிறுவாணி வென்றாய்' என்ற சிறப்பு பட்டத்தை எனக்கு அளிக்கயிருப்பதாக கூறினார். ஏற்கனவே எனக்குள்ள பல பட்டங்கள், மாற்றுக் கட்சிக்காரர் களிடம் சிக்கி, என்ன பாடுபடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். "சிறுவாணி வென்றா#' என்ற பட்டத்தை, நாளை அவர்கள், "சிறுவா... நீ வென்றாய்!' என்று, ஏளனமாய் பேசக் கூடும். ஆகவே, நான் சிறுவனாக மாற ஆசைப்பட வில்லை.
தேவகோட்டையின் தண்ணீர் கனவுகளோடு மாநில அரசினை அணுகிய நகர தலைவருக்கு ஏமாற்றமே காத்து இருந்தது. தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது நகரில்.... குடி நீர் வடிகால் வாரியத்தைப் பொறுத்த வரை இது ஒரு செயல் திட்டம். நகராட்சிகளின் தேவைப் படி வாரியம் குழாய் பதிப்பது, நீரேற்று நிலையம் அமைப்பது, உயர் மட்டத்தொட்டி கட்டுவது என்று திட்டம் தீட்டும், ஆனால் அதற்குண்டான தொகையை திட்டம் பெறுகின்ற நகராட்சி செலுத்த வேண்டும். குடி நீர் வடிகால் வாரியம் என்பது ஒரு அரசு நிறுவனம் ... அதற்கும் வரவு வேண்டும்... திட்ட மதிப்பீடுகள் வாரியத்தின் மூலம் செய்யப்பட்டன. கடைசியில் கட்டணத்தொகை நிர்ணயம் செய்யப் பட்டு இன்னின்ன கட்டத்தில் இவ்வளவு சதவீதம் கொடுக்கப் பட வேண்டும் என்று நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வளவு பணம் நகராட்சியில் இல்லை. அடுத்து வரும் காலங்களில் அவ்வளவு பணம் வசூல் செய்யவும் வழி இல்லை. வரி விதிப்பை ஏற்றினால் தேர்ந்து எடுத்த தேவகோட்டை மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக அநீதி இழைத்தது போல் ஆகி விடும்.
எல்.ஐ.சி.யை அணுகினார். நகராட்சியின் சார்பாக கடன் வாங்குவதற்காக. நகராட்சியின் வருமானத்தை ஆய்வு செய்த எல்.ஐ.சி. நிறுவனம் கை கழுவி விட்டது. அதே நேரத்தில் கன ஜோராக காரைக்குடியில் ஆழ் குழாய் பதிக்கும் பணியும், நீரேற்று தொட்டி முதலிய பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டு இருக்கின்றன . செயல் வீரரான நம்மவருக்கு கடுப்பு ஆகிடுச்சு .
எல்.ஐ.சி.க்கு சென்று தனது சொத்துக்களை வேண்டுமானால் நகரின் திட்டத்துக்கு பிணையாக (COLLATERAL ) தருவதாக சொல்லி பத்திரங்களை அள்ளி கொண்டு சென்றார். போதாது என்று தெரிந்தது. இவரது அண்ணன் மலாயாவில் இருந்தார் என்று முன்னமே பார்த்தோம். அவருக்கு சொந்தமான வீடு பழைய சருகணி சாலையில் இருந்தது. அதன் பாத்திரத்தையும் கொண்டு பொய் கொடுத்து விட்டார்.
இதற்கிடையில் காரைக்குடியில் குடிநீர் இணைப்பு தேவகோட்டை நகரில் எந்த பணியும் தொடங்கும் முன்னரே வந்து விடும் போல் தெரிந்தது. நேராக அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சென்றார். தனது மானசீக குருவான காரைக்குடி இராம சுப்பையா மற்றும் அவரது அன்பு மனைவியும் நகரத்தின் துணைத் தலைவருமான திருமதி இலக்குமி வெள்ளையன் இவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். உடனே தமிழக அரசின் சார்பில் தேவகோட்டை நகரின் குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பினார். கலைஞர் என்ன செய்வார். அவருக்கு வந்த தகவல் படி இந்த திட்டத்துக்கான செலவை தேவகோட்டை நகராட்சியால் குறிப்பிட்ட காலத்தில், தவணை முறையிலும் திரும்ப செலுத்த முடியாத நிலை என்பது. பக்குவமாக இராம வெள்ளயனிடம் சொல்லிப் பார்த்தார். நம்ம தந்தை செவி மடுத்தால் தானே?.
என்ன சொன்னார் தெரியுமா? சரி .. தலைவரே.. ஆனால் நீங்கள் காரைக்குடிக்கு குடிநீர் திட்டத் தொடக்க விழாவுக்கு வரும் முன்பு காலையில் தேவகோட்டை வந்து அதன் பிறகு மாலையில்தான் அந்த விழாவில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்றார் . பொடி வைத்துப் பேசும் கலைஞரால் கூட இராம வெள்ளையன் அவர்களின் வார்த்தைகளின் பொருள் விளங்க வில்லை. என்ன சொல்றீங்க செட்டி நாட்டு மாப்பிள்ளை .. கொஞ்சம் பொறுமையா இருங்க என்கிறார். ஆமாம், நீங்கள் காரைக்குடியில் குடிநீர் வடிகால் வாரியத் திட்ட தொடக்க விழாவுக்காக வருகின்ற அதே நாளில் இந்த இராம வெள்ளையன் தேவகோட்டையில் பிணமாக கிடப்பான். நீங்கள் எனக்கு மரண அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் தான் காரைக்குடி சென்று அந்த விழாவில் கலந்து கொள்ளப்போகிறீர்கள் என்றார், குரலிலும், தொனியிலும் நடுக்கம் இல்லாமலும் மனதில் உறுதியுடனும்..
அதோடு கோபம் கொப்பளிக்க தேவகோட்டை திரும்பி விட்டார். இன்றைக்கு எந்த ஒரு நகரத்தின் தலைவருக்காவது தமிழக அரசின் முதல்வரை, அதிலும் கலைஞர் போன்ற பெரிய தலைவர்கள் முன் தனது கோப முகத்தைக் காட்டத் துணிவு இருக்கிறதா சொல்லுங்கள். அதுவும் மக்களின் நன்மைக்காக...
கலைஞர் கருணாநிதி அவர்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. தேவகோட்டைக்கு மட்டும் ஏதாவது இப்படி OUT OF THE WAY இல் செய்தல் மற்ற நகராட்சிகளும் குரல் எழுப்பக் கூடும். ஏதோ செய்து விட்டார் முதல்வர் . இது நடந்து நான்கே நாட்களில் இராம வெள்ளையன் அவர்களை தொலை பேசியில் அழைத்து தேவகோட்டையின் தண்ணீர் தாகம் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்து பணிகளையும் ஆரம்பித்து, தானே வந்து 1975 ஜூலை மாதம் குடி நீர் திட்டத்தை திறந்து வைத்து சென்றார்.
14 தலை முறைக்கு சொத்து சேர்க்க அரசியலில் பிழைப்பு நடத்தி வருபவர்களை இன்று காணும் பொழுது உண்மையிலேயே ஊரே தனது உறவு, அவர்கள் நல்வாழ்வே தனது சொத்து என்று வாழந்து மறைந்த இப்படிப்பட்ட உண்மையான மக்கள் தொண்டர்கள் வாழ்ந்த தேவகோட்டை நகரை இங்கிருந்தே கரம் கூப்பி வணங்குகிறேன்.
PLEASE READ ALL THE EPISODES IN : http://muthumanimalai.blogspot.com
அவரால் நகர வாழ்க்கை கெட்டது உங்களுக்குத் தெரியவில்லை தம்பி
பதிலளிநீக்கு