அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 ; பகுதி: 5
இப்ப நாம சிலம்பணி சன்னதியில் தெற்கு வாடையில் லட்சுமி டாக்கீஸுக்கு பின் ருக்மணி அம்மா வீட்டைத் தழுவி வடக்கிலிருந்து தெற்காக ஓடி வருகின்ற கால்வாய் இன்றைய அன்பு மருத்துவமனை பக்கம் வந்து இந்த சன்னதி தெருவுக்குக் கீழே ஓடி மீண்டும் தலை காட்டும் இடத்தில் நிற்கிறோம். இந்த கால்வாய் நீர் அடுத்து இருக்கும் வெள்ளாளர் தெருவுக்கு ஓடி நகரின் கிழக்கே இருக்கின்ற கற்குடி கண்மாயில் கலக்கும் வரையான அருமையான நீர் மேலாண்மை கொண்ட நன்னகரம். இது பற்றி எமது முதல் பாகத்தில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன். உங்களுக்கும் தெரியும். இன்று மற்ற நகரங்களை போலவே தேவகோட்டையில் நீர் வாய்க்கால்களிலும், கால்வாய்களிலும் ஓடி குண்டு, குளங்களை நிறைத்து சில இடங்களில் ஊர் உண்ண நன்னீர் கொடுக்கும் ஊரணிகளாக நிறைந்து கண்மாய் போய்ச் சேர்ந்து நிலம் உபரியாக இருக்கும் போது மடை திறந்து விருசுழியில் நுங்கும் நுரையுமாக புனல் ஓடிய நிலை மாறி இன்று தார் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் அறிந்து கொள்வது வேதனை அளிக்கிறது.
கோன் உயரக் குடி உயரும்....
ஆம்...
'குடி'... உயர்ந்திருக்கிறது ...
ஒளிந்து மறைந்து ஊர்க்கோடிக் கடைகளில் குடித்த காலம் எல்லாம் மூழ்கிப் போய் விட்டது, 'குடி' களின் குடிகள் போல.. சரி இதைப் பேசி இப்போ ஒன்றும் ஆகப் போவதில்லை. நம்ம சிலம்பணி சன்னதி தெருவுக்கு வருவோம்.
தெருவின் தெற்கு வாடையில் தற்போது 'நாவன்னா மெடிகல்ஸ்' இருக்கும் இடத்தில்
நிற்கிறோம். முன்பு இந்த இடத்தில் துணை
வணிக வரி அலுவலகம் இருந்தது. ஒரு மிதி வண்டி சரி பார்க்கும் கடை இருந்த நினைவு.
ஞாபகம் உள்ளவர்கள் தெளிவு படுத்தவும். முக்கியமாக
'பஞ்சர் ஓட்டும் கடை' . அப்போது
மிதி வண்டி வைத்து இருப்பவர் ஓரளவு நடுத்தர
குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அன்றைய சமூக பொருளாதார
நிலைப்பாடு ('ஸ்டேட்டஸ் '.). நிறைய இடங்களில் வாடகை மிதி வண்டி நிலையங்கள். நகரில் மிகச்சிலரிடம் மட்டுமே 'ஸ்கூட்டர்'
அல்லது 'மோட்டார் சைக்கிள்'. டாகடர் தங்கவேலு ஒரு ஸ்கூட்டரில் செல்வார். லைஃப்
இன்சூரன்ஸ் ஆப் இந்தியா பாலு ஒரு
மோட்டார் பைக்கில் வருவார், சிலம்பணி அக்ரஹாரத்தில் இருந்து
ஒத்தக்கடை திண்ணன் செட்டி அக்ரஹாரத்தில் இருக்கும் அவரது உறவினர் இல்லத்துக்கு.
அது போக ஒரு சிலரே மோட்டார் இரு சக்கர வாகனங்கள் வைத்து
இருந்தார்கள். டிவிஎஸ் 50 புழக்கத்துக்கு
வரும் வரை. கார்கள் நகரத்தார்கள் வைத்து இருந்தார்கள்.
இரட்டை ஆனா ரூணா இல்லத்தில் 'ப்ளைமொத்' கார் ஒன்று அவரிடம் இருந்த பல கார்களில் ஒன்றாக. கொஞ்சம் பியட் கார்கள் மற்றவை அம்பாசிடர். எனக்கு
தெரிந்து டாக்டர் பழனிச்சாமி ஒரு வாக்ஸால் கார் வைத்து இருந்தார். டாக்டர் வைத்திய நாதனும் ஒரு வண்டி வைத்து இருந்தார்.
அடேய் .. மனக்குரங்கே ... எங்கே போக சொன்னா நீ எங்கெங்கோ தாவுகிறாயே ?? வா வா . நீ செல்ல
வேண்டிய இடம் சிலம்பணி சன்னதி தெரு. தடம் புரளாமல் சொல்ல
வேண்டிய விசயத்துக்கு வா. மன்னிக்கவும் ..
இப்படித்தாங்க.. தேவகோட்டையை நினைச்சுட்டாலே, மனம் தறி
கேட்டு எங்கெங்கோ ஓடிடுது ... குரங்குப் பையன்...
மீண்டும் துணை வணிக வரி அலுவலகம். படிக்கின்ற காலங்களில் இந்த அலுவலகத்தை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன். கல்லூரி முடித்து வேலை இல்லாத பட்டதாரியாக சுற்றிய காலத்தில் சரஸ்வதி தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை கொஞ்ச காலம். திரைப்படம் எல்லாம் டிக்கெட் இல்லாமல் பார்க்கலாம் பாருங்க... அப்போ ஒவ்வொரு நுழைவுச் சீட்டுக்கும் திரை அரங்கம் கேளிக்கை வரியை கட்டுவதோடு அந்த வரி கட்டப்பட்டு விட்டது என்று படம் பார்க்கும் மக்களிடமும் ஆதாரம் காட்டி ஆக வேண்டும். என்ன ஆதாரம் ஒவ்வொரு நுகர்வோருக்கும் ? ஒவ்வொரு நுழைவுச் சீட்டிலும் தமிழக அரசின் கோபுர முத்திரை கொண்ட வணிக வரித் துறையின் முத்திரை நீல வண்ண மையில் குத்தப்பட்டு இருக்க வேண்டும். அந்த நகர்வோர் நுழைவுச் சீட்டுக்காக கொடுத்த கட்டணத்தில் எவ்வளவு வரியாக கட்டப்பட்டு இருக்கிறது என்ற விபரமும் சீட்டிலே காட்டப்பட்டு இருக்கும்.
இந்த நீல முத்திரை பதிக்கின்ற பணிக்காக இந்த துணை வணிக வரி அலுவலகத்துக்கு டிக்கட் கட்டுக்களை எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறேன். இந்த முத்திரை சக் சக் என்று வேகமாக அஞ்சல் அலுவலகத்தில் போல டிக்கட்டுகளின் மேல் இட வேண்டும். அந்த நேரத்தில் அணிந்து இருக்கும் உடைகள் எல்லாம் மை தெறித்து வீணாகி விடும். எனவே வணிக வரி அலுவலகத்தில் இருப்பவர்கள் கிட்டவே வர மாட்டார்கள். நானும் இதற்காக ஒரு கீழ்மட்ட பணியாளரை அழைத்துச் செல்வேன். டிக்கெட்டுகளின் வரிசை எண்களை (Sl.Number) களை நான் பார்த்துக் கொள்வேன்.
பள்ளி திறந்தவுடன் புதுப் பாட நூல்கள் வாங்கி அந்த அச்சு வாசனையை நுகர்வதே ஒரு
சுகமான அனுபவம் தான். அதற்கு மேல் RMPT நடராசன் கடையில் போய் நோட்டுப் புத்தகங்கள் வாங்கி காக்கித் தாள் வாங்கி,
அத்தோடு அவரிடம் லேபிள் (காய்கறி வாங்குகையில்
கறிவேப்பிலை கொசுறு வாங்குவது போல)
கெஞ்சிக் கூத்தாடி வாங்கி அனைத்து புத்தகங்களுக்கும் தீபாவளிப்
பண்டிகை மாதிரி புதுச்சட்டை மாட்டி லேபிள் ஒட்டி, பெயர்,
வகுப்பு, பிரிவு இத்யாதிகள் எழுதி பந்தாவாக
வகுப்பறையில் முதல் நாள் நுழைந்தால், நம்மளோடத விட அட்டகாசமா
நண்பன் கொண்டு வந்த் புத்தகங்களைப் பார்த்து பல்பு வாங்குறது வேற விசயம். அதெல்லாம் ஒரு
மாத்த்துக்குத்தான். இரண்டாவது மாசத்திலிருந்து, முடி நமக்கே தெரியாமல்
ஒண்ணொன்னா உதிர்ந்து அரை மண்டை வழுக்கையா ஆகி விடுவது போல அந்த்த் துணிப்பைக்குள்
தினமும் நுழைந்து நுழைந்து ஒவ்வொரு தாளாக உதிர்த்து, புதுப்பெண்ணாய்
வந்த புத்தகம் எல்லாம் எலும்பும் தோலுமாய் ஆகி விடுவதும் உண்டு. அடுத்த வருட்த்துக்கு செகண்ட்
ஹாண்டில் விற்பதற்கென்றே புத்தகன்களைத் திறந்தே பார்க்காத பட்ஜெட் பத்மனாபங்களும்
உண்டு.
இந்த இன்ப நிலையத்தில் 6 ஆம் வகுப்பு பயில்கையில் 1970 ஆம் வருடம், தமிழ் புத்தகம் வாங்கி
அங்கேயே ஆவலுடன் பிரித்துப் படித்த நினவுகள் பசுமையாக மனக்கண்ணில் காட்சியாய்
விரிகின்றது. இந்த இடம் தான் இன்றைக்கு திருமதி.அமுதா
காசநாதன் அவர்களின் மருத்துவமனை. பின்னர்
1987 இல், எனது மூத்த மகனின் பிரசவத்துக்காக, எப்போது வேண்டுமானாலும் மருத்துவ
உதவி கிட்டும் என்று இந்த அமுதா காசிநாதன் அவர்களுக்குச் சொந்தமான பகுதியில் எனது
மனைவி வீட்டில் தற்காலிகமாகக் குடி இருந்த நினைவு இருக்கிறது.
என் வயதுக்கு நானே தந்தை பெரியார் அவர்களை ஒரு 20 தடவைக்கு மேல் இதே மேடையில் கண்டு இருக்கிறேன். நல்ல பறங்கிப் பழம் போன்ற தேகம், கருஞ்சட்டை, பக்கத்தில் அவருக்கு இணையாக அமைதியாகப் வலது புறம் அவரது நாயும் இடது புறம் அவரது கைத்தடியும் படுத்து இருக்கும். சுற்றிலும், கடவுளைக் கற்பித்தவன், கடவுளைக் கும்பிடுபனை வசை பாடும் வாசகங்கள் தாங்கிய சிறிய போர்டுகள் சகிதம் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டு இருப்பார். என் கண்களோ அவரது இடுப்புக்குக் கீழே இறங்கி வந்து ஒரு கண்ணாடிப் புட்டியோடு இணைந்து இருக்கும் டியூபையே ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும்.
வெற்று மைதானமாய் 6…7 மணிக்கு ஆரம்பிக்கும்
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் 8… 9 மணி
வாக்கில் நல்ல ஜனத்திரளை சேர்த்து விடும்.
அடுத்த நாள் நேற்றைய எந்தச் சுவடும் காட்டாமல் அந்த இடம் வழக்கம் போல
வயதுப் பையன் களுடன் பந்தாட்ட்த்தில் ஈடுபட்டு இருக்கும்.
தொடர்வோம்…. உங்களுக்கு விருப்பம் இருப்பின்…..
பழைய நினைவுகள்... என்றும் உங்கள் பக்கத்தில்.
பதிலளிநீக்குYour flow is like a stream, I don't think as you said, even though I'm not from Devakottai, but im enjoying it and relate to Karaikudi in those days
பதிலளிநீக்குஆஹா எழுத்தோட்டம் அற்புதம். சில இடங்களில் உவமைகளை சிரித்துக் கொண்டே வாசித்தேன். பெரியாரவர்களின் பிளாஸ்டிக் ரியூப் இரகசியம் எப்போது அறிந்தீர்கள்.
பதிலளிநீக்குநன்றி. பின்னர் பெரியார் பற்றி புத்தகங்கள் வாயிலாக அவர் எந்த அளவுக்கு தன் உடல்நிலை பற்றிக் கிஞ்சித்தும் கவலை இன்றி மக்கள் சேவையில் ஈடுபட்டு இருக்கிறார் என்று அறிந்தேன். நன்றி சகோதரி
நீக்குAnna Arangam built when Rama.Vellaian as municipal chairman...and he made drinking water at 6 ward school that time Kalaingar Karunanithi was CM , he opened the tap...
பதிலளிநீக்கு