அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 6

 

அண்ணா அரங்கம் பற்றி பார்த்தோம்.  இந்தத் திடலில்  பல் சுவையும்  பரிமளிக்கும். மேடை மீது மட்டுமல்ல.  மேடைக்கு கீழேயும், பார்வையாளர்களிடம் இருந்தும்.  இன்று போல கட்சிகள் கார்போரேட்டுகளாக இல்லாத காலம்.  ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் கூட்ட அமைப்பாளர் கட்டாயம் கையில் இருந்து காசு போட்டுத்தான் ஆக வேண்டும்.  அதிலும் பொதுவுடைமை கட்சிகளின் சார்பில் நடக்கும் கூட்டங்களுக்கு, மேடையில் பேச்சாளர் பேசிக் கொண்டு இருக்கும்போதே அவரை இடை மறித்து ஒலி வாங்கியில் ஒரு தொண்டர் உரக்கக்கூட  கூறுவார், "தொண்டர்கள் துண்டேந்தி வருகிறார்கள்,  இயன்றதை அளியுங்கள்'  என்று ... அதே நேரம் பார்வையாளர் பகுதியில் 4 அல்லது 5 பேர் உண்டியல், அல்லது தோள் துண்டை ஏந்தி வருவார்கள்.

 இதில் மிகவும் சுவாரசியமான ஒரு நபர் ஆர்ச்  உழியன் தான் .  இவர் ஐஸ் விற்பதை பற்றியும் இவரது தி.மு.க.பற்றுப் பற்றியும் முதல் பாகத்திலேயே விபரமாக அசை  போட்டோம்.  இருந்த போதும் அவர் இந்த அண்ணா அரங்கத்தின் தி.மு.க. மேடைகளில் தன்  முகம் காட்டாமல் இருந்ததில்லை.  67 க்கு  முன்னும் அதன் பின்னும் சாதாரண பாமரர்,  உறவினரையோ புதிதாய் பார்க்கும் நபர்களையோ பார்த்து கேட்கும் கேள்வி

  நீ எம் ஜி யார் கட்சியா இல்ல சிவாஜி கட்சியா

என்பது தான்.  அந்த அளவுக்கு இந்த இருவரும் மக்களை கவர்ந்து இருந்தார்கள்.  அதிலும் MGR  அவர்களின் பங்கு மிக அபரிதமானது.  அரசியல் காரணமாக யாரும் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் இது தான் உண்மை.  அப்போதெல்லாம் MGR  ஒரு சிறிய கருப்பு சிவப்புத்  துண்டை தன்  தோள்  மீது அணிந்து இருப்பார்.  தோளின் துண்டை விட சிறியதாகவும், கைக்குட்டையை விட சற்று பெரியதாகவும் இருக்கும் .

 


 

திரை நாயகர்களின்  நடை உடை பாவனைகளைப் பின்பற்றி அவர்களைப் போலவே தம்மை மாற்றிக் கொள்வது இன்றைக்கு அல்ல, தியாகராஜ பாகவதர் காலத்துக்கு முன்பேயே இருந்தது.  பாகவதர் கிராப் என்றே ஒரு காலத்தில் சிகை அலங்காரம் அன்றைய இளைஞர்களை ஆட்டுவித்தது.  அதுதான் மக்கள் திலகம் நமது மக்களின் நாடி பார்த்த இரகசியம்.  தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை மட்டுமே பரப்பினார். தனது சொந்த வாழ்விலும் தன்னை ஏழைப் பங்காளனாகவே காட்டிக் கொண்டார்.  எங்க வீட்டுப் பிள்ளை என எந்த வீட்டுப் பிள்ளையும் தன்னைக்  கொண்டாடும்படி கடைசி வரை வாழ்ந்தார். உழைக்கும் வர்க்கத்தினர் தங்களில் ஒருவனாகவே தன்னை நினைக்கும்படி உருவாக்கி வைத்தார்... உறவாக்கி  வைத்தார்.  



தான் பங்கேற்கும் கட்சி மேடைகளிலும் சரி, நடிக்கும் திரைப்படங்களிலும் சரி தான் சார்ந்த இயக்கத்தின் கட்சிக் கோடியாக இருந்த கருப்பு சிவப்பை  தோளில்  துண்டாகவோ, திரையில் உடையாகவோ அணிந்து வந்தார். 


 


 

அவரின் உண்மைத் தொண்டர்களும் அப்படியே கருப்பையும் சிவப்பையும் தம் கருப்பைக்குள்  ஏற்றிக் கொண்டனர்.  



இப்போ நம்ம அண்ணா அரங்கத்தில் எந்த ஒரு தி.மு.க. கூட்டம் நடந்தாலும் சரி, ஐஸ் விற்கும் உளியன்  விறு விறு வென மேடை ஏறுவார். அன்றைக்கு 3 காசுக்கும் 5 காசுக்கும் என ஐஸ் விற்ற காசில் தனது உழைப்பின் பகுதியில் இருந்து அந்த கருப்பு சிவப்புத் துண்டுகளை வாங்கி வைத்து  இருந்து 'ஆர்ச் ஊழியன் ' போர்த்துகிறேன் என்று ஒலி வாங்கியில் சொல்லி விட்டுப் பெருமை பொங்க அந்த சிறிய துண்டுகளைப்  போர்த்தி விட்டு தானும் கட்சியின் ஒரு அங்கம் என்ற மேடையில் இருந்து இறங்குவார்.


ஆர்ச் ஊழியன் மிக நல்ல மனிதர்.  அமைதியானவர், அப்போது சாதா ஐஸ் 3 காசு, பால்/ சேமியா/ ஜவ்வரிசி ஐஸ் 5 காசு.  சிறுவர்கள் யாரும் காசு போதவில்லை என்றாலும் கணக்குப் பார்க்காமல் அவர்களுக்கு ஐஸ் கொடுப்பார். முதன்முலில் அண்ணா  திமுக துண்டுபோட்டுக்கொண்டு தைரியமாகத் தெருவில் நடந்தவர்களில் இவரும் ஒருவர்.  இவர்கள் தான்  அதிமுகவின் கண்ணுக்கு தெரியாத அடித்தள ஆன்மாக்கள். 

மதுரையில் இருந்து MDT பேருந்தில் STATE ICE  என்ற பெயரில் ஐஸ் கிரீம் வரும்.  ஒரு குச்சி ஐஸ் கிரீம் 15 காசு .. விலை பிரிமியம் . இதனை சிதம்பரம் என்பவர் சீருடை அணிந்து தலையில் கேப்  அணிந்து விற்பார்.  சரியாக மத்திய உணவு இடைவெளியில் தே பிரித்தோ பள்ளியின் விடுதிக்கு (HOSTEL ) பின் பக்கம் உள்ள இடைவெளியில் வெளியே வண்டியை நிறுத்தி வைத்து விற்பனை செய்வார்.  எனக்கெல்லாம் ஐஸ் கிரீம் தீபாவளி, பொங்கல் போல அடிக்கும், அமாவாசைக்கும் தான் நமக்கு என்று இருப்பது பால்.. தேன்  ஐஸ் புரூட் தான். அப்போது வட்டாணம் ரோடில் பெரிய பள்ளி வாசலுக்கு அடுத்து எனது வீட்டுக்கு அருகில் மீனாட்சி ஐஸ் கம்பெனி என்ற பெயரில் லண்டன் தி. என்று அழைக்கப்படும் திண்ணப்ப   செட்டியார் (இவரது மகன் திரு.வள்ளியப்பன் அவர்கள் அம்பத்தூரில் ஐஸ் பேக்டரி நடத்தி வருகிறார், சென்ற முறை தாயகம் சென்று இருந்த  போது திண்ணப்பச் செட்டியாரை மரியாதை நிமித்தம் சென்று பார்த்து வந்தேன் ) நடத்தி வந்தார்.

இன்னொரு ஐஸ் பாக்டரி வெள்ளையன் ஊரணி தெற்கு தியாகிகள் ரோடு சேரும் இடத்தில்  அமைந்து இருந்த சீனிவாசா  பள்ளிக்கும் கொஞ்சம் முன்னால் இருந்த 'பிரிமியர் ஐஸ் கம்பெனி'.  இந்த ஐஸ் வியாபாரிகள் மீனாட்சி ஐஸ் கம்பெனியில் பாக்கி வைத்து விட்டால் பிரிமியர் ஐசுக்குக்கு கட்சி தாவி விடுவார்கள்.  அங்கிருந்தும் அப்படித்தான்.  என்ன செய்வது அதிகப் பட்சம் ஒருநாளில் வெய்யிலில் அலைந்து திரிந்து 500 குச்சி ஐஸ் விற்றால் ரூ 7இல் இருந்து ரூ 10 வரை தேறும்.  அனல் அன்று அது ஓரளவு நல்ல  சம்பாத்தியம் தான்.


பாக்டரியில் பெட்டி  கட்டி விற்பனை செய்யும்  சில்லறை வியாபாரிகளுக்கு 100 ஐஸ் புரூட்கள் ரூ 1.50 க்கும் ( ஒன்றின் விலை ஒன்றரை காசு )பால் ஐஸ் 100 ரூ 2.50க்கும் (ஒன்றின் விலை இரண்டரைக் காசு ) கொடுக்கப்படும். அவர்கள் அதை மக்களுக்கு முறையே 3 பைசா மற்றும் 5 பைசாவுக்கு விற்று வருவார்கள்.   இதில் மிதி வண்டியில் தூரக் கிராமங்களுக்கு எருது கட்டு, மஞ்சு விரட்டு, சந்தனக்கூடு போன்ற விழாக்காலங்களில் இரண்டு முறையும் சரக்கு வாங்கி செல்லும் தேனீக்களும் உண்டு . இந்தியப் பொருளாதாரத்தில் என்றைக்கு 10 பைசா பிச்சைக்காரர்களால் நிராகரிக்கப்பட்டதோ  அன்றே நமது பொருளாதாரம் பாதாளம் போனது... பண வீக்கம் படு தாக்கம் ஆனது .

ஆர்ச் ஊழியன் போலவே இன்னொருவர், குறள்  மாணிக்கம்.  கழக கண்மணி, செயல் மறவர்..இன்னொருவர் தி.மு.க. செயல் வீரராக இருந்த தியாகராச பிள்ளை.   (இவர் சட்டையே போடமாட்டார்)துண்டுமட்டும் மேலேபோட்டிருப்பார் இவர் மேடையில் மைக்பிடித்து பேசமாட்டார் தரையில் முன்வரிசையில்  அமர்ந்திருப்பார் கலைஞரே இவரை திமுகவில் மைக்பிடித்து பேசத்தெரியாத செயல்வீரர் தியாகராசன் என்று கூறியிருக்கிறார்.

சரி தோழர்களே... அடுத்த பகுதியில் ஆர்ச் வளைவில் இருந்து சிலம்பணி சன்னதி தெருவின் வடக்குப்  பகுதியில் வாழ்ந்த வள்ளல்கள் பற்றியும் வல்லவர்கள் பற்றியும் பார்ப்போம்.  அதற்காக மீண்டும் ஒருமுறை சாமிநாதன் மொச்சைக்கடைக்கு சென்று மொச்சை வாடையை மோப்பம் பிடித்துக் கொண்டு இருங்களேன்...

அன்புடன் ... கவிக்கிறுக்கன்  தேவகோட்டை முத்துமணி

 

கருத்துகள்

  1. அருமை !
    அதே போல் , லெட்சுமி டாக்கீஸ் அடுத்து ரோட் , பெட்ரோல் பங்க் அருகில் நாராயண விலாஸ் எதிரில் , ஒரு பெட்டிக்
    கடையில் கை முறுக்கு ஒன்று12பைசா.
    ஒரு ரூபாய் க்கு 9 என சிகரெட் அட்டை பெட்டி(காக்கி) கவரில் வைத்து தருவார்கள். ருக்மணி அம்மா வீட்டு கொலு பார்த்த ஞாபகம். பேரன் ராகவன் என் கிளாஸ் மெட்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60