அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 7

 மாற்றம் ஒன்றே மாறாதது

அன்புச் சொந்தங்களே...


சில நாட்களுக்கு முன்பு இந்தத் தொடரை தொடரவா? இல்லை அலுப்புத் தட்டுகிறதா என்ற வரிகளோடு கேள்வியின் நாயகனாக ஒரு பகுதியை முடித்து இருந்தேன்.. அனைவருமே தொடருங்கள் என்றே பச்சைக்கொடி காட்டினீர்கள். மகிழ்ச்சி. ஒரு யோகி தவநிலையில் இருக்கும் வேளை எப்படி ஒரு ஏகாந்த சுகத்தில் ஆழ்ந்து உணர்வானோ அதே நிலை தான், என் மனமுவந்து என்னை நம் மண்ணின் நினைவுகளில் மூழ்கடித்துத் கொண்டு இந்தத் தொடரை நான் எழுதும் இந்த வேளை . ஆனால் 'வெட்டி வேலை' என்று சட்டென்று முகத்தில் அடிக்கும் கருத்துக் கந்த சாமிகளையும் வழியில் சந்திப்பதால் கொஞ்சம் வலியையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. இதுதான் என்னை இந்த வேள்வியில் ஒரு கேள்வியை கேட்க வைத்தது . உங்கள் அனைவரின் ஆதரவும் உங்கள் பின்னூட்டங்களும் மட்டுமே இந்த தொடரின் ராஜ பாட்டை .. அது மறக்கச் செய்யும் நான் படும் பாட்டை...
நமது காலத்தில் நாமறிந்த நகரின் நினைவுகளை அசை போடுகிறோம்... இந்த மண்ணின் தியாகிகளை, தீர்க்க தரிசிகளை, உழைப்பாளிகளை, அவர்கள் ஊக்கத்தினை அறிந்து வணங்குகிறோம் . இந்த நினைவுகளை ஒரு தகப்பனின் கடமையோடு அடுத்து வரும் நம் பிள்ளைச் செல்வங்களுக்கு பதிவாக்கி விட்டுச் செல்கிறோம். .நாம் அனைவருமே சேர்ந்து தான் இந்தப் பதிவுகளை இடுகிறோம்.. உயர்ந்த தென்னை மரம் ஒவ்வொரு மட்டையாக உதிர்த்து அவற்றைத் தன் மேனியில் வடுக்களாய் எந்நாளும் பாதுகாத்து வைத்து இதுதான் நான் வளர்ந்த வகையும் தொகையும் என்று சொல்லாமல் சொல்வது போல ...


சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி,,, மாறாத மாற்றங்களுடன் இன்று

இப்போது சன்னதி தெருவின் வடக்கு வரிசையில் சாமிநாதத் தேவர் மொச்சை கடை வாசனையோடு நிற்கின்றோம். இந்த இடத்தில் 70~80 ஆம் ஆண்டுகளுக்கு முன் காலச்சக்கரத்தை கற்பனைக் கரங்களால் பின்னோக்கி சுழற்றுவோம்.
ஒரு 70 வருடங்களுக்கு முன்பு இந்த சன்னதி தெருவில் வாழ்ந்தவர் மீண்டு இந்தப்பகுதிக்கு வந்து இப்போது பார்த்தால் சத்தியமாக அவருக்கு இது அவர் வாழ்ந்த இடம் என்று அறிந்து கொள்ள நிறைய நேரம் பிடிக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வார்களே அந்த வார்த்தைக்கு வலுச் சேர்க்கும் விதமாக இந்த பூமியும் மாறிக்கொண்டே இருக்கிறது... உள்ளும்.. புறமும்... அரசு போக்கு வரத்து கழகத்தில் எம்முடன் பணி புரிந்து ஓய்வு பெற்ற திரு.வெங்கடாசலம் சிறுவனாக இதே பகுதியில் வாழந்தவர். அவர் சொல்கிறார், இன்று பழைய ஆர்ச் வளைவும் அதன் இடது பகுதியில் இருந்த ஸ்ரீ ராமபிரான் பஜனை மடமும் மட்டுமே பழமையின் சாட்சியாக நிற்கின்றன என்று…..அந்த அளவுக்கு இடங்கள் மாறிக் கொண்டே வருகின்றன..


எத்தனையோ நினைவுகளைத் தாங்கி நகரின் அடையாளமாக 'ஆர்ச்' வளவு


இப்போது ஒரு50 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் பார்த்த சன்னதி தெரு…. ஆர்ச் உட்புறம் கிழக்கிலிருந்து மேற்காகப் பயணிப்போம். இன்றைக்குத் தேவகோட்டையில் வசிப்பவர்கள், தொடரின் இந்தப் பகுதியை கையில் ஒரு சாலை வரைபடமாகக் (ROAD MAP) கையில் எடுத்துக் கொண்டு சன்னதி தெருவில் நடந்து பின்னோக்கி காலப் பேருந்தில் பயணிக்கலாம்.
சாமிநாத் தேவர் மொச்சைக்கடை..


சாமிநாதத் தேவர் அவர்களின் இல்லம்...


அதற்கடுத்து
ஸ்ரீராமபிரான் பஜனை மடம். நூறாண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்து வந்தவரை வரவேற்றுச் சென்றவரை வழியனுப்பிக் கொண்டு இருக்கின்ற கட்டிடம். நான் சென்ற அத்தியாயங்களில் குறிப்பிட்டு இருந்த செல்லூர் சகோதரர்கள் (எதிர்ப்புறத்தில் வீடு வைத்து இருந்தவர்கள்) நிர்வாகத்தில் 1930 ஆம் ஆண்டு வாக்கில் இருந்து இருக்கிறது. இப்போது யாருடைய மேற்பார்வையில் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம். ஆர்ச்சின் இடது புறமாக வளைவாய் மேற்கு வரை இருக்கும் கடைகளின் இடங்கள் இந்த பஜனை மடத்துக்குச் சொந்தமானவை..





இன்றும் பழைமயின் மௌன சாட்சியாக நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்ற அருள்மிகு இராம பிரான் பஜனை மடம்

அடுத்து.. இராகவன் அட்வகேட்… அலுவலகம்… பின்னர் பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளை உடைத் தேவதைகளுக்கு இணையாக வருவது போல வெண்மை உடையில் (WHITE PANTE AND WHITE SHIRT) ஒரு அல்லோபதி மருத்துவர் வந்தார். தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார். சமயங்களில்.அவரின் ஒரு கை நோயாளியின் நெஞ்சில் ஸ்டெதாஸ்கோப்பில் இருக்கும், இன்னொரு கை விரல் இடுக்கில் சிகரெட் புகைந்து கொண்டு இருக்கும். அவரது பெயரை மறந்து விட்டேன். நினைவில் கொண்டவர்கள் பகிரவும்.
அப்புறம்…. ‘மதுரை வீரன்’ லாண்டரி…..
அதனை அடுத்து எண் 53 இலக்கம் தாங்கிய மருத்துவர்.இராஜகோபால் அவர்களின் இல்லம். டாக்டர் இராஜகோபால் தேவகோட்டையின் MGR என்று அறியப்பட்ட வள்ளன்மைத் தன்மை கொண்ட நல்ல உள்ளம் கொண்ட குணவான். அவரைப் பற்றி எமது அனுபவங்களை முதல் பாகத்தில் இரண்டு அத்தியாயங்களில் குறிப்பிட்டு இருந்தேன். முதல் பகுதியின் அத்தியாயம் 12 ஐயும், 40 ஐயும் மீள் பார்வை பார்க்குமாறு வேண்டுகிறேன்.

அந்தப் பழைய பதிவுகளுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்...
இன்று இந்த 53 ஆம் எண் இல்லம், ஒரு வணிக வளாகமாக மாற்றம் பெற்றிருக்கிறது. அற நிலையத்துறை, (EXECUTIVE OFFICER) E.O.சுப்பிரமணியம் அவர்களின் மகன் அட்வகேட் (இவரது சகோதரர் டாக்டர் சதாசிவம்) அவர்கள் வசம் இருப்பதாக அறிந்து கொண்டேன்.. இந்த மருத்துவர் இராசகோபாலுக்கு முன்னர் டாக்டர்.நரசிம்மன் இங்கு பல ஆண்டுகள் இருந்து நமது நகர மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்து இருக்கிறார்.
அடுத்து ‘ஆனந்தா காபி ஹவுஸ்’ இருந்தது…இதற்கு முன் இங்கு ‘சோழிய பிராமண’ குடும்பங்கள் இருந்தன.
அடுத்து வருவது அட்வகேட் பால சுப்பிரமணியன் அவர்கள் இல்லம். இவர் மாண்புமிகு நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் சகோதரர். இவர்களின் இன்னொரு சகோதரர் கோபால் எனது நண்பரும் கூட.. ஒரே வகுப்பில் பயிலாத போதும் அன்பு உறவினர், தேவகோட்டை தமிழ்க் கொண்டல் ஆ.குமார் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். (இருவரும் நாடக நடிகர்கள் என்பது ஒரு தகவல்).. நீதியரசர் மாட்சிமை தங்கிய கற்பக விநாயகம் அவர்களுடன் இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொலை பேசியில் நீண்ட நேரம் உரையாடினேன். Down to the Earth என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதற்கேற்ற, அனைவரையும் ஒரே மாதிரி மதிக்கும் பெரிய மனம் கொண்ட தேவகோட்டை தந்த இன்னொரு மாணிக்கம். ஜார்கண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக சேவை செய்து ஓய்வு பெற்று இன்று பாரதத்தின் தலை நகர் புது டில்லி உச்ச நீதி மன்ற வழக்குரைஞராக உயர்ந்த இடத்தில் இருக்கும் போதும், ‘பதவியிலும் பணிவாக பதவிசு காட்டாத பேராண்மை கொண்டவராக ஒரு சகோதர வாஞ்சையுடன் உரையடினார். இனி வரும் பகுதிகளில் அவர் பற்றிய நினைவுகளை அசை போடுவோம்.
இதற்கடுத்து ஒரு மண்ணெண்ணைக் கடை இருந்த்து.. இன்றைய தலைமுறைக்கு மண்ணெண்ணை என்றால் என்ன வென்று அறியாத பொருளாய் இருக்கும். நாங்கள் சிம்னி விளக்கிலும், அரிக்கேன் விளக்கிலும் பாடப் புத்தககங்களைப் படித்தவர்கள்.
அப்புறம்….அழகமடை முத்து உடையார் மற்றும் வீரப்ப உடையார் சகோதரர்களுக்குச் சொந்தமான ஒரு கட்டிடம்.
அடுத்து நகரின் பேர் பெற்ற வழக்கறிஞர் T.சுந்தராஜ ஐய்யங்கார். அதே இல்லத்தில் ஒரு பகுதியில் ராமசாமி ஐயர் என்பவர் இருந்தார். இவர் சுவை மிகுந்த சைவ உணவு வழங்கும் உணவு விடுதி நடத், தி வந்தார். சுவை அதிகம், சுகாதாரம் அதிகம், விலை குறைவு… கடைசியில் உணவு விடுதி நட்டத்தில் போய் விழுந்தது. மேற்கொண்டு நகர்த்த இயலாமல் தனது தம்பி V.S.நீலா ஐயரிடம் விடுதியை விற்று விட்டார். தம்பி கெட்டிக் காரர். தனது பெயரில் ‘நீலாஸ் லஞ்சு ஹோம்’ என்று பெயர் இட்டு மிக
அருமையாக
விடுதியை இயக்கி வருகிறார்.

அடுத்து வரும் மூன்று வீடுகளும், புரோகிதம் செய்து வந்த மூன்று சாஸ்திரிகளுக்குச் சொந்தம். அவர்கள் முறையே ராமையா சாஸ்திரிகள், கிட்டு சாஸ்திரிகள் மற்றும் அம்பி வாத்தியார். இந்த அனைத்து சாஸ்திரி வீடுகளின் முன்பக்கங்களும் சாசுவதமாக கடைகள் ஆகி விட்டன. அம்பி வாத்தியாரின் பழைய முகப்பு தான் இன்றைய ‘காவன்னா மெடிகல்ஸ்’. இதனை நிர்வகித்து வரும் திரு.சிவலிங்கம் எனது மைத்துனர் ஆவார்.
இதற்கு அடுத்து SNOW- WHITE DRY CLEANERS என்ற பெயரில் ஒரு சலவை நிலையம் நடந்து வந்தது.. அப்புறம் சிலம்பணி வடக்கு அக்ரஹாரத்தை இந்த சிலம்பணி சன்னதி தெருவோடு இணைக்கும் ஒரு சந்து வடக்கு நோக்கி பிரியும்… ‘இலட்சுமி பிக்சர் பேலஸ்’ இன் பின் பகுதியில், ருக்மணி அம்மா வீட்டை ஒட்டிச் சென்று சேரும்.
உங்களில் அதிகப் பேருக்கு சரித்திரப் புதினங்களின் அரசன் ‘சாண்டில்யன்' அவர்களைத் தெரியும். இந்த சிலம்பணி சன்னதி தெருவில் இனி வரும் நமது மேற்கு நோக்கிய பயணத்தில் சாண்டில்யனும் வருவார். இதறகு மேல் தொடர்ந்தால் உங்களுக்குத் தலை வலி வந்து விடும். அதனால் அவற்றை அடுத்த பகுதிகளுக்கு வைத்துக் கொள்வோம்.



மருத்துவர் இராஜகோபால் அவர்களின் புதல்வரும், என் பள்ளித் தோழனுமான திரு.விஜய கிருஷ்ணன்,

இந்த 53ஆம் இலக்கத்தை ஓரிரு வார்த்தைகளால் கடந்து சென்று விட முடியாது. இரண்டு மருத்துவ சேவையாளர்களை தன்னுள்ளே வைத்து இருந்த இடம். ஒருவர் டாக்டர் நரசிம்மன், மற்றொருவர் எமது பள்ளித் தோழனான திரு. விஜய கிருஷ்ணன் அவர்களின் தந்தை டாக்டர் இராசகோபாலன்.



மருத்துவர் இராஜகோபால் அவர்களின் புதல்வரும், என் பள்ளித் தோழனுமான திரு.விஜய கிருஷ்ணன், பாடும் நிலாவுடன் (இசைத்துறையின் அனைத்து ஆளுமைகளும் இவருக்கு மிக நெருக்கம். அவரின் வேண்டுகோளின் படி நிறைய படங்களைத் தவிர்த்து இருக்கிறேன்)

இவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றாலே இரண்டு அத்தியாயங்கள் போதாது.. இப்ப என்ன? நன்றாக ஆற அமர இருந்து இவர்களைப் பற்றிய சுவையான செய்திகளை அசை போட்டு விட்டுத் தொடர்வோமே? என்ன நான் ரெடி… நீங்கள் ரெடியா?

கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகங்கள் 🙏🙏🙏👏🏻👏🏻👏🏻
    Excellant and lively script, feel travelling together with the memories.

    பதிலளிநீக்கு
  3. Many I couldn't recollect except advocate Balakrishnan, who was my class mate in nsmvps school 1952 -:58 and his father had a shop before then saraswathi theater, selling groundnut plodded and document writer. Later when he became a lawyer I have visited him in that house. Near by was an amma mochai 1/2 anna

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Shanmugam sir ! How are you ? I wonder as to how Sri Muthumani remembers all the old memories. It is simply great. Your friend and Classmate Sri D. Padma-naban had that capacity. One correction. Former Advocate Clerk and then Document writer Sri Muthusami Pillai's eldest son was Bala Subramanian. Not Balakrishnan.

      நீக்கு
  4. நல்ல நினைவுகளை இன்னமும் தாங்கி அதை மற்றவரிடம் பகிரும் அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் பக்க பலமாக உள்ளது ஒரு தனி சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60