எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ??!! - அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 11
அன்பு சொந்தங்களே ...
பழங்கதை
பேசி மார் தட்டிக் கொள்வது ஏற்புடையதா என்ற ஓர் கேள்வி அடிக்கடி நம்முள் ஒலித்துக்
கொண்டே இருக்கும். வீண் என்று சொல்லும் வேதாந்திகளும்
உண்டு. வெந்ததை தின்று விதியே என்று கிடப்போர்க்கு
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ஒரு வேறுபாடும் இல்லை . ஆனால் துவண்டு, நைந்து, நொந்து நூடுல்ஸ் ஆனவர்களை
'ஐயா, எழுந்திரு ..... சிங்கம் நீ... இன்னாரின் வழித்தோன்றல் நீ.. ஆளப்பிறந்தவன் நீ...
அழப் பிறந்தவன் அல்ல ...' என்று தன் வலிமை தனக்கே தெரியாத தம்பியருக்கும் தங்கையருக்கும் அவரவர் உயரம் இத்தகையது என்று எடுத்து
இயம்ப நமது முன்னோரின் தோள் வலியும், துஞ்சா
உழைப்பின் வழியும், அவர்தம் நுண்மாண் நுழைபுலம் பற்றியும் பேச வேண்டி இருக்கிறது.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என மறைந்த நடிகர் விவேக் அவர்கள் பாணியிலே ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளவே தோன்றுகிறது. உண்மையில் நாடு பற்றி பேசும் முன் நமது நகர் பற்றி பேசுவோம். ஒரு இரண்டு தலைமுறை இடைவெளியில் வலிமையில் வனப்பில் மலிந்தோமோ, நலிந்தோமோ, உயர்ந்தோமோ என்று ஒரு மீள் பார்வை பார்க்கும் வேளையில், தனி மனிதனாக சமூக, பொருளாதார நிலையில் உயர்ந்து தான் இருக்கிறோம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு குழுவாக, ஒரு ஊராக கொஞ்சம் கால ஓட்டத்தில் இந்த தேவகோட்டையை ஒரு ஒப்பீடு செய்து விட்டு, நம் நகரை சுய தரிசனம் செய்து விட்டு தொடருவோம் நமது நகர் வலத்தை .
இன்றைக்கு
சுதந்திர இந்தியாவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் சிறிய அளவுகளில் பிரிக்கப்பட்டு
இருக்கும் பொழுது, முன்னேற்றம் முந்தைய நிலையை விட துரிதமாகவும், உயர்வாகவும் இருந்திருக்க
வேண்டும். பதிவின் ஆரம்பித்திலேயே சொல்லி விடுகிறேன், யாரும் இதனை அரசியலாக்க வேண்டாம். கட்சிகளுக்குள் கட்டம் கட்டி தான் சார்ந்து இருக்கும் இயக்கம் தவிர
அனைத்துமே வீண் என்ற வாதப் பிரதி வாதத்திற்கும்
செல்ல வேண்டாம். நகரத்தின் மக்கள் என்ற வகையிலே
நம்மை நாமே சுயமாக ஒரு பார்வை பார்த்துக் கொள்வோமே.
ஏனிந்த
தேவகோட்டையில் மட்டும் 80 ஆண்டுகளுக்கு முன்பாக அதிகமான வழக்கறிஞர்கள் இருந்தனர்? இன்றைய சிவகங்கை , விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்றாக இருந்த ஒருங்கிணைந்த
முகவை மாவட்டத்துக்கே நீதித்துறையில் தலைமை இடமாக விளங்கியது நமது தேவகோட்டை. 1923 ஆம்
ஆண்டு வாக்கில், சார் நீதி மன்றம் (SUB COURT ) தேவகோட்டையில் நிறுவப்பட்டது.
தேவகோட்டை ஜாமீன்தார்களால், வெள்ளையனே வெளியேறு புரட்சியில் தீநாக்குகள் சுவைத்த அருமையான
நிரந்தர நீதிமன்றம் கோட்டை போல் கொத்தளங்களின்
வடிவமைப்புடன் 1930 இல் இன்றைய தியாகிகள்
சாலையில் கட்டப்பெற்றது. நான் உயர் நிலைப்
பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் அந்த சிதிலமடைந்த
கட்டிடத்தினுள் சென்று பார்த்து இருக்கிறேன்.
அத்தனையும் கண்ணாடி போன்ற பளபளவென ஆனால் உறுதியான பூக்கற்கள் . அதே போன்ற அழகுக் கற்களை வட்டாணம் ரோடில் அன்று
இருந்த 'பேலஸ் தபால் அலுவலகத்தின்' சுவர்களிலே காணலாம்.
அதுவும் ஜமீன்தார்கள் கட்டிக் கொடுத்தது.
ஜமீன்தார் இல்லமான லட்சுமி விலாஸ் கட்டிடத்துக்கு கொஞ்சம் முன்னே இருந்தது. அன்பு நண்பர்
'நலந்தா ஜம்பு' அவர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த தியாகிகள் சாலைக்கு நீதி மன்றம் வருவதற்கு முன்னர் புதூர் அக்ரஹாரத்தில் செயல் பட்டுக் கொண்டு இருந்தது. அங்குதான் புகழ் பெற்ற வழக்கறிஞர் 'ஹரிஜன் ரெங்கண்ணா' பெரிய பங்களா போன்ற இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அங்கு தான் மஹாத்மா காந்தி தேவகோட்டை வருகை தந்த போது தங்கினார். இதே சிலம்பணிசன்னதி தெருவில் அவர் மிகப்பெரிய அலுவலகம் வைத்து இருந்தார். நேரம் இருந்தால் சிலம்பணி சன்னதியை விட்டுச் செல்லும் முன் "ஹரிஜன் ரெங்கண்ணா" பற்றிப் பார்ப்போம். பின்னர் இராம்நகரில் நீதி மன்றங்கள் செயல் பட்டன. ஒருங்கிணைந்த பெரிய இராமநாதபுரம் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதி மன்றங்கள் இராமநகர் முதல் வீதியில் தான் இயங்கிக் கொண்டு இருந்தது. நான் தே பிரித்தோ பள்ளியில் பயின்ற சமயங்களில் மதிய உணவு இடைவேளைகளில் இந்த நீதி மன்றங்களுக்குச் சென்று வழக்காடும் நிகழ்வுகளைக் கண்டு இருக்கிறேன். 70களில் தான் மாவட்ட நீதி மன்றம் பலரின் அரசியல் அழுத்தம் காரணமாக சிவகங்கைக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் 1975 ஆம் வருடம், திரு மாதவன் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்த பொழுது இராம் நகரில் இன்றைய அரசு போக்கு வரத்து கழகத்துக்கு அருகில் புதிய கட்டிடங்களுக்கு நீதி மன்ற வளாகங்கள் வந்தன. அதற்கு முன் அந்த இடம் மிகப் பெரிய மைதானமாக இருந்தது. தே பிரித்தோ பள்ளியின் மாணவர்கள் 'ஹாக்கி' விளையாடும் மைதானம் அதுதான். நல்ல கிராவல் தரை. ஹாக்கி விளையாட அற்புதமாய் இருக்கும்.
ஆட்சிப்
பணியிலே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அடுத்த படியாக சப் கலெக்டர் அலுவலகம்
என்னும் துணை மாவட்ட ஆட்சியர் அமர்ந்து இருந்த இடமும் நமது நன்னகரம் தான்.
அதை
விட முக்கியமான ஒரு பதிவு... தமிழகத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட நகராட்சிகளில் தேவகோட்டையும்
ஒன்று. இன்னும் நமது பெருமை என்று சொல்லிக்கொள்ள
அப்படியே கையை விட்டுக் கழறாமல் இருப்பது 60 ஆண்டுகளுக்கும் முன்னதாக ஏற்படுத்தப்பட்ட
'தேவகோட்டை கல்வி மாவட்டம்' என்பது மட்டுமே.
இருந்தும் என்ன பயன் ?
மருத்துவம்,
வேண்டாம். அனைத்து நீதி மன்றங்கள் அமைந்து இருந்த ஊராக இருந்த போதிலும்
ஒரு சட்டக்கல்லூரி கூட வர முடியவில்லை. சமீபத்தில்
அறிவித்த சட்டக் கல்லூரியும் கூட காரைக்குடி சென்று விட்டது. ஊரெல்லாம்
சீமைக் கருவேல மரங்கள் போல பொறியியல் கல்லூரிகள் பொங்கி படரந்திருக்கும் வேளையில்,
நமது நகரில் மட்டும் பொறியியல் படிக்கக் கூட ஒரு கல்லூரி இதுவரை அமைய வில்லை.
ஒரு
சமயம் தேவகோட்டை பாரில் (Bar) 140 வக்கீல்கள் இருந்தனர். (இன்றும் பாரில் அதை விட அதிகம்
பேர் இருக்கிறார்கள் ...என்ன ஒரு வித்தியாசம்.. இன்றைக்கு டாஸ்மாக் பார்.) நிறைய வக்கீல்கள் வசித்த வடக்கு சிலம்பணி அறிவாளிகள்
தெரு என்று உணரப்பட்டது. சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தேவகோட்டைதான் லண்டன். ஆனாலும்
அந்த கால கட்டத்தில் கோயில் திருவிழாக்களைத் தவிர வேறு முன்னேற்ங்களைப்பற்றிக் கவலைப்
பட்டதில்லை. இப்போது அப்படியல்ல. எல்லா ஊர்களுடனும் தேவகோட்டையும் போட்டி போட்டுக்கொண்டு
முன்னேற வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயற்கை.
மத்திய மாநில அரசுகள் வருடம் தோறும் எத்தனையோ புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிக்கின்ற போதும் ஒரு தொழில் துறையோ, தொழிற்சாலைகளோ நமது நகருக்கு இத்தனை ஆண்டுகளாக வராமல் இருப்பது சாபக்கேடு என்று வாளா இருந்து விட முடியாது.
வளர்ச்சி இருந்தது. ஒரு 45 வருடங்களுக்கு முன்பு....நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில்...
சேவுகன்
அண்ணாமலை கலைக்கல்லூரி
வட்டார
வளர்ச்சி அலுவலகம்
இராம்நகரில்
புதிய நீதி மன்ற வளாகம்
என்று சில வளர்ச்சிப் பணிகளை நகரம் கண்டது. அதன் பிறகு ஒன்றையும் காணோம். மக்கள் வாழக்கைத் தரம் முன்னேறி இருக்கிறது என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. ஆயின் இது நமது நகருக்கு மட்டும் அன்று. நாடு முழுவதும் , உலகப் பொது மயமாக்கலால் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றம். நமது நகரைப் பொறுத்த வரை எந்த வித புதிய அடைப்படை வசதிகளோ அல்லது மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளோ கடந்த 40 ஆண்டுகளில் நடை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்தப் பதிவுகளை வாசிக்கும் இளம் காளையர் தங்கள் முன்னோர்களின் வாழ்வியலை மனதில் ஏற்றி, அன்றைய நிலையை விட நகரை மேம்படுத்தினால் இந்தப் பதிவுகளும் அனுமன் படை கட்டிய ராம சேதுவில் ஒரு அணிலாக நிற்கும்.
சரி நமது ஊர் சுற்றலைத் தொடர்வோம். சென்ற பகுதியில் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில் சமையலர் (ஸ்வயம்பாகி ) சுப்ரமணிய அய்யர் வீடு வரை வந்தோம். இதை அடுத்து ஒரு அழுக்கான சந்து. அதை ஏன் அழுக்கு என்று மூடி மறைப்பானேன்.? மூத்திர சந்து நமது பாஷையில்...
அதனை
அடுத்து வருவது சிதம்பர விநாயகர் தேவஸ்தான கட்டிடத் தொகுப்பு. இதனை அடுத்து (மேற்கு நோக்கி நடக்கிறோம் ) வருவது தமிழ் நாட்டின் இலக்கிய உலகில் மிகப்பெரும் ஆளுமையாக விளங்கிய ஒருவர் அடிக்கடி வந்து போன இடம்.
இவரைப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது அல்லவா ..
காத்துக்
கிடைப்பதில் இன்பமுண்டு காக்க வைப்பதில் சுகமுண்டு ..
கொஞ்சம்
ஆவலுடன் பொறுங்கள்....
இந்த
வீட்டில் அட்வகேட் திரு.C.ஸ்ரீநிவாசன் அய்யங்கார் இருந்தார். இதற்கு அடுத்த இல்லத்தில் இவரது ஒன்று விட்ட சகோதரரான
திரு.R .ஸ்ரீனிவாச அய்யங்கார் இருந்தார். இந்த
R.ஸ்ரீனிவாசன் தேவகோட்டை நீதி மன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். இதில் சுவையாகக் குறிப்பிட வேண்டியது, இந்த நீதி
மன்ற குமாஸ்தா திரு .R .ஸ்ரீனிவாசன் பிறந்த தேதி 01-01-1900. இன்றைக்கு சரியாக 121 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தை
நாம் பதிவு செய்கிறோம் நட்புறவுகளே. இரண்டு
ஸ்ரீனிவாசன்கள் அடுத்து அடுத்து அதிலும் சகோதரர் முறையில் இருந்ததனால் வழக்குரைஞர்
C.S. என்றும் குமாஸ்தா R.S . என்றும் அழைக்கப் பட்டார்கள்.
இந்த
R.S . ,பெரிய சாமண்ணா என்றும் அழைக்கப்பட்டார்.
திரு.R.S . இன் தகப்பனார் திரு. தங்கம்
அய்யங்கார் நீதி மன்றத்தில் சிரேஷ்டதார் ஆக இருந்தார். சிரேஷ்டதார் எனும் வார்த்தை பெர்சிய மொழியில் இருந்த
கடனாகப் பெற்ற வார்த்தை . சிரேஷ்டதார் என்பவர்
செசன்ஸ் மற்றும் மாவட்ட நீதி மன்றங்களின் முதன்மை நிர்வாகியும், மாவட்ட நீதி பரிபாலனத்தின்
பொறுப்பாளரும் ஆவார். முதன்மை மாவட்ட நீதி
மன்றங்களிலும் , துணை நீதி மன்றங்களிலும் இருக்கின்ற சிரேஷ்டதார் என்ற பதவிதான் உயர்
நீதி மன்றத்தில் 'பதிவாளர்' (Registrar General ) என்ற பதவியாக இருக்கிறது. எவ்வளவு பெரிய உயர் சக்திகளைக் கொண்ட பெரு மக்கள்
சர்வ சாதாரணமாக நமது நகரில் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள் பாருங்கள். அந்தப் பதவிகளுக்கு ஏற்ற வகையில் சாதுர்யமும், புத்திக்
கூர்மையும் உள்ளவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இந்த தங்கம் அய்யங்கார் தனது உயர்ந்த
பதவியினால் தனது சுற்றங்கள் பலரையும் நீதி மன்ற அமீனாக்களாகவும், குமாஸ்தாக்களாகவும்
நியமனம் செய்ய வைத்தார். ( இந்த நிலைமை இன்று மாறி விட்டது என்று சொல்லுகிறீர்களா?)
இப்படியாகப்பட்ட
பெரிய சாமண்ணா, 1950களில் பணி மூப்பில் நகரை
விட்டு சென்று விட்டார். அதே இல்லத்துக்கு
வந்தவர் அட்வகேட் K.செல்வரெத்தினம் பிள்ளை. அவரது தம்பி திரு.K.சுந்தரராஜ பிள்ளை அப்போது
கல்லூரி மாணவர். பின்னர் அவரும் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். எங்களது காலத்தில் இந்த சுந்தரராஜ பிள்ளை சிலம்பணி
மேல் கரையில் அலுவலகம் அமைத்து இருந்தார்.
நம்மில் பலருக்கும் நினைவு இருக்கலாம், இது பற்றிய நினைவுகளைப் பகிருமாறு வேண்டுகிறேன்
அதனை
அடுத்தது கோவில் குருக்களின் வீடு. அதை அடுத்து
.E.O. சுப்பிரமணியம் அவர்கள் இல்லம். அடுத்து தேவஸ்தான அலுவலம் சார்பில் திருமணங்கள்
போன்ற சுப காரியங்கள் நடைபெற தேவஸ்தானத்தால் அமைக்கப்பட்ட திருமண மண்டபம் போன்ற இடம். பல திருமணங்கள் நடந்தேறிய இடம். இன்று சிதிலமடைந்து
கிடப்பதாக அறிந்து மனம் வேதனை உற்றது. அடுத்து பழனி பாத யாத்திரை வரும் அன்பர்கள் தங்கி
முருகனை தமிழால் பாடி வழிபாடுகள் நட்த்தும் இடம்.
இன்றும் அந்தக் கட்டிட்த்தின் வெளிப்பகுதியில் பாத யாத்திரை பஜனைகள் நடை பெறுகின்றன.
நாகாடி சுப்பிரமணியம் சேர்வை அவர்களை பலரும் E.O. என்றால்
தான் அறிவார்கள். சிலம்பணி சிதம்பர விநாயகர்
கோவிலின் செயல் அதிகாரியாக (EXECUTIVE OFFICER ) ஆக இருந்ததனால் அவரை EO என்ற பெயரிலேயே
அனைவரும் அறிவர். நாகாடி திரு.இராமசாமி சேர்வை
அவர்களின் மகனான திரு.சுப்பிரமணியன் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் இன்டர்மீடியட்
பயின்றார். அப்போது இவரது வகுப்புத் தோழர் நமது மதிப்பிற்குரிய ஐயா அட்வகேட் வெங்கடபதி
அவர்கள். அதன் பின் சுப்பிரமணியர் B.A . நமது
வெங்கடபதி ஐயா அவர்கள் B.Sc ., அந்தக்காலத்தில்
வக்கீல் ஆக வில்லையேல் B.T. முடித்து ஆசிரியப்
பணிக்கு செல்வது என்பது ஒரு பார்முலா.
அதைப் பின்பற்றி ஐயா சுப்பிரமணியம்
அவர்கள் B.T . முடித்து சிறிது காலம் ஆசிரியப்
பணியில் இருந்தார். பின்னர் சிதம்பர விநாயகர் தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக
பொறுப்பேற்று பல முக்கிய பணிகளை செய்தார்.
வெள்ளையன் ஊரணி பிள்ளையார் கோவில் அதைச் சுற்றி இருக்கும் மார்க்கெட் மற்றும்
கடைகள் அனைத்தும் சிலம்பணி சிதம்பர விநாயகர்
ஆலயத்தின் சொத்துக்கள்.
எனது
உடன் பிறவாச் சகோதரன், எனது கல்லூரித் தோழர் திரு.துரை.பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு
ஜவுளிக்கடை 'மாணிக்கம் துரைராஜ் பிள்ளை ஜவுளிக்கடை' வெள்ளையன் ஊரணி தெற்கு , வெ .ஊரணி கிழக்கை வெட்டும் இடத்தில் இருந்தது. கடைக்கு எதுவும் சேதம் இல்லை. இருந்த போதும் தீ விபத்து காரணமாக கடைகளை மீளத்
திறப்பதற்கு நாள் ஆகும். அந்த இடைவெளியில்
பழைய கட்டிடத்தை சிமெண்ட் கட்டிடமாகக் கட்டி விடலாம்.. எப்போதும் போல தேவஸ்தானத்துக்கு
இட வாடகையை செலுத்தி விடலாம் என்ற யோசனையோடு
EO சுப்பிரமணியம் அவர்களை அணுகிய போது இடையில்
இருந்த நந்திகள் குறுக்கிட்ட வேளையில் , அவர்களைச்
செவி மடுக்காது, தேவஸ்தானத்து வருவாய்க்கு எந்த இடையூறும் இல்லையா? பல வருடங்களாக அதே இடத்தில் இருந்து வருகிறார்களா
... அவர்களுடைய வசதிக்கு ஒத்துப்போவதில் என்ன பிரச்னை என்று உடனே 'ஒப்புகை' கொடுத்து
விட்டார் என்று திரு பழனிச்சாமி அவர்கள் EO பற்றி நினைவு கூர்ந்தார்.
EO சுப்பிரமணியம் அவர்களின் அனைத்து மக்களும் நல்ல அறிவாளிகள், உழைப்பாளிகள் . நான்கு ஆண் மக்கள்.2 பெண்டிர். மூத்தவர் திரு. சண்முகம் வழக்கறிஞர் .. அடுத்தவர் டாக்டர் சதாசிவம், எனது பேட்ச், மற்றும் எனது பள்ளித்தோழர் விஜய கிருஷணன் அவர்களின் புகு முக வகுப்பு நண்பர். தேவகோட்டையில் மருத்தவ சேவையில் இருக்கிறார். அடுத்து திரு.சங்கரன் அவர்களும் மருத்துவர். அடுத்தவர்... பெயர் தெரியவில்லை அவரும் மருத்துவர்.. கனடா நாட்டில் இருக்கிறார். பெண்களில் ஒருவர் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தரான திரு.சுப்பையா அவர்களின் இல்லத்தரசி. மற்றவர் பற்றிய விபரம் அறியேன்..
பின்னர்
திரு சுப்பிரமணியம் அவர்கள் காரைக்குடி அருள்மிகு
கொப்புடைய அம்மன் ஆலயத்தின் செயல் அலுவலராக இருந்தார். பணி மூப்புக்
காலம் வரை அங்கேயே இருந்தார்.
ஆம் அவர்தான் சரித்திரக் கதைகளின் பிரம்மா, வரலாற்றை நம் கண் முன்னே காட்சிகளாய் விரிவு படுத்திய ஆளுமை. தமிழகத்தில் அவரது எழுத்துக்கள் கடல் கடந்த தமிழரின் பழைய வரலாற்றை மீட்டு எடுத்தது. அவரது எழுத்துக்களை நம்மில் பலரும் படித்து இலயித்து அந்தக் காலத்துக்கே சென்று இருப்போம்..
Excellent....
பதிலளிநீக்கு