அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 14- சிலம்பணி படித்துறை

 அன்பு சொந்தங்களே ...

இந்த சிலம்பணி சன்னதி தெருவை விட்டுச் செல்வதற்குள் சில விட்டுப்போன சில செய்திகளை மட்டும் பார்த்து விட்டுச் செல்வோம். .சன்னதி தெருவில் மருத்துவர் திருமதி.அமுதா காசிநாதன் அவர்களின் மருத்துவமனைக்கு அடுத்து ஒரு வீடு. இது அன்றைய நாளில் தேவகோட்டை நகரில் பிரபலமாய் விளங்கிய R.R.M. பாண்டியன் பிஸ்கட் பேக்கரி உரிமையாளர் அவர்களின் வீடு. அதை அடுத்து இருக்கின்ற கட்டிடமும் மருத்துவர் அமுதா காசிநாதன் அவர்களுடையது. அதனை அடுத்து ஒரு சுற்றுச்சுவர் எழும்பிய இடம் அதிக காலமாக அப்படியே கிடக்கிறது.
நாம் முந்தைய பகுதிகளில் சந்தித்த அட்வகேட் திருவாளர் வேங்கடபதி அவர்களுடன் நகரத்தார் உயர் நிலைப் பள்ளியிலும் அதன் பின்னர் இன்டர்மீடியட்டும் பயின்றவர் திரு.VR.சண்முகம் அவர்கள். அதன் பின்னர் சண்முகம் அவர்கள் தமிழில் முதுகலை பட்டம் பெற்று, தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்தார்.
தேவகோட்டை, காரைக்குடி மற்றும் புதுவயல் இந்த ஊர்களில் வீரபத்திர பிள்ளை மரம் ஓடு வியாபார நிறுவன்ங்கள் அன்றைக்கு மிகச் சிறப்பாக விளங்கின. தேவகோட்டை நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்தை ஒட்டி மிக விசாலமாய் கம்பீரமாய் நின்று இருந்தது. திருப்பத்தூர் சாலையில் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருந்த இந்த நிறுவன வாசலில் பெரிய ஆலமரம். ஆலமரத்தின் கீழே திரிசூல வடிவில் நிற்கும் முனீசுவரர். இப்போது பழைய பதிவுகளின் ஒர் நினைவூட்டல். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கினால் வரும்.
வீரபத்திர பிள்ளை அவர்களின் மறைவுக்குப் பிறகு, தேவகோட்டை கடை இருந்த இடம் மூத்த மகனான VR.பாலசுப்பிரமணியன் BA.BT. அவர்களுக்கும், காரைக்குடிக் கடை திரு.VR.சண்முகம் அவர்களுக்கும் புதுவயல் கடை கடைசிப்புதல்வருக்கும் சென்றன.

சரி இந்த வீரபத்திர பிள்ளை மரக்கடைக்கும் சிலம்பணி சன்னதிக்கும் என்ன தொடர்பு?
மருத்துவர் அமுதா காசிநாதன் இல்லம் ஒட்டிய இடங்கள் வெகுகாலமாக அப்படியே கிடக்கின்றது. இது வீரபத்திர பிள்ளை அவர்களின் உரிமை ஆகும், என்கிற ஒரு செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. எதையும் எழுதுவதற்கு முன்பு பல முறை கிடைக்கின்ற மூலங்கள் மூலம் சரி பார்த்துக்கொள்வது எனது வழக்கம். வரலாற்றுப் பதிவுகள் என்ற காரணத்தால், தவறான தகவல்களை எழுதுவதை விட எதையுமே எழுதாமல் இருப்பது மேல் அல்லவா. ஆனால் நமது தேவகோட்டை திருக்கூட்டத்தில் அவ்வளவு எளிதில் எவரும் தவறான தகவல்களை பதிவு செய்து விட இயலாது. ஒரு பிடி பிடித்து உலுப்பி எடுத்து விடுவார்கள். இந்த இடம் பற்றி விசாரணை செய்த பொழுது தெரிந்தது இந்த இடம் தனியார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. இதன் சொந்தக்காரர் சிலம்பணி சிதம்பர விநாயகப் பெருமகன்னர் என்பது. இருந்த போதும் வீரபத்திர பிள்ளை பற்றிய எண்ணங்கள் மனதோடு ஓடியதால் எழுதிய அந்தப்பகுதியை நீக்காமலேயே பதிவை பரிமாற்றம் செய்து விட்டேன்.
அப்படியே சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலைச் சுற்றி பின்புறமாகச் சென்றால்,
அருமையான
சிலம்பணி ஊரணி. அன்றைக்கு இது ஊர் உண்ணும்,நீர் கொடுக்கும் ஊருண்ணியாக அதாவது உரணியாக இருந்தது.. பால் போல் வெண்மையான சுத்தமான தண்ணீர். யாரும், கோவில் குளத்தில் இறங்கிக் கால் நனைத்து விட முடியாது, கோவிலின் பின் புறம் உள்ள படித்துறை எங்களுக்கு ஒரு காலத்தில் மாலை வேளைகளில் நட்புக்களின் சங்கம் ஆக விளங்கியது. வருகைப் பதிவேடு இல்லாத குறைதான். அவ்வளவு ஒழுங்காக தினசரி கூடும் நட்பின் கூடம். படிக்கட்டுகள் பள்ளி இருக்கைகள் (பெஞ்சுகள்).






இந்தத் தொடர் பல நட்புக்களை, இழந்த சொந்தங்களை இனிமேல் நினைவில் மட்டும் என்றோ தலை காட்டும் சில மனிதர்கள் என்று நாம் நினைத்து இருந்தவர்களை எல்லாம் மீட்டெடுத்துத் தந்து இருக்கிறது. அதிலும் நடந்த சில நிகழ்வுகள் இறையருளின் திருவருள் எவ்வளவு மேன்மையானது என்பதனை விளக்கும். எந்தெந்தத் பகுதிக்கு நான் தேவகோட்டையில் நகர்வலமாக நகர்கிறேனோ அந்தந்தப் பகுதிகளில் எத்தனையோ வருடங்களுக்கு முன்பாகச் சந்தித்த மனிதர்களின் நினைவுகள் நிழலாகத் தலை காட்டும். கொஞ்சம் இறங்கி விசாரிக்க ஆரம்பித்தால் பரமபத விளையாட்டின் ஏணி போல சட்டென்று எதிர்பாராத வண்ணம் ஒரே ஏற்றமாக ஏற்றி விட்டு சரியாக நிழலாக மனதில் நின்றவர் வீட்டுக் கதவையே என்னைத் தட்ட வைக்கும்... இப்படிப்பட்ட பல அதிசயங்களை தொடர்ந்து கொடுத்து வருவதற்கு நமது அனைவரது எண்ணமும் ஒரே புள்ளியில் இந்த தேவகோட்டை என்ற தாயின் மடி தேடி நிற்பதனால் தான் இருக்க வேண்டும்.



எனது பால்ய வயது நண்பன். அவரது பாட்டனார் திண்ணன் செட்டி ஊரணிப் பகுதியில் அந்த நாட்களில் வணிகத்தில் சிறந்து விளங்கிய திருவாளர்.அழகு செட்டியார் ஆவார் . பள்ளிப் பருவத்திலேயே அந்த நண்பன் திரு.இரவிச்சந்திரனை அறிவேன். பிறகு கல்லூரியில் நான் வணிகவியல் பயிலும்போது எங்கள் நெருக்கம் அதிகமானது. அன்பு நண்பர் 'அறிவியல்' புலம் என்ற போதும் அவரது நட்பு அதிகமாக 'வணிகவியல்' புலம் பயிலும் எம்மோடு தான். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் .
ஏனெனில் எனது
• தொடக்கப்பள்ளி வகுப்புத் தோழன், இராம.செந்தில்நாதன் ( இவரது தந்தையார் திரு இராமலிங்கம் சக்தி ரோடுவேஸ் நிறுவனத்தின் மேலாண்மை பணியில் இருந்தவர்),
• உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழர் மாவீரர் அமரர் ரூசோ,
• மாப்பிள்ளை ஆரோக்கிய செல்வ குமார் (பள்ளியில் இருந்து கல்லூரி வரை வகுப்புத் தோழர்,, இன்றும் தொடரும் பந்தம்)
• மாந்தோப்பு தெருவைச் சேர்ந்த (அருணா திரை அரங்கம் எதிரில் இவரின் இல்லம் ) எனது கல்லூரி வகுப்புத்தோழன் மாப்பிள்ளை அமரர் மீனாட்சி சுந்தரம் என்ற கருணாநிதி,
• திருப்பத்தூர் சாலையில் முச்சந்தி முனீசுவரர் கோவிலுக்கு இடது புறம் அமைந்துள்ளது இல்லத்தை சேர்ந்த எனது தோழர் அருணாசலம் ( இவர் அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்ததுள்ள அருள் மிகு வெங்கடேசுவர் ஆலய நிர்மாணப் பணிகளில் பணி புரிந்தவர்) அவர்களின் தம்பி சுப்பிரமணி,
• எனது பகுதியான மானாமதுரையை பூர்விகமாகக் கொண்ட அன்றைய தேவகோட்டையின் வழக்கறிஞர் முகுந்தன் அய்யங்கார் அவர்களின் பேரனான திரு இராம்ஜி ...



இவர்கள் எல்லாம் ஒரு குழு. இந்த வகையில் ஒவ்வொருவருடனும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாய நூல் பின்னி இருந்தது. இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக தினசரி சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலின் பின்புறம் படித்துறையில் கூடுவார்கள். என்னால் தினசரி கட்டுக்கு சென்று சேர இயலாது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயன்ற வரை சங்கத்தில் சேர்ந்து கொள்வேன்.




இவர்களில் நண்பர் இரவி அவர்கள் வணிகவியல் மாணவர்களான நாங்கள் செல்லும் சுற்றுலாவுக்கு கூட அறிவியல் புல மாணவராக இருந்த போதிலும் சேர்ந்து வருகிறவர். கல்லூரி நாட்களுக்குப் பிறகு இவரை நான் சந்திக்கவே இல்லை. அதன் பிறகு அவர் பட்டயக் கணக்காளர் ஆனார் என்று தெரியும். மற்ற நண்பர்கள் அவருடன் பழக்கத்தில் இருந்தனர். நான் மட்டும் அவரை ஏறக்குறைய 40 ஆண்டுகளாக பார்க்கவே இல்லை. நமது கடைசிப் பதிவில் சிலம்பணி சன்னதி தெரு பற்றி விவரிக்கின்ற வேளையில், அவரது சொந்த இல்லம் சன்னதி தெருவில் 'அன்பு மருத்துவமனை' வரிசையில் இருந்தது நினைவுக்கு வந்தது.



கொஞ்சம் முயற்சி செய்து அவரை தொடர்பு கொள்ள எத்தனித்தேன். ஒரு வழியாக 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரை கண்டு பிடித்து விட்டேன். பிரிந்தவர் கூடினால் ... பேசிக்கொண்டே இருந்தோம்.
மாப்பிள்ளை செந்தில் எம்முடன் 10 வயதில் இருந்து இணைந்து இருக்கிறார். விட்டுப்போன தொடர்பு ஓர் 17 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் நடந்து சென்றதை பார்த்து விட்டு பின் தொடர்ந்து ஓடியதில் மீண்டு தொடர்ந்தது.
என்னுடன் தே பிரித்தோ பள்ளியில் இருந்து உடன் பயின்ற அன்பு நண்பன், ரூசோ. கல்லூரி முடித்து விட்டு அவரவர் குடும்பமாக ஆன பின்னும் கூட, சிலம்பணி ஊரணி படித்துறையிலும் , பேருந்து நிலையத்துக்கு எதிரே இருக்கும் சாலையில் (குதிரை வண்டி) இருந்த சிலையப்பன் மிதி வண்டி கடையிலும், அப்படி சந்திக்க இயலாத காலங்களில் அவரின் 'மாதா மெடிக்கல்ஸ் கடையிலும், நான் மருது பாண்டியர் போக்கு வரத்துக்கு கழகத்தில் பணி புரிந்த 1988 (தேவகோட்டையில் இருந்த) வரை சென்று சந்தித்து வந்து கொண்டு இருந்தேன். அதன் பிறகு கடல் தாண்டி இருந்த பொழுதும் செய்திகள் மட்டும் வரும். கடைசியில் அவரது அமரத்துவ செய்தியினை இங்கே இந்தோனேசியாவில் தொலைக்காட்சியில் கண்டு கலங்கினேன். இன்று போல தொலைத் தொடர்பு சுலபமாக இல்லாத காலம்.




மாப்பிள்ளை மீனாட்சி சுந்தரமும் இந்த கொரோனாவின் கோரப்பிடியில் இந்த வருடம் மண் விட்டு விண் சென்று விட்டார். நோய் வாய்ப்படும் வரை தொடர்பில் இருந்தார். எனது கவிதைகளையும், எழுத்துக்களையும் வெகுவாகப் பாராட்டி என்னை உயரத்தூக்குவதில் அவருக்கு அலாதி ஆனந்தம். பிள்ளை குணம் கொண்ட நல்ல மனம்.
திருப்பத்தூர் சாலை சுப்பிரமணியனும் காலமாகி விட்டார் எனக் கேள்வியுற்றேன். இவர் 80களில் 'லிபியா' நாட்டில் பணி புரிந்தார். அதனால் அவரை லிபியா என்றே அழைப்போம்.
இப்படி ஒவ்வொரு மட்டைகளாக உதிர்த்துக் கொண்டேதான் காலம் என்னும் மரம் கழு மரமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. உதிர்த்த வடுக்களாய் நமது நினைவுகள் சில காலம்.. அதன் பின் அதுவும் இயற்கையில் காற்றில் கலந்து விடும்...இந்த வாழ்க்கைக்குத்தான் இத்தனை பாடு.. பொய், களவு, பித்தலாட்டம்... சரி.. சோகத்தில் மூழ்க வேண்டாம்... மீண்டு பயணிப்போம் ...
சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயம் விட்டு வெளியேறும் போது ஒரு குழப்பம்… தொடர்ந்தகர் ஊர் சுற்றுதலை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலுக்குப் பின்புறம் மேற்கு நோக்கி சென்று சிலம்பணி அக்ரஹாரம் செல்வதா அல்லது கோவிலின் வலது பக்கம் திரும்பி வெள்ளாள தெருவில் நுழைந்து மீண்டும் தியாகிகள் சாலை வருவதா என்று? முன்பு ஒரு முறை நான் குறிப்பிட்ட ஊர் சுற்றுகிற நாய்க்கு நிற்க நேரம் இல்லை என்ற நிலைதான் எனக்கும்…. இதற்கிடையில், லட்சுமிபுரம் மேற்குத் தெரு பக்கம் போவோமோ என்ற சின்னத் தடுமாற்றம் வேறு….
இந்த இடத்தில் அதாவது இலட்சுமிபுர அக்ரஹார முனையில் நிற்கும் போது மனம் மட்டும் ஒரு எட்டு அந்த வீதிக்குள் நினைவுகளின் காற்று போக்கில் ஓடியது. இந்த தெரு தெற்கில் ஒரு பொட்டலில் போய் நிற்கும். அங்கு ஒரு கிணறு இருந்தது. அன்று அது ஊருக்கு நீர் வழங்கும் கேணி. சர்க்கார் கேணி என்றே பெயர். அந்தப் பொட்டல் பற்றி பின்னர் பாப்போம், அதன் மேற்கில் TVS பணி மனை மற்றும் கிளை அலுவலகம் இருந்தது. அங்குள்ள பேருந்துகள் பிற நிறுவங்களின் பேருந்துகளை சேர்த்து அரசு மயமாக்கப்பட்டன. இந்த வீதியில் ஒரு நண்பன் என்னோடு கல்லூரியில் புகு முக வகுப்பு பயின்றாரே? அவர் பெயர் ராஜன். ஆம்.. கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்து விட்டது.... இந்த என் நண்பனின் தாயார் வீணை வாசிக்கும் காலை வாணி. இவர் வீட்டு மாடியில் அந்த வீணை கம்பீரமாக வீற்றிருக்கும்...ஓரிரு முறை அந்த வீணையின் தந்திகளை மீட்டிப் பார்த்து இருக்கிறேன். அடே... யப்பா இவ்வளவு பெரிய வாத்தியத்தை எப்படிக் கையாளுகிறார்கள் என்ற வியப்பு ஒன்றே மேலிட்டது. எனது விரல்களின் கடின வறண்டுதல்களுக்கு (வருடல்கள் அல்ல ) டொய்ங் ....ங்க் ... என்று ஒரு சத்தம் போட்டு என்னை மிரட்டி விட்டு மீண்டும் அமைதி யாகி விட்டது அந்த பொல்லாத வீணை..
'நான்... யார்.... உன்னை மீட்ட...?' என்று வசந்த மாளிகை திரைப்பட வாணிஸ்ரீ யாக மாறி பேசாமல் கீழே இறங்கி வந்துவிட்டேன். அந்த அன்னையின் பெயர் திருமதி சரோஜா... நன்றாகப் பாடுவார். ஆல் இந்திய ரேடியோவில் நிகழ்ச்சிகள் செய்து இருக்கிறார். என்னையும் அவரது மகன் ராஜனையும் காரைக்குடி அருணாச்சலா (இப்போது அனந்த் ?) திரை அரங்கத்திற்கு 'யாதோன் கி பாரத்' இந்தி திரைப்படம் காண அழைத்து சென்றார். இடைவேளையில் கோன் ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.. வருடம் 1975...என் நினைவு சரியாக இருக்குமானால்……



இந்த எண்ணங்களுடன் இவர் தற்போது எங்கே இருப்பார்? எப்படி இருப்பார் ? யாரிடம் கேட்கலாம்? பல கதவுகளைத் தட்டினேன்... பலருக்கும் தெரியவில்லை. கடைசியில் 1960களின் தேவகோட்டை சிலம்பணி வடக்கு அக்ரஹாரத்தில் வாழ்ந்து பின்னர் சென்னைக்கு பெயர்ந்த திருவாளர் சௌமிய நாராயணன் ஸ்ரீநிவாசன் அவர்களைக் கொஞ்சம் நம்பிக்கையுடனேயே தொடர்பு கொண்டு விசாரித்தேன்.

திருவாளர் சௌமிய நாராயணன் ஸ்ரீநிவாசன்

இந்த அன்பு உள்ளம், நமது அட்வகேட் வெங்கடபதி அவர்கள் மூலமாக நட்பானார். அப்படியே பொத்துக்கொண்டு ஊற்றுகிற ஐப்பசி மேகமாய் என் தேடுதல் பசியை தீர்த்து வைத்தார் அவர். கடைசியில் இந்த இராஜனின் தகப்பனார் நமது நண்பருக்கு அதை மகனாம் நண்பன் ராஜன் அவர்களின் தொடர்பு எண்ணையும் தந்து பசிக்கு சோறு கேட்ட எனக்கு பாயசத்தோடு பரிமாறினார்... நான் தேடிய இந்த இராஜனின் தந்தையார் இந்த சௌமிய நாராயணன் அவர்களின் அத்தை மகனாம். கள்ளிக்கோட்டையார் வீதியில் டால்மியா சிமெண்ட் முகவராக இருந்தார். அவரது கிடங்கு இந்த கள்ளிக்கோட்டையார் வீதியில் இருந்தது. என்று நினைவுகளை பகிர்ந்தார.
இதற்கு முந்தைய பதிவுகளில் 10 ஆவது பகுதியில் சிலம்பணி சன்னதி தெருவில் அமைந்து இருந்த வருமான வரி தாக்கீது செய்யும் சேவை அலுவலகம் நடத்தி வந்த திரு. இராமானுஜம் அய்யங்கார், அவருக்கு பின் ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தொடர்ந்து வந்த திரு. இராகவன் (தி. ஊரணியை சேர்ந்தவர்) அதன் பின் ஆடிட்டர் துரை இவர்களை கண்டோம். இந்த இராமானுஜம் அய்யங்காரின் வளர்ப்பு மகள் தான் என் நண்பன் இராஜனின் தாயார் திருமதி சரோஜா அம்மையார்.
நண்பர் இராஜனின் தொலை பேசி எண்ணை வழங்கினார். இங்கே தான் பெரிய திருப்பம். நண்பர் ராஜனைத் தொடர்பு கொண்டேன். வேடிக்கை என்னவென்றால் சென்னை கொரட்டூரில் எனது இல்லம் 1996 ஆம் ஆண்டு முதல் இருக்கிறது. அந்த வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில்தான் இந்த இராஜன் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். அருகாமையில் வசித்தும் கூட ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்து இருக்கிறோம். வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைகிறார் என்பார்களே... அது போல அவரை அருகில் வைத்துக் கொண்டு பல இடங்களில் தேடி இருக்கிறேன்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ....ஞானத்தங்கமே ...
அவர் ஏதும் அறியாரடி ...ஞானத்தங்கமே ...

இந்த நினைவுகளுடன் ஒருவழியாக மனதோடு பேசிக்கொண்டு சிலம்பணி தெற்குத்தெரு வழியாக செல்வோம் என்ற தீர்மானத்தோடு அந்த வீதியில் நடையைக் கட்டுவோம்..
என்ன சரி தானே? இந்த சிலம்பணி தெற்குத்தெருவில் என்றும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய, மறக்க்க் கூடாத ஆளுமைகள், திருவாளர்கள், பரஞ்சோதி பிள்ளை, நீதியரசர் கற்பக விநாயகம் சகோதரர்கள் குடும்பம் என பல நினைவுகளும் நிகழ்வுகளும் காத்து இருக்கின்றன...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60