அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 15
அன்பு சொந்தங்களே
...
இந்தக் கார்த்திகை மழைச் சாரலோடு
சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயத்தின் வலது புறம் திரும்ப எண்ணி இருக்கும் போது, அதே சன்னதி
தெருவின் இடது வரிசை வீடுகளின் அருகே அன்றைக்கு பெய்த இசைச்சாரல் இனிமையாக நம்
காதுகளில் ஒலிக்கிறது. இதற்கு முந்தைய
பதிவுகளிலும் பட்டும் படாமல் சிலம்பணி சன்னதியில் விடாது ஒவ்வொரு வருடமும் நடை
பெற்றுவந்த 'தியாகப் பிரம்ம உத்சவம்' பற்றிக்
குறிப்பிட்டு இருந்தோம். மருத்துவர்
வைத்தியநாதன், வழக்கறிஞர் ராமசாமி அய்யர், ஆசிரியர்கள் பத்மநாபன், சோமசுந்தரம் இன்னும் பலர் சேர்ந்து இன்னிசையாய், இராக வடிவாய்
வாழும் தியாகராஜரின் விழாவினை தியாகப் பிரமோத்சவம் என்ற பெயரில் பதினோரு நாள்
நிகழ்வாக வருடந்தோறும் நடத்தி வந்தார்கள். அதிலும் ஆசிரியர் அமரர் பத்மநாபன் இந்த
நிகழ்வுகளில் மிகுந்த அக்கறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார்.
கார்த்திகை மாதம் கார் காலம்...ஐப்பசி அடை
மழைக்காலம்...பல வருடங்கள் பெய்யாது பொய்க்கும் மழை சில ஆண்டுகளில் பேய்
போல் இறங்கி ஒரு 'காட்டு காட்டி' விட்டுத்தான் ஓயும், இந்த 2021 வருட மழை
போல. தமிழகத்தில் மழையாய் ஆரம்பித்து புயலாய் வந்து தாக்கிய வருடங்கள் 1956 அதன் பின்னர் 1964. இன்றைக்கு இருப்பதை போன்ற தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத
காலம். இந்த 1956 ஆம் ஆண்டு புயல் நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு
, 'புயல் ராஜன், புயல் ராணி, புயல் ராமன்' என்றெல்லாம் பெயர் சூட்டி இந்த ஆண்டினை
நினைவில் ஏந்திய வித்தியாசமானவர்கள் நமது தமிழர்கள்.
1964 ஆம் ஆண்டு ராமேசுவரம் பகுதியில் வீசிய புயல்
மிகவும் கோரமானது. தனுஷ்கோடி நகரமே கடலால்
மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும்
புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று
கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 123 பேரும்
கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை
உயிரிழந்தனர்.
கடற்கரையில் இருந்து அதிக தொலைவு இல்லாத நமது தேவகோட்டை நகர் பெருமழையின்
சீற்றங்களை எதிர் நோக்கும் பகுதியில் தான்
இருக்கிறது. வறண்ட பகுதி என்ற
போதிலும் பெருமழைக் காலங்களில் மக்களை
அவதிக்கு உள்ளாக்கி விடும். இந்த
நேரத்தில் நமது நகரின் நீர் மேலாண்மை பற்றி ஒரு மீள் பார்வை பார்த்தால் நமது
நகரின் முன்னோர் எந்த அளவுக்கு அறிவாற்றலுடன் நீரின் தன்மை பற்றியும் நகரில் அதன்
ஓடு பாதை பற்றியும் அறிந்து இருந்து இருக்கின்றனர் என்ற செய்திகள் வியப்பில்
ஆழ்த்தும். இது பற்றிய விவரமான செய்திகளை
நமது முதல் பகுதியில், நாம் பகிர்ந்து கொண்டோம். நினைவூட்டலாக, அந்தப் பழைய பதிவினை கீழே பகிர்ந்து உள்ளோம். இந்த இணைப்பைச் சொடுக்கி அந்தப் பகுதியினையும் வாசித்து
நம் முன்னோர் பெருமையை அளவிடுமாறு வேண்டுகிறேன்.
https://muthumanimalai.blogspot.com/2018/04/15.html
நமது நண்பர் முன்பு சிலம்பணி அக்ராஹாரத்தில் இருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்த திரு.நாராயணன் அவர்கள் சிலம்பணி ஊரணி பெருகி நிரம்பி வழிந்ததை 1956 ஆம் ஆண்டு புயல் நேரத்தில் கண்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதன் பிறகும் 1964 ஆம் ஆண்டு புயற்காலத்திலும் இன்னும் இரண்டு மூன்று முறையும் சிலம்பணி ஊரணியின் நீர் மட்டம் கற்சுவர்களுக்கும் மேல் நிறைந்து சாலை மட்டத்துக்கு உயர்ந்ததாம்.
அன்றைய நாட்களில் இருந்த அமைப்பு ........இந்த ஊரணிக்கு கல்லாம் பிரம்பு காட்டில் இருந்து ஒரு கால்வாய் வழியாக வந்தடைகிறது .உபரியாக தளும்பி நிற்கும் நீர் லட்சுமிபுரம் அக்ரஹாரம் மேலத்தெருவில் இருக்கும் குட்டையில் போய்ச் சேரும். அந்தக் குட்டையினும் மிகும் நீர் லெட்சுமிபுரம் அக்கிரகாரத்தில் இருந்து கள்ளிக்கோட்டையார் தெருவில் இருக்கும் சாத்தப்ப செட்டியார் இல்லத்துக்கு அருகில் இருக்கும் கால்வாய் வழியே ஓடும். இந்தக் குட்டைக்கும் வெள்ளையன் ஊரணிக்கும் ஒரு இணைப்பு இருந்து இருக்கிறது. சரி வெள்ளையன் ஊரணி நிரம்பி விட்டால் அந்த நீர் பழைய தபால் நிலையம் சாலை வழியாக திண்ணன் செட்டி ஊரணியில் அதன் மேற்குப் புறமுள்ள முளைக்கொட்டு திண்ணை வழியாக மடை பிடித்து சென்று விழும். திண்ணன் செட்டி ஊரணிக்கும் ஆற்றுக்கும் ஒரு தொடர்பு இருந்து இருக்கிறது.
இன்றைக்கு அனைத்து நீர் வழிகளையும் அணைத்து கட்டிடங்கள் எழும்பி மழைக்காலங்களில் நகரை தண்ணீரிலே தாமரைப்பூவாய் மலர வைத்து விடுகின்றன என்பது நமது நகருக்கு மட்டும் அல்ல. நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ள நரக நிலை.
வெள்ளாள தெருவைப் பற்றி பேசினால் இன்றும் அந்தப் பகுதியின் காவல் தெய்வமாக நம் கண்னுக்குத் தெரியாது உலவிக்கொண்டு இருக்கும் சில உண்மை ஆத்மாக்களை பற்றிச் சிந்திக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் ...
அமரர் பரஞ்சோதி அவர்கள்
மேலே கண்ட பெரும் புயல் காலங்களில்
திருவாளர்கள் பரஞ்சோதி மற்றும் பெத்து பிள்ளை அவர்களின் மக்கள் பணி அளப்பரியது
என்று சொல்வார்கள். இந்தப் புயல். மழை, வெள்ளக் காலத்தில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னதாக இது
போன்ற இயற்கை இடர் காலங்களில் இவர்கள் செய்த சேவைகளை எண்ணிப் பார்க்க வேண்டியது
நகரத்தின் பிள்ளைகளான நமது கடமை ஆகும்.
மக்களையும் அவர்களையும் பிரிக்கவே முடியாத அளவுக்கும் ஒரு பந்தம். அவர்களது அன்றாட பிரச்சனைகளே மக்களின்
பிரச்சனைகள் தான். எந்த ஒரு நல்லது கெட்டது
என்று அந்தப்பகுதியில் என்ன நடந்தாலும் அனைவருக்கும் முன்னால் அந்த
நிகழ்விடத்தில் இருப்பவர்கள் இவர்கள் தான்.
முழு நேர உண்மையான சமூக அக்கறை கொண்ட தொண்டர்கள். இன்றைக்கெல்லாம்
அவர்களைப் போன்ற சமூக சேவகர்களைக் காணவே
முடியாது.
1945 ~1955 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் ஒரு அருமையான 'சடுகுடு' குழு
தேவகோட்டையில் இந்த வெள்ளாளர் வீதிப்பகுதியில் சிறந்து விளங்கி வந்தது. கபடி என்று சொல்வதை விட 'சடுகுடு' என்றால் தான் அன்றைக்கு விளங்கும். வெல்லவே கடினமான, உடல் வலியும் மன உறுதியும் கொண்ட
அந்த விளையாட்டு வீரர்களில்
திருவாளர்கள் பாலகிருஷ்ணன், ராம ராஜன், PT.இராமன், சோமசுந்தரம் ஆகியோர் பிரபலமானவர்கள், பிறரும் பலமானவர்கள்.
திரு.பரஞ்சோதி அவர்களுக்கு ஒரு தம்பி. அவர் பெயர் திரு.இராஜாராமன். பொதுப்பணித் துறையில் பணி புரிந்தார்.
நல்ல சடுகுடு அதாவது கபடி வீரர்.
சூறாவளி நிருபர் லெட்சுமணன், இவர் எல்லாம் சேர்ந்து அன்றைக்கு நிறைய சடுகுடு
மற்றும் மல்யுத்த போட்டிகள் தேவகோட்டையில் நடத்தினர். அந்த செய்திகள் இனி வரும் அத்தியாயங்களில்
வரும்.. அன்பர்கள் நினைவுவூட்டவும். இவர்
தனது இல்லத்துக்கு எதிரே ஒரு மெஸ் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த இடத்தில் தான் இன்றைக்கு தமிழ்நாடு
மெர்கன்டைல் வங்கி அமைந்து இருக்கிறது.
இந்த மெஸ் தான் இன்றைக்கு கிருத்திகா மெஸ் என்று பெயர் மாறாமல் அவரது புதல்வர், திரு.கணேஷ் அவர்களால் தியாகிகள் சாலையில் வெற்றி கரமாக நடந்து வருகிறது.
தியாகப் பிரம்ம உத்சவத்தில் திரு.பெத்து பிள்ளை அவர்களின் பங்கு மிக
முக்கியமானது. அவர்தான் அந்த நிகழ்வு
நாட்களில் அந்தப் பிரதேசத்தின் இராணுவ அமைச்சர்.
தியாகப் பிரமோத்சவம் நிகழும் அந்தப் பதினோரு நாட்களிலும் அவரின்
பார்வைக்குத் தப்பி ஒரு 'ஈ , எறும்பு ' கூட சிதம்பர விநாயகர் சன்னதி தெருவுக்குள் நுழைந்து விட இயலாது. இது தவிர நிகழ்ச்சிகள்
நடக்கும் தருணங்களில் தன் கையில் ஒரு
குச்சியை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருப்பார். விளையாட்டுப்
பிள்ளைகளாய் வந்து ஓடி ஆடும் விடலைகளை குச்சி கொண்டு 'டாய் ... டாய்
...' என்று விரட்டி
விடுவார். உத்சவம் முற்றுப் பெறுகின்ற
நாளில் அவரை விழாக் குழுவினர் மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள்.
திரு.பெத்து பிள்ளை அவர்களின் இல்லத்துக்கு எதிர் வீடு திரு. அம்பிகாபதி
அவர்களுடையது. தேவகோட்டை நகராட்சியில் வரி
வசூல் சக்கரவர்த்தி. இவரது மகன் திரு.மாரியப்பன். .. தந்தை வழியிலேயே இவரும் நகராட்சியில் பணி
புரிந்தார். திரு.மாரியப்பன்
அக்மார்க் தி.மு.க. காரர். அமரர் இராம
வெள்ளயன் நகரத் தந்தையாக இருந்த காலத்தில், இவரது கை
ஓங்கி இருந்தது . சில நாட்களுக்கு முன்னர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேராட்டுக்கோட்டை சண்முகம், மேனாள் நகர் மன்றத் தலைவர் அமரர் ஜனாப்.காசிம் ராவுத்தர் இவர்கள் அடங்கிய அன்றைய குழுவின் வலது கரமாய் விளங்கியவர். 1972 ஆம்
வருடம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் தனிக்கட்சி ஆரம்பித்த
காலத்தில் நமது நகரில் நிகழ்ந்த அதன் எதிர் வினைகளை பின்னர் பார்க்கலாம். அம்பிகாபதியின் தம்பி, திரு.மாரியப்பன். தந்தை வழி மாறாத அப்பன் இவர். இவரும் நகராட்சியில் பணி புரிந்தார். இவரின் தம்பி திரு.நாகநாதன் நகரசபை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு அந்த்த் தொகுதி, பெண்களுக்கான சிறப்பு தனித் தொகுதி என்று மாற்றப்பட்ட பின்னர் இவரது மனைவி நகர்மன்ற உறுப்பினராய் இருந்தார்.
திரு.பெத்து பிள்ளையவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை. ஒரு மகள் இருந்தார்.
திரு.பரஞ்சோதி அவர்களுக்கு இரண்டு
புதல்வர்கள். மூத்தவர் திரு.நாராயணன் அவர்கள் கிருஷ்ணா
காபி என்று மிகவும் பெயர் பெற்ற நிறுவனம் நடத்தி வந்தார். அன்றைக்கு தேவகோட்டையில் பெயர் பெற்ற மணக்கும் காபிதூள் வழங்குபவர்கள்
தியாகிகள் சாலையில் ஜெயராம் காபி
வெள்ளையன் ஊரணி தென் பகுதியில் சீனூஸ் காபி
நடுபஜார் வீதியில் (காசுக்கடை வீதி ) தேவி காபி என்று ஒன்று இருந்து..
எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் அவர்கள் வேண்டியவர்களோ, அறிமுகம் இல்லாதவர்களோ என்ற எந்த பாகுபாடும் இன்றி பரஞ்சோதி அவர்கள் தனது கடமை அதுவென்ற உணர்வோடு வாழ்ந்து முடிந்து உயிர் விட்ட, உறவை விட்ட அந்தச் சடலத்துக்கு இந்த பூவுலகில் கடைசியாகச் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் செவ்வனே நடந்தேற தானே முன்னின்று எல்லாப் பணிகளையும் புரிவார். சில சேட்டை பிடித்த சிறுவர்கள் அவரை 'பாடை பரஞ்சோதி' என்று செல்லமாகப் பெயர் வைத்து தமக்கும் பேசிக் கொள்வதையும் கண்டு இருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் தனிப்பட்ட ஈடுபாடு காட்டுவார். அந்தப் பகுதியில் திரு.பரஞ்சோதி அவர்களின் காலத்தில் எவ்வளவோ குடும்பங்கள் இப்படி இவரின் சேவையைப் பெற்று இருக்கின்றன. நாங்கள் எங்களின் பதின்மப் பருவத்தில், மாலை மயங்கும் நேரங்களில் சிலம்பணி ஊரணிப் படிக்கட்டுகளில் அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டு இருப்போம். அந்த வேளைகளில் பல முறை ஒரு வாளியோடு வருவார் திரு.பரஞ்சோதி அவர்கள். ஊரணியில் தண்ணீர் மொண்டு கரையில் நின்று குளித்து விட்டு செல்வார். அந்தக் குளத்தில் உள்ளே இறங்கி நீராடக் கூடாது. இவர் ஏதாவது சாவு வீட்டில் இருந்து வருகிறவர், குளத்தில் இறங்காமல் தண்ணீர் மொண்டு கரையில் நின்றபடி நீராடி விட்டுச் செல்வார். இது நாங்கள் அடிக்கடி காணும் காட்சிகள்... அந்த அளவுக்கு இந்தச் சேவையை ஒரு தவமாகவே செய்து கொண்டு இருந்தவர் அமரர் பரஞ்சோதி ஐயா அவர்கள். மனதாபிமானம் எனபதற்கு இதற்கு மேல் எந்த உதாரணமும் காண இயலாது.
திரு.பரஞ்சோதி அவர்கள் வெண்மை உடையில் பளிச் என்று இருப்பார். வெள்ளை ஜிப்பா, தும்பை பூ வேட்டி, தாம்பூலம் தரித்த வாய் , நல்ல சிவந்த தேஜஸான தேகதோடு ஜம் என்று இருப்பார். திரு.பெத்துபிள்ளை அவர்கள் கதராடை மட்டுமே
அணிவார்.
அன்றைக்கு தேவகோட்டை நகரம் பகுதிக்குப் பகுதி கிராமங்கள் போல மங்கள மணம் பரப்பும் அனைத்து பாரம்பரிய நிகழ்வுகளும் நடக்கும் இடமாக இருந்தது. வெள்ளாள தெருவின் சாலையில் வடக்கு புறமாக முளைக்கொட்டுத் திண்ணை.. பங்குனி மாதம் முளைக்கொட்டு நடைபெறும். தெரு மகளிர் வரிசையாக தலையில் உயிரின் ஆரம்ப அடையாளமாக சக்தியின் வடிவாக விளங்கும் முளைவிட்ட பயிர்களின் தொகுப்பான முளைப்பாரியைச் சுமந்து ஊர் வலமாகச் சென்று சிதம்பர விநாயகரைத் தொழுது திண்ணையில் இறக்கி வைப்பர். “தானானே ... தானேனே” என்று இளைப்பாறி அமர்ந்திருக்கும் முளைப்பாரிகளுக்கு பாடல்கள் பாடி மகிழ்வர். பிறகு கூத்து அல்லது இன்னிசைக் கச்சேரிகள் என்று விழா களை கட்டும்.
வெள்ளாளர் தெருவின் சப்பாணி முனீஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்தக் கோவிலின் விழாக்களுக்கு பொறுப்பாளர்கள் திருவாளர்கள் பரஞ்சோதி பிள்ளை மற்றும் பெத்து பிள்ளை இவர்கள் இருவரும் தான். சித்ரா பவுர்ணமி காலத்தில் ஒரு 10 நாட்கள் தொடர்ந்து சப்பாணி முனீஸ்வரர் கோவில் விழாக்கள் நடைபெறும் . சப்பாணி முனீஸ்வரர் கோவில் முதலில் சிலம்பணி சன்னதி தெருவில் இருந்து வெள்ளாளர் தெருவுக்கு வரும் சந்தில் சுவரில் சித்திரமாக வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
சுமார் 60 அல்லது 70 வருடங்களுக்கு முன்னர் கள்ளிக்கோட்டை சோமசுந்தரம் செட்டியார் தெருவுக்கு (K.SM ) எதிர்த்தாற்போல்
நகராட்சியின் இலவசக் கழிப்பறை இருந்தது
பின்னர் அவை இடிக்கப்பட்டன .
சப்பாணி முனீஸ்வரரும் சந்தில் இருந்து இடம் பெயர்ந்து முதலில் ஒரு மேடை
மீது அமைக்கப்பட்டார். பின்னர் அடைப்புகள்
ஏற்படுத்தி நடுத்தரக் கோவிலாக உரு மாறியது.
பால் குடம் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது.
ஆன்மிகம், சமூக அக்கறை மட்டுமல்ல ....அரசியலிலும்
இந்த வெள்ளாளர் தெரு வாசிகளுக்கு மிகுந்த தொடர்பு உண்டு. இந்த இருவருமே நகர சபைதனின் நிரந்தர
உறுப்பினர்களாகவே இருந்தனர். சில
பெரும்பாலும் அவர்கள் போட்டி இன்றியே அவரவர் தொகுதிகளில் தேர்ந்து
எடுக்கப்பட்டனர்.
நாங்களெல்லாம் பள்ளி மாணவர்களாக
இருந்த கால கட்டத்தில் ,சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயத்தின் தெற்கில் அமைந்துள்ள
லட்சுமிபுரம் மேற்கு நகராட்சியில் 14 ஆவது தொகுதி. அந்த தொகுதியில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி இட்டவர்
திரு.பெத்து பிள்ளை அவர்கள். அவரை எதிர்த்து போட்டியில் களம் இறங்கியவர் திரு.
வடிவேலு ஆச்சாரி அவர்கள். பெத்து பிள்ளை
அவர்கள் தராசு சின்னத்தில்.... திரு.வடிவேலு ஆச்சாரியார் அன்றைய காங்கிரசு
கட்சியின் பழம் பெருமை வாய்ந்த இரட்டைக்
காளை சின்னத்தில்...சுவர்களில் சின்னங்களை வரைவதற்கு ஓவியர் S.V . அய்யருக்கு நேரம்
போதவில்லை. நகரம் முழுவதும் அவருக்கு
அழைப்புகள் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும்...கடைசியில் வெற்றி பெற்றது திரு.பெத்து
பிள்ளை அவர்கள் தான்.
வெள்ளாளர் தெருவில் அவர் வாழ்ந்த வரை திரு பரஞ்சோதி மட்டுமே 'எப்போதும்
வென்றான்'. இந்தப் போட்டியெல்லாம் தேர்தலுக்கு மட்டும் தான்.
அதன் பிறகு அவர்கள் எப்போதும் போல நட்புடன் தான் பழகிக் கொள்வர்.
நாகரிகமான அரசியல் இருந்த காலம்.. அதை பேணியவர்கள் அரசியல் வாதியாக இருந்த
காலம்.
அன்றைய தி.மு.க.வின் நகர செயலாராய் இருந்த திருவாளர் தியாகராஜன் அவர்கள் பற்றி
முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த தியாகராஜ பிள்ளையும் இதே வெள்ளாள தெரு வாசி
தான். ஆர்ச் அருகில் போக்குவரத்து காவலர் மேடை (POLICE
BEAT ) எதிரில் பஜனை மடத்தின்
இடத்தில பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இன்னும் பெரிய ஆளுமைகள் இதே வெள்ளாள தெருவில் இனிமேல் வரப்போகிறார்கள். அவர்களுக்கு என்றே தனியே ஒரு அத்தியாயம் போதாத
அளவுக்கு செய்திகள் இருப்பதாலும் இந்தப் பகுதி இதற்கு மேலும் நீண்டால் நீங்கள்
மூடி வைத்து விட்டு போய் விடுவீர்கள்
என்று இங்கே இருந்தே எனக்கு தெரிவித்தாலும் , இப்போ இதோடு முடிச்சுக்குவோம்...
COURTESY
இந்தப் பகுதியை எழுதுவதற்கும், தகவல்களைச் சரி பார்க்கவும், அருமையான படங்களை வழங்கி எனக்கு மிகவும் உதவியாக இருந்த,
பெரியவர். அட்வகேட் திரு.வேங்கடபதி அவர்கள்
அண்ணன் திரு.SP.தனசேகரன்
அன்புத் தோழர், திரு.வெங்கடாசலம் (மருது பாண்டியர் போக்கு வரத்துக்கழக அலுவலர்-ஓய்வு)
அன்பு வகுப்புத்தோழன், திரு.ராஜன், (TVS குழுமம்,மேனாள் மேலாளர் ஏற்றுமதி பிரிவு)
அனைவருக்கும் நம் அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பான பதிவு. எப்படித்தான் இந்த தகவல்களை தேடினீர்கள் என்று நினைத்தேன். அதற்கு உங்களுக்கு உதவியவர்களுக்கும் நன்றி. இந்த வரலாற்றுப் பதிவுகள் மேற்படிப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு நீங்கள் பாரிய உதவி செய்கிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. வாழ்த்துகள் தொடருங்கள்
பதிலளிநீக்குநன்றி தங்கையே. ஜெர்மனியில் இருந்தும் எங்களோடு தேவகோட்டை நகர்வலம் வரும் உங்களை எங்கள் நகரின் விருந்தினராக என்றும் உடன் அழைத்துச் செல்வதில் பெருமை கொள்கிறோம்
நீக்குசிறப்பான பதிவு
பதிலளிநீக்குThanks thambi
நீக்குபெத்துப்பிள்ளை,வடிவேலு ஆச்சாரியார் ஆகியோர் மறக்கமுடியாத
நீக்குஅக்கால நாகரிக அரசியல் முன்னோடிகள்!
நமது கேட்டில் பெரிய மரம் 65 புயலில் விழுந்தது?
பதிலளிநீக்குஆம். ஒரு பெரிய வாவரசு (வாழ்வரசு?) மரம். அடி மரத்துக்கு மேல் அப்படியே முறிந்து கிடந்தது. ஆனாலும் பல வருடங்களுக்குப் பிறகு இந்த அடி மரம் மீண்டும் தளைத்து வளர்நதது . பிறகு ஞானாம்பாள் ஆச்சி அதை (இடத்தை அடைத்துக்கொண்டு இருந்ததால் )வெட்டி விட ஏற்பாடு செய்தார்கள்.
நீக்குஅருமை ஐயா 🙏
பதிலளிநீக்குநன்றி நட்பே .. தொடர்ந்து பயணம் செய்யுங்கள்
நீக்கு1956 ல் புயல் அடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது 1955 ம் வருடம் திருக்கார்த்திகை அன்று இரவு புயல் அடித்தது. அப்போது NSMVPS High School (அன்று SSLC தானே)அருகில் இருந்த 100ஆண்டுகள் கடந்த பெரும் ஆலமரம் விழுந்துவிட்டது.ஆலமரத்தடி பஸ் ஸ்டாப் என்றே பிரபலமான அடையாளம்.
பதிலளிநீக்கு