எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)- 6. முரட்டுக் காளை

 

6. முரட்டுக் காளை

பலருக்கும் வருத்தம் (நான் உள்பட ).... அது எப்படி நம்ம ஊர் இட்லியை பிற நாட்டின் வேர் என்று சொல்ல முடியும்அமெரிக்காவில் இருந்து அன்பு மருமகன் நாகு என்ற  நாகராஜன் கணபதி செய்தி அனுப்பி இருந்தார், இப்படி :

 

ஜல்லிக்கட்டு

'You can write 100 articles to disprove me, still I will claim Idly is ours 😀'

நானும் அவருக்குப் பதில் எழுதினேன் :

இட்லியின் இணை பிரியா

என் அக்கா மகனே

எனக்கும் இட்லி என் மண்மகள்

என்றுதான் இறுதியான எண்ணம்..

ஆய்வுகளைச் சுட்டினேன்

அவ்வளவே

 

சகோதரி தாமரைச் செல்வி

அடுத்து சகோதரி தாமரைச் செல்வி. இவர் புலவர் மட்டும் அல்ல.. சுவடியியல் துறையில் பணி புரிபவர். முனைவர், நடுவண் அரசின் பணியில் சங்க இலக்கிய சுவடி பதிப்புகள்  தொகுப்பாளர்.

ஆஸ்திரேலியப் பழங்குடியிரின் மொழி, பண்பாடு இவற்றில் தமிழகத்தின் தாக்கம் குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொண்டவர். 'ஐயை' மகளிர் குழுமத்தின் செயலர்  என்று பன்முகம் கொண்ட அவர்தம் ஈடுபாடு அவரின் குரலிலேயே அவர் யார் என்று காட்டியது. தொல்லியலின் தோலை உரித்துப் பார்ப்பதையே அன்றாடப் பணியாகக் கொண்டவர்இவர் தம் தமிழ்ப்பணிகள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்..நிறைய.. நிறைய..

ஒரு இரவு வேளையில் கட்செவி (WHATSAPP) மூலம் அழைத்தார்இட்லி எப்படி தமிழகத்தின் தலைமுறை உணவு இல்லை என்று எழுத முடியும் என்ற வேகம் அவரது தொனியில்.. நான் கொஞ்சம் பவ்யமாகக் கையைக் கட்டிகொண்டேன்.   பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தோனேசியாவில் மக்களின் பழக்கமான ஆவியில் வேகவைத்து உண்ணும் பழக்கத்தைச் சொன்னேன்அவர்களும் பல மேற்கோள்களை பண்டைய இலக்கியத்தில் இருந்து காட்டி இட்லியின் மீதான தமிழக உரிமையை நிலை நாட்டிப் பேசினார்கள்.   நான் இறுதியாக, படித்தவற்றை, பல ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவில் உரைத்ததை பகிர்ந்து இருக்கிறேன் என்று, உரிமைத் துறப்புச் (DISCLAIMER) செய்தி வாசித்தேன். கொஞ்சம் சாந்தமானவர்கள், தமிழ், மற்றும் தமிழர்கள் தொடர்புகள்  பற்றியும் ஆய்வு செய்யுங்கள்  என்றதும் இந்தோனேசியா மொழிகளில்  தமிழ் வார்த்தைகள்  அதிகம் இருப்பதைப்  பற்றி பேச்சு திசை திரும்பியதுமுடிந்த வரை அவ்வப்போது நினைவில் வரும் தமிழ்  வேர்ச்சொல் உள்ள  இந்தோனேசியா வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்பின்னர் பெரிய பட்டியல் ஆக மாறும் என்று அறிவுறுத்தினார்கள். நன்றி. என்னுடைய இந்தத் தொடரின் நோக்கமே, நமது தொடர்புகளின் வேர்களை ஆய்வதும் அறிவதும் தானே என்று கிடைக்கும் இடைவெளிகளில் அந்த பணியினை மேற்கொள்கிறேன்.


சரி.. பொங்கலோ பொங்கல் என்று தைப்பொங்கல் பார்த்தோம். வீட்டுப்பொங்கலுக்குப் பின் வருவது நமது மாட்டுப்பொங்கல் அல்லவாமாட்டுப்பொங்கல் என்றதும் நமது ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது கட்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நமது பாரம்பரிய நினைவுகள் மனதில் வந்து போயினநெல் மணிகளைச் சொரிந்த வயல் வெளிகளுக்கு நன்றியுடன் 'தேவிஸ்ரீ' க்கு விழா எடுப்பது போல உழவனின் உண்மைத் தோழமையான மாடுகளுடன் விளையாடும் நமது கலாச்சாரம் இங்கே எப்படி என்று மனம் தேடியது.

 

ஜல்லிக்கட்டு

எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரை விட, 'மஞ்சு விரட்டு', 'எருது கட்டு' என்ற பெயர்களே காளையரும் , காளைகளும் களம்  காணும் நிகழ்வுக்குப் பெயர்.  'சல்லி'(காசு)க்கட்டு' என்பது காளையின் கழுத்தில் பரிசாக கட்டி இருக்கும் காசுமாலை காரணமாக  ஏற்பட்டு இருக்கலாம்.  'ஏறு தழுவல்' என்ற சொல்லாடல்,  மாடுகளுடன் நமது வாஞ்சையைப் பறை சாற்றும்.


மஞ்சு விரட்டு

இதை எழுதும் போது  காரைக்குடி அருகே 'சிராவயல்' மஞ்சுவிரட்டில்' சிராய்த்துக்கொண்ட நினைவுகள் வருகிறது.. மாடு பிடித்து அல்ல... சீறிய  காளைகளைக் கண்டு விழுந்து எழுந்ததில் (ஹி ..ஹி ..ஹி ...)

நம்ம ஊரில்  ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையில் காளைகளோ, எருமைகளோ களத்தில்  மனிதர்களோடு ஓடி விழா காணுகின்றனபாரத  தேசத்தைப் போலவே பரந்த தேசமான இந்தோனேசியாவும் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படையில் பல்வேறு பகுதிக் கலாச்சாரங்களை உள்ளடக்கி 'ஒன்றி' நிலைத்து இருக்கிறதுஒவ்வொரு பகுதியாக, (எனக்குத் தெரிந்த வரை ) அழைத்துச் செல்கிறேன்.

 

இந்தோனேசியாவில் மதுரை

வாடி வாசல் திறந்து வாலிபர்கள் காத்திருக்கும் அலங்காநல்லூர் உட்பட்ட  நமது தென் மதுரை நகரினைச் சுற்றியுள்ள பல சிற்றூர்கள் நமக்கு காளைகள் என்றால் நினைவுக்கு வருவனஇங்கே இந்தோனேசியாவில் இருக்கிறது ஒரு மதுரைசாவகத்தின்  கிழக்குப்  பகுதியில் அமைந்துள்ள அழகிய தீவு.  1988 ஆம் வருடம் நான் முதன் முதலில் இந்தோனேசியாவில்  வந்து இறங்கிய நகரம் கிழக்கு சாவகத்தின் பெரு நகரமான 'சுரபயா'.  அன்புத் தோழர் நாகராஜ் தான் என்னை இங்கே இந்தோனேசியாவுக்கு அழைத்து வந்து ஆதரவளித்து வாழ்வில் கரை சேர்த்தவர்.


AT SURABAYA WITH MR.NAGA ON 17-08-1988

இரவு நேரங்களில் நண்பர் நாகா என்ற நாகராஜ்   சுரபயா வீதிகளில் யாழ்ப்பாணம் தேங்காய் அளவுக்கும் பெரியதாக கிடைக்கும் இளநீர் வாங்கி வயிறு முட்ட என்னை அருந்த வைத்து மகிழ்வார். அங்கிருந்து தூரத்தில் கீழ்த்திசையில் அடி வானில் வெளிச்சம் தெரியும் , என்னவென்று கேட்ட போது அது 'மதுரா' என்னும் அருகில் உள்ள தீவு என்று சொன்னார்.  அட.. பாரதத்தில் 'வட மதுரை' ( கோபால கிருட்டிணன் பிறந்த மதுரா ) தென் மதுரை ( மீனாட்சி பட்டணமாம் நம்ம மதுரை) இருப்பது போல இந்தோனேசியாவிலும் ஒரு மதுரையா? என்று வியந்தேன்.

MADURA ISLAND NEAR EAST JAVA

சாவக மொழியின் புராதன வடிவில் தான் மதுரா மொழி இருக்கிறதுமதுரா மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தவர்களாக இருக்கின்றனர் . 'கால் நடை' வளர்ப்பும் பராமரிப்பும் அவர்கள் உதிரத்தில்  கலந்துள்ளது, நமது தமிழக மக்களின் மனத்தினைப் போல.   சுரபயா  நகரையும் மதுரா  தீவினையும் இணைக்கும் பாலம் இப்போது இருக்கிறது . 'சுராமது' (SURABAYA MADURA) என்ற வார்த்தைகளின் சுருக்கம், 5.5 கி.மீ. நீளமுள்ள இந்த கடல் பாலம்.  

                                       

SURAMADU BRIDGE-SURABAYA, INDONESIA

கால்நடை
 வளர்ப்பில்
களிப்படையும் மனத்தினர் மதுரா நகர் வாசிகள் என்றதும், இவர்கள் கோகுலத்தில் சொந்தமா? அன்றி நம் கூடல் நகரின் பந்தமா  என எண்ணப்  பறவை என்னுள் சிறகடித்துச் சென்றது

மாட்டுப் பந்தயம் (KARAPAN SAPI )

கரப்பான் சாபி பாரம்பரியம் என்பது மாடு பந்தயப் போட்டியாகும், இது மதுரா  மக்களின் அடையாளமாகும். மதுராவின் பல நகரங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கரப்பான் சாபி பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றன. பின்னர் இறுதிச் சுற்று செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும். விவசாய நிலங்களை வளப்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாகவே கால்நடை வளர்ப்பும், அவற்றின் பராமரிப்பும்.  மக்கள் மனதில் கால் நடைகள் பற்றிய மதிப்பினை கூட்டவும் இது போன்ற பந்தய நிகழ்வுகள் நடைபெறுகின்றன நமது நாட்டுப்புறத்தைப் போலவே.

 

KARAPAN SAPI

மேழித் தொழில் மேதினினியில் ஆதி நாள் முதலாய் தொடரும் நமது தமிழகத்தில், கலப்பையின் 'ஏர்க்கால்' என்ற பகுதிக்கு இணையான, மதுரா (இந்தோனேசியா) (MADURESE  LANGUGAGE )வின் சொல்  ('saluga') 'சாலுகா ' என்பது ஆகும்சால் என்ற தமிழ் வார்த்தைக்கு உழும் போது  ஏற்படுத்தப்  படும் மண்ணின் வரிகள் என்று பொருள்.  'கோணச் சால்' ஓட்டுகிறான் என்று குறை கூற ஒரு வார்த்தைப் பிரயோகம் நம்மில் உண்டு. இந்தோனேசியா மதுரா மொழயில் சாலுகா என்ற வார்த்தை உழவில்  இரண்டு மாடுகளுக்கு இடையில் ஏர்க்கால் ஆக பயன்படுத்தப்படும் இரட்டை மூங்கில்  கழிகளையே இங்கே குறிக்கிறதுஇந்த கரப்பான் சாபி என்ற போட்டி இரண்டு மாடுகளை நுகத்தடியில் இணையாகப் பூட்டி இடையில் ஏர்க்கால் போல இரண்டு மூங்கில் கால்களைச்  செய்து அதன் மீது பந்தய வீரர் நின்று கொண்டு மாடுகளை வேகமாக ஒட்டி விளையாடுவதுதான்நம்ம ஊர் தட்டு வண்டிப் பந்தயம்தான்.. தட்டு வண்டியில் சக்கரம் மற்றும் அமர்ந்து மாடுகளை ஓட்ட ஒரு தட்டு உண்டு. இங்கே அவை இரண்டும் இல்லை.

KARAPAN SAPI/ MADURA, INDONESIA

மற்றபடி நம்ம ஊர் மாட்டு வண்டிப் பந்தயங்கள் போலவே, பூஞ்சிட்டு, சின்ன மாடு மற்றும் பெரிய மாடு என்று தகுதி வாரியாக இனம் பிரித்து நடத்தப்படுகின்றது.   ஜல்லிக்கட்டுக்கு வந்த முட்டுக்கட்டை போலவே இங்குள்ள வளர்ப்பு பிராணி ஆர்வலர்கள் அவ்வப்போது தடை சொல்வார்கள்ஆனாலும் பாரம்பரியம் என்றும் தொடர்கிறது... இங்கும்....

இரண்டு இரண்டு போட்டியாளர்களாக கலந்து கொண்டு, அவர்களில் வென்றவர்களைத் தேர்ந்தெடுத்து கால் இறுதி அரை இறுதி, மற்றும் இறுதிச்சுற்று  என்று நடத்தப்படுகிறது... நமது வண்டி மாட்டுப்பந்தயம் போல எல்லோரும் ஒன்றாக ஓடாமல்...

 

பாச்சு ஜாவி  (PACU JAWI) / கம்பளா (KAMBALA)

மேற்கு சுமத்ரா பகுதியில் நடத்தப்படும் இந்த பாசு ஜாவி கிட்டத்தட்ட நமது கர்நாடக மாநிலத்தின் 'துளு' பேசும் பகுதிகளான தென்கன்னட (தக்ஷிண கன்னட), உடுப்பி மற்றும் கேரளா காசர்கோடு பகுதி நிலச்சுவான்தார்களால் அறுவடைத் திருநாளாக நடத்தப்படும் 'கம்பளா' பந்தயம் போன்றது தான்இரண்டுமே அறுவடைக்குப்பின், சோறாக்கிக்  கொடுக்கும் பூமியை  சேறாக்கி அதில் புரண்டு விளையாடும் நிகழ்வு தான்.   கம்பு கொண்டு களம்  ஆடும் (கம்பு+களம் ) கம்பளா விளையாட்டு எருமைகளுடன், இங்கே சுமத்திராவின் பாச்சு ஜாவி இளம்பசுக்கள்  ஈன்ற காளைகளுடன்.

 

KAMBALA/ KARNATAKA, SOUTH INDIA

பண்டைய கம்பளா  பந்தயம் தனித்தனியாக ஒவ்வொரு  ஜோடி மாடுகளின் செயல் திறனையும் காட்டும் வண்ணம் தான் இருந்து இருக்கிறதுஅதே வடிவில் தான் பாச்சு ஜாவி  இங்கே இன்றும் இருக்கிறது. தனித்தனி ஜோடி மாடுகள் மிக மிக வேகமாக சேற்றில் ஓடி தமது திறமையையும், உரிமையாளர் கவுரவத்தையும் நிரூபிக்கும்.

 

PACU JAWI / SUMATRA, INDONESIA

தனித்தனி ஜோடி மாடுகளை ஓட வைத்து நடத்தப்பெற்று வந்து துளு நாட்டு கம்பளா பந்தயம் 'டெஸ்ட் கிரிக்கெட்' , 20:20 கிரிக்கெட் என்று புது அவதாரம் எடுத்து போல இரண்டு ஜோடிகளை ஒன்றாக ஓட வைத்து அதில் வெற்றி பெற்றவரைத் தேர்ந்தெடுப்பது போல மாறியதுமதுரா தீவின் 'கரப்பான் சாபி' பந்தயம் போல...

இதே வழியில், பாலிக்கு அடுத்து உள்ள 'காங்கேயன்' (KANGEAN ISLAND) தீவுப் பழங்குடியினராலும், 'எருமை'ப்  பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

"கெரோபாக் சாபி"(GEROBAK SAPI) 

இது போக அழகிய மாடுகளின் வனப்பைக் காட்சிப்படுத்தும் வண்ணம், மத்திய ஜனாவின் 'யோக்யாகர்த்தா' (YOGYAKARTA) பகுதியில் (GEROBAK SAPI)  "கெரோபாக் சாபி" எனும் நிகழ்வுஇளம் காளைகள் திருமண மாப்பிள்ளைகள் போல அலங்கரிக்கப்பட்டு அதற்கேற்ப வண்டிகளும் அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கும் மனதுக்கும் உத்வேகம் தரும் வண்ண நிகழ்வாக நடந்து வருகிறது.

 

GEROBAK SAPI/ YOGYAKARTA

ஆக உழவரின் உற்ற நட்பான கால்நடைச் செல்வங்களைச் சீராட்டிப்  பாராட்டி கொண்டாடும் நமது கலாச்சாரம் இந்தோனியா  தேசத்தில் பல இடங்களில் இன்னும் அப்படியே நடைமுறையில் இருக்கிறது என்பதை பதிவு செய்வதே, இந்தப் பதிவு...

 

இன்னும் நிறைய ஊர் சுற்றலாம்... வாருங்கள் ...


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60