எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-11.தொடர் கோவில்கள்-மலை மேல் அனுமன்
11.தொடர் கோவில்கள்-மலை மேல் அனுமன்
கடந்த பகுதியினை
முடித்த போது, அடுத்த சண்டியில் நமது சந்திப்பைத் தொடரலாம் என்று தான் முதலில் எண்ணினேன், ஏனெனில் நிறைய சண்டிகள் (கோவில்கள்) நமது அட்டவணையில் வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றின்
பின்னணியில் மதம், மதச்சடங்குகள், அதை ஒட்டிய கதைகள், நம்பிக்கைகள், பாரம்பரியம் மற்றும் இவை அனைத்தையும்
அணைத்துச் செல்லும்
அரச பரம்பரைகள் என்ற பின் புலம் பற்றித் தெரிந்து கொள்ளாமல், இன்றைக்கு வெறும் கற்றளிகளாகச் சிலவும், கற்குவியல்களாகப் பலவும் எனக் கிடக்கும் சண்டிகளைப் (கோவில்களை) பற்றி எழுதினால் மூலவர் இல்லாத இந்தக் கோவில்களைப் போலவே
இரசிக்கவோ, மனதில் இருத்தவோ இயலாது. அதே
வேளை, அரச பரம்பரை பற்றி மட்டும் எழுதினாலும் தலையும் புரியாது, வாலும் புரியாது.. மனதில் நிற்காது...
எனவே ஒரு பயணியைப் போல உங்களை என்னுடன் நான் கண்ட பகுதிகளுக்கு (கற்றது கைமண் கூட இல்லை) அழைத்துச் செல்கிறேன். செல்லும் இடங்களில் அவை தொடர்புடைய செய்திகள் நமக்கு வரலாறு, மதம், நம்பிக்கை என்று சொல்லும் அல்லவா?? ... அப்படியே அவ்வப்போது அரசர்கள், ஆட்சி முறை, மொழி, வாணிகம், கலாச்ச்சாரம, இத்துடன் நமது நோக்கமான நமது நாட்டுடன் உள்ள தொடர்புகள் பற்றியும் பேசிக்கொண்டே செல்லலாமே...
சண்டி பற்றித்தான் பேச ஆரம்பித்தோம், அதற்குள் அனுமன் வந்து நம் முன் குதித்து விட்டார்.
இந்தப் பகுதியில் சில சண்டிகளையும் அனுமனையும் சேர்த்தே பார்ப்போம்.
UNGARAN- BANDUNGAN-பாண்டுங்கான்
1989 ஆம் வருட ஆரம்பம்.
முன்பு இருந்த செமராங் நகரில் இருந்து எங்கள் குழுமத்தில் இன்னொரு அங்கமான ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் உங்கரான் என்ற நகருக்கு மாற்றல் ஆகி வந்தேன். மலைப்பாங்கான குளு குளு
தட்பம் கொண்ட சிறிய ஊர்.
நமது சொந்த ஊரில் வாழ்வது போன்ற உணர்வைக் கொடுக்கின்ற மக்கள். 3,500 பணியாட்களில் 98 சதம்
அழகான சாவகப் பெண்கள். உறவாய் அன்புடன் பழகும் வெள்ளை மனம் கொண்டவர்கள். தொழிற்சாலையில் இருந்து கொஞ்சம் தள்ளி எனக்கு கிடைத்த இல்லம் ஒரு சோலையைப் போல மிக அழகாய்... நிறைய பறவைகள் அந்த வீட்டைச்சுற்றி .. தலைக்கு மேல் உயரமான மலை. அந்த மலை முகட்டில்
'பாண்டுங்கான்' என்று ஒரு சிறிய மலையூர்.
இந்த மலைக்குப் பெயர் பாண்டுங்கான், அந்த மலையின் ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு சண்டி இருக்கிறது. மலைகளின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு கோவில் வீதம். மொத்தம் 9 கோவில்கள் இருந்தனவாம். அந்தக் தொடர் கோவில்கள் ஒரு கொத்தாக 'கெடுங் சோங்கோ' (GEDUNG SONGO) என்று அழைக்கப்படுகிறது. சோங்கோ என்றால் சாவக மொழியில் ஒன்பது, கெடுங் என்பது கட்டிடம். ஆக இந்த மலையில் அமைந்த ஒன்பது கட்டிடங்கள் ஒரு குழுவாக கெடுங் சோங்கோ (ஒன்பது கோவில்கள்/ ஒன்பது கட்டிடங்கள் ) என்று அழைக்கப்படுகின்றன . வெரோனிக் டெக்ரூத் (Veronique Degroot) எனும் நெதர்லாந்து தொல்லியல் ஆய்வாளர் இந்தோனேசிய சண்டி (கோவில்கள்) தொகுப்புகளை ஆய்ந்து மத்திய சாவகத்தில் மட்டும் 110 ஹிந்து சண்டிகள் இருந்ததாக கணக்கிட்டு இருக்கிறார். அவற்றில் நான் இருந்த செமராங் பகுதியில் மட்டுமே 21 சண்டிகள், இந்த பாண்டுங்கானின் 9 சண்டிகளையும், சேர்த்து ...
பான்டுங்கான் மலையில் 1270 மீட்டர் (4,170 அடி ) உயரத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்த 9 சண்டிகளில், 5 சண்டிகள் மட்டுமே சுய உருவத்துடன் நிற்கின்றன. மலையின் கிழக்குப் பகுதியில் இரண்டு, வடக்குப்பகுதியில் இரண்டு மற்றும் மேற்குப்பகுதியில் ஒன்றுமாக மொத்தம் 5. மற்றவை பற்றிய விபரம் தெரியவில்லை...அவை கற்குவியலாக காலத்தின் பிடியில் மாறி இருக்கலாம்.
மத்திய மற்றும் கீழைச்
சாவகத்தை ஆண்டு வந்த மத்தராம் வம்சம் (MATARAM DYNASTY) என்று அறியப்பட்ட (கி.பி.716 முதல்) இந்து மதத்தைச் சார்ந்த சஞ்சய அரசர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோவில்கள் சிவ, பார்வதி எனும் மூர்த்தங்களுக்காக எழுப்பப்பட்டு இருக்கிறது. இந்த
மத்தராம் வழியில் வந்தவர்கள் முதலில் சஞ்சய வம்சம் என்னும் ஹிந்து வாரிசு அதன் பிறகு புத்த மஹாயானத்தைத் தழுவிய சைலேந்திரர்கள் அதன் பின் சுமத்ரா, இன்றைய மலேஷியா (கெடா - கடாரம் ) வரை ஆட்சி புரிந்த ஸ்ரீ விஜய அரசர்கள் என்று பிரிந்தது.
இந்தச் சிறிய கோவில்களை எல்லாம் பார்ப்பதே பின்னர் இந்த அரசர்களைப் பற்றிப் பேசும்
தருணங்களில் அந்நியமாக மனதில் படாமல் இருக்க வேண்டியே. மத்திய
சாவகத்தில் டியங் (Dieng Plateu) பீடபூமியிலும் இந்த பாண்டுங்கான் மலை மீதும் கட்டப்பெற்ற இந்த இந்துக் கோவில்கள் ஒரே மாதிரி எரிமலைக் கற்களால் கட்டப்பட்டுள்ளதை காணலாம். இவை
இரண்டுமே மிகத் தொன்மையான சாவக இந்து வழிபாட்டு முறையின் சாட்சியாய் விளங்குகின்றன. ஆய்வுகளின் படி இந்த சிறிய கோவில்கள் கி.பி.780 -கி.பி.830 இந்த ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. உலகம்
அறிந்த யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வரும் 'பிரம்பனான்' மற்றும் 'போரோ புதூர்' கோவில்களுக்கும் முந்தைய கட்டிடம் இவை என்றும், இந்து ஆலய ஆகம விதிகளின் படி இந்த சண்டிகள் கட்டப்பட்டு இருப்பதை அறியலாம்.
அதென்ன டியங் , பிரம்பனான் , போரோ புதூர் கோவில்கள் என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்றாய் பார்ப்போம். டியங்
கோவில்களின் அமைப்பும், இந்த கெடுங் சோங்கோ சண்டிகளின் அமைப்பும் ஒரே மாதிரித்தான்
இருக்கின்றன. அடித்தளமும் முகடுகளும் கவனத்துடன் செய்யப்பட்டு இருக்கின்றன பான்டுங்கான் கோவில்களில்.
முதலாவது சண்டி மிகவும் தொன்மையானது. சரியான சதுர வடிவ அடித்தளம் தொன்மையான சாவக இந்து-புத்த கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கிறது. ஆயின் 2 முதல் 5 வரையான கோவில்கள் சதுரமான அடித்தளத்தில் கட்டப்பெற்று இருந்த போதிலும், மேலே செல்லச் செல்ல கொஞ்சம் வெளியே விரிந்து செவ்வக வடிவினதாகக் காட்சி அளிக்கின்றன. 3 ஆவது குழுக் கோவில்களில், ஒன்று பார்வதி தேவிக்கு, மற்றொன்று சிவபிரானுக்கு, இன்னொன்று சிவனுக்கு எதிராக "நந்தி"க்கு ஒரு கோவில் என மொத்தம் 3 கட்டிடங்கள். மூன்றாவது கோவிலின் பக்கச் சுவர் மாடத்தில் கணேசருக்கும் சிலை இருக்கிறது . கோவிலின் நுழைவு வாயிலில் துவார பாலகர் சிலைகள் காவலுக்கு நிற்கின்றன.
இந்தக் கோவில்கள் அனைத்துமே சதுரங்களை மேலே அடுக்கியத்தைப் போன்ற அமைப்பிலேயே கட்டப்பட்டு இருக்கிறது. கருவறை ஒரு உள்ளீடற்ற கன வடிவாய் இருக்கிறது. இதே அமைப்பில் இங்கே நமது பாரத நாட்டின் சில கோவில் அமைப்புகளையும் நாம் உற்று நோக்கலாம் . கர்நாடகாவில் ஐஹொளே (Aihole) மற்றும் பட்டாடக்கல் (Pattadakal) பகுதியில் சாளுக்கிய இரண்டாம் புலிகேசி காலத்து கோவில்கள் மற்றும் மாமல்லபுரத்துக் கோவில் அமைப்பிலேயே இந்த பண்டுங்கான் மற்றும் டியங் மேட்டுக் கோவில்கள் அமைக்கப்பட்டு இருப்பது, நமது பாரதத் தொடர்புகள் சாவகத்தில் சர்வ சாதாரணமாக 7 ஆம் நூற்றாண்டுக்கு காலத்தில் இருந்திருக்கின்றன என்பதை நமக்கு காட்டுகின்றன.
உங்கரான் நகரில் வாழ்ந்த எனக்கு, எனது இல்லத்தின் .தலைக்கு மேலேயே இந்த பாண்டுங்கான் மலை அமைந்து இருந்ததனால் அடிக்கடி, சில சமயம் ஒவ்வொரு வார இறுதியிலும் சென்று வரும் வாய்ப்பை எனக்கு இறைவன் கொடுத்தான். அப்போது 1993 ஆம் வருடம். என் இரண்டாவது மகன் மனைவியின் கர்ப்பத்தில்... இதற்கு முந்தைய மகப்பேற்றில் பிறந்த மகன் இந்த மண்ணுலகைக் கண்ட அதே நாளில் விண்ணுலகம் சென்று விட்ட அவலம். ஆகவே மிகவும் நம்பிக்கை இழந்து, இந்த மகவு பத்திரமாக பூவுலகில் பிறந்து வாழ வேண்டுமென இறைமையை வேண்டிய காலம் அது. நமது சிவகங்கை சீமையைப் பூர்விகமாகக் கொண்ட புலம் பெயர்ந்த மேடான் தமிழர், மூன்றாவது தலை முறையாய் இந்தோனேசியாவில் வாழும் தமிழர், ஆயினும் தனது தமிழகத்தின் தடம் மறக்காத தமிழ் உள்ளம், ஏதோ ஒரு வகையில் எனக்கு அண்ணன் முறையாக உறவானவர் . திரு.சின்னப்பன் என்று பெயர் .
அவர் என்னிடம், ‘தம்பி, இந்த பாண்டுங்கான் மலை உச்சியில் அனைத்து கோவில்களையும் கடந்து மேலே சென்றால் ஒரு அனுமன் இருக்கிறார் . அவரிடம்
நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள், குழந்தை நல்ல படியாகப் பிறக்கும்,’ என்கிறார் . எத்தனையோ
முறை இந்த பாண்டுங்கான் மலைக்குச் சென்று இருக்கிறேன். கோவில்கள் என்ற பெயரில் சிறிய சண்டிகள் இருக்கின்றன என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் ஆஞ்சநேயரையோ அனுமனையோ கண்டது இல்லையே என்றேன். அவரும்
, ஆமாம் இது பலருக்குத் தெரியாது... கொஞ்சம் அதிக உயரம் மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். எவரும் அவ்வளவு உயரம் தனிமையில் ஏறுவது இல்லை. ஆனால் பன்னெடுங்காலமாக அங்கே ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் தனிமையில் குளிர் மலையில் இருக்கிறார் என்றார். நாங்களும்
வேண்டிக் கொண்டோம். எவ்வளவோ
சிக்கல்களுக்கு இடையில் எனக்கு மகன் பிறந்தான் சென்னையில், மயிலை செயின்ட் இசபெல்லா மருத்துவமனையில். மேல்
சிகிச்சைக்காக பிறந்த குழந்தை சென்னை அப்போல்லோ மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். தாய் ஒரு மருத்துவ மனையில்... சேய்
மற்றொரு மருத்துவ மனையில்.... ஒரு வழியாகச் சில நாட்களில் தாயும் சேயும் நலமுடன் இணைந்தனர் . நல்ல
படியாக இந்தோனேசியா வந்து
சேர்ந்தனர்.
நேர்ந்த கடனைத் தீர்க்க வேண்டுமே ... நான் வாழ்ந்த உங்கரான் நகரின் தலை மேல் அமைந்து இருக்கும் பாண்டுங்கான் மலை உச்சியில் இருக்கும் அனுமனிடம் என்று... வடை மாலை சகிதம் மலை ஏறினோம். மலையின் உச்சிப் பகுதியில் (யாரும் அதிகம் அத்தனை உயரத்துக்குச் செல்வதில்லை . இந்த கோவில்கள் இருக்கும் பகுதி வரை மலை ஏறி விட்டு இறங்கி வந்து விடுவார்கள் ).
வயதான கோலத்தில் தாடி வளர்ந்த அனுமன் நிற்கிறார் மலையின் குளிர் காற்றை அனுபவித்த வண்ணம்.
சரி இவ்வளவு உயரத்தில் இங்கே எதற்காக இந்த மழையிலும் குளிரிலும் அனுமன் நின்று கொண்டு இருக்கிறார்??இங்கே இதற்கும் ஒரு கதை இருக்கிறது . இராமாயணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வடிவைக் கொண்டு இருக்கிறது ... அடுத்து அந்தக் கதையையும் கேட்போம் ...இதிகாசங்களும், செவி வழிச் செய்திகளும் நம்ப இயலாதவையாக இருக்கின்ற போதிலும் அவற்றுக்கு ஏதோ ஒரு அடிப்படை இருக்கின்றது, நம்பிக்கை என்பது ஒரு பலம் மனித குலத்துக்கு என்ற எண்ணங்களோடு, இந்த பாண்டுங்கான் பகுதியை முடிக்கிறேன்.. அடுத்த பகுதியில் சாவகத்தின் இன்னொரு ஊரில் சிந்திப்போம் ....
கருத்துகள்
கருத்துரையிடுக