எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-12 .தசமுகன் -சாவக இராமாயணம்

12 . தசமுகன் -சாவக இராமாயணம் 

சரி, சென்ற பதிவில் அனுமன் ஏன் இந்த பாண்டுங்கான் மலையின் உச்சியின் மீது  நின்ற கோலத்தில் தனிமையில் இருக்கிறார் என்ற வினாவோடு முடித்து இருந்தேன்.  அத்துடன் இராமாயணமும், மகா பாரதமும் அகண்ட பாரதம் முழுவதும் வியாபித்து, தென் கிழக்கு நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம்  மற்றும் மியான்மர் என்று இன்றைக்கு பெயர் வழங்கப்படும் அந்த நாட்களின் இராச்சியங்களிலும் எண்ணிலா ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தே வழங்கி வந்து இருக்கின்றன என்றும் கண்டோம்.  ஆயினும், நாட்டுக்கு நாடு, பகுதிக்குப் பகுதி அந்தந்தக் கலாச்சாரத்துக்குத் தக்கபடி சிறிய மாற்றங்கள் உண்டு.

எடுத்துக்காட்டாக ,இராமனும் சீதையும் முதன் முதலில் சந்திக்கும் காட்சியே ஒவ்வொரு  பகுதிக்கும் ஏற்றவாறு மாறுபட்டு ஒவ்வொரு கவிஞரின் வார்த்தைகளிலும் வெளிப்படும்.  வட இந்திய இராமாயணத்தில் வால் மீகியும் சரி, துளசி தாசரும் சரி இவர்களின் முதல் சந்திப்பை ஒரு தெய்வீக நிலையோடு பொருத்தி இருப்பார்கள் .

துளசிதாசர் தான் எழுதிய காவ்ய இராமச்சரித்மானஸ் (kavya Ramcharitmanas)இல்  இராமர் தனது இளவல் இலக்குவனுடன் தனது குருவின் ஆசியுடன் வழிபாடு நடத்த மலர்கள் கொய்வதற்காக நந்தவனம் வருவார். அதே வேளையில் அன்னை சீதா தேவி, பார்வதியை வழிபட அதே இடத்துக்கு வருகிறார். அந்தச் சோலையில் அவர்களது சந்திப்பு, அதாவது தெய்வீக எண்ணத்தில் இருவரும் ஆழ்ந்து இருக்கும் பொழுது நடை பெற்றதாக ஒரு சூழலை காட்சிப்படுத்துவார்.

வால்மீகி மிகவும் ஆச்சாரம் மிக்கவர்.  பெண்கள் ஆண்களைப்  பார்ப்பதே அனாச்சாரம் என்று எண்ணுபவர். அவர் வார்த்தையில் இராம சீதா முதல் சந்திப்பு நிகழ்வது சுயம்வர  நிகழ்வில் தான்.

ஆனால் நமது கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த முதல் சந்திப்பை அப்படியே உயிரில் கலந்த உறவாய் வடித்து இருப்பபான், சிறிதும் காப்பிய நாயக  நாயகியின் கண்ணியம் குறையாமல்.

நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி. விழியில் விழுந்து, மனதில் நுழைந்து, உயிரில் கலந்த உறவானது எத்தனையோ ஜென்மத்திற்கு முன் இருவருக்கும் விழுந்த பந்தம்... 'சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்' என்ற நமது தலைப்பைப் போல.கம்பனின் பாடலைப்  பாருங்கள்.

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்..

அதாவது, இராமனும் சீதையும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லையாம. இவர்களது கண்களின் கலப்பு 'எதேச்சை' யாக நடந்தது.  சரி மேலே கண்ட பாடலில் எங்கே 'தற்செயல்' அல்லது 'எதேச்சை' என்ற வார்த்தை அல்லது குறிப்பு வந்திருக்கிறது?

கம்பன் கவிச்சக்கரவர்த்தி ஆயிற்றே.. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்..  என்று இரண்டு முறை 'உம்' போட்டிருப்பான்.  'அண்ணல் நோக்கினான், அவள் நோக்கினாள்' என்று எழுதி இருக்கலாம். அன்றில் 'அண்ணல் நோக்கினான், அவளும் நோக்கினாள்' என்றாவது போட்டு இருக்கலாம். இரண்டு 'உம்' மில் தான் அந்த 'தற்செயல்' நிகழ்வு படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வருடமும் மழை  பொய்த்து விட்டது என்றால், மற்ற வருடங்களைப்  போல இந்த வருடமும் என்று பொருள். அதே வேளை இவனும் வெளியே வந்தான் அவளும் உள்ளே வந்தாள், இருவரும் முட்டிக்கொண்டனர் என்றால் இது தற்செயலாய் நடந்த செயல் என்பது தானாகவே புரிந்து விடும்.  அதுதான் அந்த 'இரட்டை உம்'மின் தனித்துவம். 

ஏன் இதை இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் தமிழகத்தின் கலாச்சாரம் ஒருவரையொருவர் கண்டு விரும்பி மனத்தால் காதல் செய்து பின்னர்  மணப்பது எனபது.  அதனால் தான் என்னவோ கம்பனுக்கு பெரியவர்கள் ஏற்பாடு செய்த  சுயம்வரம் மூலம் தான் இவர்கள் அறிமுகம் நடந்தது என்று சொல்ல மனம் வரவில்லை.

இதைப்போலவே இராம காதையின் ஒவ்வொரு காட்சியும் அந்தந்த பூமியில் அவர்களது கலாச்சாரத்தைத் தழுவியே புனையப்பட்டு இருக்கிறது.  இப்போது இராமாயணத்தின் யுத்த காண்டம் வருவோம்.  இராமனுக்கும் இராவணனுக்கும் கடும் போர் நடக்கிறது.  அந்த யுத்த காண்டத்தின் ஒவ்வொரு பாடலும்  பல்வேறு பின்புலத்தில்  (Background ), பல்வேறு காட்சி அமைப்புகளுடன், பல கேமரா கோணங்களில் நமக்குக்  காட்டுவார் கம்பர்.   கம்ப இராமாயணத்தின் படி இராம பிரானின் அம்பு மழையில்  குளித்த இராவணின் உணர்வு  மங்கி, உயிர் ஊசலாடும்.  கம்பர் எழுதுவார் :

வாய் நிறைந்தன, கண்கள் மறைந்தன,

மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன

தோய்வுறும் கணை, செம்புனல் தோய்ந்தில

போய் நிறைந்தன, அண்டப் புறம் எலாம்.

 

மயிரின் கால்தொறும் வார் கணை மாரி புக்கு

உயிரும் தீர      உருவின் ஓடலும்,

செயிரும் சீற்றமும் நிற்க, திறல் திரிந்து

அயர்வு தோன்ற, துளங்கி அழுங்கினான்

 


அதை விட இராவணன் விழுந்தவுடன் வானரங்கள் இராவணனின் உடல் மீது குதித்துக்  கும்மாளமிடும்...

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற செல்வத்தின் பன்மைத் தன்மை

நிலை மேலும் இனி உண்டோ ? நீர்மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே

தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி,

மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள், வரம்பு இலாத.

மலை மீது நின்று குத்தாட்டம் போட்டுக் கூத்தாடும் குரங்குகள் போல வீழந்த  இராவணனின் தலை மேலும், தோள்  மீதும், முதுகின் மீதும் தாவிக் குதித்து விளையாடின. அந்தக் காட்சி, ஆடி அடங்கும் நீர்க்குமிழி வாழ்க்கையில் கைக்குக் கை மாறும் பணத்தால், எவரின்  நிலை எப்போது எப்படி மாறும் என்று  தெரியாது என்று இராவணின்  நிலையை கரைந்த  செல்வத்தோடு ஒப்பிட்டு இருப்பார் .

அது எல்லாம் சரி.... இந்தோனேசியாவில் அநுமானைப் பற்றிச் சொல்கிறேன் பேர்வழி என்று கம்பன் கவி இன்பம் பற்றிக் கதை அளந்து கொண்டு இருக்கிறானே என்றுதானே நினைக்கிறீர்கள்?.  இராவணன் உடலாய் விழுந்து கிடந்த காட்சியும் அதன் மேலே  கும்மாளம் இடும் குரங்குகளின் காட்சியும் என் மனத்திரையில் வந்து போயின, சென்ற பகுதியில் பான்டுங்கான் மலை உச்சியில் நாம் கண்ட அனுமனைத் தரிசித்த வேளை…

RAMAYANA IN JAVANESE KEKAWIN FORMAT

முன்பு நான் செமராங் நகரில் வசித்த  போது  நான் குடி இருந்த வீதியின் பெயர், 'ஜலான் காவி' (JALAN KAWI ) என்று எழுதி இருக்கும், (ஜலான் = வீதி/ தெரு).  காவி என்பது ஏதோ ஜாவானியப் பெயர் என்று நினைத்து இருந்தேன் அந்தக் காலத்தில். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சாவக மொழி புரிய  ஆரம்பித்த பொழுது தான்  தெரிகிறது, காவி என்று அழைக்கப்படும் சொல் நமது கவி அல்லது கவிதையாத்தான் குறிக்கிறது என்று.  கவி என்பது பேச்சு வழக்கில் காவி என்று உச்சரிக்கப்படுகிறது.  சாவகத்தின் பண்டைய செய்யுள் வடிவம் 'கெகாவின்' என்று அழைக்கப்படுகிறது. கவி என்பவனின் படைப்பு, சாவகச் சொற் பிறப்பியல் ரீதியாக இணைப்பு சொல்லாக 'க' என்ற முன்னொட்டும் (Prefix) மற்றும் 'ன்' என்ற பின்னொட்டும் (suffix ) சேர்ந்து  'கெகாவின்' ஆகி இருக்கிறது.  இராமாயணா, பாரதயுத்தா, அர்ஜுனவிவாஹா, ஸ்மாரதஹனா (காமன் தகனம் ), சுத்தசோமா (புத்தரின் மீள் பிறப்பு பற்றிய நூல்), நகராகர்த்த ஆகமா ( அரசு, ஆட்சி, நகரங்கள் பற்றிய வருணனை), சுமனசந்தகா (காளிதாசரின் ரகுவம்ச நூலைப் பின்பற்றியது), குஞ்சரகர்ணா (புத்த தர்ம நூல் )ஹரிவம்சா (கிருஷ்ணன் கதை)

பார்த்தயக்னா ( அர்ஜுனன் தவம் என்று கொள்ளலாம்), சிவராத்திரி கல்பா (சிவராத்திரி இரவில் செய்ய வேண்டிய வழிபாட்டு  முறைகள்)  என்று  பல நூல்கள் கவி வடிவில் ( கெகாவின்) சாவக மொழியில் இருக்கின்றன.  இன்று கிடைக்கும் இவற்றில் பெரும்பாலும் கி.பி.700 முதல் கி.பி. 1300 வரையான கால கட்டத்தில் இயற்றப்பட்டவை.  நாம் இப்போது அனுமனைப்  பற்றி பேசுவதால்  சாவக இராமாயணத்தை மட்டும் ஒரு பார்வை பார்ப்போம்.

ஸ்ரீ மஹாராஜா ராக்கை வதுகுரா தியா பாலிதுங் ஸ்ரீ தர்மோதய மஹாசம்பு (Rakai Watukura Dyah Balitung Sri Dharmodaya Mahasambu) எனும் சஞ்சய வம்ச இந்து மன்னன் ஆட்சிக்காலத்தில்  ( 10 Mei 898 - 21 Desember 910 M ) சாவக்க் கவி நடையில் எழுதப்பெற்றது.  கீழ்த்திசை நாடுகளில் பாரதத்தின் இதிகாசங்களின் ஆதிக்கத்தை ஆய்ந்து எழுதிய மனோமோகன் கோஷ் (MANOMOHAN GOSH - Indian sanskritist, historian and literary translator)அவர்களின் கூற்றுப்படி இந்த சாவக இராமாயணம் வாலமீகி எழுதிய இராமாயணத்தின் தழுவல் அன்று. மாறாக பாரதத்தில் பட்டிகாவ்யா என்பவரால் எழுதப்பட்ட 'இராவண வதம் ' என்ற நூலின் சாவக மாற்றுருவே இந்த இராமாயாணம் என்பார். 

MANOMOHAN GOSH-THE RESEARCHER OF INDIAN ARTS IN SOUTH EAST ASIA

இந்த இராமாயணத்தின் யுத்த காண்டம் கம்ப இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் இருந்து நிறைய வேறுபடுகிறது. இப்போ, சாவக இராமாயணத்தின் படி நாம் எல்லாம் யுத்தக் களத்தின்  பாதுகாப்பான ஒரு ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்போமா....

தசமுகனுக்கும் (இராவணனை சாவக இராமாயணம் அதிகமாக தச முகன் / பத்து  முகன்  என்றே குறிக்கிறது) அனுமனும் சுக்ரீவனும் நடத்தி வந்த வானரப்படை வீரர்களைக்  கொண்ட சேனைத் தலைவன்   இராம பிரானுக்கும் இடையில் போர் நடக்கிறது.  இராமன் பல்வேறு வகையான ஆயுதங்களை பிரயோகப்படுத்தியும் தசமுகனின் உயிர் அழியவில்லை.  திடீரென்று ராவணன் தனது தேரை மிதித்து, வானரப் படையின் நடுவில் புகுந்தான்.  அவனது சாட்டை வீச்சு இருபுறமும் நெருப்பை உமிழ்ந்தன. வானர வீரர்கள் இந்த வலியினைத் தாள இயலாத  நிலையில் தரையில் கிடந்தனர்.   பதிலடி கொடுக்க அனுமன் இலங்கை மன்னனை எதிர்கொண்டான். அனுமனது இடியுடன் கூடிய உதைகளுடன் அங்கும் இங்கும் துள்ளுவதில் அவனுடைய வேகமும் இராவணனால் தாக்குப்பிடிக்க இயலாததாக  ஆனது. 


குழப்பமடைந்த இராவணன் உலகத்தையே காரிருள் சூழும் வண்ணம் ஒரு. ம்ந்திரத்தை ஏவினான்.  அண்டம் எல்லாம் கரும் மேகங்கள் சூழ காரிருளில் மூழ்கியது.  காரிருள் நடுவே மின்னல் மின்னி பஞ்சவடி வீரர்களை எரித்தது. இராமர் இது மந்திர நிகழ்வென்று அறிந்து பிரம்ம அஸ்திரத்தை ஏவ,  கரும் மேகங்கள் அழிந்தொழிந்தன. மாண்டவர் மீண்டனர்.  போர் தொடர்ந்தது.

பல விதமான உருவங்களில் தசமுகன் மாற அதனை இராமன் முறியடிக்க யுத்தம் என்பது ருசியா -உக்ரைன் போர் போல முடிவுக்கே வராமல் தொடர்ந்தது.  இப்போது ராவணனின் கதையை , இராமன் கியாய் டாங்கு (kyai Dangu ) என்ற மந்திர ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.  இராவணன் எங்கு ஓடினாலும் கியாய் டாங்கு  அவனைப் பின் தொடர்ந்து அவனை வெட்டிக்கொண்டே இருந்தது.   இப்போது நிலைமையை நன்கு புரிந்து கொண்ட அனுமன் கியாய் டாங்கு உடன் தானும் சேர்ந்து பறந்தார்.  இருவருக்கும் இடையில் பறந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கின்ற இராவணன் அங்கே இருந்த இரண்டு மலைகளுக்கு நடுவே சென்று  மறைந்து கொள்ளுமாறு வியூகம் (STRATEGY ) வகுத்தார் .  அனுமன் திட்டமிட்டது போலவே தசமுகன் அங்கே இருந்த சோந்த்ரா' மற்றும் சோந்தரி' மலைகளுக்குள் மறைந்து கொண்டால் கியாய் டாங்கு தன்னைத் தேடி உட்புக முடியாது என்று முடிவு செய்து உள்ளே சென்று மறைந்தான்.

 


யார் இந்த 'சோந்த்ரா' மற்றும் சோந்தரி' ? சாவக இராமாயணத்தின் படி அந்த இரண்டு மலைகளும் இராவணனுக்கு இரட்டை மக்களாகப் பிறந்த 'சோந்த்ரா' மற்றும் சோந்தரி' (Sondara and  Sondari) ஆவர்.  சீதா தேவியை தசமுகன் கடத்தி வந்த போது சீதையை ஏமாற்றுவதற்காக கொல்லப்பட்ட இரட்டையர் தான் இவர்கள். அவர்களின் இரண்டு தலைகளும் இரட்டை மலைகளாக அங்கே நிற்கின்றன.

 

RELEIF IN PRAMBANAN TEMPLE-8TH CENTURY-CENTRAL JAVA

 அந்த  இரண்டு இரட்டை மலைகளுக்கு இடையில் தசமுகன்  மறைந்திருந்த போது, ​​அந்த ராட்சச மன்னன் அசையாமல் இருக்க, அந்த இரண்டு மலைகளும் ராவணனின் உடலை மெதுவாக அழுத்தின. முன்னர் விதைத்த வினை இங்கே அறுவடை ஆகிறது இராவணனுக்கு. இந்த மலைகளின் பிடியில் அசையாமல் இருக்க வேண்டிய சூழல் கியாய் டாங்கு என்ற பாணம் விடாமல்  இராவணன் உடலில் தைத்துக் கொண்டே இருந்தது. 

இந்த தருணத்தைப் பயன்படுத்திய அனுமன் கென்டாலி சோடோ என்னும் மலையை (KENDALISODO HILL -A  mountain near  semarang, Central Java )க்  கொண்டு இராவணன் இருந்த இரு மலைகளையும் மூடினார்.  கியாய் டாங்கு மெதுவாக மறைந்து இராமனிடம் சேர்ந்தது. . அதாவது இராமனின் இன்னொரு வடிவம் தான் இந்த கியாய் டாங்கு, எனவே இராவணன் அழிந்து பட்டது இராமனிடம் தான்.

 


மலை இடைவெளியில் காற்றுக் குமிழ்கள் வெளியேறின. இவை இராவணனின் கொடூரக் குணம் என்றும் அந்தக் குமிழிகள் காற்றில் கலந்து பரவுகின்றன என்றும், இறை நம்பிக்கையில் பலவீனர்களை  அந்தக் கெட்ட குமிழ்கள் பிடித்துப் பீடித்துக் கொள்ளும் என்ற ஒரு நம்பிக்கை சாவகத்தில் இன்றும் நிலவுகிறது.  அந்த இரண்டு மலைகள் தான் நாம் சென்ற பகுதியில் ஏறிச் சென்று பார்த்து வந்த பாண்டுங்கான் மலை. 

  


அது மட்டும் அல்ல, இன்னொரு நம்பிக்கை , அன்றைய போரில் இறந்தது தசமுகனின் உடல் மட்டுமே. உயிர் இன்னும் புதையுண்ட உங்கரான் / பாண்டுங்கான் மலைக்கு அடியில் இருக்கிறது.  அதனால் தான் இந்த மலை உச்சியில் மீது நின்று வயதான நிலையிலும் அனுமன்  எவருக்கும் தீது நேராமல் காவலாக நின்று வருகிறார் என்று இந்த மக்கள் கதை சொன்னார்கள்.

 


ஒவ்வொரு  பகுதியிலும் அவரவர் நம்பிக்கையின் படி ஒவ்வொரு கதைகள், அந்தந்த மண்ணின் பங்களிப்புடன்.. எமது தேவகோட்டை நகருக்கு அருகில் 'கண்ட தேவி' என்று ஒரு இடம்.  அனுமன் இலங்காபுரியில் சீதையை கண்டு வந்து இராமனிடம் 'கண்டேன் தேவியை' என்று உரைத்த இடம்... இப்படி ..பல..

அதனால் தான் ஆயிரம்  ஆயிரம் ஆண்டுகள் ஆன போதிலும், நமது இதிகாசங்கள் நின்று நீடூழி என்றும் வாழ்கின்றன .

தொடர்வோம் ...பயணம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60