15.பல்லவ இராஜ சிம்மன் - சாவக தேவ சிம்மன் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது

 15.பல்லவ இராஜ சிம்மன் - சாவக தேவ சிம்மன்

அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,,,

தமிழகத்தில் 'அகத்தியம்' என்னும் மொழி இலக்கணம் வகுத்த அகத்தியரை கடல் கடந்து இங்கே சாவகத்தில் சந்தித்தோம்.  இந்தத் தொடரைத் தொடங்கும் முன்னரே ஒரு முன் மொழி. நமது இந்தத் தொடர் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் நமது பாரத நாட்டின், தமிழகத்தின், நமது இனத்தின் தொடர்பின் வேர்களைத் தேடி நம்முள் பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கத்தோடு தான் ஆய்வுகளின்  அடிப்படையில் எழுதப்படுகிறது.  சரித்திரச் சான்றுகள் என்ன இருக்கிறதோ அதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.  அந்தந்தக் கால கட்டத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மொழி ஆதிக்கம் நிகழ்ந்து இருக்கிறது.  இன்றைய கால கட்டத்தின் கண்ணோட்டத்தோடு பல நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை நோக்கக் கூடாது.  நமது விருப்பு வெறுப்புகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்காமல் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பதிவு நீள்கிறது.


பல்லவர் பற்றி பெருமை பேசும் அதே வேளையில் பல்லவர் சமக்கிருதத்துக்கே முன்னிலை கொடுத்தார்கள், தமிழுக்கு அல்ல என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு.  உண்மையில் அன்றைக்கு ஆளுமையில் இருந்த  சமய மொழிகள் புத்த மதக்  கோட்பாடுகளைக் கொண்டிருந்த 'பாலி' மொழியும், சமண மதத்தினர் பயன் படுத்தி வந்த சூரசேனி (Digambara Sauraseni)யும். இந்த இரண்டு மொழிகளையும் எழுதப் பயன் படுத்திய மொழி வடிவம் பிராகிருதம் (Prakrit).  பல்லவர்களின் ஆரம்பக் கால 3 பட்டயங்கள் இந்த பிராகிருத மொழி வடிவில் தான் இருக்கின்றன. பிராகிருதம் இன்றைக்கு நாம் பார்க்கின்ற வைதீக சமயத்தோடு எள்ளளவும் தொடர்பு இல்லாதது.

இரண்டாவது கால கட்ட பல்லவர்களின் பட்டயங்கள் சமக்கிருதத்துக்கு மாறுகின்றன. சரி ஏன்  மாறின ?  ஏனெனெனில் புத்தமும் சமணமும் சமக்கிருதத்துக்கு மாறின.  திரிபிடகம்(Tripiaka) என்பது புத்தரின் போதனைகளை அடக்கிய சமக்கிருதத்தில் எழுதப்பெற்ற   நூல்.  பாஹியான்  (Fa Xian, Fa-Hien அல்லது Fa-hsien, கிபி 337 – கி. 422) எனும் புத்தத் துறவி இந்தியாவுக்கு வருகை புரிந்ததே சமக்கிருதத்தில் இருந்த திரி பிடகத்தை சீன மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டியே.  பாஹியான் காசியில் வந்து தங்கினார். மீண்டும் சீனாவுக்கு இலங்கை மற்றும் சாவகம் வழியாகத் திரும்பச் சென்றார்.



அப்படித் தான் இடைக்கால  பல்லவர் பட்டயங்கள்  பிராகிருதத்தில் இருந்து சமக்கிருதத்துக்கு மாறின. அவையும் பல்லவர் ஆந்திராவில் இருந்த காலத்தில் பொறிக்கப்பட்டவையே அன்றி தமிழகத்தில் இருந்து அல்ல.  அது சாதவாகனர் ஆட்சிக்  காலம், பல்லவர் அவர்களுக்கு கீழே இருந்த காலம்.

அடுத்த 3 ஆவது கால கட்டமான தமிழகத்தில் பல்லவர் நின்று நிலைத்து ஆட்சி புரிந்த கால கட்டத்தில் சிம்ம விஷ்ணுவுக்கு (556-590 CE) பிறகு அவர்களது பட்டயங்கள் அனைத்தும் தமிழ் கிரந்தத்தில் தான் இருந்தன.  தமிழகத்தின் காஞ்சி மாநகரம் கிழக்கு தூர தேச நாடுகள்  அனைத்திலும்  அறியப்பட்ட மாநகரமாக விளங்கி இருக்கிறது என்றால் நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்?



அந்தக் கால கட்டத்தில் சமக்கிருதம் என்பது இன்றைக்கு நினைப்பது போல பிராமணர்களின் மொழியாகவோ, வைதீக மொழியாகவோ இல்லை. பிற்காலத்தில் தான்  பிராமணர்கள் சமக்கிருதம் தேவ மொழி என்று சொல்லிக்கொண்டார்கள் .

 ஒரு மொழி என்பது அது பேசப்படும் நிலத்தினை தன்னுள் வாங்கிக் கொண்டு வட்டாரத்துக்கு வட்டாரம் தனித்தன்மையோடு இருக்கும். உதாரணமாக மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத்தமிழ் என்று வட்டார நிலத்தின் மணம் அந்த மொழியில் வீசும். ஆயின் அது போன்ற எந்த ஒரு நிலத்துக்கும் சொந்தம் என்று வரித்துக் கொள்ளும் மண் உறவும் சமக்கிருதத்துக்கு இல்லை.  சமக்கிருதம் குறிப்பிடும் சரஸ்வதி நதி இன்று எங்குமே இல்லை.   சமக்கிருதம் குறிப்பிடும் குதிரை எனும் விலங்கு சிந்து வெளியில் இருந்ததே இல்லை.  ஆக  சமக்கிருதம் என்பது ஒரு மொழியே இல்லை. பலரும் சேர்ந்து நடை முறையில் இருந்த மொழிகளில் பல வார்த்தைகளை சேர்த்து பொதுவான தொடர்பு மொழியாக உருவாக்கியதே அதாவது சமைத்தே சமக் கிருதம். சமைக்கப்பட்ட கிருதம் சமக்கிருதம்.

இந்தோனேசியாவின்  தமிழக பாரதத்  தொடர்புகள் பற்றி எழுதப்புகும் வேளை பல்லவர் பற்றி பேசுகிறோமே  என்று நினைக்காதீர்கள்.  தொடர்பு இருக்கிறது.  பல்லவர்கள் சாவகத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வு நெறி இங்கே படி எடுத்தது போல அப்படியே காணப்படுகிறது.  சாவகத்தில் பல கல்வெட்டுக்கள் சமக்கிருதத்தில் கண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றன.  அந்தக் காலத்தை உங்கள் கண் முன் கொண்டு வரவே மேற்கண்ட பல்லவர் பற்றிய குறிப்புகள் .

பலருக்கும் பல்லவர்கள் அந்தணர்கள் என்று ஒரு எண்ணம். அப்படி அல்ல.  சர்மா என்பது அந்தணர்களின் பட்டம் ஆயின் வர்மா என்பது சத்ரியர் எனும் போர்த்தொழில் வீரர் குல அரசர் தம் பட்டம்.  வர்மன் என்னும் பட்டம் பின்னர் சேர, சோழ,பாண்டிய மன்னர்கள் தங்கள் பெயருடன் வைத்துக் கொண்டதைப் போலவே இங்கே இந்தோனேசியாவில், சாவகத்தின் மன்னர்களும் "வர்மா"  எனும் பட்டத்தை இணைத்தே பயன் படுத்திக்க கொண்டனர். இன்றளவும் வர்மா எனும் பெயர் இங்கே பயன் பாட்டில் இருக்கிறது.  இதுவே தமிழகத்தின் தொடர்பு எந்தளவு இந்தோனேசியாவில் இருந்து இருக்கிறது என்று காணலாம்.

சரி... நாம் தொடங்கிய அகத்தியர் பற்றிப் பார்ப்போம்.  தமிழகத்தில் மட்டும் 163 இடங்கள் அகத்தியர் வழிபாட்டுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதி என்று  இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் அகத்தியர் தொடர்புள்ள கோவில்கள் இருக்கின்றன.  

இப்போது சாவகம் வருவோம்.   வரலாற்றில் சேர சோழர் பாண்டியர் என்ற மூவேந்தர்கள் ஆண்ட பகுதிகளின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள்.  மாமல்லபுரத்தை தலை நகராகக் கொண்டு கடல் கடந்து தமிழரின் கலையைத்   தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் விதைத்தவர்கள் பல்லவர்களே. பல்லவர்களின் அனைத்து நகர்வுகளின் வெளிச்சத்தையும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணலாம்.  சைவமும், வைணவமும் தமிழகத்தில் செழித்து விளங்கிய போது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இதே சமயங்கள் பெருமையுடன் நிமிர்ந்து நின்றது.  பின்னர் காஞ்சி மாநகரைத்தலைநகராகக் கொண்டு  பௌத்தம் தழைத்த பொழுது,  பௌத்தம் தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் விரவி நின்றது.  பல்லவர் கோவில்களின் அமைப்புதான், கம்பூச்சிய  அங்கோர் வாட், சாவகத்தின் சண்டிகள் எல்லாம்.  இதே பாணியில் அமைந்த கோவில் தான் தஞ்சைப் பெரிய கோவில் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். இந்த பாணியில் அமைந்த கோவில்களை இனி சாவகத்தில் ஒவ்வொன்றாக இயன்ற வரை அந்தக் கால கட்டத்திற்கே சென்று காண்போம்.

மத்திய சாவகத்தின் சண்டிகள் என்றழைக்கப்படும் சிவன் கோவில்கள் எல்லாம் ஒரு ஒழுங்கு விதியாக, கர்ப்ப கிரகத்தில் கிழக்கு நோக்கி யோனியுடன் அமைந்த சிவலிங்கம் , மேற்கு நோக்கி பிள்ளையார், தெற்கு நோக்கி அகத்தியர் (பதார குரு  என்ற பெயரில்), வடக்கு நோக்கி மகிடாசுர மர்த்தினி.  ஆனால் அகத்தியருக்கு என்று ஒரு கோவில் எழுப்பட்டதாக கீழைச்சாவகத்தில் ஒரு கல்வெட்டு குறிக்கிறது.

வாருங்கள்.... கால எந்திரத்தில் பின்னோக்கி கி.பி. 690 க்குச் செல்வோம். நேராக கோரமண்டலக் கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடா கடந்து நமது தமிழக கடலோடிகள், வணிகர்கள், அரசர்கள், வீரர்கள், யானைகள் இவற்றைச் சுமந்த தமிழக நாவாய்கள் கடந்து சென்ற கடல் வழியே நாமும் சென்று சாவகம் அடைவோம்.  கிழக்குச் சாவகம் நோக்கி பயணிப்போம்.

இப்போது நமது காலம் 7 ஆம் நூற்றாண்டு....என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கால கட்டத்தில் மத்திய சாவகத்தில் 'சைவம்' பின் பற்றிய சஞ்சய அரசர்களைப்  பின்னுக்குத் தள்ளி புத்த மதம் தழுவிய 'சைலேந்திரர்' களிடம் செங்கோல் மாறுகிறது.  இந்தத் தொடரின் 9 ஆவது அத்தியாயத்தில் கி.பி. 700 ஆம் ஆண்டு வாக்கில் சைவ சஞ்சய அரசனால் சைலேந்திர பேரரசின் அன்புக்கு (அல்லது தாஜா செய்வதற்கு) புத்த பெண் போதி சத்வரான தாரா தேவிக்கு மத்திய சாவகத்தில் எழுப்பப்பட்ட 'கலசான் புத்த கோவில்' பற்றிப்  பார்த்தோம்.  

அந்தப் பகுதியை வாசிக்காதவர்கள் சொடுக்குக :  

குறுநில மன்னர்களின் ஆதரவு என்றைக்குமே பேரரசுக்குத் தேவை. மொகலாயர்கள், ஆங்கிலேயர் நமது  நாட்டைப் பிரித்து வரி வசூலுக்கு கொடுத்தது போலவும், நாயக்கர் பாளையங்களாகப் பிரித்துக் கொடுத்தது போலவும் தான்....   அரசியல், வணிகம், சமயம் இவை மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஒன்று கெட்டால், மற்றவையும் மாறுபடும்.   

சைலேந்திர மன்னர்கள், புத்த கொள்கை உடைய மலாய் பிரபுக்கள், வீரர்கள் மற்றும் துறவிகள் புடை சூழ தமது சக்கரவர்த்தியான மஹாராஜா தர்மசேது (MAHARAJA DHARMA SETU) வுக்கு விசுவாசமாக நடந்து கொண்டு தங்கள் மண்டலங்களை ஆண்டு கொண்டு இருந்தார்கள்.

சாவகத்தின் சைவ நெறியினரான   'சஞ்சயா பரம்பரையின'  நிலக்கிழார்கள், சைலேந்திரர்களுடன் ஒத்துப்  போவோம் என்ற ஒப்புகையின் மூலம் அவரவர் பூமியின் மீது தமது முந்தைய ஆதிக்கத்தை  விட்டுக்கொடுக்காது, சாவகத்தின் பெரும்பகுதி நிலப்பரப்பினையும்,  மக்களையும் ஆட்சி செய்து வந்தனர்.  இங்கே பணிந்து போனாலும் தமது தமது சைவ நெறிகளுக்கு புத்த மதப் பேரரசிடம் இருந்து மரியாதை குறைகிறது என்ற மனக்குமுறல் குறு நில மன்னர் களிடம் இருந்து தான் வந்தது.

கிழக்குச் சாவகத்தில் இந்த அடிமைத் தனத்தை ஏற்றுக்கொள்ளாது சைலேந்திரரைப் புறக்கணித்த குறுநில மன்னன் தான் 'தேவ சிம்மன்'.  இந்த சரித்திரப் பின்னணியோடு திரும்பி மாமல்லபுரத்தை நோக்குங்கள்.  தமிழகத்தில் 'இராஜ சிம்மன்' என்ற இரண்டாம் பல்லவன் சைவ நெறிகளோடு ஆட்சி நடத்தி வருகிறார்.  தேவ சிம்மன் என்ற மன்னன், கிழக்கு ஜாவாவின் இன்றைய மலாங் (MALANG ) பகுதியில் , கஞ்சுருவான் (KANJURUVAN ) என்ற குறுநில மன்னனராக திகழ்கிறார். 

 


7 ஆம் நூற்றாண்டின் இறுதிப்  பகுதியான கி.பி.690 இல் பல்லவ சாம்ராஜ்யத்தில் கொடி  கட்டிப்பறந்தவன் இராஜ மல்லன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம வர்மன்.  காஞ்சியில் கைலாச நாதர் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.  சிவ பக்ததானான இந்த மன்னரின் கீர்த்தி உலகறிந்தது. இவரது இன்னொரு பெயர் 'இராஜ சிம்மன்' என்பதை மட்டும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

சாவகத்தில், தேவ  சிம்மனுக்கு அடுத்து பட்டத்துக்கு வந்தவன் அவனது மகனான 'லிம்வா' (LIMWA) எனும் 'கஜாயணா ' (GAJAYANA).  அவனது மகளின் பெயர் உத்தேசனை (UTTEJANA).  இந்த உத்தேசனை 'பரத புத்ரா' (PRADA PUTRA ) என்ற மன்னனை மணந்தாள் . இவர்களுக்குப்  பிறந்த பெண் மகவு, அ -நானா  (A -NANA ), சைவ சமய சித்தாந்தகளிலும், குறிப்பாக 'அகத்திய ரிஷி' இடத்தும், அந்தணர்களிடமும்  பெரும் மரியாதை கொண்டவள்.  அரசர் கஜாயணாவின் பேத்தியான நானா எதிரிகளின் (பௌத்த சைலேந்திரர்களின் ) பலத்தைக் குலைப்பதற்கும், தமது மண்ணைக் காக்கவும், தமது இராச்சியத்தில் குருவாக மதிக்கப்படும் 'அகத்தியருக்கு' அழகான கோவில் எழுப்பும்படி மண்டலத்து மக்களையும். நிலக்கிழார்களையும் வேண்டிக் கொண்டாள் .  சைவத்தில் திளைத்த பாரம்பரியத்தில் வந்த கஜாயணா வின் இராஜாங்கத்தில் ஏற்கனவே சந்தன மரத்தில் செய்யப்பட்ட அகத்தியரின் சிலை கோவிலுள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தது.  அந்த சந்தனச் சிலையைப் பரிசீலித்த மன்னன், அதற்கு மாற்றாக காலத்தால் அழியாத வண்ணம் கருங்கல்லில் அகத்தியருக்குச் சிலை எடுக்க வேண்டும் என கல் தச்சர்களை வரவழைத்தான்.  (இங்கே ஒரு செய்தி, கோவில்களை முதன் முதலில்  கற்றளியாக மாற்றியவன் மாமல்லனான, இராஜ சிம்மனே. ஏறத்தாழ ஒரே கால கட்டம்).  

சக வருடம் 682 (கி.பி. 760) மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை, மாதத்தின் மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 'ஆருத்ரா' நட்சத்திரத்தில் பூசாரிகள், வேத விற்பன்னர்கள், துறவிகள், வேதாந்திகள் புனித நீர் கொண்டு 'கும்ப முனியின்' கருங்கற் சிலைதனை நிர்மாணித்தார்கள் . குடமுழுக்கு வைபவத்துக்காக, 'யாகசாலை' நிறுவப்பட்டு வேத விற்பன்னர்கள் தங்குவதற்கு அருகிலேயே மனைகள் அமைக்கப்பட்டன.  நிலம், பசுக்கள், எருமைகள், ஆண், பெண் அடிமைகள் (பணிகளுக்காக) மன்னர் அந்தணர்களுக்கும் அந்த விழாவில் பங்கெடுத்தவர்களுக்கும் வழங்கினார்.

 


மேலே கண்ட அத்தனை  செய்திகளும் , 'டினோயோ கல்வெட்டில் ' (DINOYO INSCRIPTION ) வரி வரியாக பொறிக்கப்பட்டதுடன், இறுதியாக, இந்த நிகழ்வுகளுக்கு இடையூறு செய்ய நினைக்கும் மன்னரின் சொந்த பந்தங்கள் மற்றும் எவரும் நரகத்தில் விழுந்து  துன்பப்படக் கடவாதாக.... என்றும், மேலும் மன்னனின் இந்த புனித முயற்சி நாட்டையும் நாட்டு மக்களையும் பாது காக்கவே ... இது மன்னனின் ஆணை,... என்று  முடிகிறது அந்தக் கல்வெட்டு.

 



தற்போது இந்த இடத்துக்கு அருகில் 'பாடுத்'( BADUT) எனும் சிற்றூரில் ஒரு சிறிய சிவாலயம் இருக்கிறது.  முதலில் இந்த பாடுத் கோவில் தான் அகத்தியர் சிலை நிறுவப்பட்ட ஆலயம் என்று தவறாகக்  கருதப்பட்டது.  ஆழ்ந்த ஆய்வுகளின் முடிவில் இந்தக் கோவில் காலத்தால் பிந்தியது என்று தெரிய வந்தது. இந்தக் கோவில் 100 வருடம் பின்னால் எழுப்பப் பட்டிருக்கலாம்.  அகத்தியர் கண்டிப்பாக ஒரு நாள் வெளி வருவார் அந்த மண்ணில் இருந்து... ஏனெனில் நிறைய அகத்தியர் சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன.


மெதுவாக உங்களைக் கடத்தி காலத்தில் பின்னோக்கிப் பயணமாகி ஒரு குறு நில அரசர் வரை சந்திக்க வைத்து விட்டேன்... இந்த அரசர் பல்லவர்களின் சொந்தமாகவோ (அங்காளி ... பங்காளி ?) பிரதிநிதியாகவோ, கலப்பில் பிறந்தவர்களாகவோ இருக்கலாம்... அப்படியே பேரரசுகள் பற்றியும் அவர்களது பாரதத்  தொடர்புகள் பற்றியும் அடுத்து வரும் பகுதிகளில் காணலாம் ...

கருத்துகள்


  1. ஆஹா...
    பண்டைய நிகழ்வுகளின் அடிப்படையில் அழகுடன் ஓர் அகழ்வு ஆராய்ச்சி ...
    தெக்கத்தியான் வளர்ந்து
    திக்கெட்டும் பரவிய சேதி
    ஜோதி வடிவாய் நண்பன் முத்து மணியின் வைர வரிகளால் பிரகாசித்து
    விரிவடைந்து தமிழகம்
    சிறப்பின் அருமையும் பெருமையும் இந்த யுகத்திற்கு தெரியட்டும்
    #மேனா சீனிவாசன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60