16. தோல் பாவை நிழற் கூத்து.... - சாவக வயாங் கூளித் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)
16. தோல்
பாவை நிழற் கூத்து.... - சாவக வயாங் கூளித்
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை
இது-
அன்புத்
தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,,,
பாவைக்
கூத்து
இங்கு
இந்தோனேசியா வந்து சேர்ந்த புதிதில், ஒரு முக்கிய சாலையைக் கடந்த போது போக்குவரத்து அந்தச்சாலையில் தடை செய்யப்பட்டு இருந்தது.
என்ன காரணம் என்று விசாரித்தேன். 'அந்தப் பகுதியில்
'உபச்சாரா' நடந்து கொண்டு இருக்கிறது. அந்த உபச்சாராவின் ஒரு பகுதியாக 'பாவை' வருகிறது,
அதனால் இந்தச்சாலை இப்போதைக்கு மூடப்பட்டு இருக்கிறது', என்றார்கள். 'உபச்சாரா' , 'பாவை' என்பதெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்ட
மாதிரியே ஒரு பிரமை ஆனால் மனதுக்குள் புரியவில்லை. நானும் ஒரு 'பாவை' போலத் தலையை ஆட்டி விட்டு மாற்றுப்
பாதையில் வழி தேடித் சென்று விட்டேன். இது நிகழ்ந்தது ஆகஸ்டு மாதம், 1988 ஆம் வருடம் கீழைச்சாவாகத்தின்
சுரபயா நகரில்.
மனம்
மட்டும் ''உபச்சாரா' வையும், 'பாவை' யையும் நினைத்துக் கொண்டிருந்தன. பிறகு நண்பரிடம் பொருள் கேட்ட போது 'உபச்சாரா' என்பது
விழா என்றும், 'பாவை' என்பது அணிவகுப்பு அல்லது ஊர்வலம் என்றும் கூறினார். முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் போல் முயன்று
தேடியதில், பாவை (PAWAI) என்ற வார்த்தை தமிழில் 'பவனி' என்ற வார்த்தையைக் கடன் வாங்கியதே
என்பதும் 'உபச்சாரா' என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் இருந்து கடனாகப் பெற்றதும் புரிந்தது. பாவை என்பது தமிழில் காட்சிப் படுத்தும் நிகழ்வையும்
குறிக்கிறது. 'பவனி' என்பதும் 'காட்சிப்படுத்துவது'
தானே?
பாவை
எனும் தமிழ்ச் சொல். பலருக்கும் பிடித்த சொல். பாவையைப்
பிடிக்காது இருக்குமா எவருக்கும்?
பாவை
எனும் தமிழ் சொல்லுக்குப் பல பொருட்கள்: பெண்ணை பருவத்துக்கு ஒரு பெயர் சொல்லி அழைக்கும்
கன்னித்தமிழ். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண் என்று ஏழு பருவப் பெயர்கள். இவை
தவிர பாவை, பூவை, வஞ்சி,வனிதை, காரிகை, நங்கை என்று இரசித்து இரசித்துப் பெண்ணுக்குப் பெயர் வைத்திருக்கிறது தாய்த்தமிழ்.
பெண்ணைக் குறிப்பதைத் தவிர சிலை,(பதுமை, உருவம்), கண்ணின் கருவிழி என்பவையும் பாவையே... நற்குணமுடைய நல்லொழுக்கப் பெண்களைத் தான் பாவை என்கிறது தமிழ். திருப்பாவை,
பாவாய்!
எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய்
பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி
தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ
என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
என்றே பாவையைத் துயில் எழுப்பும்.
பெண்கள்
நோற்கும் நோன்பு 'பாவை நோன்பு'.
பாவை
விளக்கு, மரப்பாவை (பாச்சி என்பது பாவையின் திரிபு ), சித்திரப்பாவை என்றெல்லாம் நாம்
பார்த்திருக்கிறோம். தமிழ் மரபில், போரில்
உயிர் நீத்த வீரர்களுக்கு வைக்கப்படும் சிலைகளும் 'பாவை' எனப்பட்டன.
சங்க
காலத்தில் இருந்தே தமிழ் நூற்களில் 'பாவை' என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. 'ஆடிப்பாவை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பவை, அருங்கலப்பாவை'
என காட்சிக்கு நிற்கின்ற பொருட்கள் பாவை எனும் பெயரால் அழைக்கப்பட்டன அருந்தமிழில். ஆக, காட்சிப்படுத்தும் நிகழ்வு, 'பாவை' என்று ஒரு
சொல்லின் வடிவில் தமிழகத்திலும், சாவகத்திலும் இருக்கிறது என்பது புரிந்தது.
குரங்கு
மனம், பாவை எனும் கிளையில் இருந்து பாவைக் கூத்து எனும் கிளைக்குத் தாவியது.. அட...
நம்ம ஊர் தோல் பாவைக்கூத்து அப்படியே இங்கே இந்தோனேசியாவின், சாவகத்திலும் , பாலித்தீவுப்
பகுதிகளிலும் இன்னும் உயிருடன் உலவுகின்றன.
தோல்
பாவைக் கூத்து என்றழைக்கப்படும் குழந்தைகள் வரை பெரியவர் வரை இரசிக்கும் நிகழ்ச்சி,
பாரத தேசத்தில் மராட்டிய (மகா ராஷ்டிரா) மாநிலத்தில் இருந்து தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா முதலான பகுதிகளுக்குப் பரவி இருப்பதாக சரித்திரம் சான்று காட்டுகிறது. பெரும்பாலும் மகாபாரதம் மற்றும் இராமாயணம் சார்ந்த
கதையின் பாத்திரங்கள் நகைச்சுவை, போர், நடனம் இவை நிறைந்த காட்சிகளாக திரைக்குப் பின்
பாடல், இசை, உரையாடல் என்ற பின் புலத்துடன் இயக்கப்படும். விளக்கின் வெளிச்சத்தில் இந்த தோல் (பெரும்பாலும்
ஆட்டுத்தோல் ) திரையில் உரையாடலுக்கும் இசைக்கும் அசைக்கப்பட்டு திரையின் முன்னே அமர்ந்து
இருப்பவர்கள் காட்சிகளைக் காணும் வண்ணம் அமைக்கப்படும். திரைப் படங்களுக்கு முன்னோடியான இந்தக் கலை மிக
மிகத் திறமை மிகுந்த கலைஞர்களால் மட்டுமே நடத்தப் பட இயலும்.
மராத்திக் கலைஞர்கள் தமது இந்தத் தோல் பாவை கூத்து நிகழ்வுக்காக கர்நாடகக் கடற்கரை வழியாக வந்து பின்னர் தமிழகமும் வந்தனர். தமிழர்களோடு தமிழர்களாய் வாழ்ந்தாலும் இவர்கள் மட்டும் அர்ரே(ARRE) எனும் மராத்தியின் பழைய மொழிதனைப் பேசுகின்றனர், இவர்களுக்குள்.
கேரளாவின்
தோல் பாவக்கூத்து
ஓர் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவின் பாலக்காடுப் பகுதியின் அரசரும், புலவருமான 'எழுத்தச்சன்' தனது புதிய இராச்சியத்தின் பத்ரகாளி கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்திலும் தோல் பாவைக்கூத்து அரங்குகள் அமைத்து நிகழ்ச்சிகள் நடத்தித் தாருங்கள் என்று, கம்ப இராமாயணத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களை விரும்பி அழைத்தார். பத்ரகாளி கோவில்களின் வெளிப்புறத்தில் 'தோல் பாவக் கூத்திற்கான', 'கூத்து மடங்கள்' நிறுவப்பட்டன. இன்றைக்கும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி தொடங்கி மே மாதம் வரை பாலக்காடு, திரிசூர் வட்டாரங்களின் பகவதி கோவில்களின் கூத்து மடங்களில், 7,14,21,41 மற்றும் 64 நாட்கள் என்ற கணக்கில் தமிழின் கம்ப இராமாயணம் 'தோல்பாவக்கூத்தாக' இரவு தொடங்கி விடியும் வரை நடத்தப்படுகின்றன. அம்பலத்துள் வலம் வரும் பகவதி கோவிலின் உள் பிரகாரம் முடித்த பின் இந்த கூத்து மடத்துக்கு வருகை தந்து தானும் கம்ப இராமாயணத்தின் தோல் பாவக் கூத்தை இரசிப்பதாக ஐதீகம்.
கர்நாடகத்தில், 'தோகலு கொம்பேயதா' ( Togalu Gombeyata ) என்ற பெயரில் வண்ண மயமாக நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் ஒவ்வொரு வண்ணம், அவர் அவர்களின் குணத்தைப் பிரதி பலிக்கும் வண்ணமாக.
தமிழகத்தில் தோல் பொம்மலாட்டம் என்று பெயர். தமிழின் 'பொம்பா' கன்னடத்தில், 'கொம்பே'. இங்கே தோல் அங்கே தோகலு.
சுந்தரத் தெலுங்கிசைக்கும் ஆந்திர பூமியில், 'தோலு பொம்மலாட்டம்'. கேரளாவில் சினிமாஸ்கோப். 42 அடித் திரை. பிரமாண்டம். அந்தக் கூத்துமடம், 'நால்பத்தீரடி களரி' (Nalpatheeradi Kalari), என்றழைக்கப்படுகிறது. இங்கே நம்ம பங்காளிகளின் ஆந்திராவிலோ பொம்மைகளே 'ஷங்கர்' படம் போல மிகப் பிரமாண்டம் தான். இலங்காபுரியின் கோட்டைக் காவலான 'லங்கினி' யின் வடிவம், 1.5 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை...இப்படி அனைத்துப் பாத்திரங்களையும் ஒரே திரைய அணைத்துக் கொள்ள இயலாததால், ஒரு நேரத்தில் ஒரு பாத்திரம் மட்டுமே திரையில் வந்து ஆடி விட்டுப் போகும்.
ராபன சய்யா (Rabana Chhaya) என்பது கிழக்கு இந்தியாவின் ஒடிசா பகுதியில் தோல் பாவைக்கூத்தின் பெயர். பிஸ்வநாத குந்தியா (Biswanatha Khuntia) எனும் ஓடிய கவிஞர் இயற்றிய பிசித்ர ராமாயணா ( Bichitra Ramayana- தமிழின் 'வி' அங்கே 'பி') வில் இருந்து காட்சிகள். வில்லனான இராவணன் பெயர் சூட்டப் பெற்றமைக்குக் காரணம், கடவுளான இராமனை நிழலாகச் சித்தரிக்கக் கூடாது என்பதற்காம். ஒடிசாவின் தோல் பாவைகள், மான் தோலில் செய்யப்பட்டவை.
இங்கே
தமிழகத்தில் மராட்டிய மன்னர்களான போன்ஸ்லே
(Bhonsle) வம்சத்தைச் சேர்ந்த (சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரர் வகையறா) தஞ்சையை ஆட்சி செய்த போது மராட்டிய பகுதியில் இருந்து
தோல் பாவைக் கலைஞர்களை தமிழகம் தருவித்து இருக்கிறார். இவர்களது ஆட்சிக் காலம், கி.பி.1674 முதல் கி.பி.1855.
சரி.. நமது தோல் பாவைகளைத் தோளில் மாட்டிக் கொண்டு,அப்படியே இங்கே இந்தோனேசியா வருவோம். எருமை மற்றும் பசு இவற்றின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தோல் பாவைகளை வைத்து இராமாயணம், மகாபாரதம் இவற்றின் கதைகளை பின் புல விளக்கின் வெளிச்சத்தில் திரையில் வீழ்த்தி கெமலான் (GAMELAN) இசையுடனும் சாவக மொழியின் பாடல்களுடனும் நகைச்சுவை ததும்ப நிகழ்த்தப்படும் தோல் பொம்மை நிழலாட்டம் ஜாவா, பாலி மற்றும் மேற்கு சுமத்ரா பகுதிகளில் இந்து - பௌத்த அரசுக் காலங்கள் முதலே தொட்டுத் தொடர்ந்து இருக்கிறது. கெமலான் (GAMELAN) என்பது சைலோபோன் (XYLOPHONE ) போன்ற தட்டி ஒலி எழுப்பி குழுவாக இசைக்கும் சாவகத்துக்கே உரிய இசைக்கருவி.
வயாங் கூலித் (WAYANG KULITH) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு இன்றும் கிராமங்களில் விடிய விடிய நடை பெறுகிறது. வயாங் என்றால் புனிதமானது என்றும் நிழல் என்றும் இரு பொருள். கூலித் என்றால் தோல் என்று பொருள். தோலின் நிழல் ஆட்டம் என்று பொருள் கொள்ளலாம்.
முந்தைய காலத்தில் வயாங் பெபர் என்ற பெயரில் ஒரு வகை மல்பெரி இலையில் இருந்து நீண்ட காகிதம் போல் தயாரிக்கப்பட்ட சுருள்களில் கதைகளின் படங்களை வரைந்து ஒவ்வொரு படமாகப் பிரித்துக்காட்டி அதற்கேற்ப கதை சொல்லும் வகையில் ( முக்கியமாகஇராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள்) நிகழ்த்தப்பெற்றது.
கி.பி.
1400 வாக்கில் இசுலாம் சாவகம், புஷ்பகம் என்று அழைத்து வந்த ஜாவா,பாலி மற்றும் சுமத்ரா
தீவுகளில் பரவத் தொடங்கிய கால கட்டம். இசுலாம் மதத்தைப் பரப்பியதில் முக்கியமானவர் மத்தராம் அரசின் பகுதியில் பிறந்த சுனான் காலிஜகா (Sunan
Kalijaga) என்பார். இவர் தோல் பாவைக்கூத்தின்
மூலம் இசுலாமியக் கருத்துக்களை இந்து -பௌத்த மத நம்பிக்கையில் நூற்றாண்டுகளாக மூழ்கிக்
கிடக்கும் சாமான்ய மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க இயலும் என்று தீர்மானித்தார்.
இசுலாமியக் கொள்கைகளின் படி உருவங்களை வரைந்து அவற்றைக் கடவுள் எனக்கட்டுவது அனுமதிக்கப்
படாத (HARAM ) செயல். எனவே காகிதத்துக்குப்
பதில் தோலில் வரைந்து அதன் நிழலைக் காட்டுவது தவறு அல்ல என்று எண்ணினார். அப்படியே தோல் பாவைக்கூத்து நடை முறைக்கு வந்தது. ஏற்கனவே பாரத தேசத்தில் இருந்து இந்த முறை இந்தோனேசியாவிற்குச்
சென்றிருக்க வேண்டும். ஏனென்றால் நமது மண்ணில்
இடம் பெறும் தோல் பாவைகளுக்கும் இந்தோனேசியத் தோல் பாவைகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும்
இல்லை. இராமாயணம் மற்றும் மகாபாரதம் இவற்றின்
கதைகளோடு 'பாஞ்சி' (PANJI) என்ற சாவகக் கதை, இசுலாமிய, கிறிஸ்துவ மற்றும் பௌத்த மதத்தின்
ஆன்மிகக் கதைகளும் இன்று சேர்ந்து கொண்டன, காலத்தின் பரிணாம வளர்ச்சியாக .
இந்தக்
கலையின் உயிர் நாடியே கலைஞனின் இயல், இசை நாடகம் எனும் மூன்றிலும் விற்பன்னராகத் தன்னை
வைத்துக்கொள்ளும் திறமை தான். ஒருவரே 40 கதா பாத்திரங்களுக்குக் குரல் கொடுப்பார். போர்க்காட்சிகளின் பின்புல இசையை வடிப்பார்
. மேடை நிர்வாகம், திரை அமைப்பு, ஒளி, ஒலிகளின்
திறன் இவை அனைத்தையும் முன் கூட்டியே வடிவமைப்பார். இது வாழையடி வாழையாக வருகின்ற கலை. அந்தக் கலைஞர்களின்
முயற்சிக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏதுவான ஊதியம் கிட்டாததால் நமது நாட்டில்
இக்கலை நசிந்து வருகிறது. இந்தோனேசியாவில்
கிராமங்கள் இன்றும் நமது தெருக்கூத்து பாணியில் தோல் பாவைக்கூத்து நடத்துகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்களும் தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றன.
எந்தக்கலையும்
மக்கள் பேணாவிட்டால் வீணாகி விடும்.
நமது பாரம்பரியத் தொடர்புகள் நிறைய இன்னும் இருக்கின்றன.. தொடர்ந்து சரித்திரத்தையும், அரசர்களையும் மட்டும் எழுதி வந்தால் உங்களுக்கு அலுப்புத் தட்டி விடும் என்றே இது போன்ற கலைகளும் இடையில் சில அத்தியாயங்களில் பகிர்கிறேன்.
தொடர்ந்து உங்கள் பின்னூட்டங்கள் அளித்தால் தான் உங்கள் மனம் எமக்கும் விளங்கும்..
Wayang kulit is Indonesia's most interesting culture and is full of history, until now it is still a traditional culture full of meaning
பதிலளிநீக்கு