14.அகத்தியம் - தமிழகம்- சாவகம் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

 

14 . அகத்தியம் - தமிழகம்- சாவகம்


உலகம் சம நிலை பெற வேண்டும்

உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்


முப்பத்து முக்கோடி தேவரும் இமயத்தில் உமையவள் திருமணம் காணச்செல்ல வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது அதனைச் சமன் செய்ய அகத்தியர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணமாவார்.  அந்தப்  பயணத்தின் போது அகத்தியர் பாடிக்கொண்டு வருவதாக ‘அகத்தியர்’ திரைப்படத்தின் இயக்குனர் A.P.நாகராஜன் அமைத்து இருந்த காட்சிக்கு புலவர் உளுந்தூர் பேட்டை சண்முகம் மேற்கண்ட பாடலை எழுதி இருப்பார். தென்னகம் நோக்கி வந்த அகத்தியர் நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் வாழ்ந்ததாகவும், என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமான தமிழுக்கு 'அகத்தியம்' எனும் முதல் இலக்கண நூல் வடித்த மிகப்பெரும் சித்தர் என்று நமது பாரம்பரியம் கூறுகிறது.   தொல்காப்பியர் இவரது மாணவர் என்றும் சொல்லப்படுகிறது. 

அறிஞர் அண்ணா, உளுந்தூர் பேட்டை சண்முகம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் 

முச்சங்கங்களும் ஒப்புக்கொள்ளும் இலக்கண நூலான அகத்தியம் இயற்றமிழுக்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை. இசை, நாடகம் உள்ளிட்ட மூன்று தமிழையும் வரையறுக்கும் ஒரே நூல் இந்த அகத்தியம் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.  அகத்தியரின் மாணாக்கர் என்று சொல்லப்படும் தொல்காப்பியரது  தொல் காப்பியம், அகத்தியத்தை  மூல நூலாக்க கொண்டு எழுதப்பெற்றதே. அகத்தியரின் பெயர் விளங்க, அதங்கோட்டு  ஆசானில் தொடங்கி தொல்காப்பியர் வரை  12 மாணாக்கர் தமிழுக்குத் தொண்டு செய்து இன்றும் பெயர் நிலைக்க வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து 'பன்னிரு படலம்' எனும் நூலை எழுதினர் . தமிழுக்கு மட்டுமா  அகத்தியர் நூல் எழுதினார்?  வைத்தியம், வான சாத்திரம், பக்தி, வாழ்வியல், தியானம், யோகம் என்று மனித குலத்துக்குத் தேவையான அனைத்தையும் எழுதி வைத்துள்ளார். தமிழகத்தில், 'அகத்தீசுவரம்', கும்பகோணம் 'கும்பேசுவரர் கோவில்', திருவனந்தபுரம் 'அனந்தசயனம்' , தென்பாண்டி நாட்டில் பொதிகை மலை என்று அகத்தியன் வாழ்ந்த இடங்களை இன்னும் நமது தமிழகம் பேசிக்கொண்டு இருக்கிறது.

அகத்தியரின் இன்னோரு புரிந்து கொள்ள முடியாத சிறப்பு என்னவென்றால் எங்கே தொட்டாலும், அகத்தியர் வருவார்.

புராணத்தில் : அகத்தியரும் வசிட்டரும் ஒரே நேரத்தில் காமவயப்பட்ட வருண, வாயு இவர்களுக்குப் பிறந்தனர்.  சப்த ரிஷிகளில் ஒருவராகக் கருதப்படும் அகத்தியர், சிவ-உமை திருமணக் கோலத்தை தமிழகத்தில் இருந்தே கண்டு களித்ததாக புராணம் கதை சொல்கிறது. ( செயற்கைக் கோள் தொலைக்காட்சி இல்லாமலேயே ).

விந்திய மலையில் வழிப் போக்கர்களை அடித்துச் சாப்பிட்ட இல் வளன் , வாதாபி சகோதர அரக்கர்களை 'கபளீகரம்' செய்த குறுமுனி .

வேதத்தில்..: ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர் அகத்தியர் என்கிறார்கள் ..

இராமாயணத்தில்: வனவாசத்தில் இராமர் அகத்தியரிடம் மந்திரம் உருவேற்றப்பட்டுப் பலப்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டார் என்று கதை வருகிறது.  இசை வல்லுனரான இலங்கேஸ்வரன் இராவணனுடன், வென்றிடுவேன் .. உன்னை வென்றிடுவேன்..'  என இசைப் பாட்டுக்கு எதிர்ப்ப்பாட்டு போட்டு வென்றிடுவார்.

தலைச்சங்கம் : இங்கே அகத்தியர் சங்கப் புலவராக வீற்றிருந்தாதாகக் கூறுகிறது .

காவிரி  :  இன்று வரை கர்நாடக அரசால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் காவிரி ஆற்றை சிறிய கமண்டலத்தில் அடக்கி கடைசியில் ஒரு காகம் கவிழ்த்து விட்ட கதையிலும் அகத்தியர் தான்.  அந்தக் காகம் இன்று இருந்தால், இரண்டு மாநிலங்களிலும் அரசியல் செய்ய வாய்ப்பு இல்லாது போய்  இருக்கும். 

ஈஷா மையத்து சத்குருவின் கருத்துப்படி, 12,000 அல்லது 15,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி யோகி இமயமலைச் சாரலில் முதன் முதலில் இந்த உலகுக்கு யோகத்தை கற்றுக் கொடுத்தார். அப்போது அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் அளவுக்குத் தகுதி உடையவர்கள் 7 ரிஷிகள்.  அவர்களில் ஒருவர் தான் அகத்தியர்.  4,000 ஆண்டுகள் வாழ்ந்து மனித குலத்துக்குப் பல சேவைகளைச்  செய்தவர் .  சத்குருவின் கூற்றுப்படி , 4,000 ஆண்டுகள் என்பது இல்லாவிட்டாலும், தென் திசை நோக்கிப் பயணமான அவர் குறைந்த பட்சம் 400 ஆண்டுகள் ஸ்தூல உடம்பில் வாழ்ந்து இருக்க வேண்டும். சூக்கும உடம்புடன் எங்கும் வியாபித்து இருக்கும் யோக நிலை தெரிந்த ரிஷி அவர்.  கர்நாடகா வில் சிறிய கிராமம் அல்லது காட்டின் குகைகள்  பல அகத்தியர் வந்து தங்கி சென்றதாகக் காலத்தில் பதிந்து வைத்து இருக்கிறது.

 


இப்படி நமக்கே நமக்கு என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டு தற்பெருமையில் திளைத்த எனக்கு 1988 ஆம் வருடம் மத்திய சாவகத்தில் இருக்கும் மிகப்பெரும் ( இந்து ?/ சனாதன ?)  கோவிலான 'பிரம்பனான்'(PRAMBANANA) கோவிலில் சிவனுக்கு இணையாக தனிச் சன்னதியில் நின்ற அகத்தியரைக் கண்டதும், தலைக்கனம் சரிந்து காலடியில் வீழ்ந்தது.





தமிழகத்தின் சொந்தமான தமிழின் குரு அகத்தியர் குறுமுனியாக மத்திய சாவகத்தின் கோவிலில் சரிந்த தொப்பையுடன் காவிரியை அடக்கிய கமண்டலம் மற்றும் திரிசூலம் சூழ நின்ற காட்சி முதலில் நம்ப இயலவில்லை.  ஆர்வம் மிகவே 1988 ஆம் ஆண்டு முதலாகவே   ஆய்வு மனம் தேடலில் இறங்கியது.  நிறையக் கதைகள்... ஒன்றை ஒன்று தொட்டும் ... விட்டும் ..... அனைத்தையும் ஒரு அத்தியாயத்தில் அடக்க இயலாது.  உடனே மனம் அனைத்தையும் உள்  வாங்கிக் கொள்ளவும் இயலாது.  சிலவற்றை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து நமது தொடர்புகள் எவ்வளவு தொன்மை கொண்டது என்பதைத் தொடுக்கத் துணிகிறேன்.

சாவகத்தைப் பொறுத்த வரை அகத்தியர்  "பத்தார குரு" (BATARA  GURU )என்று அறியப்படுகிறார்.  BATARA எனும் சொல் Bhaṭṭāraka எனும் சமக்கிருத வார்த்தையின் இந்தோனேசிய வடிவம் ஆகும். கடவுளாக, வணங்கத் தகுதி உள்ளவர் என்று பொருள்.  அகத்தியர் சாவகத்தில் சனாதனத்தை?/ இந்து மதக் கொள்கைகளை மக்களுக்கு வழங்க வந்த குரு நாதர் என்று அறியப்படுகிறார்.  தென் திசையாகிய தமிழகத்துக்கு வந்த அகத்தியர் அங்கு இருந்து சாவகம், சுமத்ரா, மற்றும் சுலாவெசி (JAVA , SUMATRA, SULAWESI ) பகுதிகளுக்கும் வருகை தந்து வாழ்வியலை, ஆன்மிகத்தை, நெறிப்படுத்தி மக்களுக்குப் போதித்ததாகச் செய்திகள் உலவுகின்றன.

பாரதத்தில் குரு என்றால் தென் திசை நோக்கி கல்லாலின் அடி  அமர்ந்து தெட்சிணா மூர்த்தி என்ற பெயருடன் அனைத்து சிவாலயங்களிலும் அமர்ந்து இருப்பவர்.  இங்கேயும் தட்சிணா மூர்த்திக்கு உரிய மரியாதை தான் அகத்தியருக்கு.. அவர் சிவனின் அவதாரமே ...சிவனே அகத்தியராக அவதாரம் எடுத்து ஆன்மிகத்தைப்  போதிக்க தென் திசை வந்தார்.. தென் திசை என்பது தமிழகம் மட்டும் அல்ல.. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனிசியாவும் தான் என்பது சாவகத்தின்  நம்பிக்கை .


இங்கு சாவகத்தில் உள்ள சண்டிகளிலும் (கோவில்களிலும்) தெற்கு நோக்கித்தான் அகத்தியர் நிற்கிறார். சாவகத்தின் நம்பிக்கையின் படி, பாதாள உலகம் , நாம் வாழும் இந்த உலகம் மற்றும் மேல் உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் பத்தார குருவே அதிபதி.  ஆயினும் இங்கே பத்தார குரு  என்றழைக்கப்படும் நமது அகத்தியர் சிவனின் அம்சமாகவே கருதப்படுகிறார். நந்தினி எனும் பசு அகத்தியரின் வாகனமாம் . சிவனின் அவதாரமாகக்  கருதப்படுவதால் அவருக்கு மாணிக்கமயன், சதுர்புஜன், அதிபதி, ஜெகநாத், நீலகண்டர், திரிநேத்ரர், கிரிநாதர் என்று பல பெயர்கள்.


இன்னொரு கதை இடையில் வருகிறது சாவகத்தின் மண் வாசனையோடு... கொஞ்சம் பொறுமையாய்
  கேளுங்கள்.  சங் ஹியாங் துங்கல் (SANG HYANG TUNGGAL) என்றழைக்கப்டும் பரம்பொருள்   மூன்று பிள்ளைகள் பெற்றது.  சங்யாங் புங்குங், சங்க்யாங் இஸ்மயன் மற்றும் பத்தார குரு எனப்படும் என்று அகத்தியர், முறையே அசுரர், மனிதர், தேவர் ஆகியோரை ஆள்வதற்காக துங்கல் படைத்ததாக சாவகக் கதைகள் (தோல் பாவைக்கூத்துக் கதைகள்/நிழலாட்டக்  கதைகள்/WAYANG)  விவரிக்கின்றன. இதற்கு மேல் இந்தக் கதைக்குள் நுழைந்தால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் எல்லாம் வந்து விடும். இது ஒரு தகவலாக மட்டுமே.

 

பதக் (BATAK)- சுமத்ரா

ஏறத்தாழ மேலே கண்ட சாவகத்தின் கதை சிறிது மாறுதல்களுடன் தென் சுமத்ராவின் பதக் (BATAK ) இன  மக்களிடம் நிலவுகிறது.

சாவகத்தில் சிவனின் அவதாரம் என்றால், சுமத்ராவில் இவர் படைப்பின் கடவுளாகக் கருதப்படுகிறார். பரம்பொருள் தேவதா அசிசி (சிவன்) , மனுக்பதிய ராஜா எனும் கோழியாகத் தோன்றி இட்ட மூன்று முட்டைகளில் இருந்து, பதாரா குருவும், அவரது இரு சகோதரர்களான தேவதா சூரிபாதனும்தேவதா மங்கலபூலனும் தோன்றினார்கள்.  சிவோரி போர்த்தி பூலன் எனும் தேவியை மணந்த அகத்தியருக்கு அவருக்கு, இரு மகன்களும், இரு மகள்களும் பிறந்தனர். இவர்களே, பூவுலகில் தோன்றிய மனித இனத்தின் மூதாதையர் ஆனார்கள். 

 

சுலாவெசி (SULAWESI ) பகுதியில் வாழும் பூகிஸ் (BUGIS ) இன மக்களின் தொன்மம் இன்னும் சிறிது வேறு பாட்டுடன் அகத்தியரான பத்தார குருவை வைத்து இருக்கிறது. பூகிஸ்களின் மரபுரைகளின் படி,  சங் பதோலோக்கிற்கும் தது பலிங்கெக்கிற்கும் பிறந்த பதாரா குரு, பூவுலகு முழுவதும் மனிதர் நிரம்பவேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்டவர். அவரது தேவியான வே நைலிகிக் திமோக்கிற்கு ஒரு பிறந்த ஒரு மகனும், அவரது ஐந்து ஆசை நாயகியருக்குப் பிறந்த பத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் மூலமும் உலகில் உயிர்கள் தளைத்தன.

அகத்தியர் சிலைகளின் நிர்மாணம் பற்றியும் அவற்றைக் கோவில்களில் நிர்மாணம் செய்த அரசர்கள் பற்றியும் இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன.  அவற்றை அடுத்தடுத்து நாம் செல்லும் பயணங்களில் பாப்போம். அப்படியே நமது தஞ்சைப் பெரிய கோவிலுக்கும் முந்தைய காலத்தில் கட்டப்பெற்ற கோவில்களைக்    காண்போம். அகன்ற பூமிப்பரப்பு, பல நூற்றாண்டு பாரம்பரியம்... இயன்றவரை சுருக்கமாகத் தான் எழுதுகிறேன்.   அடுத்த  அத்தியாயங்களில் பார்ப்போம்...

கருத்துகள்

  1. அருமை ஐயா, அகத்தியரில் தொடங்கி அகிலம் முழுவதையும் தமிழால் நிரப்பி விட்டீர்கள் ஐயா தமிழகத்தில் பிறந்தாலும் இடையிடையே சாவக நாட்டில் இருக்கும் அரிய தமிழ் செய்திகளை கதையாக கோர்த்து வடிப்பது மிகவும் சாலச் சிறந்ததாகும் நகைச்சுவை கலந்த தங்களுடைய கருத்து உள்ளீடுகள் மிகவும் பிரமிப்பாய் இருக்கின்றன தொடர்ந்து படிக்க உந்துதல் எழுகிறது தொடர்வேன் தொடர்வேன் தொடர்ந்து படிப்பேன் எதிர்பார்ப்புகளுடன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60