19. மனு நீதிச் சோழன்... மகாராணி ... சிமா (SHIMA )

 

19.   மனு நீதிச் சோழன்... மகாராணி ... சிமா (SHIMA )

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-



மனு நீதிச் சோழன்... தமிழர்கள் அனைவருக்கும்   நீதி பரிபாலனம் என்றால் நினைவில்  வரும் கதை கன்றாடிய மணி ஓசைக்குத் தன் நெஞ்சில் நின்றாடிய மகனை  தேர்க்காலில் பலி கொடுத்த நேர்மையும்  சீர்மையும்இன்றைய கால கட்டத்தில் இது சாத்தியமா என்று எண்ணுவது இயல்புஇறந்து பட்ட பசுவுக்காக தனக்கு பிறந்து விட்ட மகனைக்  கொல்வது என்பது தாயை இழந்த சோகத்தை கன்று அனுபவித்ததைப்  போல மகனை இழந்த சோகம் தனக்கு வர வேண்டும் என்பதே நீதி என்று அவன் நினைத்து இருக்க வேண்டும்அதை விட நாட்டின் காவலனாக இருக்கும் தனது பூமியில் மக்களும் நீதி தவறாத நெறி முறையில் வாழ வேண்டும் என்பது அவனது தீர்மானம்.


கலிங்க தேசம் ... 7 ஆம் நூற்றாண்டு.. வெளி நாட்டில் இருந்து ஒரு இளவரசன் நாடுகள் பல சுற்றி வரும் வேளை கலிங்கத்தில் வந்து தங்குகிறான். அந்த கலிங்க  நாட்டில் மிகத்தீவிரமான ஒழுக்கம் கடைப் பிடிக்கப்படுகிறது மக்களிடம்ஏனெனில் ஒழுக்கம் மீறுபவர்களுக்கு தண்டனை அவ்வளவு கடுமைசிறு குற்றம் என்றாலும் தலை எடுப்பது வரை தண்டனை கொடுமையாக இருக்கும்நாட்டினை அப்படி கட்டுக்கோப்பில் வைத்து இருந்தது  மகாராஜா  அல்ல... மகாராணி ... சிமா (SHIMA ) எனும் பெண்ணரசி.    

தலையாய நெறி முறையாக பிறர் பொருள் பற்ற எண்ணுவது மிகப்பெரும் குற்றமாகக்  கருதப்பட்டது.  எவருடைய பொருளுக்கும் மற்றவர் ஆசை வைக்கவில்லை என்றால் அமைதி தானே...தேசாந்திரம் வந்திருந்த வெளி நாட்டு அரசகுமாரனுக்கு இது மிகவும் வியப்பைக்  கொடுத்தது.  அது எப்படி மக்கள்  ஆசை அறுத்து இருக்க முடியும் ? எத்தனை கடுமையான தண்டனை இருக்கின்ற போதும் ஆசை அறிவை இழக்க வைத்து விடுமே!! இதனைச் சோதித்து இந்த நாட்டின் சட்டத்தில் ஓட்டை இருப்பதை நிரூபித்து விட வேண்டும் என்று அந்த உலகம் சுற்றும் அரச குமரன் நினைத்தான்.  ஒரு பையில் பொன்னை வைத்து நகரின் முக்கிய வீதியில் போட்டு விட்டு அருகில் ஒரு மறைவான இடத்தில் இருந்து கவனிக்க ஆரம்பித்தான்.  எவர் வந்து அந்தப் பொற் பையை எடுப்பார் ?  அதன் பின் அதனை எப்படி மறைப்பார் . அந்த வேளையில் அந்த நபரைக்  கையும் பையும் ஆகப் பிடித்து அரசியிடம் கொண்டு சென்று அவர்களின் சட்டத்தின் லட்சணத்தை அம்பலத்தில் ஏற்றி விடலாம் என்ற திட்டத்தோடு  பொறுமையாய் இருந்தான்.  ஒரு நாள் முழுவதும் போட்ட பை போட்ட இடத்திலேயே கிடந்தது.



பலரும் சாலையில் கடந்து சென்றனர்.  பையின் வடிவிலேயே அதன் உள்ளே விலை மதிப்பற்ற பொருள் இருப்பது அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது.  கண்கள் தான் கண்டனவே தவிர கருத்து அந்தப் பொருளின் மீது இல்லை.  தமக்கும் அந்தப் பைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல கடந்து சென்றனர். ஒரு நாள் ... கடந்தது... மறுநாள் அதே கதை.... நாட்கள் வாரம் ஆகின.... வாரங்கள், மாதங்கள் ஆகி வருடங்களும் ஆகின .முழுதும் அந்தச் சாலையில் கிடத்திய பையின் மீது கண்களைப் பொருத்தி இருந்த இளவரசன்,  காத்திருந்து ... காத்திருந்து... காலங்கள் போகுதடி..... பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..... என்று சோக கீதம் பாடாத குறையாக பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்தான்.  ம்..ஹும் . ஒரு பய புள்ள தொடலையே!!.. எவன் தொடுவான்...அரசியின் கவனத்துக்கு இது சென்று விட்டால்,  தொட்ட  கையோ, கண்ட  கண்களோ ... அனைத்துக்கும் தலையான தலையோ அல்லவா இழந்து படும் ?  இப்படியே மூன்று ஆண்டுகள் வந்த நாட்டையும் சுற்றாமல் சொந்த நாட்டுக்கும் திரும்பாமல் பொன்மணிகள் நிறைந்த பையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்த அரசகுமாரனுக்கு ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்தது.  மகாராணியின் மகனின்  மூலமாகவே....

 


சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்த பட்டத்து இளவரசன் ஏதோ ஒரு நினைவில் சென்று கொண்டு இருந்தவன் கேட்பரற்றுக் கிடந்த பையைக்  கைகளால் கூடத் தொடவில்லை.. காலில் எத்தி விட்டான்... சாலையின் நடுவே கிடைக்கவேண்டாமே .... ஓரத்தில் போய்க் கிடக்கட்டுமே என்ற எண்ணத்தில்.... அகலிகை போலக் கல்லாகி மூன்று வருடம்  காத்திருந்த ஊர் சுற்றி அரசகுமாரன் இந்த வாய்ப்பை விட்டால் இன்னும் எத்தனை  வருடம் காத்திருக்க நேரிடுமோ என்று தனது  மறைவிடத்தில் இருந்து துள்ளிக் குதித்து வெளிப்பட்டான்.

 


பிறர் பொருளைத் தொடாத நாடு என்று தம்பட்டம் அடித்துச் சொல்லும் நாட்டில் இதோ ஒருவன் நான் கீழே தவற விட்ட பொன்மணி அடங்கிய பையைக் காலால் தீண்டிப் பார்க்கிறான்... நீதி வழங்க வேண்டும்  என அரசவைக்கு நாட்டின் பட்டத்து இளவரசை இழுத்து வந்தான்.  நீதி சபை மகாராணியின் தலைமையில் கூடியது. எங்கிருந்தோ வந்த அயல் மரபின் மைந்தன் பிடியில் நீதி தவறா வழி வந்த தன்  வாரிசு ? அதுவும் குற்றம் சுமத்தப்பட்டு...???    குடிமக்களும் கோன்மைக்கு அடங்கி நடக்கும் நாட்டில் பட்டத்து இளவரசன் பழுதாய்ப் போவதா???  கொதித்துப் போனாள்  கோதை சீமா... 



மனு நீதிச் சோழன் கன்றுக்காய் மகனைத் தேர்க்காலில் இட்டது போல, நாட்டின் சட்டம் மதிக்காமல் பிறர் பொருளைக் காலால் தீண்டிய மகனுக்குக்  காலனாகி உடனே மரண தண்டனை அறிவித்தாள்அப்போது தானே சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும்அமைச்சர்கள் கலங்கி நின்றனர்ஒருவர் மெல்ல முன் வந்தார்.... அரசியே! ....அரசிளங்குமரன் பொன் மீது மோகம் கொண்டு பிறர் பொருளை எடுத்துக்கொள்ள நினைக்கவில்லை.  விளையாட்டுப் பிள்ளையாய் வீதியின் நடுவில் கிடந்த பையை காலினால் வீதியின் விளிம்புக்குத் தள்ளி விட்டார். அவ்வளவே... பிறர் பொன்னின் மீது ஆசை இருந்து இருப்பின் கைகளால் அல்லவே எடுத்து இருப்பார், எனவே மரண தண்டனை என்பது மிக மிக அதிகம் என்று மெல்லிய குரலில் முறையிட்டார்.  அனைத்து  அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து உண்மை நிலையை எடுத்து உரைத்தனர்.  கெடுப்பார் இல்லானும் கெடும் அரசி அல்ல  இடிப்பாராய் நல்ல அமைச்சர்கள்   இருந்த சிமா ராணி, கொஞ்சம் சிந்தித்தாள், இருந்த போதும் தண்டனை இல்லாமல் விட்டு விட மனம் இல்லை. சரி.. பிறர் பொருளைத் தீண்டிய இளவரசரின் காலை வெட்டி விடுமாறு தீர்ப்பளித்து விட்டு விடு விடு வென சபை கலைத்து அரண்மனை உள்ளே சென்று விட்டாள்.

பரதேசம் வந்த அயல் தேசத்து அரசன் இப்படியும் ஒரு நாடா ? இப்படியும் ஒரு அரசாட்சியா ?  இப்படியும் ஒரு அரசியா  என்று மலைத்த வண்ணம் தனது மற்ற நாடுகளுக்கான பயணத்தைத் தொடர்ந்தான்.


யார் இந்த ராணி சிமா ? எங்கே இருந்தது அவளது கலிங்க தேசம்.?   இங்கே குறிப்பிடும் கலிங்கா தேசம் நமது பாரதத்தின் கலிங்கம் (இன்றைய ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பகுதி) அல்ல.  இந்தோனேசியாவில் கிடைத்த குறிப்புகளின்  படி இன்றைய மத்திய சாவகத்தின் வடக்குப்பகுதி.  மத்திய ஜாவாவில் பெக்கலோங்கான் (PEKALONGAN), செமராங் (SEMARANG), ஜெபாரா (JEPARA ) என்று கடற்கரை நகரங்கள் உள்ளடக்கிய பகுதிதான் இங்கே  குறிப்பிடப்படும் 'கலிங்கா'.  இந்த செமராங் நகரில் தான் 1988 முதல் 1995 வரை நான் வாழும் படி எனக்குப் பணி  அமைந்தது.  ஜெபாரா என்ற பக்கத்துக்  கடற்கரை ஊர் இன்றளவும் கலிங்கா என்றே அழைக்கப்படுகிறது. நுணுக்கமான மரச் சிற்பங்கள் நிறைந்த மரச்சாமான்கள் செய்வதில் பரம்பரை பரம்பரையாகக் கை தேர்ந்த கலைஞர்கள் வாழும் இடம்.  இங்கிருந்து பெருமளவில் அபூர்வமான வேலைப்பாடுகளுடன் ( CARVINGS ) அமைந்த மரத்தால் செய்யப்பட்ட வீட்டு உபகரணங்கள் (CARVED FURNITURE ) உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகிறது.   இவர்கள் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்திலேயே கடலோடிகளாக இருந்த இந்தியாவின் ஒடிசா பகுதியைச் சேர்ந்த கலிங்கர் என்று சொல்லப்படுகிறது.  மேலே நாம் பார்த்த அரசி சிமா (SHIMA) வின் கதை செவி வழிச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இன்று வரை கலிங்கா என்று அழைக்கப்படும் மத்திய சாவகத்தின் வட பகுதியில் உலவி வரும் கதைகளை கட்டுக்கதைகள் மற்றும் புனைவு என்று ஒதுக்கி விட இயலாது.  இன்றைக்கும் சாவகத்தில் ராணி சிமா நடனம் (TARI RATU SHIMA ) என்ற பெயரில் இந்தக்கதைகள் கலிங்கத்தில் (சாவகத்தின் கலிங்க தேசம்) நடைபெற்ற சம்பவங்கள் என்ற கதைப் பின்னணியோடு கலை நிகழ்வு மேடைகளில் நிகழ்த்தப்படுகிறது.  சரி., இந்த பின்னணிக்கு சான்றுகள் அல்லது பதிவுகள் என்ன கிடைத்து இருக்கின்றன  என்று பார்ப்பது தானே நமது இந்த ஆய்வின் நோக்கமே... பார்ப்போமா ??

 


பர ஹையங்கான் சரிதம் (Carita Parahyangan) என்று சுண்டா மொழியில் (BAHASA SUNDA ) 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதி, 6 ஆம் நூற்றாண்டின் சைவ -வைணவ சமயம் தழுவிய அரசுகளை பற்றி பேசுகிறது. 

சுமத்திராவின்  ஸ்ரீ விஜய ( ராஜேந்திர சோழன் படை எடுத்த அரசு) அரசுப் பகுதியில் கி.பி.611 இல் பிறந்தவள் இந்த சிமா . சைவத்திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மதகுருவுக்குப் பிறந்த சிமா , சைவத்தில் ஊறித் திளைத்தவள்.  மிகவும் ஒழுக்கம் நிறைந்தவள்.  

இதே மலாய் ஸ்ரீ விஜய பகுதியான ஸ்ரீபுஜா நாட்டின் (இன்றைய பலேம்பாங் -PALEMBANG ) அரசரின் மருமகன் கார்த்திகேய சிங்கா (Kartikeyasinga) பின்னாளில் மத்திய சவாகத்தில் கலிங்கா வின் அரசனாகிறான்.  ஆதி ஹயாங் -Adi Hyang (Great Ancestor) -DIENG PLATEU பகுதியில் வசித்த கார்த்திகேய சிங்காவுக்கு மருமகன் என்ற வகையில் சுமத்ராவில் பிறந்த  சிமாவை,  மணம்  செய்து வைக்கிறார், ஸ்ரீபுஜா நாட்டின் அரசர்.

ஒரு சாதாரண மத குருவின் மகளாகப் பிறந்த சிமா, எப்படி மஹாராணி ஆகிறாள்.. எப்படி இவ்வளவு பராக்கிரமம் உடையவள் ஆகிறாள் என்பதை அறிந்து கொள்ள அடுத்த பகுதி வரை பொறுத்து இருக்க வேண்டும். 

சந்திபோம்.....பல சரித்திரச் சான்றுகளுடன் கலிங்க  தேசத்தின் கதையுடன்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60