20. சாவகத்தில் ஒரு கலிங்கம் ...தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

 

20.   சாவகத்தில் ஒரு  கலிங்கம் ...

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-

அன்புத் தமிழ்ச் சொந்தங்களே .....



கலிங்கம் என்ற ஒரு நாடு மத்திய சாவகத்தின் வட பகுதியில் செல்வாக்கோடு இருந்தது என்றும் அதன் அரசியான சிமா என்பவள் அற நெறி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தாள்  என்றும் சென்ற பகுதியில் பார்த்தோம். பலருக்கும்  கலிங்கம் என்ற நாடு இந்தியாவுக்குள் மட்டுமே இருந்த ஒடிசா மற்றும் தெலுங்கானா பகுதிகள்  என்ற  இன்றைய பார்வையோடு இணைந்த எண்ணம்.  உண்மையில் கலிங்க தேசம் என்ற ஒரு நாடு இன்றைய இந்தியாவுக்கு வெளியேயும், சாவகத்தின் கடற்கரைப் பட்டினங்களைத் தன்னகத்தே கொண்டு இருந்ததா ?   அப்படி இருந்திருந்தால் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்பதைத் தேடி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எமது ஆய்வு மனம் அரித்துக் கொண்டு இருந்தது.  இதோ .. வாருங்கள் இலக்கியம், பிற நாடுகளின் பதிவுகள், சரித்திரம் என்று ஒரு அலசல் புரிந்து வருவோம்.  குழப்பம் இல்லாமல் கூட வாருங்கள்.



அங்கம்,வங்கம், கலிங்கம், விதேகம் என்ற நாடுகளின் பெயர்கள் மகா பாரதததிலேயே குறிக்கப்பட்டு இருக்கின்றன.  அங்க தேசத்தின் தலை நகராக 'சம்பா' எனும் நகரம் குறிப்பிடப்படுகிறது.  இன்றைய பீகாரின் பகல்பூர் தான் அன்றைய சம்பா நகர் என்றும் கருதப்படுகிறது.   செல்வச் செழிப்பு நிறைந்த நகரமாக இந்த சம்பா விளங்குவதற்கு இந்த நகரின் கடல் வணிகர்கள் சுவர்ணதீவு என்று அழைக்கப்பட்ட இன்றைய சுமத்ராவுக்கு அதிகம் பயணங்கள் மேற்கொண்டார்கள் என்பது சரித்திரம் வடிக்கும் செய்திகள்.    4 ஆம் நூற்றாண்டில் பௌத்த மூல நூல்களை சீன மொழிக்கு கொண்டு செல்ல இந்தியப்  பயணம் வந்த பா-ஹியான் (FA -HIEN) சம்பா நகரை சான்போ (CHANPO ) என்று குறிப்பிடுகிறார்.  சீனத்துக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்ய வேண்டும் என்றால் இடையில் பாலமாக இருப்பது இன்றைய இந்தோனேசியாவின் சுமத்ராவும், ஜாவாவும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.  இந்த சம்பா நகரமே, இன்றைய வியட் நாம்  பகுதியின் 'சம்பா' கடல் வணிகர்கள் வாணிபக்  குடியிருப்புகளை அமைத்ததால் அவர்களின் பெயரால் உருவானது என்கிறார்கள்.  இந்தோனேசியாவைப் போலவே சம்பா -கெமர் அரசுகளும் இந்து சைவ -வைணவ சமயத்தைத் தழுவி இருந்தவர்கள் என்பதை இங்கே மறக்க வேண்டாம்.


இதெல்லாம் சரி. இந்தச் செய்திகள் பற்றி தமிழ் என்ன சொல்கிறது ?

மகாகவி பாரதி, 

செப்பு மொழி பதினெட்டுடையாள்  என்று ஓர் இடத்தில் பாடி இருப்பார் .  பாரதத்தில் பதினெட்டு மொழி அல்ல. பல்வேறு மொழிகள் இருக்கின்றன என்று அறியாதவரா பாரதி?. பிறகு எங்கிருந்து அவரது எண்ணத்தில் இந்த 18 வந்து சேர்ந்திருக்கும்.? தமிழ் கூறும் நிலங்கள் 18 என்று சேந்தன் திவாகரம் கூறுகிறது இப்படி ...

அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம்

சிந்து சோனகம் திரவிடம் சிங்களம்

மகதம் கோசலம் மராடம் கொங்கணம்

துளுவம் சாவகம் சீனம் காம்போசம்

பருணம்பப் பரமெனப் பதினெண்பாடை


இதில் திராவிடம் எனப்படுவது தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் இவற்றை அடக்கியது ஆகும்.  பதினெண் மொழிகள் எனத் தொகைப்படுத்தும்  வழக்கம் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும், காணப்பட்டமையால்  தொல் காப்பியர் காலத்திலேயே தமிழர் இந்த நாடுகள் அனைத்தையும் அறிந்து இருந்தனர் என்று அறியலாம்.

இந்தப்பாடலில் வரும் கலிங்கம் (இன்றைய ஒரிசாவாகவும் இருந்திருக்கலாம் அல்லது ஜாவாவின் வட பகுதியையும் சேர்த்துக் குறித்து இருக்கலாம்).

மத்திய ஜாவாவில் பத்திக் ஆடைகளுக்குப்  பெயர்  பெற்ற ஊர் பெக்கலோங்கான் (PEKALONGAN ).  இந்தப்  பகுதிதான் சாவாகக் கலிங்க இராச்சியத்தின் முதல் தலை நகராக இருந்திருக்கிறது .பெ-கலிங்க-ஆன் (PE -KALINGA -AN ) என்பதே பெக்கலோங்கான் (PEKALONGAN ) என்று மாறி இருக்க வேண்டும்.  செவிவழிச் செய்திகளைத் தவிர 6~7 ஆம் நூற்றாண்டுகளின் சீன தேசத்துப் பதிவுகள் மட்டுமே  இந்த கலிங்க தேசத்துக்குச் சாட்சியாய் விளங்குகிறது. 



தாங் அரச மரபினர் தான் (TANG DYNASTY ) சீனாவில் கி.பி.618 முதல் கி.பி.907 வரை ஆட்சியில் இருந்து உலகம் முழுமைக்கும் வாணிகம் செய்து வந்தனர். சீனாவில் புத்த மதத்தின் பொற்காலம் என்று சொன்னால் அது தாங் அரச மரபு தான். இவர்களது ஆட்சிக்காலத்தில் தான் 742 ஆம் வருடம் தமிழகத்தில் இருந்து வஜ்ரபோதி (VAJRABODHI) எனும் தாந்த்ரீக புத்தத் துறவி சீனத்துக்கு வரவழைக்கப் பட்டார்.  எதற்காக? தாந்த்ரீகச் சடங்குகள் மூலம் பஞ்சம் வஞ்சித்த தாங் அரச பகுதிகளில் மழை வருவிக்க....இந்தக் கதையின் பின்னால் போனால் நாம் சாவகத்தின் கலிங்கம் போய்ச் சேர இயலாது. எனவே 'வஜ்ரபோதி' பின்னால், பின்னர் ஒரு நாள் செல்வோம். இப்போது கலிங்கம் பற்றிய காலச்சுவடுகளை காண்போம்.



வட இந்தியாவின் ஹர்ஷ வர்தனர் காலத்தில் (கி.பி.606~647), இந்தியாவின் சர்க்கரைக்கு தாங் இராச்சியத்தில் அதிக கிராக்கி இருந்து இருக்கிறது. பெரிய அளவில் இந்தியாவில் இருந்து சர்க்கரையை சீனத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் நிறைய பொருள் விரயம் ஏற்பட்டது.  எனவே ஹர்ஷரின் நாட்டில் இருந்து சென்ற தூதுகுழு சர்க்கரைத் தயாரிப்பில் வல்லுனரான இருவரை சீனத்துக்கு அழைத்துச் சென்று கரும்பு பயிர் செய்யும் முறையை அவர்களுக்குப் பயிற்றுவித்து சீனாவின் சர்க்கரை உற்பத்திக்கு வித்திட்டது.  பின்னர் 'சீனக்கற்கண்டு' என்று அவர்களிடம் இருந்தே நாம்  இறக்குமதி செய்தது, சீனர்களின் படிமம் எடுக்கும் (காப்பியடிக்கும்) திறனுக்கும், சிந்தனைக்கும் ஆன உதாரணம்.



இந்த தாங் அரச மரபின் வணிகள் குழுக்கள் பல பதிவுகளை சரித்திரத்தில் குறித்து வைத்து இருக்கின்றனர். ஆசிய கிழக்கு, தென் கிழக்கு பகுதிகளின் வரலாற்றைச் சிறிது ஆதாரங்களோடு அறிந்து கொள்ள சீனச் சான்றுகள் தான் துணை வருகின்றன.



'தாங்'கின் புதிய புத்தகம் (New Book of Tang) என்று கி.பி.1044 ஆம் ஆண்டு சோங் மரபு (SONG ) சக்கரவர்த்தி ரென்ஸோங் (New Book of Tang) அவர்களின் ஆணைப்படி ஏற்கனவே இருந்த தாங்கின் பழைய புத்தகம் (Old Book of Tang), மீள் பார்வை பார்க்கப்பட்டு புதிதாக எழுதப்பெற்றது.  சீன அரச பரம்பரையில் இது ஒரு வழக்கம். அரசு மரபு மாற்றம் அடைந்து புதிய அரச வம்சம் ஆட்சியைக் கைப்பற்றும் பொழுது தங்களது மேன்மையையும், நம்பகத் தன்மையினையும் உலகுக்கு எடுத்து வைக்க, பழைய அரச பரம்பரையப் பற்றிக் குறிப்புகளாக எழுதி வெளியிடுவது ஓர் மரபாகவே அங்கே இருந்தது. அதனால் தான் சீனர்களின் பதிவுகள் ஆசிய நாடுகளின்  பல சரித்திர நிகழ்வுகளுக்கு ஆதாரமாக சரி பார்க்கப்படுகிறது.  இந்தப் புதிய புத்தகம் நிறைவு பெற 17 ஆண்டுகள்  ஆனதாம்...

'தாங்' கின் புதிய சரித்திரத் தொகுப்பின் 222ஆவது  புத்தகத்தின் கலிங்கம் (சாவாகக் கலிங்கம் ) பற்றி  குறிப்பிடப் பட்டு இருக்கிறது. 


ஹோ -லிங்க் (HO -LING ) என்ற பெயரில் சீன மொழியில் அழைக்கப்பட்ட 'கலிங்கம்' பற்றி என்ன குறிப்புகள் இருக்கின்றன
  என்பதைக் காண கொஞ்சம் பொறுத்து இருங்கள்... அடுத்த பகுதியில் காண்போம் ...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60