தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்

 

தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்




அந்தக் காலத்திலேயே ஒரு ஒழுங்கு முறையுடன், முத்தமிழும் முழங்க சைவம் தழைக்க அதே நேரத்தில் மனம் மகிழ் விதமாகவும், அறிவார்ந்த விதமாகவும் நிகழ்ச்சிகளை நிரவி வழங்கி வந்த தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாக்  கழகத்து பெரியோர்களை மீண்டும் ஒரு முறை வணங்கி சில நினைவுகளை அசை  போடுகிறேன்.

கந்தன் விழா என்ற போதும் ஒரு ஒழுங்கு முறை... எம்முடைய தேவகோட்டைக் காலத்தில் ( நகர் நீங்கி 37 வருடங்கள் ஓடி விட்டன.. தற்போது நினைவுகளில் மட்டுமே கந்தன் கழக  நிகழ்வுகள் எம்முள்ளே).  முதல் நாள் நிகழ்வினைத் தொடர்ந்து பல்லாண்டுகளாகத் தொடங்கி வைப்பவர் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.  முதல் வரிசைகளில் அமர்ந்து கதை கேட்டு இடைஇடையே வரும் அவரது வினாடி வினாக்களுக்குப்  பதிலிருத்து சிறிய புத்தகங்கள் பரிசாய் பெறுவதில் போட்டி இட்ட நண்பர்கள் முகங்கள் சில நினைவில் நிற்கின்றன.

அதே நாளில் வாரியார் சுவாமிகளுக்குப் பின்னும் அதற்கு அடுத்த நாளும், இலக்கியப்  பேருரை... புலவர் கீரன் அப்படியே தம் வார்த்தை நாடகத்தில் பல்வேறு கதா பாத்திரங்களை அவரே ஏற்று வருவார்.  அடடா... அன்றாட, அன்றைய அரசியல் நிகழ்வுகளின் தாக்கம் நகைச்சுவையாய் அவரது உரையில்.... இனிக்கும்...



இந்த நாட்களில் தேவாரப்  பண்  ஓதும் சைவத்தமிழ் மறை” க்கும் இடம் உண்டு.

இயல் முடிந்த பின் இசை நிகழ்வுகள்... தமிழிசை, கர்நாடக இசை, வில்லிசை, என்று அனைத்தும் உண்டு.....



கவியரங்கம் கண்டிப்பாக உண்டு...  கவிகளை (மந்திகளை )  கவிகளாக (கவிஞர்களாக) மாற்றிய தேவகோட்டையின்  தேன் தமிழ், தீந்தமிழ்.. தென்றமிழ்...

அதன் பின் சூரசம்மார நிகழ்வுக்கு முழு நாளும் விரதம் இருப்போர் தமிழ் நாயகன் முருகன் நினைவாக அவனின் தமிழை அருந்தும் விதமாக (செவிக்குணவு இல்லாத போது ,,,, வயிற்றுக்கும் ஈயப்படும்)...முழு நாளும் பட்டி மண்டப நிகழ்வு... காலை விழாவுக்கு வரும் அன்பர்கள், முழு நாளும் செவிகளில்  தமிழுணவு பருகிவிட்டு மாலை தமிழ்க் குமரன் வீர சம்மார நிகழ்வுகளை கண்மலர்களில் காட்சியாகப் பருகி விட்டு, விரதம் முடிக்க இப்படி ஒரு ஏற்பாடு.. எப்படிப்பட்ட   ஆளுமைகள் தமிழாய்  நின்று....

பட்டி மண்டபம் ஆரம்பிக்கும் முன்னரே, அகில இந்திய வானொலி குழுவினர் பின்னர் ஒரு மணி நேர நிகழ்வாகத் தொகுத்து வழங்க ஒலிப்பதிவு உபகரணங்கள் சகிதம் அமர்ந்து பணி  ஆற்றுவதை பார்ப்பது அன்றைய சிறுவனாய் 'நாசா' ஆய்வுக்கூட அனுபவம் ...தேவகோட்டையில்.

இதற்கிடையில் 'வழக்காடு மன்றம்' நிகழ்ச்சி நிரலில் முளைத்து எழுந்தது பின் வந்த ஆண்டுகளில்.

அடுத்து ஒரு நாட்டிய நிகழ்வு... கூடல் மதுரையின் ஆடல் தலைவன் ஆக்கி வைத்த சைவம் வளர்க்கும் நிகழ்வில், ஆடல் இல்லாமலா ? பெரும்பாலும் மிகப் பிரசித்தி பெற்ற  ஆடற்கலை வல்லுநர்கள்.  இசை நாடகங்களும் உண்டு...

பின்னர் ஜனரஞ்சகமாக ஒரு இசை நிகழ்ச்சி, திரைப்படத் துறையில் இருந்தவர்களைக் கொண்டு...

கடைசி நாளாக, நகரின் அன்றைய மாண்டி சோரிப்  பள்ளிக்  குழந்தைகளின்( லெட்சுமி ஆச்சி நினைவுப் பள்ளி ?) சிறப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது . 

ஒவ்வொரு  நாளும்  தேவகோட்டை நகரின் பல்வேறு பள்ளிகளைச்  சார்ந்த மாணவ மாணவிகளின், இறை வணக்கம், உரை நிகழ்வும் உண்டு ... வளரும் பயிர்களை தமிழ் நீர் இறைத்து செழிக்க வைக்கும் விதமாக..

அந்த நேரத்தில், வள்ளல் அழகப்பர் தினம் என்று கடைசி நாளின் இலவச இணைப்பாக அழகப்பா கல்லூரியில்  பயிலும் மாணவர்களின் கலை நிகழ்வும் சேர்ந்து கொண்டது.. 

கண்களில், செவிகளில், கருத்தில் ஒளி விளக்காய்த் தமிழை ஏற்றி வைத்த கரங்களுக்கு சிரம் வணங்கி மகிழும் தருணம் இது.  

ஒரு மேலோட்டமான நினைவு மட்டுமே.. நினைவில் மறையாது ஒளிரும் நினைவுகளை அடுத்த பதிவுகளில் அசை  போடுகிறேன்... உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60