தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-
21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'
இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....
சென்ற வாரம் ஞாயிறு விடுமுறையில் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் அமைந்து இருக்கும் தேசிய அருங்காட்சியகம் சென்று இருந்தேன். இந்தோனேசியா வரலாற்றுப் பதிவுகள், பாரதத்துக்கும் இந்தோனேசியாவுக்கும் அதிலும் குறிப்பாக நமது தென்னகத்துக்கும் இந்தோனேசியாவுக்கும் உள்ள தொடர்புகளை வலைப்பதிவுகளில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்.
பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. சென்ற வார அருங்காட்சியக நுழைவு இந்தப் பகுதியை எழுதத் தூண்டுகிறது. இந்தோனேசியா மன்னர்களின் வாழ்வியல் வரலாற்றை விரும்பித் தேடுகிற நிலையில் எமது ஆய்வு மனம் அதே கால கட்டத்தில் நமது நாட்டில் எந்த மன்னருடைய ஆட்சி என்பதைத் தேடுவது இயற்கை. கடல் கடந்த மாமன்னர் அதிலும் சாவக, சுமத்திர, மலாயுக் கடற்பரப்பில் கலம் செலுத்திக் காலம் வென்ற இராச இராசர் மற்றும் இராசேந்திர சோழர் இவர்களுடைய காலம் மனதில் தொற்றிக்கொள்ளும்.
முதலாம் இராச இராச சோழன் காலம் பொ .ஊ .985 முதல் 1014 ஆகும்.
இவரது மைந்தன் இராசேந்திர சோழ தேவரின் ஆட்சிக் காலம் பொ.ஊ. 1012 - பொ.ஊ. 1044 ஆகும்.
எனவே கண்கள் பல புராதனத் தொல்லியல் துறை துடைத்து எடுத்த சிற்பங்களை காணுகின்ற போதிலும், கருத்து நம்மவர் நாவாய் செலுத்திய காலத்திலேயே சுழன்று வந்தது. மனம் விரும்பியதே மடியில் விழும் என்பார்கள்.
சாவக பூமியின் கிழக்கு கோடி தீவான பாலியில் பொ.ஊ. 990 இல் பிறந்து, கிழக்கு சாவகத்தில் சண்டி பெலகான் என்ற இடத்தில் பொ.ஊ. 1049 இல் மறைந்த மாமன்னன் 'ஏர்லங்கா' என்னும் பேரரசன். தென்னகத்து சோழர்களின் பொற்காலத்தில் கிழக்குச் சாவக பூமியின் சிற்றரசனாய்ப் பிறந்து, மெடாங்-காஹூரிப்பான் பேரரசை நிறுவி இன்றைய பாலி முதல் மத்திய சாவகம் முழுவதும் கைப்பற்றி ஆண்ட மன்னன். ஏர் லங்கா அல்லது அயிர் லங்கா என்ற வார்த்தைகளுக்கு துள்ளிக்குதிக்கும் (langaa) தண்ணீர் (Air ) என்று பொருள். அண்டம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு அழியும் காலமான 'பிரளயம்' என்பது போல சூனியமாகிப் போன (பிரளயம்) ஆன நிலையில் தொடங்கிய தனது வாழ்வு நிலையில் இருந்து ஜாவா மற்றும் பாலி முழுமையும் தனது ஆட்சிக்கு உட்படுத்தியவர். அதாவது பாலி அரசவையில் பிறந்து, தன் இளமைக் காலத்தில் ஜாவாவிற்குச் செல்ல பாலி நீரிணையைக் கடந்து, பின்னர் கிழக்கு ஜாவாவில் ஓர் காகுரிப்பான் இராச்சியத்தை அமைத்து ஆட்சி செய்தார் என அவரின் வாழ்க்கைக் கதையை ஏர்லங்கா எனும் பெயர் பிரதிபலிக்கிறது.
ஸ்ரீ மஹாராஜா ராக்கை ஹலு ஸ்ரீ லோகேஸ்வர தர்ம வம்ச அயிர் லங்கா அனந்த விக்ரம துங்க தேவர் (Sri Maharaja Rakai Halu Sri Lokeswara Dharmawangsa Airlangga Anantawikramottunggadewa) என்ற பட்டத்துடன் அரியணை அமர்ந்தவர். இவரது தந்தை 'வர்ம தேவ வம்சத்தில் '(Warmadewa dynasty) வந்த பாலி அரசனான 'உதயணன்'. தாயார் 'ஈசான வம்சத்தில்' (Ishana Dynasty ) வந்த மத்திய சாவகத்தை ஆண்டு வந்த 'மேடாங் அரசின்' இளவரசியான 'மகேந்திர தத்தா' (Mahendradatta). பாலி மன்னருக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்ட பிறகு அங்கு இவரது பட்டம், 'குணப்ரியா தர்ம பத்தினி' (Gunapria Dharmapatni). இந்த இளவரசியின் அரச குடும்பம் மத்திய சாவகத்தில் ஆட்சி புரிந்தது மட்டும் அல்ல... மேற்கு கலிமந்தான் (west Kalimantan ) வரை தமது குடியேற்றத்தை கொண்டு இருந்தது. ஸ்ரீ விஜய பேரரசுடன் மோதல் புரியும் வகை துணிவுடனும், பலமுடனும் விளங்கியது.
இந்த ஸ்ரீ விஜயத்துடன் தான் இராச இராச சோழர் நட்பு பாராட்டி வந்தார். அவரது மகன் இராசேந்திரன் தனிப்பெரும் கடற்படையுடன் ஸ்ரீ விஜயத்தை சுற்றி வளைத்துத் துவம்சம் செய்து வெற்றிக் கோடி நாட்டினான். (இப்போது உங்களுக்கு புரியும் ஏர்லங்கா அரசுக்கும் தென் தமிழ் நாட்டு அரசியலுக்கும் எப்படி தொடர்பு என்று..)
உண்மையில் பெரும் பலத்துடன் விளங்கிய ஈசான வம்சம், ஸ்ரீ மஹாராஜா ராக்கை இன தயா சிந்தோக் ஸ்ரீ ஈசான விக்ரம தர்ம துங்க தேவ விஜயா (Śrī Mahārāja Rake Hino
Dyaḥ Siṇḍok Śrī Īśānawikrama Dharmottuṅgadewawijaya) அரசரின் காலத்தில், மெராபி எரிமலை (MOUNT MERAPI ) வெடிப்பு காரணமாகவோ அல்லது பலமுடன் விளங்கிய ஸ்ரீ விஜயத்தின் படையெடுப்பு காரணமாகவோ மத்திய சாவகத்தில் இருந்து கிழக்கு சாவகத்துக்கு இடம் பெயர்ந்தது ஏர்லங்கா பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக.
சிறீவிஜய பேரரசின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில் மாதர (MATARAM) இராச்சியத்தை ஒரு பிராந்தியச் சக்தியாக மாற்றி அமைக்க தர்மவங்சா விரும்பினார்.
990-இல் அவர் சிறீவிஜயத்திற்கு எதிராக ஒரு கடற்படை படையெடுப்பைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பலெம்பாங் (PALEMBANG) சிறீவிஜய ஆட்சியைக் கைப்பற்றவும் முயற்சி செய்தார். இருப்பினும் மத்தராம் (MATARAM) இராச்சிய படையெடுப்பாளர்களை சிறீவிஜயம் எதிர்த்து நின்று வெற்றி கொண்டது.
990-ஆம் ஆண்டு பலெம்பாங்கிற்கு எதிரான தர்மவாங்சாவின் கடற்படைப் படையெடுப்பு நடந்தது. தோல்வியில் முடிந்த அந்த படையெடுப்பிற்குப் பிறகு, மாதரம் இராச்சியத்திடம் இருந்து தங்களுக்கு ஆபத்து அச்சுறுத்தல்கள் வரலாம் என்று சிறீவிஜய அரசர் ஸ்ரீ சூலாமணி வர்மதேவன் (Sri Culamani
varmadeva) எதிர்பார்த்தார்.
எனவே, ஒரு கிளர்ச்சியைத் தூண்டி மாதரம் இராச்சியத்தை அழிக்க சூலாமணி வர்மதேவன் திட்டமிட்டார். இந்தத் திட்டத்திற்காக உலுவார இராச்சியத்தின் மன்னர் உராவாரி (King Wurawari of Lwaram) தேர்ந்தெடுக்கப்பட்டார். சாவகம் சிறீவிஜயத்தின் தோழராக மன்னர் உராவாரி இருந்தார். கிளர்ச்சி நடப்பதற்கு முன்னர் உலுவார இராச்சியம், மத்த ராம் (MATARAM) இராச்சியத்தின் அடிமை மாநிலமாக இருந்தது.
நமது தென்னகத்தின் திருமண வழக்கம் ஒற்றியே ஏர்லங்கா தனது மாமன் மகளை திருமணம் முடிக்க முடிவாகியது. திருமண நிகழ்வுகள் அரச குடும்பத்தினர் என்ற ஆடம்பரத்தோடு நடந்து கொண்டு இருக்கின்ற வேளை. .மத்த ராம் (MATARAM) இராச்சியத்தின் தலைநகரம் கிழக்கு ஜாவா, வத்துகாலு (Watugaluh) எனும் இடத்தில் இருந்தது. வத்துகாலு அரண்மனையில் ஏர்லாங்காவின் திருமண விழாவின் போது கிளர்ச்சி நடந்தது. அந்தக் கிளர்ச்சியில் வத்துகாலு தலைநகரம் நாசமாக்கப்பட்டது.
அத்துடன்அந்தத் தாக்குதலில், மத்த ராம் (MATARAM) இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன்; அவரின் முழு குடும்பத்தினர்; பாலி அரசர் உதயண வருமதேவன்; மற்றும் குடிமக்களில் பலரும் கொல்லப்பட்டனர். ஏர்லங்கா, அவரின் மெய்க்காப்பாளர் நரோத்தமன் (NAROTTAMA) ஆகிய இருவரும், துறவிகள் போல மாற்று உடை அணிந்து காட்டுக்குள் தப்பிச் சென்றனர். அப்போது ஏர்லங்காவிற்கு வயது 16.
வானகிரி மலையில் இருந்த துறவி மடத்தில் (Mount Vanagiri Hermitage), 13 ஆண்டுகள் துறவி போல ஏர்லங்கா வாழ்க்கை நடத்தினார். அதன் பிறகு 1019-ஆம் ஆண்டில், முன்னாள் ஈசான வம்சத்திற்கு விசுவாசமான அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் இருந்து ஆதரவைத் திரட்டினார்.
மத்த ராம் இராச்சியத்தினால் முன்பு ஆளப்பட்ட பகுதிகளை ஏர்லங்கா ஒன்றிணைக்கத் தொடங்கினார். தருமவங்சாவின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பகுதிகள் சிதைந்து போய் இருந்தன. ஏர்லங்கா தன் அதிகாரத்தை ஒருங்கிணைத்து ஒரு புதிய இராச்சியத்தை நிறுவினார். சிறீவிஜயாவுடன் சமாதானம் செய்து கொண்டார். அனால் மனதில் இருந்த கசப்புணர்வைக் காட்டிக் கொள்ளாமல் தக்க சமயத்துக்கு காத்திருந்தார். அவரது குறிக்கோள் தமது இராச்சியத்தை விரிவு படுத்துவது மட்டுமே. ஏர்லங்கா உருவாக்கிய புதிய இராச்சியம், காகுரிப்பான் (KAHURIPAN) இராச்சியம் என்று அழைக்கப்பட்டது.
ஆக இந்தோனேசியக் கடற்பகுதியில் பலமுடன் விளங்கிய ஸ்ரீவிஜயம் துடிப்புடன் முன்னேறி வரும் அரசன் ஏர் லங்காவுக்கும் இடையே எதிரி கசப்புணர்வு உருவான நேரம்.
இதே நேரத்தில் இங்கே தஞ்சைத் தரணியில் இருந்து சீனம் செல்லும் வணிகர்களின் கப்பல்கள் ஸ்ரீவிஜயம் வழியாகத்தான் சென்று வர வேண்டும். ஸ்ரீவிஜயம் தமிழ் கடலோடிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர். மேலும் அதிகப்படியான நுழைவு வரிகளை தமிழக கடல் வணிகர்கள் மேல் சுமத்தி தமது வருவாயை பன்மடங்கு உயர்த்திக்கொள்ள ஸ்ரீவிஜய அரசு பேராசை கொள்ள ஆரம்பித்தது. தென்கிழக்கு ஆசிய கடற் பிராந்தியம் தமது கரங்களுக்குள் என்ற திமிரும் மமதையும் சேர்ந்து கொண்டது ஸ்ரீவிஜய அரசிடம்.
அதே வேளையில் கெமர் பகுதியை ஆண்ட முதலாம் சூர்யவர்மன், தென்னிந்தியாவின் சோழ வம்சத்துடன் 1012இல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினான். முதலாம் சூர்யவர்மன் சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பரிசாக ஒரு தேரை அனுப்பினான்.
இராஜேந்திர சோழனுடன் சூர்யவர்மனின் கூட்டணி பற்றி அறிந்ததும், தம்பிரலிங்க சாம்ராஜ்யம் சிறீவிஜய மன்னன் சங்கராம விஜயதுங்கவர்மனிடம் உதவி கோரியது. இது இறுதியில் சோழப் பேரரசு சிறீவிஜிய பேரரசுடன் மோதலுக்கு வழிவகுத்தது. சோழ வம்சம் கெமர் பேரரசு ஆகிய இரண்டும் அங்கோர் வாட் வெற்றியுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போரினால் சிறீவிஜயப் பேரரசுக்கும், தம்பிரலிங்க இராச்சியத்திற்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டது.
சோழர் படையெடுப்பில் ஸ்ரீ விஜயம் திணறிக்கொண்டு இருந்தது. சிறீவிஜயத்தின் வீழ்ச்சி என்பது ஏர்லங்காவுக்கு அவரின் காகுரிப்பான் இராச்சியத்தைப் பலப்படுத்த வாய்ப்பளித்தது. அந்தக் கட்டத்தில் அவருக்கு எந்த ஒரு வெளிநாட்டுத் தலையீடும்; உள்நாட்டு இடையூறுகளும் இல்லை. பின்னர், அவர் தன் இராச்சியத்தை மத்திய ஜாவா மற்றும் பாலி வரை விரிவுபடுத்தினார். ஜாவாவின் வடக்கு கடற்கரை, குறிப்பாக சுராபாயா (Surabaya), துபான் (Tuban), போன்ற நகரங்கள் முக்கியமான வணிக மையங்களாக மாறின.
சரி ஜகார்தா தேசிய அருங்காட்சியகத்தில் ஆரம்பித்தீர்கள்... அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இராசாவின் கதையைச் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்கிறீர்களா?
வருகிறேன். இந்த ஏர்லங்கா காலத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் கதைகள் பல சொல்கின்றன. ஏர்லங்காவின் காலத்தில் இலக்கியம், சமயம், பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி என்று பல முன்னேற்றங்கள். இவை அனைத்துக்கும் சாட்சியாக பல கல்வெட்டுக்கள் கிடைத்து இருக்கின்றன. அவற்றில் ஒரு கல்வெட்டுதான் ஜகார்தா தேசிய அருங்காட்சி அகத்தில் கண்டது.
கி.பி. 1030 ஆம் ஆண்டு பழைய சாவக (OLD JAVANES ) எழுத்து வடிவில்செதுக்கப்பட்டு இருந்த இந்த கல்வெட்டு எப்படி சுரபயா பெருநகருக்கு வந்து சேர்ந்தது என்பது புதிர். கி.பி.1913 ஆம் ஆண்டு சுரபயாவில் ஆண்டசைட் கல் வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு தொல்லியாளார் பிராண்டெஸ் (BRANDES ) அவர்களால் ஆய்ந்து வாசிக்கப்பட்டது. தற்போது ஜகார்தா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த இந்தக் கல்வெட்டு தான் இந்த ஆய்வுக்கு தூண்டில். சரி நாம் இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்தும் அரசரின் ஆணையாக செப்புப் பட்டய வடிவில் மகா மந்திரி ஸ்ரீ சங்கிராம விஜய தர்மப்பிரசாத துங்க தேவிக்கு வழங்கப்பட்டு அதன் படி (பிரதி ) தான் இந்தக் கல்வெட்டு என்றும் இந்தக் கல்வெட்டிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அன்றைய
அரச முத்திரையான 'கருட முகம் ' இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இது 'அரசு ஆணை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
மகா மந்திரி ஒரு பெண். இவர் வேறு யாருமல்ல . ஏர் லங்கா அரசனின் மூத்த மகள். பட்டத்து இளவரசி .. ஆனால் புத்த பிக்குவாக தன்னை பௌத்தத்தில் இணைத்து அரச சுகங்களைத் துறந்தவர். இவர் பற்றி இப்போது வேண்டாமே ...
PRASASTI BARU என்ற பெயரில் ‘BARU’ என்ற ஊருக்கு வரிவிலக்கு அளித்தமை பற்றிய குறிப்புகள் தான் இந்த பாரு கல்வெட்டில் விபரமாக குறிக்கப்பட்டு இருக்கிறது. ஏர்லங்கா பல வெற்றிபொற்களைக் கண்டவன். இவனது பலமிகு எதிரியாக இருந்த ஸ்ரீவிஜய அரசுக்கு ஏவல் புரிந்தனர் பல சிற்றரசர்கள். இது இப்போதும் நடப்பது தானே. ஸ்ரீ விஜய அரசுக்கு துணையாக வெங்கர் சமஸ்தானம், லுவாரம் மற்றும் ஹசின் என்ற பெயர் கொண்ட சிற்றரசுகள் சாவாகக் கிழக்குப் பகுதியில் எவரும் தலை எடுத்துவிடாதபடி பார்த்துக்கொண்டனர் . இந்தப் படைகளை முறியடித்துத் தான் ஏர்லங்கா தனது அரசை விரிவு படுத்தினான். அப்படி ஒரு போரில் ஹசின் அரசோடு பொருத வேண்டியிருந்தது. பாரு (BARU ) என்ற கிராமத்து மக்கள் ஏர்லங்காவின் படைகள் பாடி வீடு கட்டித் தங்கள் கிராமத்தில் முகாம் அமைத்து போர்க்களம் காணும்படி தங்கள் கிராமத்தை விட்டுக்கொடுத்து உதவிகள் பல புரிந்தனர். வெற்றி பெற்று கிழக்கு சாவகம், மட்டும் அன்றி மத்திய சாவகம் வரை தனது கோன்மைக்குள் கொண்டு வந்த பின் நன்றி மறவாது தமக்கு உதவி புரிந்த பாரு (BARU ) கிராம மக்கள், மற்றும் அந்த கிராமத்தில் வசிக்கும் கை வினைஞர்கள், பல தேசத்தில் இருந்து வந்து வணிகம் செய்பவர்கள் தனது அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று வரியிலிப் பகுதியாக ஒரு கல்வெட்டு மூலமாக அறிவிப்பு செய்தான். பாரு கிராமத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டதால் இதன் பெயர் பாரு கல்வெட்டு (BARU
INSCRISPTION) என்று ஆனது.
இந்தக் கல்வெட்டின் முக்கியமான வரிகள் :
இந்தக் கிராமம் இனிமேல் ஏர்லங்கா அரசுக்கு உரியது அல்ல. எனவே அந்தக் கிராமத்தின் அதிகாரிகளுக்கு மட்டுமே அரசரின் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் உறுதிப்படுத்துகிறது.
தன்னைத் தானே கொடை வள்ளல் என்று குறிப்பிட்டுக் கொள்ளாமல், தான் இந்தச் செயலை செய்ய ஆலோசனை வழங்கியவர்கள் தனது முக்கிய அரசவை அங்கத்தினர்களான சம்கட் லண்டயன் ராரை மற்றும் சம்கட் லுசெம் ம்பு மனு ரிதன் (Samgat Landayan
Rarai Mpu Bama dan Samgat Lucem Rarai Pu Manuritan), என்றும் இந்தப் பேரரசன் குறிப்பிடுகிறான். எவ்வளவு பெரிய மனம் இந்த மன்னனுக்கு ?
தன்னைத் தானே கொடை வள்ளல் என்று குறிப்பிட்டுக் கொள்ளாமல், தான் இந்தச் செயலை செய்ய ஆலோசனை வழங்கியவர்கள் தனது முக்கிய அரசவை அங்கத்தினர்களான சம்கட் லண்டயன் ராரை மற்றும் சம்கட் லுசெம் ம்பு மனு ரிதன் (Samgat Landayan
Rarai Mpu Bama dan Samgat Lucem Rarai Pu Manuritan), என்றும் இந்தப் பேரரசன் குறிப்பிடுகிறான். எவ்வளவு பெரிய மனம் இந்த மன்னனுக்கு ?
அதே சமயம் எவர் எவரிடம் வரி வசூல் செய்யலாம் என்ற குறிப்பையும் கொடுத்து இருக்கிறார். கடல் கடந்து வணிகம் செய்பவர், தொழிற் பண்பட்டவர் (PROFESSIONALS), கை வினைஞர் என்று ஒவ்வொரு பகுதியினரிடமும் வசூல் செய்ய வேண்டிய முறைகள் குறிக்கப்பட்டு உள்ளது , ஆச்சரியம். கிழலாண் வம்சம் (WARGA KILALAN) என்று வாழ்வில் மேல்தட்டு மக்களை குறித்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்யலாம். அரசின் வரிவிதிப்பு இல்லாத பகுதியாக இனாமாக கிராமத்துக்கே வரி உரிமை வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SPECIAL ECONOMIC ZONES) அனைத்திலுமே இந்த விதி கடைப்பிடிக்கப் பட்டு இருந்து இருக்கிறது.
எப்படி நம்மவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கீழ்திசைக் கோடி நாட்டில் பெயர் வழங்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள். கொஞ்சம் பழைய சாவக மொழியின் பெயர்ப்பைப் பார்ப்போமே.
..Çrĩ
Mahãrãja ri maniratna singhasana makadatwan ri wwatan mas..
வாட்டான் மாஸ் (Wwatan Mas.) அரண்மனையில் இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் மாஹாராஜா ... அறிவிப்பது ...
இங்கே பல தேசத்திலிருந்து வந்தவர்களை நாடு வாரியாகப் பட்டியல் இட்டிருக்கிறார்கள். இங்கே தான் நமது தென்னக மக்கள் வருகிறார்கள்.
கி.பி.1021 ஆம் ஆண்டு இதே மன்னனால் வரியிலியாக அறிவிக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டில் மிகத் தெளிவாக இருக்கிறது .
வரி எண் 14. ........................i
kanaŋ wārggā kilalān kliŋ āryyā sińhala paņdikira dravida campa kmir rĕmĕn
mambaŋ senamukha..
இன்னொரு கல்வெட்டு - துருகன் கல்வெட்டு (prasasti
Turunhyang A):
வரி எண் 28. .......irika
samańkana ikanaŋ wārggākilalān kliŋ āryyā sińhala.....................
Karņaţaka...........campa rĕmĕ.......
இன்னொரு கல்வெட்டு - பத்தா காண் (Prasasti
Patakan):
வரி எண் 15. ńikaŋ
wārggā kilalān kliŋ āryyā sińhala paņdikira dravida campa rĕmĕn kmir
mambaŋ........
KLING என்பவர் கலிங்க தேசத்தவர். நமது கடலோடிகளைப் போலவே கலிங்க தேச (இன்றைய odisaa) மக்களும் சிறந்த கடலோடிகள்.
Sińhala- என்பது இலங்கையில் இருந்து வந்து இருந்த சிங்களவர் .
āryyā
:
திராவிடர் அல்லாதவர் ஆர்யா என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்
paņdikira : பாண்டியா நாட்டினர் மற்றும் கேரளத்தவர் .
Dravida : தமிழர் அனைவரும் 'திராவிட' என்ற பெயரிலேயே அறியப்பட்டு இருக்கிறார்கள் .
Campa
:
வியட்னாமைச் சேர்ந்த 'சம்பா' வணிகர்.
Kmir: என்பவர் கம்போடியா கெமர் (khmer) மக்கள்.
Rĕmĕn அல்லது Mon: என்பவர் பர்மியர் (Burma)
ஆக மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எடுத்தாண்ட
"தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தென்னாடு பல்லாயிரம் கல் தொலைவு வரை அறியப்பட்டு இருக்கிறது.
ரபீந்திரநாத் தாகூரும் திராவிடம் என்ற சொல்லின் மூலமே தென்னாட்டவரைக்
குறிப்பிடுகிறார்
.
கீழ் சாவகத்தில் திராவிடர் என்ற வர்க்கத்தோடு, 'பாண்டிக்கிரா' (PANDIKIRA) என்று தனியாக பாண்டியரையும் கேரளத்தையும் சேர்த்து ஒற்றை வார்த்தையால் குறிப்பிடப்பட்டிருப்பதை புறம் தள்ளி விட முடியாது. மேற்குத்தொடர்ச்சி மலையோடு ஒட்டிய பகுதிகளையும் சேர்த்து ஆண்டு வந்த பாண்டியர் பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து ஆண்டு வந்ததால் தனியாகக் குறிப்பிடப் பட்டிருக்கலாம். எப்படி இருந்த போதும் திராவிடர் என்ற பெயர் தென்னாட்டு மக்களையே ஆதி காலம் முதல் குறித்து வந்து இருக்கிறது என்பதற்கு பல்லாயிரம் கல் தொலைவிலும், பல நூற்றாண்டு காலம் முந்தைய ஆதாரம் இருக்கிறது.
நமது பயணம் தொடரட்டும். நிறைய செய்திகளை கண்டு எடுக்கப் போகிறோம்..
கடல் கடந்த தமிழர் பற்றிய செய்திகளை...
திராவிடத்திற்கான அகழ்வு ஆராய்ச்சி அற்புதம் நண்பா!
பதிலளிநீக்கு