தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 24-தமிழன் பாதி சுமத்ரன் பாதி - கலந்து செய்த செய்த கலவை நான்
தமிழன் பாதி சுமத்ரன் பாதி - கலந்து செய்த செய்த கலவை நான்
தமிழ்க் குருதி ஆண்ட பிலிப்பைன்ஸ் நாடு
தமிழரின் கடல்சார் வரலாறு பெரும்பாலும் தமிழகத்தின் எல்லைகளுக்குள் மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் முன்னோர்கள் இந்தியப் பெருங்கடலின் அலைகளைத் தாண்டி, சுமத்ரா முதல் சாவகம், சுலு, செபு வரை தங்கள் வர்த்தக திறனாலும், கலாச்சார ஒளியாலும், மனித உறவுகளாலும் தங்கள் தடத்தை பதித்து சென்றுள்ளனர். இன்று 'உலகத் தமிழ்' என்ற பெருமையைப் பேசும் காலத்தில், நம் முன்னோர்களின் இந்த மறைந்த வரலாறுகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது நம் கடமையும் பெருமையும் ஆகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு அரச வம்சத்தில் தமிழ்க் குருதி ஓடியது என்பது கதையல்ல — மனித நெடுங்கடலில் தமிழரின் அலைச்சலின் மறக்கப்பட்ட அத்தியாயம். இந்த வரலாறு நம் இளைஞர்களுக்கு ஒரு உண்மை சொல்கிறது: “தமிழன் எங்கு சென்றாலும், தனது அறிவாலும் உழைப்பாலும் உலகத்தை வடிவமைக்கிறான்.”
திரைப்படங்கள் பெரும்பான்மை மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதிலும் குறிப்பாக, தமிழக சோழ வரலாற்று ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார்,மா. இராசமாணிக்கனார், நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் மற்றும் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற தொல்பொருள், வரலாற்று வல்லுநர்களின் இடைவிடாத ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட தமிழக சோழ அரசர்களின் வரலாறு அறிஞர் பெரு மக்களையே சென்று சேர்ந்தது என்றால், திரைப்படமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் அனைத்து வகை மக்களையும் சென்று சேர்ந்து (வரலாற்றுப் பிழைகள் இருக்கலாம்) விழிப்புணர்வையும் 1,000 ஆண்டுகளுக்கும் முன்னரே இருந்த தமிழரின் பராக்கிரமத்தையும் வெளிக்கொணர்ந்தது.
இராசராச சோழன், ஸ்ரீ விஜய அரசுகளிடம் (சுமத்ரா/ இன்றைய இந்தோனேசியா) நடபுப் பாராட்டி வந்தார். ஸ்ரீ விஜய அரசன் சூடாமணி வர்மன் வேண்டுகோளுக்கு இணங்க நாகப்பட்டினத்தில் ஸ்ரீ விஜய வணிகர்கள் வழிபடும் வகையில் சூடாமணி விகாரை என்ற புத்த ஆலயம் நிறுவி, இறையிலியாக பல கிராமங்களை கொடையாக வழங்கினார். அதன் பின்னர் அவரது மகன் இராசேந்திர சோழன் ஸ்ரீ விஜயத்தின் மீது படையெடுத்து (இன்றைய சுமத்ரா, கெடா ) பல பகுதிகளை வென்று தனது ஆளுமையை நிலை நாட்டினான். சோழரின் அரசு வம்சத்தில் ஒன்று விட்ட சகோதரர்களாக, படைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பிரபுக்களாக, ஆளுநர்களாக அவரவர் தகுதிக்கு ஏற்ப அரசின் உயர் பதவிகளில் இருந்து பொறுப்புடன் கடமை ஆற்றி இருக்க வேண்டும். இப்படியே சரித்திரத்தின் பக்கங்கள் குலோத்துங்கச் சோழன் காலம் வரை சோழ மண்டல - ஸ்ரீ விஜய உறவுகளைப் பேசுகின்றன.
மூன்றாம் இராசேந்திர சோழன் கி. பி. 1279 இல் (சோழப்பேரரசின் கடைசி அரசன் என்று கொள்ளலாம் ) மதுரை மன்னன் 'மாறவர்மன் குலசேகர பாண்டிய' னிடம் தோற்றத்தோடு அரசியல் வானில் சுடர் விட்டு நின்ற சோழ இராஜ்ஜியம் அடங்கி ஓய்ந்தது.
இந்த நேரத்தில் ஒரு சந்தேகம் கிளம்புகிறது. கடல் கடந்து தமது ஆளுமையை உலகு அறியச் செய்த சோழர், விரிந்து பரந்த வங்காள விரிகுடாவையே ஒரு ஏரி போல் பாவித்து அதனை 'சோழர் ஏரி ' என உலகோரை அழைக்க வைத்து ஸ்ரீ விஜயத்தின் பரந்த பகுதிகளான இன்றைய இந்தோனேசியாவின் சுமத்ரா, மலேசியாவின் கெடா, கம்போடியா, தாய்லாந்தின் பல பகுதிகள், ஏன் பிலிபைன்ஸ் வரை புலிக்கொடி நாட்டியவர்கள் தமிழகத்தில் ஆட்சியைத் தொலைத்து சரித்திரத்தின் பக்கங்களில் காணாமற் போய் இருந்தாலும், அவர்களின் உறவுகள் , தளபதிகள், படை வீரர்கள், மாலுமிகள் கடல் கடந்த நாடுகளில் அப்படியேவா தொலைந்து போய் இருப்பார்கள்? என்ற ஏக்கத்தோடு தேடித் திரிகையில், இன்றைய பிலிப்பைன்ஸ் நாட்டின் சிபு/ செபு (CEBU) வின் அரசுக் கட்டிலின் கதைகள் தமிழன் என்ற உறவு, 'அருகு' போல் வேரோடி கீழ்த்திசையில் எங்கு நோக்கினும் அங்கே எழுந்து நிற்கும் என்று சொல்லி ஆச்சரியத்தில் திகைக்க வைத்தது. வாருங்கள் பிலிபைன்ஸ் நாட்டின் செபு பகுதிக்கு பாய் மரக்கப்பலில் பயணிப்போம்.
சரித்திரக் காட்சிகள் :
ஸ்ரீ விஜயம் ( சில நேரங்களில் ஸ்ரீ விசயம் என்றும் பலரால் வட மொழி கலக்காது அழைக்கப் பட்டது) உள்ளே சென்று வருவோம் அன்றைய நாளின் சூழலோடு.
11 ஆம் நூற்றாண்டு வாக்கில், வலிவோடும், பொலிவோடும், புகழோடும் , புத்த மதக் கல்வி மறுற்ம் கடல் சார் வர்த்தகத்தின் மையமாக, துறை முகங்கள் முழுக்க பல்வேறு நாட்டு முகவர்கள் திரவியங்களைக் கொண்டு செல்லத் திரிந்த ஸ்ரீ விசய நாடு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிவை நோக்கி நடை போட்டது.
கடாரத்தில் சோழ இளவரசர்கள் (11ஆம் நூற்றாண்டு):
இராசேந்திர சோழனின் ஸ்ரீ விஜய/ கடார படையடுப்புக்குப் பின் (கி.பி. 1025) தமிழக ஆட்சித்துறை அதிகாரிகள் மற்றும் மணிக்கிராமம் /ஐந்நூற்றுவர் உள்ளிட்ட கடல் வாணிபக் கழகங்கள், மலாக்கா நீரிணைப் பகுதிகளில் (MALACCA STRAIT) சோழ அரசின் கடல் சார் வணிகத்தை இன்னும் மேம்படுத்தும் நோக்கோடு கடாரப் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. இந்த நிகழ்வு தொலை தூர நாடுகளுக்கு இளவரசர்களை/ அரசர்களின் நெருங்கிய உறவின் முறை பிரபுக்களை தமது கடல் கடந்த வணிக மையங்களுக்கு ஆளுநர்களாக அனுப்பி வைப்பதற்கு அடிகோலியது.
(Source: K.A. Nilakanta Sastri, The Cōḷas, 1935; George Cœdès,
Indianized States of Southeast Asia, 1968.)
சாவகம் (ஜாவா) மற்றும் காம்போஜத்தில் (கம்போடியா) வில் ஸ்ரீ விஜய தூதர்கள்:
அன்றைய கால ஆவணங்கள், ஸ்ரீ விஜயத்தைச் சேர்ந்த புத்தத் துறவிகள், வணிகர் குழுக்கள், இராச தந்திரிகள், மத குருமார்கள் மற்றும் அரசு ஆளுநர்கள் சாவகம் (ஜாவா), சம்பா (KAAMBOJAM) மற்றும் தெற்கு தாய்லாந்தில் உள்ள நக்கோன் சி தம்மரட் ( Nakhon Si
Thammarat) ஆகிய இடங்களுக்கு அனுப்பியதை பதிவு செய்கின்றன. ஸ்ரீ விஜயத்தைச் சேர்ந்த பாலேம்பாங்கின் ஆட்சியாளர்கள் இந்தச் செய்கையின் மூலம் தங்கள் இருப்பைக் காண்பித்துக் கொள்வதுடன் தமது அரசியல் மற்றும் கலாச்சாரச் செல்வாக்கை இந்தப் பகுதிகளில் விரிவு படுத்தினர்.
(Source:Pierre-Yves Manguin, “The Merchant and the King,” Archipel 58, 1999.)
தமிழ்ச் சங்கங்கள் மற்றும் கடல்சார் புலம்பெயர்ந்தோர் :
தென்னிந்தியாவைச் சேர்ந்த அய்யவோல்-500, மணிகிராமம் மற்றும் நானாதேசி வணிகச் சங்கங்கள் சுமத்ரா, ஜாவா மற்றும் மலாய் தீபகற்பம் முழுவதும் வெளிநாட்டு கிளைகளைப் பராமரித்தன. இந்தக் சங்கங்கள் பெரும்பாலும் உள்ளூர் ஆட்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றின. அவர்களது குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டன மற்றும் கலப்பின தமிழ்-மலாய் பரம்பரைகளை உருவாக்கின . இப்படிப்பட்ட கலப்பினமாக தமிழகத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்த (ROYAL BLOOD) ஒருவரின் ஸ்ரீ விஜய அரச பரம்பரையினருடன் கலப்பில் பிறந்த ஒரு இளவரசரர் ராஜா முடா லுமாயா Raja Muda Lumaya). இந்தோனேசியா மொழியில் முடா என்றால் இளைய/ இளையவர் என்று பொருள். ராஜா முடா என்றால் இளைய ராஜா அதாவது இளவரசர். அவரது பெயர் லுமாயா (Lumaya) .
(Source: Himanshu Bhattacharya, Maritime Trade of South India, 2004.)
சிங்கத்தின் சீற்றம் அடங்கி விட்டால் சிறிய விலங்குகள் கூட கட்டுப்பாடு இழந்து விடும். ஆட்சிக் கட்டிலில் இருப்போரின் அதிகாரம் குலைந்து விட்டால் அடுத்தடுத்த தட்டுகளில் வாழ்ந்து வந்தவர் வாழ்க்கையும் மாற ஆரம்பித்து விடும். ஸ்ரீ விஜயத்திலும் இது தான் நிகழ்ந்தது. பாலெம்பாங்கு (PALEMPANG) நகரம் வறட்சியின் பாதையில் நின்று கொண்டு இருக்கிறது. செல்வம் கொழித்த கடல் வணிகர் குழுக்கள் வடக்கு நோக்கிப் புதிய நாடுகளைச் சென்று புது வணிக முயற்சிகளில் ஈடு படலாமா என்று முணு முணுக்க ஆரம்பித்தன. புத்தத் துறவிகள் சாவகம் மற்றும் அதற்கும் அப்பால் உள்ள தேசங்களுக்கு அனுப்பப் பட்டனர். இந்தத் திசை மாறி வீசும் கடற்காற்றுக்கு இடையில் புதிய உத்தியாக தமிழ், ஸ்ரீ விஜய அரச / பிரபுக் குடும்பக் கலவையில் பிறந்த இளவரசர் ராஜா முடா லுமாயா இது வரை பழக்கப்படாத கடற் பரப்புக்கு அப்பால் சென்று புதிய வணிக வாய்ப்புகளை நோக்கி அனுப்பும் முகமாகத் தேர்வு செய்யப்பட்டார். ஏன் இந்தக் கலவை இளவரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?
இங்கே தான் அன்றைய அரசுகளின் இராஜ தந்திரம் வெளிப்படுகிறது. அறிஞர்கள் இந்தக் காலகட்டத்தை "அமைதியற்ற மறுகாலனியாக்கம்" (“restless re-colonization,”) என்று விவரிக்கிறார்கள். தனக்குவமை இல்லாத தனிப் பெரும் நாடு என்று தன்னை மறந்து செல்வக் கடலில் நங்கூரம் இட்டு அமர்ந்திருந்த ஸ்ரீ விஜயம் சோழ மாமன்னன் இராசேந்திரனால் துவம்சம் செய்யப்பட்டு மீண்டும் வருமோ அந்த நாள் என்று ஸ்ரீ விஜய அரசு முகம் தொங்கிப் போய்க் கிடந்த காலம். மங்கி வரும் சக்திகள் புதிய தொலை தூரத் துறை முகங்களில் இடப்பட்டு இருக்கும் தமது நங்கூரங்களை தமது விசுவாசமான இளவரசர்கள்/ ஆளுநர்கள் மூலம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற மாற்றுத் திட்டம் (PLAN-B) தீட்டுகிற வேளை. தமிழர் கடல் வணிகத்தில் கொடி கட்டிப்பறந்த காலம் கூட . எனவே இந்த இரண்டு இனத்துக்கும் இடையே பிறந்த (தமிழ் + ஸ்ரீ விஜய ) இளவரசர் ராஜா முடா இந்தப் பணிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று அரண்மனை மந்திராலோசனை முடிவு செய்தது.
"ஸ்ரீவிஜயா தனது செல்வாக்கை ஆயுதங்கள் மூலம் மட்டுமல்ல, அதன் வணிகர்கள் மற்றும் துறவிகளின் அமைதியான பரவலாலும் விரிவுபடுத்தியது" என்று வரலாற்று ஆசிரியர் கோடெஸ் (Cœdès)குறிப்பிடுகிறார் (Manguin, Archipel 58, 1999). ஆக தமிழ் இரத்தம் தாங்கிய இளவரசர் ராஜா முடா லுமாயா தமது வணிகம் பெருக்க வேண்டிய தூர தேசத்தில் உள்ள புதிய பகுதிக்கு ஆளுநராக அனுப்பத் துல்லியமாகப் பொருந்தமானார் .
"ஸ்ரீவிஜயன் ஆட்சியாளர்கள், சாம்ராஜ்யத்தின் வெளிப்புற துறைமுகங்களில் நிறுத்தப்பட்ட சார்பு இளவரசர்கள் மூலம் தங்கள் மேலாதிக்கத்தைப் பராமரித்தனர்." — ஜார்ஜ் கோடெஸ்,-தென்கிழக்கு ஆசியாவின் இந்தியமயமாக்கப்பட்ட நாடுகள் (1968)
“The Srivijayan rulers maintained their supremacy through dependent princes stationed at the outer harbors of the realm.”
— George Cœdès, Indianized States of Southeast Asia (1968)
பிற்கால விசயன் வாய்மொழி மரபின்படி (அகினிட், பயோக் சா அதோங் தவாரிக்/Aginid, Bayok sa Atong Tawarik),இளவரசர் லுமாயா தமிழ் மற்றும் மலாய் வர்த்தகர்கள், மத போதகர்கள், மத குருமார்கள் மற்றும் கைவினைஞர்களுடன் ஒரு நடுத்தர கடற்படையுடன் சுமத்ராவை விட்டு வெளியேறினார். பலேம்பாங் → போர்னியோ → சுலு கடல் → செபுவை இணைக்கும் பருவமழை வழித் தடத்தை (monsoon corridor) அவர்களின் பயணம் பின்பற்றியது. அவரது நோக்கம் புனிதமானதும் புதிய உத்திகள் கொண்டதும் ஆக இருந்தது. ஸ்ரீவிஜயன்-தமிழ் வணிகத்துக்குப் பாதுகாப்பான கிழக்கு துறைமுகத்தை நிறுவுவது மற்றும் தமிழ் சுமத்ரப் பேரரசின் கலாச்சார ஒளியை புதிய நீர்நிலைகளுக்குள் விரிவுபடுத்துவது.
Aginid, Bayok sa Atong Tawarik- Book
இப்படிப் பயணம் செய்த இளவரசர் லுமாயா சுக்போ (SUGBO/ இன்றைய பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு - CEBU OF PHILIPPINES ) வின் கரையை அடைந்த போது அது ஒரு இயற்கைத் துறைமுகமாக இருப்பதும் அந்த நாட்டின் நிலப்பரப்பு வளம் மிக்கதாக விளங்கியதையும் கண்டு மகிழ்ந்தார். இந்தப் பகுதி விசயன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது . இந்தப் பகுதியில் வழங்கப்பட்டு வரும் மொழி பிசயன் (Cebuano-Bisayan Language) என்று அழைக்கப்படுகிறது. வரலாற்று, மொழியியல் வல்லுநர்களால் ஸ்ரீவிசயத்தில் இருந்து வந்தமர்ந்த தமிழ் ஸ்ரீவிசய மன்னர் ஆட்சி செய்த பூமி என்பதனால் ஸ்ரீவிசயம் என்பதன் மூலமாக 'விசயன்' என்று அந்த நிலமும் விசயன் என்ற பெயர் மருவி 'பிசயன்' என்று மாறி அந்த மொழியும் இன்றும் அழைக்கப்படுகிறது என்று கருதுகின்றனர். இந்தியத் தொடர்புகளைக் காட்டும் விதமாக இன்றளவும் நிறைய சமக்கிருத , தமிழ், மலாய் வார்த்தைகள் மூலச் சொற்களாக இந்த பிசயன் மொழியில் இருக்கின்றன. இதனைப் பற்றி தனியாக மொழி பற்றிய ஆய்வுகளில் பார்ப்போம்.
San Carlos Museum Sebu- Unearthed Asian Ceramics
தமது இந்து கலாச்சாரத்தின் எதிரொலியாக அந்தத் துறைமுக நகருக்குச் 'சிங்கபாலா ' (Singhapala—“The City of the Lion”) என்ற பெயர் சூட்டியதாக அன்றைய நாள் குறிப்புகள் கூறுகின்றன. இந்த தமிழ்-ஸ்ரீவிசய இளவரசரின் மேற்பார்வையிலும், கண்காணிப்பு மற்றும் காவல் திறனாலும் இந்தத் துறைமுக நகரம் புதுப் பொலிவு பெற்றது; கடல் வணிகம் பெருகியது; செல்வம் குவியத் தொடங்கியது. இந்தப் பகுதியில் சீன தேசத்தின் சாங் வமிசத்து (SONG DYNASTY ) மட்பாண்டங்கள்; இந்தியத் துணைக் கண்டத்து மணிகள் மற்றும் சுமத்ராவைச் சேர்ந்த தங்க இலைகள் மண்ணின் மடியில் இருந்து கிடைக்கப்பெற்றன .
(National Museum of the Philippines, Archaeological Reports 2019–2022).
இந்த அருமையான ஆரம்பத்தோடு இளவரசர் ராஜா முடா லுமாயா, சுக்போ (செபு) வின் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்துக்கொண்டு அந்த மண்ணின் மைந்தர்களின் வாழ்வுரிமைகள் குலையாமல் அதே சமயம் தமது தாய் தந்தை வழி (தமிழ் மலாய்) மரபும் மாண்பும் மாறாது நீதி வழுவாது செல்வம் சிறக்கும் ஆட்சியை வழங்கினார். செபு அவரது சொந்த பூமி ஆனது அல்லது அவர் செபுவுக்காகத் தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினர். அவரது ஆட்சிக்காலம், 'வாளால் அல்ல....... வணிகத்தால் நாட்டைக் கட்டியவன் .. ஒரு இளவரசன்'' (“a prince who built by trade, not by the sword.” ) என்று வாய் மொழிகளால் இன்றளவும் பிலிப்பைன்ஸில் புகழப் படுகின்றன.
CEBU GOLDARTEFACTS
இவருக்குப் பிறகு, இவரது சந்ததிகளான ஸ்ரீ அல்ஹோ, ஸ்ரீ உக்கோப் மற்றும் ஸ்ரீ பாத்துக் —( Sri Alho, Sri Ukob, and Sri Bantug) ஆகியோர் குடியேறி வந்தாலும் நேர்மை தவறாத வழியில் ஆட்சி புரிந்த பாரம்பரியம் என்ற பெயரைக் காக்கும் வண்ணம் ஆட்சி புரிந்தனர்.
ராஜா முடா லுமாயாவின் ஆட்சி சுக்போ (செபு ) வின் கரையோரங்களை மறுவடிவமைத்த ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், அவரது வம்சாவளி இன்னும் அரியணையில் அமர்ந்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ராஜ்ஜியம் ராஜா ஹுமாபோனால் ( Rajah Humabon) ஆளப்பட்டது, விசயன் வம்சாவளிகளில் லுமாயாவின் பேரனாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவரது ஆட்சியின் போதுதான் மேற்கத்திய உலகம் முதன்முதலில் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தை அடைந்தது.
ஏப்ரல் 7, 1521 அன்று, ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan) தலைமையிலான ஸ்பானிஷ் பயணக்குழு செபு கடற்கரையில் நங்கூரமிட்டது. மாகெல்லனின் மலாய் மொழிபெயர்ப்பாளரான மலாக்காவின் என்ரிக் (Enrique), செபுவானோவுக்கு (செபுவின் மொழி/ Cebuano-Bisayan Language) நெருக்கமான ஒரு மொழியைப் பேசினார், இதனால் எதிர்பாராத விதமாக தொடர்பு சாத்தியமாகியது. முதல் முறையாக, ஐரோப்பிய மற்றும் விசயன் உலகங்கள் நேருக்கு நேர் நின்றன.
Pigafetta, First Voyage Around the World, 1524
மெகெல்லனுடன் பயணம் செய்த இத்தாலிய வரலாற்றாசிரியர் அன்டோனியோ பிகாஃபெட்டா (Antonio Pigafetta) ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வைப் பதிவு செய்தார்: "செபுவின் ராஜாவும் அவரது ராணியும் மிகுந்த மரியாதையுடன் ஞானஸ்நானம் பெற்றனர்."
(பிகாஃபெட்டா, உலகம் முழுவதும் முதல் பயணம்,1524)-(Pigafetta, First Voyage Around the World,1524)
1521 ஏப்ரல் 14 அன்று, ராஜா ஹுமாபோன், டான் கார்லோஸா(Don Carlos)கவும், அவரது ராணி ஹரா ஹுமாமே (Hara Humamay ) ராணி ஜுவானா (Queen Juana) வாகவும் ஞானஸ்நானம் பெற்றார். இன்றும் செபுவில் போற்றப்படும் ஒரு நினைவுச்சின்னமான ஸ்டோ. நினோவின் (புனிதக் குழந்தை/Sto. Niño /Holy Child), உருவத்தை மாகெல்லன் அவர்களுக்கு வழங்கினார்.
Sto. Niño- GIFT OF MAGELLAN TO QUEEN HARA HUMAMAY
இந்த தருணம் லுமாயாவின் இரத்த வம்சாவளியால் நிறுவப்பட்ட இந்து அரசுகளின் இறுதி அத்தியாயத்தைக் குறித்தது. ஒரு காலத்தில் இளம் ராஜா முடாவால் கடல் கடந்து கொண்டு செல்லப்பட்ட தமிழ்-சுமத்ரான் செல்வாக்கின் கலாச்சார மரபு, இப்போது ஒரு புதிய காலனித்துவ யுகத்தின் வாசலில் நின்றது.
தமிழ் சுமத்ர இளவரசர் ராஜமுடா லுமாயாவின் வரலாறு வெறும் செவி வழிக் கட்டுக்கதைகள் என்ற வரம்புக்கு நிற்காது பிலிப்பைன்ஸ் நாட்டு வரலாற்று ஏடுகளின் ஆரம்ப அத்தியாயங்களில் எழுதப்படுகிறது.

.jpg)
எத்தனை அருமையான பதிவுகள். இந்த பதிவுகள் யாவும் கதைகள் அல்ல பலநூறு புத்தகங்களையும் சம்பந்தப்பட்ட ஆய்வு ஏடுகளையும் சரி பார்த்து எழுதப்பட்ட வரலாறு என்றே நான் கருதுகிறேன்.
பதிலளிநீக்குதனது அயராது பணிக்கு மத்தியிலும் தமிழுக்காக நேரங்கள் ஒதுக்கி தமிழ் பணி செய்யும் மதிப்புக்குரிய மாமா திரு முத்துமணி அவர்களுக்கு மிக்க நன்றி தங்களின் அனைத்து தரவுகளையும் வெளியீடுகளையும் தவறாமல் படித்து தடம் தெரியாமல் போன தமிழர்களின் வீர வரலாற்றை அறிந்து தெரிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இதை அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாக நான் கருதுகிறேன்