தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 25-சீனக் கோவில்களின் தமிழ்ச் சிற்பங்கள்
சீனக் கோவில்களின் தமிழ்ச் சிற்பங்கள்
சீன தேசத்தில் தமிழகத்துக் கடல் வணிகர்கள் நிரந்தர/ தாற்காலிகக் குடிகளாக 10- 11 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் சீரோடும் சிறப்போடும் செலவச் செழிப்போடும் வாழ்ந்து வந்த செய்திகளையும், சம்பந்தப் பெருமாள் எனும் தமிழ் வணிகர், குப்ளாய் கான் எனும் சீன மன்னன் நலம் பெற வேண்டி எழுப்பிய சிவாலயம் பற்றியும் நமது முந்தைய தொகுப்பு வரைவுகளில் கண்டோம்.
குவான்சோ (QUANZHOU) வின் சுற்று வட்டாரப் பகுதியில் வேறு தமிழகத்தைச் சேர்ந்த, நமது பண்பாட்டுச் சின்னங்கள் வேறு என்ன கிடைத்து இருக்கின்றன, என்பன பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்வோமே. சீனாவின் குவான்சோ வில் உள்ள கையுவான் (The Kaiyuan Temple in Quanzhou) ஒரு புத்த கோவில் ஆகும். ஆனால் இந்தக் கோவிலில் இந்தக் கோவில்களின் எச்சங்கள், மிச்சங்கள் நிறைய காணப்படுகின்றன.
குவான்சோவின் கையுவான் கோயில்,
(Quanzhou's Kaiyuan Temple) ஒரு பௌத்த வளாகமாக இருந்தாலும்,
கைவிடப்பட்ட இந்து கோவிலின் ஏராளமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப எச்சங்களை
முக்கியமாகக் கொண்டுள்ளது, இது சீன வரலாற்று பதிவுகள் மற்றும் தொல்பொருள்
ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாங் /SONG ) மற்றும் யுவான் (YUVAN ) வம்சங்கள் சீனாவை ஆட்சி புரிந்த 10 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டுகள் நமது தமிழக கடல் வணிகர்கள் எந்த அளவுக்கு சீன தேசத்தில் மிகுந்த செல்வாக்குடனும், செலவச் செழிப்புடனும் விளங்கி இருக்க வேண்டும் என்ற ஓர் கால கட்டத்தை இந்த தொன்மை எச்சங்கள் நம் மனக்கண் முன்னே விரித்துக் காட்டுகின்றன.
கையுவான் கோயிலில் உள்ள இந்து எச்சங்கள்
பிரதான மண்டபம் (மகாவீர மண்டபம்) தூண்கள்: பிரதான மண்டபத்தின் பின்புற மையப் பகுதியில் உள்ள இரண்டு நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட கல் தூண்கள் மிகவும் குறிப்பிடத்தக்க எச்சங்கள்.
இந்த அடித்தள (DIABASE) நெடுவரிசைகள், ஒரு இந்து கோவிலிலிருந்து வந்தவை, பல்வேறு இந்து தெய்வங்கள் மற்றும் புராணக் காட்சிகளை சித்தரிக்கும் பன்னிரண்டு நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டுள்ளன, அவற்றுள்:
விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்கள், நரசிம்ம அவதாரம் போன்றவை. சிவன், பிரம்மா இவர்களின் சிற்பங்கள், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இந்து இதிகாசங்களிலிருந்து வரும் கதைகள், மிக நேர்த்தியான சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன.
வைணவத்தை முன்னிறுத்தி கஜேந்திர மோட்சம், கண்ணன் காளிங்கனை அடக்கி ஆடும் காளிங்க நடனம் போன்றவை கண்களுக்குள் விரிந்து நமது ஆயிரம் ஆண்டுப் பழமையினைப் பறை சாற்றுகின்றன.
இவை தவிர பிற கட்டிடக்கலை கூறுகள் :
முன் மேடையில் உள்ள சுமேரு பீடத்தின் முகப்பில் காமதேனு மற்றும் சிம்மங்கள் உள்ளிட்ட புடைப்புச் சிற்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்துப் புராணக் கதைகளைச் சொல்லும் யானைச் சிலைகள் மற்றும் உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குவான்சோ முழுவதும் 300க்கும் மேற்பட்ட இந்து கட்டிடக்கலை மற்றும் சிற்பத் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் பல கையுவான் கோயில் மற்றும் குவான்சோ கடல்சார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீனத் தொல்பொருள் ஆய்வாளர் வூ வென்லியாங் ( Wu Wenliang) 1930களில் 12க்கும் மேற்பட்ட இந்து சமய கற்சிற்பங்களை கண்டுபிடித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தச் சின்னங்கள் அனைத்தும் அதே காலகட்டத்தைச் சேர்ந்த தென்னிந்திய பாணி, அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் (சோழ மண்டலக் கடற்கரை ) உள்ள கோயில்களைப் போலவே உள்ளது என்று நிறுவப்பட்டது.
இந்தத் தேடலின் ஆவணமாகத் தான் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்நூற்றுவர் வாணிபக் குழுவின் அங்கத்தினரானா சம்பந்தப் பெருமாள் என்ற தவச் சக்கரவர்த்திகள் சீன மன்னன் செக்கைக் கான் என்பவரின் நலனுக்காக எழுப்பி வைத்த சிவன் ஆலயம் பற்றிய தமிழ் மற்றும் சீன மொழி (இரு மொழி) களில் ஆன கல்வெட்டு கிடைக்கப்பெற்றது.










கருத்துகள்
கருத்துரையிடுக