ரேடியோ லைசென்ஸ்-அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 10
அன்பு சொந்தங்களே ...
சென்ற இரண்டு அத்தியாயங்கள் முழுவதும் மருத்துவர் இராசகோபாலன்
அவர்கள் வியாபித்து இருந்து நம்மோடு மீள வாழ்ந்தார்கள். கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை
விட்டு அகலாத பெருமகனார். நமது நகர் வலத்தை சிலம்பணி சிதம்பர வினையாகர் சன்னதி தெருவில் கால்வாய் அருகே நிறுத்தினோம். தேவகோட்டை நகரின் நீர் மேலாண்மை பற்றி
விரிவாக முதல் பாகத்தில் பார்த்தோம்.
எப்படி நகரின் மேற்கில் இருந்து நீர் ஊரின் கிழக்கே இருக்கின்ற
கற்குடி கண்மாய் வரை தனது பயணத்தை தொடருகிறது என்று. 1938 ஆம் வாக்கில் நகராட்சி சார்பில்
ஆழமான படுகைகளுடன் சாலைகள் குறுக்கிடும் இடங்களில் எல்லாம் பாலங்கள் அமைத்து மிக அருமையான மேலாண்மை இருந்த
ஊர். இன்று கட்டிடங்கள் மிகுதியானதாலும், நகர் நலம் பற்றிய எண்ணம் இறங்கிப்
போனாதாலுமே செல்ல இடமில்லாத நீர்மகள் சாலைகளில் ஓடி தார்ச் சாலைகளை
அறுத்துக் குண்டும் குளியாக்கி விடுகிறாள் . நாம் செய்த வினையை நாம் தானே அனுபவிக்க
வேண்டும். கர்மா தன்னைக்
குறைக்காமல் கரை ஏறாது. இந்த நகரின் நீர் மேலாண்மை பற்றிய பழைய பதிவுகளை நமது பாகம் 1, பகுதி 15 இல் சுருக்கமாகப் பதிவிட்டு இருந்தோம். அந்தப் பகுதியை வாசிக்கத் தவறியவர்களுக்காகவும்,
வாசித்தவர்களுக்கு நினைவூட்டலுக்காகவும் அந்த அத்தியாயத்தின் இணைப்பை
கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த இணைப்பைச் சொடுக்கி பார்க்குமாறு வேண்டுகிறேன்.
https://muthumanimalai.blogspot.com/2018/04/15.html
இந்தக் கால்வாயைத் தாண்டியதும் இப்போது இருக்கற மருத்துவர்
பெரியசாமி அவர்களின்
'அன்பு மருத்துவமனை'.
இந்த இடம், அட்வகேட் R .கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களுக்குச் சொந்தமான பெரிய வீடும் தோட்டமுமாக
இருந்தது. மருத்துவர்
இராமச்சந்திரன் இந்த இடத்தை வாங்கி மருத்துவமனை அமைத்தார்.
மருத்துவர் பெரியசாமி மற்றும் புதல்வியும் மருத்துவர் என்பதும்
அவர்களை உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்...
இங்கு இரத்தப் பரிசோதனை
நிலையத்தில் இருக்கும் திரு காந்தி அவர்கள் தே பிரித்தோ பள்ளியில் எனது வகுப்புத்
தோழர் .
திரு காந்தி அவர்கள் தே பிரித்தோ பள்ளியில் எனது வகுப்புத்
தோழர்
மருத்துவரின் நிதி மேலாண்மை ஆலோசனை திரு.வடிவேல்
ஆச்சாரி அவர்களின் மகனான திரு.வ.இராசேந்திரன்
அவர்களால் கவனிக்கப்பட்டு வந்தது. சுறுசுறுப்பான, புத்திக்கு கூர்மையுள்ள, அனுபவமும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் திரு.VR என்கின்ற
V.இராசேந்திரன். ஆண்டவர் செட்டுக்கே எதிரே அமைந்து
இருக்கின்ற VR LODGE மற்றும் வாடியார் வீதியில் அமைந்துள்ள வணிக
வளாகம் மற்றும் ராஜன் ஜுவல்லரி இவருடைய உழைப்பின் சின்னங்களாக உயர்ந்து நிற்கின்றன.
அட்வகேட் R .கிருஷ்ணசாமி அய்யங்கார்
(இப்போது அன்பு மருத்துவமனை) அவர்களின் தோட்டதுடன்
இருந்த வீட்டுக்கு அடுத்து ஒரு வீடு இருந்தது. நல்ல உயரமான படிக்கட்டுகளுடன்
கூடிய அந்தக் கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கி 1960 ஆண்டு வாக்கில் இருந்து இயங்கி வந்தது. எப்போது இந்த இடத்தில் இருந்து தற்போதைய கட்டிடத்துக்கு மாறியது என்பதை நான்
அறியேன். அந்தக் காலத்தில்
கிட்டத்தட்ட ஒரு அரசு
அலுவலகம் போலவே நடைபெறும். முக்கியமான பணிகளே, அரசின் நிர்வாகப் பணிகளுக்கான பணப்
பரிவர்த்தனை மட்டுமே. இங்கு எனது உறவினர் தேவகோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராய் இருந்த திரு மலைராசு (எனக்கு தாத்தா முறை) அவர்களின் மகன் கருணா மூர்த்தி என்ற
மூர்த்தி குமாஸ்தாவாய் பணியாற்றினார். அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், நீதி மன்றப் பணியாளர்களுக்கு இராம் நகரில் அமைந்து
இருந்த கிளைகருவூலத்தில் இருந்து சம்பளம், படிகள் மற்றும் பல செலவினைகளுக்கான தொகை பட்டுவாடா
ஆகும். அந்தக் கருவூலத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்துதான்
பணம் வரும். எனக்கு சிறு
வயதில் இந்த பாரத ஸ்டேட் வங்கியில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் தமிழகத்தில் வெளிவந்த
முதல் பரிசு சீட்டு 1968
வருடம் 1968 அல்லது 1969.. எனக்கு 8~9 வயது. அந்த வயதிலும் வங்கிக்கு எல்லாம்
சென்று வருகின்ற ஊக்கம் இருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்திலே லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்தப்
பட்டது. உச்ச பட்ச பரிசு
ரூ 1 லட்சம்.
மாதம் ஒரு குலுக்கல் நடை பெற்றது. ஒரு சீட்டு ஒரு ரூபாய்
. நான் நான்காம் வகுப்பு….,
கருதா ஊரணி சைவப்பிரகாச வித்தியா சாலையில். .. அன்றைய நாளில் ரூபாய் ஒரு இலட்சம்
என்பது மிகப் பெரும் தொகை நடுத்தர மக்களுக்கு. இன்றைக்கு சீட்டு குலுக்கல் என்றால் அடுத்த நாள் காலையில்தான்
தினத் தந்தி செய்தித் தாளில் முடிவுகளைக் காண இயலும். ஆனால் அன்றைய தினமே மாலையில்
'ஆல் இந்திய
வானொலி' யில் முதல் பரிசு ரூ 1 இலட்சம்,
இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூ.25
ஆயிரம் இவைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு இருக்கும் இலக்கங்கள் அறிவிப்பாக
வெளியிடப்படும். தேவகோட்டையில்
அன்றைய தேதியில் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் டிரான்சிஸ்டர் ரேடியோ வைத்து இருந்தனர்.
அதற்கும் அஞ்சல் அலுவலகத்தில் சென்று வருட லைசென்ஸ் என்ற பெயரில் பணம்
கட்ட வேண்டும். வருடத்துக்கு ரூ .15/=. அந்த ரேடியோவுக்கான லைசென்ஸ் முறை 1991 இல் தான் ஒழிக்கப்பட்டது.
(மிதி வண்டிகளுக்கும் லைசென்ஸ் என்ற பெயரில் பணம் கட்டிய காலம் அது
.. இன்றைய தலைமுறையினர் சொன்னால் நம்ப மாட்டார்கள் ). பொது மக்களுக்காக நகராட்சியின் சார்பில் இருந்த ஆர்ச்,
கருதா ஊரணி , வெள்ளயன் ஊரணி மற்றும் திண்ணன் செட்டி
ஊரணிக் கரைகளில் அமைந்து
இருந்த பூங்காக்களில் ஒலி பெருக்கி பொருத்திய வானொலி இயங்கும். எப்போதுமே ஆல் இந்திய ரேடியோ தான்
. மாலையில் ரேடியோவை 'ஆன்' செய்து வைத்தால், இரவு சரியாக
9 மணிச் சங்கு ஊதும் பொழுது அணைத்து விடுவார்கள். திண்ணன் செட்டி ஊரணி பூங்காவில் திரு.முத்துக்கருப்பன் என்பவரும்
(பாண்டியன் கிராம வங்கியில் பணி புரிந்த எனது அன்புத்தோழர் அமரர்
செல்வம் அவர்களின் தகப்பனார் ) ஆர்ச் பூங்காவில் அழகர் சாமி சேர்வை
என்பவரும் இந்தப் பணியினைச்
செவ்வனே செய்து வந்தார்கள்.
தேவகோட்டை பூங்காக்கள் பற்றிய செய்திகள் எம்முடைய முந்தைய
பதிவில் இங்கே இருக்கின்றன.
https://muthumanimalai.blogspot.com/2018/04/12.html
இந்த லாட்டரி சீட்டு முடிவுகள் வெளியாகும் நாட்களில் இங்கு
இதற்கு ஒரு கூட்டம் கூடும்,
கைகளில் தாங்கள் வாங்கி வைத்திருந்த சீட்டுக்களோடும் , கண்களில் லட்சாதிபதிக் கனவுகளோடும்.. .அதில் கூட லட்சுமி
தியேட்டர் அருகே இருந்த ஆறுமுகம் என்ற
கை வண்டி இழுக்கும் தொழிலாளத் தோழர் ஒருவருக்கு ரூ.1 இலட்சம் பரிசு கிடைத்தது நினைவில் இருக்கிறது. அதே போல்
காசுக்கடை வீதிப் பகுதியில்
ஆயிர வைசியர் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பரிசு கிடைத்தது.
எனது சித்தப்பா வாங்கிய ஒரு சீட்டு எண், பரிசு
ரூ.10 க்கு தேர்வாகி இருந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் லாட்டரி
விற்கும் முகவர்கள் சீட்டுக்களை விற்பதோடு சரி. பெரிய தொகை என்றால் அவர்கள் பரிசுத்தொகைதனை பெற்றுத்தரும் பணிகளை செய்வார்கள். இந்த 10ரூபாய் மாதிரி தரை டிக்கட் எல்லாம் கருவூலம்
(TREASURY) போய்த் தான் லாட்டரி டிக்கெட்டை கொடுத்து விட்டு பணம் பெற்றுக்
கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். வீட்டில் ஓட நடக்க இருந்த ஒரே உதவியாளன் என் சித்தப்பாவுக்கு நான் தான். இதுவே எனக்கு அந்தக் வயதில்
நிறைய கற்றுக்கொள்ள வைத்தது. சரி என்று லாட்டரி டிக்கெட்டை எடுத்து
கொண்டு இராம் நகர் உடப்பன்பட்டி சாலையில் இருந்த
( உதவி ஆட்சியர் அலுவலம் அருகில் ) கிளைக் கருவூலம்
சென்றேன்.
அவர்கள் ரொம்ப நேரம் காக்க வைத்து பரிசு சீட்டின் எண்ணை சரிபார்த்து எண் 9 என்று
பொறித்திருத்த ஒரு பித்தளை வில்லையை கொடுத்து
தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியில் அதனைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி சொன்னார்கள். திரும்ப வா…மகனே … தேவகோட்டைக்கு... அப்புறம் அந்த வங்கியின் 18ஆம் படிகள் போல
உயர்ந்த படிகளில் ஏறி உள்ளே சென்றுஅங்கும் ஒரு மண்டகப்படியைப் போட்ட பின்பு அந்த டோக்கன்
எண் 9 என்று காசாளர் அழைக்கும் வரை காத்து இருந்து வெற்றிகரமாக
10 ரூபாய் பணத்தை பாடலைக்
கொண்டு வந்த தருமி போல வாங்கி கொண்டு வீடு திரும்பினேன். எப்படி மறக்க முடியும் பாரத ஸ்டேட்
வங்கியை?? சன்மானம்
10 சதமாக ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டது தனி.
இதனை அடுத்து ஒரு காலி மனை. அடுத்த
வீட்டில் விஸ்வநாத சாஸ்திரிகள் என்ற ஒரு புரோகிதர் 80 வருடங்களுக்கு
முன்னர் இருந்தார். இவரது மகன் V. சீதாராமன்
என்பவர் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் பணி
புரிந்து வந்தார்.
இவர் பணி மாற்றம் காரணமாக தேவகோட்டையைத் துறந்து செல்ல வேண்டிய நிலையில் அன்றைய
LIC Development Officer திரு.தியாகராசன் செட்டியார்
அவர்களிடம் இந்த வீட்டை விற்று விட்டார்.
அவர் இப்போது இல்லை. அவரது பெண் மக்கள்
இருக்கிறார்கள். இந்த
வீட்டின் மாடியிலே 'ஆடிட்டர் துரை ' அவர்கள்
வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்கும் பணியினை சென்ற வருடம் வரை செய்து கொண்டு இருந்தார். தற்போது லட்சுமி புரம் மேலத் தெருவுக்கு
அலுவலகத்தை மாற்றிக் கொண்டார்.
தேவகோட்டையின் இந்த வருமான வரித் தாக்கல் செய்யும் அலுவலகம் நீண்ட நெடியதோர் வரலாறு கொண்டது.
தற்போது
நமது நகர்வலத்தில் உடன் வரும் பெரியவர் அட்வகேட் வெங்கடபதி
ஐய்யா அவர்களின் மாமனாரின் மூத்த சகோதரர் இராமானுஜம் அய்யங்கார் கிட்டத்தட்ட
90 வருடங்களுக்கு முன்னமேயே தேவகோட்டை லட்சுமி புரம் மேலத் தெருவில்
வருமான வரிக் கணக்கிட்டு தாக்கல் செய்யும் தொழிலைச் செய்து வந்தார். அதன் பின்னர் தான் இந்த சிதம்பர விநாயகர்
சன்னதி தெருவின் நாம் காணும் இந்த வீடு மாடியில் வருமான வரி கணக்கு தாக்கீது செய்யும்
அலுவலகம் மாற்றப்பட்டது .
அவரது உதவியாளராக இருந்தவர் நான் வசித்த திண்ணன் செட்டி வடக்கு அக்ரஹாரத்தில்
வாசித்த திரு. இராகவன் அவர்கள். வக்கீல் தொழிலைப் போலவே
INCOME TAX PRACTICIONER என்னும் இந்தத் தொழிலும் கிட்டத் தட்ட குடும்ப
வழி/ வாரிசு வழித் தொழிலாய் அன்று இருந்தது. அதாவது வழக்கறிஞர் மகன் வழக்கறிஞர்
ஆவார். கணக்காளர் மகன்
கணக்காளர் ஆவார். இவை எல்லாம் வாடிக்கையாளர் அடிப்படையில்
(CUSTOMER BASED )நடக்கும்
தொழில்கள். தந்தையாருடனே இருந்து வரும் வாடிக்கையாளர்களின்
கோப்புகளைக் கண்டு தொழில் நுணுக்கம் அப்படியே இவர்களுக்குள் அணுக்கம் ஆகி விடும்
. ஆயினும் இந்த இராமானுஜம் அய்யங்காருக்கு
ஆண் வாரிசு இல்லை,
எனவே அவருக்கு அடுத்து இந்தத் தொழில் இவரிடம் உதவியாளராய் இருந்த திண்ணன் செட்டி அக்ரஹாரத்து
இராகவன் அய்யங்கார் வசம் வந்தது . இவரை நான் நன்கு அறிவேன். இவரது மகன் ஸ்ரீநிவாசன் என்னை விட 2 வயது மூத்தவர். பிரகாசமான புத்திக்கு கூர்மையாளர். ஐவரும் வக்கீல் குமாஸ்தாவாக இருந்த
யக்னேஸ்வர ஐயர் மகன் நரசிம்மனும் நெருங்கிய நண்பர்கள். என் அம்மா இந்த வீட்டில் வேலை பார்த்தார்கள்
. நான் என் இளமைப் பருவத்தில் இவர்களை எல்லாம் பார்த்து நானும் வணிகம்
(Commerce ) பயில வேண்டும், ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள்
விதைத்து இருக்கிறேன்.
இந்த இராகவன் அய்யங்காரிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்று
முன்னணியில் இருந்தவர் தான் 'ஆடிட்டர் துரை' அவர்கள். இப்போது புரிகிறதா .. தேவகோட்டையில் ஒவ்வொரு கட்டிடத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்று
...
இதனை அடுத்த ஒரு 'பிராமணாள் ஸ்டோர்' இருந்தது. பூஜைப்
பொருட்கள், அப்பளம், வடாம், கோலம், விளக்குத்திரி என்று அனைத்துக் பிராமணாள் ஐட்டங்களும்
அமோகமாக இங்கு கிடைக்கும். இந்த ஸ்டோர் பின்னாளில் அட்வகேட் திரு.மா சா மாணிக்கம் உடையார் அவர்களின்
மகன் இராமச்சந்திரன் அவர்களிடம் விற்கப்பட்டது. அன்பர் வழக்குரைஞர் மா.சா. ஆசைத்தம்பி எனது இனிய நண்பர். திரு இராமச்சந்திரன் அவர்களின் மனைவியும்
மருத்துவர் என்பதால் இந்த 'ஸ்டோர்ஸ்' இன்
முன் பகுதி 'கிளினிக்' ஆகவும் பின் பகுதி
இல்லமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது .
இதனை அடுத்து சிலம்பணி விநாயகர் கோவிலின் ஸ்வயம்பாகி ஆகிய
சமையல் கார அய்யரின் இல்லம். 'ஸ்வயம்பாகி ' என்பது ஒரு வட சொல் . ஆனால் நமது ஊரில் 'ஸ்வயம்பாகி ', சுயம் இழந்து 'சோம்பாயி' ஆகி விட்டார். பேச்சு வழக்கு ஒரு மொழியை உருவாக்கி
விடும், பின்னர் மொழியின் ஒரு வார்த்தையாகவே மாறிவிடும்
. ‘ஸ்வயம்பாகம்’ என்றால் தானே சமைத்துக் கொள்வது
என்று அர்த்தம். பாகம் என்றால் சமையல். 'நள பாகம்' என்று சமையலற்களைக் குறிப்பிடுவோம்.
நளன் சமையல்
செய்வதில் கில்லாடி என்பதால் தான் ஆண்களின் சமையலை 'நள பாகம்' என்று
அழைக்கிறார்கள்.
யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வில்லை என்றால் இந்த 'நள
பாகம்' நான் வாழும் இந்தோனேசியா நாட்டில் அதிலும் குறிப்பாக தமிழக
இலக்கியங்களில் 'சாவகம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்
'ஜாவா' வில் எப்படி நடை முறையில் இருக்கிறது என்று
இந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
இங்கு ஒரு சிற்றுண்டி நிலையத்தின் பெயர் 'நளரஸ் ரசா ' . ரசா என்பது சுவையைக் குறிக்கிறது,
'நள' என்ற சொல் சமையல் காலையில் வல்லவனான
'நள மகாராசனை'க் குறிக்கிறது. அதாவது 'நள
மகராசாவின்' சமையல் என்று இந்த சிற்றுண்டி விடுதியின் பெயர்.
இந்தோனேசிய நாட்டுத் தீவுகளின் இந்தியத் தொடர்புகள் ஏராளம். இது பற்றி எனது 'யூ டியூப்' பதிவுகளை விருப்பம் இருப்பவர்கள்
காணலாம்.
https://youtu.be/93stJjXBvRE
அடுத்து பயணம் தொடர நிறைய செய்திகள் இருக்கின்றன. ஆனால் தொடரின் அத்தியாய நீளம் அதிகமாகி
விடக் கூடாதே என்ற நோக்கில்
காலத்தின் அருமையைக் கருதி அடுத்த பகுதியில் அந்தச் செய்திகளைத் தொடரலாமே
....
என்ன சரிதானே ?
கருத்துகள்
கருத்துரையிடுக