அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 16: சிகரங்களின் அகரம்

 

அன்புச் சொந்தங்களே ...

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்  நமது நகரின் பழைய சரித்திரத்தில் மறக்கப்படக்கூடாதவை என்கின்ற ஒரே காரணத்தால், திரும்ப சன்னதி தெரு வரை ஒரு நடை உங்களை அழைத்து வந்தேன்.  பிடித்தவர்கள் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.   அறுவை என்றும் அதிக நீளம் என்றும்  நினைப்போர் இந்தப் பகுதியை வாசிப்பதை தவிர்க்கலாம். 

இந்த சிறிய சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி, நிறைய விஷயங்களை உள்ளடக்கி வைத்து இருக்கிறது.  ஒரு வழியா அந்த இடத்தை விட்டு நீங்கி வெள்ளாளர் தெருவில் நடை போட்டோம். சன்னதி தெருவைப் பற்றிய நினைவுகளை அசை  போட்ட போது இந்த சன்னதி தெருவில் நடை பெரும் தியாகப் பிரம உத்சவம் பற்றிக்  கொஞ்சம் நினைவு கூர்ந்தோம்.  ஆனால், இந்த விழாவில் வந்து கலந்து கொண்டவர்  பற்றிய விபரங்ககளை அறிந்தும்  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் கடந்து செல்வது இந்தத் தொடருக்குச் செய்கின்ற துரோகம் என்ற குற்ற உணர்வு அதிகமாக வாட்டியதால் அப்படியே  மீண்டும் ஒரு நடை சன்னதி தெருவுக்கு ( " U turn" அடித்து ?) வந்து விட்டேன்.    மிகப் பெரும் கலைஞர்கள் மிகச் சாதாரணமாக வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு சென்று இருக்கிறார்கள்.  இவ்வளவு பெருமை கொண்ட நகரமா நமது தேவகோட்டை ?   'எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்?' என்று முன்பு பதிவு செய்து இருந்தோம்.. ஆனால் இப்போது சொல்ல வேண்டியது.... ' எப்படி எல்லாம் இருந்த நான் இப்படி ஆகி விட்டேனே ?' என்பதாம். 

கொஞ்சம்   90   வருடங்களுக்கு முன்பாக நாம் பின்னோக்கிப் பயணித்து சன்னதி தெருவில், அன்றைய காலகட்ட உடை,நடை பாவனையில் இருப்பதாய் கற்பனை செய்து கொள்வோம்.. கட்டுக்குடுமி, அதிலும் முன் குடுமி, பின் குடுமிப்  பெருவழுதிகளும், உச்சிக்குடுமிகளும் உண்டு.  சட்டை என்பதை  சட்டை செய்யாத திறந்த மார்பினை ஒரு துண்டு (அங்கவஸ்திரம்).  பெரும்பாலும் அரையில்  இருக்கும் அரை ஆடை  மட்டுமே.. இதுதான் நாம்...

தேவகோட்டையில் இரண்டு தொடர் நிகழ்வுகள் நடந்தன .  ஓன்று இந்த தியாகப்ரம்ம உற்சவம்.. அடுத்து கந்தர் சஷ்டி விழா.   முன்னதில் ஒரே இசை தான்... இசை வடிவாய் இறைவன் என்று அரோஹணம், அவரோஹணம், சுருதி, இலயம், தாளம், இராகம் என்று ஒரே இசை மொழியில் சன்னதி தெரு நிறைந்து இருக்கும்.  கந்தர் சட்டி விழா ஒரு அருமையான முத்தமிழ்க் கலவை.  இலக்கியப் பேருரையில் ஆரம்பித்து, பட்டி மண்டபம், இசை (சாத்திரிய கர்நாடக, மற்றும் இன்றைய இசை ) நாட்டியம், நாட்டிய நாடகம் என்று அனைத்து ரசனைகளும் இணைந்த வண்ணக் கலவை.  கர்நாடக இசைக் கச்சேரின்னாலே  ஒரே ஒரு தியாகராஜர் சுருதியாவது கட்டாயமா இருக்கும். முன்னது மேல் தட்டு வாசிகளின் மேல்  மாடம், பின்னது பாடறியேன் .. படிப்பறியேன் .... என்பவர்களும் பார்த்து ரசிக்கவும் பல்சுவை.  இரண்டும் அவசியம்... 


                                                  குன்னக்குடி  வைத்தியநாதன்

 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோம.இராமநாதன் செட்டியார், கரு.காசிச் செட்டியார் , உ.மு.அ.லெ.லெட்சுமணன் செட்டியார் ஆகியோர்கள் இணைந்து கந்த சஷ்டி விழா கழகத்தை தோற்றுவித்தனர்.  இதற்கும் முன்னமேயே 1930 களில் தியாகப் பிரம்ம ஆராதனை விழா தேவகோட்டையில் நடை பெற அரம்பித்தது.தேவகோட்டை கந்தர் சஷ்டி விழா பற்றிய எமது முந்தைய பதிவுகள் இதோ கீழே... 

https://muthumanimalai.blogspot.com/2018/04/18.html

கொஞ்சம் பின்புலத்தில் யார் இந்த தியாகராசர்,  மற்றும் தொடர்புடைய  அவசியமான செய்திகளை மட்டும்   இதனை வாசிக்கும் இளம் தலைமுறையினருக்கு வழங்கக்  கடமைப் பட்டு இருக்கிறோம்.  

  


கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில்  தியாகப்ரம்மம்  என்று அறியப்பட்ட தியாகராஜ ஸ்வாமிகளின் காலம் 1767 -1848.  மும்மூர்த்திகளில் மூத்தவர் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் (1762 - 1827)  மூன்றாமவர் முத்துசுவாமி தீட்சிதர் (1776 -  1835).  மூவருமே ஏறக்குறைய சமகாலத்தவர்கள்தான்!  மூவர் பிறந்ததும் திருவாரூரில்தான்!

தியாகராசர்  சுவாமிகள்  கலியுகாதி வருஷம் 4868, சாலிவாகன 1689க்குச் சரியான ஸர்வஜித் வருஷம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை, வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம், கடக லக்கினம், சூரிய உதயாதி 15-1/2 நாழிகையில் கடக லக்னத்தில் (அதாவது 4--5--1767) பிறந்தார்.

தியாகராஜருடைய கொள்ளுத்தாத்தாவின்  பெயர் பஞ்சநதப்ரம்மம் என்பதை வச்சு இவுங்க திருவையாறு என்னும் ஊரில்  இருந்த குடும்பம் ( பஞ்ச நதி = ஐயாறு = திரு+ஐயாறு ) என்று சொன்னாலும்  இவங்க முன்னோர்கள் தெலுகுபேசும் பகுதியில் (அப்ப ஏது தமிழ் நாடு, தெலுங்கு தேசம், ஆந்த்ரா, தெலுங்கானா  என்னும் பெயரெல்லாம்?) இருந்து இடம்பெயர்ந்து வந்தவுங்க. தாய்மொழி தெலுகு என்பதால்  இவருடைய பாடல்கள் எல்லாம் தெலுகு மொழியில்தான்  இருக்கு.  தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள்.

இவருடைய  தந்தை ராமப்ரம்மம் , தாய் சீதம்மா. தாய்வழித் தாத்தா  வீணை காளஹஸ்தய்யா திருவாரூரில் செட்டில் ஆனவர்.  அப்புறம்  ராமப்ரம்மம் குடும்பத்துடன் திருவையாறு குடியேறினார் .  அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர். இவரது தகுதி, மன்னரின் அரி ஆசனத்துக்கு சரி ஆசனமாக அமர்வது.

தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் தந்தை  ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார். அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரசம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரை அரசவையின் தலைமை இசைக்கலைஞரான ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா அவர்களின் மாணாக்கனாக சேர்க்க ஆவண செய்தனர்.  

குருவை மிஞ்சிய சீடரான தியாகராசருக்கு சங்கீதம் தானாக பிரவாகம் எடுத்து ஓடியது. பாடல்களை இயற்றி இராகங்களில் அமைத்துப்  பாடுவது குரல் வந்த கலையாக ஆனது.  அதிலும் அவரது பாடல்களில் இராமனுடன் மானசிகமாக மனம் விட்டு பேசுவது போன்ற நடையும்  உத்தியும் கேட்பவர்களை நெக்குருக வைத்தது. 

நேருக்குநேர் நின்று அவனோடு பேசறதைப்போல்தான்  எல்லாமே!

மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரசத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும்.

இராமபிரானைப் பற்றியும் சீதாதேவி பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, அவர் ஏதோவொரு மானசீகமான உலகத்தில் அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு உரையாடியது போலவும், அந்த உரையாடலைத் தொடர்ந்து 'இராமா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ஏன் கருணை காட்ட மறுக்கிறாய், அன்று நீ அப்படிச் சொன்னாயே' இப்படியெல்லாம் அவர் சொல்வது..... அவர் வாழ்ந்த உலகம் தனி என்பதும், அந்த உலகத்தில் இராம சீதா, லக்ஷ்மண அனுமன் போன்றோர் மட்டுமே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவரும்.

அவ்வப்போது அவற்றைக் கேட்டு அதிசயித்த தகப்பனார் எழுதி வைத்த  பாடல்களே இன்று கிடைத்து இருப்பவை. எழுத விட்டுப்போனவை எத்தனை  என்று யாமறியோம் பராபரமே.   இவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் இருதய ஸ்தானத்திற்கு குடிபுகுந்தவர் என்றபோதிலும், இவர் பெரும்பாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சீடர்களைத் தன்னுடன் ஏற்றுக்கொண்டு இசை ஞானத்தை அவர்களுக்கு உபதேசித்து வந்தார். 

1848 வருடம் பகுள பஞ்சமி தினத்தில் இவர் இந்த மண்ணுலக வாழ்வை நீத்தார்.  சுவாமிகள் சமாதியடைந்து 60 ஆண்டுகள் கழித்து, அதே பராபவ ஆண்டில் ஆங்கில வருஷம் 1907இல் வாலாஜாபேட்டை ஸ்ரீரங்கதாம பாகவதர் அதிவிமரிசையாக புஷ்ய பகுளபஞ்சமி முதல் 10 நாட்கள் குருபூஜை உற்சவத்துக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த 1908ஆம் வருஷம் தில்லைஸ்தானம் ஸ்ரீ நரசிம்ஹ பாகவதர், பஞ்சு பாகவதர், பிடில் கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் திருவையாற்றில் ஆராதனைகளை அதிவிமரிசையாக நடத்திவரலானார்கள்.

திதி வரும் சமயம் மட்டும் குருபூஜை, ஆராதனைன்னு அமர்க்களப்படுத்திட்டு அப்புறம்  சும்மா கிடந்த  சமாதி  இடத்தில்,  பெங்களூர்  நாகரத்தினம் அம்மாள்  1925 லே சின்னதா ஒரு கோவில் கட்ட தொடங்கினாங்க.  அப்புறம் தன்னுடைய  செல்வத்தையெல்லாம்  செலவு செஞ்சு     1938லே  இப்ப இருக்கும்   வால்மீகி மண்டபம்  என்னும்  கோவிலை ரொம்ப அழகாவே கட்டி இருக்காங்க.

 


கோவில் எழுப்பிய கல்வெட்டு 1938

ஒவ்வோராண்டும் தை மாதம் பகுள பஞ்சமி (பௌர்ணமிக்குப்  பின் ஐந்தாம் நாளாக வருகின்ற திதி பஞ்சமி) திதியில் சுவாமிகளின் குருபூஜையை சங்கீத உற்சவமாகக் கொண்டாடி வந்தார்கள். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையில் நடைபெற்ற கச்சேரிகளில் பெண் வித்வான்களை மேடையில் அமர அனுமதிப்பல்லை என்ற வழக்கம் இருந்து வந்தது. நாகரத்தினம்மாள் வந்த பிறகு இந்த நிலையை மாற்ற நினைத்தார். அவர் பெண்களை மட்டுமே வைத்து சமாதியின் பின்புறம் கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். இதற்கான செலவுகளை நாகரத்தினம்மாளே ஏற்றுக் கொண்டார்.  இதுலேயும் பெண்களுக்குப் பக்க வாத்தியம் வாசிக்கமாட்டோமுன்னு ஒரு சிலர் ஆரம்பிச்சு......    போதும் போங்க.....எல்லாம் இப்போ ஒரு வழியா சமரசம், சமாதானமெல்லாம் ஆகி   வருசாவருசம் தியாகராஜ ஆராதனை   அமர்க்களமா நடக்குது. அப்பப்ப ... வழக்கம் போல கோஷ்டி அரசியல் நடக்கும்.

நமது நகர் தேவகோட்டையில் 1930களில் இந்த பகுள பஞ்சமிக்கு அடுத்து வருகின்ற பஞ்சமி (பௌர்ணமிக்குப்  பின் ஐந்தாம் நாளாக வருகின்ற திதி பஞ்சமி) தினத்தில் தியாகராயர் ஆராதனை நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தைமாத பகுள பஞ்சமியில் திருவையாறு ஆராதனை, நம்ம ஊர்ல மாசிமாத பகுளபஞ்சமியன்று ஆராதனை. இந்த அமைப்பின் கெரவத் தலைவராக திரு   பத்மபூஷன், சங்கீத கலா நிதி  அரியக்குடி இராமானுஜம் அய்யங்கார் இருந்தார் .  தலைவராக மூத்த வழக்கறிஞர் MR.சிவராம அய்யர். ( இவர் தான் தேவகோட்டை தியாகிகள் சாலையில் நடந்த நீதிமன்ற எரிப்பு சம்பவத்தில், நீதி மன்ற வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நீதிபதியைப்  பத்திரமாக மீட்டு  வெளியில் கொண்டு வரக் காரணமானவர்.  தேவஸ்தான அலுவலகத்தில் ஸ்ரீராமர் மற்றும் தியாகராஜர் படங்களுக்கு பூஜை நடக்க பந்தலில் அரியக்குடி தலைமையில் பல்லடம் சஞ்ஜீவிராவ் புல்லாங்குழல், வீராசாமி பிள்ளை குழுவினர் நாதஸ்வரம், பாலக்காடு மணி அய்யர் ,நம் ஊர் கண்டதேவி ஸ்ரீநிவாச ன், மிருதங்கம், T.N. கிருஷ்ணன் மற்றும் சில வயலின் வச்சிக்க பல வித்வான்கள் சேர்ந்துபாட அமர்க்களமாக ஆராதனை நடந்த காலம்

 

அரியக்குடி இராமானுஜம் அய்யங்கார்

வழக்கறிஞரும் வருமான வரி அலுவலகம் நடத்தி வந்த (INCOME TAX PRACTIONER ) உப்பிலி என்ற ஸ்ரீனிவாச அய்யங்கார் செயலாளர்.  இந்த உப்பிலி அவர்களின் மைந்தர் திரு பாபு அவர்கள் ஒரு I.A.S . அதிகாரி. ஸ்ரீரங்கம் கோவில் கடடிடச் சீரமைப்பு மற்றும்  கும்பாபிஷேகம் நிகழ்ந்த காலங்களில் அந்தப் பணிகளில் அதிகம் பங்கெடுத்துக் கொண்ட அன்றைய திருச்சி மாவட்ட ஆட்சியர் (நம்ம ஊர்ல பிறந்தவங்க சாதாரணமான ஆட்கள்  இல்லீங்கோ ன்னு சொல்றதுக்குத் தானே இந்தப் பதிவே).

 அமைப்பின் அன்றைய  உறுப்பினர் :

 KS.பஞ்சாபகேச அய்யர் என்கின்ற பஞ்சு அய்யர்

AK .மகாதேவ அய்யர் 

வழக்கறிஞர் R.இராசகோபாலன்

வழக்கறிஞர் S.ரெங்கராஜன் ( எனது நண்பர் ராம்ஜியின் தகப்பனார்)

வழக்கறிஞர் S .இராமச்சந்திர அய்யர்

1940 ~ 50 களில்  முன்னணி கலைஞர்கள் தேவகோட்டை வந்து தங்கி இருந்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நடந்தேறிய நிகழ்ச்சிகளில்  பங்கெடுத்து உள்ளனர்.  பின்னாளில் நிகழ்ச்சிகளுக்கு நாள் கேட்டு வரும் வெளி நாட்டு, உள்நாட்டு மிகப்பெரும் அமைப்புகளுக்கும் கூட தமது நாட்குறிப்பில் வெற்று  நாள் என்று எந்தப்  பக்கமும் இல்லாத அளவுக்கு படு பிஸியாய் இருந்த கலைஞர்கள் எல்லாம் நமது தேவகோட்டை நகரில் இந்த சிலம்பணி சன்னதி நிகழ்ச்சியில் பங்கு பெற காத்து இருந்தவர்களே என்று அறியும் போது  எவ்வளவு சிகரங்களுக்கு  அகரமாய் இந்த தேவகோட்டை இருந்து இருக்கிறது என்று வியப்படைய வைக்கிறது.   பிரபல கர்நாடக, திரை இசை பாடகர் பால முரளி கிருஷ்ணா நமது நகரில் பாடும் வரை, விஜயவாடா வானொலி நிலையத்தில் பணி  புரிந்தவர் மட்டுமே.....

 

பால முரளி கிருஷ்ணா 

புல்லாங்குழல் இசையிலும் பாடுவதிலும் வல்லவரான திரு.TR.மஹாலிங்கம் அவர்கள் நமது நகரின் இசை விழாவில் பங்கு பெறுவதற்காகவே சிலம்பணி அக்கிரகாரத்தில் இருந்த அவரது உறவினர் இல்லத்துக்கு அடிக்கடி வந்து தங்கி விடுவாராம்.   பின்னர் அவர் எவ்வளவு பெரிய நட்சத்திரம் ஆனார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

 


 பணம் ஏதும் பெற்றுகொள்ளாமல் வழிச்செலவு மட்டும் வாங்கி கொண்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்து இருக்கிறார்கள் .    அவர்களை பொறுத்தவரை இது தியாகப் பிரமத்துக்கு அவர்கள் திரும்பச் செலுத்தும் கடன்.  வந்தவர்கள் சும்மா தேங்காய் மூடி இசைஞர்கள் அல்ல.  கொஞ்சம் இந்தப் பட்டியலைப் பாருங்கள்.

சில பெருந்தலைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்... இன்றைக்கு இவர்களைப்  பற்றி அறியாதவர்  பலர் இருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாம் திறமைகளின் மொத்த  உருக்கள்.  பெரிய சபாக்கள் எல்லாம் இவர்களின் தேதிகளை காத்துக் கிடந்தது பெற்று இருக்கின்றன பின்னாட்களில் .  இவர்கள் பற்றிய முழு விபரம் வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள், வலைத்தளத்தில் (GOOGLE) அலசிப் பார்த்து வியப்புறலாம்.

தமது குருநாதர் செம்பையுடன் KJ. யேசுதாஸ்

டைகர் வரதாச்சாரி, அரியக்குடி இராமானுஜம் அய்யங்கார்,மகாராஜபுரம் விஸ்வநாதன்,  பிற்காலங்களில் அவரது மகன்,மகாராஜபுரம் சந்தானம், மதுரை மணி அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர், செம்பை வைத்திய நாத பாகவதர் ( பிரபல பின்னணி பாடகர் KJ ஜேசுதாஸ் அவர்களின் குருநாதர் ), ஆலத்தூர் சகோதரர்கள் , முசிறி சுப்ரமணியன் அய்யர், முடிகொண்டான் வெங்கட்ராமன் அய்யர், GN பாலசுப்பிரமணியன், மனக்கால்  ரங்கராஜன், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, சாத்தூர் AG சுப்ரமணிய அய்யர், தேரழுந்தூர் சீனிவாச சாரியார்.

ஆலத்தூர் சகோதரர்கள்
மணக்கால் ரெங்கராஜன்  
முடிகொண்டான் வெங்கட்ராமன்

வயலின் வாத்திய கலைஞர்கள்

மைசூர் சௌடையா, TN கிருஷ்ணன், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை , துவாரம் வேங்கடசாமி நாயுடு, லால்குடி ஜெயராமன், குன்றக்குடி வைத்தியநாதன், நாகை முரளிதரன் மூத்த வயலின் கலைஞர் சந்திரசேகர் ( இவர்  பார்வையற்றவர், ஆயினும்  மிகச்சிறந்த கலைஞர்).


          லால்குடி ஜெயராமன்


மதுரை மணி அய்யரின் மருமகனான V.சங்கர நாராயணன் ( நமது ஐயா அட்வகேட் வெங்கடபதி அவர்களுடன் சட்டக் கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்றவர்),  திருப்பாற்கடல் வீர ராகவன்..

இந்த சங்கர நாராயணனும், திருப்பாற்கடல் வீரராகவனும் சேர்ந்து வெளி நாடுகளில் பல கச்சேரிகள் செய்து இருக்கின்றனர்  இவர்கள் எல்லாம் இங்கே தேவகோட்டையில் சிலம்பணி சன்னதியில் தமது திறமைகளைக்  காட்டிய பிறகே உலகம் போற்றும் உயர் நிலையை அடைந்தார்கள். குன்றக்குடி வைத்தியநாதன் போன்றவர்கள் தவமாய் தவம் கிடந்தது நடையாய் நடந்து வாய்ப்புப்  பெற்று விழா நடக்கும் 10 நாட்களும் இங்கேயே தங்கி சாப்பிட்டு பொழுதைக் கழித்த  காலம் அது.

மிருதகங்கம்:

பாலக்காடு மணி ஐயர்



தஞ்சாவூர் உபேந்திரன்,  (இடது கை  மிருதங்க வித்வான்)

பாலக்காடு மணி ஐயர், தஞ்சாவூர் உபேந்திரன்,   (இடது கை  மிருதங்க வித்வான்), உமையாள்புரம்  சிவராமன், வேலூர் ராமபத்ரன், பாலக்காடு ரகு, அகில இந்திய வானொலி கலைஞர் தாயுமானவர் ... என்று பட்டியல் நீளுகிறது.

 புல்லாங்குழல் :

சிறிய வயது TR. மஹாலிங்கம், பல்லடம் சஞ்சீவி ராவ் , சிக்கல் நீலா-குஞ்சுமணி…

 


ஆலங்குடி இராமச்சந்திரன், விக்கி விநாயகம் போன்றோர் கடம்  என்று கச்சேரி வருட வருடம் அமளி துமளி பட்டு சென்னை சபாக்களையும் விஞ்சி நின்ற காலம் அது.

தலைவராய் இருந்த அட்வகேட்  MR சிவராமன் அய்யர் (MRS) 1961 இல் காலமானார். அவரது பணியினை டாகடர் வைத்தியநாதன் அதன் பிறகு தலைவராய் இருந்து நிறைவேற்றினார். 

அன்றைக்கு தேவகோட்டையில் தமிழ் இசைப்பள்ளி மிக நேர்த்தியாக நடை பெற்று கர்நாடக இசையை மட்டும் அல்ல, தமிழ் இசையையும் காற்றில் தவழ விட்டது.  அதன் ஆசிரியராக மிகப்பெரும் இசைக்கலைஞரான தேரழுந்தூர் சீனிவாச சாரியார் விளங்கி இருக்கிறார்.  அவர்தான் மேடை நிர்வாகமும் நிகழ்ச்சி அமைப்பாளரும்.  அது தவிர அழகாய் நிகழ்ச்சி நிரலை வாசித்து வழி நடத்திச் செல்லும் அன்பு அறிவிப்பாளரும் அவரே. அவர் கச்சேரியும் உண்டு.  அவருக்குப் பின் 1950 களில் கிருஷ்ணா ராவ் என்பவர் தமிழ் இசைப்பள்ளி  ஆசிரியராக இருந்து இருக்கிறார்.  அவருக்குப் பின் எமது காலத்தில் எங்கள் தி.ஊரணி பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து திருமகுடம் என்பவர் இதே பணியில் இருந்தார். 

இந்தத் திருமகுடம் அவர்கள் தான் டாகடர் வைத்யநாதன் ( தலைவர் ), உப்பிலி (செயலர் ) அவர்களின்  காலத்துக்குப் பின் தியாகப் பிரம்ம உத்சவத்தை ஒருங்கிணைக்கும் பணியினை செய்து வந்தார்.  தேவகோட்டையில் தமிழ் இசைப்பள்ளி பற்றிய நினைவலைகளை  எமது முந்தைய பகுதியில் அசை போட்டோம். அந்தப் பகுதியினை வாசிக்காதவர்களுக்காக ...

 https://muthumanimalai.blogspot.com/2018/04/43.html

இந்த விழாவின் முக்கிய அம்சம், ஹரிகதாகாலட்சேபம் என்ற இசையும் கதையும் நிகழ்ச்சி.  அதில் புகழ்பெற்ற எம்பார் விஜயராகவச்சாரியார்,  ஆவுடையார் கோவில் ஹரிஹர பாகவதர் அந்த நாட்களின் நிரந்தர ஹரிகதை  கலைஞர்.  அவரைத் தொடர்ந்து அவரது மகன் ... இசை விமர்சகரான காரைக்குடி LIC இல் பணி புரிந்த H.சுப்பிரமணியன்.  இவர்  கெட்சு அல்லது கெத்து வாத்தியம்  எனும் கிட்டத்தட்ட இன்றைக்கு புழக்கத்தில் இருந்து அழிந்து விட்ட வாத்தியத்தை இசைத்துக் கொண்டே பாடுவார். இந்த பகுதியில் இது போன்ற செய்திகளை வழங்கி நமது இளைஞர்களை இது பற்றிய சிந்தனைகளை விதைப்பதில் மகிழ்ச்சி.  

 

கெத்து வாத்தியம்

அது என்ன கெத்து வாத்தியம்?. தமிழகத்தில் மறைந்து வரும் தாளக்கருவிகளுள் ஒன்று. தம்புரா போன்று 4 தந்தி இருக்கும். இதைப் படுக்கையாக வைத்து இரு குச்சியால் தட்டி தாளத்திற்கு ஏற்ப ஒலி எழுப்புவார்கள். மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை ஆலயத்தில் பூஜை வேளைகளில் மட்டுமே இந்தத் தாளவாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை வாசிக்கும் பரம்பரைக் குடும்பம் அங்கு உள்ளது.

வீணையைப் போலவே தோற்றம் கொண்டது கெத்து வாத்தியம். குடத்தின் அடிப்பகுதி, யாழின் அடிப்பகுதி இரண்டும் தரையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு தட்டையாக அமைந்துள்ளன. சுருதியை மாற்றுவதற்கான குதிரை, இடப்புறத் தண்டியில் இடம்பெற்றுள்ளது. ... வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும்.

தினமும் 2 அல்லது3 நிகழ்ச்சிகள் நடைபெறும். பகலில் உஞ்சவிருத்தி, அதாவது நாமசங்கீர்த்தனத்துடன் பஜனை செய்து அக்ரஹாரத்தில் புதுக்கோட்டை கோபால கிருஷ்ண பாகவதர் தலைமையிலான வித்வான்கள் பாடிவருவார்கள்.   நிகழ்வின் கடைசி நாளில் அகண்டநாம (திவ்ய நாமம்)  பஜனை இரவு 9.30மணிக்குத் தொடங்கி காலை 6 மணிவரை நடைபெறும்.. பிரம்மஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர் என்பவர், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர், இந்த நாம சங்கீர்த்தனத்தை நிகழ்த்துவார்.  இவருடன் தேவகோட்டை பெரியவர்களும் சேர்ந்து கொள்வர்.  'அப்பா'  என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர் காலத்துக்குப் பிறகு இவரது மகன் சஞ்சீவி பாகவதர் இந்த நிகழ்வை நடத்தினார்.  அதன் பின் அரசு நிறுவனமான BSNL  இல் பணி  புரிந்த காரைக்குடி கழனிவாசல்  அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராஜு பாகவதர்...

இராம பிரானுக்கு பட்டாபிடேக பூசைகள் நடைபெறும்.. அன்று எங்கள் திண்ணன் செட்டி வடக்கு அக்ரஹாரத்தில் இருந்து அனுமார் சுந்தரம் அய்யங்கார் அவர்கள் அனுமனாகவே அவதாரம் எடுத்து விடுவார். நூற்று ஒரு வயது வரை இந்த பூமியில் சதம் அடித்து வாழ்ந்த பெரியவர்.   நல்ல உழைப்பாளி. ஏழையோ, பணக்காரரோ, அவர்கள் கொடுக்கும் தட்சணையை மனதார பெற்றுக் கொள்வார்.   தன்  தொழிலில் மட்டுமே அர்ப்பணிப்பு உள்ளவர். எனக்கு அவரை ஒரு மூன்று தலைமுறைகளாகத் தெரியும்.  அவர்... அவரது மகன் பத்மநாபன் ( எங்களோடுதான்  ஒரு காலத்தில் சுற்றி திரிவார், பின்னர் அவரது தந்தையைப் போல திருமண, தர்ப்பண  காரியங்களை  நடத்தி வைக்கிறார்), அவரது குழந்தைகள் என்று நல்ல பரிச்சயம்.  மிகவும் வயதான பின்னரும் கூட அவர் அனுமாராக வேடம் புனைந்து விட்டார் என்றால் எப்படி அவருக்குள்  இவ்வளவு வலு சேரும் என்பது ஆச்சரியமான விஷயம்.  8 அல்லது 9 இளநீர்களை தண்ணீர் வண்டி மாதிரி உள்ளே உறிஞ்சி விடுவார்.  சீப்பு சீப்பாய் வாழைப்பழங்கள் அந்த சின்ன வயிற்றில் எப்படித்தான் கொள்ளுமோ?  அவரது முகமும் ஆஞ்சநேயராகவே மாறிவிடும்.  அதனால் அவர் பெயரே 'அனுமார்'  சுந்தரம் அய்யங்கார்.  சிரஞ்சீவியாய்  இன்னும் எம் எண்ணத்தில் வாழும் அனுமார் சுந்தரம் அய்யங்கார் அவர்களை கை  கூப்பி வணங்கி மகிழ்கிறேன்.

இந்தக் கால கட்டத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.   வைப்புக்காகவும், இசை ஆர்வத்தின் உந்துதலாலும், அர்ப்பணிப்பு மனதுடன் இருந்த கலைஞர்கள் கால ஓட்டத்தில் வணிக ரீதியில் தம்மை மாற்றிக்கொண்டனர்.   முன்னைப் போல பயச் செலவு மட்டும் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த கலைஞர்களின் பொருளாதாரத் தேவைகளும் இடம் அளிக்கவில்லை.  ஆக எல்லாம் சேர்ந்து செலவினங்கள் என்னும்  கொடியை  உயர்த்திப் பிடித்தன.  அந்த சமயத்தில் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் அமரர் பத்மநாபன் சார் தன்னை அந்தப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.  




ஆசிரியர் அமரர் பத்மநாபன்  சார்

ஆனால் விழா நிகழ்வு நாட்கள் குறைக்கப்பட்டன.  அத்துடன் சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயத்தின் வாசலில் இருக்கும் மைதானத்தில் லாரிகள், வண்டிகள் என்று நிறுத்தப்பட்டதாலும் , பழைய ஆளுமைகள் இல்லாது  போனதாலும் பாரம்பரியமாய் நடந்து வந்த  நிகழ்ச்சி இளைத்துப்  போனது.   பின்னர் வெளியில் நடந்த நிகழ்ச்சிகள் கோவிலுக்கு உள்ளே 3 நாள் நிகழ்வாக நடக்க ஆரம்பித்தன.

அகண்டநாம (திவ்ய நாமம்)   பஜனை முன்னர் போல விடிய விடிய  நடத்தாமல் இரவு 8 மணி முதல் 10:00 அல்லது 10:30 வரை நடத்தப்படுகிறது.. கால மாற்றத்துக்குத் தகுந்தாற் போல அனைத்தும் அதுவாகவே மாறும்.

 

சிதம்பரம் தீட்சிதர், G.சுப்ரமணியம், அனுமார் சுந்தரம் அய்யங்கார் மற்றும் ராஜு பாகவதர் (இடம்: சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலய மடப்பள்ளி அருகே உள்ள மண்டபம்  )

இந்த ராஜு பாகவதர் நல்ல கலைஞர். பாடல் பாடுவது மட்டுமல்ல...சிவ தாண்டவம் அருமையாக ஆடுவார்.   'ஆடாது அசங்காது .. வா கண்ணா'  என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுவார். இவரது தந்தை குறவனாகவும், இவர் குறத்தியாகவும் வேடம் புனைந்து ஆடி அசத்துவார்கள் . இவரும் அனுமார் வேடம் புனைவார்.  இந்த ராஜு பாகவதர் அனுமார் சுந்தரம் அய்யங்கார் இவர்களின் நிழற்படம் அன்பர்களுக்காகத் தேடிப்  பிடித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  படம் அனுப்பி மகிழ்ந்த அனுமார் சுந்தரம் அய்யங்கார் அவர்களின் மைந்தர் எம் நண்பர் திரு. பத்மநாபன் அவர்களுக்கு நட்புகளின்  சார்பில் நன்றிகள்.

ஏற்கனவே யானைக்கால் வியாதியில் அவதிப்பட்டு வந்த தமிழ் இசைப்பள்ளி ஆசிரியர் திருமகுடம்  மிகவும் நோய்  வாய்ப்பட்டார் .  சில வருடங்கள் இந்த உத்சவம் சுத்தமாக நின்றே போய் விட்டது . ஆனால் நமது DPS அதாவது D.பத்மநாபன் சார் களத்தில்  முழு மூச்சாக இறங்கி  பலருக்கும் நண்பர் என்ற வகையில் அங்கங்கு நிதி திரட்டி இந்த தியாகப்ரஹ்ம உத்சவத்துக்கு புத்துயிர் ஊட்டினார்.  ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் தலைவராகவும், ஆசிரியர் பத்மநாபன் செயலராகவும் இருந்து விழாவினை கொஞ்சம் மேலே கொண்டு வந்தார்கள்.அதிலும் கண் பட்டது போல, நமது மரியாதைக்குரிய ஆசிரியர் பத்மநாபன் இயற்கை எய்தினார்.  ஆசிரியர் சோமசுந்தரம் அவர்களும் மறைந்து விட்டார்கள்.

நாம் முந்தைய அத்தியாயங்களில் பார்த்த ஆடிட்டர் துரை  இந்த முயற்சிகளில் தம்மை இணைத்துக் கொண்டு அரும்பாடு பட்டு கோவிலின் உள்ளேயே மண்டபம் ஒன்றை நிர்மாணித்து அதனுள் பிப்ரவரி 2019 இல் விழாவை நடத்தினார்கள் .   கொரோனா  கொடுந்தொற்றால் 2020 இல் ஒரு நாள் நிகழ்ச்சியாக இது நடை பெற்றது.  

பத்மநாபன் சார் நிகழ்ச்சியின் அமைப்பாளராக மாறிய பின் முழுவதும் இராக ஆலாபனையாக இருந்த நிகழ்வை கொஞ்சம் நிமிர்த்தி தொய்வு தெரியாது இருக்க, மதச் சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள் என்று நிகழ்ச்சி நிரலை மாற்றினார்.   மாணவர்கள் உள்ளம் அறிந்த ஆசிரியர் அல்லவா ?    இதே அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக  விளங்கிய  உப்பிலி அவர்களின் பேத்தி ( பாபு IAS அவர்களின் மகள்) நீரஜா தம் குழுவினரோடு வந்து நடன நிகழ்ச்சி நடத்தினார்.  சாண்டியனின் மகள் கச்சேரி நிகழ்த்தினார். 

இசைக்கு இசையும் நகர மக்கள் வாழ்ந்த நகரம் நமது என்ற இந்த பழைய நினைவுகளை இது வரை பொறுமையாய் வாசித்து வந்த அனைத்துச் சொந்தங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இனி நமது பயணத்தை வெள்ளாளர் தெருவின் கீழ்க்கோடியில் தொடரலாம்...

 



கருத்துகள்

  1. பாராட்டுக்கள். பல அரிய தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது

    பதிலளிநீக்கு
  2. கோர்வையான தங்களின் எழுத்து நடை மிக அருமை 👌

    பதிலளிநீக்கு
  3. ஒரு சிறிய நகரத்தில் இவ்வளவு விஷயங்களை ஆராய்ந்து ஆவணப்படுத்தும் உங்களை பாராட்ட வேண்டும். 🙏

    பதிலளிநீக்கு
  4. சுமார் நூறு ஆண்டு நிகழ்வுகளை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.
    கண்டதேவி அழகர்ஸ்வாமி பற்றி குறிப்பிட மறந்துவிட்டது. சௌடையாவின் சீடர். M.S சுப்பலட்சுமிக்கு பக்கவாத்திய க்காரராக இருந்தார். நம்மூர் கச்சேரிகளைத் தவறாது பங்கு கொள்வார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60