அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 26 -தை அமாவாசை -இராமேசுவரம்

தை அமாவாசை -இராமேசுவரம்




இளங்கலை வணிகவியல் இறுதி வருடம். சமூக பொருளாதாரத் தட்டுகளின் பல்வேறு நிலைகளில் இருக்கும் மாணவர்களையும் நட்பு எனும் ஒரு அழகிய அச்சில் அனைவரையும் வைத்து இருக்கும் கல்லூரி வாழ்வு. உல்லாசச் சுற்றுலா என்றால் அனைத்து மாணவர்களுக்கும் இயன்ற வரை அருகே எங்காவது அருகில் இருக்கும் இடத்துக்கு குறைந்த செலவில் சென்று வருவது அன்றைய வழக்கம்.



வணிகவியல்
புலத்தின் ஆசிரியர்களோ, மாணவர்களில் ஒருவராக நட்போடு விளங்கும் இள வயதினர். துறைத் தலைவர் மதிப்பு மிகு முத்துராமன் தவிர்த்து அனைத்து ஆசான்களும் மாணவப் பருவத்தைச் சற்று முன்னர் கடந்து மாணவர்களோடு மாணவர்கள் போல தோழமை பாராட்டும் தூய மனதினர்.




அந்த நாளில் எங்களுக்கு வாய்த்த அப்படிப்பட்ட அன்பு ஆசான்கள்:




 திரு.திருநாவுக்கரசு அவர்கள்:

கும்ப கோணத்தைச் சேர்ந்த ஆசான் திருநாவுக்கரசு அவர்கள் சிறந்த கவிஞர், பன்முக ஆளுமை கொண்டவர். இவர் வசித்த சிவன் கோவில் கிழக்கு வீதி இல்லம் எங்கள் அனைவருக்கும் சொந்த வீடு போல. எந்த நேரமும் அங்கே இருப்போம் எண்களில் ஒரு குழுவினர்அமரர் ஆகிவிட்ட அருளாளர்.

திரு. அருணாச்சலம் அவர்கள்:

(பின்னாளில் எங்கள் கல்லூரிக்கே முதல்வர் ஆக பதவி வகித்து தேவகோட்டைபகுதி மாணவர்களுக்குச் சேவை செய்தவர். இன்று வரை தாளாளருடன்  அணுக்கமாக இருந்து இன்னும் கல்லூரியின் கல்விச் சேவையைத் தொடர்பவர்)

திரு.கதிரேசன் அவர்கள் : மதுரை வங்கியின் செயலராக தலைமைப் பொறுப்பின் பின்னாளில் இருந்தவர். தம்மை ஆன்மீக வாழ்வில் ஈடு படுத்திக்கொண்டு பற்றற இருப்பவர்.

திரு.சவண்டப்பன் அவர்கள் : கோவையைச் சேர்ந்தவர். திரு அருணாச்சலம் அவர்கள் மூலமாக தேவகோட்டைக் கல்லூரியின் விரிவுரையாளர் ஆனவர் என நினைக்கிறேன்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கோவை PSG கலைக்கல்லூரியில் முதுகலைப் பட்டம் முடித்து உடனே எங்களுக்கு ஆசிரியரான திரு. அருணாச்சலம் அவர்கள் ங்களில் ஒருவர். மாணவர்களின் வசதிக்கு ஏற்ப இரயில் பயணம் மூலமாக சுற்றுலா அழைத்துச் செல்வார். இதற்கு முன்னர்
விருது நகர், தென்காசி வழியாக குற்றாலம் சென்று வந்த அனுபவம். இப்போது நாங்கள் கடைசி வருட மூத்த மாணவர்கள். சென்ற ஆண்டு மலைத்தலம் சென்று வந்தாகி விட்டது, இப்போது கடற்கரை சென்று வரலாமே அருகில் எங்காவது என்று தீர்மானம் நிறைவேறியது.

கடந்த வருடம் போலவே இரயில் வண்டி மூலமாக இராமேசுவரம் சென்று வரலாம் என்று ஒருமனதாக மசோதா நிறைவேறியது. அன்றைய நாள் ஜனவரி 27, வருடம் 1979. எங்கள் திட்டம் ராமேஸ்வரம் செல்லும் 'இராமேஸ்வவரம் எக்ஸ்பிரஸ்' வண்டியில் தேவகோட்டை சாலை (தேவகோட்டை ரஸ்தா ) இரயில்
நிலையத்தில் ஏறிக் கொள்வது என்பதாகும். கடந்த வருடம் இதே போலத்தானே செங்கோட்டை வரை இரயிலில் சென்று குற்றாலத்தில் குதூகலித்தோம். இரயில் பெட்டிகள் கூட்டம் இன்றி எங்களின் நோக்கம் போல ஆடிப் பாடி அரட்டை அடிக்க காலியாக அமைந்து இருந்தன அப்போது. அந்த நினைவுகள் தான் தற்போதும் இராமேஸ்வரம் செல்ல இரயில் மூலம் என்ற திட்டத்துக்கும் காரணம். மனிதர்கள் என்ன திட்டம் வேண்டுமானாலும் தீட்டலாம். இறை என்பது தானே நடப்பதைத் தீர்மானிக்கும்.

 

திட்டப்படி எங்கள் குழு பேராசான் அருணாச்சலம் அவர்கள் தலைமையில் தேவகோட்டையில் இருந்து பேருந்து ஏறி தேவகோட்டை ரஸ்தா என்றழைக்கப்படும் தேவகோட்டை சாலை இரயில் நிலையம் வந்து விட்டோம்.
காலை 10 மணி அளவில் புகை வண்டி வந்து சேரும். தேவகோட்டை சாலை புகை இரத நிலையால் சிறியது ஆகையால் ஒரு நிமிடம் மட்டுமே அங்கே நிற்கும். இதற்கு முன்னர் சென்று வந்த குற்றாலப் புகை இரதப் பயணம் என்றும் மனதில் நிற்பதானது. அந்த எண்ணத்திலேயே இரயிலில் ஏறியவுடன் ஆடிக் கலக்கலாம், பாடிக் களிக்கலாம் என்று நினைத்துஇருந்த எங்களுக்கு புகை வண்டி வந்து நின்றவுடன் ஏமாற்றம் காத்து இருந்தது.

 


ஆம். அன்று தை அமாவாசை தினம் . ( இன்றைக்கு 18 ஜனவரி 2026...... 47 ஆண்டுகள் கடந்து விட்டாலும் நினைவுகளில் ஊஞ்சலாடும் நினைவுகள்). அதனால் பெரும்பாலான பெட்டிகள் வடக்கத்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்டு கதவுகளும் மூடப்பட்டு தாழிடப்பெற்று இருந்தன. எங்கள் கூட்டம் கதவு திறந்து இருந்த பெட்டியாகத் தேடித் தேடி இரயில் தொடரின் முழு நீளத்துக்கும் முன்னும் பின்னும் ஓடிக்கொண்டு இருந்தது. ம்ஹூம் .... ஒரு பெட்டியின் கதவு கூடத் திறந்து இருக்கவில்லை. பேருந்தைப் போல புகை இரதப் பெட்டிகளின் படிக்கட்டுக்கள் அகலமானவை இல்லை. மேலும் கதவுகள் மூடப்பட்டால் மிச்சம் இருப்பது சில செண்டி மீட்டர் அளவுள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே. ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் என்ற காரணத்தால் வண்டி புறப்படுவதற்கான சீழ்க்கை (WHISTLE ) ஒலி எழுப்பப் பட்டுப் பச்சைக்கொடி அசைக்கப்பட்டு புகை இரதம் புறப்பட ஆரம்பித்தது. 19~ 20 வயது இள இரத்த இளைஞர்கள். என்ன நடக்கிறது என்று அறியாமலேயே ஒரு பெட்டிக்கு ஒருவராய் படிக்கட்டுகளில் கால் வைத்து பெட்டியின் வாசலில் இணைத்து இருந்த இரும்புக் கம்பிகளைப் பற்றிக்கொண்டு நிற்க புகை இரதம் வேகம் எடுத்து ஓடத் துவங்கியது. ஒரு இரகசியம் இப்போது தான் சொல்கிறேன். நானும் நண்பர் ஆரோக்கிய செல்வகுமாரும் பற்றிக்கொண்ட இடம் இரண்டு பெட்டிகளை இணைத்து இருக்கும் இரும்பு வடம். இப்போது நினைத்தாலும் பயம் அடிவயிற்றைப் பிசைகிறது.

புகை வண்டி காரைக்குடி சந்திப்பை விட்டுப் புறப்பட்டால் இராமேஸ்வரம் செல்லும் வழியில் அடுத்த சந்திப்பு மானாமதுரை மட்டுமே. இதற்கிடையில் வரும் சிறிய இரயில் நிலையங்கள் "தேவகோட்டை சாலை, அணைத்திடல், கல்லல், பனங்குடி, சிவங்கங்கை, மேலக்கொன்னக்குளம்' இவற்றில் சிவகங்கையில் மட்டும் இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்படும். மற்ற சிறிய நிலையங்களில் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும்.

இப்போது வேகமெடுத்து ஓடிக்கொண்டு இருக்கும் ரயிலின் ஒவ்வோர் பெட்டியின் வாசலிலும் ஒவ்வொரு நண்பன் நின்று கொண்டு இருக்கிறான் ... அல்ல...அல்ல..தொற்றிக்கொண்டு இருக்கிறான். என்னைப் பொறுத்தவரை வசதியாக உட்கார்ந்து வருகிறேன் (கொஞ்சம் புத்திசாலி என்று தற் பெருமை வேறு ... அந்த நொடி ). ஒவ்வொரு பெட்டியின் வாசலிலும் தொங்கி வரும் நண்பன் அடுத்த பெட்டியின் வாசலில் வரும் நண்பனின் பார்வையில்..., இவர்கள் தோள் பட்டைகளில் தொங்கும் பைகள் வேறு . துணி மணி ? . இதில் ஒரு பெட்டியில் தொங்கி வருபவர் அன்பன் நடராஜன். நல்ல உயரமான, உறுதியான தேகம் தான். இரண்டு கரங்களும் பெட்டி வாசலில் பதிக்கப்பட்டு இருக்கும் கம்பிகளைப் பிடித்து இருக்க பாதங்கள் அரை அடிக்கும் குறைவான வாசல் படிக்கட்டில்...தோளில் தொங்கும் ஒரு ரெக்ஸின் பை கொஞ்சம் கனமாக..


புகை வண்டியின் வேகத்தில் தோளின் பை காற்றில் பட்டம் போலத் தள்ளப்பட்டு அவரை வெளியே இழுக்கிறது. அந்தப் பளு பிடித்திருக்கும் அவரது கைகளையும் சேர்த்து இழுக்கிறது. மீண்டும், மீண்டும்,,,இறுக இறுகப் பிடிக்க முயற்சித்தும் ஒரு நேரத்துக்கு மேல் வண்டியின் வேகம் காற்றின் அழுத்தத்தோடு கை கோர்த்து இவரது பிடியைத் தளர்த்தி விட்டது. வண்டி அணைத்ததிடல் எனும் சிறிய நிலையத்தை நெருங்குகிறது. ஆனால் இந்த இரயில் அந்த சிறிய நிலையத்தில் நிற்பதில்லை. அந்த நிலையம் கடப்பதற்கு முன்னர் சில ஆயிரம் மீட்டர்களுக்கு முன் நம்ம நண்பன் நடராசன் கீழே விழுந்து விட்டார். அடுத்தடுத்த பெட்டிகளில் தொற்றிக்கொண்டு வரும் மற்ற நட்புக்கள் கண்களால் காணுகிறார்கள். அடி வயிற்றில் இருந்து அவர்கள் எழுப்பிய ஓலம் எவரது காதுக்கும் எட்டாமலேயே காற்றில் கரைந்து விடுகிறது.

அடுத்து வரும் அணைத்திடல் நிறுத்தத்தில் வண்டி நிற்காமல் சென்றதும் நண்பர் பத்மநாபன் தாங்க வொண்ணாமல் கதறுகிறார். ஒன்றும் பயனில்லை. என்னைப் போல தூரமாய் இருந்த நண்பர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. அடுத்த நிலையமான கல்லல் வந்தவுடன் புகை இரதம் நின்றது. குதித்து இறங்கிய பத்மனாபன் அனைவரையும் இறங்குங்கள் இறங்குங்கள் என்று கத்திக் கூச்சலிட்டார். ஒன்றும் விளங்காது இறங்கிய எங்களுக்கு அப்போது தான் புரிகிறது ஒரு இரயில் நிலையத்துக்கு முன்னரே நண்பர் நடராஜன் ஓடும் இரயிலில் இருந்து விழுந்து விட்டார் என்று. என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. சாலை மார்க்கம் என்றால் மற்றுமொரு மகிழுந்தோ, ஏதேனும் வாகனமோ எடுத்து சம்பவ நிகழிடம் சென்று சேரலாம். இருப்புப்பாதைகள் காட்டு வழி வருவன,, இரயிலை வாடகைக்குப் பிடிக்க இயலுமா என்ன ?

 ஆசானின் நிலையினைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய பொறுப்பு? இந்த இரண்டுங்கெட்டான் பருவத்தினரை பத்திரமாக அழைத்துச் சென்று வீடு சேர்க்கும் பணி என்பது சாதாரணமானதா என்ன ? எங்கள் குழுவினர் இன்றைய, அன்றைய மாணவச் செல்வங்களோடு ஒப்பிடும் வேளை கொஞ்சம் அறிவு முதிர்ந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

கல்லல் இரயில் நிலைய அதிகாரியிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி உதவி கோர, இறை எமக்கு இறங்கி வந்தது ... சிவகங்கையில் இருந்து காரைக்குடி மார்க்கமாக சிறிது நேரத்தில் வரும் பாசஞ்சர் புகை வண்டி வடிவாக. இரயில் நிலைய அதிகாரியின் ஆலோசானையுடன், விபத்து நிகழ்ந்த
இடத்தைத் தெரிந்த நண்பர்கள் இரயிலின் ஓட்டுநர் அறையான எஞ்சின் பெட்டியில் ஏற்றப்பட்டனர். இரயில் வண்டி மிக மிக மெதுவாக முன்னே பார்த்தபடி நகர்த்தப்பட்டது.

 

விபத்து நடந்த இடத்துக்கு சில நூறு மீட்டர்கள் முன்னரே நடராசனின் உடுப்புத்
துணிகளின் துண்டுகள் தென்பட்டன. எனக்கு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது . என்ன நிலையில் இருக்கிறாரோ நண்பர் என்று ....இரத்தம் சொட்டச் சொட்ட பின் தலையில் தண்டவாளத்தின் இடையில் நிரவப்பட்டு இருக்கும் கற்களில் ஒன்று தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார் நண்பர் நடராசன். அந்த நிலையில் அவரைக் கண்டும் ண்ட வாளத்தில் பணி புரியும் பணியாளர்கள் கொஞ்சம் அவரைப் புரட்டிப் போட்டு விட்டு அவரின் கைக்கடிகாரத்தையும், பணப்பபையையும் ஆட்டையைப் போட்டு விட்டனர். மனிதம் வாழ்க .. அவர்களைப் பொறுத்த வரையில் அடிக்கடி அவர்கள் பார்க்கும் விபத்துகளில் ஒன்று தானே. மேலும் இவ்வளவு சீக்கிரம் நண்பர் குழாம் தேடி வர இயலும் என்று எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.

 


நினைவற்றுக் கிடந்த நடராசனை வாரி எடுத்து வண்டிக்குள் வைத்தாகி விட்டது. இதுவரை மிக மிக மெதுவாக வந்து கொண்டு இருந்த புகை வண்டி, இப்போது அசுர வேகம் எடுத்து நாங்கள் புறப்பட்ட திசை நோக்கி விரைந்தது. எங்கள் நல்ல காலம் அன்று தேவகோட்டை ரஸ்தாவில் இறங்க எந்த ஒரு பயணியும் இல்லை . வண்டி நேராக காரைக்குடி சந்திப்பு வந்து சேர்ந்தது. இன்னொரு நல்ல நேரம் அந்த நாளில் காரைக்குடி அரசு மருத்துவ மனை ரயில் நிலையம் அருகிலேயே இருந்தது. எப்படியோ விபத்து நிகழ்ந்த 1 மணி நேரத்துக்குள் நண்பன் மருத்துவரின் கண் காணிப்பில்.. வேண்டிய தெய்வம் எல்லாம் வேண்டியன செய்த வேளை...வெளியே வந்து பார்த்தால் தைப்பூசம் காரணமாக பக்த கோடிகள் கால்நடையாக பழனி நோக்கிப் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள்..



மனமெல்லாம் கசிந்து பழநி ஆண்டவரே நண்பனைக் காப்பாற்று என்று வேண்டியது மனம். தெய்வம் இல்லாமல் எதுவும் இல்லை , நம்புவதே மனிதனின் எல்லை என்பது போல மருத்துவர் வந்து ஒரு இரண்டு, மூன்று நாட்களில் நடராசன் வீடு திரும்பலாம், சரியான நேரத்தில் மீட்பு நடந்ததால் இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றார். மனம் அமைதி ஆனது..

 


சுற்றுலா என்று வந்து விட்டு இப்போது உடனே எப்படி வீட்டுக்குத் திரும்புவது. அன்று 27-01-1979.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து அவரது 200 ஆவது படமான திரிசூலம் அன்று ரிலீஸ். பகல் காட்சிக்கு போய் வந்து விட்டோம்ல.. இப்பதான் மனதின் பாரம் இறங்கி விட்டதே..

 


3 நாட்களில் நடராசன் மருத்துவ மனையில் இருந்து குணமாகி வெளியாகி விட்டார். இரண்டு நடராசன்கள் எங்கள் வகுப்பில் இருந்ததால் இந்த நடராசன் அன்று முதல் 'இரயில் நடராசன்' என்று அழைக்கப் பட்டார். கல்லூரி நாட்களுக்குப் பின் மதுரை வங்கியில் பணி புரிந்தார். இன்னும் எங்கள் மாணவர் அனைவரும் தொடர்பில் இருந்தாலும் பல முறை நாங்கள் கூடிய போதிலும் இந்த 'இரயில் நடராசன் ' மட்டும் எங்கள் குழுவின் தொடர்பில் இல்லை. இந்தப் பதிவைப் பார்க்க நேரிட்டால் தொடர்பு கொள் நட்பே என்று இந்தப் பகுதியை முடிக்கிறேன்.

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 28-இந்தோனேசியாவை இன்றும் வலம் வரும் தமிழ்/ இந்திய சொற்கள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 23-ஐநூற்றுவர்